இதை ஏற்கனவே மரத்தடிக் குழுமத்தில் இட்டிருக்கிறேன். அங்கே ரசனை இல்லாதவர்களால் கண்டுகொள்ளப்படாமல் போனது. (Grrr..) பின்னர் ஜி.ராவின் பதிவில் பின்னூட்டமாக இட, கைப்புள்ளயும் ஜோசஃப் சாரும் “junk பாஷை, ஒன்றும் புரியவில்லை” என்று சொல்லிவிட்டார்கள். :(( அதனால் முடிந்தவரை புரிகிற மொழியில்….

-0-

என்னவோ எல்லோரும் நவராத்திரி என்றாலே சுண்டல் என்று தான் நினைக்கறார்கள். நிஜத்தில் ஒரு நான்கைந்து நாள்கள் தான் சுண்டல் செய்வோம். அநேகமாக முதல் நாள் ஏதாவது பழமாகத் தான் இருக்கும். ஏனென்றால் அன்று அதிகம் யாரும் வீட்டுக்கு வர மாட்டார்கள்.

ஆனால் எங்கள் பக்கத்தில் (இந்த ‘எங்கள் பக்கத்தில்’ என்பது என்னவென்று எனக்கே சரியாக define செய்யத் தெரியவில்லை. அப்புறம் சொல்கிறேன் என்று அப்போது சொல்லியிருந்ததையே இப்போதும் சொல்கிறேன்.) நவராத்திரி வெள்ளிக்கிழமை வந்தால் உக்காரை, சனிக்கிழமை எள்ளுருண்டை (அல்லது எள்ளுப் பொடி), ஞாயிற்றுக்கிழமை கோதுமை அப்பம் இப்படித்தான் செய்வார்கள்.

உக்காரை ஒரு மரபு சார்ந்த உணவு. முக்கியமாக தீபாவளிக்கும் அந்தக் காலங்களில் இதைச் செய்வார்களாம். ரொம்ப அந்தக் கால ஐட்டம். ஸ்ரீரங்கத்துலயே எனக்குத் தெரிந்து மொத்தம் ஒரு பத்து பேர் வீட்டில் கூட  செய்வார்களா என்று தெரியவில்லை. பொதுவாக எல்லோர் வீட்டிலும் அன்று அரிசிப் புட்டு தான் செய்வார்கள். நாங்கள் அதை ‘மென்னியடைச்சான் பொடி’ என்று தான் சொல்வோம். அப்படியே தொண்டையை அடைக்கும். படுமோசமாக இருக்கும். 😦

இனி உக்காரை..

தேவையான பொருள்கள்:

பயத்தம்பருப்பு – 1 கப்
கடலைப்பருப்பு – 1 கப்
உப்பு – 1 சிட்டிகை
வெல்லம் – 2 கப்
நெய் – 4 தேக்கரண்டி
மு.பருப்பு – 50கிராம்
தேங்காய்
ஏலப்பொடி.

ukkaarai 1

செய்முறை:

  • பருப்புகளை நன்கு களைந்து 4 மணிநேரம் ஊறவைத்து சிட்டிகை உப்பு சேர்த்து  முடிந்தால் கிரைண்டரில் நன்றாக- மிக நன்றாக இட்லி மாவுப் பதத்தில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மாவை இட்லித் தட்டுகளில் இட்டு, வெயிட் போடாமல் 10 நிமிடம் வேகவைத்து எடுத்து நன்கு ஆறவிடவும்.
  • இட்லிகள் நன்கு ஆறியபின், மிக்ஸியில் இரண்டு இரண்டு இட்லிகளாக உடைத்துப் போட்டு ஒரு சுற்று சுற்றினாலே பொடியாக உதிர்ந்துவிடும். இட்லிகள் நன்கு ஆறியிருக்க வேண்டியது முக்கியம். (சின்ன வயதில், மிக்ஸியில்லாத காலத்தில் நெய்யைத் தொட்டுக் கொண்டு கை விரல்களால் திரித்துத் திரித்து சிறு கட்டி கூட இல்லாமல் பாட்டி மெனக்கெட்டு உதிர்த்தது நினைவிருக்கிறது.)
  • வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து *முற்றிய பாகாகக்* காய்ச்சி ஏலப்பொடி சேர்க்கவும்.
  • பின், அடுப்பை சிம்மில் வைத்து, உதிர்த்த பொடியைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். ஒன்றாகக் கலக்கும் வரை அடுப்பு எரிந்தால் போதும்.
  • தேங்காயை மிக மிகச் சன்னமாக நறுக்கி கால் கப் எடுத்துக் கொள்ளவும்.
  • நெய்யைச் சூடாக்கி, உடைத்த முந்திரி, தேங்காய்த் துணுக்குகளைப் பொரித்துச் சேர்க்கவும்.
  • ஆறியதும் ஒரு பாத்திரத்தில் அடைத்து வைத்து ஒரு நான்கு மணி நேரம் கழித்துப் பார்த்தால் உதிர் உதிராக இருக்கும்; எடுத்து உபயோகிக்கலாம்.

ukkaarai 2

* இட்லி உதிர்ப்பதற்கு முன் நன்கு ஆறியிருக்க வேண்டும், பாகு மிக முற்றியதாக இருக்க வேண்டும் என்பதும் உதிர் உதிரான நல்ல உக்காரைக்கு மிக முக்கியம்.

ukkaarai 3

சில சாதாரணக் குறிப்புகள்:

* இந்த ‘எங்கள் பக்கத்தி’லேயே ஒரு பக்கத்தில் உக்காரைக்கு 2 பங்கு பயத்தம் பருப்பும், 1 பங்கு கடலைப் பருப்பும் போட்டு அரைக்க வேண்டும் என்று சொல்வார்கள். முழுவதுமே பயத்தம் பருப்பிலேயே கூட சிலர் செய்வார்கள். அதெல்லாம் நம் இஷ்டம்தான். பொதுவாக, கடலைப் பருப்பு அதிகம் இருந்தால், நிறைய உக்காரை காணும்; நல்ல உதிராக வரும். பயத்தம் பருப்பு அதிகம் இருந்தால் நல்ல மணமாக இருக்கும். நடுநிலைவாதிகள் பாதிப்பாதி எடுத்துக் கொள்ளலாம்.

* சாதாரண நாள்களில் செய்யும்போது, ஒரேநாளில் உக்காரைக்கு இவ்வளவு கஷ்டப்பட முடியாதென்று நினைப்பவர்கள் (உண்மையில் கஷ்டம் எதுவும் இல்லை, நேரம் அதிகம் எடுக்கும் அவ்வளவே.) இட்லிகளை முதலிலேயே செய்து ·ப்ரீசரில் வைத்துவிட்டு, தேவைப்படும் பொழுது பாகு காய்ச்சி (காய்ச்சிக் கொண்டிருக்கும்போதே இட்லிகளைப் பொடித்து) இதை பத்தே நிமிடங்களில் செய்துவிடலாம்.

சந்தோஷமான குறிப்புகள்:

* இந்த உக்காரை மூன்று நான்கு நாள்கள் வரை கெடாது. முக்கியமாக, செய்தவுடனே (பக்கி மாதிரி ) சாப்பிடுவதைவிட ஒருநாள் கழித்துச் சாப்பிட்டால் சுவை மிகுதியாக இருக்கும். (புளியோதரை மாதிரி.)

* எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது.

மிக முக்கியமான குறிப்புகள்: 🙂

* உக்காரையில் தேங்காய், முந்திரி தவிர வீட்டில் புத்தாண்டிற்கு வந்த ட்ரை ·ப்ரூட்ஸ், மிஞ்சிக் கிடக்கும் கிஸ்மிஸ் எல்லாவற்றையும் அதன் தலையில் பொரித்துக் கொட்டக் கூடாது. புனிதம் போய்விடும். 🙂

* ஏற்கனவே எப்படி நான் அக்கார அடிசிலை, சர்க்கரைப் பொங்கல் என்றோ, பாயசம் என்றோ சொல்லிக் கேவலப்படுத்தக் கூடாது என்று சொல்லியிருக்கிறேனோ அதே மாதிரி இந்த ‘உக்காரை’யை ‘புட்டு’ என்றோ, அடுத்ததாக எழுதப் போகிற சீயாளத்தை ‘டோக்ளா’ என்றோ சொல்பவர்களை பசிக்காத புலி தின்னட்டும். 🙂 உக்காரையை வழக்கு மொழியில் ஒக்கோரை என்றும் சிலர் சொல்வர்(நானும்தான்). அது பரவாயில்லை.

-0-

இல்லை, அரிசிப்புட்டுதான் உசத்தி என்று சொல்பவர்கள், உக்காரையை செய்து சாப்பிட்டுப் பார்த்துவிட்டு தகுந்த வாதங்களோடு வர வேண்டும். நான் ரெடி! 🙂

ஆனால் புட்டு தான் அப்படி(!) இருக்குமே தவிர, எங்கள் பக்கத்தில் சீமந்தம் முடிந்து மறுநாள் பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்குக் கிளம்பும்போது மாமியார், இந்தப் புட்டுடன் ‘உருண்டை’ என்ற ஒன்றை செய்து இரண்டையும் கலந்து கட்டிக்கொடுத்து மருமகளை அனுப்புவார்கள். அந்த உருண்டை நிஜமாவே அபாரமாக இருக்கும். அதுவும் அப்படித்தான், உடனே சாப்பிடக் கூடாது. புட்டில் ஊற விட்டுவிட வேண்டும். அப்புறம் ஆழ்வார்

….. என்னைத் தன் வாரமாக்கி வைத்தாய்
வைத்ததன்றி என்னுள் புகுந்தாய்….’

என்று பெருமாளைப் பாடின மாதிரி அப்படியே புட்டுடைய சிறப்புகள் உருண்டைகளுக்குள்ளும் உருண்டைகளின் சிறப்புகள் புட்டுக்குள்ளும் நுழைந்து ஆஹா.. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! என்னமோ போங்க! இப்பல்லாம் all lazy மாமியார்ஸ், இதெல்லாம் செய்யறதேயில்லை. சும்மா ஒரு மட்டைத் தேங்காயைக் கட்டி அனுப்பிடறாங்க. Very bad!

நவராத்திரி நாயகி: சமயபுரம் மாரியம்மன் – ஷைலஜா.