திருமணம், ஹோட்டல் போன்ற இடங்களில் பரிமாறப்படும் ஊறுகாய்கள் சுவையாக இருக்கும். ஆனால் அதிக நாள் வைத்துக் கொள்ள முடியாது. அதிகம் அடுப்பில் கொதிக்க வைக்காமல், அதிகம் எண்ணெய் விடாமல் தயாரிப்பதால் சீக்கிரம் கெட்டுவிடலாம். ஆனால் மொத்தமாகச் செய்து அதிக நாள்களுக்கு வைத்துக் கொள்ளும்போது சேர்க்க வேண்டிய அதிக எண்ணெய், அதன்பொருட்டு நாம் சேர்க்கும் அதிக உப்பு, காரம் இவை இல்லாததாலேயே உடலுக்கு இவை அவ்வளவு மோசமில்லை. 🙂 புதிதாகத் தயாரித்ததைத் தான் உபயோகிக்கிறோம் என்ற மனத் திருப்தி.
ஆவக்காய், வடுமாங்காய் போன்ற வருடாந்திரத்துக்கான பிரத்யேகங்கள் ஒருபுறம் இருக்கட்டும். மாற்றாக இன்னொரு ஊறுகாயை அதுபோல் நாமும் அவ்வப்போது ஒருவாரம் பத்து நாள்களுக்கு மட்டும் வருமளவு கொஞ்சமாகத் தயாரித்து உபயோகிப்பது நல்லது. இரண்டே இரண்டு எலுமிச்சம் பழம் இருந்தால்கூட அதை உடனடி ஊறுகாய் போடுகிற வகை நான். இதனால் அடிப்படைக் காயை விதவிதமாக மாற்றி, போரடிக்காமல் செய்யலாம். விரும்புபவர்கள் இந்தப் பொடியை தயாரித்துவைத்துக் கொண்டால், ஐந்து நிமிடத்தில் எந்த ஊறுகாயும் செய்துவிடலாம்.
தேவையான பொருள்கள்:
காய்ந்த மிளகாய் – 100 கிராம்
கடுகு – 25 கிராம்
வெந்தயம் – 25 கிராம்
செய்முறை:
-
காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயத்தை நன்கு வெயிலில் காயவைத்து அல்லது அப்படிச் செய்ய வசதியில்லாதவர்கள் லேசாக வாணலியில் வறுத்து, நைசாகப் பொடித்துவைத்துக் கொள்ளவும். ஃப்ரிட்ஜில் வைத்தும் தேவையான போது எடுத்து உபயோகிக்கலாம்.
*விரும்பினால் விரளி மஞ்சளையும் இதனுடனேயே சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
மறுமொழியொன்றை இடுங்கள்