இருபது வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூர், கும்பகோணம் போகும்போதெல்லாம் என் தந்தை வாங்கிவருவார். இப்பொழுது எல்லா இடங்களிலும் பிரபலம். முக்கியமாக திருமணம் மாதிரி விசேஷங்களில் மெனுவில் முக்கிய இடம் பெற்றுவிட்டது.
தேவையான பொருள்கள்:
பயத்தம் பருப்பு – 1 கப்
பால் – 2 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 1 கப்
கேசரி பவுடர் (விரும்பினால்)
ஏலக்காய்
பச்சைக் கற்பூரம்
முந்திரி, பாதாம் வகைகள்
செய்முறை:
- பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
- பால் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேகவிடவும்.
- குக்கர் திறக்கவந்ததும் சூட்டுடனே வெளியே எடுத்து, நன்கு மசித்துக்கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் சர்க்கரை, மசித்த பயத்தம்பருப்பு கலந்து கிளறத் தொடங்கவும்.
- முதலில் சர்க்கரையால் நெகிழ்ந்து, பின் கலவை இறுக ஆரம்பிக்கும்.
- சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்து விடாமல் கிளறவும்.
- நன்கு சேர்ந்து ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.
- இறக்குவதற்கு சற்றுமுன் கலர் (நான் சேர்க்கவில்லை.), ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், உடைத்த அல்லது நொறுக்கிய கொட்டைப் பருப்புகள் சேர்க்கவேண்டும்.
* பல தளங்களில் கோதுமை மாவு ஒரு பங்கு சேர்ப்பதாக இருக்கிறது. இது எனக்குச் செய்தி. ஒருவேளை இப்பொழுது திருமணம் மாதிரி பெரிய விசேஷங்களிலும் செய்வதால் அளவிற்காக கோதுமை மாவு சேர்க்கிறார்களா என்று தெரியவில்லை. எதற்கும் சேர்க்காமல் ஒருமுறை செய்துபார்த்து அதன் ஒரிஜினல் சுவையை அனுபவித்துவிட்டு விரும்பினால் மாவு சேர்த்தும் செய்யலாம் என்பது என் அக்கறை கலந்த ஆலோசனை.
* எனக்கு இந்த முறையே வசதியாக இருப்பதாலும் பிடித்திருப்பதாலும் ஒவ்வொரு தீபாவளிக்கு முன்தினமும் (லக்ஷ்மி பூஜைக்கு பயத்தம்பருப்பு சேர்த்து செய்யநினைத்து) இருக்கிற பூஜை, கொண்டாட்ட நெருக்கடியில் விரைவாகச் செய்யமுடிவதாலும் இப்படியே செய்துவருகிறேன்.
* அறுசுவை நடராஜன் குறிப்பு ‘சம்பா‘ கோதுமை மாவு சேர்த்தது; பாலுக்கு பதில் கோவா. அடுத்து வருகிறது.