sim4.jpg

காதல் நெருப்பின் நடனம்..
உயிரை உருக்கி தொலையும் பயணம்

காதல் நீரின் சலனம்..
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

காதல் மாய உலகம்..
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்..
 

இந்தக் காதல் எனக்குப் புரிவதில்லை. 🙂 ஆனால் சமீபத்தியப் பாடல்களில் பாடல், இசை, படமாக்கம், புதிய குரல்கள், முக்கியமாக பாவனா என்று பலவிஷயங்களால் இந்தப் பாடல் கொஞ்சம் திரும்பிப் பார்க்கவும் திரும்பத் திரும்ப முணுமுணுக்கவும் வைப்பதும் உண்மை. இன்று ஏனோ ப்ரியாவைப் பற்றியும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

ப்ரியா– மரத்தடியின் உபதலைவி என்ற பதவி வகித்திருக்கிறார் என்றாலும் “காதல் பிசாசு” என்றே அறியப்படுபவர். அவர் கவிதை தட்டக் கணினியைத் தொடும்நொடியிலேயே, மரத்தடியில் கைத்தட்டவும் விசிலடிக்கவும் ஆரம்பித்திருக்கிறது ஒரு கூட்டம். 🙂

உபதலைவி பிரியா உம் பாட்டு – இந்த
உலகமெல்லாம் மகிழுதம்மா கேட்டு
மரத்தடில ஒந்தெறமக் காட்டு
தங்காச்சி பாட்டு – பசங்க
பிகிலு வுட்டாப் போட்டுடுவேன் பூட்டு
நண்டுப்புடி போட்டு!

என்று இவருக்காக கானா எடுத்துவிட்டு தைரியம் கொடுத்திருக்கிறார் ஆசாத் அண்ணன்.

ப்ரியாவின் உற்சாக பதில் கானாதான் முதன்முதலில் நான் படித்த இவரது முதல் கடிதம்.

மரத்தடில கூடுது பார் கூட்டம் – இங்க
மணிக்கணக்கா தமிழுக்காவ நாட்டம்
மனசுக்குள்ள போட்டு வச்சோம் தோட்டம்
நண்பர் மலர்த் தோட்டம்
நம்ம எழுத்துக்கில்ல என்னக்குமே வாட்டம்
இனிமே வாட்டம்!

சரி, கானா எல்லாம் எழுதுபவர் போலிருக்கிறது என்றுதான் முதலில் நினைத்தேன். சந்தம், மெட்டு, தத்தகாரம்- எப்படியும் அழையுங்கள்- இவைகளுக்குக் கட்டுப்பட்டு எழுதுவதெல்லாம் இவருக்கு தண்ணி பட்ட பாடு என்று பிறகுதான் தெரிந்தது. வார்த்தைகள் உணர்வுகளுக்காகவோ, உணர்வுகள் வார்த்தைகளுக்காகவோ சமரசம் செய்து கொண்டதே இல்லை. அப்படியே அடித்துச் செதுக்கியது போல் கவிதைகள் வரும்.

இவரது கவிதைகள் இன்று பேசப்படுகிற பெண்ணியம் என்கிற கட்டுப்பாடுகளுக்குள் எல்லாம் அடங்காத, ஈகோவை எல்லாம் துடைத்துப் போட்ட முழுச் சரணாகதிதான்.

sim2.jpg

ஒரு காதலர் தினத்திற்காக எழுதிய வெண்பாக்கள்… 

புல்லின் பனித்துளியாய்ப் படரும் நுதற்றுளிகள்
நில்லா துருளுமடா நின்றன் நெடுமார்பில்
வெல்லத் திறமுமற்றேன் வெட்கச் சமரிதிலே
மெல்லத் திரும்பியெனை மெல்.

கவிஞர் தாமரைக்கெல்லாம் கொஞ்சமும் குறைவில்லாத அல்லது என்னைப் பொருத்த வரை, வாய்ப்புக் கிடைத்தால் அவரைவிடவே சிறக்கக் கூடிய கவிதாயினி என்பது என் எண்ணம். எதுவுமே எழுதாமல் சும்மா நாளைக் கடத்தியவரை சாட்’டில் கடிந்துகொண்ட ஹரியண்ணா (ஹரிகிருஷ்ணன்), ‘சோம்பேறிப் பெண்ணே சொடுக்கு!’ என்ற ஈற்றடிக்கு வெண்பா எழுதிவரச் சொன்னார். என்னிடம், ‘”சோம்பேறி’க்குச் சரியான எதுகை கிடைப்பது கடினம், பாவம் ப்ரியா, பார்க்கலாம் என்ன செய்றான்னு” என்றும் சொல்லிவைத்திருந்தார். எனக்கு நம்பிக்கை இருந்தது. 🙂

sim141.jpg

நேற்றும் நினைத்திருந்தேன் நாளை முடித்திடுவேன்
ஆற்றாக் கருமங்கள் என்பவளே – காற்றிலையேல்
காம்பேறிப் பூத்துவிடக் கண்சுணங்கு மோமலர்கள்
சோம்பேறிப் பெண்ணே சொடுக்கு.

முற்றெதுகை.:) அதுதான் ப்ரியா.

[இதற்கு சற்றும் சளைக்காத எதுகையோடு ஆசாத் அண்ணனும் அப்போது எழுதியிருந்தார்.

அச்சுதன் தாள்போற்றி அஞ்சாமற் சொல்லெடுத்து
மெச்சும் கவிவீணை மீட்டிடுநீ – நச்சுமிழும்
பாம்பேறி நின்ற பரந்தாமன் பார்த்திருப்பான்;
சோம்பேறிப் பெண்ணே சொடுக்கு!
]

sim5.jpg

ஒரு சராசரிப் பெண் தாய்வீட்டில் வாழ்ந்த வாழ்க்கையை, அதன்மேல் வைக்கும் காதலை மெல்லிய நினைவுக்கூட்டலாய்ச் சொல்ல நினைத்து நம்மையும் நம் அப்பா அம்மாவின் மடி வரை அழைத்துப் போய்ச் சிணுங்குகிறார்.. 

பன்னிரண்டாம் வகுப்பினிலே தேறாமல் போயிருந்தால்
வடிப்பதற்குப் பதில் வாழ்ந்திருக்கலாம் கவிதையை!

சமையல் குறிப்பு வலைப்பதிவு என்பதால் அதற்குத் தகுந்த மாதிரி உவமை சொல்லலாம். நம்ப ‘ஆச்சி மசாலா’ சண்டே சமையல் மாதிரி, ஃபைவ் ஸ்டார் சமையல், கிராமத்துச் சமையல், ஆரோக்யச் சமையல், மைக்ரோவேவ் சமையல் வரை, எல்லா விதக் காதல் கவிதைகளும் இவரே அநாயாசமாக எழுதியிருக்கிறார் என்றால் நம்புவீர்களா? அதனால் கீழே..

 #
சென்மத்துக்கும் ஆசயய்யா…

sim3.jpg

சல்பேட்டா காச்சகொள்ளோ சலசலன்னு சிலுக்குதுய்யா
கல்கோனா முட்டாயாட்டம் கண்ணு ரெண்டும் மினுக்குதுய்யா
என்னாத்துக்கோ ஏம் மன்ஸு எனங்கெட்டு எளகுதுய்யா
சொன்னா கூடோ பிரியாத சொகம்மா வலிக்குதுய்யா!

பேட்டக்கெல்லா பேதி தர்ர பேமானியா இர்ந்த என்ன
சேட்டயெல்லா காட்டாமேயே சொக்க வச்சிப் பாக்குறய்யா
நெத நெதமும் நெகுந்து போயி நெஞ்சுக்குள்ள குளுந்து போயி
கத கதயா கனவுக்குள்ள கலரு படம் காட்டுறய்யா!

வெத வெதமா சீல கட்டி வெக்கம் மட்டும் ஓரங்கட்டி
கதவடச்சிக் கதபேச கெனாக்காண வக்கிறய்யா!
“கய்தே ஏங்கண்ணம்மா காப்பித் தண்ணி கொண்டாம்மே!”
காதுக்குள்ளோ கேக்க ஒரு தேதி பாத்து சொல்லுய்யா!
மெய்யாலும் சொல்லிப்போட்டேன் மாமா நீ கேட்டுப்புடு
பொய்யி இல்ல பொட்டப்புள்ள லவ்வு மட்டும் பாத்துக்கிடு!

ஒனக்காவ ஒல கொதிக்க ஒம்புள்ள மடியிருக்க
மாமா ஒம் மன்ஸுக்குள்ளோ மணக்க வச்ச மீன்கொயம்பா
சோக்கா நா குடியிருக்க சென்மத்துக்கும் ஆசயய்யா!!
 

#
அன்பான, வெற்றிபெற்ற காதல் வாழ்க்கையைப் பதிவு செய்யும் ஆர்ப்பட்டமில்லாத அமைதியான நடையில் ஒரு முயற்சி..

sim6.jpg

தத்தளித்துப் போராடும் தாவிப் பறந்தோடும்
தத்தைமொழி தோற்றுவிடத் தீந்தமிழில் தேடியுனை
நத்தும் மனக்கதவம் தட்டித் திறவாயோ
தத்தம் உனக்கே உயிர்.

#
நகரத்து நடுத்தரவர்க்கப் பெண்ணின் சராசரி வாழ்க்கையில் காதலை உணரும் தருணத்தைக் கண்முன் கொண்டுவரும் முத்தக் கவிதை

sim7.jpg

ஒருநூறு தோழமை நம்
உடனிருந்து உரையாட
அவரெவரும் அறியாமல்
அணைகடக்கும் அனல் முத்தம்!

இடை குறுக்கிக் காலடக்கி
மணவறையில் அமர்கையிலே
செவிமடலில் நீ சுவைத்த
சின்னதொரு சுக முத்தம்!!

#
எப்போ வருவீக?
[சும்மா பறவை முனியம்மா ரேஞ்சுக்கு… :)]

sim13.jpg

மஞ்சக் குளிக்கையிலும் மாராப்பு இழுக்கையிலும்
மார் மேல வெரல் படவும் மருகுனேன் எதுக்காக
மாமா நீ தீண்டுமுன்ன மருதமல்லி தொட்டாலும்
மாஞ்சுருவேன் மனமொடஞ்சி தெரியாதோ மன்னவனே!

கம்மா வறண்டதுபோல் கண்ணும் வறண்டுருச்சி
சும்மா இருக்குறதும் சொணமுள்ளப் போலாச்சி
அம்மா பொலம்புறா “பாதகத்தி படுபாவி
எம்மா நாளுடி நீ ஏங்கி வளிபாப்ப?”

நாளா பொழுதா நா நஞ்சித்தா நூலானேன்
தாளாமத் தாந்தெனமும் தகவலுக்கு ஏங்கி நின்னேன்
பாளாப் போன இந்த நாயித்துக் கெளமையில
ஆலாப் பறந்து நின்னேன் அரச் சொல்லு கடுதாசிக்கி

செவ்வாக் கெளமையில சேதி சொல்ல வந்துருவிய
புதங் கெளமைக்கித்தான் புதுச் சேல தந்துருவிய
வியாளக் கெளமயில வெரசாக் கைபுடிச்சு
வெள்ளிக் கெளமைக்கு வெக்கத்தத் தொரத்துவிய

சத்தம் போடாம அத்தக்கித் தெரியாம
சனிக் கெளமைக்கு சந்தைக்குக் கூட்டிப்போயி
முத்து வளவியும் மூணு மொளம் முல்லப் பூவும்
மீசக்குள்ள சிரிச்சிக்கிட்டே முளுசாத் தருவீக

வாரம் முச்சூடும் வளிமறந்து தொலச்சிப் புட்டு
வேதனையில் வெளக்கேத்திப் பொழுத ஓட்டிப் புட்டேன்
வேதனயத் தெரியுமா வெட்டிப் பய வாரத்துக்கு
வந்துருச்சு மறுபடியும் நாயித்துக் கெளமை மட்டும்!

[மேற்படி ‘எப்போ வருவீக?!” கவிதைக்கு ‘வெரசா வந்துடுவேன்’ என்று எசப்பாட்டு படித்தவர் மரத்தடி ஓனர் குமரேசன்.

வளிபாக்கும் ராசாத்தி மனசொடிஞ்சி போகாத
ஆத்தா பொலம்புறா’ன்னு தெனந்தோறும் வேகாத
வெரசா நான் வந்துடுவேன், வேதனையத் தீர்த்துடுவேன்
உம்மடிமேல படுத்து மீசைக்குள்ள தான் சிரிப்பேன்..

மார்மேல படுத்ததை நெனச்சி ராவெல்லாம் போயாச்சி
மறுபடியும் எப்ப நடக்குமின்னு மனசெல்லாம் கனவாச்சி..
இந்த ஏக்கம் சீக்கிரமா தீர்ந்திடுமே-வெட்டி பய
வாரம் முழுசும் வெள்ளிக்கெழமையா ஆயிடுமே..

எல்லாக் கிழமைகளையும் கவிதாயினி குறிப்பிட்டாலும் கவிஞர் வசதியாக வெட்கம் தொலைத்த வெள்ளிக்கிழமையை மட்டுமே வாரம் முழுவதும் வேண்டுமென்கிற குசும்பை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை. அதுசரி! ஆனால் அன்னார் 29 ஜனவரி 2007 அன்று தான் திருமணம் செய்திருக்கிறார். [இவ்வளவு வெரசாவா?:)))] வாழ்த்துகள் கும்ஸ்!]

#
பற்றிக் கொள்ளவேணும்
 
புதுக்கவிதையில்

sim8.jpg

மிகநீண்ட பொருளற்ற ஊடல்களின் முத்தாய்ப்பாய்
கோபங்கூத்தாடக் குரல் கமறும் போதுகளிலும்
கருவங்குறையாமலே
காதலையமிழ்த்தித் தேய்ந்து மறையும்
நலவிசாரிப்புகள்

ப்ரியா மரத்தடி தாண்டி அறியப்படவில்லை அல்லது மரத்தடியிலேயே கூட புதிதாக வந்த பலர் அறியாதவராகவும், தொடர்ந்து எழுதாதவராகவும் இருப்பதில் எனக்கு அதிக வருத்தம்.

கடைசியாக, புதுக்கவிதையில் கழிவிரக்கமா இல்லையா என்று இனம்பிரிக்க முடியாத யதார்த்தக் கவிதையுடன், ஒரு பெருமூச்சையும் விட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்கலாம்; அல்லது நாமும் இந்த  எழவெடுத்த சுழலில் சிக்கிக் கொள்ளலாம். 😦

#
சுழல்

sim92.jpg

கண்ணோரச் சாடைகளும்
இறுக்கிப் பிணைத்த விரல்களும்
தெரிவிக்க முயன்ற
அருகாமைக்கான விழைவுகளை
உணராமலே போன நாட்களில்
உயிர்விட்டது
நுண்ணிய வெளிப்பாடுகளுக்கான முனைப்பு

எதிர்பார்ப்பும் காதலும்
குழைத்துப் புனைந்த எனது சொற்கள்
கேளாது நிராகரித்த
உன் செவிச்சுவர் மோதித்
தெறித்த ஒவ்வொரு முறையும்
ஏமாற்றத்தின் நிறமாய்ச் சாம்பி
சுயவெறுப்பு பூசிக் கொண்டது என் நேசம்

எஞ்சியிருப்பது சக பயணியென்ற
தோழமை மட்டுமேயென
ஆசுவாசித்து விலகி நின்றிட

எங்கிருந்தோ வழிதவறிய மேகம்
பொழிந்த நிமிட மழையாய்
வெளிப்படும் உன் பிரியம்
அதற்கேயான கவர்ச்சிகளோடும் நிச்சயமின்மையோடும்
ஈர்க்கிறது எனை மீண்டும்
உயிர்வாதை நிரம்பிய நாட்களின் சுழலுக்குள்

காதலர்தின 🙂 வாழ்த்துகள் ப்ரியா!!!

அப்புறம் சொல்ல நினைப்பது… :))

sim10.jpgsim.jpg