1.
தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
பயத்தம் பருப்பு – 3/4 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
எள் – 1 டீஸ்பூன்
உப்பு

mullu murukku_sreejayanthi

செய்முறை:

 • அரிசியைக் களைந்து, நிழலில் உலர்த்தி, மிக்ஸியில் அரைத்து, சலித்துக் கொள்ளவும்.
 • பருப்புகளை சிவக்க வறுத்து, நைசாக அரைத்துக் கொள்ளவும்.
 • 2 கப் அரிசிமாவிற்கு, ஒரு கப் பருப்பு மாவு, உப்பு, எள், வெண்ணை சேர்த்து, நீர்விட்டுப் பிசைந்து கொள்ளவும்.
 • முள்ளு முறுக்கு அச்சில் சின்னச் சின்ன ஒற்றை இழை முறுக்குகளாக 2 அல்லது 3 ஆகவோ, இரண்டு மூன்று இழை கொண்ட பெரிய முறுக்குகளாகவோ பிழிந்து, நிதானமான சூட்டில், திருப்பிப் போட்டு, இருபுறமும் பொன்னிறமாகப் பொரித்து, ஓசை அடங்கியது எடுக்கவும்.

* அதிகமாகச் செய்வதாக இருந்தால் தவணை முறையில் மாவைக் கலந்து செய்யவும்.

2.
3 கப் அரிசியையும்(ஊறவைக்காதது), 1 கப் உளுத்தப் பருப்பையும், 1 கப் பயத்தம் பருப்பையும் தனித் தனியாக வறுத்துக் கொண்டு, நைசாக அரைத்து, சிறிது சூடுபடுத்திய எண்ணெய், உப்பு, சீரகம், காரப் பொடி சேர்த்து முள்ளு முறுக்கு செய்யலாம்.

3.
அரிசி மாவு ஒரு கப், பொட்டுக் கடலை மாவு 4 கப் சேர்த்து, உப்பு, எள் கலந்து முள்ளு முறுக்கு செய்தால் கரகரப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.

4.
4 கப் அரிசி, 3/4 கப் பயத்தம் பருப்பு, 3/4 கப் கடலைப் பருப்பை தனித் தனியாக லேசாக வறுத்து, மிஷினில் அல்லது மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொண்டால் முள்ளு முறுக்கு, ரிப்பன், தட்டை, பஜ்ஜி கூட செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
சீரகம் – 2 டீஸ்பூன்
பெருங்காயம்
உப்பு
வெண்ணை
தேங்காய் எண்ணெய்

செய்முறை:

 • அரிசியைச் சூடு வர சற்று வறுத்துக் கொண்டு, சூடு ஆறியபின் நன்றாகக் களைந்து, நீரை வடியவைத்து பொடித்து, நைசான சல்லடையில் சலித்துக் கொள்ளவும். (வறுத்த அரிசி அதிகமாக ஊறக் கூடாது.)
 • உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து நைசாக மாவாக்கிக் கொள்ளவும்.
 • காயம், உப்பு, இவைகளைக் கரைத்துவிட்டு, வெண்ணை, சீரகத்தையும் சேர்த்து, சிறிது தண்ணீர்விட்டுப் பிசையவும்.
 • கையில் சிறு உருண்டையாக எடுத்து மெதுவாக முறுக்குகளாகச் சுற்றி(ஞே!), எண்ணெயில் நிதானமான சூட்டில், இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து, ஓசை அடங்கியது எடுக்கவும்.

* தண்ணீர் விட்டுப் பிசைந்த மாவு அதிக நேரம் இருந்தால் மாவு புளித்து, முறுக்கு சிவக்க ஆரம்பித்துவிடும். எனவே 2 கப் மாவிற்கு மேல் முறுக்கு தேவைப்பட்டால் 2, 3 தடவையாகப் பிசைந்து கொள்ளவும்.

* சீரகத்திற்குப் பதில் கருப்பு எள்ளைத் தேய்த்தோ அல்லது வெள்ளை எள்ளோ சேர்க்கலாம்.

* பச்சரிசிக்குப் பதில் புழுங்கல் அரிசி ஊறவைத்து, நீரை வடித்து, அதிகம் தண்ணீர் விடாமல் கிரைண்டரில் கெட்டியாக ஆனால் நைசாக அரைத்து, அத்துடன் உளுத்தம் மாவு, சீரகம் எள், வெண்ணை சேர்த்துப் பிசைந்தும் முறுக்குச் சுற்றலாம்.

* வேறு எண்ணெயில் பொரித்தாலும் பிசையும்போது 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டுப் பிசைந்தால், தேங்காய் எண்ணெயில் செய்தது போலவே மணமாக இருக்கும்.

1.
தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி – 2 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
பொட்டுக் கடலை – 4 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு –  4 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 4 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
எள் – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை
காரப் பொடி
பெருங்காயம்
உப்பு
வெண்ணை
எண்ணெய்

thattai1_sreejayanthi

செய்முறை:

 • புழுங்கல் அரிசியை நன்கு களைந்து, நீரில் ஊறவைத்து, கெட்டியாக ஆனால் நைசாக கிரைண்டரில் அரைக்கவும்.
 • இத்துடன் உளுத்தம் மாவு(வறுத்து அரைத்தது), உப்பு, பெருங்காயப் பொடி, பயத்தம் பருப்பு கடலைப் பருப்பு, பொட்டுக் கடலை, தேங்காய்த் துருவல், வெண்ணை சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
 • பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து அழுத்தாமல் லேசாகக் கலந்துகொள்ளவும்.
 • பிளாஸ்டிக் பேப்பர் அல்லது வெள்ளைத் துணியில் மெல்லிய வட்டமாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

2.
புழுங்கல் அரிசியோடு பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், ஒரு துண்டு இஞ்சி, இவைகளை நைசாக அரைத்து, உளுத்தம் மாவு, வெண்ணை சேர்த்து மெலிதாகத் தட்டினால் கரகரப்பாக இருக்கும். கறிவேப்பிலை மல்லித் தழையும் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம்.

thattai2_sreejayanthi

3.
புழுங்கல் அரிசி மாவுடன், உளுத்தம் மாவு, வெண்ணை, உப்பு, எள், பெருங்காயத் தூள், காரத் தூள் சேர்க்கும்போது ஊறவைத்து நீரை ஒட்ட வடித்த பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நறுக்கிய நிலக்கடலை, முந்திரிப் பருப்பு, வெள்ளரி விதை, பரங்கிவிதை, பெரிய ஜவ்வரிசி இவைகளில் சிலவற்றையோ, எல்லாவற்றையுமோ சேர்த்தும் தட்டலாம்.

4.
புழுங்கல் அரிசிக்குப் பதில் பச்சரிசியைக் களைந்து அரை மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்தி, மிக்ஸியில் அரைத்துச் சலித்த மாவையும் உபயோகிக்கலாம்.

* தேன்குழல், ரிப்பன், தட்டை போன்றவை நமுத்துப் போகாமல் மொறுமொறுவென்று இருக்க, மாவை வெந்நீர் ஊற்றிப் பிசைந்து செய்யலாம்.

* தட்டைகளை வேகமாகத் தட்ட, பிளாஸ்டிக் ஷீட்டில் அடியில் எண்ணெய் தடவி, உருண்டையை வைத்து, மேலேயும் ஒரு எண்ணெய் தடவிய ஷீட்டை வைத்து, டபராவால் தேய்த்தால் வேகமாகச் செய்துவிடலாம்.

1.
ஒரு கப் பயத்தம் பருப்பை ஒரு கப் தண்ணீரில் குக்கரில் வேகவைத்து, நன்றாக மசித்து, அத்துடம் 4 கப் பச்சரிசி மாவு கலந்து, தேவையான உப்புத் தூள், எள் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து தேன்குழல் செய்யலாம்.

2.
ஒரு கப் பயத்தம் பருப்பு, ஒரு கப் கடலைப் பருப்பு, ஒரு கப் உளுத்தம் பருப்பை தனித்தனியாக வறுத்து, மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு கப் பருப்பு மாவிற்கு இரண்டு கப் அரிசி மாவு, 2 டேபிள்ஸ்பூன் வெண்ணை, ஓமம் அரைத்து வடிகட்டிய நீர், உப்பு சேர்த்து தேவையான நீர் விட்டுப் பிசைந்து தேன்குழல் அச்சில் பிழிந்து எண்ணெயில் பொரிக்கலாம்.

3.
3 கப் அரிசியையும்(ஊறவைக்காதது), 1 கப் உளுத்தப் பருப்பையும் தனித் தனியாக வறுத்துக் கொண்டு, நைசாக அரைத்து, சிறிது சூடுபடுத்திய எண்ணெய், உப்பு, சீரகம் சேர்த்து தேன்குழல் செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

அரிசி மாவு – 2 1/2 கப்
உளுத்தம் மாவு – 1/2 கப்
பச்சை மிளகாய் – 10
எள் – 1 டீஸ்பூன்
தேங்காய்ப் பால்
பெருங்காயம்
வெண்ணை
உப்பு
எண்ணெய்

செய்முறை:

 • பச்சை மிளகாய், உப்பு, காயம் இவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
 • அரிசி மாவையும் வறுத்து அரைத்த உளுத்தம் மாவையும் நைசாகச் சலித்துக் கொள்ளவும்.
 • அதில் அரைத்த விழுது, வெண்ணை சேர்த்து நன்றாக சீராகப் பிசிறிக் கொள்ளவும்.
 • அதோடு எள் சேர்த்து, சிறுகச் சிறுக தேங்காய்ப் பால் விட்டு சீடைகளாக உருட்டும் பதத்திற்கு மாவைப் பிசையவும்.
 • மாவை சீடை உருண்டைகளாக உருட்டி ஒன்றிரண்டு மணி நேரம் அப்படியே வைக்கவும்.
 • பின்னர் சூடான எண்ணெயில் வாணலி கொள்ளும் வரையில் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். எடுக்கும்போது சலசலவென சத்தம் கேட்க வேண்டும்.

1.
தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
உளுத்தம் மாவு – 4 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
வெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி
உப்பு
எண்ணெய்

uppu cheedai_sreejayanthi

செய்முறை:

 • அரிசியை லேசாக, சற்று சிவந்த நிறந்த்திற்கு வறுத்து, கரகரப்பாக அரைத்து சலித்துக் கொள்ளவும்.
 • உளுத்தம் பருப்பைச் சிவக்க வறுத்து, நைசாக அரைத்து, சலித்துக் கொள்ளவும்.
 • கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
 • சீரகம், மிளகை சுத்தம் செய்து, ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
 • தேங்காய், சில் இல்லாமல் நன்றாகத் துருவி லேசாக வறுத்துக் கொள்ளவும்.
 • எல்லாவற்றையும் ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, அத்துடன் உப்பு, பெருங்காயம் சிறிது நீரில் கரைத்துச் சேர்க்கவும்.
 • வெண்ணய் அல்லது நெய் விட்டு, சிறிது சிறிதாக நீர் சேர்த்துப் பிசையவும்.
 • பிளாஸ்டிக் பேப்பர் அல்லது தட்டில் சீடைகளாக உருட்டிப் போட்டு, வாணலியில் நிதானமான தீயில் பொன்னிறமாக ஓசை அடங்கும்வரை பொரித்து எடுக்கவும்.
   

2.
தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
உளுத்தம் மாவு – 4 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
வெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
எள் – 2 டீஸ்பூன்
காரப் பொடி
உப்புப் பொடி
பெருங்காயப் பொடி
உப்பு
எண்ணெய்

செய்முறை:

 • அரிசியைச் சுத்தம் செய்து, நீரில் கழுவி, அரை மணி நேரம் ஊறவைத்து, லேசாக துணியில் உலரவைத்து, மிக்ஸியில் அரைத்து, கட்டியில்லாமல் சலித்து, வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
 • உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து மிக்ஸியில் அரைத்து நைஸ் சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
 • மாவில் பத்திற்கு ஒன்று என்ற அளவில் உளுத்தம் மாவு சேர்த்தால் சரியாக இருக்கும்.)
 • எள்ளை கல், மண் தூசி இல்லாமல் சுத்தமாக்கிச் சேர்க்கவும்.
 • கடலைப் பருப்பை சுத்தம் செய்து, ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து மாவில் சேர்க்கவும்.
 • காரப் பொடி, உப்புப் பொடி, பெருங்காயப் பொடி, வெண்ணை சேர்த்து, நீர் விட்டுப் பிசையவும்.
 • பிளாஸ்டிக் பேப்பர் அல்லது தட்டில் சீடையை உருட்டிப் போட்டுக் கொள்ளவும்.
 • வாணலியில் எண்ணெயில் 20, 25 சீடைகளாகப் போட்டு, நிதானமான தீயில் பொன்னிறமாகப் பொரித்து, ஓசை அடங்கியதும் எடுக்கவும்.

-0-

* அரிசியை கரகரப்பாக அரைத்து, நன்றாகச் சலிக்காவிடில், அதிலுள்ள கற்கள் மண்களாகி ஒவ்வொரு துகளுக்கும் வெடிக்கும்.

* உளுத்தம் மாவுக்கும் அஃதே.

* எள்ளை நன்றாக கல் சோதித்துவிடுவது நல்லது. இல்லாவிடில் கண்டுபிடிக்க முடியாது.

* கடலைப் பருப்பு, மிளகு, சீரகத்தையும் நன்றாக சுத்தம் செய்தபின்பே உபயோகிக்கவும்.

* தேங்காய்த் துருவல் சேர்ப்பதாக இருந்தால், அதில் பெரிய சில்லுகள் இல்லாமல் நன்றாகத் துருவிக் கொள்ளவும். வாணலியில் சிறிது வறுத்துக் கொள்வதும் நல்லது.

* உப்பு, பெருங்காயப் பொடி போன்றவைகளை நேரடியாகச் சேர்க்காமல், நீரில் கரைத்துச் சேர்த்தால் வெடிக்காது.

* சீடை உருட்டியதும், ஒரு குண்டூசியால் ஒவ்வொரு சீடையிலும் குத்தியபின், காய்ந்த எண்ணெயில் போட்டால், சீடை வெடிக்காது.

இதை அநேகமாக எங்கள் வீட்டில் குழந்தை பிறந்து தொட்டிலிட்டு, பெயர்வைக்கும் நாளிலும் முதல் ஆண்டுநிறைவன்று காதுகுத்தும் நாளிலும் செய்வார்கள்.

sreejayanthi

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
வெல்லம் – 2 கப்
பொட்டுக் கடலை –  200 கிராம்
நிலக்கடலை – 200 கிராம்
வெள்ளை எள் – 50 கிராம்
கொப்பரைத் தேங்காய்
ஏலப்பொடி
நெய்

செய்முறை:

 • குருணை இல்லாத, முனை முறியாத பச்சரிசியை கால் மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, நிழலில் உலர்த்திக் கொள்ளவும். (ஆற நேரமில்லை என்றால் லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளலாம்.)
 • வறுத்துத் தோல் நீக்கிய நிலக்கடலையை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
 • கொப்பரைத் தேங்காயை சின்னஞ்சிறு துண்டுகளாகக் கீறிக் கொள்ளவும்.
 • எள், கொப்பரைத் துண்டுகளை சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.
 • வெல்லத்தை முற்றிய பாகாக வைத்து முதலில் முக்கால் பதம் உலர்ந்த அரிசியைச் சேர்க்கவும். பாகின் சூட்டிலேயே அரிசி பொரியும்,
 • பின், ஏலப்பொடி, பொட்டுக்கடலை, நிலக்கடலை, எள், தேங்காய்த் துண்டுகளைக் கலந்து கிளறி இறக்கவும். 
 • காப்பரிசி முதலில் இறுக்கமாக இருக்கும். ஆனால் ஆறியதும் உதிர்ந்துகொள்ளும்.

* பண்டிகைக்காக இல்லாமல் சாதா நாளில் செய்தால் சீரக மிட்டாய்களை அழகுக்காகக் கலந்து கொள்ளலாம்.

* சிலர் அரிசியை நன்றாக வறுத்தே, பின் பாகில் சேர்ப்பார்கள். அரிசி முனை முறிந்தோ உடைந்தோ விடலாம் என்பதால் நான் செய்வதில்லை.

தேவையான பொருள்கள்:

எள் – 2 கப்
வெல்லம் – 1/2 கப்
கொப்பரை
ஏலக்காய்
சுக்கு
நெய்

செய்முறை:

 • எள்ளைக் களைந்து, நீரை வடிகட்டி, வெறும் வாணலியில் நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
 • அத்துடன், வெல்லம், நறுக்கிய கொப்பரை, சுக்கு, ஏல அரிசி சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். (உரலில் இடித்தால் சரியாகவும் சுவையாகவும் இருக்கும்.)
 • உருக்கிய நெய் கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

தேவையான பொருள்கள்:

சன்னமான அவல் – 1 கப்
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 1/2 கப்
ஏலப்பொடி
குங்குமப் பூ
பச்சைக் கற்பூரம்

செய்முறை:

 • பாலை சுண்டக் காய்ச்சிக் கொள்ளவும்.
 • சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து, அவலையும் நன்கு சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
 • பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ கலந்து சாப்பிடலாம்.

தேவையான பொருள்கள்:

கெட்டி அவல் – 1 கப்
பால் – 1/2 லிட்டர்
தேங்காய்ப் பால் – 1/2 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலப் பொடி
முந்திரி
கிஸ்மிஸ்
பச்சைக் கற்பூரம்
நெய்

aval paayasam_sreejayanthi

செய்முறை:

 • அவலை நெய்யில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
 • பாலைக் காய்ச்சி, அதில் அவல் சேர்த்து வேக விடவும்.
 • அவல் வெந்ததும், சட்டென குளிர்ந்த நீர் அரை கப் சேர்க்கவும். இப்படிச் செய்வதால் அவல் ஒட்டாமல் குழையாமல் இருக்கும்.
 • மீண்டும் கொதிக்க ஆரம்பிக்கும்போது, சர்க்கரை சேர்த்துக் கரைய விடவும்.
 • சேர்ந்து வரும்போது தேங்காய்ப் பால் சேர்த்து, பொங்கிவரும்போது இறக்கவும்.
 • நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் பொரித்துச் சேர்க்கவும்.

* இதை சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்தும் செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
 

தேவையான பொருள்கள்:

அவல் – 1 கப்
சர்க்கரை – 1 1/2 கப்
ஏலப்பொடி
கேசரிப் பவுடர்
பச்சைக் கற்பூரம்
நெய்
முந்திரி
கிஸ்மிஸ்

செய்முறை:

 • அடுப்பில் வாணலியில் நெய் விட்டு, அவலைப் பொரித்துக் கொள்ளவும்.
 • அதில் ஒரு கப் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
 • அவல் வெந்தவுடன், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
 • அல்வாப் பதமாக சேர்ந்துவரும்போது, பாலில் கேசரிப் பவுடர், ஏலப்பொடி, குங்குமப்பூ கலந்து சேர்த்துக் கிளறி இறக்கவும்.
 • நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பொரித்துச் சேர்க்கவும்.

தேவையான பொருள்கள்:

அவல் – 1 1/2 கப்
வெல்லம் – 1 1/2 கப்
பயத்தம் பருப்பு – 1 கப்
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
ஏலப்பொடி
முந்திரி
கிஸ்மிஸ்
நெய்

செய்முறை:

 • அவலை வறட்டு வாணலியில் கைவிடாமல் வறுத்து, லேசாகப் பொரிய ஆரம்பித்ததும், இறக்கிவிடவும்.
 • ஆறியதும் மிக்ஸியில் பொடித்து, ஏலப்பொடி சேர்க்கவும்.
 • பயத்தம் பருப்பை இலையிலையாக வேகவைத்து(குழையக் கூடாது.) நீரை வடிகட்டவும்.
 • அவல்பொடியில் சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து, வெந்நீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். (கையால் உருட்டினால் உருட்டவும், விட்டால் உதிரவும் செய்யுமாறு இருக்கவேண்டும்.)
 • வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து முற்றிய பாகாகக் காய்ச்சவும். (தண்ணீரில் சிறிது விட்டு உருட்டினால், கெட்டியான உருண்டையாக வர வேண்டும்.)
 • பாகு தயாரானதும், தேங்காய்த் துருவல், வெந்த பருப்பு, ஏலப்பொடி இவற்றை அவல் மாவில் கலந்து, அதில் பாகைச் செலுத்தி, நன்றாகக் கலந்துவைத்து விடவும்.
 • ஒரு மணி நேரத்தில் உதிர் உதிராக அருமையான புட்டு தயாராகி இருக்கும்.
 • நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் வறுத்து இத்துடன் சேர்க்கவும்.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
சர்க்கரை – 1 கப்
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
சமையல் சோடா – 1 டீஸ்பூன்
ஏலப்பொடி
எண்ணெய்

செய்முறை:

 • பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, மிக்ஸியில் பொடித்து, மாவாக சலித்துக் கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி, சமையல் சோடா ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலந்து வைக்கவும்.
 • சுமார் ஒன்றிரண்டு மணி நேரம் கழித்துப் பார்த்தால் அரிசிமாவு, தேங்காய்த் துருவலில் இருக்கும் ஈரப்பசையால் சர்க்கரை கரைந்து, கலந்து, மாவுடன் படிந்து, பாகில் செலுத்திய அதிரச மாவு மாதிரி ஆகியிருக்கும்.
 • அடுப்பில் வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், நிதானமான தீயில், கையில் எண்ணெய் தொட்டுக் கொண்டு, மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, அதிரசமாகத் தட்டிப் போட்டு, இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
வெல்லம் – 2 கப்
ஏலப்பொடி
நெய் அல்லது டால்டா அல்லது எண்ணெய்

செய்முறை:

 • அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, சிறிது உலர்த்தி, மிக்ஸியில் பொடித்து, நைசான சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
 • 1/4 கப் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு பாகு காய்ச்சவும்.
 • மிதமான பாகுப் பதம்(தண்ணீரில் சிறுது விட்டு எடுத்து உருட்டினால் உருட்ட வராமல் தொய்ந்து கொள்ளும்) வந்ததும் இறக்கி, மாவை பாகில் செலுத்தி, ஏலப்பொடி சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
 • அடுப்பில் வாணலியில் நெய் அல்லது எண்ணெய் வைத்து, காய்ந்ததும், தேவையான அளவிற்கு மாவை உருட்டி, கால் அங்குல கனத்திற்கு வட்டமாகத் தட்டிப் போட்டு, வெந்ததும் எடுத்து ஒரு தாம்பாளத்தில் வைக்கவும்.
 • தட்டையான முகமுள்ள கரண்டியால் மெதுவாக மேலாக அழுத்தினால், அதிகமுள்ள எண்ணெய் வெளியே வடிந்துவிடும். (வடிந்த எண்ணெயை திரும்ப சேர்த்துக் கொள்ளலாம்.)

* உருண்டை வெல்லமாக இருந்தால் நல்லது. அச்சு வெல்லம் உபயோகித்தால் உதிர்ந்து விடும்.

* வெந்து எடுக்கும் போது மொறுமொறுப்பாகவும் ஆறியபின் பதமாகவும் இருக்கும்.

* அதிரசம் உதிர்ந்தால், இன்னும் சிறிது ஈரமாவைச் சேர்த்துப் பிசைந்து கொள்ளலாம்.

* முதல்நாளே பாகு செலுத்தி, மறுநாள் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் முதல்நாள் பாகு செலுத்துவதானால், சற்று முன் பதத்திலேயே எடுத்து, மாவை சற்றுத் தளர இருக்கும்படி செலுத்திவைத்தால் மறுநாள் இறுகி, தட்டும் பதமாக இருக்கும். அப்படி இல்லாமல் இறுகி இருந்தால், சிறிது பால் தெளித்தும் தளர்த்திக் கொள்ளலாம்.
 

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
வெல்லம் – 1 கப்
தேங்காய்
ஏலப்பொடி
எண்ணெய்

appam_sreejayanthi

செய்முறை:

 • முதல் நாளே, அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, சிறிது உலர்த்தி, மிக்ஸியில் பொடித்து, நைசான சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
 • 1/4 கப் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு பாகு காய்ச்சவும்.
 • முற்றிய பாகாக வந்ததும், ஏலப்பொடி, பொடியாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் சேர்த்து இறக்கவும்.
 • மாவை பாகில் செலுத்தி மூடிவைக்கவும்.
 • மறுநாள் இறுகி இருந்தால், சிறிது பால் தெளித்து இட்லிமாவு பதத்திற்குத் தளர்த்திக் கொள்ளவும்.
 • அடுப்பில் வாணலியில் எண்ணை வைத்து, காய்ந்ததும், அப்ப மாவை சிறு கரண்டியால் எடுத்து எண்ணெயில் விடவும்.
 • திருப்பிவிட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

* வெல்லம் அதிகமாகி, அப்பம் எண்ணெயில் பிரிந்து போனால் மேலும் சிறிது மாவு சேர்த்துக் கொள்ளவும்.

* சிலர் வறுத்த எள்ளும் சேர்த்துக் கொள்வார்கள். நான் சேர்ப்பதில்லை.

* அதிகம் இரண்டு மூன்று அப்பங்களுக்கு மேல் எண்ணெயில் ஒரே நேரத்தில் இடாமல் பார்த்துக் கொள்ளவும். மிகச் சிறிய வாணலியில் ஒவ்வொன்றாகச் செய்தாலும் சரியே. அப்பக் குழியிலும் செய்யலாம்.

* பொதுவாக, அப்பத்திற்கு வாணலியில் எண்ணை கொஞ்சம் அதிகமாகவே வைத்து நிதானமான தீயில் பொறுமையாகப் பொரித்தெடுத்தால் சுவையாக வரும்.