தேவையான பொருள்கள்:

அரிசி –  1 கப்
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

  • அரிசியைக் கழுவி நீரை வடித்துக் கொள்ளவும்.

பச்சரிசி:

  • நேரடியாக அடிகனமான பாத்திரம் அல்லது வெண்கலப் பானையில் சமைப்பதாக இருந்தால் ஒன்றுக்கு மூன்று பங்கு. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அரிசியைக் களைந்து போடவேண்டும். மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்தே  சமைக்க வேண்டும். சாதம் நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து மிகுந்திருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு மூடிவைத்தால் 10 நிமிடத்தில் சாதம் மிகச் சரியான பதத்தில் பரிமாறலாம். வடித்த தண்ணீர் ஆறியதும் கஞ்சியாகி இருக்கும். இது மிகவும் சத்தானது. வீட்டில் இருக்கும் கைக்குழந்தை, சிறுகுழந்தைகளுக்கு அதனோடு பால் சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம். பெரியவர்கள் உப்பு மோர் கலந்தும் குடிக்கலாம். தலைக்குக் குளிக்கையில் கடைசி அலசலுக்குமுன் உபயோகித்தால் முடிக்கு ஆரோக்கியமும் அழகும் கொடுக்கும். காட்டன் துணிகளுக்கு ஸ்டார்ச் போட உபயோகிக்கலாம்…..
  • சாதம் வேகவைத்த தண்ணீரை வடிப்பதால் பொதுவாக அதில் இருக்கும் சர்க்கரைச் சத்து குறையும் என்பதால் நல்லதுதான் என்றாலும் அதே நேரத்தில் அரிசியின் மற்ற சத்துகளையும் இவர்கள் இழப்பார்கள் என்பதால் இங்கும் அளவாகத் தண்ணீர் வைத்து 90 சதத்திற்கு மேல் வெந்ததும், அடுப்பை அணைத்து பாத்திரத்தை மூடிவைத்துவிட்டால், இருக்கும் சூட்டிலேயே மிச்சமும் வெந்து, சாதம் குழையாமல் நன்றாக வெந்தும் இருக்கும். சத்தும் வீணாகாது.
  • ப்ரஷர் குக்கராக இருந்தால் ஒன்றுக்கு இரண்டரை பங்கு தண்ணீர் சரியாக இருக்கும். ஃப்ரைட் ரைஸ் செய்ய ஒன்றுக்கு இரண்டு பங்கு தண்ணீரும், தயிர்சாதம், சர்க்கரைப் பொங்கல் போன்ற குழைவான சாதத்திற்கு ஒன்றுக்கு 3 பங்கு தண்ணீரும் (அல்லது அதற்குமேலும் கூட) வைக்கலாம்.
  • ரைஸ் குக்கராக இருந்தால் ஒன்றுக்கு இரண்டு பங்கும் தண்ணீர் தேவைப்படும். ரைஸ் குக்கரில் வைக்கும்போது சீக்கிரம் Keep Warm modeற்குச் சென்றுவிடும் என்பதால் அரிசியை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்துவிட்டு பின்னர் வேகவைத்தால் சரியான பதத்தில் வெந்திருக்கும். அப்படியும் ஊறவைக்க மறந்திருந்தால், கவலைவேண்டாம். வெந்தபின் Keep Warm modeல் சிறிது அதிக நேரம் வைத்துவிடவும்.

பாஸ்மதி ரைஸ்: 

  • பொதுவாக ஒன்றுக்கு இரண்டு பங்கு தண்ணீர் வைக்கலாம். விருந்துக்கு அல்லது ஃப்ரைட் ரைஸ் செய்ய ஒன்றுக்கு ஒன்றரைப் பங்கு தண்ணீரே சரியாக இருக்கும். பாஸ்மதி சாதம் உடையாமல் இருக்க சமைப்பதற்கு முன் அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும் என்று பாக்கெட் உறையில் ஆலோசனை சொல்லியிருப்பார்கள். உண்மைதான் என்றாலும் ப்ரஷர் குக்கரில் சமைக்கவோ, ரைஸ் குக்கரிலேயே அதிக அளவு(பார்ட்டிகளுக்கு) சமைக்கவோ, அப்படிச் செய்யத் தேவை இல்லை. நேரடியாக சமைத்ததில் எனக்கு இதுவரை பிரச்சினை எதுவும் வந்ததில்லை. ரைஸ் குக்கரில் சிறிய அளவாக சமைக்கும்போது மட்டுமே நீள அரிசியில் உள்பகுதி சற்று வேகாமல் இருந்துவிடலாம். ஏற்கனவே சொன்ன மாதிரி, ஊறவைக்க மறந்திருந்தால் அல்லது நேரமில்லாவிடில், 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் அதிகம் வைத்து Keep Warm modeற்கு வந்தபின், மேலும் இரண்டு டேபிள்ஸ்பூன் சூடான தண்ணீர் சேர்த்து அதே moodiல் மேலும் 10 நிமிடங்கள் வைத்திருந்தால் உள்வரை ஒரே மாதிரி வெந்திருக்கும்.

* எந்த அரிசிக்கும் முக்கியமாக புதுஅரிசிக்கு நல்லெண்ணை, சிறிது நெய் அல்லது வெண்ணை ஏதாவது ஒன்று சேர்த்து வடித்தால் சாதம் ஒட்டாமல் இருக்கும்.

* சிறிது உப்பு சேர்த்து சமைப்பதால் எந்தவகை சாதத்திற்கும் சுவை கூடுகிறது. பார்ட்டிகளுக்கு சமைக்கும்போது அவசியம் உப்பு சேர்த்தே சமைக்க வேண்டும். நாம் செய்யும் பல சொதப்பல்களை அது மறைக்கும். 🙂

* சாதம் வடித்த கஞ்சி, எலும்புக் குருத்துகளுக்கு வலு சேர்க்கும். மூட்டு உராய்வைக் குறைப்பதில் ஜெலாட்டினுக்கு நிகரானது. கண்களுக்கு ஒளியூட்டும். தேக உஷ்ணத்தைக் குறைக்கும்.

இங்கு கொடுத்திருப்பவை எல்லாம் பொதுவான ஒரு அளவுதானே தவிர, உண்மையில் அரிசியின் தன்மை, புதிய அரிசியா, பழைய அரிசியா போன்ற காரணிகளால் இவை வேறுபடும். ஒவ்வொரு முறை கடைக்காரர் வழமையான அரிசியை மாற்றும்போதும் முதல்நாள் தடுமாறுவது நடந்தே வருகிறது. எனவே இதற்கு அனுபவமே சிறந்த வழி. கடைசியில் இதைச் சொல்லத்தான் இவ்வளவு பில்டப்பா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. 🙂