தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப் (அல்லது பிரியாணி அரிசி)
பால் – 500 மிலி
மாங்காய்த் துருவல் – 1 கப் (துருவியது)
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
பெரிய வெங்காயம் – 1 (விரும்பினால்)
குடமிளகாய் – 1
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – சிறு துண்டு
காய்ந்த மிளகாய் – 2
இலவங்கப் பட்டை – 1 (விரும்பினால்)
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
நிலக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 1 சிட்டிகை
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
கொத்தமல்லித் தழை – 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

  • பாலைக் காய்ச்சி, பொங்கிவரும்போது எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் சில துளிகள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவைத்து பால் திரிந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • திரிந்த பாலை பனீர் வடிகட்டி அல்லது ஒரு துணியில் போட்டு கையால் ஒட்ட பிழிந்து வடிகட்டி உதிர்த்துக் கொள்ளவும். பிரிந்த நீரையும் எடுத்துவைக்கவும். (உடனடியாக பனீரை உபயோகிக்க இந்த முறை. முறையாக பனீர் செய்யு)
  • அரிசியைக் கழுவி, பனீர் வடித்த நீர் 2 கப் சேர்த்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும்.
  • இஞ்சி, வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • பச்சை மிளகாய், குடமிளகாயை மெலிதான நீளதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் நெய்யைச் சூடாக்கி, கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, நிலக்கடலை, இலவங்கப் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் என்ற வரிசையில் தாளிக்கவும்.
  • தொடர்ந்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை,  வெங்காயம், குடமிளகாய், மாங்காய்த் துருவல், தேங்காய்த் தூருவல் என்ற வரிசையில் ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
  • தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, இறுதியில் பனீரும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். (உப்பு, மஞ்சளை கலவையிலேயே சேர்த்துவிடுவது, சாதத்தில் அவை சீராகப் பரவ உதவும்.)
  • உதிராக வடித்து வைத்துள்ள சாதத்தை உடைக்காமல் மென்மையாக நன்கு கலந்து, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.

ஆடிப் பெருக்கை முன்னிட்டு வாசிக்க….

கட்டுரை: ஒரு நதியின் நசிவு

கவிதை: நதி நீராலானது மட்டுமல்ல

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
நெய் – 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1 கப்
காய்ந்த மிளகாய் – 2
பச்சை மிளகாய் – 2, 3
கறிவேப்பிலை.
தோசை மிளகாய்ப் பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க – தேங்காய் எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம், பெருங்காயம்.
 

thengaai saadham

செய்முறை:

  • அரிசியை அளவாகத் தண்ணீர் வைத்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்தால் மேலும் ஒட்டாமல் இருக்கும்.
  • வாணலியில் தேங்காய் எண்ணை, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம், பெருங்காயம், இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • துருவிய தேங்காயையும் சேர்த்து லேசாக இளம் சிவப்பாகும் வரை வதக்கி, சாதத்தில் கொட்டி தேவையான உப்பும் சேர்த்து, சாதம் உடையாமல் கலக்கவும்.

* இது போன்ற வகை கலந்த சாதங்களுக்குத் தாளிக்கும்போது 1/2 டீஸ்பூன் எள் அல்லது சாதம் கலந்தபின் கடைசியில் 1/2 டீஸ்பூன் தோசை மிளகாய்ப் பொடி கலந்தால் மிகுந்த மணமாகவும் சுவையாகவும் இருக்கும். வழக்கம்போல் இதன் காப்பிரைட் எனக்கே சொந்தம். 🙂

* விருந்தினர் அல்லது பார்ட்டி மாதிரி நேரங்களில் நிலக்கடலைக்குப் பதில் முந்திரிப் பருப்பு உபயோகிக்கலாம். குழந்தைகளுக்கானதாக இருந்தால் கிஸ்மிஸ் கூட.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பொரித்த அப்பளம், வடாம், குருமா வகை.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
நெய் – 1 டீஸ்பூன்
எலுமிச்சம் பழம் – 2 (பெரியது)
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை
காய்ந்தமிளகாய் – 4,5
கடுகு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
வெல்லம் – சிறு கட்டி(விரும்பினால்)
பெருங்காயம்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு

தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம்.

செய்முறை:

  • கடுகு, வெந்தயத்தை எண்ணை விடாமல் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
  • காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம், பெருங்காயம், தேங்காய்த் துருவல், கொத்தமல்லித் தழை, வெல்லம், தேவையான அளவு உப்பு எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, எலுமிச்சைச் சாறுடன் கலந்துவிடவும்.
  • வாணலியில் எண்ணை சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • உதிராக வடித்த சாதம் சூடாக இருக்கும்போதே ஒரு டீஸ்பூன் நெய், தாளித்தவை, சாறுக் கலவை எல்லாம் சேர்த்து உடையாமல் கலக்கவும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பொரித்த அப்பளம், வடாம், சாதாக் கறி, கூட்டு வகைகள்.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
பச்சை மிளகாய் – 4,5
எலுமிச்சம் பழம் – 2 (பெரியது)
பெரிய வெங்காயம் – 1 (விரும்பினால்)
பச்சைப் பட்டாணி (விரும்பினால்)
குடமிளகாய் – 1 (விரும்பினால்)
கறிவேப்பிலை
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
தோசை மிளகாய்ப் பொடி –  1/2 டீஸ்பூன். (விரும்பினால்)

தாளிக்க – நல்லெண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம், பெருங்காயம்.

elumichchai saadham 1

செய்முறை:

  • சாதத்தை உதிர் உதிராக வடித்து, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து ஒட்டாமல் பரத்தி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்.
  • அடுப்பில் வாணலியில் நல்லெண்ணை விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை(அல்லது பச்சைப் பட்டாணி), சீரகம், பெருங்காயம், குடமிளகாய், இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • மெலிதாக நீளமாகவோ அல்லது பொடிப்பொடியாகவோ விருப்பப்படி நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி சாதத்தில் சேர்க்கவும்.
  • கை படாமல் விதை நீக்கிய எலுமிச்சைச் சாறு பிழிந்து, சாதம் உடையாமல் கலக்கவும்.
  • தோசை மிளகாய்ப் பொடி, கொத்தமல்லித் தழை, இருந்தால் 4,5 புதினா இலைகள் கலந்து பரிமாறலாம்.

* வெங்காயத்திற்கு பதில் மெலிதாக நறுக்கிய கோஸ், பொடியாக நறுக்கிய குண்டு பீன்ஸ் அல்லது பிஞ்சு கத்திரிக்காய் என்ற வகையில் ஏதாவது ஒன்று சேர்த்தாலும் சுவையாக இருக்கும்.

* நிலக்கடலைக்குப் பதில் பச்சைப் பட்டாணியோடு முந்திரிப் பருப்பும் உபயோகிக்கலாம்.
  
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பொரித்த அப்பளம், வடாம், சாதாக் கறி வகைகள்.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
நெய் – 1 டீஸ்பூன்
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 3,4
வெங்காயம் – 1 (விரும்பினால்)
பச்சைப் பட்டாணி (விரும்பினால்)
மஞ்சள் துள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை.

தாளிக்க:
எண்ணை –  2 டேபிள்ஸ்பூன்
கடுகு –  1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு –  2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயம்.

thakkaali saadham

செய்முறை:

  • தக்காளிப் பழங்களை சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணை, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய், வெங்காயம், பச்சைப் பட்டாணி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது வதக்கிக் கொள்ளவும்.
  • கடைசியில் தக்காளித் துண்டுகளைச் சேர்த்து நன்கு கிளறி, சுருண்டு வந்ததும் இறக்கவும்.
  • உதிராக வடித்து நெய் கலந்து வைத்துள்ள சாதத்தில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

* தக்காளியை வெந்நீரில் போட்டு, தோலை நீக்கிவிட்டு, கூழ் போல் ஆக்கியும் வதக்கிச் சேர்க்கலாம்.

* வெங்காயத்துடன் அல்லது அதற்கு பதில் கோஸ், கேரட், குடமிளகாய் போன்ற காய்கறித் துருவல்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

* காய்ந்த மிளகாயை மட்டும் தாளித்துவிட்டு, இரண்டு பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழையை (சேர்ந்து அரைபடுவதற்காக ஒரு தக்காளித் துண்டுடன்) அரைத்துச் சேர்த்து வதக்கலாம்.  இந்த முறையில் சாதத்தின் நிறம் கொஞ்சம் பச்சை கலப்பதால் அடர் சிவப்பாக இல்லாமல் போனாலும் மிகவும் சுவையாகவும் மணம் கூடுதலாகவும் இருக்கும். அநேகமாக இந்த முறையிலேயே செய்கிறேன்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பொரித்த அப்பளம், வடாம், வற்றல், சாதாக் கூட்டு, தயிர்ப் பச்சடி வகைகள்…