மரத்தடி ஆண்டுவிழாப் போட்டி – 2004 க்கு எழுதி மூன்றாம் பரிசு வென்ற வெண்பா (மரபுக் கவிதை)
சுஜாதா சொன்னதற்காக (மட்டும்) ஈற்றடி சற்றே மாற்றியமைக்கப்பட்டது.

-0-

அள்ளி யணைத்தவளு(ம்) அன்னையுமோர் பெண்ணாக
உள்ளில் உயிர்த்த உறவுமட்டும் பெண்ணாகில்
கள்ளிப்பா(ல்) ஊட்டியே காரியம் தீர்ப்பவரைத்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

விந்தைபல கற்றறிந்து விண்ணேர் பருவத்தில்
கந்தக வாசமுடன் கார்துடைத்து சேய்வளர்த்து
கள்ளம் பயின்றுக் கருகிடும் பிஞ்சுகளைத்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

செல்வம் இருக்குமிடம் சேருதிங்கே கல்வியுமே
அல்லாத மானிடர்க்கோ ஆறாக் கொடுமையிது
பள்ளியிலே வாணியைப் பண்டமென விற்பவரைத்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

கல்வியு(ம்) ஆர்வமும் காரியத்தில் நேர்த்தியுடன்
வெல்திறமை கொண்டோரை வீணர்கள் செல்வாக்கால்
மெள்ளவவர் கீழ்தள்ளி மேல்வந்து நிற்பாரேல்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

காதலிலே கட்டுண்டு காதைபல பேசிப்பின்
வாழ்தலென்ற பேச்சுவரில் வக்கணையாய்க் காரணங்கள்
பிள்ளைக் கடனிங்கே பெற்றோர்சொல் கேளலென்பர்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

திருமகளாய் வீட்டில் திகழ்ந்திருக்கும் பெண்ணின்
கருமங்கள் சொல்வ(ர்),அவள் கற்பின் நெறிகளும்;பின்
கள்ளத் தொடுப்பினில் காரிகைகள் தான்கொள்வர்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

வாங்கிடு(ம்) ஊதியத்தை வங்கியிலே சேர்த்தபின்னும்
வீங்கிடு(ம்) உள்பையும் வெட்கமின்றி கர்ப்பம்பார்
கொள்ளத் தயங்கார் குடிகளிடம் லஞ்ச(ம்);அவர்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

கொள்ளை யடிப்பர்தான் கொண்ட தொழிலிலே
உள்ளத்தி(ல்) ஆர்வம் உழைப்புடன் நேர்மையின்றி
கள்ளத் தனம்செய்வர் காரியத்தில் சோம்பிடுவர்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

அதிகாரம் பெற்று(ம்)இல்லை ஆணையிடும் வீரம்
மதியில்லா மந்திரிகள் மாண்புமிகு பாதத்தில்
வெள்ளப் புயல்மரமாய் வேரோடு சாய்வாரைத்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

எண்ணக் கனவுக(ள்) இங்கே யடுக்கினேன்
வண்ண மிதற்கெலாம் வார்ப்பா(ய்) அறிவேன்;நான்
சொல்லிய வண்ணஞ் செயப்போகும் நீயேவிவ்
வெல்லுஞ் சமூகத்தின் சாவி.