தாயார் சன்னதியில் பட்டர் தவிர காலையில் ஆண்களை அங்கே பார்க்கவே முடியாது. அதுவும் அந்தப் பத்து நாள்கள் பெண்கள் காலையில் பிரதட்சணம் செய்ய அவசியம் அங்கே வந்துவிடுவார்கள். அந்த நாள்களில் மட்டும் 12 பிரதட்சணம் செய்வது நல்ல விஷயம்தான். நானும்கூட செய்திருக்கிறேன்.
ஆனால் பிரதட்சணங்களை கைவிரலில் எண்ணாமல், நிறையபேர், கோயிலில் கொடுத்த மஞ்சள்காப்பில் கோயில் சுவற்றில் தனக்கென்று ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்கே ஒவ்வொரு பிரதட்சணத்துக்கும் ஒரு மஞ்சள் புள்ளி அடையாளம் வைப்பது, கட்டியிருக்கும் புதுப்புடவையிலிருந்து ஒரு நூல் இழையை உருவி, வில்வமரத்தில் சுற்றுவது எல்லாம் அநியாயம்.
சின்ன வயதில் நாரயணன் (என்னைவிட 5 வயது பெரியவன்) தாயார் கோயில் கொலு பற்றிச் சொல்லியிருக்கிறான், “ஐய, உங்காத்து கொலுவெல்லாம் ஒரு கொலுவா? சும்மா உங்காத்து உயரத்துக்கு தானே வெக்கறீங்க, தாயார் கோயில்ல வெப்பாங்க பாரு கொலு, ஐயோ! கோயில் எவ்வளவு உயரமோ, அவ்ளோ உயரம் வெப்பாங்க! எவ்வளவு படின்னு எண்ணிப் பாக்கவே முடியாது! நான் ஒவ்வொரு தடவையும் எண்ணப்பாப்பேன்; நடுவுல விட்டுப் போயிடும் (என்று கையை உதறுவான்). அப்புறம் யானை சூப்பரா நொண்டி அடிக்கும்.. ‘ரெங்கா’ன்னு மூணுதடவை கத்தும்..”
இந்த நாராயணன் கதைகளை நான் என்றிலிருந்து கேட்க ஆரம்பித்தேன் என்று சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் என் குழந்தை நாள்களை சுவாரசியமாக்கியவன். எப்பொழுதும் ஒரு 4 பேரையாவது நிறுத்திவைத்து தான் படித்த காமிக்ஸ்களை இன்னும் மசாலா சேர்த்து கையை ஆட்டி ஆட்டிக் கதை சொல்லுவான். இரும்புக்கை மாயாவியும் விக்கிரமாதித்தன் வேதாளமும், டோக்கியோவில் தமிழ்வாணனும் எப்படி என்று அவன் வர்ணனைப்படி தான் எனக்குத் தெரியும். நிச்சயம் ஒரிஜினலைவிடப் பிரமாதமாகத்தான் சொல்லியிருப்பான் என்று நம்புகிறேன்.
எங்கு அவன் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தாலும் போட்டது போட்டபடி ஓடுவேன். முக்கால்வாசி யார்வீட்டுக் காரிலோ, சுவற்றிலோ சாய்ந்துகொண்டு எங்களை எதிரில் நிற்கவைத்துத்தான் சொல்வான். அவனுக்காகத்தான் கூட்டம் கூடியிருக்கிறது என்பதை அவன் தெளிவுப்படுத்துவதுபோல் தலைமையாகத்தான் நிற்பான்.
வீட்டிற்குத் தெரியாமல், பத்மா டாக்டர் வீட்டு வாசலில் சரித்து வைத்திருக்கும் மாட்டு வண்டியில் சறுக்குமரம் விளையாட, பையன்கள் படையுடன் போய்க்கொண்டிருக்கிறேன். குண்டு அஷோக் வீட்டு வாசலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நாராயணன், ‘ஐயோ சாயங்காலம் ஆச்சு. இனிமே சக்கிலியன் கோட்டை வாசல் தாண்டிப் போகாத! போனா, அங்க இருக்கு பாரு ரெண்டு சிலை, அது உன்னைப் பிடிச்சுக்கும். அதுக்கு லேடீஸ்னாலே பிடிக்காது.”
நான் என்னளவுக்கு புத்திசாலித்தனத்தோடு, “எல்லாக் கோட்டை வாசல்லயும்தான் பொம்மை இருக்கு. எல்லாருமா பிடிச்சுக்கறாங்க. அங்கெல்லாம் நான் போயிருக்கேனே..”
“அங்கல்லாம் கோயில் நுழைவாசல் இருக்கும். பெருமாள் காப்பாத்துவார். மேலவாசல்ல மட்டும் நுழைய வாசல் இல்லையோன்னோடி. அதான் உன்னை யாரும் காப்பாத்த முடியாது. அப்புறம் நான் சொல்லலைன்னு சொல்லாத. அவ்ளோதான்.” முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு நான் மட்டும் திரும்பிவிடுவேன்.
சொல்லும் கதையை எல்லோரும் நம்புவதுபோல் கொஞ்சம் கூட எங்குமே லாஜிக் உதைக்காமல் எதிர்கேள்வியால் மடக்கவே முடியாமல் சொல்வான்.
அப்படிப்பட்ட நாராயணன் சொன்னதை வைத்து தாயார்கோயில் கொலு பற்றிய என் கற்பனைகள் எவ்வளவு விரிந்தது என்று சொல்லத் தெரியவில்லை. மிகப் பெரிய (நாராயணனாலேயே) எண்ணமுடியாத அளவு படிகளை உடைய கொலுவையும், யானை நொண்டி அடிப்பதையும், ரெங்கா என்று கத்துவதையும், அதன்குரல் அப்போது எவ்வளவு பெரிதாகக் கேட்கும் என்பதையும் என்னால் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை. ஏனென்றால் ஆடு மாடு பறவைகளின் குரல்களைக் கேட்டிருப்பது போல் யானையின் குரலை நான் வேறு எப்போதும் கேட்டதேயில்லை.
வேட்டுச்சத்தம் கேட்டதும் ஊரே, கோயில் கொலுவிற்கு ஓடும். என்வீட்டில் கூட்டிப் போனதே இல்லை. எப்பொழுதும் வீட்டு கொலுவிற்கு வருபவர்களைக் கவனிக்கவே அம்மா, பாட்டிக்கு நேரம் சரியாக இருக்கும். வேறு யாரும் அக்கம் பக்கத்தவர்கள் அந்தக் கூட்டத்தில் ரிஸ்க் எடுத்து சிறு பெண்ணான என்னைக் கூட்டிப் போகத் தயாரில்லை.
தாங்கமுடியாத ஒரு நாளில் அழுதுபுரண்டதில் மறுநாள் ஆபீஸிலிருந்து அப்பா சீக்கிரம் வந்து என்னைக் கூட்டிப் போவதாகக் கூறினார். அந்த 24 மணிநேரத்தை எப்படிக் கழித்தேன் என்று சொல்லத் தெரியவில்லை. அவ்வளவு பெரிய கொலுவில் எல்லா பொம்மைகளும் பெரிதாக இருக்குமா, சிறிதாக இருக்குமா, என்னென்ன பொம்மைகள் இருக்கும்.. பலமுறை யானை ‘சப்பை’ வைக்காமல் நொண்டி அடித்து, ‘ரெங்கா’ என்று கத்திவிட்டுப் போனது கற்பனையில்.
மறுநாள் போனபோது நான் எதிர்பார்த்ததைவிட அதிகக் கூட்டம். (இப்போதெல்லாம் அதைவிட அதிகம். ஆனால் அப்போதைக்கு அதுவே எனக்கு அதிகம்.) கூட்டம் அருகே போனதும் அப்பா என்னைத் தூக்கி வைத்துக் கொண்டார். கொஞ்சம் (கொஞ்சமென்ன கொஞ்சம், அதிகமாகவே அப்போது) குண்டுக் குழந்தை. அப்பா ‘தம்’ கட்டிக் கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறேன். பார்த்தால் ஒரு மண்டபத்தில் தாயார் மட்டும் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தார். எனக்கு எதுவும் சுவாரசியமாக இல்லை. ‘கொலு பார்க்கப் போகலாம்பா!’ என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தேன். அப்பா கவனிக்கவே இல்லை. ஒரு சிணுங்கலாக அடம்பிடிக்கவும், “இன்னும் என்ன கொலும்மா, இதுதான் கொலு!” என்றார்.
“இல்லப்பா நிறைய மா(வா)னத்லேருந்து படிவெச்சு கோயில்ல பொம்மைக் கொலு வெச்சிருப்பாளே.. அது பாக்கப் போகலாம்.”
அப்பாவிற்குப் புரியவில்லை.
“அப்படியெல்லாம் எங்கயும் வெக்கலை. இதுதான் கொலு. பாரு, யானை இப்ப நொண்டி அடிக்கும்; ரெங்கான்னு கத்தப் போறது.”
“சரி, அதெல்லாம் முடிஞ்சதும் கொலு பாக்கப் போகலாம்பா.” அப்பா அப்புறமும் கவனிக்கவேயில்லை. நாதஸ்வரமும் கொட்டுச்சத்தமும் என் மென்மையான காதுகளுக்கு அதிகமாக இருந்தது. கூட்டம் வேறு ஒரே பேச்சுச் சத்தம். எல்லாவற்றையும் கொஞ்சம் நேரம் நிறுத்தினால் போதும் என்றாகிவிட்டது.
திடீரென்று யானை ஒரு எக்கி எக்கியது. அப்பா தூக்கி வைத்திருந்தும் எனக்கு ஓரளவுதான் தெரிந்தது. ஆனால் பின்னாளில் ஜெமினி சர்க்கஸ் யானை செய்ததில் ஆயிரத்தில் ஒருபங்கு கூட இல்லை. நான் பாண்டி விளையாடும்போது அடிக்கும் அளவுக்கு நொண்டியை எதிர்பார்த்த எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பிறகு ஓங்கி ஒரு சத்தம் கொடுத்தது. அதை எப்படி எழுத்தில் எழுதுவது என்று தெரியவில்லை. எனக்கு வயிறுவரை அதிர்ந்தது. அப்படித் தொடர்ந்து மூன்றுமுறை செய்தது. உடனே எல்லோரும் ‘ஓ’ என்று சந்தோஷத்தில் கத்தினார்கள்.
அப்பாவும் சிரித்துக்கொண்டே, தன் பெண்ணின் ஆசையை நிறைவேற்றி வைத்த திருப்தியோடு, “எப்படி யானை ரெங்கான்னு கத்தித்து?!” என்றார். தூக்கிவாரிப் போட்டது எனக்கு. அப்படி எங்கே கத்தியது? புரியாத வகையில் ஏதோ சத்தம் தான் படுபயங்கரமாக எழுப்பியது. இதை எப்படி ரெங்கா என்று கத்துவதாகச் சொல்கிறார்கள்? கூட்டம் கலையத் தொடங்குகிறது.
அவ்வளவுதானா??!!
என்னை யானை ஏமாற்றிவிட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. ஏன் பெரியவர்கள் எல்லாம் இவ்வளவு மண்டுவாக இருக்கிறார்கள்?
என்னைத் தூக்கிக்கொண்டே எதிரிலிருந்த கம்ப மண்டபம் வரை வந்த அப்பா, இறக்கிவிடப் பார்க்கிறார்.
“கொலு பாக்கப் போகலாம்பா..”
“இதுதாம்மா கோயில் கொலு. நம்பாத்துலதான் நிறைய வெச்சிருக்கோமே. இன்னும்கூட நிறைய பொம்மை வாங்கித்தரேன்…”
“இல்லப்பா, கோயில்ல கொலு இருக்குன்னு நாராயணன் சொன்னான்; உங்களுக்குத்தான் தெரியலை..”
இப்போது அப்பாவிற்குப் புரிந்திருக்கும் விஷயம். நாராயணன் என்ற பெயர் என்வீட்டுப் பெரியவர்களுக்கு ஒரு அலர்ஜி. ஏதோ தட்டிவிட்டிருக்கிறான் என்று தெரிந்துகொண்டு, “சரி, நாளைக்கு அவனையும் கூட்டிண்டு போகலாம்..”
நான் நகர மறுக்கிறேன். மீண்டும் வாசல்வரை தூக்கிக்கொண்டு வருகிறார்.
“அப்படி எதுவும் இல்லைடி செல்லம். இருந்தா அப்பா காமிக்க மாட்டேனா?” கோயில் வாசலில் மீண்டும் கீழே இறக்கிவிடப் பார்க்கிறார்.
உடம்பை விறைப்பாக்கிக் கொண்டு இறக்கிவிடமுடியாமல் வைத்துக்கொள்கிறேன். ஒருவார்த்தை கூட என்னால் பேசமுடியவில்லை. தொண்டையை எதுவோ பேச முடியாமல் அடைத்துவிட்டது. என்னால் இந்த ஏமாற்றத்தைத் தாங்கவே முடியவில்லை. இறங்கி நடக்கவே தெம்பில்லை போல் இருந்தது.
அப்பாவும் ஒன்றும் செய்யமுடியாமல் தூக்கிக்கொண்டே வீடுவரைக்கும் வருகிறார். அவருக்கு மூச்சுவாங்குகிறது. நன்றாகவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
அப்பா என்று இல்லை, எல்லோரையுமே பழிவாங்கவேண்டும் போல் இருக்கிறது. எப்படி என்றுதான் தெரியவில்லை.
வீட்டுக்குப் போனதும் பாட்டியிடம் என்னை விட்டுவிட்டு அப்பா சாப்பிடப் போய்விட்டார். ஒன்றும் பேசாமல் பாட்டிமேல் சாய்ந்துகொண்டேன். ஏமாற்றத்தில் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது.
“உன்பேத்திய இன்னிக்கி தூக்கிண்டு வீதிபிரதட்சணம் வரேன்னு வேண்டுதல் போல இருக்கு எனக்கு.” பெண்ணை சந்தோஷப்படுத்தப் போகிறோம் என்று நினைத்து ஏமாந்ததில் அப்பா பொரிந்து தள்ளுகிறார்.
பாட்டிமேல சாய்ந்திருக்கும்போது அம்மா, நான் கோயிலுக்கென்று போட்டுக்கொண்டு போன புதுகவுனை மாற்ற வந்தாள். குப்புறப் படுத்துக்கொண்டு அவிழ்க்கவே முடியாமல் கையால் இறுகப் பிடித்துக்கொண்டேன். யார் என்ன சொன்னாலும் கேட்கக்கூடாது, எதிர்க்க வேண்டும் என்று ஒரு பிடிவாதம்; வெறுப்பு.
சாப்பிட்டுக் கொண்டே நடந்த எல்லாவற்றையும் பாட்டியிடம் சொல்கிறார் அப்பா. ‘அந்த நாரயணனோட சேர விடாதீங்க இனிமே’ என்ற முடிவுரையோடு தன் சிற்றுரையை முடிக்கிறார்.
வெளியே யாராவது போய்விட்டு வந்தால் என்தம்பி அவர்கள்மேல் ஓடிவந்து சாய்ந்துகொள்வான். அவ்வளவு நேரமாக என்னை விளையாடத் தேடியிருப்பான் போல் இருக்கிறது; அவ்வளவாக அப்போது அவனுக்கு வார்த்தைகளும் சேர்த்து பேசவராது. பாட்டி மடியில் நான் படுத்திருந்ததால் அவன் வந்து ஆசையாக என் கால்மேல் தலைவைத்துப் படுத்துக்கொண்டான். ஒரு எத்து எத்திவிட்டேன். இப்போது நினைத்தாலும் மனம் பதறுகிறது. அவன் தலை ‘டங்’கென்ற சத்தத்தோடு கீழே விழுந்தது. இதற்குமட்டும் அம்மா கடுப்பாகி என்னை அடிக்க வந்தாள். பாட்டி, ‘அது தன் நிலைல இல்லை, விட்டுடு’ என்று சொல்லித் தடுத்துவிட்டாள்.
உடனே அப்பா பாதியில் எழுந்துவந்து, தம்பியைத் தூக்கித் தன் மடியில் வைத்துக்கொண்டு தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்தார். அது இன்னும் தாங்கமுடியாததாக இருந்தது. அதற்குப் பதில் அப்பா என்னைத் திட்டியிருக்கலாம் என்று தோன்றியது.
‘கோயில்ல கொலுன்னா, தாயார் அலங்காரமா உட்கார்ந்திருக்கா இல்லை, பட்டமகிஷியா அதுதாண்டி. தனியா பொம்மை எல்லாம் வெப்பாளா?.. அவ்ளோ பெரிய உடம்பை வெச்சுண்டு யானைக்கு நொண்டி அதுக்குமேல அடிக்க முடியுமா.. அதுக்கு ரெங்கான்னு உன்னை மாதிரி சொல்ல பேச்சுதான் வருமா?.. ஆனா அப்படி அது சொல்றதுன்னுதான் நினைச்சுக்கணும்… நாரயணன் ரொம்ப துஷ்டை. சேராத அவன்கூட..”
பாட்டி விட்டு விட்டு சொல்லிக்கொண்டே தலையைத் தடவித் தூங்கவைக்கப் பார்க்கிறாள். இதெல்லாம் எதுவுமே நான் நினைத்ததுபோல் நடக்கமுடியாது என்பதும், நாராயணன் துஷ்டை என்பதும் என்னால் தாங்கவே முடியவில்லை. அவ்வளவு நேரம் அடக்கிக்கொண்டிருந்த என் கண்ணிலிருந்து கண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது.
எனக்கு நினைவு தெரிந்து வந்த முதல் ஏமாற்றம், கோபம். எப்பொழுதும்போல் காரியம் சாதித்துக்கொள்வதற்காக வருவித்துக் கொண்ட அழுகையாக இல்லாமல் என் யத்தனமில்லாமல் வந்த முதல் அழுகை.
குழந்தைகளின் கற்பனைகள் நொறுங்குவதும், குழந்தைமை தொலைவதும் இன்னொரு மரித்து எழும் வலி.
[இன்னமும் நவராத்திரி சமயத்தில் ஸ்ரீரங்கத்தில், ‘தாயார் கோயிலில் கொலு!’ என்றும், ‘யானை நொண்டி அடிக்கிறது!’ என்றும் “ரெங்கா என்று மூன்று முறை கத்துகிறது!’ என்றும்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.]
நன்றி: மரத்தடி.காம்
நவராத்திரி: நினைவலைகள் – சுந்தர்.
திங்கள், ஒக்ரோபர் 15, 2007 at 1:12 முப
இப்பவும் அப்போதைப்போலவே ரசித்துப்படித்தேன் & படிச்சு ரசிச்சேன்.
ரெங்கா ரெங்கா ரெங்கா
திங்கள், ஒக்ரோபர் 15, 2007 at 2:09 முப
Wow! such a cute post. Neengal ennudaiya 18 maada kuzhandai seivadhu polave seidhirukkireergale. Padikka migavum nandraaga irundhadhu. Aanal naan ondru sonnal koviththukolla koodadhu.. Kalyanam aana mudhal aandu ennaiyum srirangam kovil navarathri-kku ennudaiya maamiyaar, “narayanan” avargal sonnadhu maadhiriye solli en kanavarudan anupiththu vaiththaar. Aanal…yaanai adiththa nondiyum, “ranga” endru kaththiyadhum enakku migavum pidiththirundhadhu. Naan oru siru kuzhandai pola, en kanavaridam ” aaah nejamaave yaanai nondi adikkiradhu..enna azhaga kaththardu ” endru excite aaga solli, kottaththil irundhavargal, yaanaiyai vittu vittu ennai paarthanar 🙂 Innamum en paiyanukku..yaanai eppadi kaththum endru.. ” ranga ranga” endru, yaanai sound-il dhaan solli kaatuven 🙂 Enakkum andha srirangam golu marakka mudiyadha oru ninaivaaga irukkiradhu. Ippodhu kooda ungal post aarambaththai padithuvittu, en kanavaridam ” sriram navarathiri-yil golu kooda irukkumame..neenga kaatave illaiye” endru dhaan ketten hehehhe
திங்கள், ஒக்ரோபர் 15, 2007 at 2:11 முப
sorry for the typo in the last but one line..please read as srirangam,
instead of sriram 🙂
திங்கள், ஒக்ரோபர் 15, 2007 at 9:29 முப
//வேறு யாரும் அக்கம் பக்கத்தவர்கள் அந்தக் கூட்டத்தில் ரிஸ்க் எடுத்து சிறு பெண்ணான என்னைக் கூட்டிப் போகத் தயாரில்லை.//
//உடம்பை விறைப்பாக்கிக் கொண்டு இறக்கிவிடமுடியாமல் வைத்துக்கொள்கிறேன்.//
:)))) அக்கம்பக்கத்தவர்கள் புத்திசாலிகள். உங்களை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
//பலமுறை யானை ‘சப்பை’ வைக்காமல் நொண்டி அடித்து, ‘ரெங்கா’ என்று கத்திவிட்டுப் போனது கற்பனையில்.//
க்யூட்! தொடர்ந்து வரும் கோயில் நிகழ்வுகளை அழகாகப் படம் பிடித்திருக்கிறீர்கள்.
//இதெல்லாம் எதுவுமே நான் நினைத்ததுபோல் நடக்கமுடியாது என்பதும், நாராயணன் துஷ்டை என்பதும் என்னால் தாங்கவே முடியவில்லை.//
இதைப் படித்துக் கொண்டிருக்கும் எனக்கே தாங்க முடியவில்லை. பாவம் அந்தக் குழந்தை. 🙂 அப்புறம் நாராயணனுக்கு என்ன ஆயிற்று? எனக்கு குழந்தையை விட நாராயணனைப் பிடித்துவிட்டது. 🙂
//குழந்தைகளின் கற்பனைகள் நொறுங்குவதும், குழந்தைமை தொலைவதும் இன்னொரு மரித்து எழும் வலி.//
அதுதானே பார்த்தேன், கடைசியில் ஒரு சோகம் வைக்காமல் எழுதவே வராதா? ஆனால் உணர்வுகள் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். குழந்தை டாய்ஸ் எல்லாம் பக்கத்தில் வைத்துக் கொண்டு எழுதுவீர்களா? ஏற்கனவே மரத்தடி.காமில் படித்துவிட்டேன். நல்ல நடை. மீண்டும் ரசித்துப் படித்தேன்.
திங்கள், ஒக்ரோபர் 15, 2007 at 12:39 பிப
ரொம்பவே ரசிச்சேன் ஜெயஷ்ரீ.
எனக்கும் அடிக்கடி தோன்றூம்..ஏன் அந்தச் சின்னவயசு innocenceஐ இழந்தோமோன்னு.
திங்கள், ஒக்ரோபர் 15, 2007 at 9:13 பிப
இன்று நைவேத்தியம் உக்காரைதான் செய்யபோகிறேன் (முதல் தடவை). நவராத்திரி கட்டுரை எல்லாமே அருமை. நீங்க கொலு வச்சாச்சா?
செவ்வாய், ஒக்ரோபர் 16, 2007 at 4:53 முப
Hi
I just love to read your blog. I felt like being in Srirangam,thayar anidhi,eventhough living miles away from my hometown.
செவ்வாய், ஒக்ரோபர் 16, 2007 at 9:08 பிப
dear JM,
a good and revitting post on Ranga/Srirangam.
ur grandma judged u correctly and left to ur wits(before Garudan sannidhi),when u threw tantrums during azhwar purapadu O(:
happy navarathri.
sundaram
செவ்வாய், ஒக்ரோபர் 16, 2007 at 10:44 பிப
முன்னமே எப்பவோ படிச்சிருக்கேன் சரியா ஞாபகம் இல்லை! சின்ன வயசு கோபங்களை சூப்பரா எழுதியிருக்கீங்க…
என்னா சொல்றது – யானை ரங்கான்னு அது பாஷையில் சொன்னதை உங்களுக்குப் புரிஞ்சிக்கத் தெரியலை அப்பங்கிறதைத் தவிர…
யானை நொண்டி அடிக்கிறது மாஜிக்கல் ரியலிஸ்மா – இரா. மு. வைக் கேட்கலாம். 😉
எங்க வீட்டில் எங்க பாட்டி தான் கொலு வைப்பாங்க. அம்மாகிட்ட சின்ன வயசில் நீ ஏன் வைக்கிறதில்லைன்னு கேட்டால், அதான் நீ, உங்கக்கா உங்கப்பன்(ஹிஹி) எல்லாம் இருக்கீங்களே பொம்மை மாதிரி இதில் தனியா இன்னொரு கொலு ஒன்னுதான் கேடான்னு கேட்டு அடிவிழும். 😉
நிறைய விஷயங்களை திரும்பவும் நினைவு படுத்தினீங்க; நல்லாயிருங்க.(வாழ்த்த வயசில்லையோ?)
செவ்வாய், ஒக்ரோபர் 16, 2007 at 11:22 பிப
[…] பண்டிகைகள் போன்ற கலாசார நிகழ்வுகள் இல்லாமல் போயிருந்தால், பல சுவாரசியமான படைப்புகள் எழுதப் படாம்லே போயிருக்கும் என்பதற்கு இது உதாரணம். […]
புதன், ஒக்ரோபர் 17, 2007 at 1:18 முப
கலக்கல்!
புதன், ஒக்ரோபர் 17, 2007 at 3:42 பிப
It was a good read.
Thanks.
புதன், ஒக்ரோபர் 17, 2007 at 4:58 பிப
ஜெய்ஸ்ரீ, என்னமா நினைவு வைத்து எழுதி இருக்கிறீர்கள். ஸ்ரீரங்கத்தையே வலம் வந்த மாதிரி இருக்கு.
சின்ன வயசு ஏமாற்றங்கள் பெரிதாகத்தான் தெரியும்.
தாயார் கொலுவிருந்தததை நாரயணன் இப்படிச் சொல்லி ஏமாற்றிவிட்டாரோ.(அவருக்கும் வயதாகி இருக்கும் இல்லையா)
பாட்டியின் அருமை நெகிழ வைக்கிறது. சூப்பர் போஸ்ட்மா.
புதன், ஒக்ரோபர் 17, 2007 at 7:59 பிப
wow, what a சுவாரசியமான post is this..? word by word நெகிழ வைக்கிறது நிகழ்வுகள் … Me too have சின்ன வயசு ஏமாற்றங்கள்….but couldnt express in blog…
//குழந்தைகளின் கற்பனைகள் நொறுங்குவதும், குழந்தைமை தொலைவதும் இன்னொரு மரித்து எழும் வலி.//
very true.
I also posted one on நவராத்திரி நினைவலைகள் last year… but your post is very good to share with people.
http://bharateeyamodernprince.blogspot.com/2006/09/blog-post_23.html
Navaraathri Vaazhthukkal!
Cheers.
வியாழன், ஒக்ரோபர் 18, 2007 at 12:09 பிப
மரத்தடியில் படித்தது; இப்போது மீண்டும் படித்து ரசித்தேன்.
அது ஏன் நினைவலைகள் என்றாலே சந்தோஷமும், சோகமும் ஒருங்கே வருகின்றது?
அருமையான நடை.
– சிமுலேஷன்
வியாழன், ஒக்ரோபர் 18, 2007 at 2:47 பிப
கொலு பற்றி எழுதியிருப்பது மிக அருமை.அதிக வெளி நடப்புகள் தெரியாத அந்த நாட்களில் சிறு வயதுப் பெண்ணாக அவர் எழுதியிருப்பது அருமை.உணர்வுகள் முற்றிலும் என்னுடையது போலவே இருந்தன.இப்படி ஒன்று போல் மனோபாவங்கள் உள்ளவர்கள் கலந்து பறிமாறிக்கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பம்.வாழ்த்துக்கள்
வியாழன், ஒக்ரோபர் 18, 2007 at 4:22 பிப
Jsri,
இவ்வளவு அற்புதமா எழுதுவீங்களா நீங்க !!! அழகான, கோர்வையான எழுத்து நடை, பாராட்டுக்கள்.
நிஜமாகவே நெகிழ வைத்த பதிவு இது!
சூப்பர் நாஸ்டால்ஜியா ! என் சிறுவயது குறித்த ஞாபகங்களை அசை போட வைத்து விட்டீர்கள்,
அதற்காக ஒரு ஸ்பெஷல் நன்றி.
என் வலைப்பதிவிலும் கொஞ்சம் நாஸ்டால்ஜியா இருக்கு, டைம் கிடைக்கும்போது படிங்க!
http://balaji_ammu.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%20%E0%
AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%28Nosta
lgia%29
உங்களுக்கு அதை வாசிக்கப் பிடிக்கும் என்பது என் நம்பிக்கை 🙂
என்றென்றும் அன்புடன்
பாலா
திங்கள், ஒக்ரோபர் 22, 2007 at 12:28 முப
ஜெயஸ்ரீ
நல்ல நடை! குழந்தை நடை! நினைவலைகளில் நடக்கும் போது ஏக்கமும் இனிமையும் கலந்த நடை!
//என்னா சொல்றது – யானை ரங்கான்னு அது பாஷையில் சொன்னதை உங்களுக்குப் புரிஞ்சிக்கத் தெரியலை அப்பங்கிறதைத் தவிர…//
ரிப்பீட்டே! :-)))
செவ்வாய், ஒக்ரோபர் 23, 2007 at 9:50 முப
துளசி, அப்பொழுதைப் போல் இல்லாமல் இப்போது நீங்களோ பொன்ஸோ கேஸ் போடுவீர்களோ என்று பயந்தேன். ஆனாலும் முதன்முதலில் ஒரு எறும்பிடம் ஏமாறாமல் யானையிடம் ஏமாந்தேன் என்று பெருமைதான். 🙂
ramya, கல்யாணம் ஆன வருடம் கணவனுடன் சென்றீர்களா? அப்படித்தான் இருந்திருக்கும். 🙂
cgs, seetha என்ற பெயரில் எழுதுவதும் நீங்கள் தானா? நன்றி..
Rama Rajagopalan, sundaram sir, நன்றி.
மோஹன் தம்பி, //யானை ரங்கான்னு அது பாஷையில் சொன்னதை உங்களுக்குப் புரிஞ்சிக்கத் தெரியலை அப்படீங்கிறதைத் தவிர..// அடேயப்பா. ‘வாழ்த்த வயதில்லை’ எல்லாம் மேடைப் பேச்சு. உம்மாச்சிக்கே பல்லாண்டு பல்லாண்டு பாடினவங்களும் இருக்காங்க. உங்கள் வாழ்த்து ஏற்றுக்கொள்ளப் பட்டது. 🙂
கில்லி, பாபா, Alien, நன்றி.
பாரதீய நவீன இளவரசன், உங்கள் பதிவும் படித்தேன். இன்றும் எல்லாம் இருக்கிறது. ஆனால் விஸ்தாரமாக எதையும் செய்ய யாருக்கும் நேரமில்லை. மிகக் குறைந்த திரைப்படங்களில் தான் நவராத்திரி காட்சிகள் வந்திருக்கின்றன போல் இருக்கிறது.
Kalyanakamala, சிமுலேஷன், KRS, நன்றி.
எ.அ.பாலா, நன்றி. ஆனால் சுட்டி சரியாக இல்லையே. 😦
செவ்வாய், ஒக்ரோபர் 23, 2007 at 11:21 முப
vijayram,
//அப்புறம் நாராயணனுக்கு என்ன ஆயிற்று? எனக்கு குழந்தையை விட நாராயணனைப் பிடித்துவிட்டது.//
அப்புறமும் நாராயணன் கதை சொல்லிக்(விட்டுக்) கொண்டிருந்தார். படக் கதைகளை அந்தந்தப் புத்தகங்களை கையில் வைத்துக் கொண்டு படித்துப் படித்துச் சொல்கிறேன் என்று சரக் சரக் என்று வேகமாக பக்கங்களைத் திருப்பும் லாகவத்தைப் பார்த்து மலைத்திருக்கிறேன். எனக்கெல்லாம் இவ்வளவு வேகமாக எப்போது படிக்கவரும் என்று மலைப்பாக இருக்கும். அடுத்த இரண்டு வருடத்திலேயே தமிழ் வேகமாகப் படிப்பேன் என்பதும், படக்கதை புத்தகங்களில் எழுத்து கொஞ்சம் தான் என்பதும் அப்போது தெரிந்திருக்கவில்லை. ஆனால் நவராத்திரி சம்பவத்துக்குப் பின் தள்ளி நின்று அவர் கதைகளை, கதைகளாக மட்டுமே கேட்கும் அறிவு வந்திருந்தது. சந்திரமுகியாக மாறவில்லை. 🙂
ரேவதிநரசிம்ஹன்,
//அவருக்கும் வயதாகி இருக்கும் இல்லையா)//
பின்ன ஆகாம இருக்குமா? வளர வளர தீபாவளி ரிலீசுக்கு ரிலீசன்றைக்கே படத்துக்கு டிக்கெட் ரிசர்வ் செய்து தருவது வரை பல வேலைகளுக்கு இவர்களை எல்லாம் நம்பியிருந்தோம். மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு என் தம்பி கல்யாணத்தில் பார்த்தேன். படிப்பு, உத்யோகம் எல்லாம் ஆளையே மாற்றியிருந்தது. அலைபாயும் பார்வையும், பேச்சும் படபடப்பும் சுத்தமாக இல்லை. இது நாராயணன் இல்லை என்று மனதுக்குச் சொல்லி வைத்தேன். கையைக் குறுக்கே கட்டிக் கொண்டு அமரிக்கையான, அளவான பேச்சு. எதிராளியைப் பேசவிட்டு ஆழ்ந்து கண்களை கவனித்து மதிப்புக் கொடுத்து கேட்பது, லேசான சிரிப்பு, தலையசைப்பு… எனக்குப் பிடிக்கவில்லை. 🙂 நான் தம்பி கல்யாணத்தில் பிசியாக இருக்கும் வரை என் குழந்தையை பொறுப்பாக மேய்த்தது மட்டுமே பிடித்திருந்தது. சின்ன வயதில் அழகாகக் கதை சொல்வாய் என்று பாராட்ட என் எலும்பைப் போர்த்தியிருக்கும் ஈகோ இடம் கொடுக்கவில்லை.
திங்கள், ஒக்ரோபர் 29, 2007 at 12:27 பிப
Jsri,
http தொடங்கி Nostalgia%29 வரை உள்ளது முழுவதுமே சுட்டி ! சும்மா அதன் மேல் கிளிக் செய்தால் error தான் வரும். அதனால், http தொடங்கி Nostalgia%29 வரை உள்ளதை, முதலில் ஒரு note pad-இல் காப்பி & பேஸ்ட் செய்யுங்கள். பின்னர் அதை வாரிச் சுருட்டி, உங்கள் browser-இன் address பெட்டியில் இட்டு, “ENTER”-ஐ அமுக்கவும்.
இதை விட விளக்கமாக என்னால் சொல்ல முடியாது 🙂
//எதிராளியைப் பேசவிட்டு ஆழ்ந்து கண்களை கவனித்து மதிப்புக் கொடுத்து கேட்பது, லேசான சிரிப்பு, தலையசைப்பு… எனக்குப் பிடிக்கவில்லை.
//
//சின்ன வயதில் அழகாகக் கதை சொல்வாய் என்று பாராட்ட என் எலும்பைப் போர்த்தியிருக்கும் ஈகோ இடம் கொடுக்கவில்லை.
//
இது தான் Jsri :)))
எ.அ.பாலா
புதன், ஒக்ரோபர் 31, 2007 at 10:47 முப
Jsri,
Is the “LINK” issue resolved ?
வியாழன், நவம்பர் 1, 2007 at 8:54 முப
எ.அ.பாலா,
அவ்ளோ தெரியாமலா இருக்கோம். ஆனா உங்க சுட்டி நோட்பேடையும் தாண்டி புனித.. நீளமானதா இருந்ததுல சரியா வரலை. எப்படியே வெட்டி ஒட்டி படிச்சுட்டேன்னு வைங்க. ஆனா அது அவ்ளோ சுலபமில்லை. அவ்ளவும் படிக்க நெட் வேணாமா? நாங்க என்ன சென்னைலயா இருக்கோம்? சி.பொ.ம வரப்போற நவிமும்பை. காலைல 90 நிமிடம் சாப்பாட்டுக்கு முன்னால, மாலைல 90 நிமிஷம் சாப்பாட்டுக்கு அப்புறம் கரண்ட் இருக்காது. கரண்ட் வந்ததும் சிஃபியால அதைத் தாங்க முடியாம hang ஆயிடும். ஒவ்வொரு தடவையும் அவிங்களைக் கூப்டு கூப்டு அவங்க கொட்டாவி விட்டுகிட்டு வந்து சரி செஞ்சாதான் கிடைக்கும். சில நாள் செய்யாமலே, ‘அவ கிடக்கா, வேற வேலையில்ல? எல்லாம் நாளைக்கு பாத்துக்கலாம்’னு வீட்டுக்குப் போயிடுவாங்க. யார் கேக்க முடியும்? எப்படியோ கிடைச்ச நேரத்துல எல்லாம் படிச்சு முடிச்சுட்டேன்.பல பதிவுகள் ஏற்கனவே படிச்சிருக்கேன். என்னை ரொம்ப பாதிச்சது வீடு குறிச்ச பதிவுதான். எங்க வீடு கை மாறலை. ஆனா அப்பா மொத்த வீட்டையும் இடிச்சு தரைமட்டமாக்கி (தரைமட்டமா இருந்த அந்தக் காட்சியைப் பாத்தே கலங்கிட்டேன். அப்படியே ஒரு கல் மேல அரைமணி நேரம் உட்கார்ந்திருந்தேன்.) புதுசா கட்டிட்டாரு. நானும் படம் எதுவும் எடுத்து வெச்சுக்கலை.
என் சின்ன வயசு வீடு, சமையல்கட்டு,அரங்கு, கூடம், வராண்டா, ரேழி, வாசல், கொல்லை எல்லாம் மறந்துடாம இருக்கணும்னு அடிக்கடி நினைச்சு நினைச்சுப் பாத்துப்பேன்.
//இது தான் Jsri :)))//
:))
சனி, மே 3, 2008 at 12:06 முப
[…] நான் குழந்தையா இருந்தபோது ‘நாராயணன்’ங்கற பேர் எப்படி எங்கவீட்டுல […]
புதன், ஒக்ரோபர் 27, 2010 at 9:43 முப
[…] நான் குழந்தையா இருந்தபோது ‘நாராயணன்’ங்கற பேர் எப்படி எங்கவீட்டுல […]
செவ்வாய், ஒக்ரோபர் 4, 2011 at 10:30 முப
அருமையான பதிவு ஜெயஸ்ரீ. ஸ்ரீரங்கம் என்றதாலா என்று தெரியவில்லை. கொஞ்சம் சுஜாதா சாயல். 🙂
மும்பை சென்னையை விட மோசம் என்று தெரிந்ததில் கொஞ்சம் ஆறுதல்.
வெள்ளி, ஒக்ரோபர் 16, 2015 at 8:19 முப
மிக அருமையான நினைவலைகள். கண்ணெதிரே அனைத்தையும் அனுபவித்தேன். பகிர்வுக்கு நன்றி. இரண்டு நாட்கள் முன்னர் கூடத் தினசரியில் ஆண்டாள் யானை மௌத் ஆர்கன் வாசித்ததையும், “ரங்கா” “ரங்கா” என்று பிளிறியதையும்பெரிய செய்தியாகப் போட்டிருந்தார்கள். நாங்கள் இன்னமும் பார்த்தது இல்லை. கூட்டம் அலர்ஜி! 🙂