ஆடி வெள்ளிக் கிழமை, தை வெள்ளிக் கிழமை, போகிப் பண்டிகை ஆகிய நாள்களில் இந்த மிக மிக எளிமையான மஞ்சள் பொங்கல் செய்வார்கள். வடை பாயசம் என்று விஸ்தாரமாக சமைக்க முடியாத பண்டிகை நாள்களில் கூட இதை மட்டும் செய்தால் போதும், மங்களகரமானது என்பதால், ‘கல்யாணப் பொங்கல்’ என்றும் இதற்கு ஒரு பெயர் உண்டு. சிலர் குடும்பங்களில் பெண்கள் வயதுக்கு வந்ததும் முதல் உணவாக தாய்மாமன் பெயரைச் சொல்லி அந்தப் பெண்ணுக்கு இந்தப் பொங்கலை செய்துகொடுப்பார்கள் என்பதால் ‘அம்மான் பொங்கல்’ என்றும் பெயர்.
 

தேவையான பொருள்கள்:

அரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய் எண்ணை/நெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு –  தேவையான அளவு
 

செய்முறை:

 • அரிசி பருப்பைக் கழுவிக் களைந்து, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 பங்கு தண்ணீர் வைத்துக் குழைய வேக விடவும்.
 • தேங்காய் எண்ணை அல்லது நெய் கலந்து பரிமாறலாம்.

* இந்தக் குறிப்பைப் படிக்கும்போது, சாதரண சாத்ததில் நெய், பருப்பு சேர்த்து சாப்பிடுவதற்கும் இதற்கும் என்ன் வித்தியாசம் என்று நினைக்கலாம். நானும் நினைத்திருக்கிறேன். சுவை அளவில் பெரும் வித்தியாசம் இருப்பது செய்து பார்த்தால் தான் தெரியும்.

* நெய் கலந்து குழைந்த பொங்கல் சுவையாக இருக்கும். ஆனால் அதைவிட தேங்காய் எண்ணை சேர்த்த உதிரியான பொங்கல் மிகுந்த சுவையாக இருக்கும்.  பொங்கல் உதிரியாக இருந்தாலும் நன்றாக மென்மையாக வெந்திருக்க வேண்டும்.
 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

கத்திரிக்காய் புளிக் கொத்சு, தாளகக் குழம்பு.

பொங்கல் பண்டிகையன்று செய்வது…

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
நெய் – 1/4 கப்
மிளகு –  2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
இஞ்சி –  ஒரு துண்டு
முந்திரிப் பருப்பு – 10
உப்பு –  தேவையான அளவு

ஹோட்டல் சுவைக்கு:

பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை –  சிறிது
மஞ்சள் தூள் –  1 சிட்டிகை

venpongal

செய்முறை:

 • பயத்தம் பருப்பைக் கழுவி லேசாக வறுத்துக் கொள்ளவும்.
 • கழுவிய அரிசியோடு சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும்.
 • வாணலியில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, சீரகம், முந்திரிப் பருப்பு தாளித்து அடுப்பை அணைத்து, பொங்கலை அதில் கொட்டி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி சூடாகப் பரிமாறவும்.

*  சாதாரண நாள்களில் பாதி நெய்யும், பாதி ரிஃபைண்ட் எண்ணையும் கலந்து செய்யலாம். உண்மையில் எண்ணணயில் தாளித்து, கடைசியில் நெய்யை சூடாக இருக்கும் பொங்கலில் கலந்து செய்வதே சுவை அதிகமாக இருக்கிறது.

venpongal.JPG

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தேங்காய்ச் சட்னி, தக்காளிக் கொத்சு, கத்திரிக்காய் புளிக் கொத்சு, சின்ன வெங்காயச் சாம்பார், கதம்பச் சாம்பார், தாளகக் குழம்பு தவிர ஓரளவு அனைத்து குழம்பு, சாம்பார்களும்…

பொங்கல் பண்டிகையன்று செய்யும் இனிப்பு வகை..

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
பால் – 1 கப் (*)
வெல்லம்  – 2 1/2 கப்
நெய் – 1/4 கப்
ஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 20
கிஸ்மிஸ் – 20
ஜாதிக்காய்ப் பொடி – 1 சிட்டிகை
தேங்காய் – சிறிது
பச்சைக் கற்பூரம் – சிறிது

 sarkkarai-pongal11.JPG

 

செய்முறை:

 • அரிசி, பருப்புகளைக் கழுவி நீரை வடித்துவிட்டு, லேசாக நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
 • பின்னர் பால், 3 கப் தண்ணீருடன் சேர்த்து குக்கரில்(அல்லது பானையில்) குழைய வேக விடவும்.
 • வாணலியில் வெல்லத்தை சிறிது நீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
 • லேசான பாகு வந்தவுடன் பொங்கலை சேர்த்து நன்கு கிளறவும். இந்த மாதிரி பாகு வைத்துக் கிளறினால் சீக்கிரம் கெடாமல் இருக்கும்.
 • இறுதியில் நெய் சேர்த்து, கெட்டியாகிச் சுருண்டு வரும்வரை நன்றாகக் கிளறவும்.
 • ஏலக்காய்ப் பொடி, ஜாதிக்காய்ப் பொடி, முந்திரி, கிஸ்மிஸ், மிகச் சிறுசிறு துண்டுகளாகக் கீறிய தேங்காய் எல்லாவற்றையும் 2 டேபிள்ஸ்பூன் நெய்யில் பொரித்துப் போட்டு பச்சைக் கற்பூரம் சேர்த்து இறக்கவும்.

* பாலுக்குப் பதில் தேங்காய்ப் பால் சேர்த்தாலும் அல்லது இரண்டும் சரிசமமாகச் சேர்த்தாலும் மிகவும் ருசியாக இருக்கும்.

sarkkarai pongal

சர்க்கரைப் பொங்கலின் குமட்டும் மணத்தை மாடன் உணர்ந்தது. ‘இந்தக் குடுமிப்பயவ இந்த எளவை எப்பிடியேன் திங்கியாவளோ ? சவத்தெளவு, எண்ணை நாத்தமில்லா அடிக்குவு . . . ‘ என்று மாடன் வியந்து கொண்டது.

….

….

நாலு பட்டர்கள் சுமந்து கொண்டு வந்த அண்டாவைப் பார்த்ததும் மாடன் திடுக்கிட்டது. ஒருவேளை இரத்தமாக இருக்கலாம் என்று சிறு நம்பிக்கை ஏற்பட்டது. மறுகணம் அதுவும் போயிற்று. சர்க்கரைப் பொங்கலின் வாடை மாடனைச் சூழ்ந்தது. என்ன இது என அது குழமப, தந்திரி பலி ஏற்கும்படி சைகை காட்டினார். ‘ஆருக்கு, எனக்கா ? ‘ என்று தனக்குள் சொன்னபடி ஒரு கணம் மாடன் சந்தேகப்பட்டது. மறுகணம் அதன் உடம்பு பதற ஆரம்பித்தது.

— மாடன் மோட்சம். (ஜெயமோகன்)

இந்துமதத்தின் மேல் நம்பிக்கை உள்ள ஒருவர், அதன் நடைமுறை யதார்த்தத்தை அதுவும் அந்த வட்டார மொழியில் சொல்லும்போது, இந்தக் கதை கிடைக்கலாம். வெளியிலிருந்து படிப்பவர்களுக்கு நகைச்சுவை கதையாகவும்.