போகிப் பண்டிகை, பொங்கல், கனுப் பொங்கல் நாள்களில் கிட்டத்தட்ட அனைத்துவிதமான நாட்டுக் காய்கறிகள், பச்சைப் பயறுகளையும் சமையலில் உபயோகித்துவிடுவோம். இப்போது காய்கறிக் கடைகளிலேயே எல்லாவற்றையும் நறுக்கிக் கலந்து தயாராகவும் கிடைக்கிறது. ஆனால் தனித் தனியாக வாங்கிச் செய்தால் நம் விருப்பப்படி தேவையான அளவுகளில் தேவையான நீளத்தில் நறுக்கிச் செய்யலாம்.

போகிப் பண்டிகைக்கு அவியல்…

தேவையான பொருள்கள்:

அவரை, கத்தரி, கொத்தவரங்காய், பரங்கி, பூசணி, புடலை, சேனை, வாழை, தட்டங்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு……

பச்சைப் பட்டாணி, பச்சை மொச்சை, பச்சைக் காராமணி, நிலக்கடலை….

உருளைக் கிழங்கு, பீன்ஸ், கேரட், கோஸ், குடமிளகாய், முருங்கை,….(விரும்பினால் மட்டும். சிலர் நாட்டுக்காய் தவிர மற்றவை இந்த நாள்களில் சேர்ப்பதில்லை. ஆனால் பொதுவாக அவியலுக்கு இவையும் சுவை சேர்க்கும்.)

தேங்காய் –  1 (பெரிது)
பச்சை மிளகாய் – 10-12
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப் பால் – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தயிர் –  2-3 கப்
தேங்காய் எண்ணை – 1/4 கப்

aviyal 1  aviyal 2
 
செய்முறை:

  • காய்களைக் கழுவி, பெரிய அளவுத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  • கத்தரிக்காய், முருங்கையை முக்கால் பதத்திற்கு வேகவைக்கவும்.
  • மற்ற அனைத்து காய், பயிறுகளையும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நீர் சேர்க்காமல் குக்கரில் வேகவிடவும்.
  • தேங்காயைத் துருவி, பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த காய்கறிகள், அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போய், கலவை நன்றாக இறுகும்வரை கிளறவும்.
  • புளிப்பில்லாத கெட்டித் தயிராக எடுத்துக் கொள்ளவும். தயிர் கெட்டியாக இல்லாவிட்டால் மெல்லிய துணியில் அல்லது பனீர் வடிகட்டியில் வடிகட்டி ஓரளவு நீரைப் பிரித்துவிடவும்.
  • தேங்காய்ப் பால், தயிரையும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பை அணைத்துவிடவும்.
  • மீதி தேங்காயெண்ணையைச் சேர்த்து, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

aviyal

* அவியல் தயாரிக்கும்போதே தண்ணீர் சேர்க்காமல், கெட்டியான தயிரில் செய்தால், வேறு மாவு சேர்க்கத் தேவை இல்லை. திட்டமான பதத்தில் வரும். சமாளிக்க முடியாத தளர்வாக இருந்தால் மட்டுமே அரிசி மாவு கரைத்து விடலாம். இது சுவையில் கொஞ்சம் சமரசமே.

(இன்று Vashi Fine Arts தயாரித்து அளித்த “தஞ்சாவூர் Vs பாலக்காடு” என்ற நாடகம் பார்க்கச் சென்றிருந்தோம். நடந்த அடிதடிகளைப் பார்த்தால்(நாடகக் கதையில்தான்) இதில் இன்னும் சில நுண்ணிய வேறுபாடுகள் இருக்கலாம். தெரிந்துகொண்டு update செய்கிறேன். சுவையைப் பொருத்தவரை ஓஓ… நான் கொறைச்சு பாலக்காடு பக்கம் சாய்வெனாக்கும்!.)

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய், பருப்புடன் கலந்த சாதம்(கூடவே பொரித்த அப்பளமும், வடையும் இருந்தால் கலக்கலாக இருக்கும்..), அடை,….