ஆயத்தப் பொடி


உடலில் இருக்கும் கொழுப்பு, ஊளைச் சதையைக் குறைக்க, மூட்டுவலி போன்ற பல பிரச்சினைகளுக்கு கொள்ளு மிகவும் நல்லது. அடிக்கடி உணவில் சேர்ப்பது, உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள். இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.

தேவையான பொருள்கள்:

கொள்ளு – 1/2 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 3
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 4 பல் (விரும்பினால்)
பெருங்காயம்
உப்பு

kollu podi (kaanaa podi)

செய்முறை:

  • துவரம் பருப்பு, கொள்ளு இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
  • காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து, காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்துவைக்கவும்.

பெருங்காயம் கட்டிக் காயமாக இருந்தால் (மணம் நன்றாக இருக்கும்) முதலிலேயே சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.

பொடிகள் அளவு அவசரத்துக்கு ஆபத்பாந்தவன் யாருமில்லை. அதிகம் எண்ணெய், காரம், மசாலா இல்லாத எளிமையான உணவும். கூட. நமக்குத் தேவையான மருத்துவ குணங்களுடைய பொருள்களையும் மானாவாரியாக இணைத்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் நன்மை. இனி, அவ்வப்போது சில பொடிவகைகளும் செய்துபார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

துவரம் பருப்பு – 1 கப்
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 /2 டீஸ்பூன்
பெருங்காயம்
உப்பு

paruppu podi 1

செய்முறை:

  • துவரம் பருப்பை எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். (பருப்பு எதுவும் கருகிவிடாமல் கைவிடாமல் வறுக்கவும்.)
  • காய்ந்த மிளகாய், மிளகு, சீரகத்தையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • ஆறியதும் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, உப்பு, பெருங்காயம் சேர்த்து சற்றே கரகரப்பாக அரைத்து காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்துவைக்கவும்.

கூட்டு, கறி செய்யும்போது வேகவைத்த பருப்பு இல்லையென்றால் மாற்றாக ஒன்றிரண்டு டீஸ்பூன் இந்தப் பருப்புப் பொடி சேர்த்து உபயோகிக்கலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். கூட்டு, அப்பள, வடாம் வகைகள் சேரும்.

திருமணம், ஹோட்டல் போன்ற இடங்களில் பரிமாறப்படும் ஊறுகாய்கள் சுவையாக இருக்கும். ஆனால் அதிக நாள் வைத்துக் கொள்ள முடியாது. அதிகம் அடுப்பில் கொதிக்க வைக்காமல், அதிகம் எண்ணெய் விடாமல் தயாரிப்பதால் சீக்கிரம் கெட்டுவிடலாம். ஆனால் மொத்தமாகச் செய்து அதிக நாள்களுக்கு வைத்துக் கொள்ளும்போது சேர்க்க வேண்டிய அதிக எண்ணெய், அதன்பொருட்டு நாம் சேர்க்கும் அதிக உப்பு, காரம் இவை இல்லாததாலேயே உடலுக்கு இவை அவ்வளவு மோசமில்லை. 🙂 புதிதாகத் தயாரித்ததைத் தான் உபயோகிக்கிறோம் என்ற மனத் திருப்தி.

ஆவக்காய், வடுமாங்காய் போன்ற வருடாந்திரத்துக்கான பிரத்யேகங்கள் ஒருபுறம் இருக்கட்டும். மாற்றாக இன்னொரு ஊறுகாயை  அதுபோல் நாமும் அவ்வப்போது ஒருவாரம் பத்து நாள்களுக்கு மட்டும் வருமளவு கொஞ்சமாகத் தயாரித்து உபயோகிப்பது நல்லது. இரண்டே இரண்டு எலுமிச்சம் பழம் இருந்தால்கூட அதை உடனடி ஊறுகாய் போடுகிற வகை நான். இதனால் அடிப்படைக் காயை விதவிதமாக மாற்றி, போரடிக்காமல் செய்யலாம். விரும்புபவர்கள் இந்தப் பொடியை தயாரித்துவைத்துக் கொண்டால், ஐந்து நிமிடத்தில் எந்த ஊறுகாயும் செய்துவிடலாம்.

தேவையான பொருள்கள்:

காய்ந்த மிளகாய் – 100 கிராம்
கடுகு – 25 கிராம்
வெந்தயம் – 25 கிராம்

செய்முறை:

  • காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயத்தை நன்கு வெயிலில் காயவைத்து அல்லது அப்படிச் செய்ய வசதியில்லாதவர்கள் லேசாக வாணலியில் வறுத்து, நைசாகப் பொடித்துவைத்துக் கொள்ளவும். ஃப்ரிட்ஜில் வைத்தும் தேவையான போது எடுத்து உபயோகிக்கலாம்.

*விரும்பினால் விரளி மஞ்சளையும் இதனுடனேயே சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

இது பெரிய சமையல் குறிப்பா என்று யாரும் வரவேண்டாம். ஆனால் எனக்கு இதில் சொல்ல கொஞ்சம் இருக்கிறது.

மிளகாய், தனியா, சீரகம், மிளகுப் பொடிகள் பாக்கெட்டுகளில் வாங்குவதே இப்போது எல்லோருக்கும் வழக்கமாகி விட்டது. ஆனால் உண்மையில் அவைகளின் shelf life அவ்வளவு நாள்கள் வருகிறதா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. நிச்சயமாய் எனக்கு ஹாங்காங், மும்பை போன்ற ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில் இவை எடுத்து வைத்த 15 நாளில் கெட்டுப் போகின்றன.

masala items

பாட்டி காலங்களில் இவைகளை வெயிலில் காயவைத்து அரைப்பார்கள். இப்போது யாருக்கும் மொட்டை மாடியும் சொந்தம் இல்லை. வெளியில் வைத்து எடுத்து உபயோகிப்பது போல் சுற்றுச் சூழலும் அவ்வளவு சுத்தமாக இல்லை. இதுவே சாம்பார், ரசப் பொடி, கறி மசாலாப் பொடிகளுக்கும் பொருந்தும். அதனால் பொருள்களை நன்கு வாணலியிலேயே வறுத்துக் கொள்ளலாம். ஒவ்வொன்றிலும் 50 கிராம் எடுத்துக் கொண்டு, நன்கு வறுத்து, ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொண்டால் பல நாள்களுக்குக் கெடுவதில்லை. (வறுத்திருப்பதால் மிக்ஸியும் அதிக சிரமம் இல்லாமல் அரைக்கும்.) மற்றும் இதன் வீர்யமும்(காரம், குணம். கொஞ்சம் உபயோகித்தாலே போதும்.) மணமும் மற்றதை விட ஏன் அதிகமாக இருக்கிறது என்பதும் ஆராயப் பட வேண்டிய விஷயம். ஒருமுறை சொந்தமாக அரைத்து சமைத்துப் பழகியவர்கள் மீண்டும் கடைகளில் வாங்க மாட்டார்கள்.

milagaai manjal thool

ஹாங்காங்கில் சார்ஸ் வந்த போது அதிசயமாக ஒரு இந்தியருக்குக் கூட அது தாக்கவில்லை என்று ஒரு கட்டுரை படித்தேன்.(நாங்கள் தான் வீட்டை விட்டே வெளியே வரவில்லையே.) காரணம் அவர்கள் உணவில் சேர்க்கும் அதிகமான மஞ்சள் தூள் என்று ஆராய்ந்து எழுதியிருந்தது அந்தக் கட்டுரையில். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனாலும் அதை உபயோகிப்பதே எனக்கு நம்பிக்கையைத் தருவதாக இருக்கிறது. விரளி மஞ்சளை வாங்கி உடைத்து அரைத்துக் கொள்வதில் கடையில் கிடைப்பதை விட நிறம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும், கலப்படமில்லாத நிஜ நிறம் என்பதில் ஒரு திருப்தி.

உண்மையில் இதற்கெல்லாம் அதிக நேரம் எடுக்கிறதா என்றால் இல்லை. எது தீர்ந்திருக்கிறதோ அதை வாணலியில் சாம்பார் அல்லது கறிக்காக அடுப்பில் வைக்கும்போது அதற்கு முன்னால் ஒரு 2 நிமிடம் இதை வறுத்துக் கொள்கிறேன். ஆறியதும் 2 நிமிடத்தில் அரைத்துக் கொள்கிறேன்.

dhania milagu seeragam thool

8 மிளகு உணவில் இருந்தால் எதிரி வீட்டில் கூட கை நனைக்கலாம் என்று சொல்வார்கள். சீரகமும் தனியாவும் கூட உடலுக்கு மிக முக்கியமான உணவுப் பொருள்கள். இவ்வளவு முக்கியப் பொருள்களை, அன்றாடம் உபயோகிக்கும் பொருள்களை முடிந்தவரை வீட்டிலேயே அவ்வப்போது அரைத்துக் கொள்ளவும்.

ஒருவேளை இதுகூட முடியாதவர்கள் 😦 பொடிகளை வாங்கி வாணலியில் வறுத்து எடுத்துவைத்துக் கொள்ளவும். கெடாமல் இருக்கும். மணமும் அதிகமாக இருக்கும்.

(1)
தேவையான பொருள்கள்:

காய்ந்த மிளகாய் – 10 அல்லது 12
மல்லி விதை – 1/2 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
பெருங்காயம் – 1 துண்டு

curry podi

செய்முறை:

  • மேலே சொல்லியிருப்பவற்றை தனித் தனியாக பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • ஆறியதும் மிக்ஸியில் மெல்லிய ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

இதை கத்திரிக்காய், வாழைக்காய், கொத்தவரங்காய் மாதிரி நாட்டுக் காய்களுக்கு இறுதியில் தூவ உபயோகிக்கலாம்.

 -0-

(2)
தேவையான பொருள்கள்:

காய்ந்த மிளகாய் – 15
மல்லி விதை – 3/4 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
கடுகு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 துண்டு

செய்முறை:

  • மேலே சொல்லியிருக்கும் சாமான்களை வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இந்தப் பொடியை எல்லாக் காய்கறிகளுக்கும் இறுதியில் தூவ உபயோகிக்கலாம்.

-0- 

(3)
தேவையான பொருள்கள்:

காய்ந்த மிளகாய் – 10
மல்லி விதை – 200 கிராம்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
லவங்கப் பட்டை – 1 (பெரியது)
கசகசா – 2 டீஸ்பூன்
சோம்பு – 2 டீஸ்பூன்
வால் மிளகு – 1 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை – 4
விரளி மஞ்சள் – 3

செய்முறை:

  • இவைகளை தனித் தனியாக வாணலியில் வறுத்துக் கொண்டோ, நல்ல வெயிலாக இருந்தால் காய வைத்தோ எடுத்துக் கொள்ளவும்.
  • ஆறியதும் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளலாம்.

காய்ந்த மிளகாயைத் தவிர்த்துவிட்டு மற்ற சாமான்களை மட்டும் அரைத்துக் கொண்டு, காரத்தை அன்றாடம் தனியாகக் கூட சேர்த்துக் கொள்ளலாம். இந்த முறையில் பொடியை ருசிக்கேற்றவாறு அவரவர் கூட அல்லது குறைய, போட்டுக் கொண்டு, தேவையான அளவு காரத்தை மட்டும் அவ்வப்போது சேர்த்துக் கொள்ளலாம். இதனால் இந்த மசாலா அதிகம் வேண்டாதவர்கள், காரத்திற்காக மட்டும் இதை அதிகம் சேர்க்கத் தேவை இல்லை. அல்லது அதிகம் மசாலா தேவை இருப்பவர்கள், காரம் அதிகமாகிக் கஷ்டப்பட வேண்டாம்.

தேவையான பொருள்கள்: 

காய்ந்த மிளகாய் – 1 கப்
தனியா – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1 கப்
மிளகு – 3 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 3 டேபிள்ஸ்பூன்
காயம் – சிறு துண்டு

vaththak kuzambu podi

செய்முறை:

  • மேலே சொல்லியிருக்கும் எல்லாச் சாமான்களையும் வெறும் வாணலியில் தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும்.
  • ஆறியதும் மிக்ஸியில் மிக நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். ஆறு மாதங்கள் வரை கெடாது.

தேவையான பொருள்கள்:

காய்ந்த மிளகாய் –  200 கிராம்
தனியா – 4 கப்
துவரம் பருப்பு – 1  1/2கப்
கடலைப் பருப்பு –  1/4 கப்
மிளகு – 1 1/2 கப்
சீரகம் – 1/2 கப்
வெந்தயம் –  1 டீஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
பெருங்காயம் –  50 கிராம் கட்டி
விரளி மஞ்சள் – 10

rasam podi

செய்முறை:

  • விரளி மஞ்சளை சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் காயவைத்துக் கொள்ளவும். வெயில் இல்லாத காலங்களில்/இடங்களில் லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளலாம். ஈரப்பதம் இருந்தால் மிக்ஸியில் அரைக்க வராது; பொடி சீக்கிரம் கெட்டுவிடும்.
  • தனியா, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு இவற்றை தனித் தனியாக எண்ணை விடாமல் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • கட்டிப் பெருங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் எண்ணையில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • கடைசியில் மிளகாயை சிட்டிகை உப்பு(வறுக்கும்போது கமறாமல் இருக்க) சேர்த்து வறுக்கவும்.
  • எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்து, காற்றுப் புகாத பாட்டிலில்/டப்பாவில் எடுத்துவைக்கவும்.

நேரம் கிடைக்கும் பொழுது இந்தப் புளிக்காய்ச்சலையும், புளியோதரைப் பொடியையும் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். சரியான பக்குவத்தில் தயாரிக்கப் பட்டால் இவை ஆறு மாதங்கள் ஆனாலும் கெடாது.

தேவையான பொருள்கள்:

புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 150 கிராம்
காய்ந்த மிளகாய் – 15
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கல் உப்பு- தேவையான அளவு
நல்லெண்ணை – 1/2 கப்

புளியோதரைப் பொடி தயாரிக்க
காய்ந்த மிளகாய் – 15லிருந்து 20
தனியா – 3 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கட்டிப் பெருங்காயம் – சிறு துண்டு

புளியோதரை கலக்க
உதிராக வடித்த சாதம்
புளிக்காய்ச்சல்
புளியோதரைப் பொடி
மஞ்சள் பொடி
நல்லெண்ணை
பச்சைக் கருவேப்பிலை
நிலக்கடலை
வெந்தயம்
கடலைப் பருப்பு
உளுத்தம் பருப்பு
முந்திரிப் பருப்பு
வெள்ளை எள்

iyengar puliyotharai

 

செய்முறை:

புளிக்காய்ச்சல்:

  • முதலில் புளியை தண்ணீரில் ஊறவைத்து, உப்பு சேர்த்துக் கரைத்து, வடிகட்டவும்.
  • அடுப்பில் வாணலியில் நல்லெண்ணை விட்டு, முழு மிளகாய் வற்றலை நன்கு வறுத்து, பின், கடுகு, சீரகம் பொரித்து புளித் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.
  • அடுப்பை சிம்மில் வைத்து, நிதானமாகக் கொதிக்கவிட்டு, நன்கு கிளறிவிட வேண்டும்.
  • பாதி கொதிக்கும்போது பச்சை வெந்தயத்தையும் சேர்க்கவும்.
  • தளதளவென சப்தத்துடன் கொதித்து இறுகி, எண்ணை மேலே வரும் சமயம் புளிக்காய்ச்சல் தயார். அடுப்பை அணைத்து, நன்கு ஆறியவுடன், பாட்டிலில்* எடுத்துவைக்கவும்.

புளியோதரைப் பொடி:

  • அடுப்பை சிம்’மில் வைத்து வெறும் வாணலியில் வெந்தயத்தை சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • சிறிது எண்ணை விட்டு பெருங்காயத்தைப் பொரித்து எடுக்கவும்.
  • அதிலேயே காய்ந்தமிளகாய், தனியாவை நன்கு வறுத்து எடுக்கவும்.
  • ஆறியதும், எல்லாச் சாமான்களையும் மிக்ஸியில் நைசாகப் பொடித்து எடுத்துவைக்கவும்.

புளியோதரை கலக்கும் விதம்:

  • ஒரு பெரிய தாம்பாளத்தில் நன்கு சூடான, உதிர் உதிராக வடிக்கப்பட்ட சாதத்தை பரவலாகக் கரண்டியால் எடுத்துப் போடவும்.
  • அதன்மீது மஞ்சள் பொடி, பச்சைக் கறிவேப்பிலையைப் பரவலாகத் தூவி, நல்லெண்ணையையும் பரவலாகச் சேர்த்து அப்படியே நன்கு ஆறவிடவும்.
  • பின், தேவையான புளிக்காய்ச்சலை சாதத்தில் போட்டு, சாதம் குழையாமல் உடையாமல் மெதுவாகக் கரண்டியால் அல்லது கைவிரல்களால் (கையால் அல்ல) கலக்கவும்.
  • எண்ணையில் நிலக்கடலை, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், முந்திரிப்பருப்பு, எள் வறுத்து புளியோதரையில் சேர்க்கவும்.
  • கடைசியில் திட்டமான அளவு, புளியோதரைப் பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
  • எள், தாளிக்கும்போது சேர்க்காமல், வறுத்து, பொடித்தும் கடைசியில் சேர்த்தால் மிகுந்த வாசனையோடு சுவையாக இருக்கும்.
  • உப்பு, சர்க்கரை, ஊறுகாய் மற்றும் உப்போ சர்க்கரையோ சேர்த்த மசலாக்களை பிளாஸ்டிக் அல்லது எவர்சில்வர் டப்பாக்களில் வைப்பது உடலுக்குத் தீங்கானது. இவைகளை எப்பொழுதும் கண்ணாடி பாட்டில்களிலேயே வைக்கவும். உள்ளேயே ஸ்பூன் போட்டு வைப்பதாக இருந்தால் மர ஸ்பூன் மட்டுமே உபயோகிக்கவும்.

 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பொரித்த அப்பளம், வடாம், சிப்ஸ் வகைகள், மெலிதாகத் தட்டப்பட்ட உளுந்து வடை (ஆஞ்சநேயர் கோயில் வடைமாலை), …

சாம்பார், குழம்பு, கறிவகைகள் சிலவற்றிற்கும் இந்தப் பொடியைப் பயன்படுத்தலாம்.

தேவையான பொருள்கள்:

காய்ந்த மிளகாய் –  300 கிராம்
தனியா – 3 கப்
துவரம் பருப்பு – 1  1/2கப்
கடலைப் பருப்பு –  1  1/2 கப்
மிளகு – 1 கப்
சீரகம் – 1/2 கப்
வெந்தயம் –  3 டீஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
பெருங்காயம் –  50 கிராம் கட்டி
விரளி மஞ்சள் – 10

sambar podi

செய்முறை:

  • விரளி மஞ்சளை சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் காயவைத்துக் கொள்ளவும். வெயில் இல்லாத காலங்களில்/இடங்களில் லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளலாம். ஈரப்பதம் இருந்தால் மிக்ஸியில் அரைக்க வராது; பொடி சீக்கிரம் கெட்டுவிடும்.
  • தனியா, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு இவற்றை தனித் தனியாக எண்ணை விடாமல் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • கட்டிப் பெருங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் எண்ணையில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • கடைசியில் மிளகாயை சிட்டிகை உப்பு(வறுக்கும்போது கமறாமல் இருக்க) சேர்த்து வறுக்கவும்.
  • எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்து, காற்றுப் புகாத பாட்டிலில்/டப்பாவில் எடுத்துவைக்கவும்.

idlidosai-milagaai-podi.JPG

தேவையான பொருள்கள்:

காய்ந்த மிளகாய் – 200 கிராம்
உளுத்தம் பருப்பு(தோல் நீக்கியது) – 1 கப்
கடலைப் பருப்பு – 1 கப்
எள் –  1 கப்*
பெருங்காயம் – 2 டீஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு (விரும்பினால்)
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் எண்ணை விடாமல் எள், பருப்புகளைத் தனித்தனியாக வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்த மிளகாய், புளியை வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்த பொருள்களுடன் உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, சுத்தமான பாட்டிலில் எடுத்து வைக்கவும்.

* வெள்ளை எள் அல்லது கருப்பு எள், எதுவேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கருப்பு எள் உபயோகிக்கும் போது பொடி, வாசனை மிகுதியாகவும் ஆனால் நிறம் சற்றே கருத்ததாகவும் இருக்கும். வெள்ளை எள், நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

* இட்லி மிளகாய்ப் பொடி மட்டும் கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே செய்வது தனிச் சுவையாக இருக்கும். சிக்கனமானதும் கூட.

* மிளகாய் வறுக்கும்போது வீட்டில் நெடி இருக்கும் என்று பயப்படுபவர்கள், மிளகாயோடு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வறுத்தால் சுத்தமாக கார நெடி வராது. பின்னால் சேர்க்கும் உப்பில் இந்த சிட்டிகையைக் குறைத்துக் கொள்ளலாம்.

* இந்த முறை ஒரு பிடி கருப்பு உளுத்தம் பருப்பும்(தோலுடன்) வறுத்துச் சேர்த்து அரைத்தேன். மிகுந்த சுவையாக இருக்கிறது. அவசியம் முயற்சிக்கவும்.

* குழந்தைகளும் உபயோகிக்கும் வீட்டில் பருப்பின் அளவைக் கூட்டி, காரம் குறைத்துச் செய்யலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இட்லி, தோசை, அடை….