தேவையான பொருள்கள்:

பச்சரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – 2 கப்
பச்சை மிளகாய் – 3
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு (சுமார் 1 டீஸ்பூன்)
தேங்காய்த் துருவல் – 1 டேபிள்டீஸ்பூன் (விரும்பினால்)
தேங்காயெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க: தேங்காயெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.

ammani kozhukkattai
 

செய்முறை:

  • பச்சை மிளகாய், உப்பு பெருங்காயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கப் பச்சரிசி மாவை இரண்டு கப் தண்ணீரில் கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
  • கரைசலுடன் 2 டேபிள்ஸ்பூன் தேங்காயெண்ணெய் விட்டு அடுப்பில் வாணலியில் அடிப்பிடிக்காமல் கைவிடாமல் கிளறவும். (நான்ஸ்டிக் வாணலியில் எளிதாகவும் விரைவாகவும் செய்யலாம்.)
  • மாவு இறுக ஆரம்பிக்கும்போது அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறவும். சுமார் 10 நிமிடத்துக்குள் மாவு வெந்து இறுகி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
  • ஆறிய மாவை சுண்டைக்காய் அளவு சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • ஒரு குக்கர் பாத்திரம் அல்லது இட்லிதட்டில் எண்ணெய் தடவி, உருண்டைகளை வைத்து குக்கரில் இட்லிவேக வைப்பதுபோல் வெயிட் போடாமல் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் வேகவைத்து எடுக்கவும்.
  • அடுப்பை அணைத்த உடனே திறந்து மின்விசிறி அடியில் ஆறவிடவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் தாளித்து, மெதுவாக உருண்டைகளைச் சேர்த்து உடையாமல் நாசுக்காகக் கிளறிவிடவும்.
  • கொழுக்கட்டைகளைச் சேர்த்தபின் ஒரு நிமிடம் மட்டும் அடுப்பில் வைத்திருந்து கிளறி இறக்கிவிடவும்.

* சூடாகவோ ஆறியோ எப்படிச் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.

* கொழுக்கட்டை மாவு மிகுந்தாலும் இந்த மாதிரி செய்யலாம். தேவையான பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் அரைத்த விழுதை மாவிலேயே நன்கு கலந்துப் பிசைந்து உருண்டைகள் பிடித்து குக்கரில் வேகவைத்து மேலே சொன்னபடி தாளித்துக் கிளறவும்.

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 2 1/2 கப்
அரிசி மாவு – 1 கப்
மஞ்சள் தூள்
டால்டா – 2 டேபிள்ஸ்பூன் (அல்லது எண்ணெய்)
எள் – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
உப்பு
பெருங்காயம்
எண்ணெய்

ribbon murukku

செய்முறை:

  • கடலை மாவையும் அரிசி மாவையும் நன்கு கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
  • மஞ்சள் தூள், எள், உப்பை மாவில் சேர்க்கவும்.
  • டால்டா அல்லது எண்ணெயைச் சூடாக்கி அதனுடன் சேர்த்து, சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, சூடாக்கி, மாவை ரிப்பன் நாழியில் பிழியவும். (அல்லது மிக்ஸரில் சேர்க்க விரும்பினால் அதைவிட சிறிதான ஆனால் தட்டையான வேறு டிசைன் இருந்தால் பிழிந்து கொள்ளலாம்.)
  • இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து சத்தம் அடங்கியதும் எடுக்கவும்.

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1/2 கப்
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் (அல்லது நெய்)
உப்பு
பெருங்காயம்
எண்ணெய்

kaaraa sev 1

செய்முறை:

  • கடலை மாவையும் அரிசி மாவையும் நன்கு கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
  • மிளகை நைசாக அரைக்காமல் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
  • மிளகுத் தூள், உப்பு, பெருங்காயத் தூளை மாவில் சேர்க்கவும். (பெருங்காயம் பெரிதாக இருந்தால் அதையும் நீரில் கரைத்தே சேர்க்கவும்.)
  • வெண்னெய் அல்லது நெய்யைச் சூடாக்கி அதனுடன் சேர்த்து, சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, சூடாக்கி, மாவை காராச் சேவு கரண்டியில் தேய்க்கவும். (அல்லது மிக்ஸரில் சேர்க்க விரும்பினால் அவ்வளவு பெருவட்டாக இருப்பது சாப்பிடும் போது தனித்து ருசிக்கும். எனவே ஓமப்பொடிக்கு மேல் சற்றே பெரிதாக தேன்குழல் அச்சில் பிழிந்து கொள்ளலாம்.)
  • இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து சத்தம் அடங்கியதும் எடுக்கவும்.

* அச்சில் பிழிந்திருந்தால், வேண்டிய அளவுக்கு ஒடித்துக் கொள்ளவும்.

* காரம் அதிகம் தேவைப்பட்டால் இன்னும் அதிக மிளகு சேர்த்துக் கொள்ளலாம். மிளகாய்த் தூள் சேர்க்கக் கூடாது.

தேவையான பொருள்கள்:

 கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1 கப்
ஓமம் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் (விரும்பினால்)
உப்பு
பெருங்காயம்
எண்ணெய்

oma podi 1

செய்முறை:

  • கடலை மாவையும் அரிசி மாவையும் நன்கு கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
  • ஓமத்தை சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து அந்த நீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • ஓமநீர், உப்பு, பெருங்காயத் தூளை மாவில் சேர்க்கவும். (பெருங்காயம் பெரிதாக இருந்தால் அதையும் நீரில் கரைத்தே சேர்க்கவும்.)
  • டால்டா அல்லது எண்ணெயைச் சூடாக்கி அதனுடன் சேர்த்து, சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, சூடாக்கி, மாவை ஓம அச்சில் பிழிந்து, இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து சத்தம் அடங்கியதும் எடுக்கவும். (ஓமப்பொடி மெலிதாக இருப்பதால் உடனே வெந்துவிடும். அதிக கவனம் தேவை.)
  • தேவைக்குத் தகுந்த அளவில் ஒடித்து உபயோகிக்கலாம்.

* ஓமம் சேர்த்திருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.

தேவையான பொருள்கள்:

 கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1/2 கப்
உப்பு
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் (விரும்பினால்)
டால்டா – 2 டேபிள்ஸ்பூன் (அல்லது எண்ணெய்)
எண்ணெய் 

kaaraa boondhi

செய்முறை:

  • கடலை மாவையும் அரிசி மாவையும் நன்கு கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
  • உப்பு, மிளகாய்த் தூள், சேர்க்கவும்.
  • டால்டா அல்லது எண்ணெயைச் சூடாக்கி அதனுடன் சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கட்டிகளில்லாமல் பஜ்ஜி மாவை விட சற்றே தளர்ந்த பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை நிதானமான சூட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • பூந்திக் கரண்டியில் சிறிது எண்ணெய் தடவி,  வாணலி எண்ணெய்க்கு மேலாக நீட்டி, மாவுக் கரைசலை கொஞ்சமாக விட்டு, லேசாகத் தட்டினால் பூந்தி விழ ஆரம்பிக்கும். வாணலிக்கு மிக அருகில் கரண்டியை நீட்டினால் நல்ல உருளையாகவும், சற்றே மேலே வைத்திருந்தால் நீள் உருளையாகவும் விழும். (உன்னோடது ஏன் இப்படி வாலோடு இருக்குன்னு யாரும் கேட்டுடாதீங்க. 🙂 ஜாரிணி இல்லாம புளி வடிகட்டி வெச்சு செஞ்சது. எல்லாரும் இதுவே கரகரப்பா, வித்யாசமா நல்லா இருக்குன்னு சொல்றதால ஜாரிணி வாங்காமலே இருந்துட்டேன். கடைல வாங்கினதான்னு இப்ப யாரும் கேக்க முடியாதில்ல. 🙂 பூந்தியின் பின்நவீனத்துவக் கட்டுடைப்புன்னு புரிஞ்சுண்டவங்க புத்திசாலிகள்.)
  • வாணலி எண்ணெய் முழுவதும் நிறைந்ததும், நிறுத்திவிட்டு, பூந்தியைத் திருப்பிவிடவும். சத்தம் அடங்கி, கரகரப்பாக வேகும் வரை காத்திருந்து வெளியே எடுத்து வடியவிடவும். (லட்டுக்குச் செய்வது போல் சீக்கிரம் எடுத்துவிடக் கூடாது.)

* விரும்பினால், மிக்ஸருக்கு அல்லது தயிர்வடை, ராய்த்தா மாதிரி உணவுகளுக்கு உபயோகிக்க விரும்பினால் கலர் சேர்த்துக் கொள்ளலாம்.

* சிலர் சமையல் சோடா சேர்ப்பார்கள். நான் சேர்ப்பதில்லை. டால்டா அல்லது எண்ணெய் சேர்ப்பதிலேயே மொறுமொறுப்பாக இருக்கும்.

1.
ஒரு கப் பயத்தம் பருப்பை ஒரு கப் தண்ணீரில் குக்கரில் வேகவைத்து, நன்றாக மசித்து, அத்துடம் 4 கப் பச்சரிசி மாவு கலந்து, தேவையான உப்புத் தூள், எள் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து தேன்குழல் செய்யலாம்.

2.
ஒரு கப் பயத்தம் பருப்பு, ஒரு கப் கடலைப் பருப்பு, ஒரு கப் உளுத்தம் பருப்பை தனித்தனியாக வறுத்து, மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு கப் பருப்பு மாவிற்கு இரண்டு கப் அரிசி மாவு, 2 டேபிள்ஸ்பூன் வெண்ணை, ஓமம் அரைத்து வடிகட்டிய நீர், உப்பு சேர்த்து தேவையான நீர் விட்டுப் பிசைந்து தேன்குழல் அச்சில் பிழிந்து எண்ணெயில் பொரிக்கலாம்.

3.
3 கப் அரிசியையும்(ஊறவைக்காதது), 1 கப் உளுத்தப் பருப்பையும் தனித் தனியாக வறுத்துக் கொண்டு, நைசாக அரைத்து, சிறிது சூடுபடுத்திய எண்ணெய், உப்பு, சீரகம் சேர்த்து தேன்குழல் செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

அரிசி மாவு – 2 1/2 கப்
உளுத்தம் மாவு – 1/2 கப்
பச்சை மிளகாய் – 10
எள் – 1 டீஸ்பூன்
தேங்காய்ப் பால்
பெருங்காயம்
வெண்ணை
உப்பு
எண்ணெய்

செய்முறை:

  • பச்சை மிளகாய், உப்பு, காயம் இவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரிசி மாவையும் வறுத்து அரைத்த உளுத்தம் மாவையும் நைசாகச் சலித்துக் கொள்ளவும்.
  • அதில் அரைத்த விழுது, வெண்ணை சேர்த்து நன்றாக சீராகப் பிசிறிக் கொள்ளவும்.
  • அதோடு எள் சேர்த்து, சிறுகச் சிறுக தேங்காய்ப் பால் விட்டு சீடைகளாக உருட்டும் பதத்திற்கு மாவைப் பிசையவும்.
  • மாவை சீடை உருண்டைகளாக உருட்டி ஒன்றிரண்டு மணி நேரம் அப்படியே வைக்கவும்.
  • பின்னர் சூடான எண்ணெயில் வாணலி கொள்ளும் வரையில் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். எடுக்கும்போது சலசலவென சத்தம் கேட்க வேண்டும்.

காரடையான் நோன்பு அன்று இனிப்புக் கொழுக்கட்டை செய்வார்கள் என்றாலும் அத்துடன் சேர்த்து இதையும் செய்து பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

அரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – 1 1/2கப்
துவரை அல்லது தட்டப் பயறு – 1 பிடி
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – தேங்காயெண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

kaaradaiyaan-nonbu-kozukkattaikaaram.JPG

செய்முறை:

  • முதலில் அரிசி மாவை, நிதானமான சூட்டில், சிவக்க வறுத்துக் கொள்ளவும். (அரிசியை சிவக்க வறுத்தும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம். நைசாக அரைத்தால் கொழுக்கட்டை மொழுக்’கென்று இருக்கும். கொஞ்சம் கரகரப்பாக அரைத்தால் சுவையாக இருக்கும்.)
  • அடுப்பில் வாணலியில், எண்ணை விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, சிறு துண்டுகளாக நறுக்கிய பச்சை மிளகாய், தாளிக்கவும்.
  • அத்துடன் தட்டப் பயறைச் சேர்த்து வறுத்து, தண்ணீர் சேர்த்து, பாதிப் பதத்திற்கு வேக வைக்கவும்.
  • அதன்பின் வாணலியில் இருக்கும் தண்ணீர் ஒன்றரை கப் இருக்குமாறு- தேவைப் பட்டால் மேலும் சேர்த்துக் கொள்ளவும். 
  • அதில் தேவையான உப்பு சேர்த்து, மாவைக் கொட்டிக் கிளறி, இறுகியதும் இறக்கவும். (வெல்லத்தோடு மாவைக் கிளறும்போது, அடுப்பில் வெல்லப் பாகு உருகிய நிலையிலேயே இருப்பதால், மாவு நன்றாக இறுகிக் கிளற வரும். ஆனால் இதில் தண்ணீர் சில நேரம் இன்னும் அதிகம் தேவைப் படலாம். தயாராக ஒரு கப் சூடான தண்ணீர் வைத்திருப்பது நல்லது. தேவைப் பட்டால் உபயோகித்துக் கொள்ளலாம்.
  • இட்லித் தட்டில் நெய் அல்லது தேங்காய் எண்ணை தடவி, கொழுக்கட்டையாகவோ, அடைகளாகவோ தட்டி வேக வைத்து எடுக்கவும்.

* நோன்பு தினம் என்பதால் மிகவும் சுத்தமாகச் செய்ய நினைப்பவர்கள், நேரடியாக வாணலியில் தட்டப் பயறை வறுத்து பாதிவரை வேகவைப்பார்கள். இப்படிச் செய்வது மிகுந்த மணமாக இருக்கும். அல்லாமல் ஒரு நான்கு மணி நேரம் முன்னாலேயே பயறை தண்ணீரில் ஊறவைத்தும் செய்யலாம். இது செய்வது சுலபம். 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நோன்பு தினம் என்பதால் தேங்காய்ச் சட்னி. மற்றபடி உப்புமாவிற்குத் தொட்டுக் கொள்ளும் எதுவும், இதற்கும் சரியே.