பானகம்/ஜூஸ்


சக்ரவர்த்தி திருமகனின் பிறந்தநாளை முன்னிட்டு… 

தேவையான பொருள்கள்:

தயிர் – ஒரு கப்
தண்ணீர் – 3 கப்
இஞ்சி – சிறு துண்டு
கறிவேப்பிலை – 4,5 இலை
கொத்தமல்லி – சிறிது
பச்சை மிளகாய் – 1/2
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 1 சிட்டிகை

விரும்பினால்..
வெள்ளரி – 1 துண்டு
கேரட் – 1 துண்டு
மாங்காய் – 1 துண்டு

neermor.JPG

செய்முறை:

  • புளிக்காத தயிரை நன்கு கடைந்து, 2 கப் தண்னீர் சேர்த்துக் கொள்ளவும்.
  • இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெள்ளரி, கேரட், மாங்காய் எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்து அத்துடன் மீதம் இருக்கும் ஒரு கப் தண்ணீரைச் சேர்த்து நன்கு டீ வடிகட்டியில் வடிகட்டவும்.
  • வடிகட்டிய நீரையும் மோரோடு சேர்த்துக் கொள்ளவும்.
  • மேலே உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கலக்கவும்.
  • மாங்காய் இல்லாவிடில், தேவைப் பட்டால் சிறிது எலுமிச்சம் பழச் சாறும் சேர்த்துக் கொள்ளலாம்.

* பொதுவாக எல்லா வேலைகளுக்கும் அம்மி ஆட்டுரல் என்று பழைய பொருள்களை நாடினாலும், தயிர் கடைவதில் மட்டும் மத்தை விட மிக்ஸி மிக மிகச் சுவையான மோரைக் கொடுக்கும்.

* வெயில் காலத்தில் இதைத் தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் மதிய வேளைகளில் தேவைப்படும் பொழுதெல்லாம் எடுத்துக் குடிக்கலாம். ஆடை நீக்கிய தயிர் அல்லது வெண்னை எடுத்த மோர் என்றால் நலம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பானகம் | வடைபருப்பு

ram.JPG

ஸ்ரீரங்கத்தில் சித்திரை மாதம் வரும் புனர்பூசம்/நவமி திதிக்குத் தான் ஸ்ரீராம நவமி கொண்டாடுவோம். இருந்தாலும் ஊரோடு ஒத்து வாழும் பொருட்டும், மெனக்கெட்டு மஹாராஷ்டிரா அரசு பள்ளி அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்திருப்பதாலும், இன்று.

சக்ரவர்த்தி திருமகனின் பிறந்தநாளை முன்னிட்டு…

sriramanavami.JPG

பானகம் 

தேவையான பொருள்கள்:

வெல்லம் – 250 கிராம்
தண்ணீர் – 4 கப்
ஏலப்பொடி – 2 சிட்டிகை
சுக்கு – 1 சிட்டிகை
எலுமிச்சம் பழம் – 1

paanagam.JPG

செய்முறை:

  • வெல்லத்தை நீரில் நன்கு கரைத்து, தேவைப்பட்டால் வடிகட்டிக் கொள்ளவும்.
  • ஏலப்பொடி, சுக்குப் பொடி சேர்த்துக் கலக்கவும்.
  • இறுதியில் எலுமிச்சம் பழச் சாறையும் சேர்க்கவும்.
  • இரண்டு மூன்று ஐஸ் க்யூப் சேர்த்துக்கொண்டால் கலக்கலாக இருக்கும் என்றாலும் என்ன சொல்வார் என்று தெரியவில்லையே…..

“Ram! would you mind…? ”

“ஆமாண்டீ, பெரிய பெரிய அட்டூழியம் செய்யுற போது எல்லாம் என் நினைப்பே வர்றதில்லை. ரொம்ப பயந்த மாதிரி, ரெண்டு ஐஸ் க்யூபுக்குத் தான் பர்மிஷன்! திருந்தவே மாட்டியா?”

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நீர்மோர் | வடைபருப்பு

பானக நரசிம்ம ஸ்வாமி ஆலயம்:

mangalagiri.jpg 

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் இருக்கிறது மங்களகிரி.. இங்கு மலைமீது இருக்கும் பானக நரசிம்மர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவக் கோயில் மற்றும் ஸ்ரீரங்கம், திருப்பதி, பத்ரிநாத், நைமிசாரண்யத்திற்கு ஈடான புனிதமானது என்று கூறப்படுகிறது. கீழேயிருந்து மலைக்கு 20 ரூ. ஆட்டோவில் போய் வரலாம்.

சுயம்புவான நரசிம்மரின் திருமார்பு வரை மட்டுமே தரிசனம் கிடைக்கும். மீதிப் பாகம் பூமியினடியில் இருப்பதாக ஐதீகம். வாயைத் திறந்தபடி இருக்கும் நரசிம்மரின் வாயில் கோயிலிலேயே விலைக்குக் கிடைக்கும் (கல்கண்டு அல்லது வெல்லப்)பானகத்தை வாங்கிக் கொடுக்கலாம். எத்தனை பானகம் கொண்டு சென்றாலும் எடுத்துச் செல்வதில் பாதியை மட்டுமே ஏற்றுக் கொள்வதாகவும், ‘கடக்’ என்ற விழுங்கும் சப்தத்தைக் கேட்கமுடிவதாகவும், பாதிக்கு மேல் மீதி ஏற்றுக்கொள்ளப் படாமல் வழிந்துவிடுவதாகவும் சொல்கிறார்கள். மீதியை பக்தர்கள் பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம். இஞ்சி, மிளகு போன்றவையும் இந்தப் பானகத்தில் சேர்க்கப் படுகின்றன. ஒரு எறும்பைக் கூட அருகே பார்க்க முடியாது என்ற கூடுதல் செய்தியைச் சொல்கிறார்கள்.

கோயில் குறித்து மேல் விபரங்கள்….