கார மிக்ஸர் – 1

 
தேவையான பொருள்கள்:

அவல் – 3 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
பயத்தம் பருப்பு –  1 கப்
நிலக்கடலை – 1 கப்
பொட்டுக் கடலை – 1 கப்
முந்திரிப் பருப்பு – 1 கப்
கறிவேப்பிலை – 4 ஈர்க்கு
உப்பு – தேவையான அளவு
காரப் பொடி – தேவையான அளவு
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க
ஓமப்பொடி (அல்லது காராபூந்தி) – 1 1/2 கப்

 

செய்முறை:

  • கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து ஒரு துணியில் உலர்த்திக் காயவைக்கவும். (முழுவதும் காய்ந்திருக்கவேண்டியதில்லை.)
  • முந்திரிப்பருப்பை நாலைந்தாக உடைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும் துளைகளுள்ள ஒரு வடிகட்டி (பெரிய டீ வடிகட்டி, புளி வடிகட்டி) எடுத்து, அதில் கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பை ஒவ்வொன்றாக, தனித்தனியாக போட்டு, பொரித்து, வடித்தட்டில் போட்டு எண்ணெயை வடிக்கவும்..
  • அவலை முதலிலேயே அந்த வடிகட்டியில் (மாவு, உடைந்த அவல் இல்லாமல்) சலித்துவைத்திருக்கவேண்டும்; கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொரித்து எடுக்கவும். சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
  • சிறிது கடலைமாவில் உப்பு, பெருங்காயம், மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து காராபூந்தி அல்லது ஓமப்பொடி அச்சில் பிழிந்துகொள்ளலாம். (மிக்ஸரில் கடலைமாவு சேர்த்த பொருள் இல்லாவிட்டால் சுவைகூடி வராது. அதனால் ஏதாவது ஒன்றாவது செய்து சேர்க்கலாம்; அல்லது அதைமட்டும் கடையில் வாங்கிச் சேர்த்துக்கொள்ளலாம்.)
  • எல்லாவற்றையும் ஒரு வாயகன்ற பெரிய பாத்திரத்தில் போட்டுக்கொண்டே வரவும்.
  • கடைசியில் கறிவேப்பிலையையும் பொரித்து, வடிகட்டவும்.
  • பொரித்த கறிவேப்பிலையுடன் தேவையான உப்புப் பொடி, மிளகாய்ப் பொடி, பெருங்காயம் சேர்த்து நன்கு கையால் நொறுக்கி, அந்தக் கலவையை நன்கு கலக்கவும்.

* எண்ணெயில் பொரிக்கும்போது தீ மிகக் குறைவாக இருந்தால் பருப்புகள், அவல் கடுக்’கென்று ஆகிவிடும். தீ அதிகமாக இருந்தால் கருகிவிடும். மிதமான தீயில் அடுப்பு எரியவேண்டும். அவல் போட்டதுமே பொரிந்துவிடவேண்டும்.

* விரும்புபவர்கள் வேறு மசாலாப் பொடிகளும் சேர்க்கலாம். ஆனால் இதுவே அதிகம் படுத்தாத வகை.

அசோகா – 1 

[“அறுசுவை அரசு” நடராஜய்யர் சகோதரர் ஞானாம்பிகா ஜெயராமய்யர்]

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 100 கிராம்
சர்க்கரை இல்லாத கோவா – 100 கிராம்
சர்க்கரை – 400 கிராம்
சம்பா கோதுமை மாவு – 100 கிராம்
நெய் – 100 கிராம்
ஏலக்காய் – 5
முந்திரிப் பருப்பு – 10
கிஸ்மிஸ் – 10 கிராம்

 

செய்முறை:

  • பயத்தம் பருப்பை கடாயில் பொன்வறுவல் வறுத்து தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • சிறிதுநேரம் ஊறியபின் நன்றாகக் களைந்துவிட்டு, அதை கெட்டியாக வரும் அளவிற்கு தண்ணீர் வைத்து குக்கரில் வேகவைக்கவும்.
  • வேகவைத்த பருப்பில் சர்க்கரையைப் போட்டு, கடாயில் நன்றாக அல்வா மாதிரி கிளறவேண்டும்.
  • அல்வா நல்ல பதம் வந்ததும் இறக்கி, கோவாவைச் சேர்த்துக் கலந்துவைக்கவும்..
  • மற்றொரு கடாயில் நெய்யை வைத்து நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் போட்டு கொஞ்சம் சிவந்தவுடன் சம்பா கோதுமை மாவு சேர்த்து நன்கு வாசனை வரும் அளவிற்கு வறுத்து, அதனுடன் பருப்பு கோவாக் கலவை, ஆரஞ்சு கலர் சேர்த்துக் கிளறவும்.

இருபது வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூர், கும்பகோணம் போகும்போதெல்லாம் என் தந்தை வாங்கிவருவார். இப்பொழுது எல்லா இடங்களிலும் பிரபலம். முக்கியமாக திருமணம் மாதிரி விசேஷங்களில் மெனுவில் முக்கிய இடம் பெற்றுவிட்டது. 

 

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1 கப்
பால் – 2 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 1 கப்
கேசரி பவுடர் (விரும்பினால்)
ஏலக்காய்
பச்சைக் கற்பூரம்
முந்திரி, பாதாம் வகைகள்

செய்முறை:

  • பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
  • பால் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேகவிடவும்.
  • குக்கர் திறக்கவந்ததும் சூட்டுடனே வெளியே எடுத்து,  நன்கு மசித்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சர்க்கரை, மசித்த பயத்தம்பருப்பு கலந்து கிளறத் தொடங்கவும்.
  • முதலில் சர்க்கரையால் நெகிழ்ந்து, பின் கலவை இறுக ஆரம்பிக்கும்.
  • சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்து விடாமல் கிளறவும்.
  • நன்கு சேர்ந்து ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.
  • இறக்குவதற்கு சற்றுமுன் கலர் (நான் சேர்க்கவில்லை.), ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், உடைத்த அல்லது நொறுக்கிய கொட்டைப் பருப்புகள் சேர்க்கவேண்டும்.

* பல தளங்களில் கோதுமை மாவு ஒரு பங்கு சேர்ப்பதாக இருக்கிறது. இது எனக்குச் செய்தி. ஒருவேளை இப்பொழுது திருமணம் மாதிரி பெரிய விசேஷங்களிலும் செய்வதால் அளவிற்காக கோதுமை மாவு சேர்க்கிறார்களா என்று தெரியவில்லை. எதற்கும் சேர்க்காமல் ஒருமுறை செய்துபார்த்து அதன் ஒரிஜினல் சுவையை அனுபவித்துவிட்டு விரும்பினால் மாவு சேர்த்தும் செய்யலாம் என்பது என் அக்கறை கலந்த ஆலோசனை.

* எனக்கு இந்த முறையே வசதியாக இருப்பதாலும் பிடித்திருப்பதாலும் ஒவ்வொரு தீபாவளிக்கு முன்தினமும் (லக்ஷ்மி பூஜைக்கு பயத்தம்பருப்பு சேர்த்து செய்யநினைத்து) இருக்கிற பூஜை, கொண்டாட்ட நெருக்கடியில் விரைவாகச் செய்யமுடிவதாலும் இப்படியே செய்துவருகிறேன்.

* அறுசுவை நடராஜன் குறிப்பு ‘சம்பா‘ கோதுமை மாவு சேர்த்தது; பாலுக்கு பதில் கோவா. அடுத்து வருகிறது.

தேவையான பொருள்கள்:

முந்திரிப் பருப்பு – 3/4 கப்
பாதாம் பருப்பு – 3/4 கப்
கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்
பால் – 3/4 லிட்டர்
சர்க்கரை – 1 1/2 கப்
நெய் – 1 கப்
ஏலக்காய் – 5

munthiri badam cake

செய்முறை:

  • பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து தோல்நீக்கி, காயவைத்துக் கொள்ளவும்
  • முந்திரி, பாதாம் பருப்பை மிக்ஸியில் மென்மையாகப் பொடித்துக்கொள்ளவும்.
  • பாலை அடுப்பில் வைத்து சேர்ந்தாற்போல் திரிதிரியாய் வரும் பதத்திற்குக் காய்ச்சிக்கொள்ளவும். (முற்றிலும் இறுகவேண்டாம்.)
  • அதே நேரத்தில் இன்னொரு அடுப்பில் வாணலியில் சர்க்கரையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, (தேவைப்பட்டால் சர்க்கரை கரைந்ததும் சிறிது பால்சேர்த்து அழுக்கு நீக்கி) ஒற்றைக் கம்பிப் பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
  • பாகு வந்தவுடன் பருப்புப் பொடிகள், கடலைமாவை சிறிது சிறிதாகத் தூவிக் கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • எல்லாப் பொடியும் கலந்து, கலவை சேர்ந்தாற்போல் வரும்போது, பால்கோவாவையும் கலந்து கிளறவும்.
  • ஏலப்பொடி தூவி, நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, தொடர்ந்து கிளறவும்.
  • நெய் பிரிந்து, கலவை ஒட்டாமல் சேர்ந்துவரும்போது நெய்தடவிய தட்டில் கொட்டி, லேசான சூடு இருக்கும்போதே வில்லைகள் போட்டு, ஆறியதும் எடுத்துவைக்கவும்.

தேவையான பொருள்கள்:

பாதாம் பருப்பு – 1 கப்
முந்திரிப் பருப்பு – 10
சர்க்கரை – 1 கப்
நெய் – 1/2 கப்
ஏலக்காய் – 3
ஜாதிக்காய்ப் பொடி
குங்குமப் பூ
கேசரி கலர்
வெள்ளரி விதை – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

  • பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து தோலுரித்துக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
  • இரண்டு பருப்புகளையும் சிறிது தண்ணீர் சேர்த்து மிகமிக அதிக மென்மையான விழுதாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சர்க்கரையுடன் அரைகப் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சவும்.
  • சர்க்கரை கரைந்ததும், அரைத்த விழுதையும் சேர்த்து, கைவிடாமல் கிளற ஆரம்பிக்கவும். [சர்க்கரை கரைந்ததும், தேவைப்பட்டால் 2 டீஸ்பூன் பால் சேர்த்து, மேலே வரும் அழுக்கை நீக்கிவிடவும்.]
  • சேர்ந்தாற்போல் வரும்போது 1 டேபிள்ஸ்பூன் பாலில் குங்குமப்பூ, கேசரி கலர், ஏலப்பொடி, ஜாதிக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம் கரைத்து, கலவையில் சேர்க்கவும்.
  • கலவை இறுக ஆரம்பித்ததும் சிறிது சிறிதாக நெய் சேர்த்துக் கிளறவும்.
  • நெய் வெளிவந்து ஒட்டாமல் கலவை வரும்போது, அடுப்பிலிருந்து இறக்கி, வெள்ளரி விதை கலக்கவும். 
  • 

* பொதுவாக பாதாம் அல்வா திகட்டும் இனிப்பாக இல்லாமல் இருக்கவேண்டும். விரும்புபவர்கள் இன்னும் 1/4 கப் சர்க்கரை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அது பாதாமை உணரமுடியாமல் செய்துவிடும். 

* இந்த அல்வாவுக்கு முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரிப்பது பிள்ளையாரைக் கிள்ளி பிள்ளையாருகே நைவேத்தியம் செய்வதுபோல். அதனால் வெள்ளரி விதை மட்டும் போதும்.

* கிராண்ட் ஸ்வீட்ஸ் பாதாம் அல்வா— பாதாம் பருப்பு 200 கிராம், சர்க்கரை 400 கிராம், நெய் 200 கிராம், முந்திரிப் பருப்பு தேவையில்லை ; ரவைப் பதத்திற்கு அரைக்கவேண்டும்.

* ஆயிரம்தான் பாதாம் பருப்பிலேயே அல்வா செய்தாலும் சுவையில் கோதுமை அல்வாவை அடித்துக்கொள்ள ஆளில்லை. அல்வாக்களில் ராணி கோதுமை அல்வா. எனக்கு பாதாம் பருப்பு, அப்படியே சாப்பிடுவதே சுவையாக இருக்கிறது.

தேவையான பொருள்கள்:

முந்திரி பருப்பு – 300 கிராம்
சர்க்கரை – 200 கிராம்
நெய் – 1 கப்
ஏலப்பொடி

munthiri paruppu cake

செய்முறை:

  • முந்திரிப் பருப்பை மிக நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது தண்ணீருடன் சர்க்கரையைச் சேர்த்து கொதிக்க விட்டு கெட்டிப் பாகாகக் காய்ச்சவும்.
  • பாகு காய்ந்ததும் சிறிது சிறிதாக பருப்புத் தூளை தூவிக் கொண்டே கட்டி தட்டாமல் கிளறவும்.
  • கலவை கொதித்து இறுகி வரும்போது ஏலப்பொடி சேர்த்து, பின் சிறிது சிறிதாக நெய்யைச் சேர்க்க ஆரம்பித்து விடாமல் கிளறவும்.
  • எல்லா நெய்யும் சேர்த்தபின், கலவை சேர்ந்தாற்போல், நுரைத்து வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தவும்.
  • லேசாக ஆறியதும், வெண்ணை பேப்பர் அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் நெய் தடவி அதன் மேற்புறத்தை வழவழப்பாகத் தடவி, வில்லைகள் போடவும். (கலவையை பெரிய தட்டில் மெல்லியதாகப் பரவுவது போல் (அரை செ.மீ உயரம் மட்டும்) கொட்டினால் கடையில் விற்கும் முந்திரி கேக் போன்றே இருக்கும்.)

* விரும்புபவர்கள் மேலே வெள்ளித் தாள் ஒட்டிக் கொள்ளலாம். நான் செய்வதில்லை.

* இந்த முறையில் முழுமையாக பாதாம் பருப்பிலோ அல்லது பாதி முந்திரி பாதி பாதாம் என்றோ எடுத்தும் செய்யலாம்.

* கோவா சேர்த்துக் கிளறுவது மிகுந்த மணமாகவும் சுவையாக இருக்கும். முக்கால் லிட்டர் பாலைக் காய்ச்சி முழுமையாக கோவா ஆவதற்கு முன் சேர்ந்தாற்போல் வரும்போதே இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை 300 கிராமாக(கோவாவிற்கும் சேர்த்து) எடுத்துக் கொண்டு மேற்சொன்னபடி பாகு காய்ச்சி, பருப்புத் தூளைப் போட்டுக் கிளறும் போதே இந்த கோவாவையும் சேர்த்துக் கிளற வேண்டும்.