தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப் (அல்லது பிரியாணி அரிசி)
பால் – 500 மிலி
மாங்காய்த் துருவல் – 1 கப் (துருவியது)
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
பெரிய வெங்காயம் – 1 (விரும்பினால்)
குடமிளகாய் – 1
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – சிறு துண்டு
காய்ந்த மிளகாய் – 2
இலவங்கப் பட்டை – 1 (விரும்பினால்)
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
நிலக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 1 சிட்டிகை
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
கொத்தமல்லித் தழை – 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

  • பாலைக் காய்ச்சி, பொங்கிவரும்போது எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் சில துளிகள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவைத்து பால் திரிந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • திரிந்த பாலை பனீர் வடிகட்டி அல்லது ஒரு துணியில் போட்டு கையால் ஒட்ட பிழிந்து வடிகட்டி உதிர்த்துக் கொள்ளவும். பிரிந்த நீரையும் எடுத்துவைக்கவும். (உடனடியாக பனீரை உபயோகிக்க இந்த முறை. முறையாக பனீர் செய்யு)
  • அரிசியைக் கழுவி, பனீர் வடித்த நீர் 2 கப் சேர்த்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும்.
  • இஞ்சி, வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • பச்சை மிளகாய், குடமிளகாயை மெலிதான நீளதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் நெய்யைச் சூடாக்கி, கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, நிலக்கடலை, இலவங்கப் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் என்ற வரிசையில் தாளிக்கவும்.
  • தொடர்ந்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை,  வெங்காயம், குடமிளகாய், மாங்காய்த் துருவல், தேங்காய்த் தூருவல் என்ற வரிசையில் ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
  • தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, இறுதியில் பனீரும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். (உப்பு, மஞ்சளை கலவையிலேயே சேர்த்துவிடுவது, சாதத்தில் அவை சீராகப் பரவ உதவும்.)
  • உதிராக வடித்து வைத்துள்ள சாதத்தை உடைக்காமல் மென்மையாக நன்கு கலந்து, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.

ஆடிப் பெருக்கை முன்னிட்டு வாசிக்க….

கட்டுரை: ஒரு நதியின் நசிவு

கவிதை: நதி நீராலானது மட்டுமல்ல

தேவையான பொருள்கள்:

மாங்காய் – 1 (சிறியது)
வெல்லம் – 1 கப்
புளி – நெல்லிக்காய் அளவு
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன்
ஏலப்பொடி – 1 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை
மிளகாய்த் தூள் – 1 சிட்டிகை
கார்ன் ஃப்ளோர் = 1/2 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்

தாளிக்க: நெய், கடுகு, வேப்பம்பூ.

maangaai pachchadi (veppam poo, ugadhi)

செய்முறை:

  • மாங்காய், தேங்காயை சிறிசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • புளியை நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு, கடலைப் பருப்பு, தேங்காய்த் துண்டுகளை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
  • கரைத்து வைத்துள்ள புளி, மாங்காய்த் துண்டுகளைச் சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்கவிடவும்.
  • மாங்காய் வெந்ததும் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து நிதானமான தீயில் வெல்லத்தைக் கரையவிடவும்.
  • வெல்லம் கரைந்ததும் சிறிது நீரில் கார்ன் ஃப்ளோரைக் கலந்து சேர்க்கவும்.
  • சேர்ந்தாற்போல் வந்ததும் ஏலப்பொடி, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
  • நெய்யில் கடுகு, வேப்பம்பூ தாளித்துச் சேர்க்கவும்.

[எனக்கு ஜனவரி மாசம் அவங்கள்லாம் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து சொல்லாட்டாலும்கூட [:)] அதையெல்லாம் மனசுல வெச்சுக்காம– நம்ப முதல்வர் மாதிரி பெருந்தன்மையாக்கும் நான்– ஆந்திர நண்பர்களுக்கு உகாதி வாழ்த்துச் சொன்னேன். பச்சடி என் ரெசிபியும் கேட்டதால் சொன்னேன். “Good. ஆனா வாழைப்பழம் போடமாட்டியா”ன்னு கேட்டாங்க. “செல்லாது செல்லாது” மாதிரி ஒரு லுக் வேற. ஐயய்யோ, வேலையிருக்குன்னு தலைதெறிக்க ஓடிவந்துட்டேன். ஏதோ ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கொண்டாடறாரேன்னு நாமளும் உகாதி கொண்டாடினா ரொம்ம்பப் படுத்தாறாய்ங்க…]

* விரும்புபவர்கள் வாழைப்பழம், பலாப்பழத் துண்டுகளும் சேர்த்து, அறுசுவையும் முக்கனியும் சேர்ந்த உணவு என்று அல்டாப்பு விட்டுக் கொள்ளலாம். [முடியலை..]

அனைவருக்கும் உகாதி, குடிபாட்வா (गुढीपाडवा) வாழ்த்துகள்.