பாயசம்


தேவையான பொருள்கள்:

கெட்டி அவல் – 1 கப்
பால் – 1/2 லிட்டர்
தேங்காய்ப் பால் – 1/2 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலப் பொடி
முந்திரி
கிஸ்மிஸ்
பச்சைக் கற்பூரம்
நெய்

aval paayasam_sreejayanthi

செய்முறை:

  • அவலை நெய்யில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
  • பாலைக் காய்ச்சி, அதில் அவல் சேர்த்து வேக விடவும்.
  • அவல் வெந்ததும், சட்டென குளிர்ந்த நீர் அரை கப் சேர்க்கவும். இப்படிச் செய்வதால் அவல் ஒட்டாமல் குழையாமல் இருக்கும்.
  • மீண்டும் கொதிக்க ஆரம்பிக்கும்போது, சர்க்கரை சேர்த்துக் கரைய விடவும்.
  • சேர்ந்து வரும்போது தேங்காய்ப் பால் சேர்த்து, பொங்கிவரும்போது இறக்கவும்.
  • நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் பொரித்துச் சேர்க்கவும்.

* இதை சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்தும் செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
 

தேங்காய்ப் பாலுக்கு அடுத்ததாக மிக எளிமையான பாயசமாக பருப்புப் பாயசத்தைத் தான் நினைக்கிறேன். அதிகம் நெய் எல்லாம் சேர்க்காமல் செய்தால் விரத நாள்களில் கூட ஒரு இடைக்கால உணவாக சாப்பிடலாம்.

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1/2 கப்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
வெல்லம் – 1 கப்
பால் – 1/4 கப்
தேங்காய்த் துருவல் – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
நெய்
ஏலக்காய்
பச்சைக் கற்பூரம்

paruppu paayasam

செய்முறை:

  • வாணலியில் சிறிது நெய் விட்டு பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து குறைவான தீயில் வேகவைக்கவும்.
  • இலைப் பதமாக வெந்ததும் வெல்லம் சேர்த்து நிதானமான தீயில் வைக்கவும்.
  • வெல்லம் கரைந்து பச்சை வாசனை போனதும், பால் சேர்க்கவும்.
  • 2 டீஸ்பூன் நெய்யில் தேங்காய்த் துருவல், ஏலப்பொடி பொரித்துச் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கொதிக்கவைத்து, பச்சைக் கற்பூரம் சேர்த்து இறக்கவும்.

* குக்கரிலும் வேக வைக்கலாம். ஆனால் அதிகம் வெந்து குழைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பாயசம், பருப்பு கீர் மாதிரி ஆகிவிடலாம்.

* அதிகம் பால் விட்டாலும் சுவையாக இருக்கும். ஆனால் பால் அதிகம் சேர்க்காமல் பருப்பின் சுவையும் மணமும் மேலோங்கி இருப்பதே எனக்குப் பிடித்திருக்கிறது.

* கொஞ்சம் நீர்க்க செய்து டம்ளரில் குடிக்கலாம். அல்லது ஓரளவு கெட்டியாக சேர்ந்தாற்போல் செய்து ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடலாம். நம் விருப்பம் தான்.

* ஆறியதும் அதிகமாக இறுகும்.

தேங்காய்ப் பால் பாயசம், சின்ன வயதில் பிடித்துப் போனதற்கு அதில் இடையில் திடப்பொருள்கள் இல்லாமல் நீராக இருந்ததும், முழுங்க சுலபமாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

“பாட்டி, நாளைக்கு எனக்கு 10 டம்ளர் திருக்கண்ணமுது செஞ்சு தரியா?”

“பொழச்சுக் கிடந்தா பார்க்கலாம்..”

மறுநாள் தேங்காயைத் துருவி கொல்லைப்பக்கம் இருக்கும் பெரிய ஆட்டுரலில் அரைத்து துணியில் வெள்ளை வெளேர் என்று பாலை வடிகட்டும் போது ஏமாற்றமாக இருக்கும்.

“எனக்கு மட்டுமே 10 டம்ளர் வேணும்னு நேத்திக்கு சொன்னேனில்ல பாட்டி?”

“அதெல்லாம் வெல்லம் சேர்த்ததும் வந்துடும்.”

“வராது. நீ பொய் சொல்ற!”

“பெருமாளுக்குப் பண்றதுக்கு முன்னால இப்படி எல்லாம் பேசறதே தப்பு.”

பாட்டி ஏமாற்றியதும், அது குறித்து மேலே கேள்வி எழுப்ப முடியாமல் தடுத்துவிட்டதும்… அழகன் படப் பையன் மாதிரி ‘இந்த வீட்டுல பிறந்திருக்காமலே இருந்திருக்கலாம்!’ என்று ஆற்றாமையாக இருக்கும். முகம் வாடிப் போனதைப் பார்த்து, “உனக்கு வேணுங்கறதை எடுத்துக்க. அப்புறம் தான் மத்தவாளுக்கெல்லாம். எனக்கெல்லாம் வேண்டவே வேண்டாம்.” பாட்டி தொடர்ந்து அரைப்பார்.

பாலெடுத்த பதினைந்தாவது நிமிஷத்தில் பாயசம் தயாராகிவிடும்.

“ரொம்ப சுடறது. நான் சூப்பி சாப்பிடவா?”

“சாப்பிடு. ஆனா லோட்டாவைக் கொல்லைல கொண்டப் போடணும்.”

முதல் உறிஞ்சிலேயே வாய் பொரிந்தாலும் சுவை அல்லோலமாக இருக்கும். மெதுவாக ஒரு டம்ளர் பாயசம் சாப்பிட்டு முடித்ததும் அடுத்ததை தயாராக அம்மா வைத்திருப்பாள். முதலில் இருந்த ஆர்வம் இரண்டாவதில் இல்லாமல் போனதற்கு Law of diminishing marginal utility சமாசாரம் மட்டும் காரணம் அல்ல. சூட்டில் நாக்கு மரத்து வாய் மேலன்னம் தோல் கழண்டிருக்கும். ஆனாலும் குடித்து விடுவேன். மூன்றாவது தேவை இல்லை என்று தோன்றினாலும் பின்னர் கிடைக்காமல் போய்விடலாம் என்ற பயத்தில்– அதற்குள் தம்பிக்கு ஒரு கப் பாயசம் முற்றாக ஆறவைத்து அம்மா ஊட்டிக் கொண்டிருப்பாள்– வாங்கி வைத்துக் கொண்டு முழித்துக் கொண்டிருப்பேன். அரை டம்ளரிலேயே மேலே ஒரு சொட்டு கூடக் குடிக்க முடியாது போல ஒரு மாதிரியாக இருக்கும். மிச்சத்தை ஒரேமடக்கில் முழுங்கிவிட்டு…

 “நெத்தில (பொட்டு வைத்துக் கொள்ளும் இடத்தை, கைவைத்துக் காண்பித்து) எல்லாம் தூக்கமா வருதும்மா”.

அம்மா நமுட்டாகச் சிரிப்பார். பாட்டி கைக்காரியத்தைப் போட்டுவிட்டு தூக்கிக் கொண்டு போய் ஊஞ்சலில் தன் மடியில் என் தலையை வைத்துப் படுக்கவைப்பாள். “பேசாம கண்ணை மூடிண்டு தூங்கு. இன்னிக்கி பள்ளிக்கூடம் போகவேண்டாம்.”

மகிழ்ச்சியை அதிர்ச்சி மிஞ்சும். உறைந்து போவேன். ஏனென்றால் பள்ளிக்கு விடுமுறை எடுப்பது பாட்டியிடம் அவ்வளவு சுலபம் இல்லை. ஜுரமே அடித்தாலும், கழுத்தில் நெற்றியில் கைவைத்துப் பார்ப்பார். [பாட்டி கை நமக்கு ஜில்லென்றிருந்தால், ஜுரம் இருக்கிறதென்று அர்த்தம். இல்லாவிட்டால் லீவ் சாங்க்ஷன் ஆவது சந்தேகம் தான். 😦 ] ஜுரமெல்லாம் ஒன்றுமில்லை என்று உதடு பிதுக்கி விட்டால் அப்புறம் பாட்டி சொல்லுக்கு பயந்து தெர்மாமீட்டரும் பம்மிவிடும். ‘இல்லை பாட்டி உள்ள ஜுரம் மாதிரி இருக்கு’ என்று சதம்பினாலும் ‘காங்கையா இருக்கும். நெருக்கி 4 தடவை எண்ணை தேச்சுக் குளிச்சா சரியாயிடும்!’ என்ற தீர்மானத்தோடு, புளுகப் பார்த்த பாவத்துக்கு செவ்வாய் மாற்றி வெள்ளி என்று எண்ணைக் குளியல் வேறு படுத்தும்.

சிறிது நேரத்தில், ‘தர்ப்பண நாளாயிருக்கு. நான் தொடவேண்டாம். அந்தத் தலகாணியைக் கொண்டுவந்து குழந்தைக்கு வை!’ என்று அண்ணனுக்கு உத்தரவு போட்டுவிட்டு மெதுவாக தன் மடியை விடுவித்துக் கொண்டு விடுவார். ‘வாய் தான் இருக்கு. பத்து லோட்டா சாப்பிடற ஆளப் பார்த்தா தெரியலை. ரெண்டுக்கே தலை சுத்தியிருக்கு. இதுல நெத்தில தூக்கம் வருது, பொடனில தூக்கம் வருதுன்னு ஒளறல் வேற’ நக்கலும் பெருமையுமாய் பாட்டி சன்னமாய் ஊஞ்சலை ஆட்டிவிட்டுப் போவார். எப்படியோ ஸ்கூலுக்கு மட்டம் போட்டுட்டாளே என்பது அண்ணனின் ஆத்திரம்.

முழுமையாய் தூக்கம் எதுவும் வராமல்– ஆபிசுக்குக் கிளம்பும் அப்பா, ஸ்கூலுக்குக் கிளம்பும் அண்ணன், விவிதபாரதியின் ‘உங்கள் விருப்பம்’ முடிந்து வரும் பின்னணி இசை, வாசலில் ஆட்டுக்குட்டி கத்துவது, அம்மாவும் பாட்டியும் பேசிக்கொண்டே உள்ளே சாப்பிடுவது, அடுத்தாத்தில் துணி துவைக்கும் ஓசை எல்லாம் மங்கலாய் காதில் கேட்கும். சிறிது நேரத்தில் ஊரே அடங்கிப் போய்விடும். மயக்கம் தெளிந்து கண் விழிக்கும்போது தம்பி முழுமையாய் என் ஸ்கூல் பையிலிருக்கும் புத்தகங்களை வெளியே எடுத்துப் பிரித்துவைத்துக் கொண்டு மழலையாய் விநோதமான ஒலிகளை எழுப்பிக் கொண்டிருப்பான். (என்னை மாதிரி படிக்கிறானாம்!) அப்புறம் அது டீச்சர் விளையாட்டாய் மாறி, தொடர்ந்து அன்று முழுவதும் அவனுடன் ஜாலியாக விளையாடலாம்.

வீட்டில் அப்போதெல்லாம் ஃப்ரிட்ஜ் இல்லாததால் மதியத்திற்குள் பாயசத்தைத் தீர்த்துவிட வேண்டிய கட்டாயத்தில் மேலும் இரண்டு டம்ளர் பாயசத்தை உள்ளே தள்ளியதோடு இனி சாப்பிட முடியாது என்ற நிலையில் ஜென்மத்துக்கும் இது வேண்டாம் என்ற சபதத்தை நானும் என் நாக்கும் எடுத்துவிடுவோம். ஆனால் அடுத்த வருட ஆனி மாதம் கடைசி நாள், எடுத்த சபதத்தையே திரும்ப எடுத்துவிடுவோம்.

“இந்த வருஷமாவது எனக்கு 10 டம்ளர் திருக்கண்ணமுது செஞ்சு தரியா பாட்டி?”

“பொழைச்சுக் கிடந்தா பாக்கலாம்…”

-0-

 

thengaai paal  1

தேவையான பொருள்கள்:

முற்றிய பெரிய தேங்காய் – 2
அரிசி – 2 டீஸ்பூன்
வெல்லம் – 200 கிராம்
ஏலக்காய் – 8
பச்சைக் கற்பூரம்.

thengaai paal 2

செய்முறை:

  • தேங்காயை மிருதுவாகத் துருவிக் கொள்ளவும்.
  • அரிசி, துருவிய தேங்காயை கிரைண்டரில் போட்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைத்து, பாலை வடிகட்டவும்.
  • மீண்டும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, தேங்காயை அரைத்து, ஒட்ட பாலை வடிகட்டவும்.
  • இரண்டு பாலையும் கலந்து அடுப்பில் வைத்துக் கரண்டியால் கிளறவும்.
  • நல்ல சூடு வந்ததும் பொடித்த வெல்லம் சேர்த்து, கொதிவரும் சமயத்தில் இறக்கி, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்க்கவும்.

* கொதித்துவிட்டால் பால் முறிந்து போகும். சரியாகக் காயாவிட்டால் பச்சை வாசனை வரும். எனவே சரியாக, கொதிவரும் சமயத்தில் இறக்கவேண்டும்.

* ஏலப்பொடி தயாராக இல்லாவிட்டால் ஏலக்காயை தேங்காயோடு சேர்த்தே அரைக்கலாம்.

* மிக்ஸியில் அரைத்தும் பால் எடுக்கலாம். ஆனால் கிரைண்டரில் எடுப்பது போல் கொஞ்சமாய் நீர் சேர்த்து கெட்டியான பாலாக எடுக்க முடியாது. தேங்காயின் முழு வாசனையும் குணமும் வருவதற்கு கிரைண்டரில் அரைப்பதே நல்லது.
 

தை வெள்ளிக் கிழமை என்பதால் முதலில் ஒரு எளிய பாயசம்.. 🙂 

தேவையான பொருள்கள்:

கெட்டியான பால் – 1 1/2லிட்டர்
அரிசி  – 100 கிராம்
சர்க்கரை – 100 கிராம்
ஏலக்காய் – 4
பிஸ்தா – 6
பாதாம் – 4
கிஸ்மிஸ் – 20
நெய் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

  • பாதாம், பிஸ்தாவை பொடிசெய்து கொள்ளவும்.
  • ஏலக்காயை உரித்து, விதைகளைப் பொடி செய்யாமல், சிறிது பாலில் ஊறவைக்கவும்.
  • அரிசியைக் கழுவி அரைமணி நேரம் பாலிலேயே ஊறவைத்து அதன்பின் குக்கரில் வேகவைக்கவும். பாலுடன் அரிசி வெந்து சற்றே கெட்டியான பதமாக இருக்க வேண்டும்.
  • அதனுடன் மிச்சமுள்ள பால், சர்க்கரை, ஊறவைத்துள்ள ஏலக்காய், பொடித்து வைத்துள்ள பொடிகளைக் கலக்கி 5 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
  • நெய்யில் கிஸ்மிஸ் பொரித்துச் சேர்த்து, பரிமாறவும்.

* வட இந்தியப் பெண்கள் ‘வைபவ லெஷ்மி விரதம்’ என்று ஒன்று செய்கிறார்கள். முடிவுறும் வாரத்தில் பெண்களை அழைத்து விருந்து வைக்கிறார்கள். அப்போது ஆரம்பத்தில் எனக்குத் தெரிந்து அநேகம்பேர் இந்த கீர் தான் பிரசாதமாகச் செய்து கொடுக்கிறார்கள்.

“மூட நெய்பெய்து முழங்கை வழிவார…”

“அட, அப்படியே அக்கார அடிசிலில் மூட மூட நெய் பெய்தாலும், கையிலிருந்து வாய்க்குப் போவதற்குள் எப்படி வேகமாக முழங்கை வரை நெய் வழியும் என்பதற்கு ஒரு அழகான விளக்கம் படித்தேன். சீக்கிரம் அக்கார அடிசிலை உண்டுவிட்டால், கண்ணன் கிளம்பிவிடுவான் என்று நோன்புப் பெண்கள், சாப்பிடுவது போல் பாசாங்குக்காகக் கையிலெடுத்துவிட்டு, ஆனால் சாப்பிடாமல் அவனோடு பேசியே பொழுதை இழுத்தடித்துக் கழிப்பார்களாம். அதற்குள் கையிலிருக்கும் அக்கார அடிசிலிருந்து நெய் பிரிந்து முழங்கை வரை வந்து விடுமாம்.

ம்ம்ம்.. அப்ப ஒரு கோக் டின் வாங்கிகிட்டு கார்னர் டேபிளை occupy பண்ணிகிட்டு ஒருமணிநேரம் அல்லது சர்வரே விரட்டற வரைக்கும் டாக் பண்ணிகிட்டே இருக்கறதும், எப்பவோ ஒரு தடவை நினைவு வந்தமாதிரி வாயை அதுல வெச்சு இரண்டேஇரண்டு மில்லி உறிஞ்சறதும் கேட்டா Sweet Nothingsனு சொல்லிக்கறதும், அப்படி ஒன்னும் சமீபத்தைய trend இல்ல போல!! :))

யாராவது ஜெயிச்சா, தங்கப்பதக்கம் வாங்கினா, நெகிழ்ச்சில அழுவாங்க. அட, உலக அழகியாவே அறிவிச்சா கூட வாயை ஓ’ மாதிரி வெச்சுகிட்டு, சொல்லிவெச்ச மாதிரி உலகத்துல இருக்கற அவ்ளோ அழகிகளும் அழறாங்க. 

ஆண்டாள் ரெங்கமன்னார்

ஆனாலும் நம்ப பார்ட்டிக்கு ஜெயிச்சப்பறம் இந்தத் தெனாவட்டு ஆகுமா? முப்பது நாளும் பணிவு பக்தின்னு இருந்த பொண்ணான்னு இருக்கு! ஆண்டாள் ஆண்டாள் தான்!! 

-0-

நான் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றிருந்த போது, “பெரும்புதூர் மாமுனிக்கு பின்ஆனாள் வாழியே!” என்று வாழி திருநாமம் ஆண்டாள் பற்றி குறிப்பிடுவது ஏன் என்று சந்தேகம் கேட்டபோது அங்கிருந்தவர்கள் இராமானுஜருக்கு ஆண்டாள் எப்படித் தங்கையானாள் என்று ஒரு கதை சொன்னார்கள்.

ஆண்டாள் தன்பொருட்டு அழகருக்கு செய்துவைக்கிறேன் என்று பிரார்த்தித்துக்கொண்ட 100 தடா ‘அக்கார அடிசிலை’…

நாறு நறும்பொழில்மா
     லிருஞ்சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில்வெண்ணெய்
     வாய்நேர்ந்து பராவிவைத்தேன்,
நூறு தடாநிறைந்த
     அக்கார வடிசில்சொன்னேன்,
ஏறு திருவுடையான்
     இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ.
(– நாச்சியார் திருமொழி)

 

…. கல்யாண குஷியில்:) மறந்திருக்கலாமோவென இராமானுஜர் சிரமப்பட்டு நிறைவேற்றி வைக்கிறார். அதனால், பின்னர் இராமானுஜர் ஸ்ரீவில்லிபுத்தூர் வரும்போது ஆண்டாள் அவரை “அண்ணா!” என்று நெகிழ்ந்து அழைத்துக்கொண்டே எட்டடி முன்னால் ஓடிவந்துவிட்டாளாம். (இப்போதும் மற்ற கோவில்களைப் போல் இல்லாமல் ஸ்ரீவில்லிபுத்தூரில் மூலவருக்கும் உத்ஸவருக்குமான இடைவெளி மிக அதிகமாக, உத்ஸவர் மற்ற கோவில் உத்ஸவர்களைவிட இன்னும் எட்டடி அதிக முன்னாலேயே இருப்பதால் பின்னால் இருக்கும் மூலவரை நன்றாக தரிசிப்பது சிரமமாகவே இருக்கும்.) இந்த உற்சவம் இப்பொழுதும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடம் ஒருமுறை நடந்துவருகிறது என்று கேள்விப்பட்டேன்

இந்த நிகழ்வை ஸ்ரீரங்கம் கோயிலொழுகும் இவ்வாறு குறிப்பிட்டு உறுதிசெய்கிறது…
 

…. உடையவரும் பெரியபெருமாளுடைய அநுமதியுடனே திருவரங்கத்திலிருந்து புறப்பட்டு சுந்தரத் தோளுடையான் எழுந்தருளியிருக்கும் திருமாலிருஞ்சோலைக்குச் சென்று (இது அழகர் கோயில்) மங்களாசாஸனம் செய்தருளினார். அங்கு ஆண்டாள் விபவாவதாரத்திலே பாரித்தபடி, அக்குடியில் பிறந்த தாம் ஆண்டாளுடைய எண்ணத்தை நிறைவேற்றும்விதமாக 100 தடா வெண்ணெய், 100 தடா அக்காரஅடிசில் ஸமர்ப்பித்தருளினார்.
……………………………
…………………………….
அதன்பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றடைந்து…

…ஆண்டாளும் தாம் வாய்நேர்ந்த படியே அழகருக்கு 100 தடா அக்காரஅடிசிலைத் தம்பொருட்டு ஸமர்பித்த இராமானுசரை
‘எம் கோயில் அண்ணரே’ வாரும் என்று அழைத்தருளினாள்.

ஆண்டாள் குறித்து படித்த இன்னொரு சுவாரசியமான சுட்டி

இந்தப் பகுதி மரத்தடி ஹரன்பிரசன்னாவிற்கு சமர்ப்பணம். 🙂

-o-

இனி அக்கார அடிசில்… இது மார்கழி மாதம் 27ஆம் நாள் செய்யும் இனிப்பு வகை…

தேவையான பொருள்கள்:

அரிசி – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
வெல்லம் – 2  1/2 கப்
ஏலப்பொடி – 2 டீஸ்பூன்
பச்சைக் கற்பூரம் – சிறிது
மற்றும்
பால் பால் பால் பால்…
நெய் நெய் நெய் நெய்…

செய்முறை:

  • அரிசி மற்றும் பயத்தம் பருப்பைக் கழுவி, நன்கு நீரை வடித்துவிட்டு, வாணலியில் 2 டீஸ்பூன் நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
  • பின் 5 கப் பால் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேக விட வேண்டும்.
  • வாணலியில் வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்து, கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.
  • வாணலியில் குழைய வேகவைத்த அரிசிக் கலவை, வடிகட்டிய வெல்லக் கரைசலுடன் மேலும் 2 கப் பால் சேர்த்து சிறுதீயில் கிளற ஆரம்பிக்க வேண்டும்.
  • இறுக இறுக மேலும் மேலும் பால் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
  • சிறிது நேரம் சென்றபின் நெய்யைச் சேர்க்க ஆரம்பிக்க வேண்டும்.
  • நெய், நெய், நெய் மேலும் நெய்…போதும் என்று [நாம்:-)] முடிவு செய்யும் போது ஏலப்பொடி, பச்சைக்கற்பூரம் சேர்த்துக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கலாம்.

akkaara adisil (maargazhi 27)

* “நெய்யுண்ணோம்.. பாலுண்ணோம்” என்று மார்கழி 2ம் நாள் ஆரம்பித்த நோன்பை, “…அதன்பின்னே பால்சோறு, மூட நெய் பெய்து முழங்கை வழிவார..” என்று கூறி 25 நாள்களாகத் தவறவிட்ட நெய் பாலையெல்லாம் மார்கழி 27ம் நாள் கணக்கில் ஆண்டாள் எழுதிவிட்டாள். பாலிலேயே அரிசி சமைக்கப்பட வேண்டும். அதுவே மூடப்படும் அளவு அதன்மேல் நெய் ஊற்றப்பட வேண்டும். சமைத்தபின் அக்கார அடிசிலைக் கையில் எடுத்தால் நெய் முழங்கை வழிவார ஒழுக வேண்டும். இது ஆண்டாள் இந்தப் பாட்டில் தந்திருக்கும் ரெசிபி.

அப்படியெல்லாம் பால், நெய்யைக் கொட்ட நாம் ஆயர்பாடியிலோ, ஸ்ரீவில்லிபுத்தூரிலோ இல்லை என்பது முதல் காரணமென்றாலும், நமது தேகம் தாங்காது என்பது அதைவிட முக்கியமான காரணம். உங்கள் வீட்டுக்காரர்களிட(மு)ம் நல்லநாளில் தயவுசெய்து எனக்குத் திட்டு வாங்கித் தராதீர்கள். அவ்வளவு பால் நெய் தேவையில்லை. அவரவர் விருப்பம் போல் சேர்த்துக் கொள்ளவும். அதனால்தான் தேவையான பொருள்களில் பால் மற்றும் நெய்யின் அளவைக் குறிப்பிடவில்லை.

* குக்கரில் வைக்கும் போது 5 கப் பாலிற்குப் பதிலாக 3 கப் பால் மற்றும் 2 கப் நீராகக் கலந்து வைக்கலாம். ஆனால் பின்னால் கிளறும் போது பால்தான் சேர்க்க வேண்டும்.

* வாணலியில் கிளற ஆரம்பிக்கும் முன்பே வெல்லக் கரைசல், வேக வைத்த சாதக்கலவை, பால் ஆகியவற்றைக் கட்டியில்லாமல் கரைத்துக் கொண்டுவிடுதல் நலம். இல்லாவிட்டால் பின்னால் சமாளிப்பது சிரமம்.

கிளறும்போது கடைபிடிக்கவேண்டிய அனுஷ்டானங்கள்:

வாயால் பாடும் கனகதாரா, ‘உதயா’ உளறல்களைத் தற்காலிகமாக நிறுத்திவிடுவது,

காதால் கேட்கும் தொலைபேசி அழைப்பெல்லாம் wrong call (அல்லது எனக்கில்லை) என்று திடமாக நம்புதல்,

யாதொரு சம்பந்தமுமில்லாமல் திடீரென இடையில் பெண் கேட்கும் ‘How come you loved appa? என்ற விடையே இல்லாத கேள்விகளுக்கு விடையை மனதால் சிந்திக்க முற்படாதிருத்தல்,

“அக்காரவடிசல்(வழக்குமொழியில்) எல்லாம் எங்கம்மா பண்ணனும், இன்னும் நாக்குலயே இருக்கு!” என்று பக்கவாட்டிலிருந்து நம்மைச் சீண்டப்பார்க்கும் பேச்சுகளுக்கு, “பாசுரம் ஒண்ணும் உருப்படியா நாக்குல நிக்காட்டாலும் இதுவாவது நிக்குதே!…. இவ்ளோ வாயாகாது!!” என்று திருப்பிச் சொல்ல நினைப்பதைச் சற்று நேரத்திற்கு ஒத்திப் போடுவது [அதற்காக சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் இருக்கக் கூடாது. கொஞ்சம் postpone செய்து சாப்பிட ஆரம்பிக்கும்முன் அவசியம் சொல்லிவிட வேண்டும். :)]

ஏன் இவ்வளவு புலனடக்கம் தேவை என்று புரியாதவர்களுக்கு இனி பதில்…

* பால் சேர்த்திருப்பதால் மிக விரைவில் வேகவேகமாக அடிப்பிடிக்க ஆரம்பிக்கும். அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் மிகச் சிறிய தீயில் விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின்னால் நிச்சயம் கையொடு தோள் வலிக்கும்.

* கொதிக்கும் வேகத்தில் ‘க்ளக் க்ளக்’ என்று வெளியில் தெறிக்கும்; நம் கையிலும். சமாளிக்க வேண்டியதுதான். வெளிப்புறத்தைத் துடைக்க வேண்டிய வேலை தனி.

* அதிக நேரம் கிளற முடியாது என்று நினைப்பவர்கள் சர்க்கரை சேர்க்காத condensed milk மற்றும் சிறிதளவு பால் மட்டும் கலந்து விரைவில் முடித்து விடலாம். ஆனால் சர்க்கரை கலக்காத condensed milk என்பது மிக முக்கியம். சுவையிலும் கொஞ்சம் compromise செய்த கணக்குதான் இந்த முறை.

இறக்கும் முன்:

* எக்காரணம் கொண்டும் நமது பவிஷைக் காட்ட முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் போன்ற தூவல்களைச் சேர்த்துக் கேவலப்படுத்தக் கூடாது. இது சர்க்கரைப் பொங்கல் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். சாப்பிடும் போது வாயில் இது போன்ற எந்த உப தொந்தரவுகளும் ஏற்பட விடக்கூடாது.

* பச்சைக்கற்பூரம் மிகமிகச் சிறிதளவே சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கசந்து மொத்தமும் பாழாகிவிடும்.

* வெல்லம் சிறிது கருப்பாக இருந்தால், சிட்டிகை கேசரிப்பவுடர் சேர்த்து பொய் make-up செய்யலாம்.

* சர்க்கரைப் பொங்கல் போல் இறுக்கமாகவும் இல்லாமல், பாயசம் போல் நீர்த்தும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட consistencyல் இருக்க வேண்டும். எடுக்கவோ குடிக்கவோ என்று கேட்பதற்கு இடமளிக்க முடியாமல் கையால் எடுக்கவும் முடியாமல், பாயசம் போல குடிக்கவும் முடியாமல் ஸ்பூனால் மட்டுமே எடுத்து சாப்பிட வேண்டிய திடத்தில் அவசியம் இருக்க வேண்டும்.

* எவ்வளவுக்கெவ்வளவு நெய் சேர்க்கிறோமோ அவ்வளவு சுவையாக இருக்கும் என்பதில் இரண்டாம் கருத்தே இல்லை. ஆனால் அப்படிச் சேர்க்கவில்லையென்றாலும், சாப்பிடும் முன், ஒரு கப்பில் போட்டு மைக்ரோவேவ் அவனில் சில நொடிகள் வைக்க, ஜிகுஜிகுவென்று வாசனையுடன், விட்டிருக்கும் சொல்ப நெய்யும் உருகி மேலே வர…. பார்ப்பதற்கு மூட நெய்பெய்தது போன்ற தோற்றத்தையும் சுவையையும் நிச்சயம் தரும். 

* ‘ஏன் கிளற அவ்வளவு கஷ்டப்பட வேண்டும், Non-stick ல் சுலபமாகச் செய்யலாமே?’ என்று கேட்கலாம். ஆமாம் மிகமிகச் சுலபமாகச் செய்யலாம். ஆனால்.. ஸ்ரீரங்கம் கோவிலில் உணவு சமைக்க எல்லாவற்றிற்கும் தங்கம், வெள்ளி அல்லது புதுப்புது மண் பாத்திரங்கள் மட்டுமே உபயோகிப்பார்கள். அதனால் கொஞ்சம் எல்லாவற்றிலும் லேசாக(மிக மிக லேசாக) ‘அடிப்பிடித்த’ வாசனை வரும். அது வந்தால்தான் எனக்கெல்லாம் திருப்தியாக இருக்கும். ஒருமுறை நான்-ஸ்டிக்கில் செய்து பார்த்து அளவுகளும் சுவையும் சரியாக இருந்தும் என்னால் திருப்தியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே non-stick ல் சமைப்பது சுகம். ‘மற்றவை’ ஸ்ரீரங்க சுகம்!!

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இந்த உணவுக்கு மேட்ச் ஃபிக்ஸ் செய்யத் தேவை எதுவும் இல்லை. (உள்ளிருக்கும் பட்சத்தில் பக்தி தானே சேர்ந்துகொள்ளும்.) ஆனால் உண்பவர்களுக்கு துணைக்கு ஒருவரல்ல, நிறையப் பேர் தேவை. தான் மட்டும் தனித்தோ, மிச்சமிருப்பதை ஃபிர்ட்ஜில் வைத்தோ உண்ணாது, எல்லோருடனும் பகிர்ந்து உண்ண வேண்டும்.

“கூடியிருந்து குளிர்ந்து.. “

நன்றி: மரத்தடி.காம்