idlidosai-milagaai-podi.JPG

தேவையான பொருள்கள்:

காய்ந்த மிளகாய் – 200 கிராம்
உளுத்தம் பருப்பு(தோல் நீக்கியது) – 1 கப்
கடலைப் பருப்பு – 1 கப்
எள் –  1 கப்*
பெருங்காயம் – 2 டீஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு (விரும்பினால்)
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் எண்ணை விடாமல் எள், பருப்புகளைத் தனித்தனியாக வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்த மிளகாய், புளியை வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்த பொருள்களுடன் உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, சுத்தமான பாட்டிலில் எடுத்து வைக்கவும்.

* வெள்ளை எள் அல்லது கருப்பு எள், எதுவேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கருப்பு எள் உபயோகிக்கும் போது பொடி, வாசனை மிகுதியாகவும் ஆனால் நிறம் சற்றே கருத்ததாகவும் இருக்கும். வெள்ளை எள், நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

* இட்லி மிளகாய்ப் பொடி மட்டும் கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே செய்வது தனிச் சுவையாக இருக்கும். சிக்கனமானதும் கூட.

* மிளகாய் வறுக்கும்போது வீட்டில் நெடி இருக்கும் என்று பயப்படுபவர்கள், மிளகாயோடு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வறுத்தால் சுத்தமாக கார நெடி வராது. பின்னால் சேர்க்கும் உப்பில் இந்த சிட்டிகையைக் குறைத்துக் கொள்ளலாம்.

* இந்த முறை ஒரு பிடி கருப்பு உளுத்தம் பருப்பும்(தோலுடன்) வறுத்துச் சேர்த்து அரைத்தேன். மிகுந்த சுவையாக இருக்கிறது. அவசியம் முயற்சிக்கவும்.

* குழந்தைகளும் உபயோகிக்கும் வீட்டில் பருப்பின் அளவைக் கூட்டி, காரம் குறைத்துச் செய்யலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இட்லி, தோசை, அடை….