தேங்காய்ப் பால் பாயசம், சின்ன வயதில் பிடித்துப் போனதற்கு அதில் இடையில் திடப்பொருள்கள் இல்லாமல் நீராக இருந்ததும், முழுங்க சுலபமாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

“பாட்டி, நாளைக்கு எனக்கு 10 டம்ளர் திருக்கண்ணமுது செஞ்சு தரியா?”

“பொழச்சுக் கிடந்தா பார்க்கலாம்..”

மறுநாள் தேங்காயைத் துருவி கொல்லைப்பக்கம் இருக்கும் பெரிய ஆட்டுரலில் அரைத்து துணியில் வெள்ளை வெளேர் என்று பாலை வடிகட்டும் போது ஏமாற்றமாக இருக்கும்.

“எனக்கு மட்டுமே 10 டம்ளர் வேணும்னு நேத்திக்கு சொன்னேனில்ல பாட்டி?”

“அதெல்லாம் வெல்லம் சேர்த்ததும் வந்துடும்.”

“வராது. நீ பொய் சொல்ற!”

“பெருமாளுக்குப் பண்றதுக்கு முன்னால இப்படி எல்லாம் பேசறதே தப்பு.”

பாட்டி ஏமாற்றியதும், அது குறித்து மேலே கேள்வி எழுப்ப முடியாமல் தடுத்துவிட்டதும்… அழகன் படப் பையன் மாதிரி ‘இந்த வீட்டுல பிறந்திருக்காமலே இருந்திருக்கலாம்!’ என்று ஆற்றாமையாக இருக்கும். முகம் வாடிப் போனதைப் பார்த்து, “உனக்கு வேணுங்கறதை எடுத்துக்க. அப்புறம் தான் மத்தவாளுக்கெல்லாம். எனக்கெல்லாம் வேண்டவே வேண்டாம்.” பாட்டி தொடர்ந்து அரைப்பார்.

பாலெடுத்த பதினைந்தாவது நிமிஷத்தில் பாயசம் தயாராகிவிடும்.

“ரொம்ப சுடறது. நான் சூப்பி சாப்பிடவா?”

“சாப்பிடு. ஆனா லோட்டாவைக் கொல்லைல கொண்டப் போடணும்.”

முதல் உறிஞ்சிலேயே வாய் பொரிந்தாலும் சுவை அல்லோலமாக இருக்கும். மெதுவாக ஒரு டம்ளர் பாயசம் சாப்பிட்டு முடித்ததும் அடுத்ததை தயாராக அம்மா வைத்திருப்பாள். முதலில் இருந்த ஆர்வம் இரண்டாவதில் இல்லாமல் போனதற்கு Law of diminishing marginal utility சமாசாரம் மட்டும் காரணம் அல்ல. சூட்டில் நாக்கு மரத்து வாய் மேலன்னம் தோல் கழண்டிருக்கும். ஆனாலும் குடித்து விடுவேன். மூன்றாவது தேவை இல்லை என்று தோன்றினாலும் பின்னர் கிடைக்காமல் போய்விடலாம் என்ற பயத்தில்– அதற்குள் தம்பிக்கு ஒரு கப் பாயசம் முற்றாக ஆறவைத்து அம்மா ஊட்டிக் கொண்டிருப்பாள்– வாங்கி வைத்துக் கொண்டு முழித்துக் கொண்டிருப்பேன். அரை டம்ளரிலேயே மேலே ஒரு சொட்டு கூடக் குடிக்க முடியாது போல ஒரு மாதிரியாக இருக்கும். மிச்சத்தை ஒரேமடக்கில் முழுங்கிவிட்டு…

 “நெத்தில (பொட்டு வைத்துக் கொள்ளும் இடத்தை, கைவைத்துக் காண்பித்து) எல்லாம் தூக்கமா வருதும்மா”.

அம்மா நமுட்டாகச் சிரிப்பார். பாட்டி கைக்காரியத்தைப் போட்டுவிட்டு தூக்கிக் கொண்டு போய் ஊஞ்சலில் தன் மடியில் என் தலையை வைத்துப் படுக்கவைப்பாள். “பேசாம கண்ணை மூடிண்டு தூங்கு. இன்னிக்கி பள்ளிக்கூடம் போகவேண்டாம்.”

மகிழ்ச்சியை அதிர்ச்சி மிஞ்சும். உறைந்து போவேன். ஏனென்றால் பள்ளிக்கு விடுமுறை எடுப்பது பாட்டியிடம் அவ்வளவு சுலபம் இல்லை. ஜுரமே அடித்தாலும், கழுத்தில் நெற்றியில் கைவைத்துப் பார்ப்பார். [பாட்டி கை நமக்கு ஜில்லென்றிருந்தால், ஜுரம் இருக்கிறதென்று அர்த்தம். இல்லாவிட்டால் லீவ் சாங்க்ஷன் ஆவது சந்தேகம் தான். 😦 ] ஜுரமெல்லாம் ஒன்றுமில்லை என்று உதடு பிதுக்கி விட்டால் அப்புறம் பாட்டி சொல்லுக்கு பயந்து தெர்மாமீட்டரும் பம்மிவிடும். ‘இல்லை பாட்டி உள்ள ஜுரம் மாதிரி இருக்கு’ என்று சதம்பினாலும் ‘காங்கையா இருக்கும். நெருக்கி 4 தடவை எண்ணை தேச்சுக் குளிச்சா சரியாயிடும்!’ என்ற தீர்மானத்தோடு, புளுகப் பார்த்த பாவத்துக்கு செவ்வாய் மாற்றி வெள்ளி என்று எண்ணைக் குளியல் வேறு படுத்தும்.

சிறிது நேரத்தில், ‘தர்ப்பண நாளாயிருக்கு. நான் தொடவேண்டாம். அந்தத் தலகாணியைக் கொண்டுவந்து குழந்தைக்கு வை!’ என்று அண்ணனுக்கு உத்தரவு போட்டுவிட்டு மெதுவாக தன் மடியை விடுவித்துக் கொண்டு விடுவார். ‘வாய் தான் இருக்கு. பத்து லோட்டா சாப்பிடற ஆளப் பார்த்தா தெரியலை. ரெண்டுக்கே தலை சுத்தியிருக்கு. இதுல நெத்தில தூக்கம் வருது, பொடனில தூக்கம் வருதுன்னு ஒளறல் வேற’ நக்கலும் பெருமையுமாய் பாட்டி சன்னமாய் ஊஞ்சலை ஆட்டிவிட்டுப் போவார். எப்படியோ ஸ்கூலுக்கு மட்டம் போட்டுட்டாளே என்பது அண்ணனின் ஆத்திரம்.

முழுமையாய் தூக்கம் எதுவும் வராமல்– ஆபிசுக்குக் கிளம்பும் அப்பா, ஸ்கூலுக்குக் கிளம்பும் அண்ணன், விவிதபாரதியின் ‘உங்கள் விருப்பம்’ முடிந்து வரும் பின்னணி இசை, வாசலில் ஆட்டுக்குட்டி கத்துவது, அம்மாவும் பாட்டியும் பேசிக்கொண்டே உள்ளே சாப்பிடுவது, அடுத்தாத்தில் துணி துவைக்கும் ஓசை எல்லாம் மங்கலாய் காதில் கேட்கும். சிறிது நேரத்தில் ஊரே அடங்கிப் போய்விடும். மயக்கம் தெளிந்து கண் விழிக்கும்போது தம்பி முழுமையாய் என் ஸ்கூல் பையிலிருக்கும் புத்தகங்களை வெளியே எடுத்துப் பிரித்துவைத்துக் கொண்டு மழலையாய் விநோதமான ஒலிகளை எழுப்பிக் கொண்டிருப்பான். (என்னை மாதிரி படிக்கிறானாம்!) அப்புறம் அது டீச்சர் விளையாட்டாய் மாறி, தொடர்ந்து அன்று முழுவதும் அவனுடன் ஜாலியாக விளையாடலாம்.

வீட்டில் அப்போதெல்லாம் ஃப்ரிட்ஜ் இல்லாததால் மதியத்திற்குள் பாயசத்தைத் தீர்த்துவிட வேண்டிய கட்டாயத்தில் மேலும் இரண்டு டம்ளர் பாயசத்தை உள்ளே தள்ளியதோடு இனி சாப்பிட முடியாது என்ற நிலையில் ஜென்மத்துக்கும் இது வேண்டாம் என்ற சபதத்தை நானும் என் நாக்கும் எடுத்துவிடுவோம். ஆனால் அடுத்த வருட ஆனி மாதம் கடைசி நாள், எடுத்த சபதத்தையே திரும்ப எடுத்துவிடுவோம்.

“இந்த வருஷமாவது எனக்கு 10 டம்ளர் திருக்கண்ணமுது செஞ்சு தரியா பாட்டி?”

“பொழைச்சுக் கிடந்தா பாக்கலாம்…”

-0-

 

thengaai paal  1

தேவையான பொருள்கள்:

முற்றிய பெரிய தேங்காய் – 2
அரிசி – 2 டீஸ்பூன்
வெல்லம் – 200 கிராம்
ஏலக்காய் – 8
பச்சைக் கற்பூரம்.

thengaai paal 2

செய்முறை:

  • தேங்காயை மிருதுவாகத் துருவிக் கொள்ளவும்.
  • அரிசி, துருவிய தேங்காயை கிரைண்டரில் போட்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைத்து, பாலை வடிகட்டவும்.
  • மீண்டும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, தேங்காயை அரைத்து, ஒட்ட பாலை வடிகட்டவும்.
  • இரண்டு பாலையும் கலந்து அடுப்பில் வைத்துக் கரண்டியால் கிளறவும்.
  • நல்ல சூடு வந்ததும் பொடித்த வெல்லம் சேர்த்து, கொதிவரும் சமயத்தில் இறக்கி, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்க்கவும்.

* கொதித்துவிட்டால் பால் முறிந்து போகும். சரியாகக் காயாவிட்டால் பச்சை வாசனை வரும். எனவே சரியாக, கொதிவரும் சமயத்தில் இறக்கவேண்டும்.

* ஏலப்பொடி தயாராக இல்லாவிட்டால் ஏலக்காயை தேங்காயோடு சேர்த்தே அரைக்கலாம்.

* மிக்ஸியில் அரைத்தும் பால் எடுக்கலாம். ஆனால் கிரைண்டரில் எடுப்பது போல் கொஞ்சமாய் நீர் சேர்த்து கெட்டியான பாலாக எடுக்க முடியாது. தேங்காயின் முழு வாசனையும் குணமும் வருவதற்கு கிரைண்டரில் அரைப்பதே நல்லது.
 

Advertisements