தேவையான பொருள்கள்:

மைதா – 2 கப்
வெண்ணெய் – 100 கிராம்
பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன்
சமையல் சோடா – 1 சிட்டிகை
தயிர் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – 4 கப்
தண்ணீர் – 2 கப்
எலுமிச்சைச் சாறு
ஏலக்காய் – 5 (அல்லது வேறு எசென்ஸ்)
கேசரிப் பவுடர் அல்லது வேறு கலர் – விரும்பினால்

 

செய்முறை:

  • ஒரு அகலமான பாத்திரத்தில் மைதாவுடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்..
  • வெண்ணெய், (ஃப்ரிட்ஜில் இருந்தால் அறைச்சூட்டிற்குக் கொண்டுவரவும்.) தயிர் சேர்த்து நன்கு கையால் பிசிறவும்.
  • தேவைப்படும் அளவு மட்டும் (மிகக் குறைவாகவே தேவைப்படும்.) தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்திற்குப் பிசைந்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு நன்கு அடித்துப் பிசையவும். நல்ல பாடல் கேட்டுக்கொண்டே*** செய்தால் சிரமம் தெரியாது.
  • பிசைந்த மாவை அப்படியே பத்து நிமிடங்களுக்கு வைத்துவிட்டு அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஜீரா தயாரிக்கவும்.
  • சர்க்கரை கரைந்து கையில் ஒட்டும்பதம் வரும்போது (பாகுப் பதம் வந்துவிடக் கூடாது.) அடுப்பை அணைத்து, ஏலப்பொடி, எலுமிச்சைச் சாறு, விரும்பினால் நிறப்பொடி கலந்து ஆறவிடவும்.
  • (பாதுஷாவின் உருவம் அவரவர் விருப்பம்தான். எனவே நான் படத்தில் உள்ளபடி செய்திருப்பதை மட்டும் சொல்கிறேன்.) பிசைந்துவைத்துள்ள மாவில் பாதியை எடுத்து தடித்த சப்பாத்தியாக உருட்டிக்கொள்ளவும்.
  • ஒரு வட்ட மூடியை எடுத்து சப்பாத்தியில் வட்டங்களை வெட்டிக்கொள்ளவும். வட்டங்கள் தவிர்த்து பிற மாவை நீக்கிவிடவும்.
  • இன்னொரு உள்வட்ட மூடியால் அந்த வட்டங்களின் நடுவே லேசாக மேலாக அழுத்தவும். (அடிவரை அழுத்தி உடைத்துவிடக் கூடாது.) ஒரு பிளாஸ்டி ஃபோர்க்கால் வெளிப்பகுதியில் கோடுகளும், உள் வட்டத்தில் புள்ளிகளும் அதிகம் அழுத்தாமல் குத்திக்கொள்ளவும். இப்படியே மொத்த மாவையும் தயாரித்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், ஒரு சிறு உருண்டையைப் போடவும். உருண்டை கொதித்து, பொரிப்பொரியாக மேலே வந்தால் அதுவே எண்ணெய்ச் சூட்டின் சரியான பதம்.
  • அடுப்பை அணைத்துவிட்டு ஒவ்வொரு பாதுஷாவாக- சுமார் ஏழு அல்லது எட்டு-  மெதுவாக எண்ணெயில் போடவும். போட்டவுடனே அடியில் போய், பின் ஒவ்வொன்றாக மேலே வர ஆரம்பிக்கும்.
  • எல்லா பாதுஷாவும் மேலே வந்துவிட்டதா என்று சரிபார்த்தபின்பே அடுப்பைத் திரும்ப எரியவிட்டு சிம்மில் வைக்கவும்.
  • பொறுமையாக அவ்வப்போது திருப்பிவிட்டு நிதானமாக  இரண்டு பக்கமும் பொன்னிறமாகும்வரை வேகவிட்டு எடுக்கவும். 
  • சில நொடிகள் வடிதட்டில் வைத்து எண்ணெயை வடித்துவிட்டு சூட்டுடனே, ஆறிய பாகில் மெதுவாகப் போடவும்.
  • பதினைந்து இருபது நிமிடங்கள் நன்கு ஊறி, பாதுஷா மிருதுவானவுடன் வேறு பாத்திரத்தில் எடுத்துவைக்கவும்.
  • 

* விரும்பினால் பாகின் பிசுபிசுப்பு ஆறுவதற்குள் பாதுஷாக்களின் மேல் பொடிப்பொடியாக உடைத்த முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரிவிதை, குங்குமப்பூ போன்றவற்றைத் தூவலாம்.

* மேல் அலங்காரங்கள் இல்லாமல் சாதாரண வட்ட பாதுஷாவேகூட செய்துகொள்ளலாம். அது அதிக அளவில் செய்யும்போது வேகமாகச் செய்யவும் உதவும். ஆனால் அவற்றிலும் டூத்பிக் அல்லது ஃபோர்க்கால்- அடிவரை அழுத்தாமல்- மேலாகப் புள்ளிகள் குத்திக்கொள்வது அவசியம். இது எண்ணெய், ஜீரா உள்ளேபோய் முறையே நன்குவேக, சுவையைக்கூட்ட உதவும்.

* மீதமிருக்கும் ஜீராவை பாதுஷாக்களின் மேலாக இன்னும் கொஞ்சம் விடலாம். ஆனால் மீதியிருக்கிறது என்பதற்காக மொத்த ஜீராவையும் அளவுக்கு அதிகமாக விட்டுவிடக் கூடாது. அப்படிச் செய்தால் ஆறியதும் பூத்தாற்போல் இருக்கும் பாதுஷாக்கள் மேலே பாளம் பாளமாக  வெள்ளையாக- அதிகமான ஜீரா தனியாக வந்து சுவையைக் கெடுக்கும். ஜீரா தேவையான அளவு மட்டும் விட்டால் சரியாக பாதுஷாமேல் வெள்ளையாகப் பூத்துக்கொண்டு அழகாகவும், உண்பவருக்கு ஓவர் சர்க்கரை என்ற பீதியில்லாமலும் இருக்கும். ஜீரா மீதமிருந்தால் பாயசம் செய்ய உபயோகிக்கலாம்.

*** இப்பொழுதெல்லாம் பாடல் கேட்கும்போது அதை ரசிக்கமுடியாமல், இளையராஜா, “நீ நல்லவளா கெட்டவளா?” என்று கேட்டுப் போகிறார். [“யாரோ உழைக்க யாரோ அனுபவிக்கறாங்க. ஓசியில டவுண்லோடு பண்ணி இதமா கேக்குறீங்களே… அதெல்லாம் யாரோட உழைப்பு? மனசாட்சியைக் கேளுங்க, பண்றது நியாயமான்னு?” – இளையராஜா, குங்குமம் 08/11/2010 😦 ]

தேவையான பொருள்கள்:

புளிக்காத தயிர் – 1 கப்
கடலை மாவு – 1/2 கப்
வெங்காயம் – 1
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க
கொத்தமல்லித் தழை

தாளிக்க: எண்ணெய், காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை

onion pakodas (for kadi)
செய்முறை:

  • கடலை மாவில், தேவையான உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து தண்ணீர் கலந்து பஜ்ஜிமாவு பதத்திற்கு நன்கு கலந்துகொள்ளவும். விரல்களால் நன்கு குழைந்துபோகுமாறு கலக்கவேண்டும்.
  • வெங்காயத்தை சற்றே அகல நீளத்தில் நறுக்கிக் கொள்ளவும்.
  • தயிரை ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கடைந்து வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை கடலை மாவில் தோய்த்து எண்ணெயில் பஜ்ஜி மாதிரி பொரித்து எடுக்கவும்.
  • மிச்சமுள்ள கடலைமாவை(4 டீஸ்பூன் கரைத்த மாவு இருந்தால் போதுமானது.) தயிரில் சேர்க்கவும். கரைத்த மாவு தீர்ந்திருந்தால் தனியாக இரண்டு டீஸ்பூன் கடலை மாவை தயிரில்ல் சேர்த்து நன்கு கட்டிகளில்லாமல் கலந்துகொள்ளவும்.
  • தயிர்க் கலவையில் தேவையான உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து, நன்கு கலந்து அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவும். மிகவும் இறுகிவிட்டால் இன்னும் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்.
  • கடலைமாவு வெந்து குழம்பு சேர்ந்தாற்போல் வந்ததும் பொரித்து வைத்துள்ள பக்கோடாவைச் சேர்த்து சிம்மில் மேலும் இரண்டு நிமிடம் கொதிக்கவைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • சிறிது எண்ணெயில் கடுகு, சீரகம், 4, 5 காய்ந்த மிளகாய், உரித்த பூண்டு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
  • நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.

kadi pakoda (punjab)

 

* மிக அதிக அளவில் ஆறியதும் இறுகும்; பகோடாவும் குழம்பின் நீரை இழுத்துக்கொள்ளும் என்பதால் தயாரிக்கும்போதே சிறிது நீர்க்க இருந்தால் நல்லது.

* வாணலியில் முதலில் தாளித்து, அதில் தயிர்கலவையைச் சேர்த்தும் குழம்பைக் கொதிக்கவைக்கலாம்.

* வெங்காயத்துடன் விரும்பினால் உருளை போன்ற காய்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

* மசாலா வாசனை விரும்பினால் கரம் மசாலாத் தூள் ஒரு டீஸ்பூன் பகோடா மாவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சாதம், புலவு, தேங்காய்ச் சாதம், இடியாப்பம், சப்பாத்தி, பூரி….

தேவையான பொருள்கள்:

கெட்டித் தயிர் – 2 கப் (லேசாகப் புளித்தது)
தேங்காய்த் துருவல் – 1 கப்
பச்சை மிளகாய் – 5, 6
துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
மல்லி விதை – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
பெருங்காயம்
மஞ்சள் தூள்
உப்பு
கொத்தமல்லித் தழை

காய்கறி: முருங்கை, பூசணி, வெண்டை, சேம்பு, கத்தரிக்காய், பரங்கிக்காய்…. இவற்றில் ஏதாவது ஒன்று.

தாளிக்க: தேங்காயெண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

mOr kuzhambu [3]

செய்முறை:

  • துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
  • எடுத்துக் கொண்டிருக்கும் காயை முக்கால் பதம் வேகவைத்துக் கொள்ளவும்.
  • ஊறவைத்த பருப்புகள், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், மல்லி விதை, சீரகம் எல்லாவற்றையும் சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • தயிரை நன்கு கட்டியில்லாமல் கடைந்து, தேவையான உப்பு, மஞ்சள் தூள், அரைத்த விழுது, வேகவைத்த காய் சேர்த்து நிதானமான தீயில் அடுப்பில் சூடாக்கவும். ஒன்றிரண்டு முறை மட்டும் கிளறி விடவும்.
  • பொங்கி வரும்போது தாமதிக்காமல் அடுப்பிலிருந்து இறக்கி, மல்லித் தழை சேர்க்கவும்.
  • தேங்காயெண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய், பருப்பு சாதம், அரிசி சேவை…

தேவையான பொருள்கள்:

தயிர் – 1 கப்
வெங்காயம்
வெள்ளரிக்காய்
கேரட்
கோஸ் (உள்பாகம்)
தக்காளி
….
….
கறிவேப்பிலை
கொத்தமல்லி
பெருங்காயம்
கருப்பு உப்பு [काला नमक, Black Salt] – (விரும்பினால்)
உப்பு

தாளிக்க: எண்ணெய், கடுகு, பச்சை மிளகாய்.

thayir pachchadi (राइता, Raitha)

செய்முறை:

  • வெங்காயம், தக்காளி, கோஸ், கறிவேப்பிலை, கொத்தமல்லியை மிகப் பொடியாக அரிந்துகொள்ளவும்
  • வெள்ளரி, கேரட் போன்ற காய்களை துருவிக் கொள்ளவும்.
  • நறுக்கிய, துருவிய காய்கறிகள், பெருங்காயம் கலந்துவைத்துக் கொள்ளவும்.
  • பரிமாறும் நேரத்தில் தேவையான உப்பு, கருப்பு உப்பு (விரும்பினால்), கடைந்த தயிர் சேர்த்துக் கலக்கவும்.
  • சிறிது எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய் தாளித்துச் சேர்க்கவும்.

*  தயிர் சாதத்திற்குச் சொன்னதைப் போலவே தயிர்ப் பச்சடிக்கும் தாளிக்கும்போது அதிக எண்ணெய் அல்லது கலங்கிய எண்ணெய் உபயோகிப்பது பச்சடியின் நிறத்தையும் தரத்தையும் கெடுக்கும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பொதுவாக மேத்தி சப்பாத்தி, புளியோதரை போன்ற உணவுகளுக்கு முடிந்தவரை எல்லா காய்களும் கலந்து செய்யலாம்.

வெஜிடபிள் பிரியாணி, புலவு போன்ற காய்கறிகள் உள்ள உணவிற்கு அதில் இல்லாத காய்களாக(வெள்ளரி, தக்காளி..) மட்டும் சேர்த்துச் செய்யலாம்.

ஏற்கனவே அதிகக் காரமாக உள்ள உணவிற்கு, இதில் பச்சைமிளகாய் சேர்க்கத் தேவை இல்லை.

தாளிக்காமல் கூட, தினமும் ஏதாவது ஒன்றிரண்டு பச்சைக் காய்கறிகளிலாவது தயிர்ப்பச்சடி செய்து கோடைக் காலங்களில் உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லது. 

“இன்னிக்கு ஆத்திலே என்ன தளிகை?”“பொன்னா தளிகையை கேக்கணுமா? பருப்பு, உப்புச்சார், தக்காளி சாத்தமுது நிறைய கொத்துமல்லி போட்டு, வாழைக்காய் கறியமுது, அவியல், பொரிச்ச அப்பளம்.”— புலிநகக் கொன்றை (பி.ஏ. கிருஷ்ணன்)

பொன்னா நாங்குநேரி இல்லையா? நெல்லை மாவட்டத்துல உப்புச்சார் என்பது நீங்க சொன்ன மோர்ச் சாத்துமது மாதிரியேதான். கொஞ்சம் வித்தியாசம்.– நன்றி: ஜெயஸ்ரீ சூர்யநாராயணன்.

 

தேவையான பொருள்கள்:

தயிர் – 1 கப்
அப்பக்கொடி (அல்லது அதளக்காய் வற்றல் அல்லது மணத்தக்காளி வற்றல்)

வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 3
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்

அரைக்க:
தேங்காய்த் துருவல் – அரை கப்
சீரகம் – 1 டீஸ்பூன்

தாளிக்க – கடுகு, கறிவேப்பிலை.

uppuchchaar 3 - mOr kuzambu [2]

செய்முறை:

  • தயிரை நன்கு தண்ணீர் விடாமல் கடைந்து கொள்ளவும்.
  • காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, வெந்தயத்தை வாணலியில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய் சீரகத்தை பச்சையாக அரைத்துக் கொள்ளவும்.
  • கடைந்த தயிரில் உப்பு, மஞ்சள் தூள், அரைத்த மசாலாக்களைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு, பொங்கிவரும்போது இறக்கவும்.
  • எண்ணையில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அப்பக்கொடியையும் கருக வறுத்துச் சேர்க்கவும்.

* அப்பக் கொடி – இது நெல்லை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கும் ஒரு கொடி வகை. அப்பக் கொடி சேர்ப்பது தான் முக்கியம். கிடைக்காத பட்சத்தில் மணத்தக்காளி வற்றல் வறுத்துச் சேர்க்கலாம்.

ஜெயஸ்ரீ, மிகவும் சுவையாக இருந்தது. அன்புத் தோழி வெந்தயம் சேர்க்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் வெந்தயம் தான் மேலும் சுவை சேர்த்தது. விழுங்கியதும் நாக்கினடியில் அதன் மணமும் கசப்பும் அருமை. மணத்தக்காளி வற்றல், வற்றல் குழம்பை விட இதில் தான் சுவையாக இருந்தது.

என் பக்கத்து இரண்டு கேள்விகள்:

இதில் காய் சேர்க்கக் கூடாதா? (என் பெண்)

தாமரைக் கொடி வற்றலைத் தான் அப்பக்கொடின்னு சொல்லுதாங்களோ? (எங்க கடைக்கார அண்ணாச்சி)

தொடர்புடைய இன்னொரு சுட்டி: அன்புத்தோழி

எனக்குத் தெரிந்து மற்ற குழம்பு வகைகள் இல்லாவிட்டாலும், இந்த மோர்க் குழம்பு மட்டும் எல்லா மாநிலங்களுக்குமென்று பிரத்யேகமாக ஒரு வகை இருக்கிறது. இன்று காளன். மற்றவை அப்புறம்.

தேவையான பொருள்கள்:

கெட்டியான தயிர் – 1 1/2 கப்
காய் – 15, 20 துண்டுகள் (பெரிது)
தேங்காய்த் துருவல் – 1 கப்
பச்சை மிளகாய் – 6, 7
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு (விரும்பினால்)
மஞ்சள் தூள்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
தேங்காயெண்ணை
கொத்தமல்லித் தழை.

தாளிக்க: தேங்காயெண்ணை, கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

kaaLan - mOr kuzhambu 1 (kerala)

செய்முறை:

  • மிக லேசாகப் புளித்த, கெட்டியான (கொஞ்சம் க்ரீமியாகவும் இருந்தால் சுவையாக இருக்கும்) தயிரை தண்ணீர் சேர்க்காமல் கடைந்து கொள்ளவும்.
  • ஏதாவது காயை முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  • முற்றிய தேங்காயிலிருந்து எடுத்த தேங்காய்த் துருவல், (ஆனால் கொப்பரை மாதிரி காயாயதாக அல்லது துருவல் ஃப்ரிட்ஜில் வைத்ததாக இல்லாமல், புதிதாக உடைத்த தேங்காயாக இருந்தால் சரியாக இருக்கும்.) பச்சை மிளகாய், சீரகம், இஞ்சியை மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • கடைந்த தயிரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், வேகவைத்த காய், அரைத்த விழுது சேர்த்து அடுப்பில் நிதானமான தீயில் வைக்கவும்.
  • மெதுவாகச் சூடேறி, பொங்கி வரும்போது பச்சைத் தேங்காயெண்ணை 2 டேபிள்ஸ்பூன் சேர்த்து, அடுப்பை அணைத்துவிடவும்.
  • வாணலியில் எண்ணையில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.

* வெண்டை, கத்தரி, முருங்கை, வாழை, சேனை, சேப்பங்கிழங்கு என்று நாட்டுக் காயான எதையும் உபயோகிக்கலாம். எனக்குப் பிடித்தது பூசணிக்காய்.

* இன்னும் காரம் தேவை என்று தோன்றினால் தாளிக்கும்போது ஒரு காய்ந்த மிளகாய் அல்லது மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக நான் செய்வதில்லை.

* வாழை சேனை மட்டும் சேர்த்துச் செய்தால் தான் காளன். இது மோர்க் காளன் என்று சிலர் சொல்கிறார்கள். எப்படியும் இது மோர்க் குழம்பில் ஒரு வகை. அவ்வளவே. அப்புறம் நான் எப்பொழுதும் மோர்க் குழம்பு செய்வதும் இந்த முறையே. 

* அடுப்பில் வைக்காமலே மஞ்சள் தூள், உப்பு, காய், அரைத்த விழுது எல்லாம் சேர்த்து பச்சை மோர்க் குழம்பும் செய்கிறார்கள்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் பருப்பு கலந்த சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். எந்தக் காரக் கறி அல்லது பருப்பு உசிலியுடனும் சேரும். குழம்பிலிருக்கும் காய் தயிர்சாதத்திற்கு சுவையாக இருக்கும்.

அடை, இடியாப்பம், ஆப்பம் வகைகளுக்கும் இந்தக் குழம்பை தொட்டுக் கொள்ளலாம்.

போகிப் பண்டிகை, பொங்கல், கனுப் பொங்கல் நாள்களில் கிட்டத்தட்ட அனைத்துவிதமான நாட்டுக் காய்கறிகள், பச்சைப் பயறுகளையும் சமையலில் உபயோகித்துவிடுவோம். இப்போது காய்கறிக் கடைகளிலேயே எல்லாவற்றையும் நறுக்கிக் கலந்து தயாராகவும் கிடைக்கிறது. ஆனால் தனித் தனியாக வாங்கிச் செய்தால் நம் விருப்பப்படி தேவையான அளவுகளில் தேவையான நீளத்தில் நறுக்கிச் செய்யலாம்.

போகிப் பண்டிகைக்கு அவியல்…

தேவையான பொருள்கள்:

அவரை, கத்தரி, கொத்தவரங்காய், பரங்கி, பூசணி, புடலை, சேனை, வாழை, தட்டங்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு……

பச்சைப் பட்டாணி, பச்சை மொச்சை, பச்சைக் காராமணி, நிலக்கடலை….

உருளைக் கிழங்கு, பீன்ஸ், கேரட், கோஸ், குடமிளகாய், முருங்கை,….(விரும்பினால் மட்டும். சிலர் நாட்டுக்காய் தவிர மற்றவை இந்த நாள்களில் சேர்ப்பதில்லை. ஆனால் பொதுவாக அவியலுக்கு இவையும் சுவை சேர்க்கும்.)

தேங்காய் –  1 (பெரிது)
பச்சை மிளகாய் – 10-12
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப் பால் – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தயிர் –  2-3 கப்
தேங்காய் எண்ணை – 1/4 கப்

aviyal 1  aviyal 2
 
செய்முறை:

  • காய்களைக் கழுவி, பெரிய அளவுத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  • கத்தரிக்காய், முருங்கையை முக்கால் பதத்திற்கு வேகவைக்கவும்.
  • மற்ற அனைத்து காய், பயிறுகளையும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நீர் சேர்க்காமல் குக்கரில் வேகவிடவும்.
  • தேங்காயைத் துருவி, பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த காய்கறிகள், அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போய், கலவை நன்றாக இறுகும்வரை கிளறவும்.
  • புளிப்பில்லாத கெட்டித் தயிராக எடுத்துக் கொள்ளவும். தயிர் கெட்டியாக இல்லாவிட்டால் மெல்லிய துணியில் அல்லது பனீர் வடிகட்டியில் வடிகட்டி ஓரளவு நீரைப் பிரித்துவிடவும்.
  • தேங்காய்ப் பால், தயிரையும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பை அணைத்துவிடவும்.
  • மீதி தேங்காயெண்ணையைச் சேர்த்து, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

aviyal

* அவியல் தயாரிக்கும்போதே தண்ணீர் சேர்க்காமல், கெட்டியான தயிரில் செய்தால், வேறு மாவு சேர்க்கத் தேவை இல்லை. திட்டமான பதத்தில் வரும். சமாளிக்க முடியாத தளர்வாக இருந்தால் மட்டுமே அரிசி மாவு கரைத்து விடலாம். இது சுவையில் கொஞ்சம் சமரசமே.

(இன்று Vashi Fine Arts தயாரித்து அளித்த “தஞ்சாவூர் Vs பாலக்காடு” என்ற நாடகம் பார்க்கச் சென்றிருந்தோம். நடந்த அடிதடிகளைப் பார்த்தால்(நாடகக் கதையில்தான்) இதில் இன்னும் சில நுண்ணிய வேறுபாடுகள் இருக்கலாம். தெரிந்துகொண்டு update செய்கிறேன். சுவையைப் பொருத்தவரை ஓஓ… நான் கொறைச்சு பாலக்காடு பக்கம் சாய்வெனாக்கும்!.)

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய், பருப்புடன் கலந்த சாதம்(கூடவே பொரித்த அப்பளமும், வடையும் இருந்தால் கலக்கலாக இருக்கும்..), அடை,….

மார்கழி 28ஆம் நாள் செய்யும் சாதம். (“கறவைகள் பின்சென்று…..”)

தேவையான பொருள்கள்:

அரிசி –  1 கப்
தண்ணீர் – 2 கப்
பால் – 5 கப்
தயிர் –  2 டேபிள்ஸ்பூன்
வெண்ணை –  2 டேபிள்ஸ்பூன். (விருப்பமானால்)
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை –  சிறிது
தாளிக்க –  எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை…

thayir saadham (maarkazhi 28)

செய்முறை:

  • அரிசியைக் களைந்து நீரை வடித்துக் கொள்ளவும்.
  • 2 கப் பால், 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும்.
  • சூட்டோடு திறந்து, உப்பு, தயிர் சேர்த்து கரண்டியால் நன்கு மசித்து, சூடான பால் சேர்த்து தளரக் கலக்கவும்.
  • 5 நிமிடங்கள் க்ழித்துத் திறந்தால் சாதம் இறுகியிருக்கும். இன்னும் சிறிது சூடான பால் சேர்த்து மூடி வைக்கவும்
  • மீண்டும் 5 நிமிடங்களில் நிறைய பால், வெண்ணை சேர்த்து மிக மிகத் தளர்வான பதத்தில்* கலக்கவும். அப்போதுதான் சாப்பிடும் நேரத்தில் சரியான பதத்தில் இருக்கும்.
  • எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு,  பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லித் தழை  சேர்த்து கலந்து வைக்கவும்.
  • இந்தத் தயாரிப்பை இரண்டு மணிநேரங்களில் சாப்பிடச் சரியாக இருக்கும். அதற்குமுன் சாப்பிட வேண்டிவந்தால் இன்னும் சிறிது தயிர்சேர்த்து உபயோகிக்கலாம்.

* கலக்கும்போது சரியான பதத்தில் கலந்துவிட்டு சாப்பிடும்போது இறுகியிருப்பதற்காக மீண்டும் தயிரோ, பாலோ சேர்த்துத் தளர்த்தினால் அது சுவையாக இருக்காது.

* தேவைப்பட்டால் கேரட், வெள்ளரியைத் துருவி பரிமாறும் நேரத்தில் சேர்க்கலாம். அல்லது கொட்டை இல்லாத பச்சை திராட்சையையும் சேர்க்கலாம்.

* சாப்பிட இன்னும் 4 மணி நேரங்களுக்கு மேல் ஆகுமென்றால் உபயோகிக்கும் பால் மிதமான சூட்டிலும், மிக அதிக நேரம் ஆகுமென்றால் (பயணங்களுக்கு எடுத்துப் போவது) முற்றிலும் ஆறிய பாலையே உபயோகிக்க வேண்டும். சாதமும் சற்று சூடு ஆறியபின் கலக்க ஆரம்பிக்கலாம். இல்லாவிட்டால் சீக்கிரம் புளித்துவிடும்.

* சாதத்தில் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக்கிச் சேர்ப்பது வெகுநேரத்திற்கு புளிக்காமல் இருக்க உதவும்.

* தாளிக்கும் எண்ணை மிகமிக லேசானதாக, ஏற்கனவே உபயோகிக்காததாக இருக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் பாலும் வெண்ணையுமே சுவையைக் கூட்டும் என்பதால் கடுகு நனையும் அளவு எண்ணையில் தாளித்தால் போதுமானது. அதிகமான அல்லது கலங்கலான எண்ணை மொத்த தயிர்சாதத்தின் நிறத்தை மட்டுப்படுத்திவிடும் அல்லது கெடுத்துவிடும்.

தயிர்சாதம் குறித்த மேலும் இரு குறிப்புகள் 🙂
http://www.maraththadi.com/article.asp?id=429
http://www.maraththadi.com/article.asp?id=2029
 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சொல்லி மாளுமா என்று தெரியவில்லை. வக்கணையாக செய்யப்பட்ட தயிர்சாதத்தை ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சாப்பிடலாம் என்றாலும் முதல் கட்டமாக சிலவற்றைச் சொல்லலாம். ஆவக்காய், எலுமிச்சை இதர ஊறுகாய் வகைகள், சாம்பார், குழம்பு, காய், கூட்டு, துவையல்… எல்லாவற்றையும் முந்திக் கொண்டு மாவடு. இன்னும் முக்கியமாக வேறு எதனோடும் சேராமல் அல்லது தயிர்சாதத்திற்கென்றே பிரத்யேகமாக ஜீவித்திருப்பது மோர்மிளகாய். எனக்குத் தெரிந்து வீட்டைத் தவிர ஹோட்டல்களில் சரவண பவனுக்குத்தான் இதில் முதலிடம். குறிப்புகள் இனி வரும்.

வாழைப்பூ கேள்விப்பட்டிருக்கலாம். அதற்கும் தயிர்சாதத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கும்முன் கொஞ்சம் சொந்தக் கதை. வாழைப்பூ வாங்கி உரிக்கும் நாளிலெல்லாம் எங்களுக்கு பாட்டி சாதம் பிசைந்து கையில் போடுவார். கைக்கு அடியில் வாழைப்பூவின் மடலில் ஊறுகாயை வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்துக்கொண்டால்(மாவடுவாக இருந்தால் ஒரு கடி கடித்து வாயிலேயே வைத்துக் கொள்ளலாம்.), அதில் பாட்டி சாதத்தைப் போட, அது பாட்டுக்கு அளவில்லாமல் உள்ளே இறங்கும்.

மசித்த கீரையில் வத்தக்குழம்பு கலந்த கலவை தயிர் சாதத்தோடு சுவையில் பல எல்லைகளைத் தொடும். பாட்டி வலதுகையால் சாதத்தைக் கையில் போட, நாங்கள் கட்டைவிரலால் அதில் நடுவில் குழித்துக் கொண்டால், இடதுகையால் ஒரு ஸ்பூனில் கீரைக் கலவையை பாட்டி அதில் விட, நாங்கள் சாப்பிட… சொல்ல மறந்த முக்கிய விஷயம், முதல்நாள் கைகளில் மருதாணி இட்டு அழித்திருந்தால் (கடைகளில் வாங்கிய பொடியாக இல்லாமல், பசுமையான இலையை அரைத்து இட்டிருக்க வேண்டும்) அதற்காக இந்திர லோகத்தையே எழுதிவைக்கலாம். வாயருகே சாதத்தைக் கொண்டுவரும் போதெல்லாம், அந்த வாழைப்பூ மடல், தயிர்சாதம், கீரை, வத்தக்குழம்புடன் மருதாணியின் கலவையான வாசனைக்கும் சுவைக்கும் பாட்டியின் வாஞ்சையும் சேர்ந்து, என்னைக் கேட்டால், உலகின் மிகச் சிறந்த மேட்ச் ஃபிக்சிங் இதுதான்.