ரசம்/சூப்


புளி சேர்க்காமல் தயாரிக்கும் ரசம். புளி ஆகாத ஏதாவது நாட்டு மருந்து சாப்பிடும் நாளில் அல்லது அதிகப் புளி சேர்த்து வேறு குழம்பு, கூட்டு வகைகள் செய்யும்போது ரசத்தை இந்த முறையில் தயாரித்துக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:

தக்காளி – 4
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
பருப்புத் தண்ணீர் – 2 கப்

வறுத்து அரைக்க:

எண்ணெய் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன் (விரும்பினால்)
தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்

தாளிக்க:  எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

poriththa rasam

செய்முறை:

 • எண்ணெயில் காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகை சிவக்க வறுத்து, தேங்காய்த் துருவல், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
 • ஒன்றரை கப் தண்ணீரில் இரண்டு தக்காளிப் பழங்களை நன்கு மசித்துக் கொள்ளவும்.
 • மீதமிருக்கும் தக்காளிகளை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூளையும் தக்காளிக் கரைசலுடன் சேர்த்து அடுப்பில் வேகவைக்கவும்.
 • தக்காளி வெந்ததும், பருப்பு வேகவைத்த தண்ணீர், அரைத்த விழுது சேர்த்து பொங்கி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
 • சிறிது எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.

விழுது சேர்த்ததும் ரசத்தை அதிகம் கொதிக்கவைக்கக் கூடாது. பொங்கிவந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். இப்படிச் செய்தால் மண்டி தங்காமல் பரிமாறும்போது அடிவரை கலந்தே பரிமாறலாம். இதனால் அரைத்துவிட்ட பொருள் வீணாகாமல், சுவையும் குறையாமல் இருக்கும்.

தேவையான பொருள்கள்:

தக்காளி – 4 (பெரியது)
பச்சை மிளகாய் – 2, 3
இஞ்சி – சிறு துண்டு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
ரசப் பொடி – 1/2 டீஸ்பூன்
பருப்பு வேகவைத்த நீர் – 2 கப்
தேங்காய்ப் பால் – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
கொத்தமல்லித் தழை
எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க: நெய் (எண்ணெய்), கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

elumichchai rasam

செய்முறை:

 • துவரம் பருப்பு வேகவைத்த நீர் இரண்டு கப் எடுத்துவைத்துக் கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து தக்காளிகளை முழுதாகப் போட்டு, 5 நிமிடங்களுக்கு மூடிவைக்கவும்.
 • தக்காளிகளை மேல்தோலை நீக்கி, அந்தத் தண்ணீரிலேயே கையால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
 • மேலும் ஒரு கப் தண்ணீர், துண்டாக நறுக்கிய(அல்லது நசுக்கிய) இஞ்சி, குறுக்கே கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து அடுப்பில் கொதிக்கவைக்கவும்.
 • தக்காளி பச்சை வாசனை போனதும் ரசப் பொடி சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் மட்டும் கொதிக்கவைத்து பருப்பு நீரையும் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.
 • ரசம் நுரைக்கக் கொதித்து, பொங்கி மேலே வரும்போது கெட்டியான தேங்காய்ப் பால் சேர்த்து, அடுப்பை அணைக்கவும்.
 • கொத்தமல்லித் தழை சேர்த்து, நெய் அல்லது எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். .
 • பரிமாறும் நேரம் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

* இந்த ரசம் வண்டல் இல்லாமல் அடிவரை கலந்து பரிமாறலாம். வீணாக்காமல் முழுமையாக உபயோகிக்கலாம்.

* பச்சை மிளகாய், எலுமிச்சை, பருப்பு நீரின் மணம் அதிகமாக இருந்தால் சுவைக்கும். நன்கு வேகவைத்த துவரம்பருப்பையும் சிறிது எடுத்து, நன்றாக மசித்து, கொதிக்கும் ரசத்தில் கலந்துகொள்ளலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இந்த ரசம் சாதத்திற்கு, சாதா கறி வகைகள், அப்பளம், வடாம் தவிர உருளை, வாழை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற ஏதாவது ஒன்றில் செய்த பொடிமாஸ் அல்லது ரோஸ்ட் கறி வகைகள் நன்றாக இருக்கும்.

கடுப்பு வலியைப் போக்கும் கண்டத்திப்பிலி என்பது வழக்கு. மழை அல்லது சீதோஷ்ண மாற்றங்கள், மிகுதியான வேலை போன்ற காரணங்களால் வரும் உடல் வலி, காய்ச்சல், தொண்டைக் கட்டு போன்ற அறிகுறிகளுக்கு இந்த ரசம் மிகவும் சிறந்த மருந்து.

ஸ்ரீகாந்த், மேலதிகத் தகவல்கள், குறிப்பில் மாற்றங்கள் இருந்தால் உங்கள் அம்மாவிடம் கேட்டு இங்கே சொல்லவும்.

தேவையான பொருள்கள்:

புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
நெய்

kandaththippili

வறுத்து அரைக்க:
கண்டத்திப்பிலி – 8, 10 குச்சிகள்
சதகுப்பை – 2 டீஸ்பூன் (விரும்பினால்)
பூண்டு – 4 பல் (விரும்பினால்)
காய்ந்த மிளகாய் – 2
துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
 

தாளிக்க: கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

kandaththippili rasam

செய்முறை:

 • திப்பிலி, சதகுப்பை, மிளகாய், துவரம் பருப்பு, மிளகு, சீரகத்தை தனித் தனியாக, நன்கு சிவக்க நெய்யில் வறுத்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
 • புளியை நீர்க்கக் கரைத்து உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், லேசாக நசுக்கிய பூண்டுப் பல் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
 • புளி வாசனை போனதும், அரைத்த விழுதைப் போட்டு, கொதித்ததும்(இந்த நேரத்தில் நல்ல வாசனை வரும்.), தேவையான தண்ணீர் மேலும் சேர்த்து விளாவவும்.
 • நிதானமான தீயில் பொங்கிவரும்போது இறக்கவும்.
 • ஒரு டீஸ்பூன் நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.

* மற்ற ரசம் மாதிரி தெளிவாக இல்லாமல் கொஞ்சம் கலங்கி கெட்டியாகத் தான் இருக்கும்.

* திப்பிலி என்று பொதுவாகக் குறிப்பதைவிட கண்டத்திப்பிலி என்று சொல்வதே வசதி. ஏனென்றால் அரிசித் திப்பிலி என்றும் ஒரு மருந்துப் பொருள் (கருப்பாக மிளகுவகை மாதிரி) இருக்கிறது.

* சதகுப்பைக்குப் பதில் 10 அரிசித் திப்பிலியும் சேர்த்துக் கொள்ளலாம்.

* பொதுவாக இதில் தக்காளி சேர்ப்பதில்லை. நான் சேர்க்கவில்லை. விரும்புபவர்கள் இரண்டு தக்காளி சேர்த்துக் கொள்ளலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சூடான சாதத்தில், சுடச் சுட இந்த ரசத்தை விட்டுச் சாப்பிடலாம். தொட்டுக் கொள்ள பருப்புத் துவையல். இத்துடன் வேறு உணவுகள், தயிர் சாதம் போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

நான் சமைக்க ஆரம்பிச்சு முதல்முதல்ல செஞ்ச ரசம் இதுதான். ஐயோ, முதல்லயே கஷ்டமானதா எதுக்கு செஞ்ச? சிம்பிளா எதாவது வறுக்காம அரைக்காம செய்யற சாத்துமதா செஞ்சிருக்கலாமேன்னு அம்மா பயந்தாங்க. இது கஷ்டம், இது சுலபம்னெல்லாம் கண்டுபிடிக்கற அளவுக்குக் கூட சமையல் அறிவு இல்லாதவ, எதைச் செஞ்சாலும் டைரியைப் படிச்சுதான் செய்யணுங்கற நிலைமைல இருக்கறவளுக்கு கஷ்டம் என்ன, சுலபம் என்ன? நல்லா இருந்ததும்மான்னு வேற தன்னடக்கத்தோட சொல்லிப் பார்த்தேன். இது யார் செஞ்சாலும் நல்லாத் தான் இருக்கும்னு சொல்லிட்டாங்க. (Grrr…)

தேவையான பொருள்கள்:

புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
தக்காளி – 2, 3
துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் (வேகவைத்து மசித்தது)
மஞ்சள் தூள்
உப்பு – தேவையான அளவு

mysore rasam 1

வறுத்துப் பொடிக்க:
காய்ந்த மிளகாய் – 3
மல்லி விதை – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயம்
கொப்பரைத் தேங்காய் – 1 டேபிள்ஸ்பூன்(துருவியது)

தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், , கறிவேப்பிலை.

mysore rasam 2

செய்முறை:

 • புளியை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.
 • வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் வைத்து, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, மல்லி விதை, சீரகம், பெருங்காயம், கொப்பரைத் தேங்காய்த் துருவல் என்ற வரிசையில் வறுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
 • புளி நீரில் தக்காளியை கையால் நன்றாக நசுக்கிவிட்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
 • புளி வாசனை அடங்கியதும், வேக வைத்த துவரம் பருப்பும் அடுத்து அரைத்து வைத்துள்ள பொடியையும் போட்டு மேலும் கொதிக்க விடவும்.
 • தேவையான தண்ணீர் சேர்த்து விளாவி, நிதானமான தீயில், பொங்கி வரும் சமயம் இறக்கவும்.
 • எண்ணெயில் கடுகு, சீரகம் கறிவேப்பிலை தாளித்து, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.

* அடியில் வண்டலாக இருக்கும். மேலாக நன்றாகக் கலக்கிப் பரிமாறினால் தான் சுவையாக இருக்கும். அப்படியும் வண்டல் மிஞ்சியிருந்தால் அதை அடுத்த வேளைக்குச் செய்யும் கூட்டில் அல்லது குழம்பில் விடலாம். : ) சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

ஏனோ தக்காளி ரசம், மிளகு ரசம், எலுமிச்சை ரசம் என்றெல்லாம் சொல்வதுபோல் மோர் ரசம் என்று சொல்ல வரவில்லை. அதனால் மோர்ச் சாத்தமுது என்றே இருக்கட்டும்.

தேவையான பொருள்கள்:

தயிர் – 1 கப் (அதிகம் புளிக்காதது)
தண்ணீர் – 1 கப்
காய்ந்த மிளகாய் – 1
மிளகு – 10
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
தாளிக்க –  எண்ணை, கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், பெருங்காயம்.
உப்பு –  தேவையான அளவு
கொத்தமல்லித் தழை.

mor saaththamuthu

செய்முறை:

 • தயிரை தண்ணீருடன் கலந்து நன்கு கடைந்து, [அட, மோர் தாங்க! :)] தேவையான உப்பு சேர்க்கவும்.
 • வாணலியில் 1/2 டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம், உளுத்தம்பருப்பை வறுத்து மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து, மோரில் கலக்கவும்.
 • எண்ணையில் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் தாளித்து, நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறலாம்.

* விரும்பினால், பரிமாறும் சமயத்தில் எண்ணையில் 1 டீஸ்பூன் வேப்பம்பூவை வறுத்துச் சேர்க்கலாம். முன்னாலேயே சேர்த்தால் கசந்துவிடும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பொரித்த அப்பளம், வடாம், கறிகள் (கூட்டு அல்ல).

என்னைப் பொருத்த வரை எதோடு சமைப்பது என்பதைவிட எந்த நாளில் சமைப்பது என்பதுதான் முக்கியம். பெண்ணுக்குப் பிடிக்கும் என்பதால் அநேகமாக விரத நாளில் செய்துகொடுப்பேன். விரத நாள் –  எனக்குப் பிடிக்காத மெனு. 🙂 சிம்ப்பிள்!

“எனக்கு சாப்பாட்டில் கட்டாயம் சாத்தமுது இருந்தாகணும்…”
— கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

 “எனக்கு சாத்தமுது மட்டும் இருந்தாலே போதும்; முழுச் சாப்பாடாய் நினைத்து திருப்தியடைவேன்.”
— நாந்தான். 🙂
 

thakkaali rasam

தேவையான பொருள்கள்:

புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
தக்காளி – 2 பெரிது
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
ரசப் பொடி – 1  1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பருப்பு வேக வைத்த தண்ணீர் – 2 கப்
கொத்தமல்லித் தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு
தாளிக்க –  எண்ணை அல்லது நெய், கடுகு, சீரகம்.

 

செய்முறை:

 • புளியை நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.
 • தக்காளிகளை நான்காக நறுக்கி, நன்கு கையால் மசித்துக் கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் கரைத்துவைத்துள்ள புளி, மசித்த தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு கொதிக்க விடவும்.
 • தக்காளித் துணுக்குகள் வெந்து, புளி பச்சை வாசனை போனபின், ரசப் பொடி சேர்க்கவும்.
 • மேலும் 2 நிமிடம் மட்டும் கொதிக்க விட்டு, பருப்புத் தண்ணீர் சேர்க்கவும்.
 • பருப்புத் தண்ணீர் குறைவாக இருந்தால் தேவைப் படும் அளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைக்கவும்.
 • இப்போது மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக மேலே நுரை சேர்ந்து ரசம் கொதிக்க மேலே பொங்கி வரும்.
 • இந்த நேரத்தில் அடுப்பை அணைத்து விடவும்.
 • அதன்மேல் சிறிது எண்ணை அல்லது நெய்யில் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் சீரகம் தாளித்து, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

* எந்த ரசத்திற்கும் நாட்டுத் தக்காளியாக இருந்தால் நலம். புளியைக் குறைத்து உபயோகிக்கலாம். கிடைக்காவிட்டால் மட்டுமே சீமைத் தக்காளி உபயோகிக்கவும்.

* தக்காளியை விரும்பிச் சாப்பிடுபவர்கள் இருந்தால் துண்டங்களாகப் போடலாம். அல்லாதவர்கள் வீட்டில் மசித்து விட்டால் ரசம் முழுவதும் தக்காளி நிரவி இருக்கும். வீணாகாது. சுவையும் இந்த முறையில் தான் நன்றாக இருக்கும்.

* ரசப் பொடி சேர்த்ததும் அதிக நேரம் கொதிக்க வைக்கக் கூடாது. இதனால் ரச மண்டி உருவாகி விடும். ஓரிரு நிமிடங்களிலேயே கொதிக்க விடாமல் பருப்புத் தண்ணீர் சேர்த்து விட்டால், அடிவரை ரசத்தைக் கலந்தே முழுவதும் உபயோகிக்கலாம்.

* பருப்புத் தண்ணீர் சேர்த்ததும், அடுப்பை மிகக் குறைந்த தீயிலேயே வைக்க வேண்டும். அவசரம் என்று சீக்கிரம் கொதிக்க வைத்தால், நுரை உருவாகாமல் சுவை கெட்டுவிடும்.

* ரசம் பொங்கி மேலே வரும்போது வழிந்துவிடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ரசத்தின் சுவையே அந்த மேல்ப்பகுதியில் தான் இருக்கிறது. 🙂

* எல்லாவகை ரசத்திற்கும் பெருங்காயம் மற்றும் கொத்தமல்லித் தழையின் வாசம் கூடுதலாக இருந்தால் நன்றாக இருக்கும்.

* பொதுவாக ரசம் ஈயப் பாத்திரத்தில் செய்தால் சுவையாக இருக்கும். ஆனால்….

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

அப்படியே சூப் மாதிரி குடிக்கலாம். சாதத்தில் கலந்து சாப்பிடுவதே வழமையான பாணி; இன்னும்….

தேவையான பொருள்கள்:

காய்ந்த மிளகாய் –  200 கிராம்
தனியா – 4 கப்
துவரம் பருப்பு – 1  1/2கப்
கடலைப் பருப்பு –  1/4 கப்
மிளகு – 1 1/2 கப்
சீரகம் – 1/2 கப்
வெந்தயம் –  1 டீஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
பெருங்காயம் –  50 கிராம் கட்டி
விரளி மஞ்சள் – 10

rasam podi

செய்முறை:

 • விரளி மஞ்சளை சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் காயவைத்துக் கொள்ளவும். வெயில் இல்லாத காலங்களில்/இடங்களில் லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளலாம். ஈரப்பதம் இருந்தால் மிக்ஸியில் அரைக்க வராது; பொடி சீக்கிரம் கெட்டுவிடும்.
 • தனியா, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு இவற்றை தனித் தனியாக எண்ணை விடாமல் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
 • கட்டிப் பெருங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் எண்ணையில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
 • கடைசியில் மிளகாயை சிட்டிகை உப்பு(வறுக்கும்போது கமறாமல் இருக்க) சேர்த்து வறுக்கவும்.
 • எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்து, காற்றுப் புகாத பாட்டிலில்/டப்பாவில் எடுத்துவைக்கவும்.

அடுத்த பக்கம் »