பிறர் சொல்


ஒவ்வொருவனுக்கும் மூன்றுவிதச் சக்தி வேண்டும்:

1. அறிவு
2. செல்வம்
3. தைரியம்

 

இந்த மூன்றும் நமக்கு இகலோகத்திலே கிடைக்கும்படியாகவும் இதனால் பரலோக இன்பங்களுக்கும் சாத்தியமாகும்படியாகவும், நாம் தெய்வத்தை வழிபடுகிறோம். முக்திக்கு, மாத்திரமே தெய்வத்தை நம்புவது சிலருடைய வழி; இகலோக இன்பங்களுக்கும் தெய்வமே துணை என்று நம்பி, இன்பங்கள் வேண்டுமென்று தெய்வத்திடம் கேட்டு வாங்கிக் கொள்வது மற்றொரு வழி. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு பரமசிவன் என்னவெல்லாம் செய்தார்? அர்ச்சுனன் தனக்கு சுபத்திரையை வசப்படுத்திக் கொடுக்கும்படி யாரிடத்தில் கேட்டான்? ஸ்ரீகிருஷ்ணரிடத்திலே கேட்டான். ஸ்ரீகிருஷ்ணன் சுபத்திரையைக் கவர்ந்து செல்வதற்கு வேண்டிய உபாயங்கள் காட்டினார். ஆம், தெய்வம் எல்லாம் செய்யும்.
 

இகலோகத்தில் எல்லாவிதமான இன்பங்களும் நமக்கு வேண்டும். அவற்றை வசமாக்குவதற்கு அவசியமான அறிவுத் திறனை நமக்குத் தரும்படி தெய்வத்தைக் கேட்கிறோம்.

“தெய்வமே நான் தூங்குகிறேன். நீ எனக்கு மாம்பழம் கொடு” என்று கேட்கவில்லை.

“தெய்வமே தெய்வமே மாம்பழ விஷயத்தில் நீ எனக்கு இத்தனை ருசி ஏற்படுத்திக் கொடுத்த தெய்வமே! உனக்குப் புண்ணியமுன்டு. மா விதை எங்கே அகப்படும்? ஒட்டு மாஞ்செடி எப்படி வளர்ப்பது? சொல்லு. பாடுபடச் சம்மதம்; காத்துக் கொண்டிருக்கச் சம்மதம். ஆனால் மாம்பழம் கொடுத்துத் தீர வேண்டும். நீ தானே இந்த ருசியை ஏற்படுத்தினாய்?” என்று கேட்கிறோம். இது நியாயமான கேள்வி. தெய்வம் உதவி செய்யும்.

விக்கிரமாதித்யன் வணங்கிய தெய்வம்; காளிதாஸனுக்குக் கவிதை காட்டிய தெய்வம்; பாரத நாட்டு மஹா ஜனங்கள் இன்னும் தலைமையாகக் கொண்டாடும் தெய்வம்; ஸ்ரீமந் நாராயண மூர்த்தியின் சக்தியாக விளங்கும் லக்ஷ்மி தேவதை; சிவபிரானுடைய வலிமையாகத் திகழும் பார்வதி, பிரமதேவன் தலைவியாகிய சரஸ்வதி; மூன்று மூர்த்திகள்; மூன்று வடிவங்கள்; பொருள் ஒன்று; அதன் சக்தி ஒன்று; பொருளும் அதன் சக்தியும் ஒன்றே. இங்ங்னம் ஒன்றாக விளங்கும் சக்தி என்ற தெய்வத்தை ஹிந்துக்கள் உபாஸனை செய்வதற்கு விசேஷப் பருவமாக இந்த நவராத்திரியின் காலத்தை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். காரணம் என்ன?

பராசக்தி மழையருள் புரியும் சரத்காலத்தின் ஆரம்பமென்று கருதியா? சரத்காலம் நம் நாட்டில் ஒன்று போல எல்லாப் பகுதிகளிலும் தொடங்கவில்லை யாயினும், ஓரிடத்திலே தோன்றிய திருவிழா நாடு முழுவதும் பரவி யிருக்கலாம்.

‘மஹாளய அமாவாஸ்யை’ என்பது யோகாநுபவத்தில் மரணத்திற்குப் பெயர். அதைத் தப்பிய புதிய உயிர் கொண்டவுடன், சேர்ந்தபடியாகப் பலநாள் பராசக்தியை இடைவிடாமல் உபாஸனை செய்ய வேண்டுமென்ற கொள்கையின் அறிகுறியாக இருக்கலாம். கும்பகோணம் சங்கராச்சாரிய மடத்திலிருந்து பாரிகைகளுக்கு வந்த தந்தி ஒன்றிலே நவராத்திரிப் பூஜைக்கு புராணப்படி முகாந்திரம் சொல்லப்பட்டிருக்கிறது. நவராத்திரி காலத்தில் தேவி (யோகமாயை)லக்ஷ்மி, ஸரஸ்வதி, துர்க்கை என்று மூன்று விதமாக அவதாரம் செய்து பல அசுரர்களை அழித்ததாகவும் அது முதல் வருஷந்தோறும் நமது தேசத்தில் இந்தத் திருவிழா நடந்து வருவதாகவும் மடத்தார் தந்தியில் விளக்கப்பட்டிருக்கிறது. இது புராண ஐதீகம். இதற்குப் பொருள் அத்யாத்மம்.

பராசக்தி எங்கும் இருக்கிறாள். எப்போதும் அவள் இருக்கிறாள். தொழிலே உலகம். அவளே உலகம், குழந்தைகளும் ஸாமான்ய ஜனங்களும் அவளைச் சிலை என்று நினைக்கிறார்கள். அவள் சிலையில்லை. உண்மையொளி. அது கோயிற் புறத்திலே மாத்திரம் இல்லை:– அகத்திலும் இருக்கிறது. கடல் அசைப்பது; பாதாளத்தின் கீழ் மற்றொரு பாதாளம்; அதன் கீழே ஒன்று, அதன் கீழே ஒன்றாக எல்லையின்றிப் பரந்த திசை முழுதையும் கவர்ந்தது.

எப்படி பார்த்தாலும் ஆரம்பமில்லாமலும், எப்படிப் பார்த்தாலும் முடிவில்லாமலும் இருக்கும் அற்புத வஸ்து.

கோடானகோடி அண்டங்களை ஒரு சிறு மூக்கினால் உடைப்பது.

ஒரு சிறிய மலரின் இதழிலே வர்ணம் தீட்டுவதற்குப் பல்லாயிர வருடங்கள் இருந்து பழகும் நெடுநேர்மை கொண்டது; பெரிதும் சிறிதுமாகிய முதற்பொருள்; பராசக்தி.

இதனைத் தியானத்திலே நிறுத்துகிறோம். இதனை நாவிலே புகழ்ச்சி புரிகின்றோம். செய்கையில் இதனைப் பின்பற்றுகிறோம். நமது மதி தெய்வமாகிறது. நமது செய்வினை தர்மமாகின்றது. ஒரே வார்த்தை; சக்தியை வேண்டியானல் சக்தி கிடைக்கும். “கேட்டது பெறுவாய்” என்று யூத நாட்டு மரியம்மை பெற்ற கிருஸ்து சித்தர் சொல்லுகிறார்.

(முற்றும்.)

— “பாரதியார் கட்டுரைகள்
பூம்புகர் பிரசுரம். (செப் 1977)

ஒன்பதிரவு பராசக்தியைப் பூஜை செய்கிறோம். லஷ்மி என்றும், சரஸ்வதி என்றும், பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுலகத்தை ஆக்கல், அழித்தல், காத்தல் என, மூன்று தொழில் நடத்துவது.

ஹிமாசலந் தொடங்கி குமரி முனை வரை, வேதத்தை நம்பும் கூட்டத்தார் எல்லாம் இந்தப் பூஜை செய்கிறோம். ஏழைகளாக இருப்போர் பராசக்திக்கு மலரையும் நீரையும் உள்ளத்தையும் கொடுத்து வலிமை பெறுகிறார்கள். செல்வமுடையோர் விருந்துகளும் விழாக்களும் செய்கின்றனர். பக்தி செய்யும் செல்வரும் உண்டு.

மஹாளய அமாவாஸ்யை கழிந்தது.

இருளும் ஒளியும் மாறி மாறி வருவது இவ்வுலக இயற்கை. பகலிலே பெரும்பாலும் ஒளி உண்டு; மேகங்கள் வந்து சூரியனை மறைத்தாலொழிய; சில சமயங்களில் கிரஹணம் பிடிக்கும். அதையும் தவிர்த்துவிட்டால், இரவிலே தான் ஒளியின் வேறுபாடுகளும், மறைவுகளும் அதிகப்படுகின்றன; பகல் தெளிந்த அறிவு; இரவென்பது மயக்கம். பகலாவது விழிப்பு, இரவாவது தூக்கம். மஹாளய அமாவாசை ஒழிந்து போய் விட்டது.
 

சக்தி:

நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி. விக்கிரமாதித்யனும், காளிதாசனும் வணங்கிய தெய்வம். “உலகத்தார் இந்தப் பராசக்தியை நல்ல மழை அருள் புரியும் சரத்காலத்தின் முதல் ஒன்பதிரவும் வணங்கிப் பூஜைகள் செய்ய வேண்டும்” என்பது பூர்வீகர் ஏற்பாடு. மிகப் பயனுடைய காரியம். மேலான வழி. கும்பகோணம் சங்கர மடத்தில் இந்தப் பூஜை மிகவும் கோலாகலமாக நடத்தப் போவதாகப் பத்திரிகையில் ஒரு தந்தி போட்டிருந்தது. சஹஜமான விசேஷம். தேசம் முழுவதும் [இப்படி] நடப்பது [நல்லது]. சங்கர மடத்திலும் [எனக்கு] ஒருவிதமான ஆவல் உண்டானதால் தந்தியை வாசித்துப் பார்த்தேன். அந்தத் தந்தியிலே பாதி சாஸ்திரம், வர்த்தமானத் தந்திக்குள்ளே சாஸ்திரத்தை நுழைத்தது ஒரு விநோதம். ஆனால், அதிற்கண்ட சாஸ்திரம் உண்மையாக இருந்தது. நான் எதிர்பார்க்கவில்லை. எனவே தந்தியைப் படித்தபோது எனக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று.

கும்பகோணத்துத் தந்தி பேசுகிறது: இந்த பூஜைகளின் நோக்கம் உலக நன்மை. நவராத்திரிக் காலத்தில் யோகமாயை துர்க்கை, லக்ஷ்மி, ஸரஸ்வதி என்ற மூன்று வித வடிவம் கொண்டு, துஷ்டரை எல்லாம் அழித்து மனித ஜாதிக்கு மகிழ்ச்சி பெருக வைத்தாள். மனிதர் படும் துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டாக தேவி அவ்வாறு அவதாரம் செய்த காலம் முதல் இன்று வரை, பாரத தேசத்தில் எல்லாக் பாகங்களிலும் ஆரியர் இந்தத் திருவிழாவைக் கொண்டாடி வருகிறார்கள். தேவி உலகம் முழுவதிலும் பரவி இருக்கிறாள். ஒவ்வொரு தனிப் பொருளிலும் நிறைந்து நிற்கிறாள். இவளே மாயை, இவளே சக்தி; செய்பவளும் செய்கையும், செய்கைப் பயனும் இவளே; தந்தையும் தாயும் இவள்; இவளே பரப்பிரம்மத்தின் வடிவம். இவள் காத்திடுக” என்பது தந்தி.

உண்மைதான். ஆனால், “தேவி அவ்வாறு அவதாரம் செய்த காலம் முதல்” என்ற வாக்கியம் மாத்திரம் கதை. தேவி எப்போதும் அந்த வடிவங்களிலே நிற்கிறாள். ஆக்கல் அழித்தல் காத்தல் என்ற முத்தொழிலும் எப்போதும் நடக்கின்றன. லோக ஸம்ரக்ஷணை எப்போதும் செய்யப் படுகிறது. எப்போதுமே ஆராதனை செய்ய வேண்டும். சரத்காலத் துடக்கத்திலே பேரருளைக் கண்டு விசேஷ விழா நடத்துகிறோம். ‘தவம், கல்வி, தெய்வத்தைச் சரண் புகுதல்— இம்மூன்றும் கர்மயோகம் (கிரியாயோகம்)’ என்று பதஞ்சலி முனிவர் சொல்கிறார். லௌகிகக் கவலைகளாலே இம்மூன்று தொழிலையும் எப்போதும் செய்துகொண்டிருக்க முடியாமல் தடுக்கப்படும் சாமானிய ஜனங்கள் நவராத்திரி ஒன்பது நாள் இரவும் பகலும் மேற்கூறிய மூவகைகள் நெறியில் நிலைபெறும் வண்ணமான விதிகள் ஆகமங்களிலே கூறப்பட்டன.

ஒன்பது நாளும் தியானம். கல்வி, தவம் இவற்றிலே செலவிடத் திறமையில்லாதோர் கடைசி ஒன்பதாம் நாள் மாத்திரமேனும் விரதம் காக்க வேண்டும்; இந்தப் பூஜையின் பொருள் மிகவும் தெளிந்தது.

சக்தியால் உலகம் வாழ்கிறது;
நாம் வாழ்வை விரும்புகிறோம்;
ஆதலாம் நாம் சக்தியை வேண்டுகிறோம்.

— “பாரதியார் கட்டுரைகள்
பூம்புகர் பிரசுரம். (செப் 1977)

கவிஞரும் எழுத்தாளருமான தற்போது பெங்களூரில் வசித்து வந்த சதாரா மாலதி நேற்று இரவு இயற்கை எய்தினார்.

satara-malathi.jpg 

குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ரா.கா.கிளப்பில் அருமையாக திருப்பாவைக்கு விளக்கம் எழுதியவர். இரா.முருகனால் எனக்கு தனிப்பட அறிமுகப்படுத்தப் பட்டவர்.

===
Murugan told me you had lots of interest in Thiruppaavai. I am very happy about that.Because very few take interest in it. My face is different as far as modern literature is concerned.I am much rational but Thiruppaavai enchanted me like a magic.Pl let me know your criticisms also It is not that I am always sensitive to attacks. I hate only illogical attacks with pre decided ideas.

Ys Malathi.
====

மாலதி சதாரா என்ற பெயரில் மரத்தடிக்கு வந்து போட்டிக் கதை, கவிதை எழுதி கவிதையில் இரண்டாம் பரிசு பெற்றவர். பெண் கவிஞர்கள் பற்றிய விமர்சனம் ஓடிக்கொண்டிருந்த போது திடீரென ஒரு புயல் மாதிரி வந்து தன் கவிதைகளையும் கருத்துகளையும் கனல் மாதிரி கொட்டிவிட்டுக் காணாமல் போனவர்.  

===================
ஆபாச வார்த்தைகளைக் கவிதையில் போடும் பெண் கவிஞர்களைப் பற்றி அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அவர்கள் பிறர் கவனம் பெற அப்படி எழுதுவதாகவும் அவர்கள் அதீத உணர்வுக்கு ஆளாகி அப்படி எழுதுவதாகவும் சிலர் சொல்லியிருக்கிறார்கள். கவனம் பெறவென்று எழுதுகிறார்கள். சரி. அந்த கவனத்தை ஏன் கொடுக்கிறார்கள்? அக்கறையினால் அல்ல. பேசப்பட்ட விஷயத்தின் கனத்தால் பாதிக்கப்பட்டு அல்ல. விளம்பரத்துக்காக. பரபரப்புக்காக. உண்மை தானே? சில சுயலாபங்களுக்காக சில பத்திரிகைகளும் சில குழுக்களும் சேர்ந்து சில பெண் கவிஞர்களை மட்டும் உலக மகா கவிஞர்களாக எடுத்துச்செல்கிறார்கள். [முன் எப்போதும் பெண்கள் எழுதியதே யில்லை என்பது போன்ற பாவனைகளுடன். தஸ்லீமா நஸ்ரீன், கிஸ்வர் நஹ்ஹீத் போன்ற பிறமொழிக் கவிஞர்கள் தாம் வழிகாட்டிகள் என்பது அப்பட்டமாகத் தெரிந்திருந்தும்] அந்தப் பெண் கவிஞர்களும் அவர்களுக்காகவே இயங்கிவரும் அந்தப் பத்திரிகைகளில் எல்லாரையும் தூக்கியெறிந்து தாம் எழுதுவது மட்டுமே இலக்கியம் என்று பேசிவருகிறார்கள். கவனமாக உள்ளூர்க் கவிஞர் பட்டியலைத் தவிர்க்கிறார்கள். ஆண் கவிஞர்கள் எதுவுமே எழுதவில்லை என்று சொல்வதுடன் பிடித்த பெண் கவிஞர்களாக பிறமொழிப் பேர்களையே எடுத்து வைக்கிறார்கள். அது, ஒத்த முனைப்புள்ள போட்டி வணிகர்களுக்குப் பிடிக்காத போது ஆபாச வார்த்தைகளைக் கண்டுபிடித்து அவற்றுக்காக அவர்களைக் கடிந்து தூற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் மேலான குறுகிய காலத்து அதீத கவனத்தைத் தாங்க முடியாமல் தான் இந்த எதிர்ப்பு அலையே ஏற்பட்டிருக்கிறது.. ஆக மொத்தம் எல்லாமே விளம்பர சாகஸம் தான். அதிகக் கவனமும் மேலதிகமான எதிர்க்கவனமும் சம்பந்தப் பட்டவர்களை இன்னமும் நிலை தவறச் செய்கிறது. எதிர்ப்பு செய்தே கவனம் பெற இன்னும் ஒரு கோஷ்டி தயாராகிவிட்டது தேவையில்லாத வாத விவாதங்களுடன். இது ஒரு புறம்.

அதீத உணர்வுக்கு ஆளாகி அப்படி எழுதுகிறார்கள் என்று சொல்கிறார்கள். அப்துல் ரஹ்மான் சொன்னார். அவர்கள் எழுதுவது ‘அழைப்பதை’ப் போல் இருக்கிறது என்பதாக. என்னைப் பொறுத்தவரை ஆபாச வார்த்தையோ ஆபாச விஷயமோ என்று முத்திரை குத்திக்கொண்டு எதுவும் உட்கார்ந்திருக்கவில்லை. உண்மைகளைப் பட்டவர்த்தனமாகச் சொல்லவரும்போது சிலருக்கு தர்ம சங்கடமாயிருக்கலாம். ஆனால் உண்மை உண்மை தானே? கூடத்தில் குளிக்க முடியுமா என்று கேட்பவர்கள் குற்றாலத்துக்கு ஏன் போகிறார்கள்? குளிப்பது ஆபாசமா?

இந்தியா டுடே வாசகி ஒருத்தி எழுதியிருந்தார்’ ஆடை அணியாமல் நாம் போகிறபோது மட்டுமே இந்த வகையான கவிதைகளை நாம் உரத்துப் படிக்கவும் பகிரவும் முடியும்’என்று. உண்மை தான். சந்தேகமேயில்லை. ஆனால் இந்த வகை எழுத்து இயங்குவது சிறு பத்திரிகைகளில். அது nudist colony. அங்கு ஆடை தான் ஆபாசம். யாரும் யாருடைய நிர்வாணத்தையும் அரிப்புடன் பார்ப்பதில்லை. நிர்வாணம் சிற்பத்தில் அழகு. ஓவியத்தில் அழகு. கவிதையில் மட்டும் அசிங்கமா? சினிமாவில் கட்டிப்புரள்வது போன்றதா?

மாலதி போராடிக் காப்பாற்றும் நிலையில் சம்பந்தப்பட்ட யாரும் இல்லை என்றாலும் இது தான் சாக்கு என்று மேலும் மேலும் எதிர்த்துப் பேசுபவர்களுக்கு அவர்களுடைய நோக்கத்தில் இருக்கும் பெரிய தவற்றைச் சுட்டிக் காட்டவே இதை எழுதுகிறேன். எந்தக் கருத்துக்கும் வெளிப்பாட்டுக்கும் தடை விதிப்பது ஜனநாயக விரோதம். தணிக்கை என்பதே அடக்குமுறையின் வடிவம். இதில் மிக நுட்பமான பெண் எதிர்ப்பும் ‘சும்மா பேனாவை ஒடித்துப் போட்டு உள்ளே கிட’ என்ற அச்சுறுத்தலும் இருக்கிற விஷயம் மேலோட்டமாகத் தெரிந்து விடாது. குற்றம் சாட்டப்பட்ட கவிதைகளும் மிக நல்ல கவிதைகள் அவைகளை முன்னுதாரணமாகக்கொண்டு மேலெழுந்த அடுத்த வரிசைப் போலிக் கவிதைகளைத் தவிர. மீண்டும் சாய்வின்றி படித்துப் பாருங்கள். பிடிக்காவிட்டால் புறக்கணித்துப் போய்க்கொண்டே இருங்கள்.

நான் ஏற்கனவே [ஒரு பேட்டியில்] குறிப்பிட்டது போல மரணமும் காதலும் அவரவருக்குப் பிரத்யேக அனுபவம். அப்படியே கவிதையும். ஒருவர் கவிதையை இன்னொருவர் எழுத முடியாது. இன்னொரு உதாரணமும் எழுதியிருந்தேன். வெவ்வேறு பெண்ணுக்குப் பிரத்யேகமாக வரும் தீட்டு போல என்றும். கவிதையை இந்த வார்த்தையைப் போட்டு எழுது என்றோ போடாமல் விடு என்றோ யாரும் யாருக்கும் ஆணையிடமுடியாது. ஏனெனில் கவிதை நாளத்திலிருந்து வருவது. விரல்களிலிருந்து அல்ல.

அக்கறையுள்ள படைப்பாளிகளே புரிதலில்லாமல் மேலோட்டமாக ஒழுக்கவியல் ஆண்டைகள் போலப் பேசி வருவது மிகவும் வருத்தம் தருகிறது. மீதி எத்தனையோ விஷயங்களிருக்க இது ஏன் என்று குறிப்பிடுவது தவறு. சமூகக் குற்றங்களுக்கும் வன்முறைகளுக்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று பாலியம் சம்பந்தமான பாசாங்குகள்.

இப்போது நான் மிக ஆபாசமான ஒரு இணைப்பைத் தரப் போகிறேன். என் கவிதைகள் சில. இவை ஒரு நாளும் உங்களை வந்து சேரப்போவதில்லை. ஏனெனில் ஒரு புத்தகம் விற்றுத் தீர்ந்துவிட்டது. இன்னொரு பதிப்பை என் வாழ்நாளில் போடும் உத்தேசமில்லை. அடுத்து இரு தொகுப்புகளை நான் யாருக்கும் கொண்டு சேர்க்கவில்லை. கொண்டு சேர்த்து என்ன ஆகப்போகிறது என்ற நினைப்பு தான். இப்போது நான் சொன்ன ஆபாசம் நான் இணைத்துள்ள கவிதைகளில் இல்லை. நான் இவற்றை முன் வைக்க வேண்டி வந்த முனைப்பில் மிகப் பெரிய ஆபாசம் இருப்பதாக சத்தியமாக நம்புகிறேன். [தன்னைத் தான் முன்னெடுப்பதைவிடக் கொடுமையான விஷயம் உலகில் இல்லை.என்ன தான் விளம்பர யுகம் என்றாலும்] பூச்சிமருந்து தெளிக்க விரும்பவில்லை என் பூத்த பூக்களுக்கு.
 
திரும்பவும் ஞாபகப்படுத்திக் கொண்டு பார்க்கிறேன். கவிதை எழுத வேண்டும் என்று தோன்றுவதே என்னைப் பொறுத்தவரை அடாத செயல் தான்.தாங்க முடியாமல் போன போது தான் எழுத வேண்டி உந்தல் பிடரியைப்பிடித்துத் தள்ளுகிறது.

உதாரணமாக இத்துடன் இணைத்திருக்கும் ‘சாபம்’ என்ற கவிதை பெங்களூர் சுப்ரமண்யநகர் வீட்டு மூன்றாம் கட்டடத்துப் பெண் தீயில் கருகின வலது பக்கத்துடன் பிறந்தவீடு வந்தாள் என்ற செய்தி கேட்டதும் எழுதப்பட்டது. அது அசிங்கமாக வந்திருக்கிறது. குடிசைப் பையன் கையாலாகாத நிலையில் பெருந்தனக்காரன் அடக்குமுறைக்கு வரும்போது சீற்றத்துடன் ‘…த்தா’ என்று உரத்து சப்தமிடுவது போல.

பெண் வெளிப்பாட்டில் ஒரே ஒரு பெண் இல்லை. பல பெண்களுக்காக ஒரு குரல் மெல்ல ஒலிக்கிறது. ஒலிக்கிற பெண் குரல் முக்காலும் வேசியின் குரலாகவே அடையாளப்படுகிறது. ஏனெனில் பெண் கிழவியாகவோ பைத்தியமாகவோ அறியாச் சிறுமியாகவோ இருக்கும்போது மட்டும் தான் குரலெழுப்ப முடிகிறது. அந்த மூன்று நிலைகளுக்குட் படாமலே ஒரு பெண் பேசி விட்டால் அவள் வேசியாகத் தானிருக்க வேண்டுமென்ற சமூக விதி எழுதப் படாமல் இயங்குகிறது.

யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டும்.

அன்புடன்
மாலதி

பி.கு.
உண்மைகளைத் தெரிந்தவரை எழுத வேண்டும் என்பது தான் என் நோக்கமே ஒழிய சக கவிஞர்கள் மேல் காழ்ப்போ அல்லது சுய பரிதாபமோ என்னில் ஒலிப்பதாக இட்டுக் கட்டி நினைக்கவேண்டாம். எனக்கு ஆதாயம் தருகிற நல்ல [முதலீடில்லாத]சில தொழில்கள் கைவசம் உள்ளன. கணக்கெழுதுவது, சமையல் செய்வது,பற்று தேய்ப்பது, முதியோர் பராமரிப்பு இன்னும் பல. இவைகளைச் செய்து சாப்பிடுவேன்.

===

திண்ணையை மறந்து விட்டேன். திண்ணையில் இலக்கியக் கட்டுரைகள் எழுதுவதும் அடியேன் தான். நாச்சியார் திருமொழி, மறுவாசிப்பில் திருப்புகழ், பிரும்மராஜன் கவிதைகள் [திறனாய்வு], அ.முத்துலிங்கம் கதைகள் [திறனாய்வு], அம்மா வந்தாள் பற்றி தி. ஜானகிராமனின் பெண்கள் ஆண்கள் கிழவர்கள் [முழு ரிவ்யூ]மற்றும் சில. கால்வினோ கதைகள் பதினைந்தை அறிமுகம் செய்திருக்கிறேன் என் புரிதலின் படி.[பிரும்மராஜன் வழி].

அப்புறம் எதாவது ஞாபகம் வந்தால் சொல்கிறேன். மங்கையர் மலர் கட்டுரைகளில் முக்கியமாக நிறைய மனிதவள மேம்பாடு, பிறகு நகைச்சுவை அப்புறம் சில முக்கிய பெண்ணிய கட்டுரைகள் இப்படி. சேலம் பெங்களூர் ரயில் பாதை, மாவின்குருவே[பெண் கரு அழிப்பு பற்றி நக்கலோடு உக்கிரமாகச் சொல்லப்பட்ட கதை. தலைப்பு மறந்து விட்டேன்.] ஆண்களைப் பற்றின நகைச்சுவைக் கட்டுரை அதெல்லாம் யாருக்காவது ஞாபகம் வரலாம். அப்புறம் நீத்தார் வழிபாடு குறித்து திருநாவாய் பற்றி கட்டுரை எழுதினேன். திருவனந்தபுரம் ஆட்டுக்கால் பகவதி கோயில் கண்ணகி சம்பந்தப்பட்டது என்பதை எழுதினேன். மன்னிக்கவும் இனிமேல் எழுத நிறைய இருக்கிறது. இனிமேல் தான் எழுத வேண்டும்.

பி.கு. கருத்தரங்கக்கட்டுரைகளும் சில உண்டு.
கு.ப.ரா. பற்றி சேலத்தில் காலச்சுவடு நடத்திய கருத்தரங்கில்.
பெண் காதல் கற்பு… பாண்டிச்சேரி கருத்தரங்கில்
மற்றும் சில.
உபரித் தகவல். நான் தான் கடைசி நபர் இலக்கிய வட்டாரத்தில். காரணம் எல்லாரும் வெறுக்கக் கூடிய எல்லா அடையாளங்களும் என்னிடம் உண்டு. நான் BSNLநிறுவனத்தின் Chief Accounts Officerம் கூட. சாப்பாடு போடுவது கணக்கெழுதும் உத்தியோகம் தான். மீதியில் எல்லாம் பொருள் இழக்கிறேன். அப்படியே எனக்கு சின்னத்திரை ஜனரஞ்சகப் பத்திரிகைகளை விட இலக்கியப் பத்திரிகைகளில் பைத்தியம் அதிகம். யாரும் கவனிக்காவிட்டாலும் அதில் தான் உயிர் தீவிரம் பெறுகிறது. அதில் திருப்தி வருகிறது. அவற்றில் எழுதுவதே ஆனந்தம். பன்முகம், புதிய கோடாங்கி, கனவு, கணையாழி, விருட்சம் இதிலெல்லாம் தொடர்ந்து எழுதுகிறேன். ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கும் விரைவில் எழுத வேண்டும். நான் தான் சோம்பேறியாக இருக்கிறேன். அவர்கள் மறுப்பதில்லை. ‘பெண்ணே நீ’ யில் சில கட்டுரைகள் எழுதினேன். [தினமணி.காம்-ல் கிடைக்கும்.]

அப்பா! எனக்கே போரடித்து விட்டது. இன்னும் ஒரு வருடத்துக்கு என்னைப் பற்றி ஒன்றும் சொல்ல மாட்டேன்.

அன்புள்ள மாலதி.

மறந்தே போச், திருப்பாவை பிரவசனம் பண்ணுவதுண்டு. அது என் ஆன்மா.

=====

சாபம்

எரிந்து எரிந்து
சாம்பலானான்
ஒரே ஒரு ஆண்.
அவன் சொன்னான்
நான் போதும்
ஆண் இனத்துக்கே
இனி எரிவது எப்போதும்
பெண்ணாகவே இருக்கட்டும்.
சொன்னவன் மன்மதன்.
இவளுக்கோ
ஒரு நேர உபயோகத்துக்கு
வகுத்த அவயவங்கள்
ஆயுள் தண்டனை.
சில மாதத் தேவைக்காக
சிலுவையாய்ச் சுமக்கின்ற
வசீகரப் பால் பண்ணை.
எரிந்து எரிந்து வாழ்வாள்.
வகிடிட்ட இணைமேட்டில்
மடிப்பிட்ட உள் துடையில்
உணர்வெரிக்கும்.
விடுபடல் இல்லாமல்
இடுக்குகள் சிக்கலிடும்.
இன்னமும் போதாமல்
சாபம்.
பின் எப்போதும்
தீவிபத்து எல்லாமே
பெண்ணுக்கே நேர்வானேன்?
வரிக்குதிரை[1999]

0


சிறகு முளைத்த சுமைதாங்கிகள்

காரியாலயம் போகும்
காரிகையர் நாங்கள்
கரியர் விமன்
கஞ்சிக்கும் துணிக்கும்
கணவனை எதிர்பார்க்காத
கவிதைப்பெண்கள்
காப்பு கட்டளை கப்பம்
கணவன் வீட்டில்
கண்டவர்க்கும் சீர்
கடன் வாங்கிச்செய்வோம்
நார்நாராய்க்கிழிக்கும்
நார்களுண்டு எங்களுக்கு
மாமனார் நாத்தனார்
மனம் குன்றி மக்கள்
பிறந்ததுண்டு எங்களுக்கு
எங்களுக்கும் சுகர் வரும்
பி.பி. வரும் நோய்கள் வரும்
கரியர் விமன் என்று
எது விட்டது எங்களை?
பையன் பெயிலானால்
டிப்ரஷன் எங்களுக்கு.
பெண் புறம் போனால்
டிப்ரஷன் எங்களுக்கு
கரியர் மென்னுக்கு
அதெல்லாம் கிடையாது.
ஒரு வாக்கியம் சொல்லி
விட்டு விடலாம்
‘நீ வீட்டில் இருக்கலாமே!’
என்று.
கரியர் விமன் என்றால்
கைப்பை கண்ணில் ஒளி
கைவீசும் சுதந்திரம்
அவற்றின் விலை?
காதல் உண்டா வீட்டுக்குள்
என்றா கேட்டீர்கள்?
காதலா? அது என்ன?
ஓ! அந்தக் கசங்கலா?
கால்களிடைப் பிசுக்கா?
உண்டு.
அது கொண்டு தரும்
கடல் போல வேதனை
கண் கீழ் கருவளையம்
கை கால் நடுக்கம்
கர்ப்பம் கலைப்பு
தன்னைத் தொலைத்துக்கொண்ட
அவமானம்
அத்தனையும் உண்டு.
காதலென்று ஏதோ
நெஞ்சில் விழுமாமே!
அது எங்களுக்குத்
தெரியாது.
அன்றாடம் எங்கள் தேவை
கால் கப் காப்பி
கடும்பசிக்குக் கவளம் சாதம்
சரியான நேரத்தில், சூட்டில்.
கிடைக்காதே!

அத்தனையும் மீறிப்
பளிச்சிட்டால்
தேடிவரும் பட்டங்கள்
‘ஒருமாதிரி’யாய்.
புத்திசாலி என்ற பேர்
எந்நாளும் கிடைக்காது.
அதற்கு நாங்கள்
ஆணாய்ப் பிறக்கவில்லை.

புத்திரர்க்கு எங்கள் மேல்
கொள்ளை ஆசை
புதினாத் துவையல்
அம்மா கைப்பாகம்
பிரம்மாதம் என்பார்கள்.
பெண்களுக்கோ எங்கள்
நகை மேல் மோகம்
இந்த மூக்குத்தியில்
அம்மா! நீ எத்தனை அழகு
என்பார்கள்.

கடைசிச்செலவுக்கும்
எங்கள் கைப்பையில்
காசிருக்கும்.
கைப்பை கிடைக்காமல்
கண நேரம் போனாலும்
கடுகி வருவாள் கைகொடுக்க
ஒரு தோழி அவளும்
ஒரு கரியர் உமன்.

ஒன்று மட்டும் நடக்காது.
காரியம் செய்ய வரும்
கணவனின் கைக்கொள்ளி
பிடுங்கி
செத்தபிறகாவது
இவளைச்சுடாதே
என்று சொல்ல
தோழிக்கு முடியாது
முடியவே முடியாது.
வரிக்குதிரை[1999]

0

மெல்லியது

துடைக்கிடை துளைத்த
தோட்டாவும்
அடைபட்ட பேருந்து பயணத்தில்
மேவாடை மறுக்கின்ற
உள்நசிவின் முடிச்சிறுக்கின்
ஊவாமுள் பூனைக்காஞ்சி உறுத்தலும்
உள்மீட்டும் நெருக்க வாசமும்
பள்ளம் பொளியும் எண்ணச்சிற்றுளியும்
கண்விரிய எழுதிவிட்ட
கவிதைக்கிறக்கமும்
எல்லாமுமாகி வருத்துது.
மலரினும் மெல்லியது.
தணல் கொடிப்பூக்கள்[2001]

0

நிலம் என்னும் பொல்லாள்

யோநி குண்டம் பிளந்துவைத்தாள்
பாவியாள் பார்க்கத்தரமல்லாள்.
காலக்கணவன் அவளைக்
கால் மாற்றி உதைத்தான்.
கர்ப்பிணியை வதைத்தான்
கன்று பிரித்தான்.
கான்கிரீட் கனத்தாலே
கடுப்புற்றாள் பால் காம்பில்.
கர்ப்பப்பைப் புற்றாலே
நித்தியமாய் இரத்தவிடாய்.
ஊசியால் விந்தேற்றி அவளில்
உலர்ந்த கருத்தரிப்பு.
பேணுதல்களில்லாமல்
பேறுகள் பலகோடி
உடல் மரத்துப்போகவிட்டான்
உற்றதுணவன் அவளை.
முலைவருடாமல் முகவாய் பிடிக்காமல்
இதழ் சுவைக்காமல்
உடல் மரத்துப்போகவிட்டான்.
ஈரத்தினவுக்கு ஈடு கிடைக்காமல்
சோரத்தில் நின்றுவிட்டாள்.
பகிரங்க வேசியாய்
பால்மாறி நின்றாள்.
பெண்மை மறந்தாள்.
கணவன் மேல் கோபமென்றால்
குழந்தைகள் மேல் குற்றங்கள்.
ஆடையணியட்டும் அவள்.
ஆசை மறக்கட்டும்.
பெண்காமம் பெரிதென்று
காட்டிவிட்டாள். மாற்றட்டும்.
கோள்கள் மேல் ஏறிக்கொண்டு
கொக்கரித்தான் அவள் கணவன்.
புத்தி வரப்போவதில்லை
பதிகளுக்கு எந்நாளும்.
பித்தாட்டம் பத்தினிக்குப்
போதும் நிறுத்தட்டும்.
தணல் கொடிப்பூக்கள் 2001

இந்தக் கவிதை எழுதியபின்பு கொஞ்சம் வளர்ந்திருக்கிறேன். இதில் பத்தினி
வேசி என்று பெண்நிலைப் பாட்டுக்கு விரோதமான சொற்களை உபயோகப்படுத்தி விட்டேன் தெரியாமல். ஆனாலும் பண்ணிய தப்பை மறைக்க விரும்பவில்லை.

0

உறுப்பிலக்கணம்

பெண் போலணிந்த உடை
இரு பாலிலி நான்.
கைவழிப்புணர்ச்சி தான்
கட்டிவரும் எனக்கு.
உடல்மொழி தெரியாது
மதம் உதற வராது.
அன்புண்டு ஆண்டவன் தானில்லையென
அநியாயப்புளுகுக்குப் பயிற்சியெடுக்கவில்லை.
ஒன்றிரண்டு மூன்றுமில்லைநான்காவது
ஐந்தாவது மதங்கள் தேவலாம்
என்று சிறுபான்மையில் ஒளிய
நாட்டம் எதுவுமில்லை.
சட்டமும் சத்தியமும்
சம்பளமும் பேணும்
சாணாத்தி பிழைப்பெனக்கு.
சாதி எதிலுமில்லைஎன்
பிறப்புக்கு, ஏழைப்பிராய
இளமை தந்த சொத்தது.
படிகளில் ஏறிவிட
வடிகால் அமைத்துத்தர
சேக்காளி குழு துருப்புச்சீட்டு
கோட்டைப் பொய் சேராமலே
எனக்கும் அடையாளமுண்டு
அது என் தனிக்கவிதை.
மரமல்லிகைகள்[2003]

0

கூர்வாளைப் படித்தபோது கருத்தில் ஒத்துப்போன இன்னொரு கவிதை ஞாபகம் வந்தது.

என் பிசாசு

ரகசியமாய் ஒரு பிசாசு
சைகை செய்தும் கழுத்தை இறுக்கியும்
என்னை பயமுறுத்துகிறது.
எப்போதும் பிறர் மேல் பார்வை
அதற்கு. எவரும்
கூசிப்போகும்படி கெட்ட
நடவடிக்கை அதற்கு.
என்னை அதிர வைக்கிறது.
திருடத்தூண்டுகிறது.
யாரிடமும் சொல்லிவிட்டால்
அவ்வளவுதான்! என்று
அச்சுறுத்துகிறது.
இதனிடம் தப்பித்து
வெளிவரவே முடிவதில்லை.
பிசாசு இருப்பதை
வெளியே சொல்லிக்கொள்வது
அவ்வளவு சுலபமில்லை.
பிசாசும் நானும் வேறு வேறு
என்பதை நிரூபித்தாக
வேண்டியிருக்கிறது சமயங்களில்.
பிசாசைப்போல சிலநேரம்
நானும் ஆகி வருவது
அந்தரங்க சந்தோஷமாகவும்
அதிர்ச்சிக்குரிய உண்மையாகவும்
ஆகிவிடுகிறது.
நான் தான் பிசாசு என்று
சிலர் குற்றம் சாட்டும்போது
கோபம் பொத்துக்கொண்டு
வருகிறது.
நானாகச் சொல்லிக்கொள்ளும்போது
பிசாசும் நானும் சேர்ந்து
இளித்துக்கொள்ளுகிறோம்.

14.4.2003 கவிதைக் கணத்தில் வாசிக்கப்பட்டது. மரமல்லிகைகள் தொகுப்பில் இருக்கிறது.

0

கருத்தளவில் ஒத்துப்போனது மேற்சொன்னது என்றால் சொல் அளவில் ஒத்ததாக இதைப் போடுகிறேன்.

வீம்பு

கத்தியைத் தூக்கிப்போட்டு
கவனமாய் நுழைந்தாய் நீ
என் ஊர்களில்

நான் காத்திருந்த விண்ணாகி
நிலவைப் பரிசளித்தேன்.
என்றும் குறையாத நிலவை.

இடைவெளியில்
என் பூவனங்கள் காயாமல்
நினைவுகளின் பாசனம்.
ஓரிருமுறை என்னை
மீட்டிச்சென்ற உன்
நினைவுகள்.

எல்லாம் இன்று சரியானது.
திருப்தி தான்
ஆனாலும் ஒரு கேள்வி.
இருபது வருடங்களுக்குக்
கத்தியை ஏன் சுமந்தாய்?

இந்தக் கவிதை குறித்து அவ்வை மண்ணில் பெண் எழுத்தாளர்கள் என்ற தொகுப்பில் க. மோகனரங்கன் சிலாகித்திருந்தார் அது மாலதிமைத்ரியால் எழுதப்பட்டது என்று நினைத்து. அது என்னுடைய தணல்கொடிப்பூக்கள் தொகுப்பில்[2001] உள்ளது.

0

நிஜமாகவே இது சானிட்டரி நாப்கின் கவிதை.

காதோடு வந்த ரகசியம்
கரும்பாலே ஒரு நியமனம்.
வலிமின்னல் வாட்டங்களில்
தான் பெரியவள் என்ற பலம்
தனக்குத்தானே
ஒரு ஹோலி
பிரத்யேகமாக ஒட்டும்
வண்ணப்பண்டிகை
கள்ளமில்லாமலே கறை
ஒளிக்கின்ற
பிள்ளைத்தனத்தில் துவளல்.
அவசிய அதிகப்படி
தற்காப்பில் கவன மழை.
இடைநாபி ஒசிந்து
உள்வாங்கும் மயில் நளினம்.
ஆசைப்பேரருவி கொட்டல்
நாடி நரம்பு தமனிகளில்
நசையேற்றித்
தாமிறங்கும்
சிவப்பு இரத்தப் பொட்டலங்கள்.
மேனியிலே வந்து
ஈஷிக்கொள்ளும் காமம்
சதிர் ஆட்டுவிக்கும்
மோகம் மயக்கம்
காதலனைப் பூசிக்கொள்ளப்
பேருவகை
அத்தனையும் அந்த நாளில்.
காட்டாற்று வெள்ளம் நின்று
மடு வெளிறி கூந்தலாற்றி
நிற்கிற
ஐந்தாவது நாள்
அழகு! ஐயோ!அற்புதம்
அசௌகரியம் அங்கு ஏது?

கவிஞர் சுகுமாரன் ஷவர சுகம் குறித்து எழுதிய inspiration இது. வரிக்குதிரை தொகுப்பில் உள்ளது. இன்னமும் கருத்திலேயே வில்லங்கம் வைத்த கவிதைகள் நிறைய எழுதியிருக்கிறேன். இப்போதைக்கு இது போதாது?

===========================================

எங்களுக்குள் மிகச் சில கடிதத் தொடர்புகளுக்குப் பிறகு தன் பெண்ணைப் பார்க்க US செல்வதாக ஒரு கடிதம் எழுதியதோடு எங்கள் தொடர்பு நின்றிருக்கிறது. 😦 மீண்டும் இன்று திருப்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

மாலதி கவிதைகள் குறித்த கட்டுரை திண்ணையில்.. 

திண்ணையில் மாலதி

  

sim4.jpg

காதல் நெருப்பின் நடனம்..
உயிரை உருக்கி தொலையும் பயணம்

காதல் நீரின் சலனம்..
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

காதல் மாய உலகம்..
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்..
 

இந்தக் காதல் எனக்குப் புரிவதில்லை. 🙂 ஆனால் சமீபத்தியப் பாடல்களில் பாடல், இசை, படமாக்கம், புதிய குரல்கள், முக்கியமாக பாவனா என்று பலவிஷயங்களால் இந்தப் பாடல் கொஞ்சம் திரும்பிப் பார்க்கவும் திரும்பத் திரும்ப முணுமுணுக்கவும் வைப்பதும் உண்மை. இன்று ஏனோ ப்ரியாவைப் பற்றியும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

ப்ரியா– மரத்தடியின் உபதலைவி என்ற பதவி வகித்திருக்கிறார் என்றாலும் “காதல் பிசாசு” என்றே அறியப்படுபவர். அவர் கவிதை தட்டக் கணினியைத் தொடும்நொடியிலேயே, மரத்தடியில் கைத்தட்டவும் விசிலடிக்கவும் ஆரம்பித்திருக்கிறது ஒரு கூட்டம். 🙂

உபதலைவி பிரியா உம் பாட்டு – இந்த
உலகமெல்லாம் மகிழுதம்மா கேட்டு
மரத்தடில ஒந்தெறமக் காட்டு
தங்காச்சி பாட்டு – பசங்க
பிகிலு வுட்டாப் போட்டுடுவேன் பூட்டு
நண்டுப்புடி போட்டு!

என்று இவருக்காக கானா எடுத்துவிட்டு தைரியம் கொடுத்திருக்கிறார் ஆசாத் அண்ணன்.

ப்ரியாவின் உற்சாக பதில் கானாதான் முதன்முதலில் நான் படித்த இவரது முதல் கடிதம்.

மரத்தடில கூடுது பார் கூட்டம் – இங்க
மணிக்கணக்கா தமிழுக்காவ நாட்டம்
மனசுக்குள்ள போட்டு வச்சோம் தோட்டம்
நண்பர் மலர்த் தோட்டம்
நம்ம எழுத்துக்கில்ல என்னக்குமே வாட்டம்
இனிமே வாட்டம்!

சரி, கானா எல்லாம் எழுதுபவர் போலிருக்கிறது என்றுதான் முதலில் நினைத்தேன். சந்தம், மெட்டு, தத்தகாரம்- எப்படியும் அழையுங்கள்- இவைகளுக்குக் கட்டுப்பட்டு எழுதுவதெல்லாம் இவருக்கு தண்ணி பட்ட பாடு என்று பிறகுதான் தெரிந்தது. வார்த்தைகள் உணர்வுகளுக்காகவோ, உணர்வுகள் வார்த்தைகளுக்காகவோ சமரசம் செய்து கொண்டதே இல்லை. அப்படியே அடித்துச் செதுக்கியது போல் கவிதைகள் வரும்.

இவரது கவிதைகள் இன்று பேசப்படுகிற பெண்ணியம் என்கிற கட்டுப்பாடுகளுக்குள் எல்லாம் அடங்காத, ஈகோவை எல்லாம் துடைத்துப் போட்ட முழுச் சரணாகதிதான்.

sim2.jpg

ஒரு காதலர் தினத்திற்காக எழுதிய வெண்பாக்கள்… 

புல்லின் பனித்துளியாய்ப் படரும் நுதற்றுளிகள்
நில்லா துருளுமடா நின்றன் நெடுமார்பில்
வெல்லத் திறமுமற்றேன் வெட்கச் சமரிதிலே
மெல்லத் திரும்பியெனை மெல்.

கவிஞர் தாமரைக்கெல்லாம் கொஞ்சமும் குறைவில்லாத அல்லது என்னைப் பொருத்த வரை, வாய்ப்புக் கிடைத்தால் அவரைவிடவே சிறக்கக் கூடிய கவிதாயினி என்பது என் எண்ணம். எதுவுமே எழுதாமல் சும்மா நாளைக் கடத்தியவரை சாட்’டில் கடிந்துகொண்ட ஹரியண்ணா (ஹரிகிருஷ்ணன்), ‘சோம்பேறிப் பெண்ணே சொடுக்கு!’ என்ற ஈற்றடிக்கு வெண்பா எழுதிவரச் சொன்னார். என்னிடம், ‘”சோம்பேறி’க்குச் சரியான எதுகை கிடைப்பது கடினம், பாவம் ப்ரியா, பார்க்கலாம் என்ன செய்றான்னு” என்றும் சொல்லிவைத்திருந்தார். எனக்கு நம்பிக்கை இருந்தது. 🙂

sim141.jpg

நேற்றும் நினைத்திருந்தேன் நாளை முடித்திடுவேன்
ஆற்றாக் கருமங்கள் என்பவளே – காற்றிலையேல்
காம்பேறிப் பூத்துவிடக் கண்சுணங்கு மோமலர்கள்
சோம்பேறிப் பெண்ணே சொடுக்கு.

முற்றெதுகை.:) அதுதான் ப்ரியா.

[இதற்கு சற்றும் சளைக்காத எதுகையோடு ஆசாத் அண்ணனும் அப்போது எழுதியிருந்தார்.

அச்சுதன் தாள்போற்றி அஞ்சாமற் சொல்லெடுத்து
மெச்சும் கவிவீணை மீட்டிடுநீ – நச்சுமிழும்
பாம்பேறி நின்ற பரந்தாமன் பார்த்திருப்பான்;
சோம்பேறிப் பெண்ணே சொடுக்கு!
]

sim5.jpg

ஒரு சராசரிப் பெண் தாய்வீட்டில் வாழ்ந்த வாழ்க்கையை, அதன்மேல் வைக்கும் காதலை மெல்லிய நினைவுக்கூட்டலாய்ச் சொல்ல நினைத்து நம்மையும் நம் அப்பா அம்மாவின் மடி வரை அழைத்துப் போய்ச் சிணுங்குகிறார்.. 

பன்னிரண்டாம் வகுப்பினிலே தேறாமல் போயிருந்தால்
வடிப்பதற்குப் பதில் வாழ்ந்திருக்கலாம் கவிதையை!

சமையல் குறிப்பு வலைப்பதிவு என்பதால் அதற்குத் தகுந்த மாதிரி உவமை சொல்லலாம். நம்ப ‘ஆச்சி மசாலா’ சண்டே சமையல் மாதிரி, ஃபைவ் ஸ்டார் சமையல், கிராமத்துச் சமையல், ஆரோக்யச் சமையல், மைக்ரோவேவ் சமையல் வரை, எல்லா விதக் காதல் கவிதைகளும் இவரே அநாயாசமாக எழுதியிருக்கிறார் என்றால் நம்புவீர்களா? அதனால் கீழே..

 #
சென்மத்துக்கும் ஆசயய்யா…

sim3.jpg

சல்பேட்டா காச்சகொள்ளோ சலசலன்னு சிலுக்குதுய்யா
கல்கோனா முட்டாயாட்டம் கண்ணு ரெண்டும் மினுக்குதுய்யா
என்னாத்துக்கோ ஏம் மன்ஸு எனங்கெட்டு எளகுதுய்யா
சொன்னா கூடோ பிரியாத சொகம்மா வலிக்குதுய்யா!

பேட்டக்கெல்லா பேதி தர்ர பேமானியா இர்ந்த என்ன
சேட்டயெல்லா காட்டாமேயே சொக்க வச்சிப் பாக்குறய்யா
நெத நெதமும் நெகுந்து போயி நெஞ்சுக்குள்ள குளுந்து போயி
கத கதயா கனவுக்குள்ள கலரு படம் காட்டுறய்யா!

வெத வெதமா சீல கட்டி வெக்கம் மட்டும் ஓரங்கட்டி
கதவடச்சிக் கதபேச கெனாக்காண வக்கிறய்யா!
“கய்தே ஏங்கண்ணம்மா காப்பித் தண்ணி கொண்டாம்மே!”
காதுக்குள்ளோ கேக்க ஒரு தேதி பாத்து சொல்லுய்யா!
மெய்யாலும் சொல்லிப்போட்டேன் மாமா நீ கேட்டுப்புடு
பொய்யி இல்ல பொட்டப்புள்ள லவ்வு மட்டும் பாத்துக்கிடு!

ஒனக்காவ ஒல கொதிக்க ஒம்புள்ள மடியிருக்க
மாமா ஒம் மன்ஸுக்குள்ளோ மணக்க வச்ச மீன்கொயம்பா
சோக்கா நா குடியிருக்க சென்மத்துக்கும் ஆசயய்யா!!
 

#
அன்பான, வெற்றிபெற்ற காதல் வாழ்க்கையைப் பதிவு செய்யும் ஆர்ப்பட்டமில்லாத அமைதியான நடையில் ஒரு முயற்சி..

sim6.jpg

தத்தளித்துப் போராடும் தாவிப் பறந்தோடும்
தத்தைமொழி தோற்றுவிடத் தீந்தமிழில் தேடியுனை
நத்தும் மனக்கதவம் தட்டித் திறவாயோ
தத்தம் உனக்கே உயிர்.

#
நகரத்து நடுத்தரவர்க்கப் பெண்ணின் சராசரி வாழ்க்கையில் காதலை உணரும் தருணத்தைக் கண்முன் கொண்டுவரும் முத்தக் கவிதை

sim7.jpg

ஒருநூறு தோழமை நம்
உடனிருந்து உரையாட
அவரெவரும் அறியாமல்
அணைகடக்கும் அனல் முத்தம்!

இடை குறுக்கிக் காலடக்கி
மணவறையில் அமர்கையிலே
செவிமடலில் நீ சுவைத்த
சின்னதொரு சுக முத்தம்!!

#
எப்போ வருவீக?
[சும்மா பறவை முனியம்மா ரேஞ்சுக்கு… :)]

sim13.jpg

மஞ்சக் குளிக்கையிலும் மாராப்பு இழுக்கையிலும்
மார் மேல வெரல் படவும் மருகுனேன் எதுக்காக
மாமா நீ தீண்டுமுன்ன மருதமல்லி தொட்டாலும்
மாஞ்சுருவேன் மனமொடஞ்சி தெரியாதோ மன்னவனே!

கம்மா வறண்டதுபோல் கண்ணும் வறண்டுருச்சி
சும்மா இருக்குறதும் சொணமுள்ளப் போலாச்சி
அம்மா பொலம்புறா “பாதகத்தி படுபாவி
எம்மா நாளுடி நீ ஏங்கி வளிபாப்ப?”

நாளா பொழுதா நா நஞ்சித்தா நூலானேன்
தாளாமத் தாந்தெனமும் தகவலுக்கு ஏங்கி நின்னேன்
பாளாப் போன இந்த நாயித்துக் கெளமையில
ஆலாப் பறந்து நின்னேன் அரச் சொல்லு கடுதாசிக்கி

செவ்வாக் கெளமையில சேதி சொல்ல வந்துருவிய
புதங் கெளமைக்கித்தான் புதுச் சேல தந்துருவிய
வியாளக் கெளமயில வெரசாக் கைபுடிச்சு
வெள்ளிக் கெளமைக்கு வெக்கத்தத் தொரத்துவிய

சத்தம் போடாம அத்தக்கித் தெரியாம
சனிக் கெளமைக்கு சந்தைக்குக் கூட்டிப்போயி
முத்து வளவியும் மூணு மொளம் முல்லப் பூவும்
மீசக்குள்ள சிரிச்சிக்கிட்டே முளுசாத் தருவீக

வாரம் முச்சூடும் வளிமறந்து தொலச்சிப் புட்டு
வேதனையில் வெளக்கேத்திப் பொழுத ஓட்டிப் புட்டேன்
வேதனயத் தெரியுமா வெட்டிப் பய வாரத்துக்கு
வந்துருச்சு மறுபடியும் நாயித்துக் கெளமை மட்டும்!

[மேற்படி ‘எப்போ வருவீக?!” கவிதைக்கு ‘வெரசா வந்துடுவேன்’ என்று எசப்பாட்டு படித்தவர் மரத்தடி ஓனர் குமரேசன்.

வளிபாக்கும் ராசாத்தி மனசொடிஞ்சி போகாத
ஆத்தா பொலம்புறா’ன்னு தெனந்தோறும் வேகாத
வெரசா நான் வந்துடுவேன், வேதனையத் தீர்த்துடுவேன்
உம்மடிமேல படுத்து மீசைக்குள்ள தான் சிரிப்பேன்..

மார்மேல படுத்ததை நெனச்சி ராவெல்லாம் போயாச்சி
மறுபடியும் எப்ப நடக்குமின்னு மனசெல்லாம் கனவாச்சி..
இந்த ஏக்கம் சீக்கிரமா தீர்ந்திடுமே-வெட்டி பய
வாரம் முழுசும் வெள்ளிக்கெழமையா ஆயிடுமே..

எல்லாக் கிழமைகளையும் கவிதாயினி குறிப்பிட்டாலும் கவிஞர் வசதியாக வெட்கம் தொலைத்த வெள்ளிக்கிழமையை மட்டுமே வாரம் முழுவதும் வேண்டுமென்கிற குசும்பை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை. அதுசரி! ஆனால் அன்னார் 29 ஜனவரி 2007 அன்று தான் திருமணம் செய்திருக்கிறார். [இவ்வளவு வெரசாவா?:)))] வாழ்த்துகள் கும்ஸ்!]

#
பற்றிக் கொள்ளவேணும்
 
புதுக்கவிதையில்

sim8.jpg

மிகநீண்ட பொருளற்ற ஊடல்களின் முத்தாய்ப்பாய்
கோபங்கூத்தாடக் குரல் கமறும் போதுகளிலும்
கருவங்குறையாமலே
காதலையமிழ்த்தித் தேய்ந்து மறையும்
நலவிசாரிப்புகள்

ப்ரியா மரத்தடி தாண்டி அறியப்படவில்லை அல்லது மரத்தடியிலேயே கூட புதிதாக வந்த பலர் அறியாதவராகவும், தொடர்ந்து எழுதாதவராகவும் இருப்பதில் எனக்கு அதிக வருத்தம்.

கடைசியாக, புதுக்கவிதையில் கழிவிரக்கமா இல்லையா என்று இனம்பிரிக்க முடியாத யதார்த்தக் கவிதையுடன், ஒரு பெருமூச்சையும் விட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்கலாம்; அல்லது நாமும் இந்த  எழவெடுத்த சுழலில் சிக்கிக் கொள்ளலாம். 😦

#
சுழல்

sim92.jpg

கண்ணோரச் சாடைகளும்
இறுக்கிப் பிணைத்த விரல்களும்
தெரிவிக்க முயன்ற
அருகாமைக்கான விழைவுகளை
உணராமலே போன நாட்களில்
உயிர்விட்டது
நுண்ணிய வெளிப்பாடுகளுக்கான முனைப்பு

எதிர்பார்ப்பும் காதலும்
குழைத்துப் புனைந்த எனது சொற்கள்
கேளாது நிராகரித்த
உன் செவிச்சுவர் மோதித்
தெறித்த ஒவ்வொரு முறையும்
ஏமாற்றத்தின் நிறமாய்ச் சாம்பி
சுயவெறுப்பு பூசிக் கொண்டது என் நேசம்

எஞ்சியிருப்பது சக பயணியென்ற
தோழமை மட்டுமேயென
ஆசுவாசித்து விலகி நின்றிட

எங்கிருந்தோ வழிதவறிய மேகம்
பொழிந்த நிமிட மழையாய்
வெளிப்படும் உன் பிரியம்
அதற்கேயான கவர்ச்சிகளோடும் நிச்சயமின்மையோடும்
ஈர்க்கிறது எனை மீண்டும்
உயிர்வாதை நிரம்பிய நாட்களின் சுழலுக்குள்

காதலர்தின 🙂 வாழ்த்துகள் ப்ரியா!!!

அப்புறம் சொல்ல நினைப்பது… :))

sim10.jpgsim.jpg