ஸ்ரீரங்கம் வடக்குவாசலில் சுண்டைக்காயோடு போட்டி போடும் சைஸில் மலை வடு கிடைக்கும். அப்படியே பச்சை மாவடுவை கதவிடுக்கில் நசுக்கினால், காக்காய்க் கடியாய் பகிர்ந்து கொள்ளலாம். பல் கூசும் புளிப்பாக இருக்கும். (பல் தானே கூசுகிறது. பின் கண்னை ஏன் மூடிக் கொள்கிறோம்?) வடுவின் பால் பட்டால் வாய்ப்புண் ஒரு நாள் முழுவதும் படுத்தும். மாவடு, கஸ்தூரி மஞ்சள், பயத்தம் பொடி, தஞ்சாவூர் குடமிளகாய், மோர்மிளகாய் என்று சில சாமான்கள் வருடா வருடம் அம்மா வீட்டிலிருந்து வருவதே தொடர்ந்து வருகிறது. ஆனாலும் இந்த மாவடு மட்டும் எந்த ஊரில் இருந்தாலும், கிடைப்பது சப்பை வடுவாக இருந்தாலும், நம் பங்குக்கும் ஒரு படியாவது போட்டால் தான், ஏதோ நாமும் பெரிய மனுஷி ஆகிவிட்டதுபோல் ஒரு தோரணையான ஃபீலிங் வருகிறது. 🙂

தேவையான பொருள்கள்:

மாவடு – 1 படி
கல் உப்பு – 1 கப்
காய்ந்த மிளகாய் – 1 கப்
கடுகு – 1/4 கப்
விரளி மஞ்சள் – 3
விளக்கெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணை – 1/4 கப்

maavadu_new.JPG

செய்முறை:

  • மாவடுவை நன்கு கழுவி, நீரை வடியவைத்து, ஒரு துணியில் பரத்தி காய வைக்கவும்.
  • காய்ந்த மிளகாயை வெயிலில் காயவைத்து, பொடித்துக் கொள்ளலாம் அல்லது 1/2 கப் மிளகாய்த் தூளாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
  • விரளி மஞ்சளை வெயிலில் காயவைக்கவும் அல்லது வாணலியில் 5 நிமிடம் ஈரப் பசை இல்லாமல் வறுத்துக் கொண்டு, கடுகு, விரளி மஞ்சளை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • மாவடுவில் விளக்கெண்னை, கடுகு, மஞ்சள் பொடியைக் கலந்து பிசிறிக் கொள்ளவும்.
  • ஊறுகாய் போடும் பாத்திரத்தில் முதலில் ஒரு டேபிள்ஸ்பூன் உப்பைப் போட்டு மேலே ஒரு பிடி மாவடு, அதன்மேலே ஒரு உப்பு, காரப் பொடி, மாவடு என்று மாற்றி மாற்றி எல்லாவற்றையும் போட்டு, மேலாக நல்லெண்ணையும் சேர்த்து மூடிவைக்கவும்.
  • இரண்டாம் நாள் கலந்து எடுத்து உபயோகிக்க ஆரம்பிக்கலாம். அதன்பின் அடிக்கடி அடிவரை கிளறிவிட வேண்டும்.

* ஊறுகாய்க்கு எப்பொழுதும் கண்ணாடி, பீங்கான் ஜாடி அல்லது கல்சட்டியையே உபயோகிக்கவும்.

* மாவடு, மலை வடுவாக இருந்தால் புளிப்பு அதிகமாக இருக்கும். [சும்மா ஒன்றை எடுத்து சாப்பிட்டுப் பார்க்காமலா இருப்போம்? 🙂 இந்த முறையும் வடுவின் பால் பட்டு வாயில் புண். :(] இதற்கு ஒரு பிடி உப்பும், இரண்டு டேபிள்ஸ்பூன் காரப்பொடியும் அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.

* அநேகமாக மாவடுவின் காம்பை அதிகம் வெட்டாமல் வைத்திருப்பார்கள். தராசிலோ, படியிலோ அளக்கும்போது இது அதிக இடத்தை அடைத்துக் கொள்ளும்; வியாபாரிக்கு லாபம். வாங்கும்போது ஒடித்துவிட்டு வாங்குவது நமது சாமர்த்தியம். முடியாவிட்டால் மார்க்கெட் விலையே அவ்வளவுதான் என்று தேற்றிக்கொள்ள வேண்டியதுதான். 😦 வேறு யாராவது(?!) வாங்கி வந்திருந்தால், “ஏமார்ற மூஞ்சி எப்ப வரும்னு காத்துண்டிருந்து தள்ளிவிடுவாங்க போல இருக்கு; சாமர்த்தியம் பத்தாதுன்னு எப்படித்தான் நிமிஷத்துல கண்டுபிடிக்கறானோ? இவங்களைத் தான் மாப்பிள்ளை பாக்க அழைச்சுகிட்டுப் போகணும்… ” என்று சொல்லிக்கொண்டே (நாம் கடைக்காரனைத்தானே திட்டுகிறோம்) ஈரம் உலரவைக்கும் நேரத்தில் ஒரு இன்ச் நீளம் மட்டும் விட்டு, மிச்சக் காம்பை வெட்டிவிடவும்.

* எக்காரணம் கொண்டும் மாவடுவில், வரும் நாள்களில், ஈரக் கரண்டியை உபயோகிக்கக் கூடாது. ஆனால் 2 மாதங்களுக்கு ஒரு முறை ஐஸ் க்யூப்களை இரண்டு மூன்று போட்டு வந்தால் ஒரு வருடத்திற்கு கெடாமல் இருக்கும்.

* நல்லெண்ணை விடுவது அவரவர் விருப்பம் தான். ஆனால் விடுவதால் அதிகம் சுருங்காமல் வாசனையாக இருக்கும்.

* மாவடு போட்டு பத்து பதினைந்து நாள்கள் கழித்து அதிலிருக்கும் நீரை இறுத்து, 2/3 பாகமாக ஆகும்வரை அடுப்பில் வைத்துக் காய்ச்சி ஆறவைத்து, பின் மாவடுவில் மீண்டும் விட்டால், வருடம் முழுவதும் கெட்டுப் போகாது. ஆனால் பொதுவாக நான் போடுவது, அப்படி எல்லலம் செய்யாமலே நன்றாகத் தான் இருக்கிறது.

* “மாப்பிள்ளையில் கிழவனும், மாவடுவில் அழுகலும் கிடையாது!” என்பார்கள். நம்பவேண்டாம். அழுகிய மாவடுவை எப்பொழுதும் சாப்பிடாதீர்கள்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

maavaduold.JPG

தயிர் சாதம் வரை காத்திருக்க வேண்டாம். குழம்பு சாதத்திற்கே மாவடு சூப்பராகப் பொருந்திப் போகும்.

துவையல்: காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காயம் வறுத்து, அவற்றோடு சிறிது புளி, உப்பு, தேங்காய், வடுமாங்காய் சேர்த்து துவையல் அரைக்கலாம்.

பச்சடி: மாவடுவோடு ஒரு டீஸ்பூன் தேங்காய், சிறிது மல்லித் தழை, ஒரு பச்சை மிளகாய் வைத்து அரைத்து தயிரில் கலந்து கடுகு தாளித்து பச்சடி செய்யலாம்.

மாவடுச் சாறு: சென்ற வருட மாவடுச் சாறு கட்டாயம் மீந்திருக்கும். இதில் ஆலிவ் வாங்கி ஊற வைத்து இரண்டாம் நாளிலிருந்து சாப்பிடலாம். இதன் முழு காப்பிரைட்டும் எனக்கே சொந்தம்.

மேல்ச் சாறாக நீக்கிவிட்டு, அடியில் தங்கும் கெட்டியான சாறை சாதத்தில் எண்ணை அல்லது நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். தோசைக்குத் தொட்டுக் கொள்ளலாம்.

சுண்டைக்காய் வத்தல், வேப்பம் பூ, மினுக்கு வத்தல் ஆகியவற்றை சாற்றில் நனைத்து, ஊறியதும் வெயிலில் உலர்த்தி, எண்ணையில் பொரித்து, தயிர்சாதத்திற்குத் தொட்டுக் கொள்ளலாம்.

ஆனால் இந்தக் குறிப்பும் இனியும் இந்தப் பகுதியில் வரப்போகிற குறிப்புகளையும்ப் படிக்கிறவர்களுக்கு– அதிகமான ஊறுகாயும், சாறும் உடலுக்குக் கெடுதல் என்று எச்சரிக்க வேண்டிய கடமையும் எனக்கு இருக்கிறது. 🙂