“அம்மா, என்னோட பல்லாங்குழி ஒன்னு இருக்குமே அது இப்ப எங்க?” இப்படி ஃபோன்பேசி வீட்டுக்குக் கேட்டு சில மாசங்கள் இருக்கும்.
“யாருக்குத் தெரியும்? அதான் வீடு இடிச்சுக் கட்டும்போது எல்லா சாமானும் போயிடுச்சில்ல, அதுல இதுவும் போயிருக்கும். இப்ப என்ன திடீர்னு காலங்கார்த்தால பல்லாங்குழி நியாபகம்?”
எது நடந்திருக்கக் கூடாதுன்னு பயந்தேனோ அதுதான் நடந்திருக்கு. 😦
“அதெப்படிம்மா போகும்? என்ன அலட்சியமா பதில் சொல்றீங்க..” மெதுவா கோபம் கிளம்பிச்சு.
“என்னைக் கேட்டா? உங்கப்பாவையே கேளு. தானப் பிரபு எல்லாத்தையும் ஊராருக்கு வாரி வழங்கிட்டாரு.. ஆனான அம்மியும், உரலும், கொலுப் படிக்கட்டும் போனதுக்கே கேக்க முடியாம இருக்கேன். பெரியவங்க ஆண்டு பழகினது. இனிமே தேடினாலும் அப்படி சாமானெல்லாம் கிடைக்குமா. நீ என்னவோ பல்லாங்குழிக்கும் சில்லாக்குக்கும் வந்துட்ட. ”
“சரி, அப்பாகிட்ட ஃபோனைக் குடு”
“எத்தனை குழந்தைகள் ஆடின மரத் தொட்டில்… போகப் போற குழந்தையை அதுல போட்டாக் கூட பொழச்சு எழுந்துக்கும் தீர்க்காயிசோட… அதைத் தூக்கி எவனோ பழைய சாமான் எடுக்கறவன், பாக்கப் பாவமா இருந்ததுன்னு கூப்டு வெறுன குடுத்திருக்கா..”
“அம்மா, ப்ளீஸ், அப்பாகிட்ட கொடு!”
வெளில போயிருக்கா. வந்ததும் பண்ணச் சொல்றேன். ஆமா, நீ என்ன காலங்கார்த்தால 7 மணிக்கு பல்லாங்குழியை நினைச்சுண்டாப்ல கேக்கற. உனக்கு வீட்டுல வேலையே இருக்காதா…?”
அம்மாவோட இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாம். பாவம். அப்ப மூட் இல்லை. வெச்சுட்டேன். அப்பா வந்து போன் பண்றதுக்குள்ள இடைப்பட்ட நேரத் தவிப்பை சொல்லவே முடியாது. நிதானமா வந்து சாப்பிட்டப்பறம் எங்கம்மா சொல்லி, எங்கப்பா எடுத்து, “சொல்லும்மா..”
“என் பல்லாங்குழி என்னாச்சுப்பா?” வேற எதுவும் முதல்ல கேக்கப் பொறுமை இல்லை.
“அப்படீன்னா?”
“ப்ச்! மரத்துல செஞ்சிருக்குமே. மூடி வெச்சா பீர்க்காங்காய் ஷேப்ல இருக்குமேப்பா. குழி குழியா புளியங்கொட்டை எல்லாம் போட்டு விளையாடுவோமே..”
“ஓ, நான் கூட உரல், குழவின்னு அம்மா புலம்புவாளே, அந்த மாதிரி எதோன்னு நினைச்சு பயந்துட்டேன். விளையாடற சாமானா?” [“ஓ பழய கடிகாரமா, நான் கூட புதுசோன்னு பயந்திட்டேன்!”ன்னு அப்ரசண்டிகள் ஒடைச்ச ஜெர்மன் கடிகாரத்துக்கு சித்தப்பு, சொல்லும்போது எவ்ளோ சுலபமா விழுந்து விழுந்து சிரிக்கறோம்? 😦 ]
“தெரியலையே. மரச் சாமானெல்லாம் வேணுங்கறவங்களுக்கு கொடுத்திட்டேனே. விளையாட்டு சாமான்னா பக்கத்துவீட்டு வேலைக்காரக் கிழவி தான் பேரக்குழந்தைகளுக்கு இருக்கட்டும்னு எடுத்துகிட்டுப் போனான்னு நினைக்கறேன்.”
“என்ன விளையாடறீங்களாப்பா, போய் கேட்டு வாங்குங்க”
“உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? அவ பேரன்களெல்லாம் காலேஜ் போயிட்டாங்க”
“அதனால தான் சொல்றேன். அவங்களுக்கு எதுக்கு? என் பொண்ணு கேக்குதுன்னு சொல்லிக் கேளுங்க”
“என்னடா எனக்கு இப்படி விடிஞ்சிருக்கு இன்னிக்கி…. சரி பாக்கறேன்”
“பாக்கறேனெல்லாம் வேண்டாம். எனக்கு வேணும்!!”
‘நான் கொடுத்த கிழவி கொட்டாவி விட்டுட்டா’ன்னு பொய் சொல்லியிருக்கலாமில்ல?’ன்னு அப்புறம் தம்பி (Grrrr….) அட்வைஸ் செஞ்சானாம். இந்தத் தடவை ஸ்ரீரங்கம் போயிருந்தபோது நானும் நேர்லயே கேட்டுப் பார்த்தேன்.
“அது என்ன எளவோ தெரியலையே… அப்பாரு கூட கேட்டாரு. நினைப்புலயே இல்லை. புள்ளைங்க எங்கக் கொண்ட போட்டுச்சுங்களோ… அதெல்லாம் இப்ப யார் விளையாடுறாங்க… நல்லா இருக்கியா? எங்கிட்டு இருக்க?… போக வண்டிச் சத்தம் என்ன ஆகும்? வூட்டுக்காரரு நல்லா வெச்சிருக்காராத்தா? அந்த ஒத்தப் பொண்ணு தான் இல்ல?…. ஏன் ஆத்தா, இன்னும் கூட ஒன்னு ரெண்ட பெத்துப் போட முடியாமயா இருக்க?… தனிமரம் தோப்பாகுமா சொல்லு?… இப்படித்தான் என் கொழுந்தன் பேத்தி, ஒன்னு போதும் ஒன்னு போதும்னு இருந்துட்டு, 15 வயசுல வாரிக் கொடுத்திடுச்சு……………….”
“எதுக்கும் உங்க வீட்டுல தேடிப் பாக்கறீங்களா ஆயா?”
“அப்றம் எட்டு வீடு பிரிச்சு கட்டியாச்சு. இருந்தா தெரியாமயா இருக்கு? அந்தக் கருமாந்திரத்தை எல்லாம் இப்ப யார் விளையாடறாங்க?”
“இப்ப என்னம்மா செய்யறது?” அப்பாவுக்கு இப்பத்தான் லேசா குற்றவுணர்ச்சியே கண்ணுல தெரியுது.
“அவங்க சொல்ற மாதிரி இன்னும் ஒன்னு ரெண்டைப் பெத்துப் போட வேண்டியதுதான்.” – அண்ணன்.
“சே, பாவம் அந்தப் பாட்டி. சின்னக் குழந்தையாட்டம் கொடுத்ததைக் கேக்கறதெல்லாம் ஓவர்.” – தம்பி.
“உங்கப்பா கண்டிக்காம வெச்சிருக்காளே!” – அம்மா.
“ஆனா உன்னைவிட ஒம்பொண்ணு எவ்வளவோ மெச்சூர்ட்டா! அதைச் சொல்லியே ஆகணும்.” – அப்பா.
“அது என் பொண்ணு. இது உங்க பொண்ணில்ல..”, நேரம் பார்த்து ரங்கமணி கத்தி செருக, பேசக் கூடப் பிடிக்காம உள்ள போயிட்டேன். எல்லாருக்கும் என் பொழப்பு நக்கலாப் போச்சு. 😦
-0-
“ஹை ஜாலி அப்பா வந்தாச்சு!!” அப்பா ஆபிசுலேருந்து அல்லது ஊரிலேருந்து வரும்போது குதிச்சு எத்தனை வருஷமாச்சு? அல்லது எத்தனை வயசு வரைக்கும் குதிச்சுகிட்டிருந்தேன், நினைவில்லை. ஆடிட்டிலேயே தமிழ்நாடு முழுசும் சுத்திண்டிருந்த அப்பா… அப்பா வரதைவிட அதனால் வரப் போகிற ஆய பயன்கள்– உடனே பையிலிருது எடுக்கற சாப்பிடற பண்டங்கள், (அல்வா, பால்கோவா மாதிரி…), இது உடனடி மகிழ்ச்சி.. அப்புறம் கடைகளுக்கு, சினிமாவுக்கு கூட்டிப் போறது, கேட்டதையெல்லாம் வாங்கித் தர்றது (பொண்ணு கேட்கவே வேண்டாம், கண்ணால ஒரு பொருளை ஒரு செகண்ட் தயங்கிப் பாத்தாலே அவப்பா வாங்கித் தந்துடுவா அப்டீங்கறது அம்மாவோட இன்னும் தொடர்கிற குற்றச்சாட்டு. “ஆமா, கேட்டதை எல்லாம் வாங்கித் தந்திருக்கேன். ஆனா என்னால முடியாத எதையும் அவ கேட்டதில்லை” ங்கறது அப்பா தரும் நற்சான்றிதழ்!), இதையெல்லாம் விட முக்கியமாக பிராகரஸ் ரிப்போர்ட்ல கையெழுத்துப் போடரது (ஐயோ, அம்மா கிட்ட காட்டவே முடியாது. முதுகுத் தோலை உரிச்சுடுவா. எவ்ளோ மார்க் வாங்கினாலும், “நான் படிச்சு பேர்வாங்கின ஸ்கூல். இதுல எல்லாம் கையெழுத்துப் போட்டு என் பேரைக் கெடுத்துக்க முடியாது. உங்கப்பாகிட்டயே வாங்கிக்க!”ன்னு சொல்லி கடைசில கையெழுத்தும் போட மாட்டா. இரக்கமே கிடையாது. ‘இதுக்கு எதுக்கு காட்டி திட்டு வேற வாங்கற. பேசாம உள்ள வெச்சுடு, அவன் வந்ததும் வாங்கிக்கலாம்’னு பாட்டிதான் ஐடியா.)
அப்புறம் காலேஜ் சேர்ந்ததும், அப்பா வாங்கித் தர பொருள்கள் மகிழ்ச்சியா இருந்தாலும் குதிச்சதில்லை. அதிகம் வெளிக் காண்பிச்சதில்லை. கல்யாணம் ஆகி வந்ததும் அப்பா வாங்கிவர பொருள்கள் அதைவிட விலைமதிப்பானவை. ஆனா எதுவுமே பெரிய அளவுல சந்தோஷம் கூட கொடுக்கறதில்லை. அப்பான்னு இல்லை, அண்ணன், தம்பி, மாமா, சித்தப்பா, ரங்கமணி யார் வாங்கினாலும் பரிசுகள், புடைவை, நகை மற்ற எதுவுமே கொடுக்கிறீங்களா தாங்க்ஸ், இல்லையா, எதுவும் இழப்பில்லைன்னு ஒரு நிலை. பொருள்களை விட அப்பா வரது மட்டுமே மகிழ்ச்சியா மாறிப் போச்சு.
போன மாசம் வந்தபோதும் குருவாயூர்(கேரளப்) புடைவை, தங்கத்துல சின்ன தோடு-ஜிமிக்கி,…. கடைசில “டடன் டடன் டடாண்..” சவுண்டெல்லாம் பலமா கொடுத்து வெளில எடுத்தாரு. பாத்தா, ஒரு பல்லாங்குழி. ரொம்ப சந்தோஷப்படுவேன்னு எதிர்ப்பார்த்தாரு போல. எனக்குக் குழப்பமா இருந்தது.
“இதை எதுக்கு வாங்கிட்டு வந்தீங்க?”
“நான் கூட இது கிடைக்காத சாமான்னோனு கொஞ்சம் பயந்திட்டேன்டா. பாத்தா ஸ்ரீரங்கம் முழுக்கக் கொட்டிக் கிடக்கு.”
“ஆமா, எனக்குத் தெரியாதாக்கும்!. ஆனா நான் கேக்கலையே”
“நீ தானே இதை வேலைக்காரம்மா கிட்ட எல்லாம் கெஞ்சிக் கேட்டுகிட்டிருந்த? நல்லவேளை கிடைச்சது. சோழி தான் இங்க நல்லா இல்லை. இப்போதைக்கு வெச்சுக்க. இராமேசுவரம் போய் குட்டிக் குட்டியாய் ஒரே மாதிரி வெள்ளைவெளேர்னு சோழி கிடைக்கும், வாங்கித் தரேன்…..”
“அப்பா ப்ளீஸ், நான் கேட்டது நான் விளையாடினதை. இது எனக்கு எதுக்கு?”
“அதுக்கும் இதுக்கும் என்ன வித்யாசம். அதே தானே இது? பல்லாங்குழின்னா ஒன்னுதான்னு சொன்னானே கடைல..!”
இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்குத் தெரியலை.
“அதுல குழி எல்லாம் பெருசா இருக்கும்பா. எவ்ளோ ‘அளவான்’ வந்தாலும் நிறையவே நிறையாது. வழ வழன்னு இருக்கும் மரம். இப்படி ஃபினிஷிங் இல்லாம இருக்காது. கையால காய் எடுக்கும்போது சொரசொரன்னு குத்தி, கை வலிக்காது. இதெல்லாம் சும்மா பேருக்கு செய்றதுப்பா!”
“இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? சரி விடு. அப்ப சொல்லியே செய்யச் சொல்லலாம். எனக்குப் புரியலை. அம்மாகிட்ட தெளிவா சொல்லு. ஆசாரியை செய்யச் சொல்றேன்.”
அப்பாவோட இதான் பிரச்சினை. பதின்ம வயசுலயே திடீர்னு ஒருநாள் நடுத்தெருவுக்கு வந்துட்டாரு. அப்புறம் வாழ்க்கைல உழைப்புலயும் உறவுகள் மேலயும் இருக்கற நம்பிக்கையும் அபிமானமும் உடைமைகள் மேல அவருக்கு என்னிக்கும் வரதில்லை.
“ஆனா என்னோடதுல ரெண்டு ஆணில ஒன்னு லூசா இருக்கும். கொடகொடன்னு ஆடிண்டே இருக்கும். மூணாவது குழிகிட்ட ஒரு நெயில்பாலிஷ் கறை வேற இருக்கும்…”
அப்பா மையமா என்னைப் பார்த்தாரு. திடீர்னு சூழ்நிலை ரொம்ப அமைதியாயிடுத்து. எனக்கே தெரிஞ்சுடுத்து நான் கொஞ்சம் ஓவரா ஒளற ஆரம்பிச்சுட்டேன்னு.
“எனக்கு என்னோடதுதாம்பா வேணும். எனக்கு அதைப் பாக்கணும்போல இருக்கு….” பேசாம தலையை குனிஞ்சுகிட்டு சோழியைக் கிளறிண்டிருந்தேன். பாவம் அப்பா. பேசாம எழுந்து போயிட்டேன். அது அங்கயே ஒருநாள் முழுக்க சீந்துவாரில்லாம இருந்தது. அடுத்தநாள் தான் எடுத்துவெச்சேன்.
ஊருக்குக் கிளம்பும்போது சிரிச்சுண்டே, “பரவாயில்லை, இந்தப் பல்லாங்குழியை பத்திரமா எடுத்துவை. உன் பேத்தி நாளைக்கு இப்படி கேக்கும்போது கொடுக்கலாம். சொன்னமாதிரி சோழி மட்டும் வேற வாங்கித் தரேன்.”
‘ஏன் இப்படி மாத்தி மாத்தி வீட்ல சாமானை அடைக்கிறீங்க”ன்னு ரங்கமணி கமெண்ட் விடறதைவிட பெருசா எதுவும் பிரயோசனமில்லை. அல்லது என் பழைய பல்லாங்குழியை நினைவுப் படுத்தி இன்னும் எங்கிட்டயும் இது திட்டுதான் வாங்கப் போகுதுன்னு முதல்ல நினைச்சேன்.
ஆனா இப்பல்லாம் எத்தனையோ வேலைகளுக்கு நடுவுல, மன அழுத்தங்களுக்கு நடுவுல, சோர்வுல, சந்தோஷத்துல, பாட்டு கேட்கிறப்போ, தனிமைல, பேய்மழை தர பயத்துல இப்படி எந்த சூழ்நிலைலயும் அப்படியே போட்டுட்டு இதோட அஞ்சு நிமிஷம் உட்கார்ந்தாலே மனசு இன்னும் லேசா ஆயிடுது. ஆசுவாசமா இருக்கு. இதை அப்பாகிட்ட சொல்வேனான்னு தெரியலை. காசி, முத்து, நாலு காய் எல்லாமே ஆடிப் பார்த்துட்டேன்.
-0-
சின்ன வயசுல யாரோடயாவது சண்டை போட்டு கோபம் வந்தா, அப்பா ஆபிசுலேருந்து வந்து சம்பந்தப்பட்டவங்களுக்கு சாத்து கொடுக்கறவரைக்கும் மாவு அரைக்கிற கல் இயந்திரம் ஒன்னு கூடத்துல இருக்கும், அதுமேல ஏறி உம்ம்னு உக்காந்திருப்பேன். சும்மா கோபமா இருக்கேன்னு உலகத்துக்கு(வீட்டுக்குத் தான்) சொல்றதுல இது ஒரு பாணி. மாமியாருக்கு ஆகாதுன்னு பாட்டி சொல்ல, அம்மா வந்து தூக்கப் பாப்பாங்க. இயந்திரத்தோட கைப்பிடி ஒரு மரக்குச்சி மாதிரி இருக்கும். அதை இறுக்க பிடிச்சுகிட்டா நம்பளைத் தூக்க முடியாது. நல்லா திட்டிட்டு போயிடுவாங்க.
அப்ப தம்பி தான் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, பல்லாங்குழியை தூக்கிகிட்டு வருவான். சின்னக் கையால முதல்ல பல்லாங்குழி; அப்புறம் புளியங்கொட்டை; அப்புறம் சப்பைக் குழிகளுக்குப் போடறதுக்குன்னு கதவு நிலைப்படில சில்லாக்கு ஒடிசல் எல்லாம் வெச்சிருப்பேன்; அதெல்லாம் எடுத்து வைப்பான். நடு(காசிக் குழி) தவிர்த்து எல்லாக் குழிலயும் 12 காய் போடுவான்.
இதெல்லாம் கவனிக்காத மாதிரி ஆனா அடிக்கண்ணால பாத்துகிட்டிருப்பேன். “விளையாடலாமா?” க்கு இன்னும் வேகமா வேற பக்கம் மூஞ்சியைத் திருப்பிப்பேன். “நான் முதல்ல விளையாடறேன், நீயே ரெண்டாவதா விளையாடிக்கோ”ன்னு சொல்லி பெருந்தன்மையா ஆட ஆரம்பிப்பான். முதல்ல ஆடறவங்க மூணாவது குழியைப் பிரிச்சு ஆடினா அவங்களுக்கு ஒரு காயும் ஒரு அளவானும் தான் கிடைக்கும். அதைத் தொடர்ந்து இரண்டாவதைப் பிரிச்சு ஆடறவங்களுக்கு இரண்டு அளவான் கிடைக்கும். அதனால் இரண்டாவதா ஆடறதை நான் கோபமா இருக்கறதால எனக்கு விட்டுத் தரானாம். போனாப் போவுதுன்னு[:)] நானும் பிடிக்காத மாதிரி விளையாட ஆரம்பிப்பேன். அப்புறம் ஒரு நேரத்துல விளையாட்டு ஜோர்ல என்னை அறியாமலே இயந்திரத்துலேருந்து கீழ இறங்கிடுவேன். 🙂
எல்லா நேரத்துக்கும் தம்பி வரமுடியுமா? அவனும் வரமுடியாத சமயங்களும் உண்டு. அப்பல்லாம் ‘சீதையாட்டம்’ அப்படீன்னு ஒன்னு. வரிசையாக 7, 6, 5….,1 ன்னு குழிகள்ல ஒவ்வொன்னா குறைச்சுப் போட்டுண்டே வரணும். பிரிச்சு விளையாடிண்டே இருந்தா நிக்காம ஓடும். திடீர்னு எப்படிப் போட்டோமோ அதே வரிசையில காய்கள் குழிகள்ல திரும்ப 7, 6, 5, ….,1 ன்னு வந்து ஆட்டம் நின்னுடும். இதை ஒருத்தர் மட்டுமே தனியா விளையாடணும். கூடத்துல இருக்கற மாடிப்படியோட கீழ்ப் படில குறுக்கே காலை Vஐ கவுத்துப் போட்ட மாதிரி மடக்கி உட்கார்ந்து (இப்ப அந்தப் படி எல்லாம் காணாது.) விளையாடிண்டிருந்தா, மாடிக்கு ஏறரவங்களும் இறங்கறவங்களும் வழியைவிடச் சொல்லி சத்தம் போடுவாங்க. நாம தான் கோபமா இருக்கமே, அதனால அதை எல்லாம் கேக்கணும்னு இல்லை. போர், காதல் மட்டுமில்லை, கோபத்திலயும் எதுவும் தப்பில்லை.
முதல்ல எல்லாம் மாடியோட மேல்ப் படில தான் உட்கார்ந்திருப்பேன், அப்பத்தான் ரொம்பக் கோபம் மாதிரி ஒரு எஃபக்ட் கிடைக்கும்னு. அண்ணனும் தம்பியும் கண்டுக்காம அதோட கைப்பிடிக் கட்டைல சறுக்குமரம் மாதிரி சறுக்கிப் போயிடுவாங்க. ஆனா ஒரு தடவை ஏறும்போது அவசரத்துக்கு நான் எழுந்திருக்கலைன்னு அண்ணன் கிச்சுகிச்சு மூட்டறேன்னு செஞ்சு, தடதடன்னு படில ரெண்டுபேரும் உருண்டு விழுந்து பல்லாங்குழியும் புளியங்கொட்டையும் சிதறிடுச்சு. கடைசில வீட்டுல எல்லாருக்கும் என்னோட கோபம் தணிக்கும் நடவடிக்கைல எனக்குக் கைகால் சரி செய்யறது, பல்லாங்குழிக்கு ஆணி போடறது, சிதறின கொட்டை பொறுக்கற வேலை எல்லாம் வேற சேர்ந்திடுச்சு. சரி போனாப் போகட்டும்னு கீழ்ப்படிதான் அப்புறம். அழுத்தமா ஒக்காந்து, விடாம விளையாடுவேன். திட்டிகிட்டே தாண்டிக் குதிச்சுப் போவாங்க. பாட்டி வந்து பாத்தா, “ஐயோ, ஆகவே ஆகாது, உனக்கென்னா தலையெழுத்தா, இதை மட்டும் விளையாடாதே!” ன்னு பாதிலயே கலைச்சுப் போட்டுடுவா. முழுசா அதிகம் விளையாடாததால இப்ப எப்படி விளையாடறதுன்னு மறந்திடுச்சு. :((
ராமன் கழட்டிவிட்டப்பறம் சீதை காட்டுல தனியா இருக்கும்போது எப்பவும் இந்த விளையாட்டு தான் விளையாடிண்டிருப்பாளாம். யாருக்காவது இது எப்படி விளையாடணும்னு தெரியுமா?