வலைப்பதிவுகள் தாண்டிய நண்பர் ஒருவர், இந்தக் குறிப்பில்   தேடு வசதி, பதிவின் பக்கவாட்டில் இருப்பதாக நான் எழுதியபின், முதன்முறையாக அதை அப்போதுதான் பார்த்து, உணர்ச்சிவசப்பட்டு, தமிழில் தட்டத் தெரியாததால் அங்கே இங்கே என்று எழுத்துகளைப் பிடித்து ஒட்டுப்போட்டு ‘நெல்லிக்காய்’ என்ற ஒரு வார்த்தையை உருவாக்கி (தமிழில் வேறு வார்த்தையே கிடைக்கவில்லையா? அல்லது தமிழ்நாட்டில் நெல்லிக்காய் இப்போது சீசனா?) என் பதிவில் தேடியதில் சடசடவென 20 பதிவுகள் வந்ததாகவும், ஆர்வமாக உள்ளே ஒவ்வொன்றாகப் படித்துப் பார்த்தால் (வாழ்க நின் பொறுமை!), ஒரு குறிப்பு கூட நெல்லிக்காயில் செய்தது இல்லை என்ற பேருண்மை புரிந்து வருத்தப்பட்டார். (உண்மைல கொலைவெறியானார். நாந்தான் கொஞ்சம் நாசுக்காச் சொல்லியிருக்கேன்.)  ஆனால், ‘தேவையான பொருள்களி’ல் புளி – நெல்லிக்காய் அளவு என்று எல்லாப் பதிவிலும் எழுதியிருந்தால் அவை வராமல் என்ன செய்யும்? இப்படி எல்லாம் பிரச்சினை வரும் என்று எதிர்பார்க்காத என் பேதைமை நான் கேட்காமலே மன்னிக்கப்பட்டு விட்டாலும் பரிகாரமாக  சடசடவென்று  இரண்டு  நெல்லிக்காய் குறிப்புகள். நெல்லிக்காயைத்  தேடி  வாங்குவது தான் கஷ்டமான காரியமாக இருந்தது. [நெல்லிக்காய் நெருக்கியதில் வாழைத் தண்டு ஊறுகாயை இரண்டு வாரம் கழித்து செய்ய ஒத்திப் போட்டுவிட்டேன்.] 

குறிப்பு (தெரியாதவர்களுக்கு மட்டும்): தேடுபவர்கள் ஆங்கிலத்தில் அதே வார்த்தையைத் தட்டித் தேடினால் (nellikkaai) இந்தப் பிரச்சினை அதிகம் வராது. அந்தப் பொருளை அந்த உணவில் முக்கியமாக உபயோகித்திருந்தால்  மட்டுமே அது பதிவின் தலைப்பில்,  சுட்டியில்  இருக்கும். (இதெல்லாம் ரொம்ப ஓவர்னு எனக்கே தெரியுது. ஆனாலும் என்ன செய்ய?)

தேவையான பொருள்கள்:

நெல்லிக்காய் – 8 (பெரியது)
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
காயம் – 1/4 டீஸ்பூன்
வெந்தயப் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

nellikkaai thokku

செய்முறை:

  • நெல்லிக்காய்களை குக்கரில் 5 நிமிடம் ஆவியில் வேகவைத்து, உதிர்த்து, கொட்டையை நீக்கிக் கொள்ளவும்.
  • மிக்ஸியில் சிறிது நீர் சேர்த்து மிக நைசாக அரைத்துக் கொள்ளவும். அல்லது துருவியும் உபயோகிக்கலாம்.
  • அடுப்பில் வாணலியில் நண்லெண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.
  • நெல்லிக்காயை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, நன்கு வதக்கவும்.
  • தொக்கு மாதிரி சேர்ந்து வரும்போது மிளகாய்த் தூள், வெந்தயப் பொடி சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை கிளறவும்.

* நெல்லிக்காயின் புளிப்பைப் பொருத்து காரம், உப்பை கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கவும். குறைந்த அளவு செய்வதால் எண்ணெய் அதிகம் தேவை இல்லை.

* தனியாக வெந்தயப்பொடி, மிளகாய்த் தூள் சேர்க்காமல், ஊறுகாய்ப் பொடி உபயோகித்தும் செய்யலாம். நான் அப்படித் தான் செய்திருக்கிறேன்.

* அருநெல்லிக்காயிலும் இந்தத் தொக்கு சுவையாக இருக்கும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தயிர்சாதம் தவிர, நல்லெண்ணெய் கலந்த சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

அதிகம் போரடித்தால் சப்பாத்தி, தோசை, உப்புமா வகைகளுக்கும் உபயோகிக்கலாம்.