ஆடி வெள்ளிக் கிழமை, தை வெள்ளிக் கிழமை, போகிப் பண்டிகை ஆகிய நாள்களில் இந்த மிக மிக எளிமையான மஞ்சள் பொங்கல் செய்வார்கள். வடை பாயசம் என்று விஸ்தாரமாக சமைக்க முடியாத பண்டிகை நாள்களில் கூட இதை மட்டும் செய்தால் போதும், மங்களகரமானது என்பதால், ‘கல்யாணப் பொங்கல்’ என்றும் இதற்கு ஒரு பெயர் உண்டு. சிலர் குடும்பங்களில் பெண்கள் வயதுக்கு வந்ததும் முதல் உணவாக தாய்மாமன் பெயரைச் சொல்லி அந்தப் பெண்ணுக்கு இந்தப் பொங்கலை செய்துகொடுப்பார்கள் என்பதால் ‘அம்மான் பொங்கல்’ என்றும் பெயர்.
 

தேவையான பொருள்கள்:

அரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய் எண்ணை/நெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு –  தேவையான அளவு
 

செய்முறை:

 • அரிசி பருப்பைக் கழுவிக் களைந்து, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 பங்கு தண்ணீர் வைத்துக் குழைய வேக விடவும்.
 • தேங்காய் எண்ணை அல்லது நெய் கலந்து பரிமாறலாம்.

* இந்தக் குறிப்பைப் படிக்கும்போது, சாதரண சாத்ததில் நெய், பருப்பு சேர்த்து சாப்பிடுவதற்கும் இதற்கும் என்ன் வித்தியாசம் என்று நினைக்கலாம். நானும் நினைத்திருக்கிறேன். சுவை அளவில் பெரும் வித்தியாசம் இருப்பது செய்து பார்த்தால் தான் தெரியும்.

* நெய் கலந்து குழைந்த பொங்கல் சுவையாக இருக்கும். ஆனால் அதைவிட தேங்காய் எண்ணை சேர்த்த உதிரியான பொங்கல் மிகுந்த சுவையாக இருக்கும்.  பொங்கல் உதிரியாக இருந்தாலும் நன்றாக மென்மையாக வெந்திருக்க வேண்டும்.
 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

கத்திரிக்காய் புளிக் கொத்சு, தாளகக் குழம்பு.

போகிப் பண்டிகையன்று இனிப்புப் போளி தயாரிக்கும்போது அதே முறையில் சுலபமாக இந்தப் போளியையும் செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

மேல்மாவு:

மைதா – 1 1/2 கப்
கோதுமை மாவு – 1/4 கப்(*)
ரவை – 2 டேபிள்ஸ்பூன்
கேசரிப் பவுடர் – 1 சிட்டிகை (விரும்பினால்)
எண்ணை – 1/2 கப்
சமையல் சோடா – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை

பூரணம்:
 
கடலைப்பருப்பு – 2 கப்
தேங்காய் – 1
கசகசா – 2 டீஸ்பூன்
உருளைக் கிழங்கு – 1 (விரும்பினால்)
பச்சை மிளகாய் – 8
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிது
நெய் – தேவையான அளவு

செய்முறை:

 • மேல்மாவு பொருள்கள் அனைத்தையும் சிறிது எண்ணை சேர்த்து நன்கு கலக்கவும்.
 • பின் சிறிது சிறிதாக நீர் சேர்த்து பிசைந்துவர வேண்டும். ரொட்டிக்கு மாவு பிசைவதை விட சிறிது தளர்வாக வந்ததும், மீதி எண்ணையையும் சேர்த்துப் பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
 • கடலைப்பருப்பை முக்கால் பதத்திற்குமேல் வேகவைத்து(*) நீரைவடித்துக் கொள்ளவும்.
 • வெந்த கடலைப்பருப்போடு தேங்காய், பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.
 • உருளைக் கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
 • வாணலியில் நெய் அல்லது எண்ணையைச் சூடாக்கி, கசகசா, பெருங்காயம், அரைத்த விழுது, வேகவைத்த உருளைக் கிழங்கு, உப்பு, அரிந்த கொத்தமல்லித் தழை சேர்த்து இறுக்கமாகக் கிளறி இறக்கவும்.
 • மேல்மாவு, பூரணமாவு இரண்டையும் சிறுசிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.
 • மேல்மாவு உருண்டையை நடுவில் குழித்து கிண்ணம் மாதிரி செய்து, பூரண உருண்டையை வைத்து முழுவதும் வெளித் தெரியாமல் மூடி, சப்பாத்திப் பலகையில் வைத்து மெதுவாக சிறிசிறு அப்பள வடிவில் மெலிதாகப் பரத்தவும். பலகையில் மாவைத் தூவிக்கொண்டு அப்பளமிட்டால் சுலபமாக இருக்கும்.
 • இட்ட போளிகளை நெய் அல்லது எண்ணை தடவி தோசைக்கல்லில் போட்டு சீரான சூட்டில் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.

* கடலைப் பருப்பை 4 மணிநேரம் ஊறவைத்து நீரை ஒட்ட வடித்து மற்ற சாமான்களோடு அரைத்தும் செய்யலாம்.

* சிலர் முழுவதுமே கோதுமை மாவு உபயோகிப்பார்கள். இதற்கு கோதுமை மாவில் மேல்மாவைப் பிசைந்து உரலில் போட்டு இடித்து பின் வாழையிலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணை தடவி அப்பளமாகத் தட்ட வேண்டும்.

* கடலைப் பருப்பை ஊறவைக்கவோ, வேகவைக்கவோ நேரமில்லையென்றால் தேங்காய் பச்சை மிளகாயை மட்டும் அரைத்துக் கொள்ளலாம். கடலை மாவை லேசாக நெய்யில் வறுத்துக் கொள்ள வேண்டும். எண்ணையைச் சூடாக்கி, கசகசா, பெருங்காயம், அரைத்த விழுது, மசித்த உருளைக் கிழங்கு, உப்பு, வறுத்த மாவையும் சேர்த்துக் கொட்டி கிளறி கொத்தமல்லித் தழை சேர்த்து, ஆறியபிறகு உருண்டைகளாக்கியும் போளி செய்யலாம். ருசியாக இருக்கும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

கொத்தமல்லிச் சட்னி (2)