பின்னால் சேர்த்த முன்குறிப்புசாட்
_______________________________________________________________________________
me: ஹாய் கவிஞர், There?
haranprasanna is online.
haranprasanna: (வந்துட்டாங்கப்பா. இன்விசிபிள் மோட் இல்லாத ஜிசாட் ஒழிக!) வணக்கம் ஜெயஸ்ரீ.
me: என்ன செஞ்சுகிட்டிருக்கீங்க? 🙂
haranprasanna: வண்டி துடைத்துக்கொண்டிருக்கிறேன், பார்த்தால் தெரியவில்லையா? கணினி முன்னால் அமர்ந்து ஒரு கவிஞன் என்னசெய்துகொண்டிருப்பான்? இதெல்லாம் ஒரு கேள்வியா? இன்னும் சமுதாயத்தில் எழுப்பவேண்டிய கேள்விகளும், தீர்க்கவேண்டிய பிரச்சினைகளும் எவ்வளவோ இருக்க, இப்படிப்பட்ட கேடுகெட்ட கேள்விகளால் தான் தமிழன் இன்னும் முன்னேறாமல் இருக்கிறான். (இன்னும் சாப்பாட்டுக் கூடைக்காரரு வராம அவனவன் பசில தள்ளாடறான்.)
me: கோபமா இருக்கீங்க போலருக்கு? சாப்பிடப் போகலையா? நான் அப்றம் வரேன்.
haranprasanna: நான் என்றைக்கு சாப்பிட்டிருக்கிறேன்? கவிதைகளை சுவாசித்து கவிதைகளையே உண்டு செரிப்பவன் நான். சாப்பிடச் செல்பவர்கள் சாதாரணர்கள். நான் கவிஞன்.
me: (ஏலே, நீ மட்டும் அடுத்தவன் செரிக்கவே முடியாத கவிதையா எழுதித் தள்றியே இதையெல்லாம் கேக்க ஆளில்லையா?) அப்ப எந்நேரமும் கணினி முன்னால உக்காந்து சாப்பிட்டுகிட்டே இருக்கீங்கன்னு சொல்லுங்க. :))
haranprasanna: சமைக்கவே கருக்கலில் கண்விழித்து, சாப்பாட்டுக் குறிப்புகளுக்காக வலைப்பதிந்து, சாப்பிட்டுத் தூங்கும் உங்களுக்கு இவை புரியப் போவதில்லை. (சாப்பிடாம எனக்கு கண் இருட்டுது.)
me: எவ்வளவு பசிச்சாலும் உங்க கவிதை வேண்டாம்னு பிகேஎஸ் சொல்லியிருக்காரே, ஏன்? 🙂
haranprasanna: ஒரு வாசகராக அவர் பரந்துபட்டவராக இருக்கலாம். ஆனால் ரசிகராக அவர் இன்னும் வளரவில்லை என்பதைத்தான் அது காட்டுகிறது. இலக்கியவாதியின் கடமை சிறந்த இலக்கியங்களைப் படைப்பதோடேயே நின்றுபோகிறது. ரசிகன்தான் நாளும் வளர்பவனாக இருக்கவேண்டும். உண்மையான பசியும் உண்மையான தேடலும் வரும்போது அவருக்கு அது சாத்தியமாகலாம். காத்திருக்க வேண்டியதுதான்.
me: ஏன் இப்படி உரைநடைத் தமிழ்ல பேசறீங்க? சகஜமா என்னை மாதிரி பேசினா எனக்கும் பேச இயல்பா இருக்குமில்ல?
haranprasanna: (மவளே, உங்கிட்டேயிருந்து வெட்டிக்க இந்தத் தமிழைத்தானே நம்பியிருக்கேன். உன் உளுத்துப் போன ஸ்ரீரங்கம் தமிழ்ல என் பரணித் தமிழ் தாமிரபரணியைப் போல மாசுபடாம இருக்கவே தமிழன்னைக்கு தினம் நான் அர்ச்சனை செய்றேன்.) என் இயல்பான நடையே அப்படி இருக்க, என்னால் சாதாரணர்களைப் போல் மாற்றிப் பேச இயலாதே. அவரவர் அவரவர் இயல்பிலேயே பேசுவோம். இன்றைக்கு உங்கள் பதிவில் புதிதாக குறிப்பு எதுவும் எழுதவில்லை போலிருக்கிறதே.
me: ஆமாம். 😦 என் பதிவெல்லாம் கூட பார்ப்பீங்களா என்ன? 😉
haranprasanna: தவறாகச் சுட்டியதில் உங்கள் பக்கம் திறந்துவிட்டது. ஒரே நொடியில் மூடிவிட்டேன். நான் அங்கெல்லாம் வந்ததுமில்லை, வரப்போவதுமில்லை.
me: (ம்க்கும். இந்த பந்தால குறைச்சலில்லை.) ரொம்ப போரடிக்குது. இன்னிக்கி உங்களுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுங்க. அதையே குறிப்பா போட்டுடலாம்.
haranprasanna: எனக்கு மார்த்தாண்டன், சேரன், கல்யாண்ஜி,…
me: ஐயோ நான் சமையல்ல கேக்கறேன். நீங்க சாப்பிடறதுல கேக்கலை.
haranprasanna: எனில் கவிதை சமையுங்கள் ஜெயஸ்ரீ.
me: அதெல்லாம் கடுமையான ஜுரம் வந்தாத்தான் என்னால முடியும். விளையாடாதீங்க.
haranprasanna: எத்தனை நாள் தான் இந்தப் பாழும்பெண்கள் சமையலறையைக் கட்டிக் கொண்டு அழப்போகிறார்களோ. (இவ வேற வீட்டுல இன்னிக்கு சமைச்சாளா இல்லையான்னே தெரியலையே. கார்த்தால கோபத்தை அப்படியே எக்ஸ்டெண்ட் பண்ணி பழிவாங்கிட்டாளோ?! இன்னிக்கு மதியச் சாப்பாடு வருமா வராதா?)
me: சமையல் செஞ்சா தப்பா? வீட்டுவேலையை யாராவது ஒருத்தர் செஞ்சுதானே ஆகணும்.
haranprasanna: தாராளமாகச் செய்யலாம். ஆனால் எனக்கு அவர்களிடமோ அவர்கள் பதிவுகளிலோ சொல்ல ஒன்றுமில்லை. அவ்வளவுதான். அப்புறம் நானே சொல்ல நினனத்தேன், உங்கள் பதிவில் குறிப்புகளின் பெயர்களையும் வலதுபக்கம் வரிசையாகக் கொடுக்கலாமே. தேர்ந்தெடுக்க எனக்கு வசதியாக இருக்கும்.
me: என்னென்ன கேடகரில குறிப்புகள் இருக்குன்னு, சைட்ல இருக்கே.
haranprasanna: நான் இன்னும் ஆழமான தேடலைச் சொன்னேன். புளிசேரியின் குறிப்பு எழுதிவிட்டீர்களா என்று பார்த்தேன். இல்லையே.
me: ஓ அதுவா. கறி/கூட்டு இடத்துல க்ளிக்கினா அதுல இருந்தா வரும்.
haranprasanna: இத்தனை தொழில்நுட்பத்தையும்கூட பெண்கள் கேடுகெட்ட சமையல்குறிப்புக்கு உபயோகித்துக் கொள்வதை என்னவென்று சொல்வது? உங்கள் பக்கத்தில் “தேடு” வசதியும் இருந்தால் இன்னும் சுலபமாக இருக்குமே.
me: இருக்கே. Search பெட்டில வேணுங்கற பெயரைத் தட்டி க்ளிக்கினா, இருந்தா வந்துடும். இல்லைன்னா இன்னும் எழுதலைன்னு அர்த்தம். 🙂
haranprasanna: எத்தனை யுகங்கள் ஆனாலும் நீங்களெல்லாம் எழுதித் தீர்க்கப் போவதில்லை.
me: குறிப்பு எழுதினா கேவலமா? எனக்குத் தெரிஞ்சதைத் தானே நான் செய்யமுடியும்.
haranprasanna: தெரிந்ததற்காக அதையே செய்வதும், அதிலிருந்து மீள நினைக்காமல் இருப்பதும் பேதைமை இல்லாமல் வேறு என்ன? உப்பேரிக்கும் புளிசேரிக்கும் கூட குறிப்புகள் எழுதுங்கள். (கேவலமாப் போனாலும் பரவாயில்லைன்னு காலைல கிளம்பும்போதே இனிமே வீட்டுல சண்டையைத் தீர்த்துட்டு தான் கிளம்பணும்.)
me: நீங்க இப்பத்தான் சமையல் குறிப்பு எழுதறேன்னு திட்டறீங்க. நீங்களே இன்னும் சில குறிப்புகளை எழுதச் சொல்றீங்க. என்ன சொல்லவரீங்கன்னே சரியாப் புரியலை.
haranprasanna: என் பேச்சே கவிதை மாதிரி இருப்பதாகச் சொல்கிறீர்களா? :))
me: (இது வேறயா? நெனப்புதான பொழப்பக் கெடுக்குது.) உங்களுக்கு நகைச்சுவை நன்னாவே வரது.
haranprasanna: ஒரு இலக்கியவாதியாக நீங்கள் இலக்கியங்களைப் படைக்கவேண்டும் என்று கூறுகிறேன். ஒரு நண்பனாக நீங்கள் எழுதும் (துப்புக்கெட்ட) பதிவாவது முழுமையாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். அவ்வளவுதான்.
me: சமையல்குறிப்பு எழுதறவளை இலக்கியம் படைன்னா எப்படி முடியும்?
haranprasanna: அக்கார அடிசிலுக்குக் கூட குறிப்பு எழுதிய கவிதை ஒன்று இருக்கிறது. காலையில்தான் படித்தேன். யுகயுகமாய் பெண்களுக்கான பாட்டை அந்தப் பெண் கவிஞர் சொல்கிறார்.
me: அப்டியா? எனக்கும் அனுப்புங்களேன். உங்கள் ஆதர்ச கவிஞர்கள் பேர்ல ஒன்னுகூட பெண்பெயரே இல்லையே. உங்களுக்கு பெண்கவிஞர்களைப் பிடிக்காதோன்னு நினைச்சுட்டேன்.
haranprasanna: பெண்கள் விடுதலை என்ற பெயரில் உடல்மொழி தவிர பிற விஷயங்களைத் தொடுவதில்லை என்ற சலிப்பு எனக்கு இருப்பது உண்மைதான். (ஒரு ஜெயமோகன பில்டப்புக்கு இது உதவும்.) ஆனால் சேமித்து வைத்திருக்கும் கவிதையின் கருப்பொருள் என்னை பிறவெதுவும் யோசிக்கவொட்டாமல் செய்கிறது. (அதைப் படிச்சதிலிருந்து இன்னும் பசியைக் கிளப்பிவிட்டுடுச்சு. இன்னும் சாப்பாட்டைக் காணோமே. பேசாம வீட்டுக்கு ஃபோன் பண்ணி ஒரு சரண்டர் சிக்னல் கொடுத்துடலாமா?)
me: சரி அனுப்புங்க. எனக்கும் புரியுதான்னு பாக்கறேன்.
haranprasanna: சமையல் குறிப்புதானே; அதனால் புரியும். ஆனால் அது சொல்லவரும் விஷயம் உங்களுக்குப் புரிய வாய்ப்பில்லை. இருந்தாலும் தேடி அனுப்புகிறேன். கொஞ்சம் பொறுங்கள். (வயிறு பொறுக்குதில்லையே. அம்மா காலைல பாகற்காய் நறுக்கிண்டிருந்தாளே, பிட்லையா இருக்குமோ?)
Sent at 13:55 PM on Tuesday
=================
தேவையான பொருள்கள்:
தக்காளிக் காய் – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 5, 6
தேங்காய் – 1 மூடி
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு
கொத்தமல்லித் தழை
======================
me: ஐயய்ய, இது என் பதிவிலிருந்து எடுத்த தக்காளிக்காய் கூட்டு இல்லையோ. ஒண்ணுக்குக் கீழ ஒண்ணா இருக்கவும் கவிதைன்னு நினைச்சுட்டேளா? :))))
haranprasanna: (அடச்சே. பசில இந்தத் தப்பை வேற செஞ்சுட்டேனா! இவ இதைச் சொல்லியே பலநாளுக்கு ஓட்டிக் கொல்வாளே!) சகிக்கவில்லை உங்கள் ஜோக். ஏதோ தவறாகிவிட்டது. சரியாகத் தருகிறேன். காத்திருங்கள். (அந்தக் கூடைக்காரர் இப்படி காக்கவெச்சுட்டாரே. மட்டம் போட்டு கழுத்தறுத்துட்டாரா? வீட்லேருந்து அதை போன் செஞ்சாவது சொல்லலாமில்ல.)
Sent at 14:01 PM on Tuesday
==================
அக்கார அடிசில் கவிதை
ஒருகப் அரிசியுடன்
கால்கப் பயத்தம்பருப்பையும் களைந்து
நீரைவடித்து
நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
இரண்டு லிட்டர்
கூழான கெட்டிப் பாலில்
குழைவாக வேகவைக்கவும்.
இரண்டும் இன்னும் அரைகப்புமாய் வெல்லத்தை
வாணலியில் நீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டி
வேகவைத்த அரிசிக்கலவையும்
இரண்டு லிட்டர் பாலும்
இரண்டு லிட்டர் நெய்யும்
ஏலக்காய்ப் பொடியும்
இரு சிட்டிகை பச்சைக் கற்பூரமும்
சேர்த்துக் கலந்து கொதிக்கவிடுங்கள்
இப்போது நீங்கள்
அக்கார அடிசில் தயாரிப்பதில்
நிபுணராகி இருக்கிறீர்கள்
வாணலியில் கொதிக்கும் பண்டத்தில்
நெய்யும் பாலும் மேலெடுக்கும் வாசத்தில்
மாமியாரின் சர்க்கரை வியாதி
மாமனாரின் இரத்த அழுத்தம்
கணவன் அவ்வப்போது சொல்லும் நெஞ்சுவலி
மகனுக்கு இந்த வயதிலேயே வைக்கும் தொப்பை
மளிகைக்காரனின் நாலுமாதக் கடன்பாக்கியென
பிரச்சினைகளில் நீங்கள் உங்களைத் தொலைக்காதிருந்தால்
வருத்தப்பட்டுக் கொள்ளுங்கள்
நீங்கள் தேர்ந்த சமையல்காரர்.
========================
Sent at 14:05 PM on Tuesday
haranprasanna: என்ன பேச்சையே காணம்?
me: படிச்சுகிட்டிருக்கேன்..
haranprasanna: எப்படி கவிதை? பெண்கள் இன்றைக்கு எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள் பார்த்தீர்களா?
me: ம்
haranprasanna: எத்தனை கவிதை படித்தால் தான் நீங்களெல்லாம் திருந்தப் போகிறீர்கள்?
me: எதுக்கு என்னைத் திட்டறீங்க? நான் யோசிச்சுகிட்டிருக்கேன்.
haranprasanna: தேர்ந்த சமையல்காரர் என்றால் பெருமைதானே படவேண்டும், நாம் வெட்டியாய் படுசுமாராய் சமைப்பதற்கே பெருமையாய் பதிவெல்லாம் வைத்திருக்கிறோமே, ஏன் கவிதையில் வருத்தப்படச் சொல்லியிருக்கிறார்கள் என்றெல்லாம் யோசிக்கிறீர்களா?
me: இல்லை….
haranprasanna: வீட்டில் இருக்கிறவர்களுக்கெல்லாம் உடல்நிலை சரியில்லை, கடன்பாக்கிக்காக வெல்லாம் வருத்தப்படச் சொல்லியிருப்பார்களோ என்று யோசிக்கிறீர்களா?
me: இல்லை…
haranprasanna: உங்களைப் போன்ற பேதைகளுக்கு அப்படியெல்லாம்தான் யோசனை போகும். உண்மையில் கவிதையின் முடிச்சு அங்குதான் இருக்கிறது.
me: ஹை, ப்ரசன்னா, I got it! இந்தக் கவிதை உங்களுக்கு அடையாளம் தெரியலையா?
haranprasanna: தான் வாழும் வாழ்க்கையில் ஒரு பெருமையான அங்கீகாரம் இருக்கும் சூழ்நிலையில் ஒரு பெண்ணிற்கு மேலே இருக்கும் குடும்பம் சார்ந்த பிரச்சினைகள் எல்லாம் கவனத்தில் வந்திருக்கவேண்டும்…
me: இது யார் எழுதினதுன்னு சொல்லுங்க பார்க்கலாம்…
haranprasanna: சாமானை அள்ளிக்கொட்டி சமையல்காரராக மட்டும் இருக்கிறார் என்பது அந்தக் குடும்பத்தில் அவளது பிடிப்பு விட்டுப்போன மனநிலைக்கான குறியீடு. வாழ்ந்து உணர்ந்து, அதை வார்த்தைகளிலும் சொல்லத் தெரிவதால்தான் அது வன்மையான கவிதையாக வந்திருக்கிறது.
me: ஐயய்ய, சும்மா கீழ குனிஞ்சு தட்டிகிட்டு நீங்க சொல்றதையே சொல்லிகிட்டிருக்காம, கொஞ்சம் நான் தட்டறதையும் படிங்க..
haranprasanna: சுஜாதா சொல்வது சரி. கவிதைக்கு கோபமும் சோகமும் தேவை.
me: (அடடா அடங்கமாட்டாங்க போல இருக்கே…)
haranprasanna: உங்களைப் போல் திமிராகவும் வெட்டியாகவும் நேரத்தைத் தேய்ப்பவர்களுக்கு கவிதையும் வேறெந்த இலக்கியமும் கூட கைவராது.
me: ப்ரசன்னாஆஆஅ…. இது நிஜமாவே நேரத்தை தேய்க்கறவங்க எழுதின கவிதைதான். 🙂
haranprasanna: அப்படியா? எப்படித் தெரியும்? யார் எழுதியது? (வரவர என்னைவிட இவளெல்லாம் இலக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களை விரல்நுனில வெச்சிருக்காளே… இவளை நம்பக் கூடாது… உதாரை ஏத்த வேண்டியதுதான்.) மேலும் ஜெயஸ்ரீ, நீங்கள் என்னை பெயர் சொல்லி அழைப்பதைவிட கவிஞர் என்று அழைப்பதையே விரும்புகிறேன்.
me: நாசமாப் போச்சு. தான் எழுதின கவிதையும் அதன் வடிவமும் மறந்து போனவங்களெல்லாம் கவிஞரா? (யோவ், பீடத்துலேருந்து இறங்கவே மாட்டியாலே நீ?)
haranprasanna: புரியவில்லை!!
me: இந்த கெத்துல எல்லாம் குறைச்சலில்லை. மேட்டர்ல கோட்டை விட்டுட்டீங்க. இந்த அக்கார அடிசில் கவிதை நான் எழுதினது. உங்க கவிதையை ஃபார்மட்டா வெச்சு.
haranprasanna: என் கவிதையின் வடிவமா? எப்போது எழுதினேன்? (இவ்ளோ மோசமா எழுதித் தொலைச்சிருக்கேனா?)
me: உங்க CuSO4 கவிதை.
haranprasanna: தலைப்பே சகிக்கவில்லையே. என்னுடையதாக இருக்க முடியாது. (இவகிட்ட என் பழைய ட்ரங்க்பெட்டில போட்ட கவிதை எல்லாம் இருக்கு. எதையெதை எப்ப எடுத்து வெளில விடுவாளோ!)
me: நீங்க பூர்வாசிரமத்துல துப்பாய்ல கெமிஸ்டா வேலைபாத்து குப்பை கொட்டின காலத்துல எழுதினது. இருங்க நானும் எடுத்துத் தரேன்.
Sent at 14:16 PM on Tuesday
======================
CuSO4 கவிதை
தாதுகள் நீக்கப்பட்ட
மீத்தூய் நீரால் நன்கு கழுவி
நன்கு உலர்த்தப்பட்ட
ஒரு கண்ணாடிக் குடுவையை எடுத்துக்கொள்ளுங்கள்
10 கிராம் தாமிரசல்பேட்டை
துல்லியமாக நிறையிட்டு
குடுவைக்குள் இடுங்கள்.
1000 மில்லி லிட்டர் மீத்தூய்நீரைச் சேர்த்து
தூய கண்ணாடிக்குச்சியால் கலக்குங்கள்
இப்போது நீங்கள்
1% தாமிரசல்பேட் கரைசல் தயாரிப்பதில்
நிபுணனாகி இருக்கிறீர்கள்
ஊடுருவிச் செல்லும் ஒளியில்
நீல நிறத்தடம் மனதைக் கொள்ளை கொள்ளும் நேரத்தில்
குடுவைக்குள் செயற்கை கடல்
துள்ளும் மீன்கள், உயிருடன் சிப்பி
நீல மேற்பரப்பில் சூரிய எதிரொளி, அதில்
தரையிறங்கும் இறக்கை விரித்த கரும்பறவையென
பிணை நினைவுகளில் உங்களைத் தொலைக்காதிருந்தால்
பெருமை பட்டுக்கொள்ளுங்கள்…
நீங்கள் வேதியியல் உலகக்காரர்
========================
Sent at 14:19 PM on Tuesday
என்ன அந்தப் பக்கமும் பேச்சையே காணோம்? 🙂
haranprasanna: (கீழ சைக்கிள் மணிச்சத்தம் கேக்குதே. நம்பாள் தானோ? அதானே பாத்தேன். எவ்ளோ சண்டைன்னாலும் வீட்டுல நமக்கு சாப்பாடெல்லாம் குறை வெச்சதில்லையே. நல்லவேளை கிறுக்குத்தனமா அவசரப்பட்டு ·போன்பண்ணி மன்னிப்பெல்லாம் கேட்காம இருந்தேன். இனி இந்தக் கழுத்தறுப்பைக் கழட்டிவிட வேண்டியதுதான் பாக்கி.) உங்களுக்கு வீட்டில் வேலையே இருக்காதா? இங்கே உட்கார்ந்து என்னுடன் செலவழித்துக் கொண்டிருக்கிறீர்களே, பாவம்.
me: நான் சமைச்சு முடிச்சிட்டேன். வேலைகளை முடிச்சுட்டு வெட்டி நேரத்தைத் தான் உங்களோட செலவழிக்கறது.
haranprasanna: என்ன சமையல்? சொல்ல மறந்துவிட்டேன். உங்கள் தக்காளிக்காய் கூட்டை எங்கள் வீட்டில் தக்காளிப் பழத்தில் செய்வார்கள். உண்மையாகவே சுவையாக இருக்கும். அந்தப் பதிவில் ramakannan என்பவர் கேட்டிருக்கும் சந்தேகம் சரியே.
me: ஆ, என் வலைப்பதிவை ஒரே ஒரு நொடி மட்டும் திறந்துபார்த்து¢ட்டு நீங்க அள்ளிவிடற விஷயங்கள், கேட்கற சந்தேகங்கள் எல்லாம் என்னை ஆச்சரியப்படுத்றது. (மணிக்கணக்கா பதிவை பிரிச்சு மேய்ஞ்சுட்டு பீலாவா விடற?)
haranprasanna: இலக்கியவாதியும் கவிஞனுமானவன் தன்னைச் சுற்றி நடப்பவைகளை சில நொடித் துளிகளில் துல்லியமாக அவதானித்து, கிரகித்து, தேவையான நேரத்தில் சரியான கோணத்தில் எடுத்துவைக்கத் தெரிந்தவனாக இருக்கவேண்டும். (ஆஹா, இன்னிக்கு நாம நினைச்சமாதிரியே பாகற்காய் பிட்லைதான்.)
me: ஆனா தக்காளிப்பழத்துல கூட்டு செஞ்சா அது தக்காளி கொத்சு, இல்லை டால் ஃப்ரை மாதிரி தானே?
haranprasanna: எது சொன்னாலும் எதிர்த்து எல்லாம் தெரிந்த மாதிரி பேசுவதை நிறுத்துங்கள் ஜெயஸ்ரீ. உங்களுக்கு இலக்கியத்தில் ஒன்றரையணா பரிச்சயம் இருப்பது போல் எனக்கு சமையலிலும் அனுபவம் உண்டு. துபாயில் நான் கவிதை உண்டு வாழ்ந்த காலத்தும் என் அறைத் தோழனாக இருந்த ஒரு அஞ்ஞானிக்கு மட்டும் சமைத்துப் போட்டிருக்கிறேன். நீங்கள் தக்காளிக்காய் சேர்த்து செய்த அதே உணவுக்குறிப்பை தக்காளிப் பழம் உபயோகித்துச் செய்துபாருங்கள். பயத்தம்பருப்பு இலையிலையாக முக்கால் பதம் மட்டும் வெந்து குழையாமல் இருக்கவேண்டும் என்பதை மட்டும் நினைவுவைத்துக் கொள்ளுங்கள்.
me: உங்கண்ணி கூட நல்லா சமைப்பாங்கன்னு சொல்வீங்களே. இதெல்லாம் அவங்ககிட்ட கத்துகிட்டீங்களா?
haranprasanna: அதெல்லாம் முன்காலத்தில். என் கல்யாணத்திற்குப் பிறகு அண்ணி சுமாராகத் தான் சமைக்கிறார்.
me: ப்ரசன்னா, நிஜமாவே நான் எழுதியிருக்கற கவிதை நல்லாவா இருக்கு? சும்மா தோணித்து. கிறுக்கினேன்.
haranprasanna: (இவ எழுதினதுன்னு தெரியாம புகழ்ந்து தொலைச்சுட்டேன். சே, பசி எல்லாத்தையும் மறக்கடிச்சிடுச்சு!) கவிதை வெகுசுமார் தான். கவிதையே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு அத்தைப்பாட்டித்தனம் தான் எழுத்தில் இருக்கிறது. அதன் (என் கவிதையின்) வடிவத்தால் மட்டுமே வன்மை பெறுகிறது.
me: (அதானே பாத்தேன். இந்தத் திமிர் இல்லைன்னா எப்படி?) துபாயிலும் கவிதை உண்டே வாழ்ந்தேன்னு நீங்க சொன்னதும் நியாபகம் வருது. காலைல ஒரு அருமையான கவிதை படிச்சேன். படிச்சபோதே உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கணும்னு நினைச்……..
haranprasanna: (சாப்பாட்டுக் கூடையே ட்ராஃபிக் ஜாம்ல மாட்டி இப்பத்தான் ஒருவழியா வந்திருக்கு. தின்ன முடியுதா பார் நிம்மதியா.) பிறகு பேசலாம் ஜெயஸ்ரீ. ஒரு கஸ்டமர் வந்திருக்கிறார். எனக்கு கடமை கவிதையைவிட முக்கியம் என்பதும் நீங்கள் அறிந்ததே. அவசியம் தக்காளிப்பழக் கூட்டு செய்துபார்த்துச் சொல்லுங்கள். வணக்கம்.
Sent at 14:36 PM on Tuesday
haranprasanna is offline. You can still send this person messages and they will receive them the next time they are online.
_____________________________________________________________
செய்துபார்த்து தனியில் சொல்வதற்குப் பதில், நன்றாக இருப்பதாக வீட்டினர் சொன்னதில் உணர்ச்சிவசப்பட்டும், பழக்க தோஷத்திலும் பதிவில் போட்டுவிட்டேன். இதனால் கவிஞர் இமேஜிற்கு ஏதாவது பங்கம் வந்துவிடுமா? 😦 இப்போது என்ன செய்வது, எடுக்கவா, இருக்கவா?
நன்றி: கவிஞர் ஹரன்பிரசன்னா.
தேவையான பொருள்கள்:
தக்காளி – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 5, 6
தேங்காய் – 1 மூடி
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு
கொத்தமல்லித் தழை
தாளிக்க – எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை:
- பயத்தம் பருப்பை முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
- தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது நீர்விட்டு மூடி வேகவைக்கவும்.
- முக்கால் பதம் வெந்ததும் அரைத்த விழுது, வேகவைத்த பயத்தம் பருப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
- கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.
* நீரைக் குறைத்து கால் கப் பால் அல்லது தேங்காய்ப் பால் சேர்ப்பதால் காரல் இருந்தால் மறைந்து சுவையும் மணமும் அதிகரிக்கும். நான் சேர்த்திருக்கிறேன்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நெய் சாதம், சப்பாத்தி வகைகள்…
புதன், திசெம்பர் 12, 2007 at 12:58 முப
கூட்டைவிட சாட் நன்றாக உள்ளது. 🙂
புதன், திசெம்பர் 12, 2007 at 1:13 முப
இன்னிக்கு எனக்குப் பொழுது விடிஞ்சது இங்கேதான். கவிஞர் & சமையற்கட்டு உரையாடல் அட்டகாசம்.
ரசிச்சேன் ஜெ.
புதன், திசெம்பர் 12, 2007 at 2:04 முப
ஏதாவதொன்றை
எனதறையில்
எங்காவது வைத்துவிட்டுத் தேடுவது
அன்றாட வேலைகளில்
ஒன்றாகிவிட்டது எனக்கு.
நீண்ட நேர தேடலுக்குப் பின்
கிடைக்கும் ஒவ்வொன்றும்
முந்தைய தேடுதலில்
கிடைத்திருக்க வேண்டியதாக
இருந்து தொலைக்கின்றன.
வியர்த்துச் சொட்ட சொட்ட
எனக்கு நானே புலம்பியபடி
எதையாவது தேடிக் கொண்டிருப்பதை
சமையல் அறை ஜன்னல் வழியே
பார்த்துப் பரிகசிப்பது
பிடித்தமான வேலையாகிவிட்டது
என் மனைவிக்கு.
சமையலறையில்,
என் கண்களைக் கட்டிவிட்டாலும்
எந்தப் பொருளிலும் விரல் படாமல்
கேட்ட பொருளை கேட்ட மாத்திரத்தில்
எடுத்துத் தருவேன்
என்று சவால்விடவும் செய்கிறாள் அங்கிருந்து.
அவளிடம்
சொல்லிக் கொள்வதில்லை நான்.
நீ மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக
அங்கேயிருக்கிறாய் என்று.
பி கு: உள்குத்து வெளிக்குத்து எதுவுமில்லை 🙂 சமையல் குறிப்புடன் கவிதைகளும் சேர்ந்த உங்கள் பதிவைப் படித்தபோது ஜெயபாஸ்கரன் எழுதிய இந்த கவிதை தான் நினைவுக்கு வந்தது. 🙂
புதன், திசெம்பர் 12, 2007 at 8:04 முப
I am fan of your website, all the recipes remind me my mom and those days. Nice work please keep it going
புதன், திசெம்பர் 12, 2007 at 9:34 முப
ஜெயஸ்ரீ! தக்களிக்கூட்டை விட ஹரப்ப்ரன்னா vs ஜயஸ்ரீ கான்வர்செஷன் enjoyable. வாய்விட்டுச் சிரிக்க கணவர் ஒரு மாதிரி பார்க்கிறார்!
அன்புடன்
கமலா
புதன், திசெம்பர் 12, 2007 at 10:56 முப
:)) :))
புதன், திசெம்பர் 12, 2007 at 11:39 முப
//ஒரு வாசகராக அவர் பரந்துபட்டவராக இருக்கலாம். ஆனால் ரசிகராக அவர் இன்னும் வளரவில்லை என்பதைத்தான் அது காட்டுகிறது. இலக்கியவாதியின் கடமை சிறந்த இலக்கியங்களைப் படைப்பதோடேயே நின்றுபோகிறது. ரசிகன்தான் நாளும் வளர்பவனாக இருக்கவேண்டும். உண்மையான பசியும் உண்மையான தேடலும் வரும்போது அவருக்கு அது சாத்தியமாகலாம். காத்திருக்க வேண்டியதுதான்.//
🙂
இன்னிக்கு தூக்கம் வந்திடும்.
என் மனசாட்சி – ச்ச என்னால இப்படி ஒரு விஷயம் சொல்லமுடியலையே! நான் எழுதின கதையெல்லாம் படிச்சிட்டு பிகேஎஸ் நீ எழுதினதெல்லாம் கதையே கிடையாதுன்னு சொன்ன பொழுது. ம்ம்ம் அதுக்கெல்லாம் கவிஞனாயிருக்கணும் போல, சிறுகதை எழுத்தாளன் வேஸ்ட்.
புதன், திசெம்பர் 12, 2007 at 1:52 பிப
ஒருநாள் திருப்பூருக்கு போறேன்னு தெரிஞ்சதும் என்னென்ன அக்கிரமங்கள் எல்லாம் நடக்குது உலகத்துல! இதுல நான் எழுதின வரி எதுவுமே கிடையாது ஒண்ணே ஒண்ணைத் தவிர. இது எல்லாம், ஒட்டுமொத்தமாக கற்பனை!
தக்காளி காய்க்கு பதிலாக தக்காளிப் பழம் போட்டு அதே கூட்டை செய்யலாம் என்று நான் அனுப்பிய ஒரு வரிக்கு இவ்ளோ பில்டப்பா!
CuSO4 கவிதை நல்ல கவிதைதான். அது மூலம். அதை பார்த்து காப்பி அடிச்சா அது கவிதை ஆயிடுமா என்ன?
உங்கள் கற்பனை சாட், நல்லாத்தான் இருக்கு.
புதன், திசெம்பர் 12, 2007 at 2:24 பிப
Jayshree,
As usual u ROCK!! :)))))
ஹரன்பிரசன்னாவின் பெயரை, சமையல் குறிப்பு பகுதியில் பார்த்தால் கூட, கவிதை சொட்டுது 😀 :))
என்னைத் நினைவிருக்கிறதா?
அன்புடன்,
ஷக்திப்ரபா
புதன், திசெம்பர் 12, 2007 at 2:48 பிப
//என்னைத் நினைவிருக்கிறதா?
அன்புடன்,
ஷக்திப்ரபா//
எனக்கு நினைவில் இருக்கு 🙂
புதன், திசெம்பர் 12, 2007 at 7:35 பிப
சமையல்குறிப்பைப் பத்தி வர பின்னூட்டங்களைவிட அதிகமா (அல்லது அதே அளவு) கவிதையைப் பத்திய ‘சாட்’டுக்கே (கவிதைக்கு அப்போ எவ்ளோ வரும்!) வந்திப்பது சமையலைவிடக் கவிதையே முக்கியம் என்று பார்ப்போர் நினைப்பதைச் சொல்லவில்லையா, கனம் நீதிபதி அவர்களே. (ஆமாடே, வம்பு எழுதினா ஊரே திரண்டுவந்து கைதட்டும்தான். அதெல்லாம் கவிதைக்கு ஆதரவுன்னு அர்த்தமான்னு கவிதைப் புத்தகம் போட்டுத் தேய்ந்துபோன கவிஞர்கள் முறைக்கிறார்கள்). பிரசன்னா என் எழுத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் இப்படித்தான் சொல்லியிருப்பார். தம்பி மோகனதாசு, திருப்தியா. எப்படியோ காணாமல் போயிருந்த ஷக்தி ப்ரபாவைக் கண்டுபிடிச்சிக் கொண்டுவந்திருக்கீங்க. அதைவிட்டா, இந்த வம்படியிலே வேற பலன் ஒண்ணும் இல்லை. என்ன ஷக்திப்ரபா, வழக்கம்போல கவிதையோட வராம உரைநடையோட வந்திருக்காக. அது ஒண்ணுதான் மாற்றம். கவிஞர் பிரசன்னா இப்போ புரியறமாதிரி கொஞ்சம் எழுதறாருன்னு சந்தோஷப்பட்டுட்டு இருக்கோம். இப்படி எழுதி அதைக் கெடுத்துருவீங்க போல இருக்கே ஜெ.
புதன், திசெம்பர் 12, 2007 at 8:04 பிப
//பிரசன்னா என் எழுத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் இப்படித்தான் சொல்லியிருப்பார்.//
பிகேஎஸ், இவ்ளோ சுலபமா வலைல விழுந்திட்டீங்களே!
//என்னைத் நினைவிருக்கிறதா?//
ஷக்திபிரபா, த் வரக்கூடாது. என்னை நினைவிருக்கிறதா?!
புதன், திசெம்பர் 12, 2007 at 10:48 பிப
prasanna,
:))
Ah I regretted the minute it was posted.
I was sure about the “th” comments 😀
“ennaith therigiratha” nnu ezhutha ninaichu
kadasee nimishathil “ninaivirukkirathannu” maatriten 😦
“th” thevaiyillaatha idathil podum aLavu
en eNNum ezhuthum innum iLaithu vida villai 😉
My unicode keyman is giving probs bear with me.
glad to meet all u guys
mohandas,
😀 how can I forget u?
or u forget me 😛
regards,
shakthi
ciao pps later I dont wanna make this a chatting session 🙂
புதன், திசெம்பர் 12, 2007 at 10:50 பிப
pks,
kavithaiyoda (allathu kavithai maathiri ondrudan) en valaipathivil ulaava pogiren…viraivil 😛
😀
glad u guys remember me 🙂
bye for now
புதன், திசெம்பர் 12, 2007 at 11:25 பிப
ஷக்திப்ரபா, அப்போப்போ உங்களைப் பத்தி ஷைலஜா கிட்டே கேட்பேன். எங்கே காணோம்னு. என்னாலயே பாக்க முடியலை அப்படின்னு சொல்வாங்க. வலைப்பதிவில் படிக்கிறேன். எழுதுங்கள். பதிலுக்கு நன்றி. – பி.கே. சிவகுமார்
வியாழன், திசெம்பர் 13, 2007 at 9:06 முப
On என்றால் மேல் (ஆண் என்றாலும் male) என்பதற்காக Taste Tester-ல் இப்படித்தான் தமிழ்ப்*படுத்த* வேண்டுமா ? 🙂
வியாழன், திசெம்பர் 13, 2007 at 2:19 பிப
பாகீ, கூட்டு செஞ்சுபாக்காமலே இப்படிச் சொல்றதை நான் ஆட்சேபிக்கிறேன். இதை பிகேஎஸ் எல்லாம் தவறா புரிஞ்சுக்கறாங்க, பாருங்க. அப்றம், வேர்ட்பிரஸ்ஸை சில ஆர்வலர்கள் தமிழ்ப்படுத்தியிருக்காங்க. ரெண்டு நாளா பின்னூட்டம் அப்ரூவ் செய்யக் கூட தடுமாறிக்கிட்டிருக்கேன். இப்ப பழகிடுச்சு. Taste Testersல ‘மேல்’ அப்படீங்கறதுக்குப் பதிலா வேற என்ன சரியான வார்த்தை வரலாம்னு எனக்குச் சொல்லத் தெரிஞ்சா சொல்வேன். தெரியாததால அப்படியே ஏத்துக்க வேண்டியதுதான். அதுக்காக ஆண்கள் ‘மேல்’ ன்னு எடுத்துக்கறதெல்லாம் ஓவர். கல்யாணக்கமலா, ஷக்திப்ரபா எல்லாரும் கூட ‘மேல்’னுதான் வருது. 🙂 அதே நேரத்துல ஒரு சமையல் குறிப்பு பதிவுக்கு அதிகம் ஆண்களே பின்னூட்டம் போடறதோட சமூக உளவியலைப் பத்தி என்ன நினைக்கிறீங்க? :))
வியாழன், திசெம்பர் 13, 2007 at 2:22 பிப
துளசி எனக்கு தினமுமே இப்படித்தான் பொழுது விடியுது! 😦 நன்றி. :))
Janaki, kalyanakamala thanks. 🙂
ஐயப்ஸ், எங்க இந்தப் பக்கமெல்லாம். 🙂
மோகன்தாஸ், :)) நீங்க கவிஞரும்னு நினைச்சுகிட்டிருக்கேன். இல்லையா? சரி, இனி ஆகிடலாம். சுலபம்தான். :))
பிகேஎஸ்,
////பிரசன்னா என் எழுத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் இப்படித்தான் சொல்லியிருப்பார்.///
நல்லவேளை ஒத்துண்டீங்க. ஒரெயடியா கற்பனைன்னு ஒதுக்கமுடியாது இனி யாரும் இந்தப் பதிவை.
வியாழன், திசெம்பர் 13, 2007 at 2:22 பிப
Chandrasekaran Krishnan, கவிதை நல்லா இருக்கு. பொதுவா இணையத்துல எதுக்கெடுத்தாலும் கடந்த 2000 வருடங்களாக…ன்னு ஒரு கணக்கு சொல்வாங்க. இதுல 3000 வருஷம்னு இருக்கே, இந்த வருஷமெல்லாம் என்ன கணக்கு? 🙂
அப்புறம்
///ஏதாவதொன்றை
எனதறையில்
எங்காவது வைத்துவிட்டுத் தேடுவது
அன்றாட வேலைகளில்
ஒன்றாகிவிட்டது எனக்கு////
இது வளர்ப்பு அல்லது சொந்த ஆளுமை சார்ந்தது மட்டும் தான். ஆண்களை அப்படி விட்டேத்தியா வளர்க்கறது அநேகமா இந்தியாவுலதான் அதிகமோன்னு நினைக்கிறேன். யாராயிருந்தாலும் அவங்கவங்க ஏரியாவுல சரியா வெச்சுக்கணும். அவ்ளோதான். கவிதையா பேச மட்டுமே சில விஷயங்கள் நல்லா இருக்கும். அதுல இது ஒன்னு.
வியாழன், திசெம்பர் 13, 2007 at 2:23 பிப
ஷக்திப்ரபா, இந்த இங்லிபீச்சை ரொம்ப மிஸ் பண்ணினோம். உங்களை மறக்க முடியுமா? உங்க மேகமே மேகமே திரைப்பாடலைத் திருத்திக் கொடுத்து அறிமுகமானோம். யாராவது test mail போட்டாக் கூட, “நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதவும்”ன்னு மரத்தடில உற்சாகத் தண்ணீர் ஊத்தி வளர்த்தவங்களாச்சே. என் கவிதைகளைக் கூட பாராட்டி, இலக்கியச் சமுதாயத்தையே பகைச்சுண்டவங்களாச்சே நீங்க. அதைவிட இந்தப் பதிவு தட்டும்போது உங்க நியாபகம் அதிகமாவே வந்தது. காரணம் உங்களுக்கே தெரியும். கவிதைகளுக்கு punctuation mark போடுங்கன்னு உங்க ஆதர்ச கவிஞர் ப்ரசன்னாவைச் சொல்லி, இதே மாதிரி ஒரு கற்பனைக் கடிதம் அப்ப நான் எழுதினேன். அதைத் தேடி இங்கயும் போடணும். 🙂 வருக வருக வருகவே. ஐயப்ஸைப் பிடிச்சு வலைப்பதிவும் ஆரம்பிங்க. ரொம்ப நாள் பெண்டிங்.
//ஹரன்பிரசன்னாவின் பெயரை, சமையல் குறிப்பு பகுதியில் பார்த்தால் கூட, கவிதை சொட்டுது :))//
நீங்க இன்னும் திருந்தலையா? கவிஞரானா, என்னை நினைவிருக்கிறதான்னு கவலைப்பட்டு கேட்டிருக்காரு. 🙂
வியாழன், திசெம்பர் 13, 2007 at 2:25 பிப
ப்ரசன்னா, திருப்பூர் போனா சொல்லிட்டுப் போறதில்லையா? இன்னும் விஸ்தாரமா நேரம் எடுத்து தீ(தி)ட்டியிருப்பேனே பதிவை. ஆமாம், நீங்க
பிசிபேளா குறிப்பு சரியா இருக்குன்னு சொன்னதில்லை?
புளிசேரி, உப்பேரி எல்லாம் எழுதச் சொன்னதில்லை?
பாகற்காய் பிட்லை எங்கன்னு தேடலை?
(அதுக்கே அதெல்லாமெ எழுதாம நிறுத்திவெச்சிருக்கேன்.)
எந்தக் குறிப்பும் விடாம பால் காய்ச்சுவது எப்படின்னு கூட எழுதச் சொன்னதில்லை?
தேடு வசதி, கேடகரி பத்தி எல்லாம் கேட்டதில்லை?
சமையல் குறிப்பே எழுதிக் கொல்லாதன்னும் மாத்திச் சொன்னதில்லை?
நீங்க சொல்றதுக்காகவே எதையும் நான் செய்யாம காதுல வாங்காம இருக்கலை? :))
நல்லவேளை, தக்காளிப்பழத்துல செய்யலாம்னு சொன்னதாவது நினைவுல இருக்கே; பயத்தம்பருப்பு ரொம்ப மசியாம முக்கால் பதம் தான் வெந்திருக்கணும்னு சொன்னது மறந்துபோனாலும்.
சிவா பத்தி சொன்னது சரியா இருக்குன்னு அவரே ஒத்துக்கிட்டாரு.
என் கவிதைக்கு நீங்க சொல்றதா நான் சொன்னதைத்தான் திரும்ப நீங்களும் சொல்லியிருக்கீங்க. இன்னும் என்ன? எல்லாம் சரிதான். கற்பனை எல்லாம் இல்லை. 😐
வெள்ளி, திசெம்பர் 14, 2007 at 1:24 முப
அட! நம்ம ஷக்திபிரபா……
நல்லா இருக்கீங்களா ஷக்தி? என்ன ரொம்ப நாளா ஆளைக் காணலை?
சனி, திசெம்பர் 15, 2007 at 3:15 பிப
துளசி,
😀 நல்ல இருக்கேன் 😀
நீங்க எல்லாரும் இவ்வளவு அன்பா விசாரிக்கிறதே ரொம்ப சந்தோஷமா இருக்கு.
நான் பொழுது போகாம, வேற எதோ வலைதளத்துல, பாட்டு பாடிட்டு இருக்கேன் :))
சனி, திசெம்பர் 15, 2007 at 3:18 பிப
அது ‘நல்ல’ இல்லை….”நல்லா”
ஜெய்ஸ்ரீ, பிரசன்னா எல்லாரும் பார்த்தாலே கை நடுங்கி எழுத்துப் பிழை தானா வந்து சரமாரியா விழுது :))
சனி, மார்ச் 15, 2008 at 6:27 பிப
//சமையல் குறிப்பே எழுதிக் கொல்லாதன்னும் மாத்திச் சொன்னதில்லை? //
பேச்சின் வளர்ச்சி எழுத்து, எழுத்தின் வளர்ச்சி மொழி, மொழியின் வளர்ச்சி இலக்கியம். இதற்கெல்லாம் முக்கியம் உயிரோடு இருப்பது. அதற்கு முக்கியம் உணவு. கவிஞர் பச்சை கறியோடு நின்றுவிட நினைக்கிறரோ என்னவோ?
திங்கள், மார்ச் 17, 2008 at 12:40 பிப
காந்திமதி, நல்லாப் படிங்க. :)உங்க ஊர்க்காரரு, பச்சைக்கறி தேவைன்னு சொன்னாதான் பரவாயில்லையே. கவிதையே போதும்னில்ல சொல்றாரு. பிரச்சினை அங்கதான் ஆரம்பிச்சுது.