கார மிக்ஸர் – 1

 
தேவையான பொருள்கள்:

அவல் – 3 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
பயத்தம் பருப்பு –  1 கப்
நிலக்கடலை – 1 கப்
பொட்டுக் கடலை – 1 கப்
முந்திரிப் பருப்பு – 1 கப்
கறிவேப்பிலை – 4 ஈர்க்கு
உப்பு – தேவையான அளவு
காரப் பொடி – தேவையான அளவு
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க
ஓமப்பொடி (அல்லது காராபூந்தி) – 1 1/2 கப்

 

செய்முறை:

  • கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து ஒரு துணியில் உலர்த்திக் காயவைக்கவும். (முழுவதும் காய்ந்திருக்கவேண்டியதில்லை.)
  • முந்திரிப்பருப்பை நாலைந்தாக உடைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும் துளைகளுள்ள ஒரு வடிகட்டி (பெரிய டீ வடிகட்டி, புளி வடிகட்டி) எடுத்து, அதில் கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பை ஒவ்வொன்றாக, தனித்தனியாக போட்டு, பொரித்து, வடித்தட்டில் போட்டு எண்ணெயை வடிக்கவும்..
  • அவலை முதலிலேயே அந்த வடிகட்டியில் (மாவு, உடைந்த அவல் இல்லாமல்) சலித்துவைத்திருக்கவேண்டும்; கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொரித்து எடுக்கவும். சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
  • சிறிது கடலைமாவில் உப்பு, பெருங்காயம், மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து காராபூந்தி அல்லது ஓமப்பொடி அச்சில் பிழிந்துகொள்ளலாம். (மிக்ஸரில் கடலைமாவு சேர்த்த பொருள் இல்லாவிட்டால் சுவைகூடி வராது. அதனால் ஏதாவது ஒன்றாவது செய்து சேர்க்கலாம்; அல்லது அதைமட்டும் கடையில் வாங்கிச் சேர்த்துக்கொள்ளலாம்.)
  • எல்லாவற்றையும் ஒரு வாயகன்ற பெரிய பாத்திரத்தில் போட்டுக்கொண்டே வரவும்.
  • கடைசியில் கறிவேப்பிலையையும் பொரித்து, வடிகட்டவும்.
  • பொரித்த கறிவேப்பிலையுடன் தேவையான உப்புப் பொடி, மிளகாய்ப் பொடி, பெருங்காயம் சேர்த்து நன்கு கையால் நொறுக்கி, அந்தக் கலவையை நன்கு கலக்கவும்.

* எண்ணெயில் பொரிக்கும்போது தீ மிகக் குறைவாக இருந்தால் பருப்புகள், அவல் கடுக்’கென்று ஆகிவிடும். தீ அதிகமாக இருந்தால் கருகிவிடும். மிதமான தீயில் அடுப்பு எரியவேண்டும். அவல் போட்டதுமே பொரிந்துவிடவேண்டும்.

* விரும்புபவர்கள் வேறு மசாலாப் பொடிகளும் சேர்க்கலாம். ஆனால் இதுவே அதிகம் படுத்தாத வகை.

தேவையான பொருள்கள்:

உளுத்தம் பருப்பு – 1 கப்
இஞ்சி – சிறு துண்டு
மிளகு – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை

செய்முறை:

  • உளுத்தம் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, மிளகு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் சின்ன வடைகளாகத் தட்டி, நடுவில் துளையிட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
மிளகு – 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்

செய்முறை:

  • அரிசியை மிக்ஸியில் அரைத்து மாவாக்கி, வறுத்துக் கொள்ளவும்.
  • மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
  • கடலைப் பருப்பை ஊறவைத்து மிக்ஸியில் ரிவர்ஸில் லேசாக உடைத்துக் கொள்ளவும்.
  • அரிசி மாவில் உப்புடன் நல்ல சூடான வெந்நீரை சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகப் பிசையவும்.
  • ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, சீரகம், கடலைப் பருப்பு, விரும்பினால் சிறிது கேசரிப் பவுடர் சேர்த்துப் பிசையவும்.
  • எண்ணை தடவிய வாழையிலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் மெல்லிய வட்டங்களாகத் தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

தேவையான பொருள்கள்:

தோல் உளுத்தம் பருப்பு – 1 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
அரிசி – 2 டீஸ்பூன்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்

செய்முறை:

  • கருப்புத் தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பை அரை மணிக்கு மேல் நீரில் ஊறவைக்காமல் நீரை வடித்துவிடவும்.
  • அரிசி, மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து கிரைண்டரில் மட்டுமே கெட்டியாக, கையால் தள்ளிவிட்டுக் கொண்டே தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
  • ஒரு எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் பேப்பரில் மெல்லிய வடைகளாகத் தட்டிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணை வைத்து, காய்ந்ததும், வடை நடுவில் துளை போட்டு பேப்பரிலிருந்து எடுத்து எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும்.

* இது சில நாள்களுக்குக் கூட கெடாது. அநேகமான கோயில்களில் இப்படியே செய்வார்கள்.

* உளுத்தம் பருப்பு மட்டுமே எடுத்து மேலே சொன்ன மாதிரி மெல்லிய வடைகளாகத் தட்டினால், மேலும் அதிக நாள்களுக்கு வரும்.

தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி – 1/2 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
உளுத்தம் பருப்பு – 1/8 கப்
காய்ந்த மிளகாய் – 4
இஞ்சி – 1 சிறுதுண்டு
பச்சை மிளகாய் – 4
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு.

thavalai vadai 3

செய்முறை: 

  • புழுங்கல் அரிசியையும் பருப்புகளையும் ஒன்றாகக் கலந்து தண்ணீரில் ஒருமணி நேரம் ஊறவைத்து உப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயம் சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவும்.
  • தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து லேசாக அழுத்தாமல் கலந்துவைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணை விட்டு, சிறு உருண்டைகளாக மாவை எடுத்து எண்ணை தடவிய வாழையிலை அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் வடைகளாகத் தட்டி எண்ணையில் நிதானமான தீயில் இருபுறமும் சிவக்கப் பொரித்தெடுக்கவும்.

[மேலே இருக்கும் படத்துல் இருப்பவை, நான் ஊறவைத்தபின் கரண்ட் போய்விட்டதால் அதிகம் ஊறி மிக்ஸியில் கொஞ்சம் அதிகம் மாவாகிவிட்டது. இந்த மாதிரி நேரங்களில் சோம்பலைப் பார்க்காமல் கிரைண்டரை உபயோகிப்பது நல்லது. 😦 ]

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தக்காளிச் சட்னி, கொத்தமல்லிச் சட்னி, கெட்சப்.

தேவையான பொருள்கள்:

துவரம் பருப்பு – 1 கப்
கடலைப் பருப்பு – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – 5
பெருங்காயம்
தேங்காய்
கறிவேப்பிலை
உப்பு – தேவையான அளவு

தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு.

செய்முறை:

  • பருப்புகளை ஊறவைத்து காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக இட்லிமாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
  • மெலிதாகக் கீறிய தேங்காய்த் துண்டுகள், நறுக்கிய கறிவேப்பிலை சேர்க்கவும்.
  • எண்ணையில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக் கலக்கவும்.
  • வாணலியில் நன்றாக எண்ணை காய்ந்ததும் சிறு கரண்டியால் எடுத்துவிட்டு மிதமான தீயில் இருபக்கமும் சிவந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

கூட்டணியில் பிரச்சினை வராமலிருக்க இட்லிவடைக்கு இப்பதிவு சமர்ப்பணம். 

தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி – 1/2 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
பச்சை மிளகாய் – 5 அல்லது 6
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
கறிவேப்பிலை
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு.

thavalai vadai 1

செய்முறை:

  • அரிசியைத் தனியாகவும், பருப்புகள் எல்லாவற்றையும் தனியாவும் தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • அரிசி, மிளகாய், உப்பு, பெருங்காயம் இவற்றை சுமாராக அரைத்துக் கொள்ளவும்.
  • அதன்பின் பருப்புகளைச் சேர்த்து மொத்தமாக கரகரப்பாக ஆனால் இட்லிமாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.(ஒரேயடியாக சேர்த்து அரைத்தால் பருப்புகள் அதிகம் மசிந்துவிடும்.)
  • நறுக்கிய கறிவேப்பிலை, தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும்.
  • சிறிது எண்ணையில், கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அரைத்த மாவில் கலக்கவும்.
  • வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும், ஒரு சிறு கரண்டியால் மாவை எடுத்துவிடவும்.
  • அடுப்பை நிதானமான சூட்டில் வைத்து, இருபுறமும் சிவந்ததும், எடுத்து சூடாகப் பரிமாறலாம்.

* நிறைய எண்ணை வைத்து ஒரே நேரத்தில் 3, 4 வடைகளாகச் செய்வதை விட கொஞ்சமாக எண்ணை வைத்து ஒவ்வொன்றாகச் செய்தால் நன்றாக வரும். அல்லது ஒரு வடை பாதிக்கு மேல் வெந்தபின் அடுத்த வடைமாவை விடலாம். மாவு தளர்வாக இருப்பதால் ஒன்றுடன் ஒன்று பிரச்சினை ஆகாமல் இருக்க இது உதவும்.

தேவையான பொருள்கள்:

உளுத்தம் பருப்பு – 1 கப்
பச்சை மிளகாய் – 3
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை

ulundhu vadai

செய்முறை:

  • உளுத்தம் பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம்(மட்டும்) ஊறவைத்துக் கொள்ளவும்.
  • கிரைண்டர் அல்லது மிக்ஸியில் உளுந்தை பச்சைமிளகாய், பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து, அத்துடன் தேவையான உப்பைக் கலந்துகொள்ளவும்.
  • மாவில் மற்ற எல்லாப் பொருள்களும் நன்றாக சீராகக் கலந்தபின் கடைசியில் கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கி லேசாக அழுத்தாமல் விரல்களால் கலந்துகொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணை காய்ந்ததும் மிதமான சூட்டில் வைத்துக் கொண்டு, மாவை வடைகளாகத் தட்டி, நடுவில் துளையிட்டு எண்ணையில் நன்கு சிவப்பாகும் வரை பொரித்து எடுக்கவும். (நன்கு சிவக்கப் பொரித்தெடுத்தால் அதிக நேரம் கெடாமல் இருக்கும்.)

* உளுந்தை அதிகம் ஊறவிடக் கூடாது. அரை மணிக்குமேல் ஒரு மணிநேரமே போதுமானது.

* மாவு கெட்டியாக இருக்கவேண்டியது முக்கியம். அப்பொழுதான் வடைகளாகத் தட்ட முடியும். மேலும் தளர்வாக இருந்தால் அதிக எண்ணை குடிக்கும்.

கிரைண்டரில் தண்ணீர் சேர்க்காவிட்டாலும், கையால் தள்ளிவிட்டுக்கொண்டே அப்படி கெட்டியாக அரைப்பது சுலபம். மற்றும் கல்லில் அரைபடுவதால் சுவையாகவும் இருக்கும். மாவு அதிகம் கிடைக்கும்.

மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைப்பது சிரமம். அதனால் பிளேடு உயரம் வரை மட்டுமே உளுந்தைப் போட்டு 3,4 தவணைகளாக அரைத்தால் அதைச் சுலபமாக அரைக்க முடியும். எல்லா மாவையும் அரைத்தபின் உப்பையும் சேர்த்து மொத்தமாக நன்கு கலந்துகொள்ள வேண்டும்.

எந்த முறையில் அரைத்தாலும் மொத்தமாக மாவு அரைத்தபின் கடைசியிலேயே உப்பைச் சேர்த்துக் கொள்ளவும்.

* அரைத்த மாவை உடனே தட்டாமல், 10லிருந்து 20 நிமிடங்கள் ப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தண்ணீரைத் தொட்டுக் கொண்டு வடைகளாகத் தட்டுவது சுலபமாக இருக்கும்.

* இத்தனை மெனக்கெடலுக்குப் பிறகும் ஏதாவது காரணத்தால் வடை மாவு நெகிழ்ந்துவிட்டால்….

எக்காரணம் கொண்டும் உளுத்தம் மாவு அல்லது அரிசி மாவு சேர்க்கக் கூடாது. இதனால் வடை கல் மாதிரி ஆகிவிட வாய்ப்பு அதிகம்.

சிறிது அவலைக் கலந்து தட்டலாம். அவல் கலப்பது, தட்டச் சுலபமாகவும் வடை மிருதுவாகவும் இருக்க உதவும்.

ரவையைக் கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும். ரவை ஊறி, மாவு கெட்டியாவதுடன், சூடு ஆறியபின்னும் கூட இந்த முறையில் வடை கரகரப்பாகவே இருக்கும்.

ஜவ்வரிசி சிறிது சேர்த்து ஊறவைக்கலாம்.

பாயச சேமியா(அளவில் மெலிதாக இருக்கும்) சிறிது சேர்க்கலாம்.

ஒரு பிடி பயத்தம் பருப்பைக் கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும். பருப்பு நீரை உறிஞ்சுவதுடன், நன்றாகப் பொரிந்து, வடை நன்றாக இருக்கும். பருப்பு வடைகள் அனைத்துக்கும் இதுவே ஆகச் சிறந்த திரிசமன். யாராவது கேட்டால், வடை ingredients-லியே ப.பருப்பு உண்டாக்கும் என்று சொல்லிக் கொள்ளலாம். 🙂

* வடையிலும் ஆங்கங்கே நறுக்கிய பச்சை மிளகாய் இருந்தால் சாப்பிடும்போது இடையிடையே சுரீர் என மிளகாய் அகப்பட்டு, சுவையாக இருக்கும். காரத்திற்கு அஞ்சுபவர்கள் பிஞ்சு மிளகாயாகவாவது சேர்க்கலாம்.

* பச்சை மிளகாய்க்குப் பதில் அரைத்த மாவில் மிளகை ஒன்றிரண்டாக உடைத்தும் போடலாம். மாவோடு சேர்த்து மிளகை அரைப்பதோ, மிளகை பொடியாக்கிக் கலப்பதோ சுவையைக் கெடுத்து ஒருவித மருந்து வாசனை வந்துவிடும்.

* வடை வெளியே கரகரப்பாக இருந்தாலும் உள்ளே மிருதுவாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். வெங்காயம் சேர்க்காத நாள்களில் கோஸ் அல்லது கேரட்டைத் துருவிக் கலக்கலாம். (எப்பொழுதும்  சொல்வதுதான், தேங்காய் தவிர, எந்தக் காய்கறி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சேர்ப்பதாக இருந்தாலும் முதலில் வேண்டிய பொருள்களைச் சேர்த்து கலவையை நன்கு அழுத்தமாக சீராகக் கலந்துகொண்டு, கடைசியில் காய்கறிகளை அழுத்தாமல் விரல்களால் மேலாகக் கலந்துகொள்ள வேண்டும்.)

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

Ketchup, தேங்காய்ச் சட்னி, சாம்பார்….

rasa vadai

ரசத்தில் ஊறவைத்து சாப்பிடும் ரச வடை மிக மிக மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். இதை ஏனோ எப்பொழுதும் சாப்பாட்டுடனே தான் பரிமாறுகிறார்கள். ரசத்தைக் கொதிக்கவைத்து, அதில் வடைகளை நேரடியாகப் போட்டு, சுடச் சுட சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

சாம்பார் வடை, தயிர் வடை எல்லாம் அப்புறம்.