இவர் நம்மாளு உக்காரையின் உடன்பிறந்த சகோதரர் தான். உப்பில் செய்வது. இவர் சுவையில் இனிப்பையே மிஞ்சுவார். ஒரே நாளில் இரண்டையும் செய்வது சுலபமாக இருக்கும்.

தேவையான பொருள்கள்:

பயத்தம்பருப்பு – 2 கப்
கடலைப்பருப்பு – 1/2 கப்
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்

வறுத்துப் பொடிக்க:
தனியா – 2 டேபுள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
க.பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்
உ.பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்
 

தாளிக்க: கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை
 

seeyaalam 1seeyaalam 2

செய்முறை:

  • பருப்புகளை நன்கு களைந்து 4 மணிநேரம் ஊறவைத்து சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக- மிக நன்றாக இட்லிமாவுப் பதத்தில் முடிந்தால் கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மாவை இட்லித் தட்டுகளில் இட்டு வெயிட் போடாமல் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
  • வேகவைத்த இட்லிகளை சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணையைச் சூடாக்கி, மிளகாய், தனியா, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு இவற்றை சிவக்க வறுத்து நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, புளியை சற்று நீர்க்கக் கரைத்துவிட்டு, உப்பைப் போடவும்.
  • புளித்தண்ணீர் நன்றாகக் கொதித்தவுடன் இட்லித்துண்டுகளைப் போட்டு நன்றாகக் கிளறவும்.
  • தண்ணீர் நன்றாக வற்றியபின்(அநேகமாக இட்லித் துண்டுகள் நீரை உறிஞ்சிவிடும்.) அரைத்துவைத்துள்ள மசாலாப் பொடியைப் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

seeyaalam 3

* சூடாகச் சாப்பிடவே சுவையாக இருக்கும். ஆனாலும் இந்தச் சீயாளம் மூன்று நான்கு நாள்கள் வரை கெடாது.

* இந்த ‘எங்கள் பக்கத்தி’லேயே ஒரு பக்கத்தில் சீயாளத்துக்கு 1 பங்கு பயத்தம் பருப்பும், 1 பங்கு கடலைப் பருப்பும் போட்டு அரைக்க வேண்டும் என்று சொல்வார்கள். முழுவதுமே பயத்தம் பருப்பிலேயே கூட சிலர் செய்வார்கள். அதெல்லாம் நம் இஷ்டம்தான். பொதுவாக, கடலைப் பருப்பு அதிகம் இருந்தால், நிறைய சீயாளம் காணும். பயத்தம் பருப்பு அதிகம் இருந்தால் நல்ல மணமாக இருக்கும். உள்ளே மெத்தென்று குழலோடி இருக்கும். நடுநிலைவாதிகள் பாதிப் பாதி எடுத்துக் கொள்ளலாம். நான் மேலே சொல்லியிருக்கும் அளவிலேயே செய்வேன்.

* சாதாரண நாள்களில் செய்யும்போது, ஒரேநாளில் சீயாளத்துக்கு இவ்வளவு கஷ்டப்பட முடியாதென்று நினைப்பவர்கள் (உண்மையில் கஷ்டம் எதுவும் இல்லை, நேரம் அதிகம் எடுக்கும் அவ்வளவே.) இட்லிகளை முதலிலேயே செய்து ·ப்ரீசரில் வைத்து, மசாலாப் பொடியும் முதலிலேயே அரைத்துவைத்துக் கொண்டால் தேவைப்படும் பொழுது எடுத்து மைக்ரோவேவ் அவனில் சூடாக்கி, துண்டுகளாக்கி பத்தே நிமிடங்களில் செய்துவிடலாம்.

நவராத்திரி சிறப்புக் கட்டுரை: சிங்கப்பூரில் ஆலயங்கள் – ஜெயந்தி சங்கர்.