தேவையான பொருள்கள்:

முந்திரிப் பருப்பு – 3/4 கப்
பாதாம் பருப்பு – 3/4 கப்
கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்
பால் – 3/4 லிட்டர்
சர்க்கரை – 1 1/2 கப்
நெய் – 1 கப்
ஏலக்காய் – 5

munthiri badam cake

செய்முறை:

  • பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து தோல்நீக்கி, காயவைத்துக் கொள்ளவும்
  • முந்திரி, பாதாம் பருப்பை மிக்ஸியில் மென்மையாகப் பொடித்துக்கொள்ளவும்.
  • பாலை அடுப்பில் வைத்து சேர்ந்தாற்போல் திரிதிரியாய் வரும் பதத்திற்குக் காய்ச்சிக்கொள்ளவும். (முற்றிலும் இறுகவேண்டாம்.)
  • அதே நேரத்தில் இன்னொரு அடுப்பில் வாணலியில் சர்க்கரையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, (தேவைப்பட்டால் சர்க்கரை கரைந்ததும் சிறிது பால்சேர்த்து அழுக்கு நீக்கி) ஒற்றைக் கம்பிப் பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
  • பாகு வந்தவுடன் பருப்புப் பொடிகள், கடலைமாவை சிறிது சிறிதாகத் தூவிக் கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • எல்லாப் பொடியும் கலந்து, கலவை சேர்ந்தாற்போல் வரும்போது, பால்கோவாவையும் கலந்து கிளறவும்.
  • ஏலப்பொடி தூவி, நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, தொடர்ந்து கிளறவும்.
  • நெய் பிரிந்து, கலவை ஒட்டாமல் சேர்ந்துவரும்போது நெய்தடவிய தட்டில் கொட்டி, லேசான சூடு இருக்கும்போதே வில்லைகள் போட்டு, ஆறியதும் எடுத்துவைக்கவும்.

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 1 கப்
சர்க்கரை – 1 கப்
உப்பு – 1 சிட்டிகை
டால்டா – பொரிக்க (அல்லது நெய்/எண்ணெய்)
முந்திரிப் பருப்பு – 10
கிஸ்மிஸ் – 20
டைமண்ட் கல்கண்டு – 1 டேபிள்ஸ்பூன்
கிராம்பு
ஏலக்காய் – 4
பச்சை கற்பூரம் – 1 சிட்டிகை
மஞ்சள் கலர்

பூந்தி லட்டு

 

செய்முறை:

  • கடலை மாவைக் கட்டிகளில்லாமல் நன்கு சலித்துக்கொள்ளவும்.
  • சிட்டிகை உப்பு சேர்த்து, தேவையான நீர் கலந்து தோசைமாவு பதத்திற்குக் கரைத்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் டால்டாவைக் (அல்லது நெய்யைக்) காயவைக்கவும்.
  • பூந்திக் கரண்டி அல்லது துளைகள் உள்ள வேறு ஏதாவது பாத்திரத்தின் உட்புறமாக சிறிது எண்ணெய் தடவிவிட்டு, காய்ந்த டால்டாவிற்கு நேராகப் பிடித்து, மாவை சிறிதுசிறிதாக விட்டால் முத்துமுத்தாக விழ ஆரம்பிக்கும். (விடும்போது டால்டா நன்கு காய்ந்து, தீ மிதமான சூட்டில் இருக்கவேண்டும். குறைவான சூடோ, தீயோ இருந்தால் பூந்தி ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும்.)
  • வாணலியில் டால்டா நிறைத்து பூந்தி விழுந்ததும் நிறுத்திவிட்டு, திருப்பிவிட்டு வேகவிடவும்.
  • காராபூந்திக்குச் செய்வதுபோல் மிகவும் கரகரப்பாக ஆகும்வரை காத்திருக்காமல், வெந்ததும் சிறிது முன்கூட்டியே மென்மையான பதத்தில் எடுத்து, வடிதட்டில் கொட்டி உபரி டால்டாவை வடிக்கவும்.
  • ஒரு கனமான வாணலி அல்லது உருளியில் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். ஒற்றைக் கம்பிப் பாகுப் பதத்திற்கு சிறிது கூடவே கொதிக்கவிட்டு ஆனால் இரட்டைக் கம்பிப் பதம் அளவு கெட்டியாகாமல் இறக்கிவிடவும். இறக்குமுன், ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், ஒன்றிரண்டாக உடைத்த கிராம்பு, மஞ்சள் நிறம் சேர்த்துவிடவும்.
  • பாகில் டைமண்ட் கல்கண்டு, பூந்தியைக் கலந்து, கலவையில் சிறிது சூடு இருக்குப்போதே கையில் நெய்யைத் தடவிக்கொண்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துவைக்கவும்.

* காய் (கூம்பு) பிடிக்க நினப்பவர்கள் இங்கே சொல்லியிருப்பதைப் போல் இந்தக் கலவையிலும் காய் பிடித்துக்கொள்ளலாம்.

* ரிஃபைண்ட் எண்ணெயிலும் பூந்தியைப் பொரிக்கலாம். ஆனால் இனிப்புகளுக்கு நெய் அல்லது டால்டாவே சுவையைக் கூட்டிக் கொடுக்கும். நெய், லட்டைக் கொஞ்சம் மென்மைப்படுத்திவிடும். டால்டாவில் பொரிப்பதால் கூடுதல் மொறுமொறுப்புடன் லட்டு சுவையாக இருக்கும்.

* பச்சைக் கற்பூரம் சேர்ப்பதுதான் வீட்டுத் தயாரிப்பு என்பதன் முக்கிய அடையாளம். கொஞ்சம் உம்மாச்சி வாசனையும்.

* கிராம்பு பிடிக்காதவர்கள், ஒற்றைக் கிராம்பை உச்சியில் செருகிவிட்டால் விரும்புபவர்கள் மட்டும் சாப்பிடலாம்; மற்றவர்கள் தவிர்க்கலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை கிராம்பு தவிர்க்கக் கூடாத, லட்டிற்கு மட்டுமே பிரத்யேகமான முக்கியச் சுவை/வாசனை.

தேவையான பொருள்கள்:

புளிக்காத தயிர் – 1 கப்
கடலை மாவு – 1/2 கப்
வெங்காயம் – 1
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க
கொத்தமல்லித் தழை

தாளிக்க: எண்ணெய், காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை

onion pakodas (for kadi)
செய்முறை:

  • கடலை மாவில், தேவையான உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து தண்ணீர் கலந்து பஜ்ஜிமாவு பதத்திற்கு நன்கு கலந்துகொள்ளவும். விரல்களால் நன்கு குழைந்துபோகுமாறு கலக்கவேண்டும்.
  • வெங்காயத்தை சற்றே அகல நீளத்தில் நறுக்கிக் கொள்ளவும்.
  • தயிரை ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கடைந்து வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை கடலை மாவில் தோய்த்து எண்ணெயில் பஜ்ஜி மாதிரி பொரித்து எடுக்கவும்.
  • மிச்சமுள்ள கடலைமாவை(4 டீஸ்பூன் கரைத்த மாவு இருந்தால் போதுமானது.) தயிரில் சேர்க்கவும். கரைத்த மாவு தீர்ந்திருந்தால் தனியாக இரண்டு டீஸ்பூன் கடலை மாவை தயிரில்ல் சேர்த்து நன்கு கட்டிகளில்லாமல் கலந்துகொள்ளவும்.
  • தயிர்க் கலவையில் தேவையான உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து, நன்கு கலந்து அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவும். மிகவும் இறுகிவிட்டால் இன்னும் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்.
  • கடலைமாவு வெந்து குழம்பு சேர்ந்தாற்போல் வந்ததும் பொரித்து வைத்துள்ள பக்கோடாவைச் சேர்த்து சிம்மில் மேலும் இரண்டு நிமிடம் கொதிக்கவைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • சிறிது எண்ணெயில் கடுகு, சீரகம், 4, 5 காய்ந்த மிளகாய், உரித்த பூண்டு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
  • நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.

kadi pakoda (punjab)

 

* மிக அதிக அளவில் ஆறியதும் இறுகும்; பகோடாவும் குழம்பின் நீரை இழுத்துக்கொள்ளும் என்பதால் தயாரிக்கும்போதே சிறிது நீர்க்க இருந்தால் நல்லது.

* வாணலியில் முதலில் தாளித்து, அதில் தயிர்கலவையைச் சேர்த்தும் குழம்பைக் கொதிக்கவைக்கலாம்.

* வெங்காயத்துடன் விரும்பினால் உருளை போன்ற காய்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

* மசாலா வாசனை விரும்பினால் கரம் மசாலாத் தூள் ஒரு டீஸ்பூன் பகோடா மாவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சாதம், புலவு, தேங்காய்ச் சாதம், இடியாப்பம், சப்பாத்தி, பூரி….

மல்லிகை மகள் மே 2008ல் பிரசுரமானது.

வெயில் காலங்களில் பயத்தம் பருப்பு, வெங்காயம், கீரைகளை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது. ரொட்டி, தால் வகையாக இவற்றைச் செய்து பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு – 3 கப்
கடலை மாவு – 1 கப்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
ஓமம் – 1 டீஸ்பூன்
எள் – 2 டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 2 (பெரியது)
கொத்தமல்லித் தழை – 1 கப் (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் 
நெய் அல்லது வெண்ணெய்

Missi_roti_(punjab)1

செய்முறை:

  • இஞ்சி பச்சை மிளகாயை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம் கொத்தமல்லித் தழையை மிகப் பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • கோதுமை மாவு, கடலை மாவு, ஓமம், எள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய் அரைத்த விழுது, தயிர், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் எல்லாவற்றையும் நன்கு கலந்து கையால் அழுந்தப் பிசைந்து கொள்ளவும்.
  • தேவைப் பட்டால் மட்டும் இன்னும் சிறிது நீர் சேர்த்து கெட்டியான மாவாக அடித்துப் பிசைந்து ஒரு மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.
  • ஊறிய மாவை எடுத்து மீண்டும் அழுத்திப் பிசைந்து, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • உருண்டைகளை மைதா மாவு தோய்த்து, சிறிய சப்பாத்திகளாக இட்டு, நடுவில் சிறிது நெய் அல்லது எண்ணெய் தடவி நான்காக மடித்து, முக்கோண வடிவில் வைத்துக் கொள்ளவும்.
  • மடித்து வைத்துள்ள சப்பாத்திகளை மேலும் மைதா மாவு தோய்த்து சப்பாத்திகளாக இட்டு அடுப்பில் தோசைக்கல்லில் போடவும்.
  • அடிப்பாகம் சிறிது காய்ந்து மேலே சிறிய சிறிய கொப்புளங்கள் வர ஆரம்பிக்கும்போது திருப்பிப் போடவும்.
  • மீண்டும் கொப்புளங்கள் வரும்போது ஃபுல்கா செய்வது மாதிரி ஒரு துணியால் அழுத்தி அழுத்தித் திருப்பிவிடலாம். விரும்புபவர்கள் இந்த நிலையில் மட்டும் சிறிது எண்ணெய் அல்லது நெய் விட்டு கரண்டியால் அழுத்திக் கொடுத்து சாதாரண சப்பாத்தி மாதிரியும் வேகவைக்கலாம்.
  • இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும். எண்ணெய் சேர்க்காமல் ஃபுல்காவாகச் செய்திருந்தால், கல்லிலிருந்து எடுத்ததும் மேல்புறம் சிறிது நெய் அல்லது வெண்ணெய் தடவிப் பரிமாறலாம்.

* மடித்து இடாமல் ஒற்றையாகவும் இட்டு எடுக்கலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

ஊறுகாய், தயிர்ப் பச்சடி, தால் வகைகள் இவற்றில் ஏதாவது ஒன்றோடு சாப்பிட சுவையாக இருக்கும். பிரயாணங்களுக்கு எடுத்துச் செல்ல ஏற்றது. சீக்கிரம் கெட்டுப் போகாது.

 

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 2 1/2 கப்
அரிசி மாவு – 1 கப்
மஞ்சள் தூள்
டால்டா – 2 டேபிள்ஸ்பூன் (அல்லது எண்ணெய்)
எள் – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
உப்பு
பெருங்காயம்
எண்ணெய்

ribbon murukku

செய்முறை:

  • கடலை மாவையும் அரிசி மாவையும் நன்கு கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
  • மஞ்சள் தூள், எள், உப்பை மாவில் சேர்க்கவும்.
  • டால்டா அல்லது எண்ணெயைச் சூடாக்கி அதனுடன் சேர்த்து, சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, சூடாக்கி, மாவை ரிப்பன் நாழியில் பிழியவும். (அல்லது மிக்ஸரில் சேர்க்க விரும்பினால் அதைவிட சிறிதான ஆனால் தட்டையான வேறு டிசைன் இருந்தால் பிழிந்து கொள்ளலாம்.)
  • இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து சத்தம் அடங்கியதும் எடுக்கவும்.

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1/2 கப்
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் (அல்லது நெய்)
உப்பு
பெருங்காயம்
எண்ணெய்

kaaraa sev 1

செய்முறை:

  • கடலை மாவையும் அரிசி மாவையும் நன்கு கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
  • மிளகை நைசாக அரைக்காமல் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
  • மிளகுத் தூள், உப்பு, பெருங்காயத் தூளை மாவில் சேர்க்கவும். (பெருங்காயம் பெரிதாக இருந்தால் அதையும் நீரில் கரைத்தே சேர்க்கவும்.)
  • வெண்னெய் அல்லது நெய்யைச் சூடாக்கி அதனுடன் சேர்த்து, சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, சூடாக்கி, மாவை காராச் சேவு கரண்டியில் தேய்க்கவும். (அல்லது மிக்ஸரில் சேர்க்க விரும்பினால் அவ்வளவு பெருவட்டாக இருப்பது சாப்பிடும் போது தனித்து ருசிக்கும். எனவே ஓமப்பொடிக்கு மேல் சற்றே பெரிதாக தேன்குழல் அச்சில் பிழிந்து கொள்ளலாம்.)
  • இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து சத்தம் அடங்கியதும் எடுக்கவும்.

* அச்சில் பிழிந்திருந்தால், வேண்டிய அளவுக்கு ஒடித்துக் கொள்ளவும்.

* காரம் அதிகம் தேவைப்பட்டால் இன்னும் அதிக மிளகு சேர்த்துக் கொள்ளலாம். மிளகாய்த் தூள் சேர்க்கக் கூடாது.

தேவையான பொருள்கள்:

 கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1 கப்
ஓமம் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் (விரும்பினால்)
உப்பு
பெருங்காயம்
எண்ணெய்

oma podi 1

செய்முறை:

  • கடலை மாவையும் அரிசி மாவையும் நன்கு கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
  • ஓமத்தை சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து அந்த நீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • ஓமநீர், உப்பு, பெருங்காயத் தூளை மாவில் சேர்க்கவும். (பெருங்காயம் பெரிதாக இருந்தால் அதையும் நீரில் கரைத்தே சேர்க்கவும்.)
  • டால்டா அல்லது எண்ணெயைச் சூடாக்கி அதனுடன் சேர்த்து, சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, சூடாக்கி, மாவை ஓம அச்சில் பிழிந்து, இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து சத்தம் அடங்கியதும் எடுக்கவும். (ஓமப்பொடி மெலிதாக இருப்பதால் உடனே வெந்துவிடும். அதிக கவனம் தேவை.)
  • தேவைக்குத் தகுந்த அளவில் ஒடித்து உபயோகிக்கலாம்.

* ஓமம் சேர்த்திருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.

தேவையான பொருள்கள்:

 கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1/2 கப்
உப்பு
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் (விரும்பினால்)
டால்டா – 2 டேபிள்ஸ்பூன் (அல்லது எண்ணெய்)
எண்ணெய் 

kaaraa boondhi

செய்முறை:

  • கடலை மாவையும் அரிசி மாவையும் நன்கு கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
  • உப்பு, மிளகாய்த் தூள், சேர்க்கவும்.
  • டால்டா அல்லது எண்ணெயைச் சூடாக்கி அதனுடன் சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கட்டிகளில்லாமல் பஜ்ஜி மாவை விட சற்றே தளர்ந்த பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை நிதானமான சூட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • பூந்திக் கரண்டியில் சிறிது எண்ணெய் தடவி,  வாணலி எண்ணெய்க்கு மேலாக நீட்டி, மாவுக் கரைசலை கொஞ்சமாக விட்டு, லேசாகத் தட்டினால் பூந்தி விழ ஆரம்பிக்கும். வாணலிக்கு மிக அருகில் கரண்டியை நீட்டினால் நல்ல உருளையாகவும், சற்றே மேலே வைத்திருந்தால் நீள் உருளையாகவும் விழும். (உன்னோடது ஏன் இப்படி வாலோடு இருக்குன்னு யாரும் கேட்டுடாதீங்க. 🙂 ஜாரிணி இல்லாம புளி வடிகட்டி வெச்சு செஞ்சது. எல்லாரும் இதுவே கரகரப்பா, வித்யாசமா நல்லா இருக்குன்னு சொல்றதால ஜாரிணி வாங்காமலே இருந்துட்டேன். கடைல வாங்கினதான்னு இப்ப யாரும் கேக்க முடியாதில்ல. 🙂 பூந்தியின் பின்நவீனத்துவக் கட்டுடைப்புன்னு புரிஞ்சுண்டவங்க புத்திசாலிகள்.)
  • வாணலி எண்ணெய் முழுவதும் நிறைந்ததும், நிறுத்திவிட்டு, பூந்தியைத் திருப்பிவிடவும். சத்தம் அடங்கி, கரகரப்பாக வேகும் வரை காத்திருந்து வெளியே எடுத்து வடியவிடவும். (லட்டுக்குச் செய்வது போல் சீக்கிரம் எடுத்துவிடக் கூடாது.)

* விரும்பினால், மிக்ஸருக்கு அல்லது தயிர்வடை, ராய்த்தா மாதிரி உணவுகளுக்கு உபயோகிக்க விரும்பினால் கலர் சேர்த்துக் கொள்ளலாம்.

* சிலர் சமையல் சோடா சேர்ப்பார்கள். நான் சேர்ப்பதில்லை. டால்டா அல்லது எண்ணெய் சேர்ப்பதிலேயே மொறுமொறுப்பாக இருக்கும்.

இந்தப் பெயரைக் கேட்டாலே சலிப்பில் ஓடிவிடும் அளவுக்கு கோவையில் இருந்த போது இது வீடு நிறைந்து இருக்கும். ஒவ்வொரு முறையும் கடையில் சிரத்தையாக, “‘மைசூர்பாகு’ன்னு சொல்லாதீங்க, ‘மைசூர்பா’ன்னு சொல்லுங்க” என்று திருத்துவார்கள். அப்போது பல ஊர்களில் கிடைக்காமல் இருந்ததால் வெளியூரில் யார் வீட்டுக்குப் போனாலும் சாய்ஸே இல்லாமல் இதை மட்டுமே வாங்கிப் போகவேண்டி இருந்தது. ஆனால் மிகச் சுலபமாகச் செய்யக் கூடிய ஒரு இனிப்பு இந்த மைசூர்பா தான். பல வருடங்களாக, கடையில் வாங்குவதையே நிறுத்திவிட்டேன்.

krishna mysorepa 1

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 1 கப்
சர்க்கரை – 2 1/2 கப்
நெய் – 2 1/2 கப்

செய்முறை:

  • கடலை மாவை நன்கு சலித்து, மிக லேசாக 2, 3 நிமிடங்கள் மட்டும் வறட்டு வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
  • நெய்யை லேசான தீயில் நன்றாக உருக்கி வைத்துக் கொள்ளவும்.
  • சர்க்கரையை சிறிது நீர் சேர்த்து, அடுப்பில் சிம்மில் வைத்து, முழுவதையும் கரைய விடவும். கரைவதற்கு முன் சூடு அதிகமானல் பாகு ஆகிவிடலாம். அதனால் தீயை மிகக் குறைந்த அளவிலேயே வைத்து முழுமையாகக் கரைக்க வேண்டும்.
  • சர்க்கரை கரைந்ததும், கடலைமாவை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கட்டிகளில்லாமல் கலந்து கொள்ளவும். சலித்து வறுத்திருப்பதால் பெரிய பிரச்சினை ஆகாமல் கலந்துவிடும்.
  • மாவு கலந்து கொதிக்கத் தொடங்கியதும், நெய்யை நான்கைந்து பாகங்களாக தவணை முறையில் இறுக இறுக சேர்த்துக் கிளறவும்.
  • கடைசியில் எல்லா நெய்யும் சேர்த்தபின், கிளறிக்கொண்டே இருக்கையில் சேர்ந்தாற்போல் நன்கு கெட்டியாக ஒட்டாமல் வரும்போது, இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி ஒரு கரண்டியால் சீராகப் பரத்தி ஓரங்களை அழுத்தி விடவும். சிறிது நெய் தடவிய தட்டையான கரண்டியால் தடவினால் மேல்பாகம் வழவழப்பாகிவிடும்.
  • நன்கு ஆறியதும் கத்தியால் கீறி வில்லைகள் போடலாம். கடைகளில் கிடைப்பதுபோல் நீள் சதுரமாகவோ, வழக்கமான சதுரங்களாகவோ தான் செய்ய வேண்டும் என்றில்லை. பிள்ளையாருக்கான சின்ன மோதக அச்சில் கூட வார்த்து எடுக்கலாம். எல்லாவற்றிற்கும் எவ்வளவு நேரமானலும் கலவை வளைந்து கொடுக்கும். வாயில் கரையும்.

krishna mysorepa 2

* சுத்தமான நெய்யில் மட்டும் தான் செய்ய வேண்டும். மைசூர்பாகிற்க்குச் செய்வது போல் டால்டா உபயோகிக்கக் கூடாது.

* அதிகம் நெய்க்கு பயந்தவர்கள், 2 பங்கு மட்டும் நெய் சேர்த்தும் செய்யலாம். பெரிய வித்தியாசம் தெரியாது.
 
** சொல்ல மறந்தது, உடம்பைப் பார்த்துக் கொள்ளவும். அடிக்கடி உணவில் இஞ்சித் துவையல், மிளகு ரசம், கொள்ளுப் பொங்கல் என்று சமைத்துச் சாப்பிடவும். 🙂

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 1 கப்
நெய் – 1 1/2 கப்
சர்க்கரை – 2
ஏலப்பொடி

[படம் மூன்று நான்கு மாதம் முன்பே செய்த போது எடுத்து வைத்திருந்த நியாபகம். எந்த ஆல்பம் என்று தேடி எடுத்துப் போடுகிறேன்; அல்லது புதிதாகச் செய்துதான் சேர்க்கவேண்டும். :(]

செய்முறை:

  • கடலை மாவை நன்கு கட்டியில்லாமல் சலித்து, வெற்று வாணலியில் மிக லேசாக இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலி அல்லது அடிகனமான உருளியில் சர்க்கரையுடன் 1 கப் தண்ணீர் சேர்த்துக் கரைய விடவும்.
  • இந்த நேரத்தில் இன்னொரு அடுப்பில் நெய்யை உருக்கி வைத்துக் கொள்ளவும்.
  • சர்க்கரை முழுவதும் கரைந்து, ஒற்றைக் கம்பிப் பாகு வந்ததும், கடலை மாவை சிறிது சிறிதாக சேர்த்துக் கொண்டே, கைவிடாமல் கட்டியாகாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • எல்லா மாவும் சேர்த்து, கட்டி எதுவும் இல்லாமல் மாவு மொத்தமாக சர்க்கரைக் கலவையில் கலந்ததும், பக்கத்து அடுப்பில் சூடாக, உருகி இருக்கும் நெய்யை(இதன் அடுப்பை சிம்’மிலே வைத்து சூடு குறையாமலே வைத்திருக்கவும்.) ஒவ்வொரு கரண்டியாகச் சேர்க்க ஆரம்பிக்கவும்.
  • நெய்யைச் சேர்க்கும்போதெல்லாம் கலவை சர்’ரென பொங்கும்; கைவிடாமல் கிளறவும்.
  • எல்லா நெய்யும் சேர்த்து முடித்ததும், ஏலப் பொடியும் சேர்த்து, கிளறிக் கொண்டே இருக்கும்போது, நுரை மாதிரி பொங்கி, தானே வெடித்து உடைந்து உடைந்து பொத்தல்கள் வரும். இதுதான் மைசூர்பாகு பதம்.
  • அடுப்பிலிருந்து இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டவும்; சமப்படுத்தும்போது அழுத்தக் கூடாது.
  • லேசாக ஆறியதும் வில்லைகள் போடலாம். மேலாக சர்க்கரை தூவி அலங்கரிக்கலாம். (சூடாக இருக்கும்போது சர்க்கரை தூவினால், சூட்டில சர்க்கரை கரைய ஆரம்பித்துவிடும்.)

* ஹோட்டல் மைசூர்பாகு மாதிரி ஒரு பகுதி சிவப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், கடைசியில் சில விநாடிகள் கலவையை கிளறாமல் கொட்டினால் அடிப்பக்கக் கலவை மட்டும் அதிகம் சிவந்து அப்படிக் கிடைக்கும்.

* நெய் தரமானதாக இருக்க வேண்டும். ஏற்கனவே இறுகி இருக்கும் நெய்யை உருக்குவதை விட புதிதாக வெண்ணெய் வாங்கிக் காய்ச்சி, அந்தச் சூட்டோடு செய்தால் இன்னும் மணமாக இருக்கும்.

* நெய்க்குப் பதிலாக டால்டாவிலும் செய்யலாம். ஆனால் டால்டாவையும் சூடான உருகிய நிலையில் வைத்துத் தான் சேர்க்க வேண்டும்.

 * சிலர் கொதிக்கிற நெய்யில் மொத்த கடலைமாவையும் பொரித்து, சர்க்கரைப் பாகில் கலவையைச் சேர்த்தும் செய்கிறார்கள். நான் இன்னும் செய்து பார்க்கவில்லை. பொதுவாக அனைத்தும் நல்ல கொதி நிலையில் இருந்தால் சரியாக வரும் என்றுதான் தோன்றுகிறது.

இனிப்புகள் செய்ய ஆரம்பிக்கிற யாராவது இதை ஒருமுறையாவது செய்யாமல் இருந்திருப்பார்களா என்பது ஆச்சரியம் தான். அந்த அளவுக்கு பிரபலமான, சுலபமான ஒன்று. எந்தத் தவறும் நேர்ந்துவிடாது என்பதால் யாரும் தைரியமாகச் செய்யலாம்.
 
தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 1 கப்
தேங்காய்த் துருவல் – 1 கப்
பால் – 1 கப்
நெய் – 1 கப்
சர்க்கரை – 3 கப்
ஏலப்பொடி

seven star cake

செய்முறை:

  • கடலை மாவை கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
  • தேங்காயை அதன் தோல் சேர்ந்துவிடாமல் வெள்ளைப் பகுதியாக மட்டும் துருவி, 1 டேபிள்ஸ்பூன் பால் விட்டு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு அடிகனமான வாணலியில், காய்ச்சி ஆறிய பாலில் கடலை மாவை கட்டிகளில்லாமல் கலந்து கொள்ளவும்.
  • அத்துடன் நெய், சர்க்கரை, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து அடுப்பில் வைத்து நிதாமான சூட்டில் கிளற ஆரம்பிக்கவும்.
  • கைவிடாமல் கிளறி வாணலியில் ஒட்டாமல், நுரைத்துக் கொண்டு வரும்போது ஏலப்பொடி தூவி, இறக்கவும். இந்தப் பதத்தில் கேக் மாதிரி மென்மையாக வரும்.
  • இன்னும் சிறிது நேரம் இழுத்துக் கிளறியும் இறக்கலாம். இந்தப் பதத்தில் பர்பி மாதிரி இறுக்கமாக வரும். ஆனால் தேங்காய் சேர்த்திருப்பதால் மைசூர்பாகு மாதிரி பாறையாகிவிடும் பயம் இதில் இல்லை. இதுவும் சாப்பிட மென்மையாகவே இருக்கும். சொல்லவருவது, தெரியாமல் பதம் தாண்டி இறக்கிவிட்டாலும் தவறாகிவிடாது. சுவையாகவே இருக்கும். 
  • ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, சிறிது ஆறியதும் வேண்டிய வடிவில் வில்லைகள் போடலாம்.

* வாயில் போட்டதும் மைசூர் பாகா, தேங்காய் பர்பியா என்று நாக்கு ஒரு நொடி குழம்பும். குழம்பட்டும். 🙂 ஆனால் இரண்டையும் விட இந்த ஸ்வீட் சுவையாக இருக்கும். புதிதாகச் செய்பவர்கள் இதிலிருந்து ஆரம்பித்தால் ஸ்வீட் செய்வதில் ஒரு தைரியம் வரும்.