எத்தனைபேருக்கு Google Knol குறித்துத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை என்றாலும் இத்தனை நாள் கழித்தாவது அதுகுறித்துச் சொல்லவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

கூகிள் எத்தனையோ புதிது புதிதாக அறிமுகப்படுத்தினாலும், மாநில மொழிகளைத் தட்ட ஒன்றை அறிமுகப்படுத்தும்போது அது சமையல்குறிப்புப் போட்டியைத் தேர்ந்தெடுத்ததுதான் என்னையும் திரும்பிப்பார்க்கவைத்தது என்று சொன்னால் அது மிகையான பொய். அப்படி ஒரு நிகழ்வையே எனக்கு அறிமுகப்படுத்திய பெருமை பிரகாஷைச் சேரும். வழமைபோலவே ஒருமுறை திறந்துபார்த்து இதெல்லாம் போரடிக்கும்வேலை என்று ஒதுக்கிவிட்டாலும் சஞ்சவ் கபூர் என்ற பெயர் கொஞ்சம் உறுத்திக்கொண்டே இருந்ததும் உண்மை.

திடீரென்று 19-ஆம் தேதி மாலை ஞானோதயம் வந்து (மாதக் கடைசிநாளான 30-ஆம் தேதி தான் பொதுவாக போட்டிகள் முடியும் என்ற பொதுப்புத்தியில்) இன்னும் 10 நாளைக்குள் ஏதாவது தட்டி அனுப்பிவைக்கலாம் என்று திறந்துபார்த்தால் 20-ஆம் தேதியே கடைசி. :(( இன்னும் ஒரு நாளைக்குள் ஏதாவது செய்யலாம் என்று நினைக்கமுடியாதவாறு அன்று மும்பையில் பாலமுரளிகிருஷ்ணா கச்சேரி. சஞ்சீவ் கபூரை பாமுகி வென்றார்.

மறுநாள் கச்சேரி hangover முடிந்து பெட்டி திறக்கும்போது பத்துமணிநேரத்துக்குள் எதுவும் செய்யக்கூடுமாறு உடலும் மூளையும் ஒத்துழைக்கவில்லை. தடக்கென்று ஒரு யோசனை. என் புகைப்படங்கள் கோப்பை திறந்து பல நாள்களாக எழுதவேண்டும் என்று எடுத்துவைத்து, எழுதாமலே விட்டுப்போயிருந்த காமாசோமா ஐட்டங்களை எல்லாம்– google knol பக்கமே தமிழில் தட்டத்தான் என்றாலும் (நமக்கெதற்கு அதெல்லாம்?)– கலப்பையில் தட்டித் தட்டி வெட்டி ஒட்டித் தள்ளினேன். படம் எடுக்காமல் வெறுமே குறிப்பு மட்டுமே தட்டி வைத்திருந்தவைகளையும் சேர்த்துக்கொண்டேன். ஒரு போட்டி என்று தெரிந்தும் மிகச் சாதாரணமான குறிப்புகளை அனுப்பி ஜட்ஜை கேவலப்படுத்துவதற்காக ஒரு மானசீக மன்னிப்பும், “ஆமா, இதெல்லாம் அவங்க இங்லீஷ்லயோ ஹிந்திலயோ ட்ரான்ஸ்லேட் பண்ணி படிச்சா பார்க்கப் போறாங்க? வேற யாராவது இதெல்லாம் தேர்ந்தெடுப்பாங்களா இருக்கும்,” என்று மனதுக்குச் சமாதானமும் சொல்லிகொண்டேன்.

கூகிளிடமிருந்து, போட்டியில் பங்கேற்றதற்காக நான் மேற்கொண்ட சிரமங்களுக்கு (பின்ன?) பாராட்டும் நன்றியும், எனக்குப் பரிசு கிடைக்காததற்கு வருத்தமும்(ஓ!) தெரிவித்த உணர்ச்சிக்கலவையான கடிதக் காவியம் கிடைத்தது. பரிசுகிடைத்த குறிப்பை நான் செய்துபார்த்தே தீரவேண்டும் என்று ஓடோடிப் போய் பார்த்ததில் அது ‘மதுரை கோழி சூப்’. ஆஹா, தோற்றது நாமானாலும் ஜெயித்தது நமது மதுரை மண் என்று புளகித்துப் போனேன். அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே வீட்டில் மறைத்தும் மறந்தும் சந்தோஷமாக இருந்துவந்தேன். அப்படியே இருந்திருந்தால் எல்லாம் நன்றாக இருந்திருக்கும்.

ஒரு நல்லநாளில், குடும்பமே விடுமுறையை அனுபவித்து குஷியாக கும்மாளமிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளில் ஒன்றாக என் ஒரு குறிப்பும் (அது எது என்று கடைசிவரை கூகிள் சொல்லவில்லை.) இருப்பதாகச் சொல்லி ஒரு டீஷர்ட்டை பார்சல் அனுப்பிவைத்திருந்தார்கள். பரிசே கிடைக்காததைவிட கொடிது ஆறுதல் பரிசு பெறுவது என்பது என் சித்தாந்தமானாலும் அன்றுதான் அதன் பலனை நேரில் கண்டு நொந்தேன். அதுவரை சஞ்சீவ் கபூர் என்ற பெயர் ஆகாத ஒன்றாக இருந்ததுமாறி கோவிந்துக்கு அந்தப் பெயர் ஒரு புத்திசாலியினுடையதாகவும், எதையும் சரியாக எடைபோடத் தெரிந்தவருடையதாகவும் போனதில் வியப்பெதுவுமில்லை.

ஆனால் நானே அதையெல்லாம் புறக்கணித்து, என் தோல்வியை(மட்டும்) பிரகாஷுக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு, இந்த டீஷர்ட்டை எந்தப் பேண்டுக்கு மேட்ச் ஃபிக்சிங் செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்ததை, தோல்விக்கான வருத்தமான போஸ் என்று நினைத்து, வழமையாக இதுபோன்ற தருணங்களில் அப்பாவுடன் சேர்ந்து கன்னாபின்னாவென்று காலைவாரும் பெண், “நீ தோக்கலைம்மா.., உன் ரெசிப்ப்பி தோத்துப் போச்சு!…” என்று என்னைத் தேற்றி ஆற்றுப்படுத்தியதற்கும், அடுத்தநிமிடமே நான் நிமிர்ந்துபார்த்தபோது அந்த டீஷர்ட் அவளுடைய வார்ட்ரோபிற்குள் போய்விட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இன்னமும் என்னால் நம்பமுடியவில்லை.

அடுத்த பத்துநாளில் என் மெயில்பெட்டிக்கு ஒரு செய்தி. “உங்கள் குறிப்புகள் பத்தாயிரத்துக்குமேல் பார்வையிடப்பட்டு இருக்கிறது. நீங்கள் எந்த மொழியில் எழுதுகிறீர்கள்?” என்று மொழியே தெரியாதவரிடமிருந்து ஒரே ஒரு மறுமொழி. “அடக்கொடுமையே இன்னுமா இந்தச் சமுதாயம் சமையல்குறிப்பு படிச்சு சீரழிஞ்சுகிட்டிருக்கு?!” என்று பெரிய இலக்கியவாதி, முற்போக்கு மாதிரி விசனப்பட்டுத் திறந்துபார்த்தால் எல்லாப் பதிவுகளும் 200, 300 என்று வட்டமான எண்களையே ஹிட் எண்ணிக்கையாகக் காண்பித்தன. மொத்தம் 11 ஆயிரத்துச் சொச்சம் ஹிட் என்று சாத்தியமில்லாத ஒன்றைக் காட்டிக்கொண்டிருந்தது. [சமையல் குறிப்பை அடியோடு வெறுத்த (சுஜாதா)சாரிடம் ஐயங்கார் புளியோதரைக்கு 10000 ஹிட் ஆனதும் சொல்லிக் கடுப்படிக்க நினைத்தேன். நடக்கவில்லை. :(( அன்றாடம் உச்சத்திலேயே இருக்கும் ஐயங்கார் புளியோதரையின் ஹிட்டே இந்த 3 வருடங்களில் 17 ஆயிரத்துச் சொச்சத்தில்தான் இருக்கிறது என்ற முரணையும் சொல்லவேண்டியிருக்கிறது.) இதுகுறித்து பலமுறை நினைத்தும் எழுதமுடியாமல் போய்விட்டது.

அது ஆயிற்று கிட்டத்தட்ட 10 மாதங்கள். இன்று ஒருவர் ‘திரளி அடை’ குறித்துத் தேடி என் வலைப்பதிவை வந்தடைந்த மறுமொழி கேட்டு நானே நினைவுவந்து அங்கே போய்ப் பார்த்தால் மொத்த ஹிட் 72016 என்றும் தனிப்பட்ட முறையில் பதிவுகளுக்கான ஹிட் எல்லாம் 1000, 2000, 3000… என்று போகிறது. ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் மாதிரி கூகிளைத் தெரிஞ்சுகிட்டேன்.

நீதி: அலட்டிக்கொள்ளாமல் ஹிட் அதிகம் காட்ட, அணுகவேண்டிய முகவரி, Google Knol.

பி.கு: ஊருக்குப் போய்விட்டு வந்தபின் என் அந்தச் சமையல் குறிப்புகளை இங்கே போடுவேன்.