இந்த வடைக்கு என்று எதுவும் தனியாக யாரும் பெயர் வைக்கவில்லை போலிருக்கிறது. கார்த்திகையன்று (மட்டும்) செய்வதால் கார்த்திகை வடை என்றே நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

kaarththigai vadai 1

தேவையான பொருள்கள்: 

முழு உளுத்தம் பருப்பு – 2 கப் (கருப்புத் தோலுடன்)
கடலைப் பருப்பு – 1/2 கப்
பயத்தம் பருப்பு – 1/2 கப்
பச்சை மிளகாய் – 10, 12
இஞ்சி – பெரிய துண்டு
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
பெருங்காயம்
உப்பு
எண்ணெய்

kaarththigai vadai 2

செய்முறை:

  • தோல் உளுத்தம் பருப்பை அலசி தண்ணீர்ல் குறைந்தது 8 மணி நேரம் ஊறவைக்கவும். (தோல் தனியாகக் கழண்டு  வரும் அளவு ஊறவேண்டும்.)
  • கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊறவைத்து, நீரை ஒட்ட வடித்து, ஒரு துணியில் காயவிடவும்.
  • பாதி இஞ்சி, பாதி மிளகாயை மட்டும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையையும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • ஊறின தோல்பருப்பைக் களையவும். முக்கால்வாசித் தோல் மட்டும் நீங்கினால் போதும். கால்வாசி அல்லது விரும்பினால் அதைவிட சிறிது அதிகத் தோலை அப்படியே நீக்காமல் வைத்துக் கொள்ளவும்.
  • களைந்த பருப்புடன், தேவையான உப்பு, பெருங்காயம், மீதிப் பாதி இஞ்சி, பச்சை மிளகாயைச் சேர்த்து, அதிகம் நீர் விடாமல், அதிகம் மசியாமல் கெட்டியாக கரகரப்பாக அரைத்து எடுக்கவும். கிரைண்டரில் இப்படி அரைப்பது சுலபம்.
  • அரைத்த மாவுடன் உலர்த்தி வைத்திருக்கும் பருப்புகளை நன்கு கலந்து கொள்ளவும்.
  • நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து அழுத்தாமல் கலந்து கொள்ளவும். பச்சை மிளகாய்த் துண்டுகள் இடையில் அதிகம் இருந்தால் சுவையாக இருக்கும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கவும்.
  • வாழையிலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் தண்ணீர் துடைத்து, மாவை உருட்டி, வடையாகத் தட்டி, நடுவில் துளை போட்டு, நிதானமான சூட்டில், எண்ணெயில் போடவும்.
  • இருபுறமும் திருப்பிவிட்டு, முழுமையாகச் சத்தம் அடங்கி, மொறுமொறுப்பானதும்,  எடுக்கவும். இடையிடையே கரண்டிக் காம்பால் வடையில் குத்தினால் மேலும் கரகரப்பாகும்.

* இந்த வடை வேக சிறிது அதிக நேரம் எடுக்கும். இரண்டு மூன்று நாள்களுக்குக் கெடாது.

* முழுமையாக தோல்பருப்புதான் சேர்க்கவேண்டுமென்பதில்லை. கால் அல்லது அதற்குக் கொஞ்சம் மேலே தோல் உளுத்தம் பருப்பும், மீதிக்கு தோல் நீக்கிய முழுப் பருப்பும் கூட சேர்த்து, கடைசியில் களையாமல் நீரை மட்டும்  வடித்து, அப்படியே அரைக்கலாம். இது அதிகம் ஊறத் தேவையில்லை. நான்கு மணி நேரத்தில் அரைக்கலாம்.

ஏற்கனவே சொல்லியிருக்கும்  பாகு செலுத்திச் செய்யும் அப்பம் தான் கார்த்திகைக்கும் செய்வார்கள். ஒரு மாறுதலுக்காக இதையும் நான் அடிக்கடி செய்வேன்.

paal appam 1

தேவையான பொருள்கள்:

ரவை – 1 கப்
மைதா – 1 கப்
சர்க்கரை – 1 கப்
பால் – 1 கப்
தேங்காய் – 2 பத்தை
ஏலப்பொடி
எண்ணெய்

செய்முறை:

  • ரவை, மைதா, சர்க்கரை, பால், ஏலப்பொடி எல்லாவற்றையும் சொல்லியிருக்கும் அளவு மட்டும் கலந்து, கையால் கட்டியில்லாமல் கரைத்து, (சர்க்கரையைக் கரைக்க வேண்டாம், அதுவே கரைந்துவிடும்.) அப்படியே 4 மணி நேரம் வைக்கவும்.
  • இரண்டு பத்தை தேங்காயை மெலிதாக, பொடிப் பொடியாகக் கீறிக் கொள்ளவும்.
  • நான்கு மணி நேரம் கழித்து தேங்காயையும் கலவையில் கலந்து, தேவைப்பட்டால் இன்னும் சிறிது பால் கலந்து கெட்டியான அப்ப மாவுப் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, ஒரு கரண்டியால் சிறிது சிறிதாக மாவை எடுத்துவிட்டு, நிதானமான குறைந்த தீயில் இருபுறமும் பொன்னிறமாகச் சிவந்ததும் எடுக்கவும்.

paal appam 2

* சனிக்கிழமை போன்ற நாள்களில் ஒரு டீஸ்பூன் வறுத்த எள்ளும் சேர்த்துக் கொள்ளலாம்.

* அப்பத்திற்கு கொஞ்சம் அதிக எண்ணெயும் அதிகப் பொறுமையும் குறைந்த தீயும் தேவை. எண்ணெயை அதிகம் குடிக்காது. ஆனால் அதிக எண்ணெய் இருந்தால் நன்றாக அசைந்து மூழ்கி, வேகும்.

* புதிதாகச் செய்பவர்கள், பாகு, பதம் என்றெல்லாம் குழம்புபவர்கள், ஆண்கள் கூட இதைச் சுலபமாகச் செய்யலாம். மேலே மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் சுவையாக இருக்கும். திகட்டாது.

* அப்பக்குழியிலும் செய்யலாம்.

முன்பெல்லாம் பாட்டி காலத்தில் எங்கள் வீட்டில் நெல்லை மணலோடு சேர்த்து வறுத்து, மணல் சூட்டோடு நெல் பொரிந்ததும் மணலைச் சலித்து, நெல் உமியை சுளகில் புடைத்து நீக்கி, அப்புறம் இருக்கும் பொரியையும் நாங்களெல்லாம் உட்கார்ந்து நெல் இருந்தால் பொறுக்க வேண்டும். வீட்டிலேயே செய்வது மிக மிக அதிக நேரம் எடுக்கும் வேலையாக இருந்தது. இதில் பாட்டியின் ஆசார கெடுபிடி வேறு. இப்போது கடைகளில் கிடைக்கும் பொரியை வாங்கிச் செய்தேன். அதிலும் ஓரளவு நம் திருப்திக்கு, நெல் கலந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அவ்வளவுதான்.

தேவையான பொருள்கள்:

நெல் பொரி – 3 கப்
வெல்லம் – 1 கப்
சுக்குப் பொடி – 1/2 டீஸ்பூன்
கொப்பரை அல்லது தேங்காய்
ஏலத்தூள்
நெய்

nelpori urundai (thirukkaarththigai)

செய்முறை:

  • நெல் பொரியை நெல், உமி இல்லாமல் சுத்தமாக்கிக் கொள்ளவும்.
  • கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை சிறிது சிறிதாக மிக மெலிதாகக் கீறி ஒரு டீஸ்பூன் நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் ஒரு பெரிய வாணலியில் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து வைத்து, நன்கு முற்றிய கெட்டிப் பாகாக வைத்துக் கொள்ளவும். (தண்ணீரில் போட்டு வெளியே எடுத்து தட்டினால் ‘ணங்’ என்று சத்தம் கேட்க வேண்டும்.)
  • பாகு வருவதற்கு முன் ஏலப்பொடி, சுக்குப் பொடி சேர்க்கவும்.
  • பாகு வந்ததும், தேங்காய்த் துண்டுகளைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • நெல் பொரியை வேகமாக பாகில் முழுமையாகக் கலக்கவும்.
  • கையில் நெய் துடைத்துக் கொண்டு, வேண்டிய அளவில் உருண்டைகளாகப் பிடிக்கவும். அதிகம் அழுத்தி, பொரியை உடைக்காமல், மென்மையாக ஆனால் நன்றாக அழுத்தமாகப் பிடித்தால் சேர்ந்தாற்போல் வரும்.
  • 4, 5 உருண்டைகளாக இடையிடையே ஒரு சுளகில் அல்லது முறத்தில் இட்டுச் சுழற்றினால் ஒன்றோடு ஒன்று இடித்து, நன்றாக உள்ளே இறுகிக் கொள்ளும். (பாட்டி காலத்தில் இந்த வேலை எல்லாம் எனக்குத் தான் வரும். சுளகு சுத்தவே இல்லை, உன் உடம்பு தான் சுத்துது என்று கிண்டல் செய்வார்கள்.)
  • பாதி செய்துகொண்டிருக்கும்போதே கலவை இறுகி எடுக்கவரவில்லை என்றால், மீண்டும் அடுப்பில் சிம்’மில் (மட்டும்) வைத்தால் பாகு இளகி எடுக்க வரும். தொடர்ந்து மிச்ச உருண்டைகளையும் பிடிக்கலாம்.
  • ஆறியதும் ஒரு காற்றுப் புகாத டப்பாவில் எடுத்துவைத்து உபயோகிக்கவும்.

கூம்பு:

என் பாட்டியெல்லாம் கையாலேயே முதலில் சாஸ்திரத்திற்கு இரண்டு கூம்பைப் பிடித்துவிடுவார்கள். எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லாததால் கூம்பில் தான் செய்தேன்.

  • கூம்பில் உள்ளே நன்றாக நெய்யைத் தடவிக் கொள்ளவும்.
  • சிறிது கலவையை உள்ளே போட்டு, ஒரு குழிவான(வட்டமான) கரண்டியால் நன்கு அழுத்திவிட்டு, பிறகு இன்னும் கொஞ்சம் கலவையைச் சேர்த்து, மீண்டும் அழுத்த வேண்டும். இதேபோல் சிறிதுசிறிதாக கலவையைச் சேர்த்து அழுத்திக் கொண்டே வரவேண்டும்.
  • கூம்பு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் நமக்கு வேண்டிய உயரம்(அளவிற்கு) அடைத்து விட்டு நிறுத்திக் கொள்ளலாம். அடைத்து முடித்ததும் அப்படியே படுத்தவாக்கில் வைக்கலாம், அல்லது அதில் இருக்கும் வளையத்தை ஒரு ஆணியில் மாட்டலாம். எப்படியும் ஆறும்வரை அதன் வாய்ப்பகுதி திறந்துதான் இருக்க வேண்டும்.
  • இரண்டு மூன்று மணி நேரம் கழித்து, நன்கு ஆறியதும் ஒரு செய்தித்தாளில் கவிழ்த்து வைத்து, ‘டங்’ என்று தட்டினால் ஒன்றிரண்டு தட்டலிலேயே கூம்பு பிரிந்து கீழே விழுந்துவிடும்.