“இன்னிக்கு ஆத்திலே என்ன தளிகை?”“பொன்னா தளிகையை கேக்கணுமா? பருப்பு, உப்புச்சார், தக்காளி சாத்தமுது நிறைய கொத்துமல்லி போட்டு, வாழைக்காய் கறியமுது, அவியல், பொரிச்ச அப்பளம்.”— புலிநகக் கொன்றை (பி.ஏ. கிருஷ்ணன்)
பொன்னா நாங்குநேரி இல்லையா? நெல்லை மாவட்டத்துல உப்புச்சார் என்பது நீங்க சொன்ன மோர்ச் சாத்துமது மாதிரியேதான். கொஞ்சம் வித்தியாசம்.– நன்றி: ஜெயஸ்ரீ சூர்யநாராயணன்.
—
தேவையான பொருள்கள்:
தயிர் – 1 கப்
அப்பக்கொடி (அல்லது அதளக்காய் வற்றல் அல்லது மணத்தக்காளி வற்றல்)
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 3
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
அரைக்க:
தேங்காய்த் துருவல் – அரை கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
தாளிக்க – கடுகு, கறிவேப்பிலை.
செய்முறை:
- தயிரை நன்கு தண்ணீர் விடாமல் கடைந்து கொள்ளவும்.
- காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, வெந்தயத்தை வாணலியில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
- தேங்காய் சீரகத்தை பச்சையாக அரைத்துக் கொள்ளவும்.
- கடைந்த தயிரில் உப்பு, மஞ்சள் தூள், அரைத்த மசாலாக்களைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு, பொங்கிவரும்போது இறக்கவும்.
- எண்ணையில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அப்பக்கொடியையும் கருக வறுத்துச் சேர்க்கவும்.
* அப்பக் கொடி – இது நெல்லை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கும் ஒரு கொடி வகை. அப்பக் கொடி சேர்ப்பது தான் முக்கியம். கிடைக்காத பட்சத்தில் மணத்தக்காளி வற்றல் வறுத்துச் சேர்க்கலாம்.
ஜெயஸ்ரீ, மிகவும் சுவையாக இருந்தது. அன்புத் தோழி வெந்தயம் சேர்க்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் வெந்தயம் தான் மேலும் சுவை சேர்த்தது. விழுங்கியதும் நாக்கினடியில் அதன் மணமும் கசப்பும் அருமை. மணத்தக்காளி வற்றல், வற்றல் குழம்பை விட இதில் தான் சுவையாக இருந்தது.
என் பக்கத்து இரண்டு கேள்விகள்:
இதில் காய் சேர்க்கக் கூடாதா? (என் பெண்)
தாமரைக் கொடி வற்றலைத் தான் அப்பக்கொடின்னு சொல்லுதாங்களோ? (எங்க கடைக்கார அண்ணாச்சி)
தொடர்புடைய இன்னொரு சுட்டி: அன்புத்தோழி