இந்த வடைக்கு என்று எதுவும் தனியாக யாரும் பெயர் வைக்கவில்லை போலிருக்கிறது. கார்த்திகையன்று (மட்டும்) செய்வதால் கார்த்திகை வடை என்றே நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
தேவையான பொருள்கள்:
முழு உளுத்தம் பருப்பு – 2 கப் (கருப்புத் தோலுடன்)
கடலைப் பருப்பு – 1/2 கப்
பயத்தம் பருப்பு – 1/2 கப்
பச்சை மிளகாய் – 10, 12
இஞ்சி – பெரிய துண்டு
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
பெருங்காயம்
உப்பு
எண்ணெய்
செய்முறை:
- தோல் உளுத்தம் பருப்பை அலசி தண்ணீர்ல் குறைந்தது 8 மணி நேரம் ஊறவைக்கவும். (தோல் தனியாகக் கழண்டு வரும் அளவு ஊறவேண்டும்.)
- கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊறவைத்து, நீரை ஒட்ட வடித்து, ஒரு துணியில் காயவிடவும்.
- பாதி இஞ்சி, பாதி மிளகாயை மட்டும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
- கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையையும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
- ஊறின தோல்பருப்பைக் களையவும். முக்கால்வாசித் தோல் மட்டும் நீங்கினால் போதும். கால்வாசி அல்லது விரும்பினால் அதைவிட சிறிது அதிகத் தோலை அப்படியே நீக்காமல் வைத்துக் கொள்ளவும்.
- களைந்த பருப்புடன், தேவையான உப்பு, பெருங்காயம், மீதிப் பாதி இஞ்சி, பச்சை மிளகாயைச் சேர்த்து, அதிகம் நீர் விடாமல், அதிகம் மசியாமல் கெட்டியாக கரகரப்பாக அரைத்து எடுக்கவும். கிரைண்டரில் இப்படி அரைப்பது சுலபம்.
- அரைத்த மாவுடன் உலர்த்தி வைத்திருக்கும் பருப்புகளை நன்கு கலந்து கொள்ளவும்.
- நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து அழுத்தாமல் கலந்து கொள்ளவும். பச்சை மிளகாய்த் துண்டுகள் இடையில் அதிகம் இருந்தால் சுவையாக இருக்கும்.
- அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கவும்.
- வாழையிலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் தண்ணீர் துடைத்து, மாவை உருட்டி, வடையாகத் தட்டி, நடுவில் துளை போட்டு, நிதானமான சூட்டில், எண்ணெயில் போடவும்.
- இருபுறமும் திருப்பிவிட்டு, முழுமையாகச் சத்தம் அடங்கி, மொறுமொறுப்பானதும், எடுக்கவும். இடையிடையே கரண்டிக் காம்பால் வடையில் குத்தினால் மேலும் கரகரப்பாகும்.
* இந்த வடை வேக சிறிது அதிக நேரம் எடுக்கும். இரண்டு மூன்று நாள்களுக்குக் கெடாது.
* முழுமையாக தோல்பருப்புதான் சேர்க்கவேண்டுமென்பதில்லை. கால் அல்லது அதற்குக் கொஞ்சம் மேலே தோல் உளுத்தம் பருப்பும், மீதிக்கு தோல் நீக்கிய முழுப் பருப்பும் கூட சேர்த்து, கடைசியில் களையாமல் நீரை மட்டும் வடித்து, அப்படியே அரைக்கலாம். இது அதிகம் ஊறத் தேவையில்லை. நான்கு மணி நேரத்தில் அரைக்கலாம்.


ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 25, 2007 at 1:08 மு.பகல்
ஜெ!
ரொம்ப நாளைக்கப்புறம் எனக்குப்பிடித்தமாதிரி ஒரு ஐட்டம்.
வடையாகத் தட்டவும்னு சொல்லியிருக்கீங்க. தடினம் எவ்வளவு இருக்கணும்? உழுந்துவடைமாதிரி இல்லைன்னு நினைக்கிறேன். ஆஞ்சநேயர்கோயில் வடைமாதிரியா? வடை இன்னும் மிச்சம் இருந்தா பக்கவாட்டில ஒரு போட்டோ ப்ளீஸ்.
செஞ்சிட்டு எப்படி இருந்ததுன்னு சொல்றேன்.
-மதி
திங்கட் கிழமை, நவம்பர் 26, 2007 at 10:43 மு.பகல்
மதி, பயறுகள்ல தோலுக்குத் தான் சுவை அதிகம்னு எனக்கு ஒரு நம்பிக்கை. கார்த்திகைக்கு செஞ்சதை இங்க அத்தனை பேரும் உடனே ஃபோன் செஞ்சு ரெசிபி கேட்டாங்க. அவசியம் செஞ்சு பாருங்க. முதல்ல சும்மா சாஸ்திரத்துக்கு பெருசா ஒரு 7 வடை செய்வோம். அதைக் கண்டுக்காதீங்க. சின்னதா, சாதாரண உளுந்து வடை தடிமன் அல்லது அதைவிட குறைவாகக் கூட இருக்கலாம். அதுக்காக அனுமார் வடை மாதிரி தட்டை மாதிரி இருக்கக் கூடாது. முழுமையா சத்தம் அடங்கினதும் எடுத்தா நல்லா வெந்து சுவையா இருக்கும்.
திங்கட் கிழமை, நவம்பர் 26, 2007 at 6:52 பிற்பகல்
என்னங்க இப்படி ஆயிட்டிங்க?…
என்னவோ போங்க.
திங்கட் கிழமை, நவம்பர் 26, 2007 at 7:26 பிற்பகல்
சுரேஷ்,
)))))
ஏன், வடை உங்களுக்குப் பிடிக்காதா?
அப்றம் அது
என்னவோ போங்க
இல்லை,
என்னமோ போங்க!.
செவ்வாய்க் கிழமை, நவம்பர் 27, 2007 at 1:41 பிற்பகல்
போச்சுடா!
சரி. சமையல் அறையை விட்டு கொஞ்சம் வெளியே வரலாமே? உடனே சமையல்னா அவ்வளவு இளக்காரமான்னு பெண்ணியக் குரல் கொடுக்க மாட்டீங்கன்னு நம்பறேன்.
புதன் கிழமை, நவம்பர் 28, 2007 at 11:35 மு.பகல்
நம்ப என்னிக்கி பெண்ணியக் குரல் எல்லாம் கொடுத்திருக்கோம் சுரேஷ்? நானெல்லாம் ரொம்ப வெளிய வந்துட்டா சமையல் தீய்ஞ்சு கருகவாசனை வரும். இது வசதி. எல்லாருடைய பதிவும், சில குழுமங்களும் படிச்சுண்டுதான் இருக்கேன்.
புதன் கிழமை, நவம்பர் 28, 2007 at 5:46 பிற்பகல்
ஜெயஸ்ரீ,
உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன்.
சாம்பார்-வடை பற்றி ஏன் இன்னும் எழுதவில்லை ?
கடப்பா எனும் சாம்பார் சில ‘விலாஸ்’ டைப் ஹோட்டல்களில் கிடைக்கும் (புதன் கிழமை மட்டும் ?) அதுவும் சூப்பராக இருக்கும் (வடைக்கும் இட்லிக்கும்!)
ஸ்ரீரங்கத்தில் வெங்கடேச பவனில் (தெற்கு வாசல் – மூன்றாம் சுற்றில் உள்ளது.. உள்ளடங்கிய கடை, இலையில் தான் பறிமாறல்) மதியம் சுமார் மூணு மணிக்கு போடும் சாம்பார்-வடை சாப்பிட்டதுண்டா ? சில மணித்துளிகளில் காலியாகிவிடும். இன்னமும் அந்த
டேஸ்டில் வேறு எந்த ஹோட்டலும் சாம்பார் வடையை செய்யவில்லை (அப்படீங்கறது எனது அனுபவம்).
சுரேஷ் கண்ணன் சொன்ன மாதிரி, மிகவும் சுவாரசியமாக எழுதக்கூடிய ஒருவர் இவ்வாறு ரெசிப்பி மட்டுமே எழுதுவது எங்களைப் போன்ற படிப்பவர்களுக்கு கொஞ்சம் ஆதங்கமே.
ரிலையன்ஸ் ஃபிரஷ் பற்றிய நீள் கட்டுரை உங்கள் (பழைய) மரத்தடி Formல் இருந்தது.
நன்றி.
வெள்ளிக்கிழமை, நவம்பர் 30, 2007 at 3:49 பிற்பகல்
i am sorry to say about this madam. but i couldnot be silent.
i show another page about cooking. on that side, some eats are absolutely same like u written by Sathiya with same comments.
pls check with that.
thank u
http://www.thamilworld.com/forum/index.php?s=40d8ef0c139db1e6af1fa59fcf62276d&showforum=20
suba
வெள்ளிக்கிழமை, நவம்பர் 30, 2007 at 3:51 பிற்பகல்
i am looking ur sites every day mam.
வெள்ளிக்கிழமை, December 7, 2007 at 9:39 மு.பகல்
சாம்பார் வடை, நீங்க ஸ்ரீரங்கமா? அந்த ஹோட்டல்ல சாப்பிட்டிருக்கேன். ஆனா அங்க சாம்பார்வடை விசேஷம்னு தெரியாது. வேற யாரும்கூட சொன்னதில்லை. அடுத்த தடவை சாப்பிட்டுப் பாக்கறேன். கடப்பா இங்க சொல்லியிருக்கேன்.
//ரிலையன்ஸ் ஃபிரஷ் பற்றிய நீள் கட்டுரை உங்கள் (பழைய) மரத்தடி Formல் இருந்தது.//
நீங்க மரத்தடியுமா? யாராயிருக்கும்னு மண்டை வெடிக்குது.
வெள்ளிக்கிழமை, December 7, 2007 at 9:44 மு.பகல்
subhasini, தகவலுக்கு நன்றி. அவங்க இணையத்துலேருந்து எடுத்ததாவே சுட்டி கொடுத்து எழுதலாம். ஏன்,ஏதோ புத்தகத்துலேருந்து தான் எடுத்துப் போட்டதா சொல்றாங்கன்னு தெரியலை. ஆனா இதுக்கெல்லாம் நாம் ஒன்னும் செய்ய முடியாது. எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே.
ஏதோ மக்கள் மகிழ்ச்சியா இருந்தா சரிதான்.
புதன் கிழமை, December 12, 2007 at 4:02 பிற்பகல்
நன்றி ஜெயஸ்ரீ.
வெங்கடேச பவனில் சாம்பார்வடை மட்டுமல்ல – கீரைவடை போன்ற ஐட்டங்களும் அருமையாக இருக்கும். என்ன எல்லாம் டில் ஸ்டாக்ஸ் லாஸ்ட் கதைதான். குறைந்த அளவு செய்து, சீக்கிரம் காலியாகிவிடும். இதற்கெனவே அங்கு காத்திருக்கும் பெரிசுகள் உண்டு.
எனக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் நல்ல தொடர்பு உண்டு.
நான் மரத்தடி காலத்திலிருந்து தங்கள் எழுத்துகளைப் படித்து வருகிறேன். வாழ்வியல் பற்றி, உங்களைச் சுற்றி நடப்பவைகள் பற்றி அதிகம் எழுதுங்களேன். பக்கம் பக்கமாக எழுதாவிட்டாலும் சுமார் 5 – 10 நிமிடங்கள் படிக்கக் கூடிய அளவில் இருந்தாலும் நல்லதே.
நெருலுக்கு அன்று டெண்டுல்கர் வந்தாரா
?
வியாழன், December 13, 2007 at 2:38 பிற்பகல்
சாம்பார்வடை, உண்மையைச் சொல்லணும்னா, நாங்க ஹோட்டல்ல சாப்பிடறதுங்கற முடிவை எடுத்தா அது திருச்சியாத்தான் இருக்கும். என்னவோ அதிகம் ஸ்ரீரங்கத்துல சாப்பிட்டதில்லை. ஊருக்குப் போனா, அதிகபட்சம் தெற்குவாசல் அல்லது வேற எங்கிருந்தோ, கீரை வடை, சமோசா, போண்டா எல்லாம் எங்கப்பா தினம் தள்ளுவண்டிக்காரங்க கிட்டேயிருந்து சுடச்சுட வாங்கிவருவாரு. அடுத்ததடவை வெங்கடேச பவன் தான். தாங்க்ஸ்.
மும்பை அவலத்தைச் சொல்லி மாளுமா? கடந்த 10 தினங்கள்ல தவிர்த்திருக்கக் கூடிய இரண்டு நெருக்கமானவர்களின் மரணத்துலேருந்து, நேத்தி, காரிலிருந்து ஐஸ்கிரீம் கப்பைத் தூக்கி ரோட்டுல எறிஞ்ச அம்மணி (அப்படியே டிஷ்யூ பேப்பர்ல தூக்கி திரும்ப பத்திரமா அவங்ககிட்டயே ஒப்படைச்சுட்டேன்னு வைங்க.) வரைக்கும்… சாப்பாட்டுப் பதிவா இருக்கறதாலயும், விஜய்ராம் மாதிரி சிலர் கேட்டுக்கறதாலயும் இந்தப் பதிவுல சோகம், கோபம் எல்லாம் இல்லாம கொண்டுபோகணும்னு பாக்கறேன். [அப்பப்ப மீறிடுது அதுவும்.
] நல்லதா இருந்தா அவசியம் சொல்றேன்.
சச்சின் வந்தாரான்னு தெரியலை. நான் மறுநாள் காலைல தான் போர்டுல பேர் பாத்தேன். பொதுவா மும்பைல சனீஸ்வரனுக்கு இதுதான் பிரபலமான கோவில். பிரபலங்கள் வர இடம்தான். நான் அந்தக் குறிப்புல சொல்ல வந்தது…,
“பாவம் சச்சினுக்கு சனிதசை போலிருக்கு!
”
))
திங்கட் கிழமை, பெப்ரவரி 18, 2008 at 9:07 பிற்பகல்
வடை பார்க்க பிரமாதமா இருக்கே ஜெயஸ்ரீ.
செய்துடலாம்.
செவ்வாய்க் கிழமை, பெப்ரவரி 19, 2008 at 11:28 மு.பகல்
ரேவதிநரசிம்மன், உண்மையா பாக்க சுமாராத்தான் இருக்கு. சாப்பிட இன்னும் சுவையா இருக்கும். செஞ்சு பாருங்க. நிறைய பச்சைமிளகாய் துண்டுகள் போடுங்க.
சனிக்கிழமை, ஆகஸ்ட் 30, 2008 at 1:13 மு.பகல்
உங்கள் சமையல் குறிப்புகள் பார்த்தேன்..நாவுக்கு ரூசியாகவும், கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் படைச்சிருக்கீங்க..
நான் இதனை கொப்பி பண்ணி நான் தினமும் எழுதும் முற்றத்தில காண்பிக்கலாமா…உங்க பெயரோடுதான்..ஆமா என்றால்..எப்படி எழுதவேண்டும் என்றதையும் குறிப்பிடுங்கள் ப்ளீஸ்..
நன்றி..ஜெயசிறீ கோவிந்தராஜன்..
ஊப்ஸ்….ஏற்கனவே உங்க பெயரை போட:ட சமையல் பதிஞ்சிருக்கிறேன் என்று நினைக்கிறேன்..