கைசிக ஏகாதசி குறித்து இங்கே கொஞ்சமாய் குறிப்பிட்டிருக்கிறேன்“ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி” என்று இணையத்தில் தேடினால் மேலும் விபரங்கள் கிடைக்கும்.

இந்த வருடச் செய்திக்கான சுட்டி: பிரம்ம ரத மரியாதை ரத்து பிரச்னையில் சுமுக தீர்வு

கோயில் ‘ஸ்ரீபாதந்தாங்கிகள்’ என்கிற பெருமாளைச் சுமந்துசெல்பவர்கள் மறுத்தாலும் பிற சீடர்கள் விரும்பிச் செய்யத் தயாராக இருந்தும் ம.க.இ.க போராட்டத்திற்கு பயந்து இராமானுஜர் காலத்திலிருந்து தொடர்ந்து நடக்கும் பிரம்ம ரதம் இந்த வருடம் நடக்காமல் ‘சுமுக’மாக முடிந்தது. இதுகுறித்து பட்டர் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் போட்ட வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது என்கிறது சன் செய்திகள்.

போராட்டத்தின் நோக்கம்: மனிதனை மனிதம் சுமக்கும் அவலத்தை எதிர்த்து.

எனவே இந்த வருடம் ஏகாதசி இரவில் விடிய விடிய கைசிக புராணம் படித்த பட்டரய்யங்கார், முடித்த நொடியே (அதிகாலை) கோயிலின் பிற மரியாதைகளான சந்தனம், மாலை, மேளம் உள்பட அனைத்தையும்கூட மறுத்துவிட்டு (“நான் அரங்கனுக்கு கைங்கர்யம் செய்யவந்தேன்; செய்துவிட்டேன். இவை எதுவும் தேவையில்லை”) வீட்டுக்குச் சென்றுவிட்டார். ம.க.இ.க உடனே தன் வெற்றியை, மகிழ்ச்சியை 10,000 வாலா வெடித்துக் கொண்டாடியும்  இன்று ஊரெங்கும்  பிரம்ம  ரதத்தைப் புறக்கணித்து ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியிருப்பதாகவும் செவிவழிச் செய்தி.

அடுத்த மாதம் மார்கழியில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து இராப்பத்து ‘அரையர் சேவை’ முடிந்து கடைசியில் 4000 பாசுரங்களும் பாடிய அரையருக்கும் இந்த பிரம்மரத மரியாதை வழக்கமாக உண்டு. தமிழ்ப்பெயர் வைத்தாலே வரிவிலக்கு தரும் அரசாங்கத்தின்கீழ் இருக்கும் ‘இந்து’ அறநிலையத் துறையும் அறங்காவலர்களும் இந்த ஆண்டு என்னசெய்வார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்:

 வினவு

திருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா – அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை

என் சின்ன வயதில் இந்த ஏப்ரல், மே மாதங்கள் வந்தாலே வீட்டுக்கென்று சில நடவடிக்கைகள், வாசனைகள், பிரச்சினைகள் என்று களைகட்டும். 

அன்றாடம் மாவடு, வேப்பம் பூ, கஸ்தூரி மஞ்சள், வற்றல் வடாம், வடகம், அப்பளம் இவற்றில் ஏதாவது ஒன்றாவது வீட்டில் பெரியவர்களுக்கு வேலை எடுக்கும். இதோடு வருஷசாமான் என்று அப்பொழுதெல்லாம்– புளி, துவரம் பருப்பு, கடுகு, மிளகு, சீரகம், மிளகாய் வற்றல் என்று மொத்தமாக ஒரு வருடத்திற்கான சாமான்களை வாங்கி, சுத்தம் செய்து வெயிலில் உலர்த்தி எடுத்துவைப்பார்கள். ஒரு துணியைக் கீழே விரித்து, பலகையை மடியில் சாய்த்துவைத்துக் கொண்டு கடுகை கொஞ்சம் கொஞ்சமாக சரியவிட்டு சுத்தம் செய்வதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். முழுஆண்டுத் தேர்வு, [இதைத்தான் பிரச்சினை என்று சொன்னேன். :)], மொட்டை மாடி அரசாட்சி, புளியங்கொட்டை கலக்ஷன், லீவுக்கு ஊருக்குப் போவது என்று ஒரே களேபரமான மாதங்கள் இவை இரண்டும்.

இப்பொழுதெல்லாம் வெளியே சாமான்களை காயவைக்கக் கூடிய அளவுக்கு சுற்றுப்புறம் தூய்மையாக இருக்கிறதா என்றே பயமாக இருக்கிறது. சாம்பார் பொடி, ரசப்பொடி சாமான்களைக் கூட நான் வெயிலில் வைப்பதில்லை. வாணலியில் லேசாக வறுத்து அரைத்துவிடுகிறேன்.

வடாத்திற்கு மாவு கிளறியதும் சுடச் சுட மாவை வாயில் போட்டால் லேசாக ஒட்டிக்கொண்டு விர்ரென்று காரம் காதில் ஏறும். மாவு ஆறினாலும் சுகம் தான். பிழிந்த பிறகு ஓஹோ. “வடாம் பிழிஞ்சதை சாப்பிடாத. மாவாவே எவ்வளவு வேணுமோ சாப்பிட்டுட்டு இடத்தைக் காலி பண்ணு; எங்களுக்குப் பிழியற வேலையாவது மிச்சமாகும்” என்று அம்மா திட்டி (பாட்டி அதெல்லாம் எதுவும் சொல்வதில்லை.) தட்டுநிறைய பச்சை மாவை நீட்டினாலும், அது ஓரளவுக்கு மேல இறங்குவதில்லை. பிழிந்தவடிவம் வேறு சுவை என்பதால் இதற்கெல்லாம் அடிபணிய அவசியமுமில்லை. எனக்கென்னவோ அதே மாவில் பிழிந்தாலும் ரிப்பனும், ஓமப்பொடியும், முள்ளு முறுக்கும் தனித்தனிச் சுவையாக இருப்பதாகத் தோன்றும்.

பெரியவர்கள் இரண்டுபேரும் பாலுக்கு பூனையை காவல் வைத்துவிட்டு காலி அண்டா குண்டா உழக்கு எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு கீழே போய்விடுவார்கள். அப்புறம்தான் நம் வேலையே(பரிட்சைக்குப் படிப்பதுதான்) ஆரம்பிக்கும். மலர்ந்தும் மலராத பாதி மலர்போல காய்ந்தும் காயாத கால் காய்ச்சல், அரைக் காய்ச்சல் வடாம், முக்கால் காய்ச்சல் வடாம்களை அந்த நாளில் இழந்துவிட்டால் இனி அடுத்த வருடம் உச்சிவெயிலில்தான் கிடைக்கும். சும்மா நச் நச் என்று லாகிரியாக இருக்கும். இதில் நம்வீட்டு வடாத்தைவிட அக்கம்பக்க மொட்டைமாடி வடாம்கள்தான் மேலும் சுவையாக இருப்பதோடு அந்த சீசன் முழுமைக்கும் குறையாமல் கிடைக்க அதுவே வழி. திருட்டு வடாம்தான் என்றாலும் அந்தந்த வீட்டு வாரிசோடு சேர்ந்து எடுக்கும்போது அதில் இருக்கும் திருட்டுக் கறை அழிந்து அது ஒரு உடன்படிக்கை என்ற அளவில் ஆகிவிடும். 🙂

இப்பொழுதெல்லாம் இந்த வடாம் மாவு, அப்பள மாவு, இலைவடாம் இவையெல்லாம் தயாரிக்க இல்லாவிட்டாலும் பச்சையாக சாப்பிடவாவது செய்தால் பரவாயில்லை என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை. காயவைக்கப் போவதில்லை என்றால் சீசனே தேவையில்லை. கொட்டும் மழையிலும் செய்துகொள்ளலாம்.

-0-

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கிலோ
ஜவ்வரிசி – 200 கிராம்
பச்சை மிளகாய் – 100 கிராம்
எலுமிச்சம் பழம் – 3 (பெரியது)
உப்பு – தேவையான அளவு (சுமார் ஒரு கைப்பிடி)
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்

 arisi vadaam 1
 

செய்முறை:

 • பச்சரிசி, ஜவ்வரிசி இரண்டையும் நன்கு சுத்தம் செய்து மிஷினில் நைசாக அரைத்து வாங்கவும்.
 • அடி கனமான குண்டான் அல்லது பிரஷர் குக்கரில் 12 கப் தண்ணீர்விட்டு கொதிக்கவிட வேண்டும்.
 • கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த மாவை மொத்தமாகக் கொட்டி, கைவிடாமல் கிளறவேண்டும்.
 • சுமார் பத்து நிமிடங்களுக்குள் மாவு வெந்து நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து இறுக மூடிவைக்கவும்.
 • காம்பில்லாத பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து நைசாக அரைத்து, சிறிதளவு தண்ணீரில் கரைத்து பெரிய சக்கை இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும்.
 • மிளகாய்க் கரைசல், எலுமிச்சைச் சாறு இரண்டையும் கிளறிய மாவில் கொட்டி நன்கு கலக்கவேண்டும். [இந்த நிலையில் சுவையை சோதித்து தேவைப்பட்டால் திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.]
 • சுத்தமான(?!) மொட்டைமாடித் தளத்தில் துணி அல்லது பிளாஸ்டிக் பேப்பரை விரித்து காற்றில் பறக்காமலிருக்க நான்கு பக்கமும் கற்களை வைக்கவும்.
 • கை ஒட்டாமலிருக்க, ஒரு பாத்திரத்தில் மோர்கலந்த தண்ணீரைத் தொட்டுக்கொண்டு உழக்கில் மாவை அடைத்து, ஓமப்பொடி, ரிப்பன், முள்ளுமுறுக்கு என்று விரும்பிய வடிவத்தில் வடகம் இடலாம்.
 • வெயிலில் 3, 4 நாள் காயவைத்து (ஒடித்தால் டக்கென்று ஒடியவேண்டும்.) காற்றுப் புகாத டப்பாவில் எடுத்துவைக்கவும்.
 • தேவைப்படும்போது எண்ணெயை நன்கு சுடவைத்து, மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
 • 2 டீஸ்பூன் கசகசாவையும் பொடித்துக் கலந்துகொண்டால் நல்ல மணமும் சுவையும் இருக்கும்.
 • எல்லா மாவையும் உப்பும் காரமும் கலந்து செய்யாமல் குழந்தைகளுக்காக கொஞ்சம் மாவில் சர்க்கரை, பழ எசன்ஸ், கலர் சேர்த்துச் செய்யலாம்.

* பொதுவாக மாவை முதல்நாள் இரவின் கடைசிவேலையாக கிளறிவைத்துவிட்டு, மறுநாள் அதிகாலையில், பச்சைமிளகாய்க் கரைசல், எலுமிச்சைச் சாறைக் கலந்து வெயில் ஏறுவதற்கு முன்பே பிழிந்துவிடுவது சரியானது. இந்த முறையில் வடாம் சீக்கிரம் காய்ந்து பிரிக்கவரும். காலையிலே எழுந்துதான் கிளறினால் வேலையும் அதிகம். சூட்டில் பிழிவதும் சிரமம்; பிளாஸ்டிக் பேப்பரில் சூடோடு பிழிவது நல்லதுமில்லை.

 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

கலவை சாதங்கள், சாம்பார்/குழம்பு சாதம், ரசம் சாதம், புலவு, பிரியாணி வகைகள்… இப்படி எல்லாம் அடுக்கத் தேவையில்லை. சும்மாவே சாப்பிடலாம். 🙂

தாயார் சன்னதியில் பட்டர் தவிர காலையில் ஆண்களை அங்கே பார்க்கவே முடியாது. அதுவும் அந்தப் பத்து நாள்கள் பெண்கள் காலையில் பிரதட்சணம் செய்ய அவசியம் அங்கே வந்துவிடுவார்கள். அந்த நாள்களில் மட்டும் 12 பிரதட்சணம் செய்வது நல்ல விஷயம்தான். நானும்கூட செய்திருக்கிறேன்.

ஆனால் பிரதட்சணங்களை கைவிரலில் எண்ணாமல், நிறையபேர், கோயிலில் கொடுத்த மஞ்சள்காப்பில் கோயில் சுவற்றில் தனக்கென்று ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்கே ஒவ்வொரு பிரதட்சணத்துக்கும் ஒரு மஞ்சள் புள்ளி அடையாளம் வைப்பது, கட்டியிருக்கும் புதுப்புடவையிலிருந்து ஒரு நூல் இழையை உருவி, வில்வமரத்தில் சுற்றுவது எல்லாம் அநியாயம்.

சின்ன வயதில் நாரயணன் (என்னைவிட 5 வயது பெரியவன்) தாயார் கோயில் கொலு பற்றிச் சொல்லியிருக்கிறான், “ஐய, உங்காத்து கொலுவெல்லாம் ஒரு கொலுவா? சும்மா உங்காத்து உயரத்துக்கு தானே வெக்கறீங்க, தாயார் கோயில்ல வெப்பாங்க பாரு கொலு, ஐயோ! கோயில் எவ்வளவு உயரமோ, அவ்ளோ உயரம் வெப்பாங்க! எவ்வளவு படின்னு எண்ணிப் பாக்கவே முடியாது! நான் ஒவ்வொரு தடவையும் எண்ணப்பாப்பேன்; நடுவுல விட்டுப் போயிடும் (என்று கையை உதறுவான்). அப்புறம் யானை சூப்பரா நொண்டி அடிக்கும்.. ‘ரெங்கா’ன்னு மூணுதடவை கத்தும்..”

இந்த நாராயணன் கதைகளை நான் என்றிலிருந்து கேட்க ஆரம்பித்தேன் என்று சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் என் குழந்தை நாள்களை சுவாரசியமாக்கியவன். எப்பொழுதும் ஒரு 4 பேரையாவது நிறுத்திவைத்து தான் படித்த காமிக்ஸ்களை இன்னும் மசாலா சேர்த்து கையை ஆட்டி ஆட்டிக் கதை சொல்லுவான். இரும்புக்கை மாயாவியும் விக்கிரமாதித்தன் வேதாளமும், டோக்கியோவில் தமிழ்வாணனும் எப்படி என்று அவன் வர்ணனைப்படி தான் எனக்குத் தெரியும். நிச்சயம் ஒரிஜினலைவிடப் பிரமாதமாகத்தான் சொல்லியிருப்பான் என்று நம்புகிறேன்.

எங்கு அவன் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தாலும் போட்டது போட்டபடி ஓடுவேன். முக்கால்வாசி யார்வீட்டுக் காரிலோ, சுவற்றிலோ சாய்ந்துகொண்டு எங்களை எதிரில் நிற்கவைத்துத்தான் சொல்வான். அவனுக்காகத்தான் கூட்டம் கூடியிருக்கிறது என்பதை அவன் தெளிவுப்படுத்துவதுபோல் தலைமையாகத்தான் நிற்பான்.

வீட்டிற்குத் தெரியாமல், பத்மா டாக்டர் வீட்டு வாசலில் சரித்து வைத்திருக்கும் மாட்டு வண்டியில் சறுக்குமரம் விளையாட, பையன்கள் படையுடன் போய்க்கொண்டிருக்கிறேன். குண்டு அஷோக் வீட்டு வாசலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நாராயணன், ‘ஐயோ சாயங்காலம் ஆச்சு. இனிமே சக்கிலியன் கோட்டை வாசல் தாண்டிப் போகாத! போனா, அங்க இருக்கு பாரு ரெண்டு சிலை, அது உன்னைப் பிடிச்சுக்கும். அதுக்கு லேடீஸ்னாலே பிடிக்காது.”

நான் என்னளவுக்கு புத்திசாலித்தனத்தோடு, “எல்லாக் கோட்டை வாசல்லயும்தான் பொம்மை இருக்கு. எல்லாருமா பிடிச்சுக்கறாங்க. அங்கெல்லாம் நான் போயிருக்கேனே..”

“அங்கல்லாம் கோயில் நுழைவாசல் இருக்கும். பெருமாள் காப்பாத்துவார். மேலவாசல்ல மட்டும் நுழைய வாசல் இல்லையோன்னோடி. அதான் உன்னை யாரும் காப்பாத்த முடியாது. அப்புறம் நான் சொல்லலைன்னு சொல்லாத. அவ்ளோதான்.” முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு நான் மட்டும் திரும்பிவிடுவேன்.

சொல்லும் கதையை எல்லோரும் நம்புவதுபோல் கொஞ்சம் கூட எங்குமே லாஜிக் உதைக்காமல் எதிர்கேள்வியால் மடக்கவே முடியாமல் சொல்வான்.

அப்படிப்பட்ட நாராயணன் சொன்னதை வைத்து தாயார்கோயில் கொலு பற்றிய என் கற்பனைகள் எவ்வளவு விரிந்தது என்று சொல்லத் தெரியவில்லை. மிகப் பெரிய (நாராயணனாலேயே) எண்ணமுடியாத அளவு படிகளை உடைய கொலுவையும், யானை நொண்டி அடிப்பதையும், ரெங்கா என்று கத்துவதையும், அதன்குரல் அப்போது எவ்வளவு பெரிதாகக் கேட்கும் என்பதையும் என்னால் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை. ஏனென்றால் ஆடு மாடு பறவைகளின் குரல்களைக் கேட்டிருப்பது போல் யானையின் குரலை நான் வேறு எப்போதும் கேட்டதேயில்லை.

வேட்டுச்சத்தம் கேட்டதும் ஊரே, கோயில் கொலுவிற்கு ஓடும். என்வீட்டில் கூட்டிப் போனதே இல்லை. எப்பொழுதும் வீட்டு கொலுவிற்கு வருபவர்களைக் கவனிக்கவே அம்மா, பாட்டிக்கு நேரம் சரியாக இருக்கும். வேறு யாரும் அக்கம் பக்கத்தவர்கள் அந்தக் கூட்டத்தில் ரிஸ்க் எடுத்து சிறு பெண்ணான என்னைக் கூட்டிப் போகத் தயாரில்லை.

தாங்கமுடியாத ஒரு நாளில் அழுதுபுரண்டதில் மறுநாள் ஆபீஸிலிருந்து அப்பா சீக்கிரம் வந்து என்னைக் கூட்டிப் போவதாகக் கூறினார். அந்த 24 மணிநேரத்தை எப்படிக் கழித்தேன் என்று சொல்லத் தெரியவில்லை. அவ்வளவு பெரிய கொலுவில் எல்லா பொம்மைகளும் பெரிதாக இருக்குமா, சிறிதாக இருக்குமா, என்னென்ன பொம்மைகள் இருக்கும்.. பலமுறை யானை ‘சப்பை’ வைக்காமல் நொண்டி அடித்து, ‘ரெங்கா’ என்று கத்திவிட்டுப் போனது கற்பனையில்.

மறுநாள் போனபோது நான் எதிர்பார்த்ததைவிட அதிகக் கூட்டம். (இப்போதெல்லாம் அதைவிட அதிகம். ஆனால் அப்போதைக்கு அதுவே எனக்கு அதிகம்.) கூட்டம் அருகே போனதும் அப்பா என்னைத் தூக்கி வைத்துக் கொண்டார். கொஞ்சம் (கொஞ்சமென்ன கொஞ்சம், அதிகமாகவே அப்போது) குண்டுக் குழந்தை. அப்பா ‘தம்’ கட்டிக் கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறேன். பார்த்தால் ஒரு மண்டபத்தில் தாயார் மட்டும் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தார். எனக்கு எதுவும் சுவாரசியமாக இல்லை. ‘கொலு பார்க்கப் போகலாம்பா!’ என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தேன். அப்பா கவனிக்கவே இல்லை. ஒரு சிணுங்கலாக அடம்பிடிக்கவும், “இன்னும் என்ன கொலும்மா, இதுதான் கொலு!” என்றார்.

“இல்லப்பா நிறைய மா(வா)னத்லேருந்து படிவெச்சு கோயில்ல பொம்மைக் கொலு வெச்சிருப்பாளே.. அது பாக்கப் போகலாம்.”

அப்பாவிற்குப் புரியவில்லை.

“அப்படியெல்லாம் எங்கயும் வெக்கலை. இதுதான் கொலு. பாரு, யானை இப்ப நொண்டி அடிக்கும்; ரெங்கான்னு கத்தப் போறது.”

“சரி, அதெல்லாம் முடிஞ்சதும் கொலு பாக்கப் போகலாம்பா.” அப்பா அப்புறமும் கவனிக்கவேயில்லை. நாதஸ்வரமும் கொட்டுச்சத்தமும் என் மென்மையான காதுகளுக்கு அதிகமாக இருந்தது. கூட்டம் வேறு ஒரே பேச்சுச் சத்தம். எல்லாவற்றையும் கொஞ்சம் நேரம் நிறுத்தினால் போதும் என்றாகிவிட்டது.

திடீரென்று யானை ஒரு எக்கி எக்கியது. அப்பா தூக்கி வைத்திருந்தும் எனக்கு ஓரளவுதான் தெரிந்தது. ஆனால் பின்னாளில் ஜெமினி சர்க்கஸ் யானை செய்ததில் ஆயிரத்தில் ஒருபங்கு கூட இல்லை. நான் பாண்டி விளையாடும்போது அடிக்கும் அளவுக்கு நொண்டியை எதிர்பார்த்த எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பிறகு ஓங்கி ஒரு சத்தம் கொடுத்தது. அதை எப்படி எழுத்தில் எழுதுவது என்று தெரியவில்லை. எனக்கு வயிறுவரை அதிர்ந்தது. அப்படித் தொடர்ந்து மூன்றுமுறை செய்தது. உடனே எல்லோரும் ‘ஓ’ என்று சந்தோஷத்தில் கத்தினார்கள்.

அப்பாவும் சிரித்துக்கொண்டே, தன் பெண்ணின் ஆசையை நிறைவேற்றி வைத்த திருப்தியோடு, “எப்படி யானை ரெங்கான்னு கத்தித்து?!” என்றார். தூக்கிவாரிப் போட்டது எனக்கு. அப்படி எங்கே கத்தியது? புரியாத வகையில் ஏதோ சத்தம் தான் படுபயங்கரமாக எழுப்பியது. இதை எப்படி ரெங்கா என்று கத்துவதாகச் சொல்கிறார்கள்? கூட்டம் கலையத் தொடங்குகிறது.

அவ்வளவுதானா??!!

என்னை யானை ஏமாற்றிவிட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. ஏன் பெரியவர்கள் எல்லாம் இவ்வளவு மண்டுவாக இருக்கிறார்கள்?

என்னைத் தூக்கிக்கொண்டே எதிரிலிருந்த கம்ப மண்டபம் வரை வந்த அப்பா, இறக்கிவிடப் பார்க்கிறார்.

“கொலு பாக்கப் போகலாம்பா..”

“இதுதாம்மா கோயில் கொலு. நம்பாத்துலதான் நிறைய வெச்சிருக்கோமே. இன்னும்கூட நிறைய பொம்மை வாங்கித்தரேன்…”

“இல்லப்பா, கோயில்ல கொலு இருக்குன்னு நாராயணன் சொன்னான்; உங்களுக்குத்தான் தெரியலை..”

இப்போது அப்பாவிற்குப் புரிந்திருக்கும் விஷயம். நாராயணன் என்ற பெயர் என்வீட்டுப் பெரியவர்களுக்கு ஒரு அலர்ஜி. ஏதோ தட்டிவிட்டிருக்கிறான் என்று தெரிந்துகொண்டு, “சரி, நாளைக்கு அவனையும் கூட்டிண்டு போகலாம்..”

நான் நகர மறுக்கிறேன். மீண்டும் வாசல்வரை தூக்கிக்கொண்டு வருகிறார்.

“அப்படி எதுவும் இல்லைடி செல்லம். இருந்தா அப்பா காமிக்க மாட்டேனா?” கோயில் வாசலில் மீண்டும் கீழே இறக்கிவிடப் பார்க்கிறார்.

உடம்பை விறைப்பாக்கிக் கொண்டு இறக்கிவிடமுடியாமல் வைத்துக்கொள்கிறேன். ஒருவார்த்தை கூட என்னால் பேசமுடியவில்லை. தொண்டையை எதுவோ பேச முடியாமல் அடைத்துவிட்டது. என்னால் இந்த ஏமாற்றத்தைத் தாங்கவே முடியவில்லை. இறங்கி நடக்கவே தெம்பில்லை போல் இருந்தது.

அப்பாவும் ஒன்றும் செய்யமுடியாமல் தூக்கிக்கொண்டே வீடுவரைக்கும் வருகிறார். அவருக்கு மூச்சுவாங்குகிறது. நன்றாகவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

அப்பா என்று இல்லை, எல்லோரையுமே பழிவாங்கவேண்டும் போல் இருக்கிறது. எப்படி என்றுதான் தெரியவில்லை.

வீட்டுக்குப் போனதும் பாட்டியிடம் என்னை விட்டுவிட்டு அப்பா சாப்பிடப் போய்விட்டார். ஒன்றும் பேசாமல் பாட்டிமேல் சாய்ந்துகொண்டேன். ஏமாற்றத்தில் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது.

“உன்பேத்திய இன்னிக்கி தூக்கிண்டு வீதிபிரதட்சணம் வரேன்னு வேண்டுதல் போல இருக்கு எனக்கு.” பெண்ணை சந்தோஷப்படுத்தப் போகிறோம் என்று நினைத்து ஏமாந்ததில் அப்பா பொரிந்து தள்ளுகிறார்.

பாட்டிமேல சாய்ந்திருக்கும்போது அம்மா, நான் கோயிலுக்கென்று போட்டுக்கொண்டு போன புதுகவுனை மாற்ற வந்தாள். குப்புறப் படுத்துக்கொண்டு அவிழ்க்கவே முடியாமல் கையால் இறுகப் பிடித்துக்கொண்டேன். யார் என்ன சொன்னாலும் கேட்கக்கூடாது, எதிர்க்க வேண்டும் என்று ஒரு பிடிவாதம்; வெறுப்பு.

சாப்பிட்டுக் கொண்டே நடந்த எல்லாவற்றையும் பாட்டியிடம் சொல்கிறார் அப்பா. ‘அந்த நாரயணனோட சேர விடாதீங்க இனிமே’ என்ற முடிவுரையோடு தன் சிற்றுரையை முடிக்கிறார்.

வெளியே யாராவது போய்விட்டு வந்தால் என்தம்பி அவர்கள்மேல் ஓடிவந்து சாய்ந்துகொள்வான். அவ்வளவு நேரமாக என்னை விளையாடத் தேடியிருப்பான் போல் இருக்கிறது; அவ்வளவாக அப்போது அவனுக்கு வார்த்தைகளும் சேர்த்து பேசவராது. பாட்டி மடியில் நான் படுத்திருந்ததால் அவன் வந்து ஆசையாக என் கால்மேல் தலைவைத்துப் படுத்துக்கொண்டான். ஒரு எத்து எத்திவிட்டேன். இப்போது நினைத்தாலும் மனம் பதறுகிறது. அவன் தலை ‘டங்’கென்ற சத்தத்தோடு கீழே விழுந்தது. இதற்குமட்டும் அம்மா கடுப்பாகி என்னை அடிக்க வந்தாள். பாட்டி, ‘அது தன் நிலைல இல்லை, விட்டுடு’ என்று சொல்லித் தடுத்துவிட்டாள்.

உடனே அப்பா பாதியில் எழுந்துவந்து, தம்பியைத் தூக்கித் தன் மடியில் வைத்துக்கொண்டு தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்தார். அது இன்னும் தாங்கமுடியாததாக இருந்தது. அதற்குப் பதில் அப்பா என்னைத் திட்டியிருக்கலாம் என்று தோன்றியது.

‘கோயில்ல கொலுன்னா, தாயார் அலங்காரமா உட்கார்ந்திருக்கா இல்லை, பட்டமகிஷியா அதுதாண்டி. தனியா பொம்மை எல்லாம் வெப்பாளா?.. அவ்ளோ பெரிய உடம்பை வெச்சுண்டு யானைக்கு நொண்டி அதுக்குமேல அடிக்க முடியுமா.. அதுக்கு ரெங்கான்னு உன்னை மாதிரி சொல்ல பேச்சுதான் வருமா?.. ஆனா அப்படி அது சொல்றதுன்னுதான் நினைச்சுக்கணும்… நாரயணன் ரொம்ப துஷ்டை. சேராத அவன்கூட..”

பாட்டி விட்டு விட்டு சொல்லிக்கொண்டே தலையைத் தடவித் தூங்கவைக்கப் பார்க்கிறாள். இதெல்லாம் எதுவுமே நான் நினைத்ததுபோல் நடக்கமுடியாது என்பதும், நாராயணன் துஷ்டை என்பதும் என்னால் தாங்கவே முடியவில்லை. அவ்வளவு நேரம் அடக்கிக்கொண்டிருந்த என் கண்ணிலிருந்து கண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது.

எனக்கு நினைவு தெரிந்து வந்த முதல் ஏமாற்றம், கோபம். எப்பொழுதும்போல் காரியம் சாதித்துக்கொள்வதற்காக வருவித்துக் கொண்ட அழுகையாக இல்லாமல் என் யத்தனமில்லாமல் வந்த முதல் அழுகை.

குழந்தைகளின் கற்பனைகள் நொறுங்குவதும், குழந்தைமை தொலைவதும் இன்னொரு மரித்து எழும் வலி.

[இன்னமும் நவராத்திரி சமயத்தில் ஸ்ரீரங்கத்தில், ‘தாயார் கோயிலில் கொலு!’ என்றும், ‘யானை நொண்டி அடிக்கிறது!’ என்றும் “ரெங்கா என்று மூன்று முறை கத்துகிறது!’ என்றும்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.]

நன்றி: மரத்தடி.காம்

நவராத்திரி: நினைவலைகள் –  சுந்தர்.

காஞ்சிபுரத்திற்கு அருகே ‘கூரம்‘ என்ற ஊரில் மிகப் பெரிய செல்வந்தராக இருந்தவர் ஸ்ரீவத்சாங்கர். (இவர் தான் பிற்காலத்தில் கூரத்தாழ்வார் என்ற பெயரில் இராமானுஜரின் பிரதம சிஷ்யரானவர்.) காலை சூரிய உதயம் முதல் மாலை வரை ஒரு பெரிய வெள்ளி அண்டாவில் வெள்ளி நாணயங்களை வைத்துக் கொண்டு தானம் செய்து வருபவர்.

ஒருநாள் அவர் தானம் முடித்து வீட்டின் கதவை சாத்தும் ஒலி காஞ்சிபுரத்திலிருக்கும் வரதராஜர் சன்னதி வரை கேட்க, பெருந்தேவித் தாயார், வரதராஜரிடம், “நம் சன்னதி இன்று அதற்குள் நடை சாத்திவிட்டார்களா?” என்று வினவுகிறார். வரதராஜரும் புரியாமல் குழம்ப, அப்போது கோயிலில் சால் கைங்கர்யம் செய்துவரும் திருக்கச்சி நம்பி, அவர்களிடம்,, ‘இது நமது கோயில் கதவின் சத்தம் அல்ல. கூரத்தில் ஸ்ரீவத்சாங்கர் தானம் கொடுத்து முடித்து, திருமாளிகை கதவடைக்கும் ஒலி” என்று சொல்கிறார்.

இந்தச் செய்தி அறிந்த ஸ்ரீவத்சாங்கர், காஞ்சி வரதரின் கோயில் கதவின் சத்தத்தையே மிஞ்சுவதாக தன் மாளிகைக் கதவின் வலிமையும் சத்தமும் இருந்ததற்காக மனம் கலங்குகிறார். தன் அத்தனை சொத்தையும் காஞ்சிக் கோயிலுக்கு எழுதிவைத்து விட்டு வீசிய கையோடு மனைவியை அழைத்துக் கொண்டு திருவரங்கத்திற்கு இராமானுஜருக்குக் கைங்கர்யம் செய்யக் கிளம்புகிறார்.

இருவரும் திருவரங்கம் வரும் வழியில் அடர்ந்த கானகம் வழியாக வருகிறார்கள். அப்போது அவர் மனைவி ஆண்டாளம்மா, “வழியில் ஏதும் பயமா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்கிறார். ஸ்ரீவத்சாங்கர், ‘மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம்? மடியில் ஏதாவது வைத்திருக்கிறாயா?’ என்று திருப்பிக் கேட்கிறார். ‘எதுவும் இல்லை. நீங்கள் அமுது செய்ய மட்டும் ஒரு தங்க வட்டில் கொண்டுவந்திருக்கிறேன்!’ என்று சொல்ல அதை வாங்கித் தூர எறிகிறார். இருவரும் தொடர்ந்து திருவரங்கத்தை அடைந்து ஒரு வீட்டில் தங்குகிறார்கள். (அதுவே தற்பொழுது கீழச் சித்திரை வீதியில் தேருக்கு எதிராக முதலியாண்டான் திருமாளிகை அருகே இருக்கும் கூரத்தாழ்வார் திருமாளிகை).

இரண்டு மூன்று நாள்கள் பட்டினியிலேயே கழிக்கிறார்கள். மூன்றாம் நாள் இரவு கோயிலிலிருந்து அரங்கன் இரவு அரவணை அமுதுசெய்வதற்கான மணிச்சத்தம் கேட்கிறது. ஆண்டாளம்மா, அரங்கனிடம் ‘நீ இந்நேரம் அரவணை அமுது செய்துகொண்டிருப்பாய். என் கணவர் பட்டினியாக இருக்கிறாரே!’ என்று மனதிற்குள் விசனப்படுகிறார். சிறிது நேரத்தில் அரங்கன் அனுப்பியதாகச் சொல்லி பரிசாரகர் ஒருவர் கோயில் பிரசாதமான அரவணையை எடுத்துவந்து ஆழ்வாரிடம் தருகிறார். ‘நீ ஏதும் மனதில் நினைத்தாயா?’ என்று அவர் மனைவியைக் கண்களாலேயே கேட்க, பயத்தில் ‘ஆம்’ என்ற பதில் மனைவியிடமிருந்து கிடைக்கிறது.

அரவணையில் மனைவியிடம் இரண்டு கவளம் கொடுத்துவிட்டு, பிரசாதம் என்பதற்காக தான் ஒரு கவளம் மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை பரிசாரகரிடமே திரும்பக் கொடுத்தனுப்புகிறார். அந்தப் பிரசாதத்தின் பயனாகப் பிறந்த குழந்தைகள் தான் வேதவியாசர் மற்றும் பராசர பட்டர்.

-0-

வேதவியாச பட்டர் மற்றும் பராசர பட்டர் சந்ததியினர் தான் இன்றும் திருவரங்கத்தில் (பட்டரய்யங்கார் என்று சொல்வார்கள். எங்களுக்கெல்லாம் அவர் ‘பத்ரி அப்பா’ தான் :)][கைசிக ஏகாதசி அன்று இரவு அரங்கனுக்கு ‘போர்வை சார்த்தும் வைபவம்’ முடிந்தபின் கைசிக புராணம் படிப்பார்கள். இவரை மறுநாள் ‘பிரும்ம ரதம்’ என்று சொல்லப்படும் பல்லக்கில் சர்வ மரியாதையுடன் உத்தர வீதி வலமாக இவர்கள் வீட்டிற்கு அழைத்துவருவார்கள். [பல்லக்கில் இவர் எப்படி கண்ணை மூடிக்கொண்டு சிரிக்காமல் இருக்கிறார் என்பது என் குழந்தைக் கால ஆச்சரியம். இப்போதும் தான். நானாக இருந்தால் கண்ணை லேசாகத் திறந்து இடுக்கு வழியாக என்னை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்று பார்ப்பேன் என்று சொல்லி வீட்டில் திட்டு வாங்குவேன். :))]

வேதவியாச பட்டர் சந்ததியினர் தான் இன்றும் திருவரங்கத்தில் தினமும் காலையில் விசுவரூபம் முடிந்து ‘பஞ்சாங்கம்‘ படிக்கிறார்கள்.

-0-

மார்கழித் திருநாளில் பெருமாள் முன் எல்லா ஆழ்வார்களும் ஏளியிருக்க,

‘சக்கரத்தாழ்வர் ஏன் வரலை பாட்டி? அவர் ஆழ்வார் இல்லையா?’

“இல்லை. பாசுரம் பாடினவா மட்டும் தான்..’

“அப்ப கூரத்தாழ்வார் மட்டும் என்ன பாடியிருக்கார்?”

“நாலாயிரத்துல ஒன்னும் இல்லை”

“பின்ன ஏன் இங்க சேர்க்கணும்?”

“அப்புறம் சொல்றேன்”

“இப்பவே சொல்லு பாட்டி!”

“அதெல்லாம் சம்ஸ்கிருதத்துல வேணது பாடியிருக்கார்!” சொல்லிட்டா மட்டும்… என்ற அலட்சியம் அந்தப் பதிலில் இருக்கும்.

“ஆனா ஆண்டாள் பாடியிருக்காளே, அவங்க ஏன் வரலை”

“அதெல்லாம் சொன்னா உனக்குப் புரியாது” (பொம்மனாட்டிகளை பொதுவுல உக்கார வைக்க மாட்டாங்கன்னு சொன்னா அப்ப நீ, நானெல்லாம் பொம்மனாட்டி இல்லையான்னு கேட்பேன்னு தெரியுமே.. :)]

“புரியும் சொல்லு!”

“அதிகப் பிரசங்கி. உன்னை வீட்டுலயே விட்டுட்டு வந்திருக்கணும். நேரம் காலம் இல்லாம படுத்தறது. இனிமே எங்கயும் நீ கிடையாது. வீட்டுலயே விட்டுட்டு வரேன்!”

“சரி வேண்டாம், ஆனா இப்ப பதில் சொல்லு!”

கூட்டத்தில் கால்களைத் தரையில் அழுந்த ஊன்றிக் கொண்டு நகர மறுத்த என்னை போலிஸ்காரர் தூக்கிக் கொண்டு போய் ஆரியபடாள் வாசலுக்கு அந்தப் பக்கம் போட்டார்.

குழந்தை என்னாயிற்று என்று கிஞ்சித்தும் கவலைப்படாமல் பாட்டி சாவகாசமாக அரையர் சேவை முடித்து, கருடன் சன்னதி வாசலில் மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்த என்னை பொறுக்கிக் கொண்டு வீட்டுக்குப் போனார்.

[இப்போதெல்லாம் சாதாரண நாள்களிலேயே கோயில் ஏன் இவ்வளவு ஆரவாரமாக இருக்கிறது? அந்த நாளும் வந்திடாதா?? :(((( ]

கூரத்தாழ்வார் சம்ஸ்கிருதத்தில் ‘பஞ்ச ஸ்தவம்’ முதல் பல ஸ்லோகங்கள் இயற்றியவர்; இராமானுஜரின் பிரதம சீடர். அவருக்காக சோழமன்னரிடம் கண்களையே இழந்தவர் போன்ற விபரங்கள் பின்னாளில் அறிந்துகொண்டது.

-0-

அரவணை – அரவு + அணை – பாம்பணை

ஸ்ரீரங்கம் கோயிலில் மட்டுமே அரங்கனுக்கும் அவனது அணையான ஆதிசேஷனுக்கும் அமுதுசெய்யப் படும் பிரத்யேக உணவு.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
வெல்லம் – 1 1/2 கப்
நெய் – 1 1/4 கப்
ஏலப்பொடி
பச்சைக் கற்பூரம்.

aravanai

செய்முறை:

 • முதலில் அரிசியை நன்கு உதிர வேகவைத்துக் கொள்ளவும்.
 • வெல்லத்தை தண்ணீரில் கரையாத, மிகவும் கெட்டியான(உருட்டும்) பாகாகக் காய்ச்சிக் கொள்ளவும்.
 • சாதத்தைப் பாகில் சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.
 • கிளறிக் கொண்டிருக்கும்போதே நெய்யை சிறிது சிறிதாகச் சேர்த்து முடித்துவிட வேண்டும். (கோயிலில் அரவணை மண்பாண்டத்தில் செய்வதால் நெய்யை கிறுகிறுவென்று இழுக்குமாம்.)
 • நன்கு கிளறி ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்து இறக்கவும்.

* இரவு ஒன்பது மணிக்கு இந்த அரவணையோடு, நாட்டுச் சர்க்கரை, குங்குமப்பூ கலந்து சுண்டக் காய்ச்சிய பாலும் அமுதுசெய்தபின் கோயில் நடை சாத்தப்படும்.

* அரங்கன் கோயில் பிரசாதத்தில் சர்க்கரை, முந்திரிப் பருப்பு, மிளகாய் வற்றல், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு போன்றவை சேர்க்கப் படுவதில்லை. நெய் தவிர வேறு எண்ணை வகைகள் எதுவும் அரங்கனுக்கு எதற்குமே சேர்ப்பதில்லை. பிரசாதங்கள் என்றில்லை, அவருக்குக் காட்டுகிற தீபம், உலா வரும் போது காட்டுகிற தீவட்டி(தீவர்த்தி) வரை டின் டின்னாக நெய் மட்டுமே உபயோகிக்கப் படும்.

* படத்தில் இருக்கும் அரவணை என் விருப்பத்தின் பொருட்டு சென்ற வாரம் எங்கள் வீட்டு விசேஷத்திற்காக மண்டபத்தில் பரிசாரகர் ஒருவர் தயாரிப்பது. சுவையாக இருந்தாலும் அந்த ‘அரங்கன் டச்’ மிஸ்ஸிங் என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். அரங்கன் பிரசாதங்களுக்கு மட்டும் இருக்கும் அந்த வாசனை மற்றும் ருசிக்கான காரணத்தை யாராவது ரூம்போட்டுத் தான் யோசிக்க வேண்டும். யாராவது எங்காவது ஸ்டாலில் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, அந்த மாதிரி இல்லையே என்றால் அவர்களுக்கு இரக்கப்பட்டுச் சொல்ல ஒன்றுதான் இருக்கிறது – “போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!!” 🙂

* காலையில் பொங்கல், ரொட்டி, வெண்ணண. மதியம் ‘பெரிய வஸ்திரம்’ என்ற பெயரில் சாதம், பருப்பு, கறியமுது அல்லது நெகிழ்கறியமுது, குழம்பு, சாற்றமுது, திருக்கண்ணலமுது. மாலை ஷீரான்னம்(உப்பு, வெல்லம் இரண்டுமே கலந்தது), கருப்பு உளுந்தில் செய்த திருமால் வடை, தேன்குழல், புட்டு, அதிரஸம். இரவு அரவணையோடு பால்.

வெள்ளிக்கிழமை மட்டுமே மிளகு சேர்த்த புளியோதரை, தோசை செய்வார்கள். அதற்கு ‘புளுகாப்புப் புளியோதரை’, ‘புளுகாப்பு தோசை’ என்று பெயர்.

ஏகாதசி, அமாவாசை ரேவதி நட்சத்திரம் ஆகிய நாள்களில் புறப்பாடு, திருமஞ்சனம் மற்றும் மேற்சொன்னவையோடு தோசையும் அரிசி வடையும் ஸ்பெஷல்.

ஆனால் இவை இல்லாமல் ஸ்டால்களில் எல்லா நாளும் அநேகமாக விதவிதமாக எல்லா உணவுப் பண்டங்களும் கிடைக்கும். எனவே ஸ்டாலில் வாங்குபவை எல்லாம் அரங்கன் பிரசாதம் அல்ல என்று மட்டும் அறியவும். இது தகவலுக்கு மட்டுமே. (பக்கத்தில் இருக்கும் ஸ்ரீபண்டாரத்தில் அவ்வப்போது சில பிரசாதங்கள் கிடைக்கும். அவற்றை நம்பி வாங்கலாம்.)

srirangam koil paal

 

* அரங்கன் “வெள்ளி பூணார்; வெண்கலம் ஆளார்”. அதாவது தங்கம் தவிர வெள்ளியாலான நகைகளை எல்லாம் அணிய மாட்டார். பித்தளை, வெண்கலம் போன்ற பாத்திரங்கள் தளிகைக்கு உபயோகிக்க மாட்டார்கள். ‘ஸ்வர்ண பாத்திரம்’ என்று சொல்லப்படும் மண்பானைகளையே (அன்றாடம் புதிய புதிய பானைகள்) தளிகைக்கு உபயோகிப்பார்கள். மண் பானையில் செய்வதால் அக்கார அடிசில் முதல் பல பிரசாதங்கள் லேசாக அடிப்பிடித்த வாசனை வரும். முக்கியமாக இந்தக் காய்ச்சிய பால். மேலே படத்தில் இருக்கும் அரங்கன் பால் பிரத்யேகமாக அன்றைய பட்டர், மணியக்காரர் போன்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். எனக்கு பட்டர் வீட்டிலிருந்து வந்தது.

இது ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி, பகல் பத்து, இராப் பத்து இருபது நாள்களில் மட்டும் கோவிலில் கிடைக்கும் சிறப்புப் பட்சணம்..

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1/2 கிலோ
நெய் – 1/2 கிலோ
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

 • அரிசியை முதல்நாளே ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடித்துக் கொள்ளவும்.
 • பிறகு அதை மிக்ஸியில் அரைத்து மாவாக்கி சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 • சலித்த மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஈரப் பதத்துடன் கையால் நன்கு அழுத்தி அடைத்து வைத்துவிட வேண்டும்.
 • சலித்ததில் கடைசியாக மிச்சம் இருக்கும் மெல்லிய ரவை போன்ற கப்பியை உப்புப் போட்டு தண்ணீர் விட்டு கஞ்சியாகக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இவைகளை முதல்நாளே செய்துவைத்துக் கொண்டால் தான் மாவு புளிப்பாக இருக்கும்.
 • அடுத்த நாள், முதல்நாள் தயார் செய்துவைத்துள்ள கஞ்சியை அடைத்து வைத்துள்ள மாவில் கொட்டி கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
 • தேவைப்பட்டால் சிறிது உப்பும், தண்ணீரும் சேர்த்துக் கொள்ளவும்.
 • பிசைந்த மாவை ஒரு வெள்ளைத் துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் தட்டை மாதிரித் தட்ட வேண்டும். தட்டையை விட சற்று தடிமனாகத் தட்ட வேண்டும்.
 • வாணலியில் நெய்யைச் சூடாக்கி, அப்பங்களைப் பொன்னிறமாக, நன்றாக ஓசை அடங்கும் வரை மிதமான சூட்டில் பொரித்து எடுத்து, நெய்யை வடித்தபின் உபயோகிக்கவும்.

[இதைவிடக் கடினமான ‘உருப்படி’ என்ற ஒரு ஐட்டம் இருக்கிறது. அது ஏகாதசித் திருநாள் சாற்றுமுறை கடைசி இரண்டு நாள்கள் மட்டுமே கிடைக்கும்.] 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சில பண்டங்களுக்கு தொட்டுக் கொள்ள வேறு சில பண்டங்கள் தேவை இருக்கலாம். சில பண்டங்களுக்கு அதைச் சாப்பிடுவதற்கான சூழ்நிலை மிக முக்கியம். டிசம்பர் ஜனவரி அரையாண்டுத் தேர்வு நிர்ப்பந்தங்கள்… வீடு முழுவதும் கால் வைக்க இடமில்லாமல் அறிந்ததும் அறியாததுமாக திருநாள் சேவிக்க வந்து தங்கியிருக்கும் தாத்தா பாட்டிகள்…(பலரை யாரென்று என் பாட்டிக்கே தெரியாத அளவு சத்திரமாக வீடு இருக்கும்.) வீதியிலேயே ஒரே ஒருவர் மட்டும் கார் வைத்திருக்கும் காலத்தில் ‘சர்.. சர்..’ என்று தெருவில் கடந்துபோகும் கார்கள் (ரோட்டுக்குப் போயிடாதமா, காரும் வண்டியுமா வருது; ஆத்தோரமாவே விளையாடு என்று அரைமணிக்கொரு அட்வைஸ் சத்தம் வீட்டுக்குள்ளிருந்து)… சாவகாசமாய் நடந்துபோகும் போலீஸ்காரர்கள் (ஒரே பயம்தான் போங்க!).. புதிது புதிதாய் கூட்டம் கூட்டமாய அலங்காரமாய் நடமாடும் மனிதர்கள்…

இத்தனை அமர்க்களத்தில், நாம் சாப்பிடுவது முக்கியமல்ல. நாம் சாப்பிடுகிறோம் என்பது மற்றவர்களுக்குத் தெரியவேண்டும் என்பது மிக முக்கியம்.:) வாசலுக்கு எடுத்து வந்ததுமே, “எனக்குடீ..” என்று ஒரு சிறு வட்டம் சூழ வேண்டும். தட்டையை மாதிரி கையால் உடைக்க முடியாது. கடினமாக இருக்கும். நமது கவுன் சிந்தடிக் என்ற சாக்கில் எதிரில் இருப்பவனில் எவனாவது இளிச்சவாயன் சட்டை நுனியில் வைத்து இன்னொரு இளிச்சவாயன் காக்காய் கடி(இதற்கு ஏன் இந்தப் பெயர்?) கடிக்கவேண்டும். இது கொஞ்சம் சிரமம். யார் வீட்டிலிருந்தாவது யாராவது பெருசு பார்த்துவிட்டால் “எச்சலா பண்றீங்க!!” என்று எட்டு ஊருக்குக் கேட்பதுபோல் திட்டு விழும். அப்படியே அவனை சட்டையோடு தரதரவென்று இழுத்துக்கொண்டு வந்து நம்வீட்டு வாசல் கல்படி உயரத்துக்கு அவனை உட்காரவைத்து (கிட்டத்தட்ட ஸ்கூட்டர் ஓட்டுகிற மாதிரி போஸில்), செல்வர் அப்பம் மூடிய சட்டைக்கு மேல் கருங்கல்லால் அடித்தால் உள்ளே சிலபல துண்டுகளும் கொஞ்சம் பொடியாயும் சிதறி இருக்கும். யாருக்கு எந்த அளவு பெரிய துண்டு என்பது அவர்கள் நமக்கு அன்றைய தேதியில் எவ்வளவு தூரம் நண்பர்கள் என்பதைப் பொருத்தது. இது வானிலை அறிக்கை மாதிரி- அன்றாடம் மாறக் கூடியதுதான். சட்டைக்காரனுக்கு ஒரு துண்டோடு பொடியும் இலவசம். நமக்குக் கிடைப்பது சிறு துண்டு தான் என்றாலும் அதன் சுவையே ஓஹோ!

முதலில் வாயில் போட்டதும் எதுவும் பெரிதாக உறைக்காது. சிறிது சிறிதாக உப்புச் சுவையும் நெய்யும் மட்டும் பிரிந்து பிரிந்து உமிழ்நீரில் கலக்க ஆரம்பிக்கும். (உமிழ்நீர் சுரப்பதால் சுவையாக இருக்கிறதா? சுவையாக இருப்பதால் நீர் சுரக்கிறதா?) பரமானந்தமாக இருக்கும். ஏதோ ஒரு ஏமாந்த நொடியில் அப்பம் சிதைந்து, வாயில் கரைந்து, கடித்து முழுங்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவோம். இவ்வளவு சுவையாக இருந்தும் எப்பொழுதுமே முழு செல்வர் அப்பத்திற்கு ஆசைப்பட்டதேயில்லை. ‘எல்லாத்தையும் தெருவுக்குத் தூக்கிண்டு போகணும்’ என்ற மனநிலையே இருந்தது.  இந்தச் சூழ்நிலை இப்போது கிடைக்காது என்பதாலோ என்னவோ இதன்மேல் இப்போதெல்லாம் மொத்தமாகவே ஆர்வம் போய்விட்டது.