வலைப்பதிவுகள் தாண்டிய நண்பர் ஒருவர், இந்தக் குறிப்பில் தேடு வசதி, பதிவின் பக்கவாட்டில் இருப்பதாக நான் எழுதியபின், முதன்முறையாக அதை அப்போதுதான் பார்த்து, உணர்ச்சிவசப்பட்டு, தமிழில் தட்டத் தெரியாததால் அங்கே இங்கே என்று எழுத்துகளைப் பிடித்து ஒட்டுப்போட்டு ‘நெல்லிக்காய்’ என்ற ஒரு வார்த்தையை உருவாக்கி (தமிழில் வேறு வார்த்தையே கிடைக்கவில்லையா? அல்லது தமிழ்நாட்டில் நெல்லிக்காய் இப்போது சீசனா?) என் பதிவில் தேடியதில் சடசடவென 20 பதிவுகள் வந்ததாகவும், ஆர்வமாக உள்ளே ஒவ்வொன்றாகப் படித்துப் பார்த்தால் (வாழ்க நின் பொறுமை!), ஒரு குறிப்பு கூட நெல்லிக்காயில் செய்தது இல்லை என்ற பேருண்மை புரிந்து வருத்தப்பட்டார். (உண்மைல கொலைவெறியானார். நாந்தான் கொஞ்சம் நாசுக்காச் சொல்லியிருக்கேன்.) ஆனால், ‘தேவையான பொருள்களி’ல் புளி – நெல்லிக்காய் அளவு என்று எல்லாப் பதிவிலும் எழுதியிருந்தால் அவை வராமல் என்ன செய்யும்? இப்படி எல்லாம் பிரச்சினை வரும் என்று எதிர்பார்க்காத என் பேதைமை நான் கேட்காமலே மன்னிக்கப்பட்டு விட்டாலும் பரிகாரமாக சடசடவென்று இரண்டு நெல்லிக்காய் குறிப்புகள். நெல்லிக்காயைத் தேடி வாங்குவது தான் கஷ்டமான காரியமாக இருந்தது. [நெல்லிக்காய் நெருக்கியதில் வாழைத் தண்டு ஊறுகாயை இரண்டு வாரம் கழித்து செய்ய ஒத்திப் போட்டுவிட்டேன்.]
குறிப்பு (தெரியாதவர்களுக்கு மட்டும்): தேடுபவர்கள் ஆங்கிலத்தில் அதே வார்த்தையைத் தட்டித் தேடினால் (nellikkaai) இந்தப் பிரச்சினை அதிகம் வராது. அந்தப் பொருளை அந்த உணவில் முக்கியமாக உபயோகித்திருந்தால் மட்டுமே அது பதிவின் தலைப்பில், சுட்டியில் இருக்கும். (இதெல்லாம் ரொம்ப ஓவர்னு எனக்கே தெரியுது. ஆனாலும் என்ன செய்ய?)
தேவையான பொருள்கள்:
நெல்லிக்காய் – 8 (பெரியது)
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
காயம் – 1/4 டீஸ்பூன்
வெந்தயப் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
-
நெல்லிக்காய்களை குக்கரில் 5 நிமிடம் ஆவியில் வேகவைத்து, உதிர்த்து, கொட்டையை நீக்கிக் கொள்ளவும்.
-
மிக்ஸியில் சிறிது நீர் சேர்த்து மிக நைசாக அரைத்துக் கொள்ளவும். அல்லது துருவியும் உபயோகிக்கலாம்.
-
அடுப்பில் வாணலியில் நண்லெண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.
-
நெல்லிக்காயை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, நன்கு வதக்கவும்.
-
தொக்கு மாதிரி சேர்ந்து வரும்போது மிளகாய்த் தூள், வெந்தயப் பொடி சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை கிளறவும்.
* நெல்லிக்காயின் புளிப்பைப் பொருத்து காரம், உப்பை கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கவும். குறைந்த அளவு செய்வதால் எண்ணெய் அதிகம் தேவை இல்லை.
* தனியாக வெந்தயப்பொடி, மிளகாய்த் தூள் சேர்க்காமல், ஊறுகாய்ப் பொடி உபயோகித்தும் செய்யலாம். நான் அப்படித் தான் செய்திருக்கிறேன்.
* அருநெல்லிக்காயிலும் இந்தத் தொக்கு சுவையாக இருக்கும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
தயிர்சாதம் தவிர, நல்லெண்ணெய் கலந்த சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
அதிகம் போரடித்தால் சப்பாத்தி, தோசை, உப்புமா வகைகளுக்கும் உபயோகிக்கலாம்.

செவ்வாய்க் கிழமை, டிசம்பர் 25, 2007 at 11:18 மு.பகல்
வாழ்க நீ எம்மாள்.
ஃப்ரோஸன் நெல்லிக்காயைக் கடையில் பார்த்ததும் ஒரு ஆசையில் வாங்கிவந்து என்ன செய்யறதுன்னு தெரியாமல் அப்படியே கிடக்கு..
ஒரு நாலு மட்டும் ஒரு நாள் சாம்பாரில் போட்டேன்:-)
இன்று மாலை நெ.தொ.தான்:–)
சரியான நேரத்தில் வந்த அவசியமான பதிவு.
புதன் கிழமை, டிசம்பர் 26, 2007 at 3:51 பிற்பகல்
ஹலோ ஜெய்,
உப்பில ஊறப் போட்டு ரொம்ப நாள் ஆன நெல்லிக்காயில தொக்கு செஞ்சாக்க நல்லா வருமா? இப்போ வீட்ல அதான் ஸ்டாக் இருக்கு.
புதன் கிழமை, டிசம்பர் 26, 2007 at 6:54 பிற்பகல்
ரொம்ப நன்றி… எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு பதார்த்தத்தை வெகு நாட்களுக்குப் பிறகு கண்ணால் காணும் பாக்கியத்தையாவது கொடுத்ததுக்கு.
வியாழன், டிசம்பர் 27, 2007 at 12:32 மு.பகல்
//உப்பில ஊறப் போட்டு ரொம்ப நாள் ஆன நெல்லிக்காயில தொக்கு செஞ்சாக்க நல்லா வருமா? இப்போ வீட்ல அதான் ஸ்டாக் இருக்கு.//
ஸ்ரீலதா, நான் அடுத்தவாட்டி இந்தியா வரும்போது உங்கள கண்டிப்பா பார்க்கணும். அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா?
வியாழன், டிசம்பர் 27, 2007 at 11:19 மு.பகல்
டியர் பிரெம்ஸ்,
அப்பாயின்ட்மென்ட் கிரான்டெட். (நாம அவ்வளவு பெரிய ஆளா??) கண்டிப்பாக இந்தியா வரும் போது சொல்லுங்க.மீட் பண்ணிடுவோம். அப்ப ஜெய்யும் சென்னை வந்தா நல்லா இருக்கும்.
ஜெய், நான் இன்னைக்கு உங்களோட தக்காளி சட்னி தேங்கா சேர்த்து செய்தேன். தேங்கா ரொம்ப வறுக்கணுமா? நான் கொஞ்சம் முன்னாடியே எடுத்திட்டேன்.அப்பறம், இன்னொரு வகை தக்காளி சட்னில தாளிக்கும்போது வெந்தயம் சேர்க்க சொல்லியிருக்கீங்களே!!!!!ஒருவேளை சீரகம்னு சொல்ல வந்து (உங்க ஃபவரைட்) அது வெந்தயமா மாறிடுச்சா??
வியாழன், டிசம்பர் 27, 2007 at 8:26 பிற்பகல்
நிர்ஜால ஏகதாசி (ஜலம் கூட பருகாமல்) விரதம் முடித்து மறுநாள் த்வாதசி
அன்று கொள்ள ஏற்றது என்று நெல்லிக்காய் தொக்கை சொல்வர் (மினரல் balance சரிகட்ட).
ஆனால் இவ்வளவு காரமா? (படத்தை பார்த்தால் அப்படிதான் தெரிகிறது). வயிறு வெந்துடுமே..
உப்பு தொக்காக சாப்பிடலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
-கிருஷ்ணா
வியாழன், டிசம்பர் 27, 2007 at 8:46 பிற்பகல்
துளசி,
நீங்க சொன்னா சரி.
Srilatha, உங்க கேள்வி பிகேஎஸ் வாய்க்கு அவல். உப்புப் போட்டிருந்தா அதுல வெறும்காரம் மட்டும் சேர்த்து ஊறுகாய் போடலாமே. எதுக்கு வெறும் உப்பு மட்டும் போட்டு வெச்சிருக்கீங்க? எங்க வீட்டுல நீர் நெல்லிக்காய், மோர் நெல்லிக்காய் எல்லாம் செய்வாங்க. அது மாதிரியா?
வியாழன், டிசம்பர் 27, 2007 at 9:25 பிற்பகல்
Krishna,
ஏகாதசியன்று நிர்ஜலமாக இருந்தால் துவாதசி பாரணைக்கு நெல்லிக்காய் தொக்கு உணவில் சேர்த்து நான் கேள்விப்பட்டதில்லை. நெல்லிக்காய் தயிர்ப் பச்சடி அல்லது offseason ல் நெல்லிமுள்ளீ தயிர்ப்பச்சடி செய்வார்கள்.
உப்பு தொக்காகச் சாப்பிடலாம் என்றால் என்ன? என் தொக்கில் காரம் அதிகமில்லை. என் மிளகாய் இந்த முறை நிறம் அப்படி இருக்கிறது. பட்டணம் மிளகாய்னு சொல்லி அண்ணாச்சி கவுத்துட்டாரு.
வியாழன், டிசம்பர் 27, 2007 at 10:10 பிற்பகல்
Quoted from Sadagopan Swamay’s posting:.
Breaking of the fast (PaaraNai ) on DvAdasi days is done after feeding
first guests , if available . Special food like ahatthi keerai ( a type of
broad-leaved spinach ) and Nellikkai pacchadi ( jam of a citrus type
of fruit ) have to be taken in first to serve as a restorer of the equalibrium
in the stomach after extended fasting . The physological effect of biweekly
fasting is terrific on the body.One gives a break to the digestive system
and let it rest & recover for two days in a month .
வியாழன், டிசம்பர் 27, 2007 at 10:20 பிற்பகல்
Krishna,
நீங்க கொடுத்திருக்கற வரிகள் எங்கேருந்து எடுத்தீங்கன்னு தெரியலை. ஆனா அதுலயும் துவாதசி பாரணைக்கு நான் சொன்ன நெல்லிக்காய் பச்சடிதான் சொல்லியிருக்காங்க. தொக்கு(ஊறுகாய்) சொல்லலையே. துவாதசி எல்லாம் பாக்காமலே நான் நெல்லிமுள்ளில அடிக்கடி பச்சடி செய்வேன்.
வியாழன், டிசம்பர் 27, 2007 at 10:58 பிற்பகல்
மன்னிக்கணும்.
பச்சடி/ஊறுகாய் படத்தில் காரம் தூக்கலா தெரிந்ததால் அப்படி சொன்னேன்.
மற்றபடி வேறு ஒன்றுமில்லை.
கிருஷ்ணா
வியாழன், டிசம்பர் 27, 2007 at 11:28 பிற்பகல்
// உங்க கேள்வி பிகேஎஸ் வாய்க்கு அவல் //
ஆரம்பிச்சிட்டாங்கய்யா… ஆரம்பிச்சிட்டாங்க. மனுஷனை ரெண்டுநாள் நிம்மதியா இருக்க விடமாட்டீக போலிருக்கே. இலக்கியபீடம்னு உங்கப் பதிவுக்குப் பேருவந்துடப் போகுது என்ற நல்லெண்ணத்திலே படிச்சுட்டு மட்டும் போகலாம்னு பார்த்தா…
பிகேஎஸ் அவல் சாப்பிடுவது இல்லை. மெல்லுவதும் துப்புவதும் கவுஜ கவுஜ மட்டுமே.
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 28, 2007 at 9:14 பிற்பகல்
Krishna, மன்னிக்கனும் மாதிரி பெரிய வார்த்தை எல்லாம் எதுக்கு? நீங்க எதுவும் தவறா சொல்லலயே. எல்லாரும் என் வலைப்பதிவுல இயல்பா, லைட்டா உணரனும்னுதான் நான் விரும்பறேன். எனக்கெல்லாம் கோபமே வராது.
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 28, 2007 at 9:19 பிற்பகல்
ஆஹா, வழிவிடுங்கப்பா…
“கவிஞர் வருகிறார்”
பிகேஎஸ், கேள்விப்பட்டேன். (படிச்சேன்னு சொன்னா இலக்கியவாதி கெத்து குறைஞ்சுடுமில்ல..) சீக்கிரம் கவிதைத் தொகுப்பு போட்டுடுவீங்களோன்னு ஒரு கிசுகிசு உலாவுதே. ஆமாவா? நானும் உஷாவும் எங்க பிரதிக்கு முந்தறோம்.
சனிக்கிழமை, டிசம்பர் 29, 2007 at 6:11 மு.பகல்
ஜெ, கிசுகிசுகாரர்களுக்கும் உங்களுக்கும்தான் என் கவிதைகளின் மீது எத்தனை நம்பிக்கை! தொகுப்பு வந்ததும் எனக்கும் ஒரு பிரதி வேண்டுமே
சனிக்கிழமை, டிசம்பர் 29, 2007 at 9:01 மு.பகல்
எனக்கு வேணாம் ஜெ, என் பிரதியை பாவம் பி.கே.எஸ்க்கு விட்டுக் கொடுத்துவிடுகிறேன். கவிதை தொகுப்பு வருவதற்கு முன்பு எக்கசக்க அட்வான்ஸ் புக்கிங் போல, அது சரி நமக்கு இலவச அன்பளிப்புதானே
))
சனிக்கிழமை, டிசம்பர் 29, 2007 at 10:45 மு.பகல்
சிவா, கிசுகிசுவைப் பரப்பினதே நான் தான்.
உஷா இலவசம் அன்பளிப்பு என்ன வித்யாசம். இதுவரைக்கும் ஒரு கவிதைத் தொகுப்பைக் கூட நான் கண்ணால பாத்தது இல்லை.
– கவித் தொலைவி.
புதன் கிழமை, ஜனவரி 30, 2008 at 3:49 மு.பகல்
Dear Jeyashree,
Sorry I don’t know how to leave a comment in tamizh:( athanalenna! nellikai oorugai enrale ottam pidikkum ennaiyum intha thokku katti pottu vitathu:) anaal ungal padathil ulla niram thaan enakku kidaikavillai. arpudhamana item:)
திங்கட் கிழமை, பெப்ரவரி 4, 2008 at 5:49 பிற்பகல்
Latha, நெல்லிக்காய் ஊறுகாய் என்றால் நானும் ஓரளவு ஓட்டம் பிடிக்கும் ஆள்தான். தொக்கில் அந்தத் துவர்ப்பு இல்லாததே காரணம். அந்த நிறம் என் காய்ந்த மிளகாயால் வந்தது. உங்களுக்கும் அந்த நிறம் வேண்டுமென்றால், காஷ்மீர் மிளகாய்த் தூள் என்று கிடைக்கும். அநேகமாக எல்லா பிரபல கம்பெனி பிராண்டிலும் கிடைக்கும். அதை உபயோகித்தாலும் இந்த நிறம் கிடைக்கும். காரம் இருக்காது.
ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 24, 2008 at 3:25 பிற்பகல்
kadukai thalikumpodhu mattum use pannalam.
araika thevaiya
புதன் கிழமை, பெப்ரவரி 18, 2009 at 10:26 பிற்பகல்
M.TAMILSELVI:
ஊறுகாய்க்கான முக்கிய மசாலா அரைத்த கடுகுதான். இங்க புனா பக்கமெல்லாம் கடுகு எண்ணெயும் உபயோகிப்பாங்க. அருமையா இருக்கும். கடுகு அரைக்காம மசாலா இல்லாம நீர் எலுமிச்சங்காய்தான் போடலாம்.
சனிக்கிழமை, ஏப்ரல் 25, 2009 at 12:51 பிற்பகல்
great !! romba nalla irukku. naanum try pannaporen