தேவையான பொருள்கள்:

தக்காளி – 4 (பெரியது)
பச்சை மிளகாய் – 2, 3
இஞ்சி – சிறு துண்டு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
ரசப் பொடி – 1/2 டீஸ்பூன்
பருப்பு வேகவைத்த நீர் – 2 கப்
தேங்காய்ப் பால் – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
கொத்தமல்லித் தழை
எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க: நெய் (எண்ணெய்), கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

elumichchai rasam

செய்முறை:

  • துவரம் பருப்பு வேகவைத்த நீர் இரண்டு கப் எடுத்துவைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து தக்காளிகளை முழுதாகப் போட்டு, 5 நிமிடங்களுக்கு மூடிவைக்கவும்.
  • தக்காளிகளை மேல்தோலை நீக்கி, அந்தத் தண்ணீரிலேயே கையால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
  • மேலும் ஒரு கப் தண்ணீர், துண்டாக நறுக்கிய(அல்லது நசுக்கிய) இஞ்சி, குறுக்கே கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து அடுப்பில் கொதிக்கவைக்கவும்.
  • தக்காளி பச்சை வாசனை போனதும் ரசப் பொடி சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் மட்டும் கொதிக்கவைத்து பருப்பு நீரையும் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  • ரசம் நுரைக்கக் கொதித்து, பொங்கி மேலே வரும்போது கெட்டியான தேங்காய்ப் பால் சேர்த்து, அடுப்பை அணைக்கவும்.
  • கொத்தமல்லித் தழை சேர்த்து, நெய் அல்லது எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். .
  • பரிமாறும் நேரம் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

* இந்த ரசம் வண்டல் இல்லாமல் அடிவரை கலந்து பரிமாறலாம். வீணாக்காமல் முழுமையாக உபயோகிக்கலாம்.

* பச்சை மிளகாய், எலுமிச்சை, பருப்பு நீரின் மணம் அதிகமாக இருந்தால் சுவைக்கும். நன்கு வேகவைத்த துவரம்பருப்பையும் சிறிது எடுத்து, நன்றாக மசித்து, கொதிக்கும் ரசத்தில் கலந்துகொள்ளலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இந்த ரசம் சாதத்திற்கு, சாதா கறி வகைகள், அப்பளம், வடாம் தவிர உருளை, வாழை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற ஏதாவது ஒன்றில் செய்த பொடிமாஸ் அல்லது ரோஸ்ட் கறி வகைகள் நன்றாக இருக்கும்.