சொந்தக் கதை


முன்குறிப்பு
தாமதமான பதிவு
சொந்தக் கதை
கொஞ்சம் அதிகமாய் (எனக்கே) போரடிக்கும்

2011 ஜூலை மாதக் கடும் மழைநாளில் (மும்பையாக்கும்) எலக்ட்ரிக் ட்ரெயினில் ‘குர்லா’வில் இறங்கி ‘க்ளக் ப்ளக்’ சாலையில் கல்லூரி என்று குறிப்பிடப்பட்ட அந்தக் கட்டடத்திற்கு இரண்டாவது முறையாகப் போனேன். இது எத்தகைய மெனக்கெடல் என்று மும்பைவாசிகளுக்குத்தான் புரியும். சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ எகனாமிக்ஸ் சேர விபரங்கள் கேட்டபோது TC இல்லாத காரணத்தால் ஏற்கனவே இந்த ஸ்டடிசெண்டரில் மறுத்திருந்தார்கள். “இதுக்குமேல இந்தப் பொண்ணு படிக்கமாட்டா” என்று எப்பொழுதோ சொன்ன ஜோசியக்காரனின் வாக்கை வியந்துகொண்டு திரும்பிவிட்டேன். சிறிதுநாளில் ஐஐடியில் படித்தவர்களுக்கு டிசி கிடையாது என்றாலும் சேர்ந்திருந்ததைப் படித்துவிட்டு   மீண்டும் கிளம்பினேன். எதற்கும் இந்த முறை தீர்மானமாகப் பேசவேண்டும் என்று ரயிலில் செல்லும்போதே 3, 4 தடவை இந்தியிலும் சொல்லிப் பார்த்துவைத்திருந்தேன். ஆனால் அங்கே இருந்தவர், “அதெல்லாம் நேரடியாகச் சேர்பவர்களுக்குச் சரியாக வரும்; இங்கிருந்து நாங்கள் தபாலில் அனுப்பினால் டிசி இல்லையென்றால் எதையுமே பார்க்காமல் அட்மிஷன் இல்லை என்று திருப்பி அனுப்பிவிடுவார்கள். அதுவும் 6 மாதம் கழித்துதான் திரும்பவரும். செலவான பணத்துக்கு நிர்வாகம் பொறுப்பல்ல” என்று நல்ல தமிழிலேயே தெளிவாகச் சொல்லித் திருப்பியனுப்பினார். மீண்டும் ஜோசியனின் வாக்கை வியந்துகொண்டு..

ஆனால் அப்படியே விட குடும்பம் விடவில்லை. மறுநாளே தட்கலில் டிக்கெட் புக்செய்து, கையில் திணித்து சென்னைக்கு அனுப்பிவைத்தார்கள். ஸ்ரீரங்கத்திலிருந்து சென்னை வந்திருந்த அப்பா “எதையாவது கிளப்பிவிட்டுண்டேயிரு!” என்று சிரித்துக்கொண்டே ஸ்டேஷனிலிருந்து அழைத்துப் போனார். என்னுடைய கல்லூரிப் படிப்பு முடித்தவுடன் டிசியை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏதோ கம்ப்யூட்டர் ப்ரொகிராமிங் கோர்ஸுக்காகக் கொடுத்து சேர்ந்து, சிதம்பரத்தில் தம்பியோடு ஒருவாரம் தங்கி அலப்பறை செய்து எழுதிய தேர்வுக்கு ரிசல்ட் வந்து, “நீதான் முதல் மார்க்காம்” என்று அப்பா ஃபோன் செய்தபோது நான் கல்யாணம் ஆகி மாமியார்வீட்டில் இருந்தேன். மார்க் ஷீட் மட்டும் அப்பாவிடம் இருக்கிறது. டிசி என்ற ஒன்றை அவர்கள் தரவில்லை போலிருக்கிறது. யாரும் இத்தனை வருடங்களில் அதை யோசிக்கவுமில்லை.

Pic From Surya Teja Vadapalli FB

குளித்துக் கிளம்பினோம். சென்னைப் பல்கலை அலுவலத்தில் ‘ஒற்றைச் சாளர முறை’ இடத்தில் இருந்தவர் தீர்மானமாக “டிசி இல்லாமல் சேரமுடியாது, (எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் படித்த) அண்ணாமலை பல்கலையில் “தொலைந்துவிட்டது” என்று எழுதிக்கொடுத்து டூப்ளிகேட் டிசி வாங்கிவந்தால்தான் உண்டு” என்று அடித்துப் பேசினார். அவரைவிட அதிகமாக– (பிகேஎஸ் மாதிரி ஃபேன் தலையில்தான் விழவில்லை)– சேர்த்தே ஆகவேண்டும் என்று நானும் அடித்துப் பேசினேன். எதற்கும் ஐஐடி-காரர் பதிவை கையில் பிரிண்ட் எடுத்துப் போயிருந்தேன். ஒன்று நமக்கு அட்மிஷன், இல்லை அவர்களுக்கு கேன்சலேஷன் என்று முடிவோடு அடுத்தடுத்து பெரிய தலைகளைப் பார்க்கத் தயாரானேன். அதற்குள், வந்த முதல் கிராக்கியே வாய்ச்சண்டை என்ற சலிப்பு அவர் முகத்தில் தெரிந்தாலும் திடீரென்று குரலைத் தாழ்த்தி, சரி, பூர்த்திசெய்து தாருங்கள் என்று சொன்னார். நம்பவே முடியாமல் MA என்று  டிக் செய்து, subject இடத்தில் வைணவம் என்று (ஏன் இப்படி எழுதினேன் என்று இன்றும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.) எழுதினேன். அப்பா கூர்ந்து பார்த்துவிட்டு ஒருநொடி ஆச்சரியப்பட்டு அமைதியானார். மற்றவர்களை ஓடியாடி கவனித்துக்கொண்டிருந்த ஒ.சா.மு. அலுவலர் (உண்மையிலேயே அபார சுறுசுறுப்பு) வைணவம் என்பதைப் பார்த்து, எங்கிருந்து வரீங்க என்று கேட்டு பதிலை எதிர்பாராமல் உடனடியாக எங்களுக்கு உட்கார இடம்கொடுத்து, மற்றவர்களைக் கவனிக்கவேண்டிய தனது பலப்பல அலுவல்களுக்கிடையேயும் வதவதவென்றிருந்த அப்ளிகேஷனை 5 நிமிடத்தில் நிரப்ப உதவி (அவர் ஒவ்வொருமுறை அருகில் வந்து ஏதாவது சொல்லும்போதும் ‘அம்மா மின்னலு’ என்று அப்பா காதில் ஓட்டிக்கொண்டேயிருந்தார்.), வந்திருந்த மற்றவர்களிடமெல்லாம் இவங்க எம்.ஏ வைணவம் படிக்கப் போறாங்க என்று சொல்லி பார்வைப் பொருளாக்கி (டென்ஷனாகிவிட்டேன்), வங்கியில் வரிசையில் நிற்கவேண்டியிராமல் அவரே பக்கவாட்டில் கொடுத்து வாங்கி, அடுத்தப் பத்து நிமிடங்களில் புத்தகங்களும் ஐடியும் கைக்குக் கிடைத்தன. புத்தகங்களை நான் வாங்குவதற்குள் அப்பா கவுண்டருக்குள் கைவிட்டு வாங்கிவிட்டார். “கரஸ்னா எல்லாரும் பாஸ் பண்ணினா போதும்னு நினைப்பாங்க. அப்படியில்லாம நல்லாப் படிச்சு நெறைய மார்க் வாங்கு” என்று சொல்லிக் கொடுத்தார். இதில் முக்கியமானது SSLC புத்தகத்தில் அப்பா பெயர்தான் இனிஷியல் என்பதால், இப்பொழுதும் அதையே உபயோகிக்கவேண்டும் என்று ஒ.சா.மு அலுவலர் சொன்னதில் அப்பாவிடம் ஒரு மலர்ந்த மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது. அதுமட்டுமின்றி இத்தனை வருடப் பழக்கத்தில் மாற்றி எழுதுவிடுவேன் என்பதால் ஒவ்வொரு தேர்விற்கு உள்ளே நுழையும் கடைசிநொடியிலும் அதை நினைவுப்படுத்தி அனுப்பிக்கொண்டிருந்தார்.

தேர்வு மையங்கள்

ஆனால் படித்துமுடித்தும் (அந்தக் கதை பின்னால்) நினைத்த மாதிரி முதலாண்டுத் தேர்வு எழுதுவது சாத்தியமாகவில்லை. 2012 ஜூன்- 9,10,16,17,22 என 5 தாள்கள். முந்தைய மாதமே கோவிந்த் வடோதரா மாற்றலாகி வந்துவிட, நான் மட்டும் பெண்ணின் பத்தாம் வகுப்பு ரிசல்டுக்காக மும்பையில். எப்படியும் முதல்வருடத்தை அங்கேயே முடித்துவிடலாம் என்று ரிவர்ஸில் கடைசிப் பரிட்சையிலிருந்து படித்துக்கொண்டிருக்க, இடையில் தடைபட்டு ரிசல்ட் வந்து, வடோதரா போய் ஸ்கூல் அட்மிஷன், வீடு பார்த்துத் திரும்பும்போது, ஜூன் 18-ஆம் தேதியே பள்ளி திறக்கிறார்கள் என்பதால் மும்பையைவிட்டு அவசரமாகக் கிளம்பவேண்டியதாயிற்று. இந்தமுறை தேர்வு எழுதவேண்டாம் என்று முடிவுசெய்யப்பட்டது. ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு தேர்வு என்ற ஒன்றை உட்கார்ந்து எழுதப் போகிறேன் என்பதில் இருந்த த்ரில் இப்படி பொசுக்’ என அணைந்ததில் கடுப்பாகி, ஊரில் இருக்கும்வரை முதலிரண்டு தாள்களையாவது எப்படியாவது சத்தமில்லாமல் தள்ளிவிடலாம் என்று முடிவுசெய்தேன். ஏற்கனவே முதலில் கடைசிப் பரிட்சையிலிருந்து படிக்க ஆரம்பித்திருந்தேன். அவை இப்பொழுதைக்குப் பிரயோசனமில்லாமல் போய்விட, உடனடியாக ஏறக்கட்டிவிட்டு வீடு மாற்றும் வேலைகளைக்கூட பார்க்காமல், பெண்ணை தாஜா செய்து சமையல் செய்யவைத்து, 4 நாள்களில் முதல் இரண்டாவது தாள்களில் கவனம் வைத்துப் படித்து, கஷ்டப்பட்டு செண்டரைத் தேடிப்போய்… கோவிந்த் இருந்திருந்தால் முதல் நாளே செண்டரை நேரில்போய் பார்த்துவைத்துக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி அழைத்துப்போகப்பட்டிருப்பேனே என்ற நினைத்த மனதை மிரட்டி அடக்கி– குர்லாவில் இறங்கினால் ஆட்டோக்காரர்கள் உள்பட யாருக்கும் தெரியவில்லை. கொட்டுகிற மழையில் விசாரித்துக்கொண்டே– ஒரு ஆட்டோக்காரரிடம் ஏற்கனவே கேட்டதுதெரியாமல் இரண்டாம் தடவையும் கேட்டுவிட, அடிக்கவே வந்துவிட்டார்- பதறிக்கொண்டே நேர்க்கோடாய்ப் போய் பஸ்ஸ்டாண்ட் க்ரில்லில் உட்கார்ந்திருந்த ஒரு காதலர் ஜோடியைப் பிடித்தேன். இவர்கள் தான் இன்றைய தேதியில் ஊருக்கு உதவுபவர்களாய் இருக்கிறார்கள். நினைத்தமாதிரியே கைகாட்டினார்கள். அட, அட்மிஷனுக்கு விசாரிக்க வந்த கல்லூரியேதான், இப்பொழுது பெயர் மாற்றியிருக்கிறார்கள். உள்ளேபோய் ஹால்டிக்கெட் வாங்கி எண் பார்த்து, இடம் தேடிப்பிடித்து உட்கார்ந்தபோது பெருமையாய் இருந்தது. மூன்றுமணிநேரம் ஓரிடத்தில் அமர்ந்து உலகை மறந்து தேர்வை எழுதிவிட்டு மீண்டும் ட்ரெயின்பிடித்து வீடு திரும்பி பெண் தந்த காபியை அனுபவித்துக் குடித்து முடிப்பதற்குள்… இடையில் ஹைதையில் ட்ரெய்னிங் முடிந்து எதிர்பாராமல் மும்பை வந்த கோவிந்த். 😦 “வீரம் என்பது தைரியம் இல்லை, பயப்படாத மாதிரி நடிப்பது” என்று ஒருமுறை மனதுக்குள் அழுத்தமாகச் சொல்லிக்கொண்டேன்.

“ப்ரொகிராம் போட்டமாதிரி காஸ், ஃபோன், இண்டர்நெட் ஒன்னுமே சரண்டர் பண்ணலையா?”

“உட்கார்ந்த இடத்துலேருந்து நல்லாப் பேசுங்க. எல்லாத்தையும் உங்க பேருல வெச்சுண்டா நான் எப்படி சரண்டர் பண்ணமுடியும்? நீங்க எழுதிக்கொடுத்தாதான் முடியும்னு சொல்லிட்டாங்க..”

“சாமான் எல்லாம் ஒழிக்கலை. எல்லாம் லாஃப்ட்லயே இருக்கு. வீட்டுல எதுவுமே மாறலை.. ரெண்டுநாள்ல லாரி வந்துடும் சாமான் ஏத்த. என்ன பண்ணிண்டிருந்தீங்க ரெண்டுபேரும் ஒருவாரமா?”

“அதுக்காக எல்லாத்தையும் இறக்கி வெச்சா, காலை எங்க வைக்கறது. எல்லாம் ஒழிச்சுதான் திரும்ப மேல வெச்சிருக்கு. அப்படியே வண்டில ஏத்தவேண்டியதுதான்” பொண்ணு கமுக்கமாய் இருந்தாலும் எப்பொழுதுவேண்டுமானாலும் சிரித்துக் காட்டிக்கொடுத்துவிடுவேன் மாதிரி மூஞ்சியை வைத்திருந்தது. வேலை சொல்லி உள்ளே அனுப்பினேன்.

“பாங்க் லாக்கர் நகையை எங்க வெச்சிருக்க?”

Oops! சுத்தமாக மறந்திருந்தேன். To do list-லேயே இது இல்லை. இதன் ஆபரேஷன் முழுப்பொறுப்பும் என்னிடமே என்பதால் எதிராளியைச் சாடமுடியாது. காலில் விழவேண்டியதுதான்…

“விளையாடறீங்களா… அப்பப்ப போய் கொஞ்சம் நகை வெச்சு எடுக்கறதுமாதிரியா? எல்லாத்தையும் எடுத்துண்டு நான் தனியா எப்படி வரமுடியும்? பயமா இருந்தது. எப்படியும் உங்க ஸ்டாஃபெல்லாம் பார்க்க நீ பாங்க் போகும்போது, நானும் வந்து இதை முடிக்கலாம்னுதான்….” பாம்பை அடித்துவிட்டு அதன்மீது நின்றுகொண்டு பாத்ரூமில் கரப்புக்கு பயம் என்று பெண் சொன்னாலும் நம்பும் ஆண்சமூகம்– இதையும் நம்பியது.

1450751_545121375565500_13968540_n
இரண்டாவது தாளுக்கு ஒருமுறைகூட பாடங்களைத் திருப்பிப் பார்க்காமல் மறுநாள் பெண்ணின் ட்யூஷன் செண்டரில் பரிசளிப்பு விழாவுக்கு அப்பாவும் பெண்ணும் கிளம்பியபின் மதியம் சமையலையும் முடித்துவைத்துவிட்டு இரண்டாவது தேர்வுக்கு ஓடினேன். முந்தைய நாள் போல் 12 மணிக்கே கிளம்பி, ரயிலில் புரட்டலாம் என்று நினைத்திருந்தைச் செய்ய முடியாமல் ஒரு மணிநேரத்திற்குமேல் (ஞாயிறென்பதால்) வண்டியே வராமல் பதறித் தவித்து– அந்த டென்ஷனிலும் ஸ்டேஷன் புழுக்கத்திலும் கடும் தலைவலி எட்டிப்பார்க்க… மும்பையில் ரயிலைவிட வேகமாக எந்த வழியிலும் ஓர் இடத்திற்குச் செல்ல வாய்ப்பேயில்லை. இனி போய்ப் பிரயோசனமில்லை, வீட்டுக்குத் திரும்பலாம் என்று நினைக்கும்போது ஒரு வண்டி வந்தது. பிதுங்கும் கூட்டத்தில் ஏறி ஒரு வழியாக குர்லாவில் கீழே தள்ளப்பட்டு, மழைபெய்த ரோட்டில் வீடு தீப்பிடித்ததுபோல் தலை(வலி)தெறிக்க ஓடினேன். போய் அமர்ந்தபோது இதயம் வாய்வழியாக வெளியே வந்துவிடுமோ என்பதுபோல் இறைத்தது. படித்த எதுவுமே நினைவில்லை. இன்னொருமுறை எழுதிக்கொள்ளலாம் என்று நினைத்தே கேள்வித்தாளை வாங்கினேன். நான் சமாளித்துவிடலாம் என்று நினைத்திருந்த பரிபாடல் எல்லாம் காலைவாரிவிட, புருஷசூக்தமும் ஈஸாவாச்யோபநிஷத்தும் கஞ்சத்தனம் இல்லாமல் கைவழியே கரைந்துகொண்டிருந்தன. கடைசி 35 நிமிடங்கள் ஈஸா-விற்கு என்று நேரம் குறித்துகொண்டு எழுத ஆரம்பித்தும், எழுத எழுத சூழ்நிலை மறந்து உபநிஷத்தில் கரைந்து இறுதிப் பாடல்களில் உடல் நடுங்க ஆரம்பித்தது. நல்லவேளையாக ஜாவா குமார், அரவிந்தன் நீலகண்டன், பழைய சண்டை எல்லாம் நினைவு வந்து மீண்டும் தேர்வு அறைக்கு மனம் திரும்பிவிட்டது. 😉  நடுவில் தலைவலி எப்போது எப்படி சரியானது என்றே தெரியவில்லை. வீடுவந்து ராவோடு ராவாக வீட்டுவேலைகளையும், ஒரே பகலில் வெளிவேலைகளையும் அசுரசாதனையாக முடித்து மறுநாள் லாரியில் சாமானை ஏற்றியாகிவிட்டது. #சலாம்மும்பை

இடைத் தேர்வு ஜனவரி 2013-இல். பல்கலை அலுவலகத்துக்கு தொடர்ந்து ஃபோன் செய்து அவர்கள் வெளியிடும் முன்பே தேதிகளைக் கேட்டு வாங்கினேன். விடுபட்ட 3 தாள்களை– குஜராத்தில் தேர்வுமையம் எந்த ஊர் என்று தீர்மானமாகத் தெரியாததால், தமிழ்நாட்டில் (ஸ்ரீரங்கத்தில் படித்து உருப்படமுடியாது) சேலம் என்று முடிவுசெய்து வாங்கிய டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட் 7. RAC கிடைத்துவிடும் என்று முழுமையாக நம்பினேன் ரயிலில் உட்கார்ந்து படித்துக்கொண்டே போய்விடலாம் என்று மாலை 6 மணி வண்டிக்கு சாப்பாடு தயாரித்துக்கொண்டு கிளம்ப இருக்கையில் மதியம் 1 மணிக்கு தயாரிக்கப்பட்ட சார்ட்டில் WL-1லியே என் நிலை நின்றுவிட்டது. முன்னேற்பாடாக கோவிந்த் ஏற்பாடு செய்திருந்தபடி மறுநாள் அஹமதாபாத் சென்று விமானத்தில் சென்னை- விமானத்திலிருந்து குதித்தோடி முக்கால் மணிநேரத்தில் இரவு 10:25-க்கு தாம்பரத்தில் சேலம் வண்டியைப் பிடிக்கவேண்டிய நெருக்கடியில் சென்னையில் உதவிக்கு அந்நேரத்துக்கு யாரை அழைப்பது என்ற குழப்பி முடிப்பதற்குள்… அப்பா ஶ்ரீரங்கத்திலிருந்து வருகிறேன் என்று சொல்லிவிட்டார். ஆட்டோ பறந்தது என்கிற க்ளிஷே வாக்கியத்திற்கு அன்றுதான் பொருள் தெரிந்தது. அப்பா தேர்வுகளுக்கு முன்னரே தேர்வுமையக் கல்லூரிக்குப் போய் தேர்வெழுதுமிடம், கழிவறை வசதி வரை செக் செய்துவிட்டு வந்தார். எங்கே யார் உட்கார வேண்டுமென்பதையே அரை மணி நேரம் முன்னர் தான் நோட்டீஸில் ஒட்டி, கால் மணி நேரம் முன்னதாகவே கேள்வித்தாள், விபரங்கள் நிரப்ப பதில் தாள் எல்லாவற்றையும் கொடுத்து மிகச் சிறப்பாக நடத்தினார்கள். ஒவ்வொரு நாளும் உட்காரும் இடத்தை மாற்றும் ஸ்ட்ரிக்ட் ஆப்பீசர்களாய் இருந்தார்கள். மும்பையில் வயதானவர்கள் உள்பட எல்லோரும் சூபர்வைஸரிடம் வந்து கேள்வித்தாளை வாங்க, எனக்கு மட்டும் தானே அருகில்வந்து கொடுத்தார்கள். “ஐயோ படிக்கறதுதான் வைணவம்; ஆனா நான் பெரிய பொறுக்கி!” என்று மனசு அலறியது. உண்மையிலேயே கூச்சமாக இருந்தது. நல்லவேளையாக பெரியார் பிறந்த மண்ணான தமிழ்நாட்டில் அந்தப் பிரச்சினை எல்லாம் இல்லை. ஆனால் அதைவிட அதிகமாக என் அருகில் அமர்ந்த ஒருவரை ஹால்டிக்கெட் முதற்கொண்டு தாங்களே கொண்டுவந்து கொடுத்து ஒவ்வொருவராய் வந்து உபசரித்துக் கொண்டிருந்தார்கள். இருக்கிற பரிட்சை டென்ஷனிலும் சூர்யாவிற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத அவரைப் பார்க்கும்போதெல்லாம் ஏன் சூர்யா நினைவு வருகிறது என்று மண்டைக்குடைச்சலாய் இருந்தது. திருமங்கையாழ்வாரை எழுதிக்கொண்டிருக்கையில் ரொம்பநேரம் குடையவிடாமல் நல்லவேளையாய் ஒரு காவல்துறையாளர் வந்து சல்யூட் அடித்ததில் புரிந்துவிட்டது. ஹாஹ் அந்த போலீஸ் ஹேர்கட்! மதியம் சரியாக 2 மணிக்கு எழுத ஆரம்பிக்கும்போது கரண்ட் போய்விடும் என்றாலும் வியர்க்காத அளவுக்கு அந்தக் காலக் கட்டடம் மிக வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருந்தது. என்றாலும் இந்தக் கல்லூரியின் கழிவறை வசதி குறித்து அவசியம் பின்னர் எழுதவேண்டும். குடும்ப நினைவே இல்லாமல் சௌகரியமாய் அம்மா சமைத்துபோட அண்ணன், அப்பா என்று அருமையான 15 நாள்களும் 3 தேர்வுகளும்…. ஆனால் அப்படியே நிம்மதியாக இருந்துவிடமுடியவில்லை. முதல் தடவை அட்மிஷனுக்காகச் சென்னை சென்றிருந்தபோது, எல்லா விதங்களிலும் பெண்ணை பார்த்துக்கொள்ள முடிந்த கோவிந்திற்கு அப்பாற்பட்டதாயிருந்தது பெண்ணின் நீளமான தலைமுடி. மும்பையின் காலை 6 மணி அவசரத்தில் எதிர்வீட்டு ‘ஆண்ட்டி’யிடம் போய்த்தான் பின்னிக்கொள்ள வேண்டியிருந்தது. இந்த முறை முடிக்குறைப்பு செய்துவிட்டதால் அந்தப் பிரச்சினையும் இல்லை என்று இருந்த நிம்மதியில் பெரிய கல்லாய், ட்ரெயினிங் என்று கோவிந்த் மும்பை கிளம்பவேண்டியிருக்க, இரண்டு நாள்களுக்குப் பெண்ணை அவசரமாக நண்பர் வீட்டில் விடவேண்டியிருந்தது. எங்கள் வாழ்நாளில் நாங்கள் இப்படிச் செய்வோம் என நினைத்ததில்லை. :((

அதனால் ஜூன் 2013-இல் நடக்கவிருந்த இரண்டாம் வருடத் தேர்வுகளை தேர்வுமையம் எந்த ஊரில் இருந்தாலும் குஜாராத்திலேயே எழுதுவது என்று தீர்மானித்தேன். இந்த ஒருவருடப் பழக்கத்தில் சென்னை பல்கலைக்கழகம் எந்த மாதம் எந்தக் கிழமைகளில் ஆரம்பித்து முடிப்பார்கள் என்று முன்னதாகவே ஊகிக்க முடிந்ததால் எங்கு நடந்தாலும் இருந்து தங்கி எழுத உதவியாக அப்பா முன்கூட்டியே வந்துவிட்டார். தேர்வுநாள் காலை வரை காபி, டிபன், வேலைக்காரிக்குப் பாத்திரம் ஒழித்துபோடுவது என்று வேலைகளைக் கட்டியழாமல் முன்னதாக ஒரு நாள் இரவாவது பாடங்களைத் திருப்பிப் பார்க்க நேரம் வேண்டும் என்று முடிவுசெய்து ஒவ்வொரு வாரமும் முதல்நாளே பர்தோலி (Bardoli) சென்று அறையெடுத்துத் தங்கி அடுத்தடுத்த இரண்டு வார சனி, ஞாயிறு தேர்வுகளையும், கடைசியில் இருந்த ஒரேயொரு தேர்வை மட்டும் அன்று அதிகாலையில் கிளம்பிப் போயும் எழுதினேன். கடைசிநாள் சனிக்கிழமை காலை 6 மணிக்குக் கிளம்பி 7:30 மணிக்குள் 160 கிலோமீட்டரைக்  கடந்து டிரைவர் சாதனை படைத்தார். இந்தப் பள்ளிக்கும் முதல்வாரமே குடும்பத்தோடு பார்த்துவரச் சென்றிருந்தோம். அந்த ஊர் பாங்க் மேனேஜர் தவறுதலாக எங்களை முற்றிலும் பிரம்மாண்டமான ஒரு இஸ்லாமிய மதராஸாவுக்குக் கூட்டிப்போய்விட்டார். பழக்கமில்லாத அந்தச் சூழ்நிலையே அச்சமூட்டுவதாக இருந்தது. ஸ்கூல் பெயர்ப் பொருத்தம் சரியில்லை, இதுவாயிருக்காது என்று மல்லுக்கட்டி, ஒருவாறு வெளியே விசாரித்து, சற்றுத் தள்ளி அதே பகுதியில் இருந்த MA Memon என்கிற சிறிய இஸ்லாமியப் பள்ளிக்கூடத்தைச் சரியாகப் பிடித்து விசாரித்தோம். நிர்வகிப்பவர் எங்களை வரவேற்றுப் பேசினாலும் அஹமதாபாத்தில் இல்லாமல் இங்கே இருப்பதற்கு எங்கள் அதிருப்தியைச் சொன்னபோது அவர் சற்றே வெகுண்டார்.  மிக விரும்பி சென்னைப் பல்கலையிடமிருந்து இந்த வாய்ப்பைப் பெற்றுச் செய்துவருவதாகக் கூறினார். அன்றுதான் மதியம் ஹால்டிக்கெட் இணையத்தில் வெளியிட்டிருக்க அன்றே மாலையே நான் அதை எடுத்துவந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியபட்டார். எப்பொழுதுமே இணையத்தில்தான் குடித்தனம் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார். கையில் வாங்கிப் பார்த்தவர், என் பிரிவு வைணவம் என்பதில் முகம் சுருங்கினார். இன்னொருவரிடம் தீவிரமாக குஜராத்தியில் உரையாடினார். “ஐயோ நான் காஃபிராகிவிட்டேனா” என்று ஏற்கனவே மதராஸாவுக்குள் நுழைந்து வந்த அதிர்ச்சியில் மனதுக்குள் அலறிக்கொண்டிருந்தேன். ஆனால் நடந்தது என்னவென்றால், ஒவ்வொரு நாளும் என்னை முதல் பென்ச்சில் உட்காரவைத்து, முதலில் எனக்குக் கேள்வி, விடை மற்றும் நிரப்பவேண்டிய மற்ற தாள்களைக் கையில் தந்து, பாதி எழுதிக்கொண்டிருக்கும்போதே தாள் சுலபமாக இருக்கிறதா என்று அக்கறையாக விசாரித்து, கூட வந்திருந்த என் அப்பாவை (இவர் அன்றாடம் காலையில் இட்டுக்கொண்ட ஸ்ரீசூர்ணம் கூட கலைக்காமல் வருவார்) வரவேற்று மூன்று மணிநேரமும் லைப்ரரியில் அமரவைத்து, கடைசிநாள் வரை உபசாரம் செய்தார்கள். பொதுவாக எல்லோருக்குமே நல்ல வரவேற்பும் தேர்வு நடத்துவதில் சிறந்த கண்காணிப்பும் இருந்தது. முன்பு தில்லியில் தேர்வுகள் எழுதியிருந்த ஒருவர் மொபைல் ஃபோன்களைக் கூட இங்கே அனுமதிக்காததைத் திட்டிக்கொண்டேயிருந்தார். மற்ற செண்டர்களில் எழுதும்போது குறிப்புகளை மொபைலில் எழுதிக்கொண்டுவந்துதான் தேர்வு எழுதுவார்களாம். மிக அதிகமான எண்ணிக்கையில் எம்பிஏ மாணவர்களே இருந்தனர். அதற்கு அடுத்ததாக சைக்காலஜி. தவிர மற்ற பிரிவினர். அத்தனை பேரிலும் நான் தாமதமாக உள்ளே நுழைந்தாலும் மற்றவர்களுக்குக் கொடுப்பதை நிறுத்திவிட்டு, என்னுடய தாள்களை முதலில் தேடிப்பிடித்து எடுத்துக் கொடுத்தார்கள்.  உபசரிப்பில் சந்தேகப்பட்ட சிலர் தனியாக என்னிடம் நான் யார் என்றும் விசாரித்தார்கள். பொறம்போக்கு என்பதற்கு ஹிந்தியில் வார்த்தை தெரியாததால், ஜெயஶ்ரீ என்றுமட்டும் சொல்லிவைத்தேன். ஏன் முதல் அறிமுகத்தில் முகம் சுருங்கினார் என்று கடைசிநாளில் தெரிந்தது. தமிழ்நாட்டில் இருக்கும் தேர்வுமையங்களுக்கு கேள்வித்தாள்கள் தபாலில் வந்து தேர்வுநேரத்தில் சீல் உடைத்துத் தருவதுபோல் இல்லாமல் இங்கே தேர்வுக்கு அரை மணி நேரம் முன்பாக பல்கலையிலிருந்து ஈமெயிலில் கேள்வித்தாள்களை அனுப்புகிறார்கள். இவர்கள் அவற்றை தேவையான எண்ணிக்கையில் ப்ரிண்ட் எடுத்து சரியாக தேர்வு நேரத்தில் விநியோகிக்கிறார்கள். என் கேள்வித்தாள் மட்டும் அவர்கள் அறியாத தமிழில் இருப்பதால் சரியாகப் போகவேண்டுமே என்று யோசித்ததாகச் சொன்னார்கள்.

இப்படியாக சுண்டைக்காய் கால்பணம்… கதையென குடும்ப இஸ்திரியான என் தேர்வு எழுது படலங்கள் நிறைவடைந்தன. ஆனால் இந்தத் தேர்வுகளுக்குப் படித்துத் தயார் செய்வதற்குள்…

(அதெல்லாம் அப்புறம்தான்…)

==

MA Vaishnavism 2013 Degree Certificate1

டிஸ்டிங்ஷன் மார்க் வாங்கியும் முதலாண்டுத் தேர்வை மாற்றல் காரணமாக மும்பையில் மே மாதம் எழுத முடியாமல்  வடோதரா போய் அக்டோபர் மாதம் எழுதியதால் “முதல் வகுப்பு” என்று மட்டுமே போட்டிருக்கிறார்களாம். விசாரித்தால், தேர்வு மனுவிலேயே அடியில் குட்டியாக இதுபற்றிக் குறிப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஹூம், நாம் எப்போது அதையெல்லாம் படித்திருக்கிறோம், படித்திருந்தால் மட்டும் என்ன மாறியிருக்கப் போகிறது? 😦

ஆதௌகீர்த்தனாரம்பத்திலிருந்தே வைகுண்ட ஏகாதசி என்பது உள்ளூர்க்காரர்களுக்கு– முக்கியமாக வீட்டுப் பெண்களுக்கு உண்டானதல்ல என்றே இருந்துவந்திருக்கிறது. அப்பொழுதெல்லாம் கோயில் நிர்வாகத்தில் ஏதும் பிரச்சினை இல்லை. ஆனால் ஏகாதசி 20 நாளும் வீடு– ஊர்பேர்கூட தெரியாத விருந்தினரால் ஜேஜே என்று இருக்கும். ‘பெருமாள் சேவிக்க வந்திருக்கோம்’ என்ற ஒற்றைப் பதம் போதுமாயிருந்தது பாட்டிக்கு யாரையும் வீட்டில் தங்க அனுமதிக்க. வருகிறவர்களில் ஆசாரம் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொள்ளாதவர்கள் மற்றும் ‘மாமிக்கு தோஷமில்லை’ என்பவர்களால் பிரச்சினை அதிகமில்லை. வீட்டில் காசு இல்லாவிட்டாலும் இல்லை என்று சொல்லாமல் சமைத்துப் போடும் சாமர்த்தியம் பாட்டிக்கும் அம்மாவுக்கும் இருந்தது.

ஆனால் ஆசாரக்காரர்களுக்கு (ஒருவர் தொட்டு அடுத்தவர் சாப்பிடமாட்டார்கள் என்று) நீண்ட ரேழி முழுவதும் தனித்தனியாக கும்முட்டி அடுப்பு, சருகுத் தொன்னைகளில் அவர்கள் கேட்கிற மளிகைச் சாமான்கள் எல்லாம் எடுத்துத் தருவது, அவர்கள் ‘சுத்தபத்தமாய்’ சமைத்துச் சாப்பிட்டபின் அந்த இடத்தைச் சுத்தம் செய்துவைப்பது, (உண்மையில் 6, 7 குடும்பங்களுக்கு தனித்தனியாக சாமான் வழங்கி சமைக்கவைப்பதைவிட நாமே ஒரே தடவையாக 50 பேருக்கு சமைப்பது சுலபம் என்பது இப்பொழுதைய அம்மாவின் கூற்று.), பாலுக்கு தோஷமில்லை என்று பத்துப் பதினைந்து தடவை காபி போட்டுக்கொடுத்துக்கொண்டேயிருப்பது… “கோவில்ல வேட்டுப்போட்டுட்டானே, சித்த என் புடைவையைமட்டும் பிழிஞ்சு உலர்த்திடேன்டிம்மா, உள்ளூர்க்காரிதானே, உனக்கு இந்த வருஷம் இல்லைன்னா அடுத்த வருஷம்… ரெங்கன் உனக்கு ஒரு கொறையும் வெக்கமாட்டான்” என்று அவசரமாக ஓடிக்கொண்டே அவர்கள் கூறும் ஆசியோடு கூடிய ஆணைகளைச் சிரமேற்கொண்டு கிணற்றில் நீர் இறைத்து,  9 கஜம் சின்னாளப்பட்டுகளையும், 8 முழம் வேட்டிகளையும், துண்டுகளையெல்லாம் தூக்கமுடியாமல் தூக்கித் தோய்த்து, கையால்(?!) பிழிந்து, அவர்கள் ஆசாரம் கெட்டுவிடாமல் மேலே கொடியில் குடும்பவாரியாகப் பிரித்துக் குச்சியால் உலர்த்தி… அரைப்பரிட்சை நெருங்கிக்கொண்டிருக்கும் எங்களை மொட்டை மாடிக்கு அனுப்பி, படிக்கிறதுகளா என்று அவ்வப்போது பார்த்துக்கொண்டு, வழக்கமான வீட்டு வேலைகளையும் செய்துகொண்டு.. பாட்டிக்கும் அம்மாவுக்கும் இதில் தனியாக வைகுண்ட ஏகாதசி, அரையர் சேவை என்பதெல்லாம் எதுவும் கிடையாது. அதிசயமாய் பாட்டி என்னைத் துணைக்கு(?!) கூட்டிக்கொண்டு சில அரையர் சேவைகளுக்குப் போயிருக்கலாம். அம்மாவிற்கு அதுவும் இல்லை. அதிகபட்சமாய் ஒருவர் மாற்றி ஒருவர் மட்டும் இலவசமாய் ஆர்யபடாள் வாசலில் மோகினி அலங்காரம், ஏகாதசி காலையில் மணல்வெளியில் ரத்னங்கி கம் வைகுண்டவாசல், யாராவது பட்டர் அல்லது கோயில்காரர்கள் மிஞ்சிப்போய் பாஸ் கொடுத்தால் கடைசிக்கு முதல்நாள் முத்தங்கி அல்லது கடைசி நாள் நீண்ட வரிசையில் இலவச தரிசனம் என்பதோடு முடிந்துவிடும்.

எங்களுக்கெல்லாம் அந்த 20 நாளும் சமர்த்தாக இருந்து, “பரவாயில்லையே பத்தானி நன்னா வளர்த்திருக்கா பேத்தி பேரன்களையெல்லாம்” என்று பேர் வாங்கிக் கொடுப்பது வருடாந்திரக் கடமை. முக்கியமாய் வைகுண்ட ஏகாதசி 3 நாளில் நம்வீட்டுக்குள்ளேயே நாம் தொலைந்துபோய்விடுவோம்.

Muththangi 9th day

இப்பொழுது அப்படியெல்லாம் இல்லை. யாரும் யார் வீட்டுக்கும் தேவையில்லாமல் செல்வதில்லை, சென்றாலும் அதிக வேலைகள் கொடுப்பதில்லை. பிள்ளைகள் பரிட்சை என்றால் பேசுவதே பிழை. அதனால் ஊர் கொண்டாட்டங்களில் உள்ளூர்க்காரர்களுக்கு அவ்வளவு பிரச்சினை இல்லை. ஆனால் அதிலும் அப்பொழுதைப் போலவே இப்பொழுதும்  பலருக்கு பலவிதமான நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம். முக்கியமாய் கணக்கில்லாமல் பெருகிவிட்ட கூட்டத்தால் கோயிலுக்குச் செல்வது, அவர்கள் விதிக்கும் கட்டணங்களைச் செலுத்துவது பலருக்கு சாத்தியமில்லாமலிருக்கலாம். அதைக் கணக்கில் கொள்ளாமல் நிர்வாகம் மேலும் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதாகக் கேள்விப்படுகிறேன்.

Govindarajur Rajarethinam
1. ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்தில் கிளி மண்டபத்தில் சென்று அரங்கரை தரிசிக்கும் பாக்கியம் மட்டும் கிடைத்து வந்தது. அதற்கும் இந்த வருடம் வந்தது வினை. நாழி கேட்டான் வாசலுக்குள் நுழைவதற்கே இயலாத வண்ணம் முத்தங்கி சேவை தரிசன வரிசையினை வைத்து கிளி மண்டபம் நேரிடையாக செல்லும் பக்தர்களுக்கு தடை ஏற்படுத்தி விட்டது கோவில் நிர்வாகம். ஒவ்வொரு வருடமும் ஏகாதசி திருவிழாவில் உள்ளுரில் உள்ள சாதாரண மக்கள் கலந்து கொண்டு அரங்கரை தரிசிக்கும் நிலையினை எப்பொழுதுதான் நிர்வாகம் ஏற்படுத்தும்? சென்ற அரசில் கூட இந்த அளவிற்கு கட்டுபாடுகள் கெடுபிடிகள் இல்லை என்பது நிதர்சனம் முதல்வருக்கு தெரிந்து இத்தகைய செயல்கள் நடைபெறுகிறதா அல்லது நிர்வாகம் மற்றும் காவல் துறையின் தன்னிச்சையான செயல்பாடுகளா என்பது தெரிய வில்லை.

2. இன்று (8-1-2014) மதியம் ‘திருக்கோவில் அறிவிப்பு’ என்று தெருக்கள் தோறும் டாம் டாம் மூலம் அறிவிப்பு செய்ய பட்டதை கேட்க நேர்ந்தது. ஏகாதசி திருவிழா வின் முக்கிய விழா நாட்களான மோகினி அலங்காரம் மற்றும் ஏகாதசி ஆகிய இரு தினங்களிலும் ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா கோபுரம் தவிர மற்ற இரு திருக்கோவில் நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் அனுமதிக்கபடமாட்டர்கள் என்பதே அந்த அறிவிப்பு. மோகினி அலங்காரம் அன்று கோவில் உள்ளே தரிசனம் செய்ய இயலாத நிலையில் உள்ளவர்கள் மணல் வெளியில் நம்பெருமாள் உலா வரும்பொழுது தரிசிக்க எதுவாக வெள்ளை கோபுரம் மற்றும் தாயார் சந்நிதி கோபுரம் வழியாக சென்று இதுவரை தரிசனம் செய்து வந்த நிலையில் இந்த அறிவிப்பின் மூலம் ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா கோபுர வாயிலில் பெரும் நெருக்கடி ஏற்படும் நிலை உள்ளதை நிர்வாகம் உணர்ந்ததாக தெரிய வில்லை. மேலும் ஏகாதசி அன்று முதல் நாள் இரவில் கோவில் உள்ளே சென்று தங்கி இருந்து சொர்க்க வாயில் வழியாக வர இயலாத முதியவர்கள், குழந்தைகளுடன் உள்ளவர்கள், தாய்மார்கள் அதி காலை திருக்கொட்டகையில் சாதாரா மரியாதையின் பொழுது வெள்ளை கோபுரம் மற்றும் வடக்கு வாசல் கோபுரம் வழியாக ஆயிரக்கால் மண்டபம் வந்து இதுவரை தரிசனம் செய்து வந்த உள்ளூர் மக்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு பேரதிர்ச்சியாக உள்ளது. சொர்க்க வாசல் செல்ல விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா கோபுர வரிசையில் வரிசையில் நின்றது போக நேரடியாக ஆயிரங்கால் மண்டபம் மட்டும் சென்று நம் பெருமாளை மட்டும் தரிசனம் செய்ய விழையும் பக்தர்களும் அதே வரிசையில்தான் நின்று செல்ல வேண்டும் என்பது ஒரே பகுதியில் நெருக்கடி ஏற்படுத்தும் செயலாக உள்ளது. ஆயிரங்கால் மண்டபம் மட்டும் சென்று நம்பெருமாளை மட்டும் தரிசனம் செய்ய விழையும் பக்தர்கள் திருக்கோவில் பக்கம் வர வேண்டாம் என்பதற்கே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என கருதுகிறேன். இது தொடர்பாக திருக்கோவில் நிர்வாகத்தின் சரியான விளக்கத்தினை பெற்று பதிவிட்டால் அனைவருக்கும் நலமாக இருக்கும்.

இவை அங்கிருப்பவர் சொல்லியவை, நான் நேரில் பார்க்கவில்லை. எனினும் அங்கிருக்கும் மற்றவர்களும் சொல்வதை வைத்துச் சொல்ல நினைப்பதெல்லாம்…

மேன்மேலும் பெருகுகின்ற கூட்டத்திற்காக நிர்வாகம் சிலபல மாற்றங்களைச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமே. ஆனால் அதில் சாமான்யர்கள் பாதிக்கப்படாமல், மேலும் பலரும் பயன்பெறும்படி அந்த மாற்றங்கள் இருக்கவேண்டும். அதுவே சிறந்த நிர்வாகமாக இருக்கமுடியும்.

படம்(பகல்பத்து  9ஆம் திருநாள் முத்தங்கி) Sivakumar N Vellala

எத்தனைபேருக்கு Google Knol குறித்துத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை என்றாலும் இத்தனை நாள் கழித்தாவது அதுகுறித்துச் சொல்லவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

கூகிள் எத்தனையோ புதிது புதிதாக அறிமுகப்படுத்தினாலும், மாநில மொழிகளைத் தட்ட ஒன்றை அறிமுகப்படுத்தும்போது அது சமையல்குறிப்புப் போட்டியைத் தேர்ந்தெடுத்ததுதான் என்னையும் திரும்பிப்பார்க்கவைத்தது என்று சொன்னால் அது மிகையான பொய். அப்படி ஒரு நிகழ்வையே எனக்கு அறிமுகப்படுத்திய பெருமை பிரகாஷைச் சேரும். வழமைபோலவே ஒருமுறை திறந்துபார்த்து இதெல்லாம் போரடிக்கும்வேலை என்று ஒதுக்கிவிட்டாலும் சஞ்சவ் கபூர் என்ற பெயர் கொஞ்சம் உறுத்திக்கொண்டே இருந்ததும் உண்மை.

திடீரென்று 19-ஆம் தேதி மாலை ஞானோதயம் வந்து (மாதக் கடைசிநாளான 30-ஆம் தேதி தான் பொதுவாக போட்டிகள் முடியும் என்ற பொதுப்புத்தியில்) இன்னும் 10 நாளைக்குள் ஏதாவது தட்டி அனுப்பிவைக்கலாம் என்று திறந்துபார்த்தால் 20-ஆம் தேதியே கடைசி. :(( இன்னும் ஒரு நாளைக்குள் ஏதாவது செய்யலாம் என்று நினைக்கமுடியாதவாறு அன்று மும்பையில் பாலமுரளிகிருஷ்ணா கச்சேரி. சஞ்சீவ் கபூரை பாமுகி வென்றார்.

மறுநாள் கச்சேரி hangover முடிந்து பெட்டி திறக்கும்போது பத்துமணிநேரத்துக்குள் எதுவும் செய்யக்கூடுமாறு உடலும் மூளையும் ஒத்துழைக்கவில்லை. தடக்கென்று ஒரு யோசனை. என் புகைப்படங்கள் கோப்பை திறந்து பல நாள்களாக எழுதவேண்டும் என்று எடுத்துவைத்து, எழுதாமலே விட்டுப்போயிருந்த காமாசோமா ஐட்டங்களை எல்லாம்– google knol பக்கமே தமிழில் தட்டத்தான் என்றாலும் (நமக்கெதற்கு அதெல்லாம்?)– கலப்பையில் தட்டித் தட்டி வெட்டி ஒட்டித் தள்ளினேன். படம் எடுக்காமல் வெறுமே குறிப்பு மட்டுமே தட்டி வைத்திருந்தவைகளையும் சேர்த்துக்கொண்டேன். ஒரு போட்டி என்று தெரிந்தும் மிகச் சாதாரணமான குறிப்புகளை அனுப்பி ஜட்ஜை கேவலப்படுத்துவதற்காக ஒரு மானசீக மன்னிப்பும், “ஆமா, இதெல்லாம் அவங்க இங்லீஷ்லயோ ஹிந்திலயோ ட்ரான்ஸ்லேட் பண்ணி படிச்சா பார்க்கப் போறாங்க? வேற யாராவது இதெல்லாம் தேர்ந்தெடுப்பாங்களா இருக்கும்,” என்று மனதுக்குச் சமாதானமும் சொல்லிகொண்டேன்.

கூகிளிடமிருந்து, போட்டியில் பங்கேற்றதற்காக நான் மேற்கொண்ட சிரமங்களுக்கு (பின்ன?) பாராட்டும் நன்றியும், எனக்குப் பரிசு கிடைக்காததற்கு வருத்தமும்(ஓ!) தெரிவித்த உணர்ச்சிக்கலவையான கடிதக் காவியம் கிடைத்தது. பரிசுகிடைத்த குறிப்பை நான் செய்துபார்த்தே தீரவேண்டும் என்று ஓடோடிப் போய் பார்த்ததில் அது ‘மதுரை கோழி சூப்’. ஆஹா, தோற்றது நாமானாலும் ஜெயித்தது நமது மதுரை மண் என்று புளகித்துப் போனேன். அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே வீட்டில் மறைத்தும் மறந்தும் சந்தோஷமாக இருந்துவந்தேன். அப்படியே இருந்திருந்தால் எல்லாம் நன்றாக இருந்திருக்கும்.

ஒரு நல்லநாளில், குடும்பமே விடுமுறையை அனுபவித்து குஷியாக கும்மாளமிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளில் ஒன்றாக என் ஒரு குறிப்பும் (அது எது என்று கடைசிவரை கூகிள் சொல்லவில்லை.) இருப்பதாகச் சொல்லி ஒரு டீஷர்ட்டை பார்சல் அனுப்பிவைத்திருந்தார்கள். பரிசே கிடைக்காததைவிட கொடிது ஆறுதல் பரிசு பெறுவது என்பது என் சித்தாந்தமானாலும் அன்றுதான் அதன் பலனை நேரில் கண்டு நொந்தேன். அதுவரை சஞ்சீவ் கபூர் என்ற பெயர் ஆகாத ஒன்றாக இருந்ததுமாறி கோவிந்துக்கு அந்தப் பெயர் ஒரு புத்திசாலியினுடையதாகவும், எதையும் சரியாக எடைபோடத் தெரிந்தவருடையதாகவும் போனதில் வியப்பெதுவுமில்லை.

ஆனால் நானே அதையெல்லாம் புறக்கணித்து, என் தோல்வியை(மட்டும்) பிரகாஷுக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு, இந்த டீஷர்ட்டை எந்தப் பேண்டுக்கு மேட்ச் ஃபிக்சிங் செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்ததை, தோல்விக்கான வருத்தமான போஸ் என்று நினைத்து, வழமையாக இதுபோன்ற தருணங்களில் அப்பாவுடன் சேர்ந்து கன்னாபின்னாவென்று காலைவாரும் பெண், “நீ தோக்கலைம்மா.., உன் ரெசிப்ப்பி தோத்துப் போச்சு!…” என்று என்னைத் தேற்றி ஆற்றுப்படுத்தியதற்கும், அடுத்தநிமிடமே நான் நிமிர்ந்துபார்த்தபோது அந்த டீஷர்ட் அவளுடைய வார்ட்ரோபிற்குள் போய்விட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இன்னமும் என்னால் நம்பமுடியவில்லை.

அடுத்த பத்துநாளில் என் மெயில்பெட்டிக்கு ஒரு செய்தி. “உங்கள் குறிப்புகள் பத்தாயிரத்துக்குமேல் பார்வையிடப்பட்டு இருக்கிறது. நீங்கள் எந்த மொழியில் எழுதுகிறீர்கள்?” என்று மொழியே தெரியாதவரிடமிருந்து ஒரே ஒரு மறுமொழி. “அடக்கொடுமையே இன்னுமா இந்தச் சமுதாயம் சமையல்குறிப்பு படிச்சு சீரழிஞ்சுகிட்டிருக்கு?!” என்று பெரிய இலக்கியவாதி, முற்போக்கு மாதிரி விசனப்பட்டுத் திறந்துபார்த்தால் எல்லாப் பதிவுகளும் 200, 300 என்று வட்டமான எண்களையே ஹிட் எண்ணிக்கையாகக் காண்பித்தன. மொத்தம் 11 ஆயிரத்துச் சொச்சம் ஹிட் என்று சாத்தியமில்லாத ஒன்றைக் காட்டிக்கொண்டிருந்தது. [சமையல் குறிப்பை அடியோடு வெறுத்த (சுஜாதா)சாரிடம் ஐயங்கார் புளியோதரைக்கு 10000 ஹிட் ஆனதும் சொல்லிக் கடுப்படிக்க நினைத்தேன். நடக்கவில்லை. :(( அன்றாடம் உச்சத்திலேயே இருக்கும் ஐயங்கார் புளியோதரையின் ஹிட்டே இந்த 3 வருடங்களில் 17 ஆயிரத்துச் சொச்சத்தில்தான் இருக்கிறது என்ற முரணையும் சொல்லவேண்டியிருக்கிறது.) இதுகுறித்து பலமுறை நினைத்தும் எழுதமுடியாமல் போய்விட்டது.

அது ஆயிற்று கிட்டத்தட்ட 10 மாதங்கள். இன்று ஒருவர் ‘திரளி அடை’ குறித்துத் தேடி என் வலைப்பதிவை வந்தடைந்த மறுமொழி கேட்டு நானே நினைவுவந்து அங்கே போய்ப் பார்த்தால் மொத்த ஹிட் 72016 என்றும் தனிப்பட்ட முறையில் பதிவுகளுக்கான ஹிட் எல்லாம் 1000, 2000, 3000… என்று போகிறது. ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் மாதிரி கூகிளைத் தெரிஞ்சுகிட்டேன்.

நீதி: அலட்டிக்கொள்ளாமல் ஹிட் அதிகம் காட்ட, அணுகவேண்டிய முகவரி, Google Knol.

பி.கு: ஊருக்குப் போய்விட்டு வந்தபின் என் அந்தச் சமையல் குறிப்புகளை இங்கே போடுவேன்.

Jeyamohan

[வீடு மறுசீரமைப்புப் பணிகள் துரிதமாக நடப்பதால் கணினியில், இணையத்தில் இயங்கமுடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். இந்தப் பதிவு பின்னர் மீளேற்றப்படலாம். :)]

நாமளே ஏதோ அள்ளித் தெளிச்ச கோலம். காலை அவசரம் என்றால் என்னவென்று மும்பைக்காரர்களுக்குத்தான் தெரியும். ஆறரை மணிக்கு இரண்டுபேரையும் வெளியில் தள்ளுவது சாதாரண விஷயமில்லை. வீட்டுக்குள்ளேயே எதிரில் ஒருவரை ஒருவர் பார்த்தால்கூட பேசிக்கொள்ள மாட்டோம். ஃபோன் வந்தால் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொள்வோம். வலைப்பதிவுக்காக எந்த தொழில்நுட்பக் குறிப்பும் தெரியாமல், கோணம், வெளிச்சம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கோணல்மாணலாக ஒரு க்ளிக் எடுக்கவே அடித்துப் பிடித்து மூன்று முழு நிமிடங்கள் செலவழித்து (கேமிராவை வெளியே எடுக்க, புகைப்படம் எடுக்க, திரும்ப அதனிடதில் வைக்க) பேருக்கு படம் என்று ஒன்று (bsubra மாதிரி நேயர்களுக்காக) எடுத்துப் போட்டுவருகிறேன். உண்மையில் அந்த மூன்று நிமிடம் கூட பல நேரங்களில் கிடைக்காமல்தான் பல படங்களும், அதனால் பல பதிவுகளும் ஏற்றமுடியாமல் நின்றுபோகிறது. எல்லாப் படங்களுக்கும் பின்னால் உற்றுக்கேட்டால்,

“இன்னிக்கு 6:40 டிரெயின் மிஸ் பண்ணப்போறேன்”
“என் வாட்டர் பாட்டில் இன்னும் வைக்கலை”
“எல்லார் வீட்டுலயும் சாமிக்கு நைவேத்தியம் பண்ணுவாங்க; நம்ப வீட்டுல கேமராவுக்கு”
“அவனவன் படம் பாக்கறதோட தப்பிச்சுடறாங்க. நமக்குத் தான் கொடுமை”

மாதிரி முணுமுணுப்பு, சிணுங்கல், சண்டை என்று வகைவகையாகக் கேட்கலாம். சரி, நம்ப பிரச்சினை நமக்கு.

-0-

சென்ற முறை ஸ்ரீரங்கம் போயிருந்தபோது யதேச்சையாக அம்மா அடுக்கியிருந்த புத்தகங்களிலிருது மெலிதாக ஒன்றை– பெண்கள் மலர் என்று போட்டிருந்தது, நானும் பெண்தானே– எந்த சுவாரசியமும் இல்லாமல் எடுத்துப் புரட்டினேன். ஏதோ தினசரியின் இணைப்புப் புத்தகம். சமையல் குறிப்பு பக்கத்தில் படம்.. ரொம்ப பரிச்சயமானதாக… அட என் இந்த வலைப்பதிவிலிருந்து எடுத்தது. கொஞ்சம் ஆர்வமாக அதே பெயரில் இருக்கும் இன்னும் சில புத்தகங்களைப் புரட்டினால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இந்த வலைப்பதிவுப் படங்கள். மாதிரிக்கு ஒரு பக்கத்தை மட்டும் புகைபடம் எடுத்துக்கொண்டு வந்தாலும், வந்தபின் கணினி பழுதானதில் இங்கே பதியும் அளவுக்கு அந்த விஷயம் பின்பு தீவிரம் குறைந்துவிட்டது.

peNgaL malar

இதிலிருக்கும் படங்களுக்கான இந்த வலைப்பதிவின் சுட்டிகள்…
 

 https://mykitchenpitch.wordpress.com/2007/09/11/inippu-kozhukkattai-vinaayagar-chathurthi/

https://mykitchenpitch.wordpress.com/2007/10/17/payaththam-paruppu-kadalai-paruppu-sundal-navaraaththiri/

-0-

தட்ஸ்தமிழ்.காம் feederல் வைத்துப் படிப்பது அதன் உடனடி செய்திகளுக்காக. எப்பொழுதாவது தலைப்பு ஆர்வம் எடுத்து உள்ளே சொடுக்கினால் படுகேவலமான பின்னூட்டங்களால் நிரம்பிவழியும். கொஞ்சம் இழப்பாக இருந்தாலும் அவர்கள் மறுமொழி மட்டுறுத்தல் வைக்காமல் இனி திறப்பதில்லை என்று பிடிவாதமாக படிப்பதை நிறுத்திவிட்டேன். அப்போது திடீரெனக் கிடைத்தது அதற்கு இணையாக அல்லது அதைவிட அருமையாக tamilvanan.com  லேனாவின் ஒருபக்கக் கட்டுரைகளை விரும்பிப் படிப்பேன். ஒரு சமயம் என் மாமா சிரத்தையாக அவைகளைத் தொகுத்து எடுத்துவைத்து எனக்குக் கொடுத்திருக்கிறார். இணையத்திலேயே கிடைப்பதற்காக சென்றவாரம் மிகவும் மகிழ்ந்துபோனேன். அப்புறம்தான் வரிசையில் சமையல்குறிப்பும்வர அதில் நான் எடுத்தபடம். சந்தேகப்பட்டு கீழே இருக்கும் வேறு சில பழைய குறிப்புகளையும் சுட்டிப் பார்த்தால் பல இடங்களில் இந்த வலைப்பதிவிலிருந்து எடுத்த படங்கள். இரண்டை மட்டும் மாதிரிக்கு கீழே இந்த வலைப்பதிவின் சுட்டிகளுடன் கொடுத்திருக்கிறேன்.

tv_vatralkuzhambu tv_chettinadu

http://www.tamilvanan.com/content/2009/02/27/samayal-6/
https://mykitchenpitch.wordpress.com/2007/04/18/vatral-kuzambu-2-manaththakkaali-vaththak-kuzambu/

http://www.tamilvanan.com/content/2008/11/07/20081107-chettinadu-samayal/
https://mykitchenpitch.wordpress.com/2007/08/08/paagarkkaai-curry/

-0-

‘அம்மாவின் சமையல்’ என்ற பெயரில் ஒரு வேர்ட்பிரஸ் பதிவு (எனக்குப்)புதிது. டேஷ்போர்டில் பார்த்துவிட்டு ஆர்வமாக உள்ளே போனால் முதல் பக்கத்திலேயே என் படங்கள் முகத்தில் அறைகின்றன.

top10_paavakkai kuzhambu top10_vaazhaiththandu

http://top10samayal.wordpress.com/2009/02/12/bitter-guard-kuzhambu/
https://mykitchenpitch.wordpress.com/2007/08/08/uppuchchaar-1/

http://top10samayal.wordpress.com/2009/02/17/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/

https://mykitchenpitch.wordpress.com/2008/03/29/vaazhaiththandu-mor-koottu/

 

இப்போதெல்லாம் படங்களில் top10samaiyal என்ற லேபிளுடனேனே வருகின்றன என்பது கூடுதல் ……

top10_morkuzhambu

http://top10samayal.wordpress.com/2009/03/06/morkuzhambu/
https://mykitchenpitch.wordpress.com/2008/04/01/mor-kuzhambu/

 

இன்றைக்குப் பார்த்த பதிவில் கொஞ்சம் பெரியதாகவே லேபிள்….

top10_potato fry

http://top10samayal.wordpress.com/2009/03/20/potato-fry/
https://mykitchenpitch.wordpress.com/2007/02/07/chinna-urulai-kizangu-roast/

வாழ்க!

பி.கு: பல ஆங்கிலப் பதிவுகளில் அறிவிக்காமலே என் படங்களைப் பார்த்ததால் தான் வலப்பக்கம் நிரந்தரக் குறிப்பு 1 சேர்த்தேன். அப்புறமும் தமிழ் (படிக்கத்) தெரியாதவர்கள் எடுத்துப் போட்டுக்கொள்கிறார்கள் என்று விட்டுவிடுவேன்.

ஃபீலிங்ஸ் என்று ஒரு புது ‘வகை’  ஆரம்பித்து இந்தப் பதிவைச் சேர்த்திருக்கிறேன். ஆனாலும் என் ஃபீலிங்ஸ் என்ன என்று எனக்கே தெரியவில்லை. 😦

BF by Sreeja

நெருங்கும்போதும் அகப்படாமல் பறந்துபோகிறாய்…
நிழலைப் போல தொடரும் என்னை மறந்துபோகிறாய்…
உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே…
எனக்கும் கூட அடிமைக்கோலம் பிடிப்பதில்லையே…

 

“எல்லாரும் குளிச்சுப் பொறப்பட்டா கோதை தெளிச்சுப் புறப்பட்டாளாம்”னு எங்க ஊர்ல ஒரு சொலவடை உண்டு. ஒருவழியா நானும் எனக்குக் கொடுத்த பட்டர்ஃபிளை அவார்டை என் பதிவுல போட்டுட்டேன். பொதுவா இந்தத் தொடர் சுற்று விஷயங்கள் எப்பவுமே எனக்கு ஒத்துவராது. ஆனாலும் கல்யாணக்கமலா மேல நான் வெச்சிருக்கற மரியாதை இந்த விருதை விட அதிகம். அதனால மகிழ்ச்சியோடவே ஏத்துக்கறேன். அவார்டோட பேர் அதிகம் பிடிச்சிருந்ததுங்கற காரணத்தையும் மறுக்கமுடியாது. 🙂

வண்ணத்துப் பூச்சி, பட்டாம் பூச்சிங்கற மாதிரி தமிழ்ப் பேர்களைவிட பட்டர்ஃபிளைல ஜில்ப்பு அதிகமா இருக்க எஸ்பிபி, ஆஷாவோட குரல்ல மீரா பாடலும் (கேட்கலாம் / பார்க்கலாம்) ஒரு காரணம். முதல்தடவை கிட்டத்தட்ட 15, 16 வருஷங்களுக்கு முன்னால பார்க்கும்போது எப்படி இருந்ததோ அப்படியே இந்தப் பாடல் இப்பவும் பரவசமா, உற்சாகமா இருக்கு. 🙂

bf

 

நான் சீன்லயே இல்லாதபோதும் என்னை நினைவுவெச்சிருந்ததுக்கு நன்றி கல்யாணக்கமலா.  🙂

நான் தினம் கூகிள் ரீடர்ல படிக்கற பதிவுகளோட எண்ணிக்கை எனக்கே மலைப்பா இருக்கு. தவிர்க்கவே முடியாம நாளும் ஏறிக்கிட்டே போகுது பதிவுகளோட எண்ணிக்கை. அதிகமா பதிவுகளைப் படிக்கறதே சொந்த வலைப்பதிவை கவனிக்க முடியாம போகிற முக்கிய காரணமோன்னு கூட தோணுது. சிலதை மட்டுமாவது எடுத்துடலாம்னு நினைச்சு ஒரு ஓட்டு கண்ணை ஓட்டினா எதையும் எடுக்க மனசுவரலை. எல்லாமே விரும்பிப் படிக்கற பதிவுகளாத்தான் இருக்கு.

இத்தனை பதிவுகள்லேருந்து ஏதாவது 3 பதிவைச் சொல்றது சாத்தியமே இல்லை. ஆனாலும் coolest என்ற வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து பின்னூட்டத்துல கூட மாற்றுக்கருத்துகள்(சண்டைங்கறதோட polite form), காழ்ப்பு அரசியல்கள் இல்லாத பதிவுகளாச் சொல்லலாம்னு நினைக்கறேன். (ஹூம், என் இந்த சமையல்குறிப்பு பதிவுகூட அப்படித்தான் இருக்கணும்னு ஆசைப்பட்டேன். எங்க விடறாய்ங்க? 😛 )

துளசி:  சூரியனுக்கு டார்ச் அடிக்காம நேரா விஷயத்துக்கு வரேன். இவங்க எழுதாத விஷயமே கிடையாதுங்கற அளவுக்கு வெரைட்டி. இவங்க அன்றாடம் வாழறதை எல்லாம் பதியறாங்களா அல்லது பதியறதுக்காக வாழறாங்களான்னு இனம்பிரிக்க முடியாத அளவுக்கு அவங்க வீட்டு பெர்சனல் விஷயங்கள்லேருந்து, நியூசிலாந்து விசேஷங்கள் வரைக்கும் எதையும் மிஸ்பண்ண முடியாது. எனக்குத் தெரிஞ்சு பேச்சுத் தமிழ்லயே சக்கைபோடு போடமுடியும்னு முதன்முதலா இணையத்துல நிரூபிச்சவங்க. எல்லாருக்கும் நல்லவங்கன்னு பாராட்டா பலரும் மாற்றா சிலரும் சொன்னாலும், அது எவ்வளவு சிரமம்னு அனுபவிச்சா தெரியும். 

டுபுக்கு: “ஏதாவது ப்ளாக் இருந்தா சொல்லேன், ஆபீஸ்ல ஆணிபிடிங்கி நொந்துட்டேன்”, “மேனேஜர் சொட்டைத் தலையன் லீவு. இல்லாதபோது ஆணி பிடுங்கினா இன்னிக்கி சம்பளம் செரிக்காது. ஏதாவது lighter side blog இருந்தா சொல்லு’, “எண்டர்டெயினிங்கா எனக்கு ஏதாவது ஸ்டஃப் படிக்க அனுப்பு அல்லது மெசஞ்சர் ஓப்பன் பண்ணி சாட்’ட வா” மாதிரி வேண்டுகோள்கள், மிரட்டல்கள் விடற என்னோட ‘சுற்றமும் நட்பும்’ கூட்டத்தில் யாரும் இலக்கியத் தாகமோ, அறிவுப்பசியோ, இந்த உலகத்தை இப்பவே பொரட்டிப் போடணுங்கற செயல்வேகமோ இல்லாதவங்க. அவங்களுக்கு உடனடியா நான் கைகாட்டிவிடறது இவரோட பதிவுகளைத்தான். அதைவிட முக்கியம், முதல் பார்வையிலேயே பதிவுகள்னா ஏதோ குடுமிப்பிடி சண்டைங்கற எண்ணம் வந்து அவங்க வெளியேறிடக் கூடாதுக்கறதுல ரொம்ப கவனமா இருப்பேன். (கொஞ்சம் பழகிட்டா அப்புறம் அவங்களே வந்து ஐக்கியமாயிடுவாங்கன்னு வைங்க.) ‘the think tank’ ன்னு போட்டிருக்கு.  அவ்ளோ dense எல்லாம் வேணாம்னு முதல்ல மிரளுவாங்க எல்லாரும். முன்ன எல்லேராம் பதிவைச் சுட்டிகிட்டிருந்தேன். ஆனா அங்க சண்டை கட்டாயம் உண்டு. 🙂

பாடும் நிலா பாலு:  டிவி பார்க்கறதே குறைவு. அதுலயும் குடும்பம் மொத்தமும் சேர்ந்து பார்க்கற டிவி நிகழ்ச்சிகள் செய்திகள் தவிர்த்து ரொம்பவே குறைவு. தொடர்ந்து விடாம நாங்க பார்த்த நிகழ்ச்சி ஜெயா டிவி ‘என்னோடு பாட்டுப் பாடுங்கள்’ மட்டுமே. மற்ற டிவிக்களோட போட்டி நிகழ்ச்சிகள்ல இருக்கற செயற்கைத் தனங்கள், வலிஞ்சு அழறது, சண்டை போடறது மாதிரி பில்டப்புகள் இல்லாம அநியாய அடக்கத்தோட, அளவுக்கதிகமான தகவல்களோட, தவறுகளைச் சுட்டிக்காட்டும் தன்மைல கூட ஒருவருக்கும் மற்றவருக்கும் இடைல வித்தியாசம்பார்க்க முடியாத அளவுக்கு நடுநிலைமையோட எஸ்பிபி இந்த நிகழ்ச்சியைக் கொண்டுபோனவிதம் அருமையோ அருமை. கோவிந்துக்கு மாறாத மயக்கம் பிபிஸ்ரீநிவாஸ் மேல மட்டும்தான். இந்த முறை சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நான் போயிட, கோவிந்த் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் பொண்ணைக் கூட்டிகிட்டு பிபிஸ்ரீநிவாஸ் வீடுவரைக்கும்போய் (அவர் இல்லைன்னாலும் பரவாயில்லை) திரும்பிவந்தார். அப்படிப்பட்டவர்கூட சனிக்கிழமை எங்க போனாலும் இரவு 8 மணிக்குள்ள வீட்டுக்குள்ள திரும்பி வந்துடற மாதிரியோ அல்லது 9 மணிக்கு மேலதான் வெளிய கிளம்பற மாதிரியோதான் தன்/எங்க நிகழ்ச்சிகளை அமைச்சிருக்கோம். இப்ப இந்த நிகழ்ச்சில மாற்றம் வந்தது பெரிய இழப்பு. அந்த அளவுக்கு பாலுவோட தனி ஆளுமை எங்களைப் பாதிச்சிருக்கு. இவருடைய பாடல்களை சுந்தர் வலைப்பதிய ஆரம்பிச்சபோதுகூட இவ்வளவுதூரம் தொடர்ந்து வரும்னு எதிர்பார்க்கலை. 🙂 கோவை ரவியும், வற்றாயிருப்பு சுந்தரும் விடாம இந்தப் பதிவை உயிர்ப்போட, அரிய பாடல்களைக் கண்டுபிடிச்சு எடுத்துப் போடவும் ஒரு பாடகரா பாலு கொடுத்துவெச்சிருக்கார். புதுப்பதிவு வரும்போதெல்லாம் என்ன பாடல்னு முதல்ல திறந்துபார்க்கற ஆவலை இன்னும்கூட கட்டுப்படுத்த முடியலை.
===

இவர்கள் பட்டாம்பூச்சி பரிசு வாங்கியதன் அடையாளமாக‌ பட்டாம்பூச்சி லோகோவை தங்கள் வலைத்தளத்தில் போட்டுக்கொள்ளலாம்.

இவர்களும் பட்டாம்பூச்சி பட்டம் வாங்கியவர்கள் என்றமுறையில் சில விதிகளைக் கடைபிடிக்க வேண்டும்.

1. இந்த பட்டாம்பூச்சி லோகோ உங்கள் பதிவுப் பக்கத்தில் இருக்க வேண்டும்.

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்புக் கொடுக்க வேண்டும்.

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்புத் தரவேண்டும்.

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியைத் தெரிவிக்க வேண்டும்.

அவ்ளோதான்! 🙂

எல்லாரும் எனக்கு friend தான். எல்லாருக்கும் நானும் friend தான். இதுல எல்லாம் எனக்கு சந்தேகமே இல்லை.

அதனால நான் யாருக்கும் yaari வழியா Friend Request எல்லாம் அனுப்பலை. [எனக்கே என் பேர்ல ரெண்டு வந்திருக்கு :(] இந்த மாதிரி இணையச் சேவைகள்ல எனக்கு நம்பிக்கையும் இல்லை; நேரமும் இல்லை. அதனால accountம் இல்லை.

Again, நான் யாருக்கும் அனுப்பலை. எனக்கு யாராவது அனுப்பினாலும் திறக்கமாட்டேன். காலைலேருந்து வர கடிதங்களைப் படிச்சு நடந்ததைப் புரிஞ்சுக்க இவ்ளோ நேரமாச்சு. Sorry!

இப்படி ஒரு பதிவை நான் எழுதமுடியும்னு நினைச்சுக்கூட பார்த்தது இல்லை. ஜனவரி மாசத்துக்கும் சென்னைக்கும் எனக்கும் எந்த வருஷமும் சம்பந்தமில்லை. அப்பா மட்டும் வருஷா வருஷம் வேணும்கற புக் பேர் கேட்டு தவறாம புக்ஃபேர் போய் வாங்கிவைப்பார். வீட்டில் விசேஷம் வந்த காரணத்தால மட்டுமே இந்த வருஷம் ஒருமாதிரி சாத்தியமாச்சு.

கணவருக்கும் பெண்ணுக்கும் ஸ்ரீரங்கத்திலேருந்து பல்லவன்ல சென்னை வந்து உடனே அன்னிக்கு விமானத்திலேயே மும்பை திரும்பியிருந்தா ஒரு நாள் லீவ் மிச்சமாகியிருக்கும். ஆனா அவங்க புத்தக ஆசை ஒரு நாள் சென்னைல தங்க அனுமதிச்சது.

நானும் அவ்ளோ ஒன்னும் விருப்பமில்லாத மாதிரி “சரி, ஆனா நீங்க பின்னாடி நின்னுகிட்டு நான் எடுக்கற புக்குக்கெல்லாம் கமெண்ட் அடிச்சிண்டே இருக்கக் கூடாது.”

“நீயும் புக் பின்னாடி பின்னாடி திருப்பி நான் எடுக்கற புக்குக்கெல்லாம் விலையைப் பாத்துண்டே இருக்கக் கூடாது.”

சரின்னு ஒத்துண்டாலும் ஒரே நொடில முழிச்சுகிட்டேன். “நல்ல கதையா இருக்கே, நீங்க வருஷம் முழுக்க வாங்கிகிட்டே இருக்கீங்க. நான் எப்பவாவது கிரி டிரேடர்ஸ் போனாதான்..”

பேச்சு தொடர்ந்ததுல அப்பா முடிவான முடிவுக்கு வந்துட்டாரு. அப்பாவுக்கு எங்க திருமணம் எந்த சொர்க்கத்துல நிச்சயமாச்சுன்னு தெரியாது. ஆனா எப்பவும் விவாகரத்து இந்த மாதிரி இடங்கள்ல நிச்சயம் ஆயிடுமோன்னு ஒரு டென்ஷன்ல இருந்துகிட்டேயிருப்பார்.

‘இந்தப் பிரச்சினையே வேணாம். சேர்ந்துபோனா நேரம் பத்தாது. புக்ஃபேர் வாசல் வரைக்கும் சேர்ந்து போகலாம். அங்கேர்ந்து பிரிஞ்சு நீங்க உங்க பொண்ணோட, நான் என் பொண்ணோட,” என்று கட்சி கட்டிவிட்டார். பொதுவாகவே ஷாப்பிங்னா அப்பாவைக் கூட்டிண்டு போறது எங்கக் குடும்பத்துல பெண்களின் தந்திரம். நம்ப உடைமைகள், குட்டீஸ் எல்லாம் பொறுமையா பாத்துப்பார். செலக்ஷன்ல எவ்வளவு படுத்தினாலும் ரசிச்சுப் பார்த்துண்டிருப்பார். கடைசியில (திவசம் மாதிரி) திருப்தின்னு சொல்லணுங்கறது தான் அவருக்கு முக்கியம்.

இத்தனை  திட்டமிட்டும் நடக்கலை. 😦 கணவருக்கு கடுமையா ஜுரம். ரூமுக்கு வந்ததும், தான் வரலைன்னு சொன்னா பரவாயில்லை. பொண்ணையும், “போகவேண்டாம், நான் உனக்கு அப்புறம்.. ” என்று கண்ணடித்ததில் (என்ன லஞ்சமோ) “நான் வரலை, நீ டாமினேட் பண்ணுவ” ன்னு டிவிபக்கம் போயிட்டா. எதிர்பார்த்தபடியே அப்பா, “பாவம், உடம்பு சரியில்லாம இருக்கும்போது நாம எப்படி போறது? நீ வேணா போயிட்டு வா. அவர் ஜுரத்துல தூங்கிட்டா நான் பொண்ணைப் பாத்துக்கணும்”னு பின்வாங்கினார். மாமானார்கள் ஒழிக! ஏற்கனவே பல்லவன்ல செங்கற்பட்டு வரும்போதே தேசிகன் ஃபோன்– ‘இன்னிக்கு(13/1) லீவில்லைன்னு நினைச்சிருக்கோம். ஆனா லீவ்நாள்தான். 11:30க்கே புக்ஃபேர் ஆரம்பிச்சுட்டாங்க. நான் இங்கதான் இருக்கேன்’னு சொன்னதுல வேற காண்டாயிருந்தேன்.
 

இந்தச் சென்னைமாநகரத்துல நமக்குத் துணையே இல்லாம லூசு மாதிரி தனியா புக்ஃபேர் போகணுமான்னு வெறுத்து, நகம் கடிச்சு, நாலைஞ்சு பேரை யோசிச்சு, ஒரு தோழியைத் தேர்ந்தெடுத்து (தேர்ந்தெடுக்க முக்கிய காரணம், அவளுக்கும் ரங்கமணியை ஒத்த சிந்தனை. என் புத்தகங்களைப் பாத்தாலே முதுகுவலி வரமாதிரி இருக்குன்னு முனகுற ஆசாமி. தமிழ், இலக்கியம், இலக்கியவாதிகள் பக்க சிந்தனை எதுவும் கிடையாதுன்னு (தப்பா) நினைச்சு, கூட வந்தா ரங்கமணியை மிஸ் பண்ற ஃபீல் வராதேன்னு) ஃபோன் பண்ணினேன். ஆஃபிசுல பிடுங்க ஆணியே இல்லாம மோட்டுவளையைப் பார்த்துக்கிட்டிருந்தவ, ‘done-ன்னு குஷியா கத்திண்டு கிளம்பினா. மக்கள் பார்த்துகிட்டிருக்கும்போதே, ‘யாரை நம்பி நான் பொறந்தேன், போங்கடா போங்க’ ட்யூனை விசிலடிச்சுண்டே கிளம்பிட்டேன். மேற்குமாம்பலம் ஸ்டேஷன்ல சந்திச்சு அங்கேருந்து ஆட்டோல சேர்ந்துபோக பிளான். அடேயப்பா ஸ்டேஷன் எவ்ளோ மாறியிருக்கு.

உள்ளே நுழையும்போதே பட்டிக்காட்டான் பாக்கறமாதிரி பேனர் எல்லாம் பாத்துகிட்டே வந்தேன். தோழி யாரையோ பாத்து பரவசமா பேசி அனுப்பிட்டு வந்தா. தெரிஞ்சவங்களா இருக்கும்னு நினைச்சா, ‘அவங்களைத் தெரியுமா, லதா ராமகிருஷ்ணன்னு பேரு. டெலிஃபோன்ஸ்ல இருந்தாங்க; எழுதுவாங்க’.

‘தெரியும், திண்ணை வார்த்தைல எல்லாம் எழுதுவாங்க’ன்னு சொல்லி முடிக்கலை, “தெரியுமா, லதாஆ..”ன்னு அவங்களைத் திரும்பக் கூப்பிட, அலறியடிச்சுகிட்டு, ‘எனக்கு ஐஜியைத் தெரியும், ஐஜிக்குத் தான் என்னைத் தெரியாதுங்கற உலகின் முதல் பேருண்மையைச் சொன்னேன். அப்புறம் கண்காட்சி முழுக்க பல நேரங்கள்ல இதைச் சொல்லவேண்டியிருந்தது. 😦 பத்ரியை எல்லாம் ஆள்காட்டி விரல் நீட்டி அடையாளம் காண்பிக்கறது கொஞ்சம் ஓவர் ஜெனரல் நாலட்ஜ். எப்ப இப்படி வளர்ந்தான்னு தெரியலை. நீட்டின கையை அப்படியே பிடிச்சு ‘ஐஜி’ன்னு சொன்னதும் புரிஞ்சுக்கறா. அந்தமட்டும் சமத்து. என்ன பிரயோசனம், ஜெயமோகனை யாருன்னே தெரியலை. 😦
 

* டிக்கெட் வாங்கி உள்ள நுழைஞ்சதுமே முதல் எண்ணம், பலர் கூடற இடத்துல எந்த செக்யூரிட்டி செக்கிங்கும் இல்லை. சமீபத்துல எந்தக் கோயில், கடைகள், பொதுமக்கள் கூடற இடங்களுக்குப் போனாலும் செக்கிங் இல்லாம உள்ள விடறதில்லை. தில்லி அக்ஷர்தாம்ல என் பேண்ட் பெல்ட்(லெதர்ங்கறதால்) எல்லாம் கழட்டச் சொல்லி சோதிச்சாங்க. அவ்வளவு தமிழ்நாட்டில பயம் இல்லைன்னாலும் இவ்ளோ பேர் வர இடத்துல குறைந்தபட்ச (கைல இருக்கற பை வகையறா) சோதனை கூட எதுவுமே இல்லை. ஏன்?

* மதியம் இரண்டரை மணிக்கு கூட்டமே இல்லாம ஹா’ன்னு இருந்தது. ஒரு இடத்துலேருந்து சவுண்ட் அதிகமா வந்தது. நினைச்சமாதிரியே ஹரன்பிரசன்னா. ப-வைச் சுத்தி பத்துபேர், பை-யைச் சுத்தி பத்துபேர்ன்னு கேள்விப்பட்டிருக்கேன். இலக்கிய ஆளுமையைச் சுத்தி எப்பவும் பத்துபேர் இருக்கறதை இங்கதான் பாக்கறேன். படம் எடுக்க நினைச்சு எடுத்த மூணுமே யாரோட வழுக்கைத் தலை, முழங்கை, முதுகுன்னு மறைஞ்சு- அப்படி சுத்தி ஒரு கூட்டம்… என் கணிப்புல அன்னார் சும்மா இருக்கும்போது சவுண்ட் அதிகமாவும், பத்ரி இருக்கும்போது ஆக்ஷன் அதைவிட அதிகமாவும் இருந்தது. (சீனைக் குறைங்கடே!) கேமிராவை மூடி உள்ள வெச்சுட்டு வந்தவேலையை ஆரம்பிச்சேன்.
 

* ஒவ்வொரு புத்தகமா எடுத்து பிரிக்க ஆரம்பிச்சதுமே தோழி உச்சுக்கொட்ட ஆரம்பிச்சாச்சு. “இன்னிக்கு முழுக்க இதே ரேஞ்ச் புக்ஸ்தானா? கொடுமடீ.” காதுல வாங்காம பாத்துகிட்டிருந்தேன். கிழக்கு புத்தகவரிசைல என்னவோ மிஸ்ஸிங்.
 

“என்னவோ அபத்த புக்கெல்லாம் புரட்டறன்னு நினைக்கறேன். பாரு, கடைபசங்க கூட உன்னையே கேவலமா பாக்கறாங்க”. அவ கடைப்பையன்னு சொன்ன ஆளைத் திரும்பிப் பார்த்தா… சத்யா :))). சிரிப்பை அடக்க சிரமப்பட்டு– ‘நீங்க சிரிச்சா பிபி ஏறுது’ மாதிரி கமெண்ட் ஏற்கனவே கேட்டிருக்கறதால அடக்கமா இன்னும் கொஞ்சம் புத்தகங்களைப் புரட்டிகிட்டே திரும்பினா, கூட்டத்துள்ளேயிருந்து நிதானமா எழுந்து வந்தாரய்யா டேமேஜர் மேனேஜர்.

“ச்சொல்லுங்க, என்ன வேணும்?” இங்க நின்னுகிட்டு என்ன செய்றீங்க, சீக்கிரம் இடத்தை காலிபண்ணுங்க மாதிரி ஒரு தொனி. எனக்குத்தான் விதண்டாவாதமா அப்படித் தோணுதான்னு தெரியலை. பதில் சொல்லாம (கொழுப்பா) இருந்ததுலயே கண்டுபிடிச்சிருப்பாங்களோ? “ஜெயஸ்ரீ?..” சந்தேகமா ஒரு பார்வை. இணைய ஆச்சரியங்கள்ல இதுவும் ஒன்னு. 🙂

பதில் சொல்லாம மையமா பாத்துவெச்சேன். வரமாட்டேன்னு சொன்னீங்களேன்னு ஒரு சலிப்பு.

“எல்லாரும் எங்களையே வேடிக்கை பார்க்கறாங்க ப்ரசன்னா.”

‘நீங்க ஏன் அவங்களைப் பார்க்கறீங்க’ மாதிரியோ, ‘ஆமாம் பெரிய இலக்கியப் பேரிகை, எல்லாரும் பாக்கறாங்க’ மாதிரி கிண்டலா பதில் வரும்னு நினைச்சா, “ஏதும் புக்ஸ் திருடிடுவீங்களோன்னு பார்த்திருப்பாங்க” சீரியஸ் பதில்.

Grrr.. “மொதல்லா மனுஷன் திருடியாவது படிக்கத் தூண்டற மாதிரி ஒரு புக்கை எழுதிக்கிழி அல்லது அப்படி ஒரு புக்கை உங்க பதிப்பகத்துல போடுங்க, அப்புறம் பேசலாம்” ன்னு கடுப்படிக்க நினைச்சதை சுத்தி இருந்த சில அப்பாவிகளுக்காக சொல்லாம விட்டேன். இந்தப் பதிவோட நோக்கமே இப்பவாவது இதைச் சொல்றதுதான். 🙂
 

என்னவோ மிஸ்ஸாறதுக்கு பதில் தெரிஞ்சது. இலக்கியப் புத்தகங்களைத் தனியா வெச்சிருக்காங்களாம். நல்ல ஐடியா. அப்படியே அதை தனி imprintல வெச்சுட்டாங்கன்னா குழப்பமில்லாம இருக்கும்.

ஓரளவு ஏற்கனவே புத்தகங்களை முடிவுசெஞ்சிருந்தாலும், ஒரு சஜஷன் கேட்டேன். உடனே என் கையிலிருந்த ஒரே புத்தகத்தை (சேவியரின் கிறிஸ்தவம்) பிடுங்கி, பில்போட சொல்லிட்டு(நம்மை எதுவும் கேக்கறதில்லை) விடுவிடுனு கிளம்பினார். ஆஹா, நல்ல வேட்டை இன்னிக்கு ஐயா ஆலோசனைல கலக்கப் போறோம்னு நினைச்சுக் கிளம்பினாஆ…, பொண்ணுபார்க்கப் போகச்சோம்பி சித்தப்பாபொண்ணைக் கட்டினவன் மாதிரி பின்னாலயே இருக்கற தமிழினிக்கு கூட்டிப் போனாரு. சரி, நானே பாத்துக்கறேன், உங்க வேலையைப் பாருங்கன்னு கிளம்பச் சொல்லிட்டு (நாம வாங்கறதை எல்லாம் எதுக்கு அடுத்தவங்களுக்கு ஒப்பிக்கணும்?) சொந்தமாவே வேட்டையைத் துவங்கினேன். (ofcourse, தோழி நொச்சோட தான். அதுதான் இன்ஸ்பிரேஷனே.)

* எல்லாப் பதிப்பகத்துலயும் எனக்கான புக் ஒன்னு நிச்சயம் இருக்கும்னு நம்பினேன். அதனால எல்லாத்துலயும் ஒரே ஒரு புக் மட்டுமேன்னு ஒரு ரூல் வெச்சுகிட்டேன். (பல இடங்கள்ல மீறினேன். ரூலே மீறத்தானே.) தமிழினில ரொம்ப நாளா விட்டுப்போன ‘காடு’. ஆளுமையை அனுப்பிட்ட தைரியத்துல பில்போடற இடத்துல ஜெயமோகன் வருவாரா?’ன்னு ஒரு கேள்வி. ‘ரொம்பத் தேவை’ன்னு தோழி மூலம் கைல ஒரு கிள்ளு கிடைச்சது. “அவர் 4 நாள் முன்னால்தான் சென்னை வந்துட்டுப் போனாரு. இந்தத் தடவை கண்காட்சிக்கு வரலை”ன்னு பொறுமையா பதில் சொன்னாங்க. (ரொம்ப நல்லவய்ங்களா இருப்பாங்க போல! எல்லா இடத்துலயும் இப்படி இருந்துட்டா எப்படி இருக்கும்?)
 

“யார் ஜெய்மோகன்? எதா இருந்தாலும் பார்க்க நினைக்கறதெல்லாம் கொஞ்சம் ஓவர். என்ன பண்ணுவ? நான் உங்க ரசிகை ப்லா ப்லான்னு வழிவயா? புக்ல சைன் வாங்குவயா? couldnt imagine.. நீ ரொம்ப மாறிட்ட. ஆல் அப்சர்ட்..” தோழி ஆற்றமாட்டாம பொங்கினதுகூட அழகா இருந்தது. “சே சே சும்மா கேட்டேன். நீ வேற. ஆள் இருந்தா இந்தப் பக்கமே வராம சுத்திப் போயிடமாட்டோமா?” ன்னு சமாதானப்படுத்தினேன். இன்னிக்கி வெளங்கினமாதிரிதான்னு தோணிடுச்சு.
 

* எல்லாருக்கும் இலக்கியத்தளத்துல சுந்தர ராமசாமியை நினைவுக்கு வரலாம். என் தகுதிக்கு, எனக்கு கடைல பழத்துண்டுகளை டூத்பிக் வெச்சு சாப்பிடக் கொடுத்தபோது சுந்தர ராமசாமி நினைவு வந்தது. (பழத்துண்டுகளைச் சிறிய கண்ணாடிக் கோப்பையில் போட்டு குத்தி எடுத்து சாப்பிடுவதை விரும்புவார். சலித்துப்போய் நான் கையால் எடுத்து சாப்பிட்டபோது, “குத்தி எடுத்து சாப்பிட்டுப் பாருங்க… இன்னும் டேஸ்டா இருக்கும்” என்றார். — நினைவின் நதியில், ஜெயமோகன்) நான் அதைத் தோழிக்கு சொல்லிகிட்டிருக்கும்போதே, யாரோ ஒருத்தர் ஸ்லோ மோஷன் நடைல வந்து அவளோட பழத்தட்டைத் தட்டிவிட்டுட்டு, அப்படி ஒரு சம்பவம் நடந்த பிரஞ்ஞையே இல்லாம நிமிர்ந்த பார்வையோட நேர்க்கோடு மாதிரி நடந்து கடந்து போய்க்கிட்டேயிருந்தாரு. ஏதும் புனைவுலக சஞ்சாரியா இருக்கலாம். ஆணாப் பிறந்ததே தப்பு; அதுலயும் ஒரு சாரிகூட சொல்லாம போன அந்தாளை அவ எப்படி சண்டைபோடுவான்னு எனக்கு முன்அனுபவம் இருக்கறதால மனசாட்சியே இல்லாம ‘நீதான் சரியா பிடிக்கலை’ன்னு ‘யாரோ’வுக்காக தோழியைச் சாடினேன். 😦 (யாரோ! பாத்து பதமா நடந்துக்கய்யா, எப்பவும் நான் கூட இருக்கமுடியாது.)

* கழிவறை பத்தி பலவருஷங்களா படிச்சுகிட்டு வரதால ரொம்ப முன்ஜாக்கிரதையா மதியத்துலேருந்தே ஒரு காபிதவிர தண்ணியோ வேற எதுவுமோ குடிக்கலை. கிட்டத்தட்ட மயக்கம்போடுற நிலைல பழங்கள் கடைல சாப்பிடும்போது தேசிகன் எங்களோட சேர, அடுத்த ரவுண்ட், ஸ்டார்ட் மியூஜிக்.
 

* காலச்சுவடுல (பெரிய கடை) பார்த்துகிட்டே நகரும்போது, புத்தகங்களை மறைச்சுகிட்டிருந்த ஒரு குட்டிப் பொண்ணை, ‘கொஞ்சம் தள்ளிக்கோடா செல்லம்’ சொல்லி நகர்த்தினேன். ‘வா’ன்னு தன் பக்கம் இழுத்துகிட்ட அதனோட அம்மா(?)– நாற்காலில கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருந்தவங்களைப் பார்த்ததும், ‘கண்ணே உன் முந்தானை காதல்வலையா.. உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நம்காதலா?..” வகையறா பிஜிஎம் எல்லாம் நினைவுல ஓடிச்சு. உத்துப் பார்த்தா அட ஆமாம்.. சங்கீதா. பளிச்சுனு இருக்கும் இவ்ளோ சின்னப் பெண்ணையா பத்து பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னாலேயே ராஜ்கிரணாதிகள் அவ்ளோ கிழவிமாதிரி காட்டினாங்கன்னு கடுப்பா இருந்தது. தேசிகன்கிட்ட சந்தேகம் கேட்டேன். ‘ஆமா, நான் அவங்களை வருஷா வருஷம் பாக்கறேன்’ன்னு அப்டேட் செஞ்சார். டிவிலயாவது வாங்க மேடம்!

* ‘இறந்தவனின் ஆடைகள்’ கவிதைமூலம் என்னைத் திரும்பிப் பார்க்கவெச்ச மனுஷ்ய புத்திரனைச் சந்திச்ச போதுதான் என்னைப் பத்தி அறிமுகப் படுத்திக்கொள்ள எதுவுமே இல்லைன்னு புரிஞ்சது. உயிர்மைக்குள் நுழைஞ்சு வந்த அனுபவம் பத்தி எதுவுமே சொல்லப் போறதில்லை. புத்தக லிஸ்ட் குட்டிப் புத்தகம் செம க்யூட்.

Gnani_Desikan (CBF2009)

* ஞாநி எல்லாரும் பயமுறுத்தற மாதிரி எல்லாம் கடுமையா இல்லாம படு கூல். கண்ணால சின்ன அசைவுல படம் எடுத்துக்கவான்னு கேட்டேன். அதைவிட சின்ன கண் அசைவுல சிரிப்புடன் சம்மதம் சொன்னார். உங்க கருத்துகளோட மாறுபடறேன்னு சொன்னாலும் சகஜமா உட்காரவைத்துப் பேசக்கூடிய பெர்சனாலிட்டிக்கு ஒரு ஓ! என் ரசிகர் பட்டாளமாக்கும்னு ஒரு கூட்டத்தை தன்னைச் சுத்தி வெச்சுகிட்டு பெருமிதப்படறதைவிட கருத்து மாறுபாடுள்ள இளைஞர்களோட அடிக்கடி உரையாட வேண்டியது இன்னும் ஆரோக்யமான விஷயம்.

* எனிஇந்தியன்ல சுதந்திரா. அநியாயத்துக்கு சமத்தா இருந்தாங்க. எதுக்கும் இருக்கட்டும்னு சுய அறிமுகம் செஞ்சுகிட்டேன். மதுமிதா பேரைச் சொல்லி அறிமுகப்படுத்திகிட்டு அப்படியே நிறுத்தியிருக்கலாம். ஹரன்பிரசன்னா பேரைவேற சொல்லி, அது என்ன எஃபக்ட் கொடுக்கும்னு சந்தேகமாவே இருக்கு.

* வானதில கூட்டமான கூட்டம். பொண்ணு இப்பல்லாம் புராணங்கள்ல ஆர்வம் காட்டறதால படிச்சுக் காட்டலாம்னு ராஜாஜியோட இராமாயணம், மஹாபாரதம் மட்டும் டக்குனு எடுத்துகிட்டு வெளியேறிட்டேன்.
 

* தேசிகன், எல்லாக் கடையிலயும் நான் சுற்றிவரவரைக்கும் அசாத்தியப் பொறுமையோட காத்திருந்து(இன்னொரு அப்பா உருவாகிறார்), வெளியே வந்ததும் என்ன புக்குனு வாங்கிப் பார்த்து, “ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல”ன்னு ஒரு கமெண்ட்டும். அதுக்கு என்ன அர்த்தமோ? பொறுமைக்கு இன்னொரு முக்கிய காரணம் நான் சுத்தின எல்லா இடத்துலயும் அவருக்கும் யாராவது பேசக் கிடைச்சாங்க. போதும்னு கிளம்பநினைச்ச போதுதான் ப்ரசன்னா ஒரு புத்தகத்தை பில் போடச் சொன்னது நினைவு வந்தது. வாங்கிப் போகலாம்னு திரும்பப் போய் பணம் கட்டும்போதும் தேசிகன் டைரக்டர் வசந்தோட பேசப் போயிட்டாரு. அவ்ளோ சவுண்ட் விடற ப்ரசன்னா புக்கைக் கொடுத்ததும், என்னவோ கண்ஜாடை, கைஜாடை காமிக்கறாரு. ஒன்னும் புரியலை. வெறும் விரலால பேப்பர்ல எழுதிக் காண்பிக்கறாரு…, காத்துல டிசைன் போடறாரு… நான் இதுக்கெல்லாம் ஆளா? என்னய்யா சொல்ல(லித் தொலைக்க)ற?ன்னு கேட்டா ரகசியக் கிசுகிசுப்பா, ‘அங்க பேசிகிட்டிருக்காரு பாருங்க, அவருதான் தேசிகன்’னு எனக்கு அறிமுகம். தோடாஆஆ. இதுக்கெல்லாம்கூட எந்த ரியாக்ஷனும் காமிக்காம இருந்திருக்கேனே நான் எவ்ளோ பெரிய அழுத்தக்காரியா இருக்கணும்? 

 
ரூமுக்கு திரும்பினதும் கணவரும் பெண்ணும் புத்தகங்களை ஆர்வமா பாத்தாலும் அப்பாவுக்கு திருப்தியாங்கற கேள்விக்கான பதில்தவிர எதிர்ப்பார்ப்பு எதுவும் இல்லை. அவரோட திருப்திக்காக நானும் பாசிடிவா பதில் சொன்னேன். ஆனாலும்….

* எல்லாரும் ரிசஷன் பத்தியே புலம்பிகிட்டிருந்தபோது (தேசிகன் வண்டி வண்டியா வாங்கற ஆள்கூட ரெண்டுபுக் தான் வாங்கினார். இதுக்கு நிறைய மனவலிமை வேணும். எதுவுமே வாங்காத இரா.முருகனுக்கு ஒரு ஓ!) நான் மட்டும், ‘புடைவை கட்டியிருந்தேன், அப்படியே வந்துட்டேன்’ டிரஸ் மாத்திண்டு வந்திருக்கலாம்’னு தடுமாறிப் புலம்பிண்டே இருந்தேன். ஒரு வசதியான உடை, backbag இரண்டும் புக்ஃபேருக்கு முக்கியம். எல்லாரும் சொந்த வண்டி எடுத்து வந்திருக்கமாட்டாங்க. கொஞ்சம் வாங்க வாங்க வெச்சுட்டு வர cloak room மாதிரி கட்டணத்துக்கு வைக்கலாம். சேர சேர தூக்கிகிட்டு நடக்கமுடியாம சோர்வு வந்துடுது.
 

* பல புத்தகங்களை அதோட சைஸைப் பார்த்து வெச்சுட்டேன். மாயவலை, அத்வானி சரிதம், காவல் கோட்டம் எல்லாம் கையால தூக்கக் கூட பயமா இருந்தது. எப்பவாவது ரயில்ல வரும்போதுதான் யோசிக்கணும்.

* நலம், வரம் இரண்டுலயும்தான் அதிகம் பார்க்கணும்னு நினைச்சிருந்தேன். நேரமே இல்லாம தவறவிட்டுட்டேன்.

* கடைகள் இரண்டு பக்கமும் திறந்து இருக்கறதால் அந்தப் பக்கத்துல ஒரு பதிப்பகப் பேரைப் பாத்ததும், ஆழி, க்ரியான்னு பார்க்கறதுக்கெல்லாம் மானாவாரியா குறுக்க ஓடிஓடி, நினைச்சதெல்லாம் வாங்கினாலும், அந்தவகைல பல கடைகளை தவறவிட்டதும் நடந்திருக்கு. என்ன நடந்தாலும் தீர்மானமா ஒரு வரிசைமுடிச்சு தான் அடுத்த வரிசைன்னு இருந்திருந்தா இப்படி நடந்திருக்காது.
 

* சில கவிதைத் தொகுப்புகள் எழுதிவெச்சிருந்தும், பதிப்பகம் பெயரை எழுதாம இருந்ததுல கண்டுபிடிக்க முடியாம வாங்கலை. 😦

* ஈழம் குறிச்சு என்னோட அரைகுறை இல்லை, அரைக்காலே காலே அரைக்கால் வீசத்துக்கும் கீழான அறிவுக்கு ஏதாவது நல்ல புக்ஸ் வாங்கலாம்னு நினைச்சும், கிளம்பறதுக்கு முன்னாலயே அந்தப் புத்தகங்கள் இல்லைன்னு தகவல் தெரிஞ்சதால தேடவே இல்லை.

* தூக்கவே முடியாம கை வலிக்க ஆரம்பிச்சதும் கணவருக்கும் பெண்ணுக்கும் வாங்கலாம்னு நினைவு வந்து என்னுடையதை நிறுத்திட்டேன். உண்மைல நமக்கு வாங்கறது சுலபம். மத்தவங்களுக்கு வாங்கத்தான் நிறைய யோசிக்க வேண்டியிருந்தது. ‘இதுதான் உனக்கு நல்லாயிருக்கு’ன்னு இஷ்டத்துக்கு ஏதாவது டிரஸ்ஸை அவங்க தலைல கட்டறது, ‘இவ்ளோதான் இன்னிக்கு’, ‘இதுதான் ஹெல்த்தி ஃபுட்’ மாதிரி வசனங்களோட சமையலை சாப்பிடவைக்கற மாதிரி புத்தகங்களை யார் மேலயும் திணிக்கமுடியாது. இரண்டுபேரையும் பத்தி அதிகம் யோசிச்சு வாங்கினேன்.
 

* ரெடிமேட் கடைகள்ல தொங்கவிட்டிருக்கற குட்டிப்பாப்பா கவுனைப் பார்க்கும்போதெல்லாம் பெண்குழந்தையே இல்லாட்டாலும் மனசு ஜிவ்வுனு இருக்குமே, அதை மாதிரி இருக்கு பிராடிஜி. தோழியையே அசத்தின இடம் அதுதான். ஆனா அதிகம் பார்க்கமுடியாம, இலக்கிய ஆளுமை அங்க வந்ததுல டக்குனு கிளம்பிட்டேன். “குழந்தைகள் புக் வாங்க நல்ல கடை இருந்தா சொல்லு”ன்னு கேட்டேன். ரெண்டு மூனு கடை பேரைச் சொல்லி (அதைவிட அருமையான கடைகளும் இருந்தது. வாங்கினேன்.) “ஆனா அதெல்லாம் பொண்ணு அவங்கப்பா மாதிரி இருந்தாதான். உங்க மாதிரி வாழைமட்டைகளுக்கு எந்த புக்கும் தேவையே இல்லை”ன்னு ஒரு ரிப்ளை.
 

* கொஞ்சம் lighter side வாங்கலாம்னு திரும்ப கிழக்கு(இலக்கியம்) போய் துப்பறியும் சாம்பு எடுத்தேன். அப்ப ‘எங்கிருந்தோ வந்தான்’ மாதிரி ஒருத்தர் வந்தார். நீங்க இதெல்லாம் அலையன்ஸ்ல வாங்கலாமே, அங்கதான் சீப்பா இருக்கும், என்னோட வாங்க பார்க்கலாம்னு கூப்பிட்டார். விட்டா கையைப் பிடிச்சு இழுத்துடுவாரோன்னு பேசாம பின்னாலயே போனேன். 😦 ஒருவேளை அலையன்ஸ் ஆளா இருக்குமோன்னு பெரிய பிசினஸ் ஸ்டிராடஜி நினைப்பு வேற. நடந்துகிட்டே இருந்தவர் திடீர்னு நின்னு, உங்களுக்கு content போதுமா, இல்லை பேக் அழகா இருக்கணுமா?ன்னு கேட்டார். நான் ஒன்னும் சொல்லாம சும்மா அவரைப் பார்த்தேன். (முடியலைடே!). அலையன்ஸ் புக் சுமாரா இருக்கும். ஆனா சீப். கிழக்கு நல்லா செஞ்சிருக்காங்க. ஆனா காஸ்ட்லி. என்கிட்ட பதில் எதிர்பார்க்காம– அலையன்ஸ் இங்கதானே எங்கயோ இருந்ததுன்னு சுத்தியடிச்சு தேடிப்பிடிச்சு (புரூனோ மாதிரி மஹானுபாவர்கள் புண்ணியத்துல இங்கயே 25% டிஸ்கவுண்ட் இருக்கும்போது இந்தாள் பின்னாடி போறோமேன்னு கையாலாகாம எனக்கு நானே திட்டத்துல ‘கேணக் கிறுக்கி’ன்னு பட்டம் கொடுத்துகிட்டேன்) கூட்டிப் போனார். அங்க ரகளையா எல்லாப் புத்தகத்தையும் கலைச்சுப் போட்டார். ‘துப்பறியும் சாம்பு எங்கப்பா?’ ன்னு கடைல இருந்த ஒரு சின்னப் பையனைக் கேட்டார். “அதெல்லாம் இங்க வராதுங்க. கிழக்கு வாங்கிட்டாங்க. அங்க போனா முழு துப்பறியும் சாம்பு புத்தகமா கிடைக்கும்” ன்னு தெளிவாச் சொன்னான். எங்கிருந்தோ வந்தார்,  நல்லா சுத்தவிட்டதைப் பத்தி கொஞ்சம்கூட கவலைப்படாம ‘அப்ப நீங்க அங்கயே வாங்கிக்குங்க பின்ன’ என்று சர்வசாதாரணமாக் கைகழுவினார். தேவையா? இப்படிக் கிளம்பி வராங்களேன்னு சலிப்பா இருந்தாலும், பரவாயில்லை, நம்ப மக்கள் விவரமாத்தான் பிசினஸ் பண்றாங்கன்னு மகிழ்ச்சியாவும் இருந்தது. 🙂 இன்னொரு தடவை கிழக்கு போகமுடியாது, பழைய புக் கடைல எட்டணாவுக்கே வாங்கித் தரேன், முதல் பக்கமும் கடைசி ரெண்டுபக்கமும் இருக்காதுனு தோழி கையை இறுக்க பிடிச்சுகிட்டா. 😦
 

* காமிக்ஸ் புத்தகம், மலிவு விலைல சாரு புத்தகங்கள் (அதிக விலை கொடுத்து வாங்கினேன்) எல்லாம் கிடைக்கும்னே தெரியலை. தெரிஞ்சிருந்தா வாங்கியிருக்கலாம். புக்ஃபேர் போறதுக்கு முன்னால அது சம்பந்தமான பதிவுகளைப் படிச்சுட்டுப் போறது நல்லது. எனக்கு ஸ்ரீரங்கம் போனதால படிக்க வாய்ப்பே இல்லாம போச்சு. 😦 சொல்ல சரியான ந(ண்)பர்கள் இல்லாததும் காரணம். :(( அடுத்ததடவைக்குள்ள நல்ல நண்பரைத் தேடிக்கணும்.
 

* படிக்கத் தவறிய பதிவுகளுக்காக வருத்தப்பட்டாலும் அதைவிட அதிகமா சொல்லத் தெரியாத குற்றவுணர்ச்சியைக் கொடுத்த பதிவு…
http://navinavirutcham.blogspot.com/2009/01/23.html
http://navinavirutcham.blogspot.com/2009/01/23-2.html
http://navinavirutcham.blogspot.com/2009/01/23-3.html

CBF 2009 Kaviyarangam

தேசிகனையும் தோழியையும் அனுப்பிட்டு வெளியரங்கத்துல உட்கார்ந்தேன். ஏதோ கவியரங்கம் நடக்கப் போறதா மைக்ல சொல்லிகிட்டேயிருந்தாங்க. பதிவர்கள் மதுமிதா, தாரா கணேசன்  பேரும் சொன்னதால வந்தா பாத்துட்டுப் போகலாம்னு காத்திருந்தேன். குளிர ஆரம்பிச்சும் மக்கள் வரலை. கடைசி நிமிஷம் வந்து நேரா மேடையேறிட்டாங்க. தாரா கணேசன் யாருன்னு எனக்குத் தெரியலை. மேடையைப் படம் எடுத்ததும் மதுமிதா இறங்கிவந்து ஒருவர்கிட்ட தன் கேமிராவைக் கொடுத்து படம்எடுக்க சொல்லிக் கொடுத்தாங்க. செம டென்ஷனா இருந்தாங்க. நான் போய் பேசினேன், ஆனா இப்பவும் நான்தான் ஜெயஸ்ரீன்னு சொல்லிகிட்டேனான்னு சந்தேகமாவே இருக்கு. 🙂 பாவம், ‘இனி தூங்குவனா?’ன்னு மணிவண்ணன் பஸ்ல போற ஆளை சுத்தவிடற மாதிரி செஞ்சிருப்பேன்னு நினைக்கிறேன்.

அப்றம் ஒருவழியா யாரோ வந்து இறங்கின ஆட்டோவையே பிடிச்சு மிதந்து மிதந்து– மறுநாள் பொங்கல், புத்தாண்டை(?) முன்னிட்டு தெருவெல்லாம் மக்கள் கூட்டம்– திநகர் போய் என் ஜோதில கலந்தேன்.

பின்விளைவு:
பொண்ணு ஆர்வமா நான் வாங்கின புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சாலும் மறுநாள் ஏர்போர்ட்ல ஹிக்கின்பாதம்ஸ் போய் Tinkle double digest வாங்கிட்டுதான் செட்டில் ஆனா. மும்பை வந்ததும் அதையும் கடாசிட்டு தன் social studies டப்பா தட்டப் போயிட்டா. 😦

இந்தத் தடவை கணவர்  குஜராத் இன்ஸ்பெக்ஷன் கிளம்பும்போது நியாபகமா பைலேருந்து ‘What Got you Here Won’t Get You There’ புத்தகத்தை எடுத்துட்டு நைசா ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ வெச்சுட்டேன். வந்து ஒரே திட்டான திட்டு. டிரைவர் முன்னால அடக்கமுடியாம தனக்குத் தானே சிரிச்சுகிட்டே இருந்து ரொம்பக் கேவலமாப் போச்சாம். இன்ஸ்பெக்ஷன் சமயமும் நினைச்சு நினைச்சு சிரிச்சிருக்காங்க. வீட்டுக்கு வந்தும் புக்கைப்பிரிச்சு கீழச்சித்திரை வீதில இது இவங்க வீடு, அது அவங்க இருந்த இடம்னு… தான் தொலைச்ச கீழச்சித்திரை வீதியை தேடற ஆர்வம்தான் அதுல இருந்தது. இப்பல்லாம் அப்பப்ப என் புத்தக வரிசைலயும் பார்வையை ஒரு ஓட்டு. கண்டவங்களும் கைவைக்றாங்கப்பான்னு பிகு பண்ணிகிட்டிருக்கேன். 

பி.கு: என்னதான் ஸ்ரீரங்கத்துல விருந்தினர் கூட்டம், மண்டப தூசு, சாப்பாடு, பட்சணம், பட்டுப் புடைவை, நான் படுத்திருந்த அறையிலேயே மாலையை மாட்டியிருந்தது, எக்கச்சக்க பூ, வைகுண்ட ஏகாதசிக் கூட்டம், கோவில், கொசுவர்த்திப் புகைன்னு அலர்ஜில திணறினாலும், அந்த துவரம்பருப்பு சைஸ் அலர்ஜி மாத்திரையை காலைல கிளம்பும்போது சாப்பிடாம இருந்திருந்திருக்கலாம். மயங்கி(தூங்கி?) விழுப்புரம் வரைக்கும் அப்பாவோட வலது தோளிலயும், செங்கற்பட்டுல தேசிகன் தொலைப்பேசும் வரை இடது தோள்ளயும் சாய்ஞ்சு தூங்கி(மயங்கி?)கிட்டே வந்ததில தோள், கழுத்தெல்லாம் வலியான வலி (எனக்கு). அதுக்குப் பிறகும் கலையாத மயக்கம். வழில எங்கயாவது மோர் அல்லது தயிர் கிடைச்சா வாங்கிக்குடின்னு சொன்ன ரங்கமணியோட வார்த்தையையும் வழக்கம்போல மதிக்காததுல மயக்கத்துக்கும் தூக்கத்துக்கும் இடையில் மிதந்துண்டே… சுத்தி இறைஞ்சிருக்கற புத்தகங்களை நீக்கிட்டுப் பார்த்தா– நடந்ததெல்லாம் கனவு மாதிரியே இருக்கு. 😦 திரும்ப எப்பவோ?

விடுமுறைக்கு ஸ்ரீரங்கம்போய் வந்ததை பாதி எழுதி வைத்திருந்தேன். அதற்குள் பொட்டி இயக்கத்தை நிறுத்த… அதை இனி தொடருவது அநியாயத்துக்கு மலரும் நினைவுகள் ஆகிவிடும். ஸ்ரீரங்கம் எங்கே போகிறது? அடுத்தவருடம் எழுதவேண்டியதுதான். ஆனால் அதன் கடைசிப் பகுதி மட்டும்..

எக்கச்சக்கமான ஊர்சுற்றல், சினிமா, ஹோட்டல் பேச்சு, சிரிப்பு, டென்ஷனே இல்லை, சமையல் என்ன என்று யோசிக்க வேண்டாம் என்று அத்தனை சொஸ்தங்களையும் தாண்டி, கிளம்புவதற்கு ஒரு வாரம் முன்னரே எனக்கு வழக்கம்போல் ‘எங்காத்துக்குப் போகணும்’ மூடு வந்துவிட்டது. வழக்கம்போல் அம்மா அப்பா ஒருமாதிரியான அமைதிக்குத் திரும்பிவிட்டார்கள். வழக்கம்போலவே “நாநாவை நினைப்பியோ ஊருக்குப் போயி?” மாதிரி சில்லியான கேள்விகளை அப்பா பேத்தியிடம் கேட்க ஆரம்பித்தார். தினம் ஃபோன் பண்றீங்க, பின்ன எப்படி மறக்கமுடியும் என்று அபத்தத்தை எல்லாம் சுட்டிக்காட்டாமல் வழக்கம்போலவே சும்மா இருந்தேன். “அம்மா பாவம், அவளைப் படுத்தாதே.” மாதிரி வசனங்களை அம்மா பேத்தியிடம் எடுத்துவிடுவது, என்னவோ தான்தான் என்னை ரட்சிக்கப் பிறந்தமாதிரி, “அவகிட்டயும் என்னப் படுத்தாதன்னு சொல்லு நாநி” என்று தங்கமினி ஏறிக்கொள்வது, இத்தனை கூத்துகளையும் தாண்டி, செல்லவிடுபட்ட இடங்கள், வேலைகள் ஒருமாதிரி அவசரத்தில் நடந்துகொண்டேயிருக்க கிளம்புகிற நாள் வந்துவிட்டது. மதியம் 12 மணிக்கு வண்டி. காலையில் ஒருமணி நேரம் அனுபவித்து ஊஞ்சலில் அமர்ந்து ஆடவேண்டும் என்று நினைத்து உட்கார்ந்து ஐந்து நிமிடம் ஆகவில்லை. திரு. கிருஷ்ணன் வந்தார். மேலே சொல்வதற்குமுன் கிருஷ்ணன் பற்றி…

வி.கிருஷ்ணன் ஸ்ரீரங்கம். (தொலைப்பேசி எண்: 9842464451) குஷ்பு இட்லி (இதை முதலில் கோவை அன்னபூர்ணா சாப்பிட்டு, அதற்கு அடிமை ஆனேன்.) தயாரிப்பதில் நிபுணர். ஸ்ரீரங்கத்தில் பல்லவன் எக்ஸ்பிரஸ் போன்ற வண்டிகளுக்கு முதல் வகுப்புகளுக்கு(மட்டும்) இந்த இட்லியை சப்ளை செய்கிறவர். தனியாக வீட்டு விசேஷங்களுக்கு, அன்றாட குறைந்த தேவைகளுக்குக் கூட செய்து கொடுப்பார். எங்கள் வீட்டில் பெரிய விசேஷம் என்றால்கூட மற்ற சிற்றுண்டிகளை பரிசாரகர்கள் மண்டபத்தில் தயாரித்தாலும் இட்லியை மட்டும் இவரிடமிருந்து வரவழைத்துவிடுவோம். தயாரிப்பைப் பற்றிய குறிப்பை யாரிடமும் பகிர்ந்துகொள்வதில்லை. ஆனால் என் அம்மாவிற்குத் தெரிந்திருக்கும், பகிர்ந்துகொள்ள மாட்டார் என்பதும் தெரியும்.

இன்று வழிக்கு எடுத்துச் செல்ல எனக்குக் கொடுத்துப் போகவந்தார். அவரைப் பார்த்ததும் தான் மூளை ‘பிராமிஸ்” என்ற வார்த்தையை ஃப்ளாஷ் அடிக்க… ஐயய்யோ எப்படி மறந்துபோனேன்?

“அம்மாஆஆ…” என்று கத்திகொண்டே உள்ளே ஓடினேன். என்னடீ என்று கேட்ட அம்மாவுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. பர்ஸை எடுத்துக்கொண்டேன். இரு, வரேன் என்று காலில் செருப்பை மாட்டுக்கொண்டு ஓடினேன்.

“என்னாச்சு, நானும் வரேன் என்று கிளம்பின அப்பாவைத் தவிர்த்தேன். (‘எப்படி இதை மறந்துபோனேன்? அம்மா நடுவுல எத்தனைநாள் வாழைக்காய் பண்ணினாள்?’)

“உலகத்திலேயே எனக்கு ஒத்த நடைவேகம் உள்ளவர் அப்பா மட்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு என்றாலும் இன்று அவரும் தேவை இல்லை என்று தோன்றியது. (இப்பவே மணி ஏழரை. இனிமெ வாங்கிவந்து எடுக்கமுடியுமா?’)

ஓட்டமா நடையா என்று சொல்லமுடியாத வேகத்தில் வடக்குவாசல் காய்கறி மார்க்கெட்டுக்கு ஓடினேன். (எத்தனை மணிவரைக்கும் ஆடு வரும்னு நினைவில்லையே’)

முன்பு உத்தரவீதி(முதல் சுற்று)யிலேயே மார்க்கெட் இருக்கும், இப்பொழுது சித்திரை வீதிக்கு மாற்றியதில் இன்னும் கொஞ்சம் அதிகம் நடக்கவேண்டும். நடந்தேன். குதிரைக்கு திரைகட்டியது மாதிரி கண்களால் வாழைக்காயை மட்டும் தேடி ஒரு பாட்டியிடம் இருக்க, விரைந்தேன்.

“ஒரு அரை டஜன் காய் கொடுக்க”

“டஜன் எந்தக் காலம்? எடைதான்” பாட்டி விறைப்பான பதில்.

ப்ச், இதெல்லாம் யாருக்குத் தெரியும்? ஒரு 6 காயை நிறுக்கச் சொன்னேன். விலை மனதிலேயே பதியவில்லை. 50 ரூபாயைக் கொடுத்தேன். சில்லறை இல்லை என்று என்னைக் கேட்டு, அடுத்த கடைக்காரரைக் கேட்டு… பிறகு ஏதோ மீதி சில்லறையும், குறைவதற்கு இன்னும் இரண்டு காயும் தலையில் கட்டி…

பை கொண்டுவரவில்லை. மும்பைப் பழக்கம். தன்னிடமும் பை கிடையாது என்று சொல்லிவிட கையில் எட்டு காயையும் அள்ளிக்கொண்டு.. காம்பின் கறைபட ஆரம்பித்தது. சில்லறையையும் காயையும் இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு அபத்தமாயும் கொஞ்சம் அபத்திரமாயும்…கேடுகெட்ட துப்பட்டா வேறு சரியாக உட்காரமல் படுத்த… மீண்டும் ஓட்டம். வழியெல்லாம்..

“என்ன சௌக்கியமா? எப்ப வந்த?”

“ம். இன்னிக்கு ஊருக்கு”

“வாழைக்காய் எல்லாம் அங்க கிடைக்காதில்ல? செம்பூர்ல எல்லாமே கிடைக்கும்னு என் தங்கை மாட்டுப்பொண் சொல்வாளே”…

வகையறா கேள்விகள், மனிதர்களுக்கெல்லாம் மையமாய் சிரித்துவைத்து… …

வீட்டுக்கு வந்ததும் அப்பா, ‘அங்க அவ்ளோ ரிக்ஷா நிக்குதே, ஏறி வரமாட்டியா? எதுக்கு ஓடிவர?’ என்று கேட்ட பின்தான் அட ஆமாம் என்று உறைத்தது. உள்ளே எடுத்துக்கொண்டு ஓடினேன். பெண் கூடத்தில் வழக்கம்போல் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

“வாசல்ல ஆட்டுக்குட்டி வருதா பாருடா செல்லம். வந்தா சீக்கிரம் நிறுத்திவை,” கத்திவிட்டு உள்ளே ஓடி… சமையலறையில் கத்தியைத் தேடி (ஆமாம், அம்மாவீட்டில் அரிவாள்மணை. எனக்கு நறுக்கவராது. கத்தியைத் தேடுவேன்.)…

“ஐயய்யோ எதுக்குடா இத்தனை வாழைக்காயை வாங்கிண்டு வந்திருக்க?” அம்மா.

சரசரவென தோல்சீவ ஆரம்பித்தேன். சீவிமுடிப்பதற்குள் ஒருவேளை ஆடுவந்து பெண் கூப்பிட்டுவிடுவாளோ என்ற அவசரத்தில் தோலோடு சேர்த்து காயும் நிறைய வந்தது.

“நீ வந்தாதான் வாழைக்காயே வாங்குவோம். அப்பாவுக்கு ஆகாது. ஊருக்குக் கிளம்பும்போது எதுக்கு இத்தனையை வாங்கிண்டு வந்திருக்க? தளிகை எல்லாம் ஆயிடுத்தே.”

“தூர எறி. நான் அதுக்கு ஒன்னும் செய்ய முடியாது.” உல்டாவாக காயைக் கீழே தள்ளிவிட்டு தோலை எல்லாம் பதவிசாக கூடையில் அள்ளிக்கொண்டு போவதை அம்மா ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“இப்ப இத்தனை காயையும் நான் என்ன செய்றது? எதுக்கு குடுகுடுன்னு காரியம் பண்ற?” அம்மா என்னிடமிருந்து பதிலில்லாததால் பொறுமையிழந்து கத்தினாள்.

‘வாசப்பக்கம் போறவ டிவி சத்தத்தை நிறுத்திட்டுப் போகக் கூடாது?’ டிவி, அம்மா இரண்டு சத்தமும் ஒரே நேரத்தில் தாங்கமுடியாமல் மனதுக்குள் தங்கமினியைத் திட்டிக்கொண்டே தோல் கலக்ஷனைத் தூக்கிகொண்டே வாசலுக்கு ஓடிவரும்வழியில்…. இடையில் கூடத்தில் எதுவுமே பாதிக்காமல் பெண்– இருக்கும் இடத்தைவிட்டு இம்மியும் நகராமல் இன்னமும் அதே சாய்ந்தவாக்கில் டிவியைத்தான் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

“நான் உன்னை என்ன சொன்னேன்?”

“நான் ஏற்கனவே ஆட்டுக்குட்டி பாத்திருக்கேன். I want to see only pigs.. Why no pigs in Srirangam ammaa?”

ஓங்கி முதுகில் நாலு போடலாம் என்ற ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, “நான் ஆடு பாக்கணும். போய் வருதான்னு பாரு.”

“நாநா என்னை கோயிலுக்கு கூட்டிண்டுபோகப் போறா. நான் முடியாது.” சொன்னபோதுதான் கவனித்தேன். கோவிலுக்குப் போகிற காஸ்ட்யூமில் இருந்தாள்.

“ஒன்னும் வேண்டாம். ஊருக்குக் கிளம்பற அவசரத்துல. போனதெல்லாம் போதும்.”

“நான்தான் வரச் சொன்னேன். டிரஸ் மாத்திவிட்டேன்,” அப்பா.

“வேண்டாம்பா. எனக்கு அவசர வேலை இருக்கு” சொல்லும்போதே டென்ஷன் ஏறியது.

“நீ ஆடு பாக்க நான் ஏன் கோயிலுக்குப் போகக் கூடாது. நான் இப்பவே அப்பாவுக்கு ஃபோன்பண்ணி சொல்றேன்”, சார்ஜில் இருந்த செல்ஃபோனை நோக்கி ஓடினாள். இவ அப்பாவிற்கெல்லாம் நான் பயப்படுவேன் என்று நம்பும் இவள் குழந்தைமைக்கே கட்டிப்பிடித்துக்கொள்ள வேண்டும்போல் இருந்தது. நமக்கு வேலை முடியவேண்டும் இப்போது.

“ப்ளீஸ்டா, அம்மா ஃபோட்டோ எடுக்கணும். கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்.” இறங்கிவந்தே ஆகவேண்டும்.

“ஓ ஆடு தோல் திங்கற ஃபோட்டோவா? போன தடவை எவ்ளோ திட்டின? நான் எடுக்க முடியாது.” பாழாப்போன தமிழ்ப் படம் பார்த்து பார்த்து எவ்வளவு நாளானாலும் நினைவு வைத்து பழிவாங்கும் குணம்.

“நீ எடுக்கவேணாம். நான் போய் காமிரா எடுத்துவரேன். நீ அதுக்குள்ள ஆடு வந்தா கூப்பிடு, போதும்.” அவசரமாக கேமிரா எடுக்க ஓடினேன்.

“எனக்கு அதோட பேர் தெரியாதே.”

“(Grrr…சனியனே), நாய்க்குதான் பேர் இருக்கும். ஆட்டுக்கெல்லாம் பேர் இருக்காது. போம்மா… வளவளன்னு பேசாத. ஆடெல்லாம் போயிடப் போறது.”

அப்படி எல்லாம் எதற்கும் பதட்டப்படாமல், அலட்டிக்கொள்ளாமல் இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்புளிக்க படுநிதானமாக நடந்துபோனாள். அவளையும் முந்திக்கொண்டு வாசலுக்குப்போய் ஆவலாய் இரண்டு பக்கமும்பார்த்தால் ஒத்தை ஆட்டைக் காணோம். காலங்காலையில் வரும். ஆனால் மணி எல்லாம் பார்த்து மனதில் குறித்துக்கொண்டதில்லை.

“குழந்தை(ஹி ஹி நான்தான்) இன்னிக்கு ஊருக்குக் கிளம்பறா. நானாவது கோயிலுக்குப் போயிட்டு வரேன்” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு அப்பா தனியாகக் கிளம்பிவிட்டார். ஒருஆள் வீட்டில் குறைந்தால் அவர் கிளப்பும் கேள்வியும் டென்ஷனும் குறையும் என்று நினைத்ததற்கு அப்புறம் வருந்தினேன்.

அடுத்த அரைமணிநேரம் காத்திருந்தும் வீதியின் கோடிவரை பார்வையில் ஆடு எதுவும் வருகிற மாதிரி தெரியவில்லை. கலக்கமாக இருந்தது. இந்தமுறை இல்லை என்றே முடிவுக்கு வந்துவிட்டேன். இதுதான் சாக்கு என்று தங்கமினி மண்ணில் காலால் எத்தி எத்தி விளையாட ஆரம்பித்தது வேறு எரிச்சல். கண்டிக்கக் கூட தெம்பில்லாமல் சொந்த சிந்தனை தடுத்தது.

“இந்த வாழைக்காய் சரியா வந்திருக்கா பார்,” சிறுதட்டில் மொறுமொறுவென்று சிவக்க வதக்கிய காயை அம்மா நீட்டியபோது பொங்கிப் போனேன்.

“என்னம்மா ஆட்டுக்குட்டியே காணோம். காலைலயே எல்லாம் போயிருக்குமா?”

“ஆடெல்லாம் இப்ப எப்படி வரும்? நன்னா காலங்கார்த்தால ஆட்டுக்காக வந்து உட்கார்ந்திருக்க வேலையைப் போட்டுட்டு..” என்று திருப்பிக் கேட்டதில் மொத்த ஃப்யூசும் போய்விட்டது. எப்ப வரும் என்று பதில் சொல்லாமல் பேத்தியை கவனிக்கப் போய்விட்டாள்.

“இனிமே வராதா பின்ன?” எல்லா எரிச்சலும் அம்மாமேல் வந்தது. அம்மா வேறு ஏதாவது ‘நல்ல’ ஊரில் இருந்திருக்கலாம்.

“ஆடா…?” என்று என்னிடம் இழுத்துவிட்டு வேறுபக்கம் திரும்பி, “____! மல்லிகை மகள், சிநேகிதி படிச்சுட்டா கொஞ்சம் கொண்டுவந்து குடேன்.” வேறு யாருக்கோ குரல்கொடுத்து பேசப் போய்விட்டாள். என்னைக் கொலைகாரியாக்காமல் அடங்கமாட்டார்களோ என்று தோன்றியது. “இவ இன்னிக்கு ஊருக்குப் போயிடுவா. இனிமேதான் என் ரெகுலர் க்ளாஸ், புக் படிக்கறதெல்லாம் ஆரம்பிக்கணும்” என்று எனக்கு செண்ட் ஆஃப் கொண்டாடிக் கொண்டிருந்தாள்.

“நீ எங்காத்துக்கு வராமலே போற. கிளம்பும்போதாவது எட்டிப்பார்த்துட்டு போ!”

“ஆடு எப்ப மாமி வரும் ரோட்டுல?”

“அதுக்கு இன்னும் நாழி இருக்கே.” மாமி வீட்டுக்குப் போகாமலே பால்வார்த்தார்.

“இப்பல்லாம் லேட்டாவா வரும். வந்திட்டுப் போயிருக்குமோ?” முன்பெல்லாம் நான் ஸ்கூல் போவதற்குமுன் வரும்.

“இப்பல்லாம் முனிசிபாலிடில வந்து தெரு சுத்தம் செய்யவிட்டுதான் ஆடுகளை அவுத்து விடறாங்க. இல்லைன்னா குட்டியெல்லாம் தெரியாம கண்ட பிளாஸ்டிக் குப்பையெல்லாம் சாப்பிட்டுடறதாம்.” மாமி இப்போது காபியே வார்த்தார்.

மாமி சொன்ன தகவல் நம்பமுடியாமலும், அப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசுவாசத்தையும் தந்தது.

“ஏண்டீ மெனக்கெட்டு ஆட்டுக்காகவா உட்கார்ந்திருக்க. நீ போய் உள்ள உன் பேக்கிங் ஏதாவது பாக்கி இருந்தா பாரு போ.”

“நீ சும்மா இரு. நான் நாலு சாமானை விட்டுட்டு போனாலும் பரவாயில்லை. அடுத்த தடவை எடுத்துப்பேன். இப்ப கிளம்பறதுக்குள்ள நான் ஃபோட்டோ எடுத்தே ஆகணும்.”

“அட ஃபோட்டோவை அடுத்த தடவை எடுத்துகோயேன். ஆடு எங்க போறது?”

“இல்லை, இந்தத் தடவையே எடுத்தாகணும்.”

“அவ்ளோதானே. வடக்குவாசல் வரைக்கும் போனயே. அங்கயே டர்னிங்ல நிறைய கட்டிவெச்சிருப்பானே. இப்பக்கூட போனா எடுக்கலாம். ஆட்டோவைக் கூப்பிடவா?”

“வேண்டாம். வீட்டு வாசல்லதான் எடுக்கணும்.”

“அதுக்கு எதுக்கு வாழைக்காய் வாங்கப் போற. சௌசௌ தோல் நம்பாத்துலயே இருந்ததே. அதைக் காமிச்சாலும் ஆடு வருமே.”

“ஆனா எனக்கு வாழைக்காய்த் தோல் சாப்பிடற ஆடுதான் வேணும்.”

“என்னடீ கூத்து இது?”

“ஆமாம் கூத்துதான். சொன்னா உனக்குப் புரியாது.”

“அப்ப புரியறமாதிரி உருதுல சொல்லேன்” என்று அண்ணன் இருந்தால் கலாய்த்திருப்பான். அம்மா முணுமுணுத்துக்கொண்டே போய்விட்டாள். எனக்கு என்னவோ இவர்கள் சொல்கிற மாதிரி ஒன்பது மனிக்கு மேல் எல்லாம் ஆடு வருமா என்றே சந்தேகமாக இருந்….

தூரத்தில் கருப்பாக… இன்னும் கொஞ்சம் கிட்டே வரவும்… ஆமாம் ஆடேதான். 🙂

ஆடு இன்னும் கொஞ்சம் வேகமாக நடக்கப் பழகலாம். ரொம்ப பின்னிப் பின்னி என்னவோ புதுப்பெண் மாதிரி நடந்துவந்து என் பொறுமையைச் சோதித்தது. கொஞ்சம் தோலை சிமெண்ட் தளத்தில் போட்டுவிட்டு காமிராவைத் திறந்தேன். அதிர்ச்சி. முந்தாநாள் இரவுதான் திருவனந்தபுரம் கன்யாகுமரி சுற்றிவிட்டு வந்ததில் சார்ஜ் முழுக்க தீர்ந்து அணைந்து அணைந்து எரிந்தது. எக்கச்சக்கமாய் ஏற்கனவே படம் எடுத்துவிட்டதில் படம் எடுக்கவும் கொஞ்சம் தான் இடம் இருந்தது. இனிமேல் எதுவும் சரிசெய்ய நேரமில்லை. ஆடு கிட்டே வந்துவிட்டது.

டக்கென அணைத்துவிட்டேன். இருக்கும் சக்தியை சும்மா திறந்துவைத்து வீணாக்க முடியாது. அப்பொழுதைக்கு திறந்துகொள்ளலாம்.

ஆனால் அவ்வளவு நேரமாக வீட்டு ஓரமாக வந்த ஆடு, இரண்டு வீடு முன்னால் வரும்போது திடீரென எதிரே கோயில் மதில்சுவர் பக்கம் போய்விட்டது. திண்டாடட்டும் என்று இருந்த பெண்ணே கொஞ்சம் இரக்கப்பட்டு “ஆடு.. ஆடு…” என்று கூப்பிட ஆரம்பித்தாள்.

“ஏய் சும்மா இரு. அப்படிக் கூப்டா வராது” என்று சொல்லிவிட்டு ப்பா ப்பா என்று நான் கூப்பிட்டும் கண்டுகொள்ளாமல் போய்விட்டது. பதறிப்போனேன். பெண்ணைப் பின்னாலேயே போய் கூட்டிவரச் சொன்னேன். அவள் ஆடு ஆடு என்று கூப்பிட்டதைப் பார்த்த யாரோ ரோட்டில் போகிறவர் சிரித்துவிட்டது அவள் ஈகோவை உரசிவிட்டது. எனக்குத் தெரியாது என்று மறுத்துவிட்டாள்.

அப்பா இருந்திருந்தால் எப்படியாவது இதை எனக்குச் செய்திருப்பார் என்று நினைக்கும்போதே மீண்டும் ஒரு ஃப்ளாஷ். “ஸ்ரீரங்கம் வந்து பெருசா ஐயப்பன் சீரியல் எல்லாம் பாக்கற. ஐயப்பன் பாரு, அவங்க அம்மாவுக்கு புலி எல்லாம் கொண்டுவராரு. எனக்கு ஆடுகொண்டுவர கூட யாருமில்லை. I am blessed only that much!” செண்டியால் அடித்தேன். (டோண்டூ மன்னிப்பாராக! புரைதீர்ந்த நன்மைக்காக செண்டியால் அடிக்கலாம் என்றுதான்) வைத்த குறி தப்பாமல் வேலை செய்தது.

“சரி எப்படிக் கூப்பிடணும்?”

“கொஞ்சம் வாழைத்தோல் கைல எடுத்துக்கோ. ப்ப்பா ப்பான்னு கூப்பிடு. பின்னாலயே வரும். இங்க கூட்டிவந்துடு. நான் பாத்துக்கறேன்”

வலப்பக்கம் திரும்பிப் போனவளை ஐந்து நிமிடம் ஆகியும் காணவில்லை. அதற்குள் இடப்பக்கமே இன்னும் கொஞ்சம் ஆடுகள் வருவதில் நான் கவனமாக, “ம்மா ம்மா” என்று ஆடும் இல்லாமல் மனிதனும் இல்லாமல் ஒரு பிளிறல் பெண்போன திசையில் கேட்டது. பார்த்தால், தங்கமினி அலறிக்கொண்டு… ஒரு ஆட்டுக்கூட்டமே அவள் கையில் தோலைப் பார்த்து துரத்திக் கொண்டுவர, பயந்து, சமாளிக்கத் தெரியாமல் ஓடிவந்துகொண்டிருந்தாள்.

“தூக்கிப் போடு!” என்று நான் கத்தியதில் தூக்கிவாரிப் போட்டு வீதியே திரும்பிப்பார்த்தது. நான் சொன்னதைப் புரிந்துகொண்டு கையிலிருந்த தோலை துக்கிப் போட்டதில் அந்த ஆடுகள் அங்கேயே சாப்பிட்டுவிட்டு, மிச்ச தோலுக்கு நான் அழைத்தும் அப்படியே திரும்பிவிட்டன. பெண் அழுதுகொண்டே திரும்பிவந்தாள். சமாதானப்படுத்த கூட நேரமில்லாமல் இந்தப் பக்கத்தில் வந்துகொண்டிருக்கும் ஆடுகளைக் கவனிக்க ஆரம்பித்தேன்.

ஒரு ஸ்கூல் பையன் நின்று வேடிக்கை பார்த்தவன், “இப்படி ரெண்டு பேரும் சவுண்ட் விட்டா ஆடு வராது. பிடிச்சு சூப் வெச்சுடுவீங்கன்னு பயந்துக்கும். மறைஞ்சுக்கங்க” என்று ஓசியில் ஐடியா கொடுத்தான். கிண்டல் செய்கிறானோ என்று சட்டென கடுப்பானாலும் அவன் சொல்வதும் நியாயமாகப் பட்டதில் திண்ணைச் சுவருக்குப் பின்னால் மறைந்துகொண்டேன். வீட்டோரமாக வந்துகொண்டிருந்த ரெண்டு ஆடு தோலைப் பார்த்து நடையைத் துரிதப்படுத்தி வாய்க்கும் தோலுக்கும் இடையே சில செண்டிமீட்டரே இடைவெளி இருக்க… நான் மெல்ல எழுந்து கேமிராவைத் திறக்க… யார் இருந்திருந்தால் வேலை சுலபமாக முடிந்திருக்கும் என்று கொஞ்சநேரம் முன்னால் நினத்தேனோ அந்த அப்பா கோயிலை முடித்துக்கொண்டு, “கூத்தெல்லாம் முடிஞ்சதா?” கேட்டுக்கொண்டே திடீரென வேகவேகமாகப் பிரவேசிக்க… ஆடுகள் அதைவிட வேகமாகக் கலைந்துபோயின.

“என்னப்பா..” என்று சலித்துக்கொண்டவள் தொடரமுடியாமல் பின்னால் இன்னும் ஓர் ஆடு வருவதால் ‘உஷ்!’ என்று அடக்கிவிட்டு…

ஆனால் அந்த ஆடு தோலருகில் வந்தும் எந்தச் சலனமும் இல்லாமல் நகர்ந்துபோனது.

“அப்பா ஆடா இருக்கும். அதுக்கும் வாழைக்காய் ஆகலை” என்று சம்மன் இல்லாமல் அம்மா ஆஜராக, அதற்குப் பின்னால் வந்த ஆடுகளும் கலைந்துபோயின.

இந்த ஃபோட்டோ செஷன் முடியட்டும் எல்லாரையும் ஒருபாடு வாயாரத் திட்ட வேண்டும் என்று கறுவிக்கொண்டு வேறுவழியில்லாமல் அமைதியாக இருந்தேன்.

கருப்பில் பளபளவென்று உயர்ந்த வெல்வெட்டில் செய்தமாதிரி சின்ன– ரொம்பச் சின்னதாய் ஒரு குட்டி வந்தது. தோல் அதை பாதிக்கவே இல்லை. என் முகத்தை மட்டும் பார்த்துவிட்டு நின்றது. ப்பா என்று சன்னமாக செல்லமாகக் கூப்பிட்டதில் கொஞ்சம் பின்வாங்கியது. ஃபோட்டோவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம், ஓடிப்போய் அள்ளிக்கொள்ளலாம் போல் இருந்தது. நான் ஒரு படி இறங்க ஆரம்பித்ததுமே நகர்ந்து ஓடிவிட்டது. “குழந்தை மாதிரி வேத்துமுகமா இருக்குமோ?” அப்பாவும் தன்பங்குக்கு கிண்டினார்.

இனி பொறுப்பதில்லை. “என்னைப் பாத்து ஒரு குழந்தையும் வேத்துமுகம் காட்டாது. உங்களை எல்லாம் பார்த்துதான் எல்லா ஆடும் பயப்படுது. எல்லாரும் உள்ள போங்க!” ஆனால் சிரித்துக்கொண்டே வேடிக்கைதான் பார்த்தார்கள்.

வாசலில் வீட்டோரமாய் கொஞ்சம் கூட்டம் கூடிவிட்டது. என்னால் இனிமேல் படமே எடுக்கமுடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். அவமானமாக இருந்தது. நம் சொந்த ஊர், சொந்த வீதி, இந்த வீதியிலேயே என் சிறுவயது முழு வாழ்க்கையையும் திறந்த புத்தகமாய் தெருவிலேயே பாதிக்குமேல் வாழ்ந்திருக்கிறேன். இந்த வீதியின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கிறேன். இப்போது அந்நியர்கள் அதிகம் வருவதில் நம்மை நாமே இடத்துக்கு அந்நியமாக உணருகிறோம் என்று இத்தனை டென்ஷனிலும் தவிர்க்கவே முடியாமல் தத்துவார்த்தம் குறுக்குசால் ஒட்டியது.

“இந்த சிமெண்ட் கார்னர்லதான் காய்கறித் தோல் எல்லாம் போடுவேன். தானே வந்து தினம் சாப்பிடும். என்னவோ நடலம் அடிக்கறா கார்த்தாலேருந்து…..” அம்மா.

அம்மாவும் அப்பாவும் மாற்றி மாற்றி மணி பத்து, பத்தேகால், பத்தரை என்று பரிட்சை ஹாலில் நேரம் சொல்லும் சூபர்வைசர் மாதிரி அவ்வப்போது கிளம்ப நேரமாகிவிட்டதை மணிசொல்லி டென்ஷனையும் எரிச்சலையும் ஏற்றினார்கள்.

நம்பிக்கை எல்லாம் தளர்ந்தபோது தான் அந்த அதிசயம் நடந்தது.

ஒரு மூன்று ஆடுகள் சேர்ந்தவாக்கில் வந்தன. முதலில் ஒரு குட்டி ஆடு துணிந்து வந்து தோலைச் சாப்பிட ஆரம்பித்தது. முழுக்க சாப்பிட்டு முடித்தது. எழுந்தால் ஓடிவிடுமோ என்று பயத்தில் கை சில்லிட்டுப் போய் உட்கார்ந்திருந்தேன். பெண் அருகே போய் இன்னும் கொஞ்சல் தோலை வீசினாள். சட்டென படம் பிடிக்க ஆரம்பித்தேன்.

vaazhaikkai_thOl_curry_aadu_1

“கிளம்பிட்டாங்கடா. இதெல்லாம் யுஎஸ்-ஆ இருக்கும். ஒரு கேமிரா வாங்கிகிட்டு ஊருக்குள்ள வரவேண்டியது. வந்து ஆடு, கோழி, குளக்கரைன்னு படம் பிடிக்கக் கிளம்பிடுவாங்க”

ஒரே சைக்கிளில் வந்த இரண்டு காலேஜ் பையன்கள் இறங்கி ஒரு மாதிரி ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து நின்றுகொண்டு கிண்டலடித்தார்கள். எனக்கு வேலை முடிந்துபோன மகிழ்ச்சி மற்றும் அவர்கள் நின்ற தினுசில் இருந்த நட்பின் நெருக்கம்தந்த மகிழ்ச்சி.. என்னவோ கோபமே வரவில்லை. இப்படி நக்கலடித்துப் பேசுவதில் அவர்களுக்கும் கொஞ்சம் மகிழ்ச்சி கிடைக்குமானால் அதுவும் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியே.

vaazhaikkai_thOl_curry_aadu_2vaazhaikkai_thOl_curry_aadu_3

இன்னும் இன்னும் என்று தோலை எடுத்துப் போட இன்னொரு ஆடு வந்து சேர்ந்துகொண்டது. பின்னால் மதில் சுவரோரமாக இருந்த தன் துணையையும் அழைத்து சேர்த்துக் கொண்டது. சட் சட் என க்ளிக்கிவிட்டு, நண்பர்கள் பக்கம் திரும்பி எடுக்க நினைத்தபோது ஸ்பேஸ் இல்லை என்று கேமிரா சொல்லிவிட்டது. அது தெரியாமல் கேமிராவைப் பார்த்து தயங்கியோ பயந்தோ நகர்ந்துவிட்டார்கள். 🙂

பி.கு:

1. இந்தப் பதிவிற்காக இந்தப் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பதுபோல் செய்துமுடித்துவிட்டேன். Oops! இந்தப் பதிவு டிஸ்கவரி, நேஷனல் ஜியாகரபி வகையறா ஒளிஓவிய பச்சான்களுக்கு சமர்ப்பணம்!

2. இன்னும் பின்னூட்டங்களுக்கே பதில் சொல்ல நேரமில்லாதபோது அதற்குமுன் அவசரஅவசரமாக இந்தப் பதிவை தட்டவேண்டிய காரணம், நாளை காலை ஸ்ரீரங்கம் கிளம்புகிறேன். அப்புறம் படங்கள் போட்டால் படங்களை இந்தப் பயணத்தில் எடுத்துப் போட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் நினைக்கலாம் என்ற முன்ஜாக்கிரதை. இவை சென்ற பயணத்தில் எடுக்கப்பட்டவையே.

3. இந்தப் பதிவை பாதி தட்டிக்கொண்டிருக்கும்போதே சட்டென ஒரு விஷயம் அதிர்ச்சியையும் சோர்வையும் தந்தது. நான் பொட்டியில் இருந்த டாக்குமெண்ட்களை அழித்தபோது படங்களும் அழிந்திருக்கும். இப்போது என்ன செய்வது என்று யோசித்தேன். லேசாக நினைவுவந்து திறந்துபார்த்தால் நல்லவேளையாக ஸ்ரீரங்கம் விசிட் பதிவிற்காக சில படங்களை ஏற்கனவே flickrல் ஏற்றியிருந்தேன். ம.நெ.காதன் மீண்டும் காப்பாற்றிவிட்டார்,

4. போதுமடா சாமி, இனி எதற்குமே எங்குமே சத்தியம் செய்ய மாட்டேன், இது சத்தியம்!!

பரித்ரானாய ஸாதூனாம்… – Part 1.

விடுமுறைக்கு ஊருக்குப் போய் வந்ததிலிருந்தே கணினி கொஞ்சம் மக்கர். வைரஸ் இருப்பதாகப் புலம்பிக் கொண்டே இருந்தது. தேடித் தேடி அழித்து, புறக்கணித்து எல்லாம் செய்தும் ஒருநாள் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. முதல் ஐந்துநிமிடம் வழக்கம்போல் படபடப்பாய் இருந்தாலும் ரங்கமணிக்குத் தெரிவிக்கவில்லை. கைவசம் மீட்பர் தொலைப்பேசி எண் இருப்பதால் இந்தமுறை அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. உடனே வரச்சொல்லி அழிச்சாட்டியம் செய்தும் மாலையில்தான் வரமுடியும் என்றார். தொலைப்பேசியை வைத்த நிமிடமே, திடீரென்று கொஞ்சம் யோசனை. இவ்வளவு அவசரமாக இதை மீண்டும் இயக்கி என்ன சாதிக்கப் போகிறோம் என்று ஒரு கேள்வி. ஒரு நாலுநாள் ப்ரேக் எடுக்கலாம். பழையவைகளை மீட்பது, ஃபார்மட் செய்வது போன்ற 4, 5 மணிநேர வேலையை விடுமுறை நாளில் வைத்துக்கொண்டால் மீட்பரோடு ரங்கமணியைக் கோத்துவிட்டு விட்டு, அந்த அறுவையிலிருந்து தப்பலாம். உடனே மீண்டும் பேசி ஞாயிறன்று வரச்சொன்னேன்.

ஆனால் ஒவ்வொரு ஞாயிறாக, எனக்கு பேங்க் க்ளோசிங், எனக்கு க்ளாஸ், எனக்கு எக்ஸாம், பார்ட்டி, கல்யாணம், காதுகுத்து… என்றே ரங்கமணியும் டபாய்த்ததில் தட்டிப் போய்க்கொண்டே இருந்தது. தொலையட்டும் நாமே வாரநாளில் வரச்சொல்லி சரிசெய்யலாம் என்ற எண்ணம் எனக்கும் துளிக்கூட வரவே வராததுதான் இந்த முறை நான் கண்ட பரிணாம வளர்ச்சி. ஒரே வாரத்தில், கணினி இல்லாதது வீட்டில் வேலையே இல்லாததுபோல் சுகமாக இருப்பதைக் கண்டுகொண்டேன். இந்த அழகில் நாளில் 6 மணிநேரம் 8 மணிநேரம் மின்வெட்டும் இருந்ததால்(நாங்கள் இதற்கெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மாதிரி அலட்டிக்கொள்வதில்லை. சூரியன் கிழக்கே உதிக்கும் அளவுக்கு இயல்பாக எடுத்துக்கொள்வோமாக்கும். எங்கள் ஊருக்கு ஆற்காட்டார் யார் என்றே தெரியாது.) தூங்கித் தூங்கியே– வெங்கட் மொழியில் சொல்வதானால்– காலை எழுந்தவுடன் தூக்கம், பின்பு கனிவுகொடுக்கும் நல்லதூக்கம் மாலை முழுவதும் தூக்கம் என்று வழக்கப்படுத்திக்கொண்டும் இரவு படுத்ததும் தூக்கம் வந்தது. ‘நாங்களெல்லாம் படுத்ததுமே தூங்கற ஜாதி, வெள்ளை மனசு’ என்று ஜம்பம் அடிக்கும் ரங்ஸ்கூட ‘அடப்பாவி, படுக்கும்போதெல்லாம் தூங்கறயே’ என்று பொறமைப்படும் அளவுக்கு தூங்கிவழிந்தேன். எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் இரண்டு பக்கங்கள் தாண்டமுடியாமல் தூக்கம் வந்தது. என் தூக்கத்திற்காக தொடர்ந்து பாடுபடும் எழுத்தாளர்களுக்கும் பதிப்பகத்தார்களுக்கும் என் நன்றி.

உன் புக் எல்லாம் அப்படித்தான் இருக்கும். என்னோட கலக்ஷனைப் படி என்று தன்னுடையதை நீட்டிய ரங்கமணியின் சிபாரிசுக்கு காரணம் அன்னாருக்கு என்மேல் இருக்கும் அதீத அக்கறை என்றோ என்னையும் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தும் முயற்சி என்றோ தன் ரசனை குறித்த அதீத நம்பிக்கை என்றோ இன்னும் வேறு நல்லவிதமாகவோ நினைத்தால் அது தவறு. தான் புதிதுபுதிதாக வாங்கி சத்தமில்லாமல் உள்ளே திணித்து விடும் புத்தகங்களை நானாகப் பார்த்து ஒரு நாள் நிற்கவைத்துக் கேள்விகேட்பதைவிட முதலிலேயே ஒப்புதல் வாக்குமூலம் மாதிரி கணக்குக் காண்பித்துவிடும் வழிகளில் இதுவும் ஒன்று. Men of Mathematics, The Black Swan, Leadership the challenge,… சும்மா சொல்லக் கூடாது முதல் பக்கத்திலேயே தூக்கம்வந்தது. இந்த வகையில் என் புத்தகங்கள் கொஞ்சம் பின்தங்கி இருப்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். “ஆரம்பத்துலேருந்து அம்புலிமாமா மாதிரி படிக்காத. டக்குனு ஒரு பக்கம் அல்லது சேப்டர் திறந்து படி. அப்பத்தான் சுவாரசியமா இருக்கும்”, “ஒழுங்கா நிமிர்ந்து உட்கார்ந்து படி. படுத்துண்டு படிச்சா எந்த புக்கும் தூக்கம் வரத்தான் செய்யும்” என்று எக்கச்சக்க சமாளிப்புகள், அட்வைஸ்கள்… அதுக்கு வேறாளப் பாரு என்று தொடர்ந்து தூங்கினேன்.

படித்த புனைவுவகைகளில் கொஞ்சம் பாதித்தது அ.முத்துலிங்கத்தின் ‘மகாராஜவின் ரயில் வண்டி’ சிறுகதைத் தொகுப்பு. ‘… நாம் அறிந்த உலகங்களுக்கு நம்மை நாம் அறியாத பாதைகளில் இட்டுச்செல்பவை…. வெவ்வேறு தேசங்கள், கலாசாரங்கள், மனிதர்கள் ஆனால் தமிழ் வாசகனுக்கு அன்னியப்படாமலும் தீவிரம் சிதைக்கப்படாமலும் படைத்திருக்கிறார்’ என்று பின்னட்டையில் ஹைலைட் செய்து கொடுக்கப்பட்டுள்ள அம்பையின் விமர்சனம் நூத்துக்கு நூறு சரி. உண்மையில் புனைவு என்ற எண்ணமே வருவதில்லை. அறிந்த விஷயத்தை நேர்மையாகச் சொல்லும் வண்ணம் இருந்தன. வேண்டுமென்றே ஒரு நாளைக்கு ஒரு கதைதான் என்று திட்டமிட்டு நிறுத்தி அசைபோட்டுப் படித்தேன். கதைகளைவிடவும் அதிகமாக அந்த நடை என்னை யோசிக்கவைத்தது. எந்த இடத்திலும் எழுத்தாளனும் உணர்வுகளோடு துருத்திக் கொண்டிருக்காமல் ஒரு ஏற்ற இறக்கமில்லாத பரப்பில் ஸ்கேல் வைத்து நேராக, கூரான பென்சிலால் கோடுபோட்ட மாதிரி ஒரு நடை. ஆனால் அதுவே நம்மை அத்தனை உணர்ச்சிகளுக்கும் அழுத்தங்களுக்கும் சுலபமாகக் கொண்டுசென்று விடுகிறது. இது எப்படி சாத்தியம் என்று இன்னும் எனக்குப் புரியவில்லை.

உதாரணமாக, ‘…என் ஒருவனுக்கு மட்டுமே அந்தக் கறுப்புப் பூனைக்குட்டியின் பெயர் அரிஸ்டோட்டல் என்பது தெரியும்..’ மாதிரி வாக்கியங்கள் சடசடவென படிக்கும்போதே பல திறப்புகளை நமக்குள் நிகழ்த்திவிடுகின்றன.

அதற்காக எளிமையான நடையே எனக்கு உவப்பானது என்று அர்த்தமில்லை. எல்லாரும் அலறுவது போலில்லாமல் பெயரிலியின் சிடுக்குத் தமிழுக்கு நான் பரம ரசிகையாக்கும். 🙂 (ஆனால் என்ன, அவர் எவ்வளவு கடுமையான கோபத்தில் எழுதினாலும் அல்லது தீவிர விஷயங்களை எழுதினாலும், படிக்கும்போது நமக்கு அதையும்மீறி அந்த மொழியழகில் வெடிச்சிரிப்பு முதல் புன்முறுவல்வரை ஏதாவது வந்துவிடுவதால் நீர்த்துவிடுகிறது.)

எப்படியும் அடுத்த சுஜாதா நாந்தானாக்கும் என்று முனைந்தோ அல்லது தன்னை அறியாமலேயோ எழுதும் பல இணைய எழுத்துகளுக்கு நடுவில் நிச்சயம் ஆசுவாசமாக இருந்த நடை.

இன்னும் கொஞ்சம் நேரம் விழித்திருந்தபோது செய்தது கொஞ்சம் ஹிந்தி மொழியறிவை வளர்த்துக்கொண்டது. அடிப்படையிலோ, பேசுவதிலோ பெரிய பிரச்சினை இல்லை என்றாலும் தொடர்ந்து கொஞ்சம் vocabuloryயை ஏற்ற நினைத்தேன். முதலில் ஆங்கிலத்தில் CNN-IBN மாதிரி சேனல்களில் செய்தியைக் கேட்டுவிடுவது. பின்பு அதையே ஹிந்தி சேனலில் பார்ப்பது. இந்தமுறையில் செய்தியை அறிய அதிகமெனக்கெடல் இல்லாமலே மொழியை மட்டும் கவனித்து உள்வாங்க முடிந்தது. இப்போது அந்நியமொழி என்ற உறுத்தல் இல்லாமல் ஹிந்தியை மூளை ஓரளவு சுலபமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. இந்த வழியை பெண்ணுக்கு உரைநடை தமிழுக்கு செய்துபார்த்தேன். அவளுக்கு பேச்சுத் தமிழ் எப்போதும் பிரச்சினை இல்லை. ஆனால் உரைநடைக்கு தினகரன், தினத்தந்தி என்று வாங்கிப் பார்த்து என்னாலேயே சகிக்க முடியவில்லை. (இந்தப் பத்திரிகைகள் எப்படி நம்பர் ஒன் நாளிதழ் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை மும்பை எடிஷன்தான் சகிக்கவில்லையோ?) மாற்றாக முதலில் அவள் ஏற்கனவே படித்துவிட்டு தூக்கிப்போட்ட சின்ன வயது ஆங்கிலக் கதைப் புத்தகங்களிலிருந்து குட்டிக் குட்டிக் கதைகளை எளிமையாக மொழிபெயர்த்து வைத்தேன். அறிந்த கதை என்பதால் அவளால் சுலபமாக மொழிக்குள் நுழைய முடிந்தது. வாரம் ஒரு பக்கமாவது தமிழ் படிப்பதையும் தொடரவைக்க ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இருக்கிற நேரப் போதாமைக்குள் தமிழைத் திணிப்பதே தெரியாமல் திணிக்கவேண்டியிருக்கிறது. கொஞ்சம் கடினமாக இருந்தாலும் தூக்கிப் போட்டுவிட்டுப் போகிற சாத்தியம் அதிகம்.

இப்படியாக இந்தப்பக்கத்தை மறந்தததில் மீட்பர் அழைப்புக்குக் காத்திருந்து காத்திருந்து ஒருநாள் நொந்துபோய் வேறு யாரையும் வைத்து வேலையை முடித்துவிட்டோமா என்று விசாரித்தார். இன்னொருமுறை தன் தொலைப்பேசி எண்கள் மாறியிருப்பதைச் சொல்லத்தான் ஃபோனினேன் என்று தகவல் சொன்னார். எதற்கும் அசையாமல் இருந்தேன். இடையிடையே சில நண்பர்கள் கடிதம் எழுதிவிட்டு அதை செல்ஃபோனிலும் சொல்லித்தொலைக்க வேண்டிய நிலைமைக்காக கடுப்படித்தார்கள். யாரோ அவசரமாக எனக்கு ட்விட்டர் கணக்குத் திறந்து ‘vettithendam’ என்ற கடவுச்சொல்லில் block செய்திருப்பதாகவும் தொடர்ந்து செல்பேசியில் அதை உபயோகிக்கச் சொன்னார். செல்ஃபோனும் தேவையா என்று இப்போது யோசிக்க ஆரம்பித்தேன்.

இடையில் ஒருமுறை சிஃபியின் உள்ளூர் டிஸ்ட்ரிப்யூட்டர்கள் சிஃபிக்கு பதில் 24online என்றுசொல்லி தாங்களாகவே சிஃபியை நிறுத்தி தங்களுடையதை நிறுவ வந்தார்கள். என்பொட்டி காலி என்றதும் விடாமல் ரங்க்ஸின் லேப்டாப்பில் மாற்றிவிட்டுப் போனார்கள். யதேச்சையாக ஒருநாள் ரங்க்ஸ் திறந்த சமயமாக அது வராமல் போனதில் கடுப்பாக, மறுநாளே மீண்டும் சிஃபிக்கு மாற்றச் சொன்னேன். ஏன் 24online தங்களுடையது இல்லை என்று வாடிக்கையாளர்களுக்குச் சொல்லவில்லை என்று சிஃபிக்காரர்களுடன் சண்டைபோட்டேன். அங்கிருந்த ஒருவர் அப்படியெல்லாம் கஸ்டமரை நாங்க இழுக்கமுடியாது என்று எதிக்ஸ்(வசனம்) பேசியது என் எரிச்சலை அதிகப்படுத்தியது. தான் வேலைசெய்யும் நிறுவனம் அதைவிட முக்கியம் என்பது எப்போது இவர்களுக்குத் தெரியும்? கஸ்டமர் சர்வீஸ் குறித்து ஒரு பொழிப்புரை கொடுத்து வைத்தேன். ஒருவழியாக சிஃபி ஒன்றரைமாதம் கழித்து இப்போதுதான் தூக்கத்திலிருந்து முழித்துக்கொண்டு 24online எங்களுடையை சேவை இல்லை என்று தினமும் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தியில் தகவல் அனுப்பிக்கொண்டிருக்கிறது.)

எப்படியோ இணையம் இல்லாமலே பொழுது சுகமாகப் போனது அல்லது இணையம் குறித்த நினைவே அதிகம் வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். நாட்டுநடப்புகள் ஒவ்வொன்றிற்கும் யார் யார் என்ன எழுதியிருப்பார்கள் என்று ஏற்கனவே ஊகம் இருப்பதால் பெரிய ஆர்வம் வரவில்லை. முடிந்தால் இனி உட்கார்ந்து ஊகங்களைச் சரிபார்க்கலாம். 🙂 மாதாமாதம் சிஃபியிலிருந்து சந்தாப் பணம் வாங்கிக் கொள்ள வரும்போது மட்டும் இணைப்பு இனியும் தேவையா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. பாலராஜன்கீதா ஒரு இரவு தொலைப்பேசி, விகடனில் இந்த வலைபதிவு குறித்த அறிமுகம் வந்திருப்பதாகச் சொன்னார். (இன்று இந்த வரியைத் தட்டிமுடிக்கும்போது சரியாக தொலைப்பேசியில் அழைத்து புத்தாண்டு வாழ்த்துகள் சொன்னார். நூறு ஆயுசு என்று இதைத்தான் சொல்வார்கள்!) நான் உஷாவுடனும் தேசிகனுடனும் பேச பல விஷயங்கள் இருந்தாலும் அதில் இணையம் இல்லை. அப்பொழுதுதான் வந்தாரய்ய்யா வேதம் ஓதுபவர்.

“ஒருத்தன் வணக்கம் சொன்னா, ‘ஹாய்ங்கறது, யா’ங்கறது, ஹோல்டிங்கறது… என்ன நாகரிகம் இது? நான் தொலைப்பேசியை வைக்கறேன் ..” மாதிரி சிணுங்கல்கள் வந்தால் சாத்தான்(குளம்) ஊருக்கு வந்திருப்பதாக அர்த்தம். நான் ஆச்சரியப்பட்டு பாராட்டும் குணம் இவருடையது. எனக்கெல்லாம் ஊருக்குப் போனால் சொந்த வேலையையே முடிக்கவில்லை போன்ற குறை இருக்கும். ஆனால் வரும்போதெல்லாம் மரத்தடி கூட்டம், வலைப்பதிவர் கூட்டம் என்றெல்லாம் நடத்துவதோடு தனிப்பட்ட முறையில் எனக்கும் தொலைப்பேசி விசாரிக்கத் தவறியதே இல்லை. நிச்சயம் பாரட்டவேண்டிய குணம். பண்புடன் குழும ஆண்டுவிழாவுக்கான என் சேவையை (எழுத அழைத்து அவர் அனுப்பிய கடிதத்தை நான் படிக்காததால், எதுவுமே நான் அங்கு எழுதவில்லை.) மனதாரப் பாரட்டினார். அடுத்த அரைமணிநேரத்தில் மொத்த இணைய விஷயங்களையும் தொகுத்துக் கொடுத்தார். அப்பாவியாக, விடுபட்டவைகளுக்கே மலர்வனத்தை அறிமுகம் செய்துவைத்த தன் கேணத்தனத்தையும், ஆளாளுக்கு இவரிடமே விஷயம் தெரியுமா, என்று இருவரும் இணைந்த கதையைச் சொல்ல, தான் அப்படியா என்று ஆச்சரியப்பட வேண்டியிருந்த  கொடுமையையும் சொன்ன கையோடு என்னிடமும், “விஷயம் தெரியுமா, எனிஇந்தியன் கிழக்கில் சேர்ந்தாச்சு!” என்றார். “அப்படியா??!!!” என்று நானும் என்னால் ஆனமட்டும் காட்டிய அதிர்ச்சியில் குறைந்தது ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரித்திருக்கலாம். எனிஇந்தியன்  நமக்கு சுவாதீனமான இடமாச்சே. இனிமே அந்த இலக்கியவாதியை சந்திக்கவே முடியாதா என்று இரண்டு பேரும் (உள்ளூர சாக்கு கிடைத்ததற்கு சந்தோஷப்பட்டாலும்) வெளியே ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் இண்டியா.

இப்படியாக வாரமொரு ஞாயிறும் பொழுதொரு காரணமுமாய் கணினி திருத்தமுடியாமலே தள்ளிப் போக, சுகமாகத் தூங்கிப் பெருத்த நேரம்போக மீதி நேரத்தை எல்லாம் எதிர்வீட்டின் புதுவரவான 4 மாதக் குழந்தையைக் கொஞ்சுவதில் குடும்பத்தினர் எல்லோருமே பத்து வயது குறைந்துவிட்டோம்…. ஆனால் அப்படியே நிம்மதியாய் இருந்துவிட முடியவில்லை. நான் வரவா வேணாமா என்று நொந்துபோன மீட்பர், விற்பதாக இருந்தால் அந்த LCD மானிட்டர் எனக்கு என்று முன்பதிவு செய்துவைத்தார். :(( கத்தரிக்காய் வாங்கப் போய் மழைக்கு ஒதுங்கிய ஒருநாளில் ரங்கமணி cromaவிற்குள் நுழைந்துவிட நானும் குஷியாய் வேடிக்கைபார்க்க நுழைந்தேன். பிறகுதான் தீவிரம் புரிந்தது. “நீ சரிபண்ணுவன்னு எனக்கு நம்பிக்கை இல்லை. அதுக்கெல்லாம் 5 வருஷம்தான் லைஃப். போரடிக்குது. இன்னிக்கே புதுசு” என்று பிடிவாதம் பிடித்ததில் மூச்சே நின்றுவிட்டது. அப்பாவும் பெண்ணும் பாதிசோப் பெட்டியில் பாக்கி இருக்கும்போதே புதுசோப் கேட்டு பாத்ரூமிலிருந்து குரல் கொடுக்கும் டைப். எனக்கு அந்த இடத்திலேயே என் கணினிப் பொட்டியின் மேல் தாங்கமுடியாத பிரியம் வந்துவிட்டது. முடியவே முடியாது என்று பிடிவாதம் பிடித்தேன். இந்தக் கம்பெனி, அந்த ப்ராசசர், இந்த ஆபரேடிங் சிஸ்டம், அந்த டைப் மானிட்டர் காம்பினேஷன்ல இருக்கா?” என்றெல்லாம் புடைவைக் கடையில் கலர், பார்டர், தலைப்பு விஷயத்தில் கடைக்காரரைக் குழப்பி வாங்காமல் வரும் ட்ரிக்கையே இங்கும் செயல்படுத்தி 5, 6 தடவை போயும் வாங்கவிடாமல் தடுத்தேன். ஆனால் ஒவ்வொருதடவையும் வேறு ஏதாவது ஒரு எலக்ட்ரானிக் பொருளை எந்தத் திட்டமும் இல்லாமல் வாங்கிக் குவித்த பணத்துக்கு இன்னும் இரண்டு கணினியே வாங்கியிருக்கலாம். பெண்ணும் தன் பங்குக்கு குறைந்தது 2 சிடியாவது வாங்கி பில்போடும் நேரத்துக்கு வந்து நீட்டிக் கொண்டிருந்தாள். கணினி பக்கம் போனாலே தனுஷை மனோபாலா பார்ப்பதுமாதிரி அந்த ரெப் பார்க்க ஆரம்பித்தார். ஆனால் கிறிஸ்துமஸ், நியூஇயருக்குள் எனக்குப் பிடித்த ஒரு புதுக் கணினியை என்னை எடுத்துப் போகவைப்பேன் என்று சபதமெடுத்தார்.

ரங்கமணி உணர்ச்சிவசப்பட்டு எங்கள் ஆஸ்தான ஃபர்னிச்சர் கடைக்குப் போனார். புதிதாக வரப்போகும் கணினிக்கு மேசையும் புதிதாகச் செய்யவேண்டும் என்பதில் அடுத்த தீவிரம். வாங்கறதே வாங்கறோம், ப்ரிண்டர், ஸ்கேனர் எல்லாம் அட்வான்ஸ்டா வந்திருக்கு. அதையும் சேர்த்து வாங்கிட்டு அதுக்கெல்லாம் தகுந்தமாதிரி நாமே டிசைன்செஞ்சு ஆர்டர் கொடுத்து செய்யலாமே என்று ஏற்றிவிட்டேன். ரெண்டுபேரும் குஷியோ குஷி. எப்படியோ நம்பறாங்களே, பாவம்!

திடீரென ஒருநாள் ஒரு சுமுகமான சூழலில் குட்டிப்பாப்பாவோடு குடும்பமே விளையாடிக்கொண்டு டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது நெட்மக்கள் வந்தார்கள். “மொத்த லைனும் போயிடுச்சு. நான் உங்கவீட்டில செக் செஞ்சுக்கலாமா?” என்பதோடு நிறுத்தாமல், “என்னங்க இப்பல்லாம் ஃபோனே செய்றதில்லை?” என்று சொந்த பெரியப்பா பையன்போல் சுவாதீனமாகத் திட்டிக்கொண்டே நேராக பொட்டியிடம் வந்தார்கள். 6 மாதங்களுக்குமேல் உபயோகத்தில் இல்லை என்றதும் ஆச்சரியமானார்கள்.

“அப்பல்லாம் கொஞ்ச நேரம் நெட் போனா கூட அமைதியா இருக்கமாட்டாங்க” என்று ரங்கமணிக்கு எடுத்துக் கொடுத்தார்கள்.

“உடனேஉடனே CCக்கு கம்ப்ளைண்ட் செய்வாங்களோ?” என்றபடி நீ நல்லபேரே வாங்கமாட்டியா என்று பையனைப் பார்க்கும் அப்பா மாதிரி சுவாரசியமில்லாமல் பார்த்த ரங்கமணியை நான் பார்க்கவில்லை.

“நீங்க வேற சார். CCக்கு செஞ்சாதான் பரவாயில்லையே. முதல்ல டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் எங்களுக்குத் தான் செய்வாங்க. நாங்க அரைமணிநேரத்துல வரலைன்னா, எப்படித்தான் நம்பர் கண்டுபிடிப்பாங்களோ, எங்க ஆஃபிசர், அவங்க ஆஃபிசர், அவங்க வீடு, சின்னவீடு வரைக்கும் எல்லா லேண்ட்லைன், மொபைல் நம்பருக்கும் அடிச்சு, போட்டுக் கொடுத்துடுவாங்க. இப்ப இந்த லைன் ரெண்டு நாளா ரிப்பேர். சொல்றவங்களே இல்லை” என்றதில் அதிக ரோஷமாகி ‘இருங்கடே, திரும்ப வரேன்’ என்று கறுவிக் கொண்டேன்.

“சரி பரவாயில்லை, கணினியை விக்கறதா இருந்தா நாங்க யாராவது மானிட்டரும் கீபோர்டும் எடுத்துக்கறோம், மறக்காம சொல்லுங்க,” என்று முடித்துக்கொண்டு போனார்கள். நான் கணினியின்மேல் காதலாகிக் கசிந்துருகிப் போனேன். உடனடியாக மீட்பருக்குப் பேசி பக்ரீத் லீவுக்கு வரச் சொன்னேன். ஐடிகாரங்களுக்கு அதுக்கெல்லாம் லீவ் இல்லையே என்று ஒருபாட்டம் அழுதார். ஒழி, இந்த ஞாயிற்றுக்கிழமை கட்டாயம் வரவேண்டும் என்று சொல்லி வழிமேல் விழி வைத்தும் வந்தாரில்லை. ஃபோன் தான் வந்தது. என் குழந்தைகளுக்கு இன்னிக்கு தடுப்பூசி போடணும். ட்வின்ஸ் வேற. தனியா என் மனைவி இரண்டையும் ஹாண்டில் பண்ண முடியாது. நானும் போயிட்டு ஈவினிங் வரேன் என்றார். காரணமே கவிதை மாதிரி இருந்ததில் கூலாகி, குழந்தைகளுக்கு ஜுரம் வரும், பாத்துக்குங்க, இன்னிக்கு வரவே வேணாம், முடிஞ்சபோது வேலை நாள்லயே வாங்க” என்று சொல்லி நெகிழ்ந்துவைத்தேன்.

ஒருவழியாக மீட்பர் வந்த அன்றுதான் இந்தப் பதிவின் தலைப்புக்கு வருகிறோம். இந்தத் தடவை பிரச்சினை இல்லை. எல்லா டாகுமெண்டும் அப்படியே அரைமணிநேரத்துல எடுத்துடலாம். அப்றம் ஃபார்மட் என்று உட்கார்ந்தார். எதையும் மீட்கவேண்டாம். அத்தனையும் அழிந்தால் பரவாயில்லை. நேராக ஃபார்மட் செய்யலாம் என்று சொன்னதை மீட்பரின் காதுகளால் நம்பவே முடியவில்லை. சென்றமுறை நடந்த கூத்துகளை ரீவைண்ட் செய்துகொண்டிருக்கிறார் என்பது முகத்திலேயே தெரிந்தது. “அப்படியெல்லாம் விடவே முடியாது. நான் எல்லாத்தையும் எடுத்துவெச்சுடறேன். நீங்க தேவைன்னா இறக்கிக்குங்க. இல்லைன்னா அழிச்சுக்கலாம்,” என்று பிடிவாதம் பிடித்தார். ஒரு வெயிட்டீஸ் விட்டு ரங்கமணிக்கு தொலைப்பேசி அவருடையது ஏதாவது இருக்கிறதா என்றுகேட்டேன். “எனக்கென்ன கண்ட இடத்துலயும் வெக்க கிறுக்கா பிடிச்சிருக்கு?” என்று கொழுப்பாக பதில்வந்தது. எதிர்பார்த்ததுதான் என்பதால் மனதைக் கல்லாக்கிக் கொண்டு சிறிதுகூட தயங்காமல் அஹம் ப்ரம்மாஸ்மி என்றாகி நானே என் பகுதியிலிருக்கும் அத்தனை கோப்புகளையும் ஒரு க்ளிக்கில் அழித்தேன். மீட்பர் என்னங்க இப்படி பண்ணிட்டீங்க என்று புலம்பிக்கொண்டே தன் ஃபார்மட்டிங் வேலையைத் தொடர்ந்தார்.

மறுநாள் ஒருவழியாய் இணையஇணைப்பும் கொடுக்கவைத்து திறந்தால் வரவே இல்லை. “உங்களுக்கு விஷயமே தெரியாதா? மும்பை மொத்தமுமே நேத்திலேருந்து நெட் இல்லையே. இன்னிக்குள்ள சரியாயிடும்.”

மறுநாள் திறந்தால் மானிட்டர், கீபோர்ட், எலிக்குட்டி எல்லாம் அநியாயத்துக்கு மௌனவிரதம். எதையுமே கணினி access செய்யவில்லை. எல்லா இணைப்பும் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துப் பார்த்து கண் வலித்தது. ரங்கமணிக்குப் பேசினால், “பின்ன கடைசில நீ என்வழிக்கு வராம முடியுமா? தலையைச் சுத்தி எறிஞ்சுட்டு புதுசா வாங்காம…” வேண்டுமென்றே ஏதோ கோளாறு செய்துவிட்டார்களோ என்று எரிச்சலாக இருந்தது.

துண்டித்துவிட்டு மீட்பருக்கு.. “ஓ, அது ஒன்னுமில்லை. திறந்து RAM ஒருதடவை துடைச்சுப் போடுங்க. சரியாயிடும்”

“விளையாடறீங்களா, எனக்கு எப்படி திறந்து செய்யத் தெரியும்?”

“இதுக்காக நான் மும்பைலேருந்து வரமுடியுமா? சிம்பிள்தான். போன வருஷம் நான் வந்தபோது திறந்ததை நீங்க பாத்தீங்களே?”

‘நான் கூடத்தான் போன வருஷம் நீ வந்தபோது தோசை வார்த்துப் போட்டேன். இப்ப உனக்கு செய்யத் தெரியுமா’ என்று கடுப்படிக்க நினைத்ததை நடத்தமுடியாமல் பின்னால் அந்தப்பக்கம் குட்டிப் பாப்பாக்களின் சத்தம் கேட்டது. ‘உனக்கு அடுத்த டெலிவரில triplets பிறந்து படுத்தட்டும் என்று சபித்து(!)விட்டு வைத்தேன்.

பாரீஸில் இருக்கும்போது வேறுவழியே இல்லாத நிலைமையில் நம்ம ஊர் சுமித் மிக்ஸியை  நானே திறந்து உள்ளே பிரிந்து இருந்த இரண்டு ஒயரை கோத்துவிட்டதில் ஓட ஆரம்பித்த மிக்ஸி, இன்னும் தொடர்ந்து 7 வருஷமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பொட்டியையும் திறந்து பார்ப்போம், என்ன ஆகிவிடப்போகிறது என்று கவிழ்த்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தேன்.

எங்கேயாவது திறக்க ஸ்க்ரூ இருக்கிறதா ஸ்க்ரூடிரைவரோடு தேடினால் கிடைக்கவே இல்லை. உருவினாலே திறக்கிறது என்று கண்டுபிடிக்கவே பத்து நிமிடம் போயிற்று. திறந்தால் உள்ளே ஒன்றுமே புரியாமல் இருந்தது. இதில் RAM யாரென்று தெரியவில்லை. நமக்குத் தெரிந்த ஒரே RAM அயோத்யாக்காரர்தான். எப்படியும் ரங்கமணி, மீட்பரை இதுவிஷயத்தில் கேட்பதில்லை என்று வைராக்யமாக இருந்தேன்.

தேசிகனுக்குப் பேசினேன். “ம்ம்ம் அதை எப்படிச் சொல்றது? ஒன்னு செய்ங்க. தூக்கிகிட்டிருக்கற எல்லாத்தையுமே ஒரு சின்ன அழுத்து அழுத்துங்க. ஓட ஆரம்பிக்கலாம்”

சின்னதாய் இல்லாமல் பெரிதாய் அழுத்தியும் எதுவும் நடக்கவில்லை. விரல்தான் வலித்தது. அப்படியே வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். தோல்வியோடு மூடவும் மனமில்லை.

அப்போதுதான் தம்பியிடமிருந்து ஃபோன். இந்தக் கழுதையை எப்படி மறந்துபோகிறேன்? பெரிய பிஸ்தா இல்லையென்றாலும் வீட்டில் வாங்கும்  எந்தப் பொருளையும் ஒருதடவை பிரித்துமேய்ந்து திரும்ப மூடும் வழக்கமுள்ளவன்.

“உனக்குச் சொன்னவங்க உனக்கு ஏத்தமாதிரி சரியா சொல்லித் தரலை. நான் சொல்றேன். எல்லாத்தையும் பிடுங்கிப் பாரு. எது பிடுங்க வருதோ அதான் RAM.”

வந்தது. :)) ”

ஃபூ ஃபூன்னு ஊது!”

ஊதினேன். 🙂

“அவ்ளோதான். எடுத்த சாமானை எடுத்த எடத்துலயே வைக்கற உன் பாலிஸியை அடாப்ட் பண்ணு. ஆல் த பெஸ்ட்”

“தாங்க்ஸ்”

“அதை எனக்குச் சொல்லாத. எந்தக் காரியமும் செய்றதுக்கு முன்னலாயும் பர்த்தாவை மனசுல தியானிச்சுக்க. இதெல்லாம் அம்மா உனக்கு சொல்லித் தரலையா? அந்தக் காலத்துல பெண்கள் சட்டி செய்றதுலேருந்து அடுப்பெரிக்கற வரைக்கும் அப்படித்தான் சாதிச்சிருக்காங்க. நீ சதா அந்தாளைத் திட்டிண்டே இருந்தா…”

லைனைத் துண்டித்து மெஷின் ஆன் செய்ததில் எல்லாவற்றிற்குமே உயிர்வந்திருந்தது. ஒழுங்காய் மூடிவைத்து நிமிர்த்தினேன்.

சாதித்த திருப்தியில் ஒரு காபிக்குப்பின் நெட் திறக்கப் பார்த்தால், இரக்கமேயில்லாமல் account expired என்றது. கேட்டால் 24online போய் திரும்ப வந்திருக்கீங்க. அதான் auto renewal விட்டுப் போச்சு” பதிலும், “நீங்க அதெல்லாம் முதல்லயே பாக்கறதில்லையா?” கேள்வியும் பூமராங்காய் திரும்பிவந்தது. என் நெட்டில்லா சோகக் கதையைச் சொல்லிப் புரியவைத்து சரிசெய்து..

மறுநாள்.. மறுநாள் என்று நேற்று ஒருவழியாக வந்துவிட்டேன். எல்லாம் அழிந்து, துடைத்து துப்புரவாக இருக்கும் பெட்டியைப் பார்த்தாலே உற்சாகமாக இருக்கிறது. இனியும் தொடர்ந்து சுத்தபத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இகலப்பை மட்டும் போனால் போகிறதென்று இறக்கிக் கொண்டேன். முதலில் நம்ப பக்கம் போய்ப் பார்க்கலாம் என்றால் சுட்டி தட்டுவதே தடுமாற்றமாக இருந்தது. நாமெப்படி சமையல் பதிவுகள் போட்டு, பின்னூட்டத்துக்கு பதில் போட்டுக் கொண்டிருந்தோம் என்று மலைப்பாக இருந்தது. பக்கம் திறக்கும் வரை ஆர்வமில்லாமல், ஒரு கடினமான மனநிலையில் இருந்தாலும் திறந்ததும் முகப்பில் சப்பாத்தி, கூட்டு என்று இருக்காமல் சுஜாதாவின் படம்பார்த்ததும் நொறுங்கிவிட்டேன். (மனம் சில அடிப்படை விஷயங்களில் மாறுவதே இல்லை போலிருக்கிறது.) கடைசியாக இந்தப்பதிவுதான் எழுதினேன் என்ற அளவுக்குக்கூட என் பதிவுகுறித்த நினைவில்லை. பதிவுப்பக்கத்தில் சட்டெனெ கொட்ட ஆரம்பித்த பனிப் பொழிவு… போன வருடம் சீசனுக்கு வேர்ட்பிரஸ் செட்டிங்ஸில் வைத்திருந்தது இந்த வருடமும் தொடர்கிறது போலிருக்கிறது. என் மனமும் இளக இவ்வளவே போதுமாயிருந்தது. அப்புறம் என்ன செய்வது என்று மறந்து… நினைவுவந்து, பின்னூட்டங்களுக்காக கட்டுப்பாட்டகம் போனால் தலைசுற்றல். வேர்ட்பிரஸ் மொத்தமாகக் குதறிப் போட்டிருக்கிறார்கள். நிதானமாகப் படித்துத் தேறுவோம் என்று மூடிவிட்டு மெயில் பக்கம் திறந்தால் அதைவிட மோசம்.

நாங்க எல்லாம் ரொம்ப ஆர்கனைஸ்டாக்கும் என்று வலைப்பதிவுக்கு ஒரு ஐடி, க்ரூப் கடிதங்களுக்கு ஒரு ஐடி, பெர்சனலுக்கு ஒரு ஐடி என்று ஏகத்துக்கு பந்தா விட்டதில் இப்போது ஒவ்வொரு ஐடியும் கடவுச்சொல் போட்டுத் திறப்பதற்குள் டென்ஷனாகி விட்டது. சத்தியமாக கடைசியாய் என்ன வைத்திருந்தேன் என்று நினைவே இல்லை. இணையத் தெய்வம் தென்திருப்பேறை மகரநெடுங்குழைக்காதனை வேண்டிக்கொண்டே முயற்சி செய்ததில் சில உடனே திறக்க, சிலது முகத்தில் குத்துவிட்டது. ஒருவழியாய் எல்லாவற்றையும் மீட்டாகிவிட்டது. பின்னூட்டங்களை அனுமதிப்பதற்கே அதிகநேரம் சொதப்பிக் கொண்டிருந்தேன்.

கடந்த மாதங்களில் என் தினசரி வேலைகள், பழக்கங்கள், உணவுப் பழக்கம், உடற்பயிற்சிகள், மூச்சுப் பயிற்சி, தியானம் என்று அனைத்துமே மாறிவிட்டன. இனியும் சமையல்குறிப்பு எப்போது எழுத ஆரம்பிப்பேன் என்று தெரியவில்லை. அதற்குமுன் இந்தப் பதிவை ஏற்றித்தான் வேர்ட்பிரஸுடன் மீண்டும் ‘பழகிப்பார்க்க’ வேண்டும். பின்னூட்டங்களுக்கும் தனிமடல்களுக்கும் நேரம் எடுத்து பதில் எழுதுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

-0-

 Bhagavat Geethai wrapper

 

பரித்ரானாய ஸாதூனாம் என்று இந்தமுறை பதிவிற்குப் பெயர் வைத்ததற்கு இன்னொரு நியாயமும் கிடைத்தது. இந்த இடைவேளையில் நான் செய்த ஒரே கணினி வேலை, கீதைக்கு பாரதியார் தமிழில் மொழிபெயர்த்த உரையில் கொஞ்சம் தட்டி ரங்க்ஸ் உதவியுடன் தமிழ் இந்து தளத்திற்கு அனுப்பியது.

“எல்லாரும் நல்லாப் பாத்துக்குங்க, நானும் ரௌடிதான்! நானும் பெரிய ரௌடிதான்!!…” என்று ஜீப்பில் ஏறிக்கொள்ள ஆசைப்பட்டாலும் நமக்கும் வடிவேலு மாதிரியே இந்த விஷயத்தில் ‘பில்டிங் ஸ்ட்ராங்தான் பேஸ்மெண்ட்தான் வீக்’ என்பதால் சும்மா அவ்வப்போது இந்தத் தளத்தை படித்துமட்டும் வந்தேன். இந்த முறை நான் பெற்ற தெங்கம்பழமாய் என்னிடம் இருந்த கிழக்கு பிரசுரித்த புத்தகத்தை வைத்து 15 நாளில் தட்டமுடியும் என்று நினைத்து, ஆனால் கீபோர்டில் வைத்த கையை எடுக்க முடியாமல் மூன்றே நாளில் முடித்தேன். கீதை காரணமா, அதற்குப் பொருள் எழுதியவர் காரணமா, நிலைகுலைந்த என் மனநிலை காரணமா தெரியவில்லை. கிழக்கு விட்ட பிழைகள், என் தட்டுப்பிழைகள் எல்லாம் சேர்த்து, ‘எத்தனை குறைகள் எத்தனை பிழைகள், எத்தனை அடியேன் எத்தனை செயினும்’ திரு. ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட குழுமம் அமர்ந்து அத்தனையையும் திருத்தி மிக நேர்த்தியாக இந்தத் தளத்தில் வலையேற்றியிருக்கிறார்கள்.

தட்டியதில் என் பங்கைவிட இந்த கீதை உரை இந்த நாள்களில் என் வாழ்வில் என் உள்ளத்தில், செய்த பங்கு மிகமிக அதிகம். ஜெயமோகனின் ஓவர்டோசில் கொஞ்சம் பயந்து ஓடியிருக்கிறேன். இனி திரும்ப அவைகளையும் படிக்கவேண்டும். வாய்ப்புக் கொடுத்த இந்து.காம் தளத்தாருக்கு என் நன்றி.

பி.கு:

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் (சொல்வதெல்லாம் பிற்போக்காமே?)

இந்தப் பதிவு எழுத ஆரம்பித்தபோது, 6, 7 மாதமாக வரமுடியவில்லை. இனிமேலும் என்னால் தொடர்ந்து எழுதமுடியுமா என்று தயக்கமாக இருக்கிறது என்று மட்டுமே தான் சொல்ல நினைத்தேன். வழக்கம்போலவே உண்மைத் தமிழ(ன்)ச்சி பதிவாக நீண்டுவிட்டதன்மூலம் சொல்லிக் கொள்வதென்னவென்றால்… நான் இன்னும் மாறலை/திருந்தலை. 🙂

Sujatha 3

 

‘சின்னி இறந்திருந்தாள்’ன்னு உங்களோட ஏதோ ஒரு தொடர்கதையோட கடைசி வரிபடிச்சு அழுதது மட்டும் தான் நினைவிருக்கு. அந்தக் கதை நினைவில்லை. வீட்டுல திட்டு, அதோட கதை புஸ்தகமெல்லாம் கட். பொதுவாவே கதை புஸ்தகம் படிச்சா படிப்பு கெட்டுப் போயிடுங்கற ‘ஆசாரமான’ குடும்பம். இதுக்கப்பறம் அக்கம்பக்கம் வாங்கிப் படிக்கக் கூட தடை. அப்படியும் விடலை. ரெண்டுவீடு தள்ளி ஒருத்தங்க வீட்டுக்கு சாயங்காலமா குழந்தையைக் கொஞ்சற மாதிரி போய் விகடன், குமுதம், கல்கின்னு உங்களோட எழுத்தை மட்டும் டக்னு திறந்து படிச்சுட்டு (இதுக்கு லஞ்சமா குழந்தையை தூளில ஆட்டிகிட்டே படிக்கணும். ஆனா அது எப்பவும் பிடிச்ச வேலைதானே. அதனால டபிள் பெனிஃபிட் ஸ்கீம்ல சந்தோஷமா செய்வேன். வெளிலேருந்து எங்கம்மா குரல்கொடுத்தா, ‘அவ தூளி ஆட்டிகிட்டிருக்கா, குழந்தை தூங்கற நேரமில்லைன்னு சொன்னா கேட்டாதானே’ன்னு பாப்பாவோட அம்மா பதில் சொல்லிடுவாங்க. அதெல்லாம் படிக்கற பத்து நிமிஷம் மட்டும் தான். படிச்சு முடிச்சதும் குழந்தையோட அம்மா அலற அலற பாதி தூக்கக் கலக்கத்துல இருக்கற குழந்தையை அப்படியே அள்ளிகிட்டு, ஓடீடுவேன் எங்கவீட்டுக்கு.

படிக்கறது ஒரு சுகம்னா அதைவிட பதின்மவயசுல(இப்பவும் தான்) அதகளமான கூட்டத்துல அதைப் பேசிகிட்டே இருக்கறது அதைவிட சுகம். அப்படித்தான் எனக்கு RSV வாத்தியாரோட ட்யூஷன் பிடிக்க ஆரம்பிச்சது. எங்க வீடு மாதிரி புத்தகங்களுக்குத் தடை எல்லாம் என் ஃப்ரெண்ட்ஸ் வீடுகள்ல இல்லை. அவங்கல்லாம் காலைலயே படிச்சுட்டு வந்து ட்யூஷன் நேரத்துலயே பேசி முடிச்சுடுவோம். சாயங்காலம் நான் திருட்டுப் புத்தகம் படிக்கறது சும்மா ஒரு எக்ஸ்ட்ரா வாசிப்பனுவத்துக்குத் தான். க்ளாஸ்ல உங்களைப் பத்தி பேசுகிட்டிருக்கும்போது RSV, “ரெங்கராஜன் என்னோட ஸ்கூல்மேட். கிரிக்கெட் போட்டியெல்லாம் அடையவளஞ்சான் வீதிக்கு வந்து விளையாடுவான். எங்காத்து கீழ்ரூம் ஓரத்துல சாத்திவெச்சிருக்கற பேட்(bat) ரெங்கராஜன் விளையாடினதுதான்”னு சொன்னதும் நம்பமுடியாம(அவர் வயசென்ன, உங்க வயசென்ன?) ஆனா சந்தோஷமாயிட்டேன். ஒருநாள் அடக்கமுடியாம அவங்கவீட்டு வாசப்பக்க கீழ இருட்டுஉள்ல ஜன்னலை ஒட்டி சாத்தி வெச்சிருந்த பேட்டை வெளித் திண்ணைலேருந்து ஜன்னல் வழியா கையை உள்ள விட்டு தொட்டுப் பார்க்க நினைச்சு உள்ள கையை விட, அதுக்குள்ள RSV இறங்கிவர, அவசரத்துல கையை வெடுக்குனு எடுக்க.. போகும்போது கை எப்படி சுளுவா போச்சுன்னு தெரியலை. வெளில எடுக்கும்போது கை மட்டும்தான் வந்துது. வளையல் எல்லாம் உள்ளயே உடைஞ்சு கொட்டிடுச்சு. கொஞ்சூண்டு இரத்தம் வேற. 😦

அப்படியே விட்டிருக்கலாம். வீதி பிஸ்தாக்கள்கிட்ட இதைச் சொல்லி பீத்திக்கணும்னு நினைச்சு விலாவாரியா சொல்லிட்டேன். ஆளாளுக்கு என்னை அழவெச்சுட்டாங்க. அவங்களுக்கெல்லாம் அவர் (பாய்ஸ் ஹைஸ்) ஸ்கூல் மேத்ஸ் வாத்தியாராச்சே.

“RSVஆ? அவர் பீலா விடுவாருன்னு தெரியும். அதுக்காக இப்படியா?”

“எந்த சுப்புணி பேட்டையோ தொட்டுட்டு… பாவம்டா.”

“அவர் சொன்னா இந்த கேப்ஸ் (கேப்ஸ்- KPVT யோட ஷார்ட் ஃபார்ம். இது எங்க வீதி குழூஉக்குறி) ஏன் நம்பணும்?”

“இல்லை, அவர் இதுக்கெல்லாம் பொய் சொல்ல மாட்டாரு. ரொம்ப நல்லவரு”ன்னு நான் திரும்பத் திரும்பச் சொன்னதை யாரும் நம்பத் தயாரில்லை. அல்லது நம்பினாலும் என்னை ஓட்டியே தீரணும்னு முடிவா இருந்திருக்காங்களோ என்னவோ.

“இவகிட்ட நமக்கென்னடா பேச்சு. அந்த பேட்டை வாங்கி மேக்கை(make) பாத்தா தெரிஞ்சுட்டுப் போகுது. என்ன மரம், எந்தக் கடை, எந்த வருஷம் எல்லாம் சொல்லிடமாட்டோம்?”

பயந்துட்டேன். இவங்க வாத்தியார்கிட்ட கேட்டுடுவாங்கன்னில்லை. அது நீங்க தொட்டு விளையாடின பேட்டா இல்லாம இருந்துடக் கூடாதேன்னு. வீட்டு வாசல்ல அழுதுகிட்டிருந்ததைப்; பாத்து பாட்டி வந்து விசாரிச்சா. “அது என்ன நடந்துச்சுன்னா… உங்க பேத்தி…” ன்னு ஒருத்தன் விஸ்தாரமா சொல்ல ஆரம்பிக்க, என் அழுகைக்கு பயந்து இன்னொருத்தன் “வேண்டான்டா” ன்னு அவன் வாயைப் பொத்த, ‌அவன் அந்தக் கையையும் வலுக்கட்டாயமா தள்ளி, “உங்க பேத்தி டேஷ் டேஷ் டேஷ்..” ன்னு கத்திட்டுப் போனான்.

அம்மா வந்து அலட்சியமா என்னன்னு விசாரிச்சா. “வளையல் உடைஞ்சிடுச்சாம், திட்டுவீங்களோ?”ன்னு எவனோ எடுத்துக் கொடுத்தான். “ஆமா, போன மாசம் காதுல இருந்த தங்கத் தோடை தொலைச்சா. போன வாரம் வெள்ளிக் கொலுசைத் தொலைச்சா. அதுக்கே பாட்டியும் பேத்தியும் வெளிய சொல்லாம கமுக்கமா இருந்திட்டாங்க. கண்ணாடி வளையலுக்கா அழப்போறா இவ. அதெல்லாம் பசப்பு”ன்னு நல்லவேளை கண்டுக்கலை.

ஆனாலும் அப்றம் வந்த நாள்கள்ல இந்தப் பசங்கபோய் வாத்தியாரைக் கேட்டு அது நீங்க விளையாடினதில்லைன்னு ஆயிடுமோன்னு ஒரே பக்பக்தான்.  எங்கண்ணன் தான் தைரியம் சொன்னான், இவனுங்க எல்லாம் போய் கேக்கமாட்டாங்க. அவர் ரொம்ப ஸ்டிரிக்ட். அவரைப் பாத்தாலே டிராயரை நனைச்சுடுவாங்கன்னு. அதே கொஞ்சம் நிம்மதி. ஸ்கூல்ல அவர் பையன்கள் கிட்ட அப்படி ஸ்டிரிக்டா இருப்பாரோ என்னவோ எங்களை எல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டார். ‘அவருக்கு கல்யாணம் ஆகலை இல்ல‌. அதனால பெண்களை எப்படி டீல் பண்றதுன்னு அவருக்குத் தெரியாது. ஏதாவது சொன்னா எங்கயாவது அழுதுகிழுது வெச்சிடுவீங்களோன்னு பயப்படுவாரு’ன்னு ஒருத்தன் ஆரூடம் சொல்லியிருந்தான். இருக்கலாம். ஆனா அதை நான் தான் முழுமையா (மிஸ்)யூஸ் பண்ணின்டேன். 🙂

ஆனா RSV அன்னிக்கி ஒருநாள் ஆர்வமா உங்களைப் பத்தி சொன்னதோட சரி. அப்றமெல்லாம் உங்களைப் பத்தி நாங்க பேசறதை வகுப்புல அனுமதிக்கவே இல்லை. அப்றம் கொஞ்சம் பொறுக்காம நீதான் எல்லாரையும் கெடுக்கறன்னு என்னை குறிப்பிட்டு சொல்லிகிட்டே இருந்தாரு. நமக்கு அதெல்லாம் ஒன்னும் உரைக்காதுன்னு வைங்க.

ஒருநாள் ____ குனிஞ்சு மெதுவா என் காதுல கிசுகிசுப்பா, இப்பல்லாம் உங்க பொழுதுபோக்கு வாக்மேன்ல பாட்டு கேட்கறதுதான்னு சொன்னா. “ஐயய்யோ காது சீக்கிரம் செவிடாயிடுமே!”ன்னு கொஞ்சம்- கொஞ்சம்னா பக்கத்துல எல்லாருக்கும் காது செவிடாகிற மாதிரி– சத்தமா என்னை மறந்து கத்திட்டேன். RSV சடக்னு சாக்பீஸை தூக்கி எறிஞ்சுட்டு கீழ விடுவிடுன்னு கோபிச்சுகிட்டுப் போயிட்டாரு. இதென்ன ஸ்கூலா, நாம போய் மன்னிப்பெல்லாம் கேட்டு திரும்பக் கூட்டி வர. நான் நல்லதாப் போச்சுன்னு தொடர்ந்து உங்க பேட்டியோட முழு விபரமும் கேட்டு தெரிஞ்சுகிட்டேன். (இப்ப இத்தனை வருஷம் கழிச்சு உங்களுக்கு உடம்புசரியில்லாம இருந்தபோது தேசிகன் உங்களைப் பார்த்துட்டு உடனே போன்செஞ்சு, “சார் ரொம்ப bore அடிக்குதுன்னு சொல்றாரு. வாக்மென்ல பாட்டு கேட்கறதுதான் ஒரே பொழுதுபோக்கு. அதுவும் என்னவோ சரியில்லயாம். காட்லெஸ் ஹெட்போன் கேக்கறாரு. சென்னைலயே கடைல தேடணும்”னு சொன்னபோது நெகிழ்ந்துட்டேன். நான் பயந்தமாதிரி உங்க காதுக்கு ஒன்னும் ஆகியிருக்கலை.)

எந்த ரியாக்ஷனும் எங்ககிட்ட இல்லாததாலே, RSV தானே மேல வந்து தூக்கி எறிஞ்ச சாக்பீசை கண்ல ஒத்திகிட்டாரு (பாவம்! ஆனா என்மேல என்ன தப்பு?). “நீ நாளைலேருந்து _______யோட டயத்துக்கு ட்யூஷன் வா. அவ தமிழ் மீடியம். ரெண்டு பேருக்கும் சேர்ந்து சொல்லிக் கொடுக்கறது எனக்கு கஷ்டம். ஆனாலும் அவ்ளோ கஷ்டமில்லைன்னு சொல்லிட்டாரு. ஒருவேளை இனிமே அப்படி எல்லாம் செய்யமாட்டேன், இங்கயே இருக்கேன்னு சொல்வேன்னு நினைச்சிருப்பாரோ என்னவோ. நான் நடக்றது நடக்கட்டும். நாம கெட்டதோட சந்திரபுஷ்கரணியையும் சேர்த்துக் கெடுத்துடலாம்னு தயாராயிட்டேன். அதெல்லாம் சரியா வராது. ரொம்ப அறுக்கும். வேற ஏதாவது யோசிக்கலாம்னு மத்த ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க.

மறுநாள் அந்தப் பொண்ணை பேர் என்னன்னு (சும்மா. அதெல்லாம் தெரியாமலா இருக்கோம்.) கேட்டேன். வாத்யாரே பதில் சொன்னாரு. “அவ அதிகம் பேச மாட்டா”ன்னு உபரி வாக்கியம் வேற. கடுப்பாயிட்டேன். “சரி, பேசவேண்டாம் ஒரு பாட்டு பாடேன்”ன்னு சொன்னேன். “எனக்கு கர்நாடிக் தான் தெரியும். உங்களுக்கு(?!) அதெல்லாம் புரியாது”ன்னு அந்தப் பொண்ணு சொன்னதை நான் மன்னிச்சுட்டேன். ஆனா மூணே நாள்ல அந்தப் பொண்ணு என் நண்பன் ஒருத்தனை யாருக்கும் தெரியாம கல்யாணம் செஞ்சுகிட்டு ட்யூஷனையே நிறுத்தினதைத்தான் அவரால மன்னிக்கவே முடியலை பாவம்!  :)))))

அப்றம் என்ன, நான் என் ஜோதில கலந்து, வழக்கம்போல கலக்க ஆரம்பிச்சுட்டேன். RSV திட்டாட்டாலும் அப்பப்ப பாராளுமன்ற ஸ்பீக்கர் மாதிரி அமைதி காக்க வேண்டிகிட்டே இருப்பாரு. நாங்களும் உறுப்பினர் மாதிரி வெளிநடப்பெல்லாம் செய்யாம ரணகளப் படுத்திகிட்டிருந்தோம். எல்லா வாத்யார்களையும் போலவே, “போன செட் கொஞ்சம் பேசுவாங்களே தவிர ரொம்ப ஸ்மார்ட். படிப்புன்னு வந்தா அசத்திடுவாங்க”ன்னு அடுத்து வந்த செட்கிட்ட புகழ்ந்துகிட்டிருந்தாராம். காரணம், அவர் நிஜமாவே அருமையா மேத்ஸ் சொல்லித் தருவாருங்கறதுதான். RSV வீட்டு மாடிரூம் சுவர்களும், கீழ அடையவளஞ்சான் மதில் சுவர், ஹெட்போஸ்ட் ஆபிஸ் பக்கம் எல்லாம் இன்னும் கூட உங்க கதைகளையோ உங்களைப் பத்தியோ என் குரலை எதிரொலிக்கலாம். இத்தனை வருஷம் கழிச்சும் அங்க போகும்போது ரொம்ப சின்ன பொண்ணா ரொம்ப உற்சாகமா ஆயிடறேன்.

=====

எப்படி இருந்தாலும் நான் குழந்தையா இருந்தபோது ‘நாராயணன்’ங்கற பேர் எப்படி எங்கவீட்டுல எல்லாருக்கும் அலர்ஜியோ அப்படி பதின்ம வயசுக்கு மேல ‘சுஜாதா’ங்கற பேர் அலர்ஜியாயிடுச்சு. 🙂 ஸ்கூல், காலேஜ் கட் அடிச்சுட்டு சினிமா எல்லாம் ஓக்கே, கதைபுக் படிக்கக் கூடாதுங்கறது என்ன லாஜிக்னு எனக்கு இன்னும் புரியலை. அதை விட நாமதான் ஸ்கூல் போயிடறோம். அப்பக் கூட கடமையா அம்மா ஏன் அக்கம்பக்கம் கூட புக்ஸ் வாங்கிப் படிக்கறதில்லைங்கறது என் ஆச்சரியமாவும், நாம வீட்டுலயே புக்ஸ் வாங்கலை. ஆனா இவ எங்க எப்படி படிக்கறாங்கறது அம்மாவோட ஆச்சரியமாவும் தொடர்ந்து இருந்துகிட்டே இருந்தது. முடிஞ்சவரைக்கும் அடக்கியே வாசிப்பேன். ஆனாலும் அதை இத்தனை வருஷம்கழிச்சு கிளறிட்டேன். 😦

2005 ஜூன்ல ஸ்ரீரங்கத்துலேருந்து இரண்டு நாள்ல மும்பை கிளம்பணும். எல்லாம் தயார். கண்ணுல லேசர் சிகிச்சை; அதனால இடைல ரெண்டுநாள் மட்டும் கொஞ்சம் ஓய்வு. மதியம் 3 மணிக்கு கரண்ட் போயிடுச்சு. கரண்ட் போனா ஊர் ஏன் இப்படி ஒரு அமைதியாகுது தெரியலை. அப்பா அடுத்த ரூம்ல ஏதோ பீரோவை குடைஞ்சுகிட்டிருந்தாரு. அம்மா கூடத்துல தரைல உட்கார்ந்து அரிவாள்மணைல பீன்ஸ் நிதானமா காம்பு, நார் நீக்கி திருத்தறா. எதுவும் செய்யத் தோணாம அம்மா மடில போய் படுத்துக்கறேன்.

“போய் தலைகாணியை வெச்சுப் படு. திருத்தற இடத்துல..”

“போம்மா”

“கண்ல என் கை பட்டுடப் போறதுடா. தள்ளிப் படேன்.”

“போம்மா”

உலகத்துலயே எந்த ஈகோவும் பார்க்காத அனுமதி தேவை இல்லாத ஒரே இடம் எந்தக் காலத்துலயும் அப்பா அம்மா மடிதான்.

“கண் ஆபரேஷன் ஆனதால இன்னிக்கு வெளில போக முடியலையாக்கும். இல்லைன்னா அப்பாவும் பொண்ணும் வெயில் வீணாப் போறதேன்னு திரிலோக சஞ்சாரம் கிளம்பியிருப்பீங்க”

“ஆபரேஷன்னு சொல்லி கேவலப்படுத்தாத. சின்ன சிகிச்சை. நான் என்ன பாட்டிமாதிரி கண்ல பச்சைத் திரை கட்டிகிட்டா உட்கார்ந்திருக்கேன்?”

“வேண பணத்தை கொட்டி அழுதிருக்கு. அப்றம் என்ன சின்ன சிகிச்சை?”

“போம்மா”

“போம்மா போம்மான்னுண்டிரு. கண் ஒன்னுதான் அழகா இருந்தது. அதையும் கெடுத்துண்டாச்சு. உன் வயசுல எல்லாம் நான் எப்படி இருந்தேன்!”

“என்னோட எல்லா வயசுலயும் நீ இதையேதான் சொல்லிகிட்டிருக்க. சும்மா விடாத. நீங்களெல்லாம் சின்ன வயசுலயே எப்படி இருந்தீங்கன்னு சார் சொல்லிட்டாரு”

“சாரா? யாரு அது?”

இதுதான் எனக்குப் பிரச்சினை. உங்களை சுஜாதான்னு பெண்பேர்ல கூப்பிடப் பொருந்தலை. ரெங்கராஜன்கற பேர் ரொம்ப அந்நியமா இருக்கு. சார்னு சொன்னா அது நீங்க மட்டும்தான். மற்ற ஆண்கள் யாரையும் நான் அப்படி கூப்பிடறதில்லை. நான் பேர் சொல்லி அவங்களைக் கூப்பிடறதை செரிக்கமுடியாத ஆண்களைக் கூட அவங்க பேரோட சார், அல்லது எக்ஸ்க்யூஸ்மீ இப்படியே ஒப்பேத்திகிட்டிருக்கேன். என்னைத் தெரிஞ்சவங்களுக்கு நான் சார்னு சொன்னா அது நீங்கதான்னு புரியும். அப்படிப் புரிஞ்சுக்காதவங்களைப் பாத்தா கோபமா வருது. அம்மாவோட இன்னொசன்ஸ்(அல்லது இக்னரன்ஸ்) எப்பவும் போல மன்னிச்சுட வேண்டியதுதான்.

“எங்கவீதி (கீழச்சித்திரை வீதி) பொண்ணுங்க எல்லாம் அவ்ளோ சிலாக்கியமா இருக்காது. ப்ரோட்டீன் சத்து குறைஞ்ச பொண்ணுங்க”ன்னு எழுதியிருக்காரு.

“ஏய், அவர் யாரைச் சொன்னாரோ, அந்தாள் காலத்துல நம்பாளு வயசுக்கே வரலை”– அடுத்த ரூம்லேருந்து அப்பா.

அப்பா எங்க பேச்சை கேட்டுகிட்டிருக்காரு. அதைவிட அதிர்ச்சி. நீங்க என் அம்மா அப்பாவை விட வயசுல பெரியவரு. இது எனக்குத் தெரிஞ்சதுதான்னாலும் என் மனசுல பதிஞ்சதே இல்லை. இதை எப்படிச் சொல்றதுன்னு தெரியலை. அதெப்படி வயசு தெரியும் ஆனா தெரியாதுன்னு சொல்ற. உளறாதன்னு எல்லாரும் சொல்றாங்க. எனக்குத் தெரியலை. நிறைய சந்தர்ப்பங்கள்ல உங்க வயசை யாராவது சுட்டும்போது அல்லது நிகழ்வுகள் குறிக்கும்போது எனக்கு இன்னும் அதிர்ச்சியாவேதான் இருக்கு. ஃபோன்ல நீங்க என்கிட்ட பேசும்போது உங்க‌குர‌ல் அதைவிட‌ மோச‌மா குழ‌ந்தையோட‌ உற்சாக‌த்தோட‌ இருந்த‌து.

[அம்பலம் சாட்ல ஒருதடவை ஹரியண்ணாவுக்கு ‘நாட்கள்’ குறிச்சு நீங்க சொல்லிகிட்டிருந்தபோது அப்படித்தான்– நாங்க எல்லாம் மரியாதைகொடுக்கற ஹரியண்ணாவே ஏன் உங்ககிட்ட இப்படி ஏதோ பெரியவர்கிட்ட பேசறமாதிரி மரியாதையா பேசறாருன்னு அதிர்ச்சியா இருந்தது. 🙂 இதுமாதிரி பல சந்தர்ப்பங்கள். எனக்கெல்லாம் உங்களோட தடால் தடால்னு சண்டைபோட்டு எதிர்த்துப் பேசி கலாய்ச்சே பழகிடுச்சு.]

அம்மாவுக்கு இன்னும் யாருன்னு தெரியலை. ஆனா கோபமாயிட்டா. தான் சின்ன வயசுல ரொம்ப ரொம்ப அழகா இருந்ததா இன்னும் ஊர்ல சொல்ற காலத்துல இந்த கமெண்ட்.. “யார் சொன்னது?”

“எழுத்தாளர் சுஜாதா! :)”

“திமிருதான்!”

“என்ன திமிரு? :)) எப்பவுமே சட்டை மேல் பட்டனுக்கு ஊக்குதான் போடுவீங்களாமே வீதில. போடுவீங்களா இல்லையா? :))”

அம்மா அதுக்கு உடனே ஒன்னும் சொல்லலை. அம்மாவுக்கு கவிஞர் வாலி பத்தி கொஞ்சம் குறையுண்டு. கோமளத்து மாமியாத்து வாச திண்டுல உட்கார்ந்துண்டு, வெத்தலையும் புகையுலையும் போட்டு, துப்பிண்டு… சே ஒரு பொண்ணும் அந்தப் பக்கம் போகவர முடியாது. ஆனா பாவம், உன்னை விட்டா ஆளே இல்லைன்னு தட்டிவிட்டே சின்ன வயசுல ‘ரேடியோ மாமா’ நிகழ்ச்சி நாடகத்துலேருந்து ஹைஸ்கூல் நாடகம் வரைக்கும் ஸ்கிரிப்ட் எல்லாம் எழுதி வாங்கி நான் பேர் வாங்கிட்டேன்’னு கொஞ்சம் நன்றியுணர்வோட சொல்வா. ஆனா சுஜாதாங்கர பேர்ல எந்தக் கருத்தும் இல்லாம இருந்திருக்கா போல. நானாத்தான் நாறிட்டேன். 🙂

திடீர்னு அஞ்சு நிமிஷ அமைதிக்கப்புறம் அம்மா, “அந்தாள் தன் மூஞ்சியை கண்ணாடில பாத்ததே இல்லையா? நட்டுவெச்ச நட்ராஜ் பென்சிலுக்கு கையும் காலும் ஒட்டவெச்ச மாதிரி இருந்துண்டு எங்களை கிண்டலாக்கும்!” [எனக்குத் தெரிஞ்சு உங்களுக்கு வந்த விமர்சனங்கள்லயே இந்தக் கோணத்து விமர்சனம்– அதுவும் தெருப் பொண்ணுகிட்டேயிருந்து இதாத்தான் இருக்கணும். சே சே பாவம் சார் நீங்க. ஏதோ என்னாலானது. :))) ]

அம்மா ரொம்ப பாதிக்கப் பட்டுட்டாங்க போலன்னு தோணிச்சு. :)) எத்தனை வயசானாலும் ஆண்களோட இந்த மாதிரி கமெண்ட் பெண்களுக்கு தாங்கறதில்லைன்னு நினைச்சுகிட்டேன்.

“அதெல்லாம் சும்மா சொல்லாத. சார் சின்ன வயசுல சூப்பரா இருப்பாரு. இப்பத்தான் டயட்ல மெலிஞ்சிருக்காரு.”

“ஆமா, நீதான் பாத்த.”

“சரி நான் பாக்கலை. நீதான் சிறப்புத் தமிழ் எடுத்துப் படிச்சவள்னு பீத்திக்கற. நீயும் புத்தகங்களுக்கு எழுதியிருக்கலாமில்ல, கீ.சி.வீதி பாய்ஸ் எல்லாம் ப்லா ப்லா அவ்ளோ சுவாரசியம் இல்லைன்னு..”

“நீ எழுதுவ அப்படி எல்லாம்”:

“நான் எழுதமாட்டேன். ஆனா சார்கிட்ட அடுத்த சாட்ல எங்கம்மா மட்டும் அதுல விதிவிலக்கு. அழகோ அழகா இருந்தாங்கன்னு சொல்லிடறேன். போதுமா?”

“அப்படியே நீ உங்கப்பா ஜாடைன்னும் சொல்லிடு”

“அதெல்லாம் பிரச்சினை இல்லை. சாட் தானே. என் மூஞ்சி தெரியாது. :)”

“வெட்டி!”

“போம்மா”

அப்புறம் பேச்சே இல்லை. ஒரு கால்மணி நேரம் கழிச்சு மெல்ல திரும்பி அம்மாவைப் பாத்தேன். கைதான் காயை திருத்திண்டிருந்தது. முகமெல்லாம் வரிவரியா நினைவுகள் ஓடற மாதிரியே ஆழ்ந்த சிந்தனை. முழுமையா கீழச்சித்திரை வீதி நாள்களுக்குப் போயிட்டாங்க. அசைக்காம விழியை மட்டும் நகர்த்தி காயைப் பாத்தேன். 4, 5 பீன்ஸ்தான் பாக்கி இருந்தது. காய் தீர்ந்ததும் திரும்ப நிஜவாழ்க்கைக்கு வந்துடுவாங்களேன்னு கவலையா இருந்தது.

=====

jaysனு என் கையெழுத்தை வெச்சு என்னைக் கூப்பிடற ப்ரெண்ட்ஸ்லேருந்து விலகி, நீங்க சுருக்கி வெச்ச jsri ங்கற பேர்தான் என் அடையாளமும் ஐடி முகவரிகளுமா மாறி 5 வருஷமாச்சு. மரத்தடி, பதிவுகள், தமிழ் இணையம்னு வாழ்க்கையே உங்க மூலமா மாறினாலும், என்னவோ இணையத்துல எல்லாருக்கும் என்னைத் தெரிஞ்சப்பறம், அம்பலம் சாட் எல்லாம் பொதுவுல வர ஆரம்பிச்சதும், பொதுவுல சாட் செய்றதுல என் அந்தரங்கம் பாதிக்கப்படறமாதிரி இருந்தது. இனிமே சாட்டுக்கு வரமாட்டேன், வருவேன் பேச மாட்டேன், இல்லைன்னா சொந்தப் பேர்ல வரமாட்டென்னு மாத்தி மாத்தி பாடாப் படுத்தி லெட்டர் போட்டாலும், “I understand”, “I guessed that much”, “I know” மாதிரி ஒருவரி பதில். ஆமா, நாம இல்லைன்னு தான் குறையுதான்னு சும்மா பாத்துகிட்டு நான் பேசாம இருந்தாலும் என் புனைப்பெயரைக் கூப்பிட்டு இழுத்துவெச்சு ரெண்டு மூணு கேள்வி, விசாரிப்பு… (‘கண்டுகொண்டேன்”னு சொல்ற மாதிரி)…  உஷா சந்திச்ச போது நான்னு நினைச்சு நீங்க பேச ஆரம்பிச்சதா சொன்னதும் மனசுக்குள்ள படபடத்த பட்டாம்பூச்சியை, தீவிர ரசிகைகள் நேர்ல சந்திக்கமாட்டாங்கன்னு சொல்லிச் சொல்லியே அடக்கிட்டேன்.

உங்க மேல நிறைய அன்பும் மரியாதையும் வெச்சிருந்தும் ஏன் எப்பவும் சண்டை போடற மாதிரியே இருந்தேன்னு தெரியலை. எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைச்சா சமத்தா இருப்பேன்னு தோணுது.

“சார், நானும் மரபுக் கவிதை எழுதக் கத்துக்கப் போறேன்”

“நீ மரபு மீறாம சரியா எழுதலாம். ஆனா அது கவிதையாங்கறதுக்கு நான் கியாரண்டி இல்லை. :)”

இதுக்கே வீம்பா கத்துக்கணும்னு தோணித்து.

“என்னவோ சொன்னீங்களே, என் வெண்பாவுக்கு மரத்தடில பரிசு கிடைச்சிருக்கு”

“என்ன பரிசு?”

“நமக்குத்தான் எப்பவும் இரண்டாம் பரிசே பிடிக்காதே”

“முதல் பரிசா. வாழ்த்துகள்”

“இல்லை. :(( அதை “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” ரேஞ்சுல கடைசில யாரோ ஒரு புலவர் வந்து எழுதி வாங்கிட்டு போயிட்டாரு”

“??”

“மூணாவது பரிசு”

“ஹா ஹா”

“பரவாயில்லை”

“btw jsri, regarding your venbas they were quite competent but not brilliant.”

“பரவாயில்லை”

“perhaps the last line was restrictive”

“பரவாயில்லை”

“I am looking for Venbas with innovative mix of modern words and topics”

“தேவையில்லை. எனக்கு மரபு சொல்லிக் கொடுத்த கனடா பசுபதிங்கறவரே நல்லாருக்கு. எனக்கு நம்பிக்கையா இருக்குன்னு சொல்லிட்டார். அது போதும்.”

” 🙂 ”

(என் ஈகோவை இட‌றிவிட்ட‌ ஸ்மைலி)

“உங்களைக் கூடத்தான் எல்லாரும் மரபுக்கு விரோதின்னு சொல்றாங்க”

“யார் சொல்கிறார்கள்?”

“எல்லாப் பெரியவங்களும்தான்”

“யார் பெரியவர்கள்?”

“(ஙே.. நீங்கதான் எல்லாரையும் விட பெரியவரா?) ஐ மீன் இணையத்துல என்னை விடப் பெரியவங்க… மரபுல எல்லாம் எழுதி முடிச்சாச்சுன்னெல்லாம் ஸ்டேட்மெண்ட் விட்டீங்களாமே”

“அவர்களை பசித்த புலி தின்னட்டும். நான் பதினான்கு வயதிலிருந்தே ‘மரபுநேசன்’ என்கிற பெயரில் மரபுக் கவிதைகள் எழுதிவருகிறேன்.” (அதெல்லாம் பேசும்போது நல்லா பேசுங்க. ஸ்டேட்மெண்ட் விடும்போது கோட்டை விட்டுடுங்க.)

அநேக நேரங்கள்ல பதில் சொல்றதும், உங்க தனிப்பட்ட செய்கையும் வேறயாவே இருக்கு. என்னாலயே இன்னும் முழுமையா புரிஞ்சுக்க முடியலை. நாய் மட்டும் ஏன் நன்றியுள்ளதா இருக்குன்னு கேட்டா, “அதைத் தனியாக் கூப்பிட்டுக் கேட்டா எல்லாம் ஒரு சர்வைவலுக்குத்தான்னு சொல்லும்”னு அலட்சியமா/நகைச்சுவையா பதில் சொல்றீங்க. 2003ல சுதந்திர தினத்தன்னிக்கு என்ன செஞ்சுகிட்டிருந்தீங்கன்னு(ரொம்ப முக்கியம்) மறுநாள் உங்க ரசிகர் ஒருத்தர் கேக்கறாரு, “நேத்தி என் வளர்ப்பு நாய்க்கு இறுதிநாள். முழுநாளும் அதுகூடவே ரெண்டுபேரும் இருந்தோம். வேற எதுவும் ஓடலை. ரொம்ப துக்கமா இருக்கு”ன்னு ஃபீலிங்ஸ் விடறீங்க.

ப‌த்ரி ப‌திவுக‌ளை ப‌டிக்க‌ச் சொல்லி எனக்கு அறிமுகம் செஞ்சீங்க. அதெல்லாம் ஒன்னும் புரியவே இல்லை. தமிழே இல்லை, உவ்வேக். எனக்கு ஒன்னுமே புரிலயலை. இன்னும் எத்தனை பேர் இப்படி கிளம்பியிருக்காய்ங்களோ”ன்னு நான் சொன்னதை மறுத்து, “அசடு, அது உலக இணையத் தமிழ் மாநாடு பதிவுகள். ரெகுலர் படி”ன்னு நிறைய சிபாரிசு செஞ்சீங்க. என்னை உருப்படியா ஒரு 15, 20 பதிவுகளை சுட்டி எடுத்து அனுப்பச் சொன்னீங்க. ஆனா பொதுவுல பதிவுகளைப் பத்தி வேற கமெண்ட் வெச்சீங்க. அதுலயும் அப்ப எனக்கு பெரிய மாற்றுக்கருத்து இல்லைன்னு வைங்க.

விஷ்ணுபுரம் 14 பக்கம் தாண்டலைன்னு சொல்லிகிட்டிருந்தீங்க. அப்ப 15 பக்கம் தாண்டினா நான் உங்களைவிடப் பெரியாளான்னு கேட்டதுக்கு ‘நிச்சயமா’ன்னு சொன்னீங்க. ஆனா படிச்சுட்டு, ஜெயமோகன்கிட்ட தனிப்பட்ட முறைல அந்த நாவலுக்கான உங்க மறுப்பை சத்தமில்லாம ஆனா அழுத்தமா சொல்லியிருக்கீங்க. கிரேட். இவ்ளோ பிரபந்தங்கள் மேல ஈடுபாட்டோட இருக்கறவரு எப்படி கனிமொழி, கமலஹாசன்னு நட்பா இருக்காருன்னு எல்லாரும் கேக்கறாங்க. (கனிமொழி, ‘திருப்பாவையை எரிச்சுடுவாங்களா?’ன்னு காஃபி வித் அனு’ல கேக்கறாங்க) அதுக்கும் இதுக்கும் குழம்பத் தேவை இல்லைன்னாலும் உங்க மறுப்பை தேவையான இடங்கள்ல, மத்தவங்ககிட்டயும் சொல்லாம இருந்திருக்க மாட்டீங்கன்னு இப்ப நம்பறேன். வேணா, எல்லாருக்கும் ஜெயமோகன் மாதிரி அதை பொதுவுல ஒத்துக்கற நேர்மை இல்லாம இருக்கலாம். இன்னும் வாழ்நாள் முழுக்க தெரிஞ்சுக்க உங்க ஆளுமைல பாக்கி இருக்குன்னு தான் தோணுது. நல்லவேளையா அதையெல்லாம் பகிர்ந்துக்கவும் எப்பவும் எனக்கு ஆள் இருக்கு.

=====

கல்யாணத்துக்கப்புறம் படிக்க புக்ஸ் இருந்தது; கட்டுபாடு இல்லை; ஆனாலும் ஏதோ குறை. அது என்னன்னா அதைப் பேசி பகிர்ந்துக்க ஆள் இல்லாதது. பக்கத்துவீட்டுல ஜேஎஸ்ராகவன் இருந்தாரு. உங்களைப் பாத்தேன், பேசினேன்னெல்லாம் சொல்வாரே தவிர ஒன்னும் சுவாரசியம் இல்லை. பெரிய பீத்தல்னு விட்டுடுவேன். வாழ்க்கையே மாறிப்போச்சுன்னு நினைச்சுகிட்டிருக்கும்போது தான் அந்தப் புதையல் கிடைச்சது. மதியம் இரண்டு மணிக்கு போஸ்ட் பாத்துட்டு குட்டிப் பாப்பாவைக் கொஞ்சிண்டே இரண்டாவது மாடி ஏறும்போது அந்தப் பொண்ணு விடுவிடுன்னு இறங்கிண்டிருந்தா. வேலைக்குப் போற அவசரம், ஹேண்ட்பேக், கைல கர்ச்சீப், அதோட அந்தப் புக்– ‘பதவிக்காக’. மனசுக்கு முன்னால மூளை சட்டுனு முழுச்சுண்டுடுத்து. பதவிக்காக ஹீரோ என்னோட நிஜ ஹீரோவாச்சே.

“இந்தப் புடைவை ரொம்ப நல்லா இருக்கு. அதைவிட நீங்க கட்டிகிட்டிருக்கறது”

சடேர்னு நின்னா. “அப்படியா, எனக்கு இது அவ்ளவா பிடிக்காது.” (அப்பாடீ, எனக்கும்தான் பிடிக்கலை. ஒரே டேஸ்ட்.)

அது என்ன புக்? ஓ பதவிக்காகவா. யார் எழுதினது? நான் இன்னும் (பதினஞ்சாவது தடவை) படிக்கலை. படிக்கலாமா?

“ம். லைப்ரரி புக்தான். சுஜாதாவோடது (அதுசரி, எனக்கேவா?)” உடனே கைல கொடுத்தா. ‘பரவாயில்லை, உனக்கும் டேஸ்ட் இருக்கு’ மாதிரி ஒரு பார்வை. இறங்கிப் போயிட்டா.

அடுத்த தடவைலயே, “அதென்ன அப்படி கேவலமான டிசைன்ல ஒரு புடைவை. வெள்ளைப் புடைவைல பெரிய பெரிய கிளி. இதெல்லாம் எப்படி வாங்கணும்னு தோணும்?” அப்படீன்னு நான் பொட்டுனு கேட்க, இரண்டு பேரும் இணைஞ்சு சிரிச்ச சிரிப்புல பிசிறே இல்லை.

கல்யாணம் ஆனாலே எந்தப் பொண்ணும் வீட்டுக்காரர் வேலை, பிரமோஷன், குழந்தைவளர்ப்பு, ஸ்கூல், , சாக்ஸ் எப்படி வாஷ் பண்றது, அசைன்மெண்ட், யூனிஃபார்ம், பெடிக்யூர்னு மட்டும் பேசி, கேள்விகேட்டு, திரும்பத் திரும்ப என்னை வீட்டுக்குள்ளயே இருக்கற உணர்வைத் தர பெண்களுக்குள்ள எனக்கான ஃப்ரெண்ட். எப்ப என்ன கேப்பான்னே தெரியாது. ஆனா அதெல்லாம் மேல சொன்னவைகள்ல வராது. இதே கருத்தையே என்னைப் பத்தி அவளும் சொன்னது தான் அதைவிட ஆச்சரியம்.

சென்னைல எதிர்த்த ஃப்ளாட்தான். ஆனாலும் மெனக்கெட்டு ஆபிஸ்போய் அங்கேருந்து ஃபோன் பண்ணித்தான் பேசுவா.

95ஆ, 96ஆ சரியா நினைவில்லை. பாஜக அரசு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துமேல பாராளுமன்றத்துல பேசுகிட்டிருக்கறது அப்ப லைவா டிவில. பாராளுமன்றம் எல்லாம் இப்படி பார்க்கமுடியும்னு நினைச்சுக்கூட பார்க்காத நாள்கள்ல அது எனக்கு ரொம்ப அதிசயம். ஆட்சி கவிழப் போறது. அத்வானி ஒளஒளாங்காட்டிக்குப் பேசிகிட்டிருக்காரு. ஆனாலும் பரவசமா பாத்துகிட்டிருக்கேன். திடீர்னு ஃபோன்.

“டீவி பாக்கறியா?”

“பின்ன?”

“அத்வானிக்கு பின்னால ரெண்டாவது லைன்ல யாரு? புதுசா இருக்கு”

“ஏதோ மகாஜன். ஸ்கூல் வாத்தியார். பிரம்பு வெச்சிருப்பாரு.”

“ஓ. எப்படி இந்தக் கோஷ்டிகளைத் தெரிஞ்சுவெச்சிருக்க?”

“புதுசு இல்லை. கொஞ்சநாள் முன்னால டெபோனர்ல அண்ணன் பேட்டி வந்திருந்தது”

“டெபோனருக்கும் பாஜக மகாஜன் அண்ணனுக்கும் என்ன சம்பந்தம்?” (மற்ற பெண்களா இருந்திருந்தா, நான் அதைப் படிக்கறேன்னு கூட சொல்லிக்க முடியாது.)

“மரத்தைப் பத்தி எல்லாம் சொல்லி முடிச்சுட்டு, ‘அப்படியாப்பட்ட மரத்துல மாட்டைக் கட்டலாம்’னு சொல்ல முடியாதா? அப்படித்தான். சினிமா எல்லாம் குடும்பத்தோட நடுக் கூடத்துல உட்கார்ந்து நெளியாம பாக்கற மாதிரி இருக்கணும்னு திருவாய் மல‌ர்ந்திருக்காரு.”

“எங்க? டெபோனர்லயா?”

“யா யா”

“அதுசரி!”

:)))))))))

நாங்க வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த முறையைப் பொருத்த வரைக்கும் எந்தப் புள்ளிலயுமே சேரமுடியாது. இவ்வளவு முரண்களோடயும் ஆனா எப்பவும் யாரைப் பத்தியும் எதைப் பத்தியும் பேசக்கூடிய ஒரு ஃப்ரெண்டு கிடைச்சது, எங்க ரெண்டுபேரையும் தனித்தனியா பிரிச்சுகூட வேற யாரும் யோசிக்கமுடியாத அளவுக்கு எங்களுக்கு நடுவுல இருந்த/ இருக்கற/ இருக்கப் போகிற ஒரே கயிறு நீங்கமட்டும்தான்.
“நேத்தி நான் எடுத்து வந்த புக் படிச்சுகிட்டிருக்கியா?”

“ம். 58ம் பக்கம்?”

“என்ன சொல்லியிருக்கான்?[கான் – உங்களைத்தான். பின்ன? :)].

….
….

“என்ன நடை இல்லை? எவ்ளோ அறுவையான மேட்டர் எல்லாம்கூட இவ்ளோ அழகா சொல்ல வருது. சரியான பொறுக்கி.” 🙂 (பொறுக்கி – பொர்க்கி மாதிரி ஒலிக்கணும். சார்-க்கு எப்படி அதோட அர்த்தம் போச்சோ அதுமாதிரி பொறுக்கிக்கு அர்த்தமும் அழகுமே மாறிப் போச்சு.) “இந்தாளு வரலைன்னா நாம ________, ______ களையெல்லாம் படிச்சுகிட்டிருக்கணும். எவ்ளோ கொடுமையா இருந்திருக்கும்?”

:)))))))

அநேகமா எங்க பேச்சு எங்க ஆரம்பிச்சாலும் உங்ககிட்ட வந்து முடிஞ்சுடும் அல்லது அதோட நின்னுடும். அதைவிட பேச ஒன்னும் உலகத்துல ஸ்பெஷலா விஷயமே இல்லாத மாதிரி.

உங்க உடல்நிலை மோசமானதும் இப்ப இணையத்துல இருக்கற யாரையும் விட என் ட்யூஷன் ப்ரெண்ட்ஸோ அல்லது இவளோ பக்கத்துல இருந்தா எப்படி இருக்கும்னுதான் நினைச்சுகிட்டிருந்தேன். காலைலேருந்தே அழுதுகிட்டிருந்தாலும் இரவு செய்திகேட்டதும், ‘இந்த தேசிகனுக்கு ஏதாவது உளறிகிட்டே இருக்கணும். அப்படி எல்லாம் எதுவும் நடக்கவே முடியாது. ஏதாவது மிராகிள் நடக்கும்’னு நம்பினேன். முதல் SMS இந்த ப்ரெண்ட்கிட்டேயிருந்து– “i could hear you weeping dear. enough of it please. on duty. ‘ll talk to you after 12 midnight”

ஆனா நினைச்ச மாதிரி அது ஆறுதலா இல்லை. ஐயய்யோ இது உலகத்துகே இப்ப தெரிஞ்சுபோச்சு. இனிமே எதுவும் மாத்த முடியாது. எல்லாரும் அஞ்சலின்னு பதிவு போடுவாங்களேன்னு பதறிட்டேன். யாரோடயும் பேசப் பிடிக்கலை. முக்கியமா இணையத்துல. பெருசா எதுலயோ தோத்துப் போன மாதிரி. ரூம்ல போய் கதவை சாத்திகிட்டேன். இணைய‌மும் ந‌ண்ப‌ர்க‌ளும் ரொம்ப அந்நியமா தெரிஞ்சாங்க. ஆனா ஆச்சரியமா எங்கப்பா, அம்மா தொலைப்பேசி சொன்ன ஆறுதலும், கோவிந்த் தனக்கு ஃபீவர்னு சொல்லி லீவ் எடுத்து கவனிச்சுகிட்டதும் நான் கொஞ்சம்கூட எதிர்பாராத‌ ஆனா தேவையான ஆறுதலா இருந்தது.

“நம்ப முடியுதா பாரு. அந்தாளுக்கு எனக்குத் தெரிஞ்சு 35 வயசு ஆச்சு. அப்றம் வருஷா வருஷம் அதே தானே வயசாச்சு. எப்படி திடீர்னு 73 ஆகும்?”

எங்க ரெண்டுபேரையும் எல்லாரும் ‘two hearts that beat as one’ன்னு சொல்வாங்க. அதை அன்னிக்கிதான் அவ்ளோ நிச்சயமா உணர்ந்தேன். எனக்கும் தெரியலைன்னு கதறமட்டும் தான் முடிஞ்சது. நீங்களாவது சொல்லியிருக்கலாமில்ல. அழுது அழுது கண் வீங்கி, டாக்டர்கிட்ட காண்பிச்சு, ஜுரம் வந்து அடுத்த இரண்டுநாள் நினைவில்லாம போனது ரொம்ப நல்லாதாப் போச்சு. நடப்பு எதுவும் என் கவனத்துக்கு வரலை.
 

தாயோடு
அறுசுவை போகும்;
தந்தையோடு
கல்வி போகும்
குழந்தையோடு
பெற்ற செல்வப் பெருமை போகும்;
செல்வாக்கு
உற்றாரோடு போகும்;
உடன்பிறந்தாரோடு
தோள் வலிமை போகும்;
……
……
எல்லாம் இருக்க,
போடா (பொர்க்கி)
உன்னோடு இளமை போச்!

எனக்கு உங்களைமாதிரி வாக்மேன்ல பாட்டுக் கேட்கறேன்னு காதுக்குள்ள பாட்டை நேரடியா ஊத்தறதெல்லாம் பிடிக்காது. இசை என்னைச் சுத்தியிருக்கற காத்துல கலந்து, குழைஞ்சு அதுவா என் காதுகளையும் தொட்டுப் போகணும். நிறைய பாட்டு உங்களுக்குப் பிடிச்சவைகளை அப்பப்ப நீங்க சொல்லியிருந்தாலும், இப்ப கொஞ்சம் மட்டும்….

* நித்யஸ்ரீ மகாதேவனோட வீச்சான சாரீரம் இந்தப் பாட்டுக்கு அழகைச் சேர்த்திருக்கலாம். ஆனா அந்தச் சாரீரமும் கர்நாடக இசையுமே இறுதில திரும்பச் திரும்பச் சொல்லும் பல்லவியோட சங்கதியில அவ்ளோ மென்மையா கேட்கவேண்டிய கேள்வியோட பாவத்தை நீர்த்துப்போகச் செஞ்சுடுதோன்னு எனக்கு ஒரு எண்ணம்.

* டிஜிடலில் செதுக்கிய குரல்னு உண்மையிலேயே சொல்லலாம். காதல்ல்ல்ல்…. னு பாடும்போது போத்தலிலிருந்து ஒயினை கோப்பைகள்ல நிரப்பற ஒலி மாதிரி….. உங்களாலதான் இப்படி எல்லாம் யோசிக்கமுடியும்.

* சாத்திரம் மீறிய கீர்த்தனம்… 🙂

* உங்களுக்குப் பிடிச்சதுங்கற காரணத்தைவிட இந்தப் பாட்டுக்கு இன்னொரு பெருமை— நீங்க கடைசி வரை காதலிச்சு கைவிடாம வெச்சிருந்த மிஸ் தமிழ்த்தாய்க்கு இந்தப் பாட்டால அங்கீகாரமும் பெருமையும் கிடைச்சது. இந்தப் படத்தோட இந்திப் பதிப்புக்கு பாடல் எழுத ஆரம்பிச்ச கவிஞர், தமிழ்ல பல்லவியோட முதல் வரி அர்த்தம் மட்டும் கேட்டே, “தமிழ் மொழியில் இவ்வளவு ஆளுமையும் சாத்தியமும் இருக்கா?”ன்னு ஆச்சரியப்பட்டு பாராட்டினாராம். ஆனா இப்ப எனக்குக் கேக்கும்போதெல்லாம் மனம் அதிருது.

இன்னிக்கி பிறந்தநாள்னு உங்களுக்குப் பிடிச்ச இந்தப் பாட்டெல்லாம் காத்துல ஓடவிட்டுகிட்டு நான் ஸ்ரீரங்கத்துலதான் இருப்பேன். எனக்குத் தெரியும் நீங்க இனிமே எப்பவுமே ஸ்ரீரங்கத்துல தான் இருப்பீங்க. உங்களுக்கும் இதெல்லாம் கேக்குமா?

பி.கு: 🙂

1. ‘சுஜாதா என்றதும் உங்களுக்கு நினைவில் வருவது?’ன்னு தமிழோவியத்துக்காக bsubra ஒரு கடிதத்துல கேட்டிருந்தாரு. ஏதாவது ஒன்னு ரெண்டா இருந்தா சொல்லலாம். இருந்தாலும் அந்த ஒத்தை வார்த்தை இந்தப் பதிவுல இருக்குன்னே நினைக்கிறேன்.

2. சாருநிவேதிதா, உங்களை மாதிரி எழுத்தாளரைப் பத்தி எழுதும்போது உங்க எழுத்துலேருந்து எதையெல்லாம் எடுத்துகிட்டோம், கத்துகிட்டோம்னு தான் எழுதணும்னு சொல்றாரு. அப்டியாங் சார்? நீங்களும் எவ்வளவோ முயற்சி செஞ்சு கதைக்கு knot, டிரிக் எல்லாம் சொல்லி என்னை எழுது எழுதுன்னு சொன்னீங்க. நான் எழுதினேனா? நான் என்ன எழுத்தாளரா? இல்லை எல்லாரும் வாத்தியார்னு கூப்பிடற மாதிரி உங்க மாணவியா? ஒரு ரசிகையா எனக்குத் தோன்றதைத்தானே சொல்லமுடியும். நீங்க இருந்து உங்ககிட்ட சாருவைப் போட்டுக் கொடுத்தா, “அதெல்லாம் தேவை இல்லை. நீ பாட்டுக்கு நினைக்கறதை எழுது அவரை அப்றம் அடிச்சுடலாம்!”னு சொல்வீங்க இல்ல, இப்பவும் அப்படி சொல்லுங்க. 🙂

3. என்னவோ எல்லாரும் நினைச்சதை எல்லாம் வார்த்தைல கொண்டுவர முடிஞ்சா எவ்ளோ நல்லா இருக்கும்னு சொல்றாங்க. நான் நினைவுகள் எல்லாம் வார்த்தைகள்ல வந்துடக் கூடாதேன்னு ரொம்ப வடிகட்டி வடிகட்டி எழுதியிருக்கேன். அதே தலைப்பு.

அன்னிக்கு ரங்கமணி ஆபீசுக்கு ‘சும்மா’ லீவ். இந்த மாதிரி சந்தர்ப்பம் எல்லாம் எனக்கு அத்திப் பூத்த மாதிரி எப்பவோ கிடைக்கற வாய்ப்பு. விடலாமா? நேத்தி, நாம நாளைக்கு D’Mart shopping போகலாமான்னு கேட்ட அம்மணிகிட்டயே, “நோ நோ நாளைக்கு கோவிந்த் லீவ். (தரோவ வேலை வாங்கிக்கணும்) நான் வரலைனு சொல்லி வெச்சிருந்தேன்.

“SBOA ஸ்கூல்கிட்ட Reliance Fresh திறந்து பத்து நாளாச்சு. இப்ப போய் பாத்துட்டு வந்துரலாம். சண்டேன்னா கூட்டமாயிருக்கும்.”

“சான்ஸே இல்லை. இன்னிக்கு முழுக்க நான் ரிலாக்ஸ்டா இருக்கப் போறேன். டிவி பாக்கணும். நிறைய படிக்கணும். என் பொண்ணு வந்ததும் அவளோட விளையாடணும். உனக்கு குக்கர் கேஸ்கட் போடறது, தெச்ச ஜாக்கெட் வாங்கிட்டு வர்றது, பிஞ்ச செருப்பு தெச்சு வாங்கறதுக்கெல்லாம் என் லீவை வேஸ்ட் பண்ண முடியாது.”

ஆண்களால பெண்கள் மனசைப் படிக்க முடியாதுன்னு யார் சொன்னது? 🙂

“தேவை இல்லை. தாரளமா செய்ங்க. எனக்கென்ன? ஆனா ஃப்ரிட்ஜ்ல காய் சுத்தமா இல்லை. நாளைக்கு ஆபீசுலேருந்து வரும்போது நீங்களே ராத்திரி ஒம்போது மணிக்கு மேல ஒரு வாரத்துக்கான காய் வாங்கிட்டு வாங்க.”

Reliance Fresh 1

வெச்ச குறி தப்பலை. காய்கறிங்கற வார்த்தை எப்படி ஆளை அசைக்கும்னு தான் இவ்ளோ வருஷமா பாத்துகிட்டிருக்கேனே. இந்தியாவின் கடைக்கோடிக்கே ஊர் சுத்தப் போனாலும் புஸ்தகங்களுக்கு அடுத்தபடியா அல்லது அதுக்குச் சரியா ஃப்ரெஷ் காய்கறிகளைப் பார்த்தா பரபரக்கும் ஜீவன்; எப்படியெல்லாம் பார்த்து பார்த்து வாங்கணும்னு பழக்கியிருக்கும் மாமியார்(வாழ்க!); ஆன காரணங்களால இத்தனை வருஷமாகியும் எனக்கு இன்னும் காய் வாங்கத் தெரியாமலே போச்சு. (தக்காளி மட்டும் வாங்குவேன். இதைச் சொன்னால் எங்கம்மாவே என்னடீ இப்படி இருக்கன்னு அதிர்ச்சியாறா.) நம்ப அவங்களோட கூடவே போய், சும்மா பையை வெச்சுகிட்டு பராக்கு பாக்க வேண்டியதுதான். அவங்களே வாங்கி வாங்கிப் போடுவாங்க. “கொஞ்சம் நீயும் வாங்கக் கத்துக்கலாமில்ல?”ன்னு சொல்றது காதுல கேட்காத தூரத்துல வாகா நிக்க வேண்டியது.

அதைவிட முக்கியமா பெரிய பெரிய வேலை எல்லாம் சலிக்காம செய்ற எனக்கு, சில சின்னச் சின்ன வீட்டு வேலைகள் செய்யப் பிடிக்காது. அதுல முக்கியமானது வாங்கிவந்த காயைப் பிரிச்சு ஃப்ரிட்ஜ்ல வைக்கறது, ராத்திரி பழம் நறுக்கரது… தலைவர் இருக்கும்போதே வாங்கிட்டா அவரே அதை கையோட பொறுப்பா செஞ்சுடுவாரு. அதனால சண்டேனா ரெண்டுல முக்கியமான ஒன்னு காய்கறி வாங்கறதுதான். இதுல இன்னொரு வசதி. தினம் தினம் கத்திரிக்காயா, முள்ளங்கியா மாதிரி குற்றச்சாட்டே எங்க வீட்டுல எழுந்ததில்லை. ஏன்னா, வாங்கறது நான் இல்லையே. 😉 ப்ரிட்ஜ்ல இருந்தா சட்டில வரும். அவ்ளோதான் பதில்.

“காய்தானே. அதுக்கு ரிலயன்ஸ் எல்லாம் வேண்டாம். காயெல்லாம் ஏசில சுருங்கி இருக்கும். நம்ப மார்க்கெட்லயே ஃப்ரெஷ்ஷா வாங்கலாம்.” ப்ரோக்ராம்ல ட்விஸ்ட். 😦 மார்க்கெட்ல அததுக்குன்னு தனித்தனி கடைகள் வைச்சிருக்கோம். கீரை, பயறுகள், இங்லீஷ் காய்கறிகள், கிராமத்திலேருந்து வர நாட்டுக் காய்கறிகள், பழங்கள் இப்படி. ஒருவாரம் போகலைன்னாலும் வாடிக்கை மறந்ததும் ஏனோன்னு விசாரிப்பாங்க.

“இல்லை, சும்மா எட்டிப்பார்த்துட்டு மார்க்கெட்டுக்கே போயிடலாம்.”

ஒருவழியாக அடம்பிடிச்சு கிளம்பிப் (அடுத்த திருப்பம் தான்.) போனா, வாசல்ல கும்பல் கும்பலா மக்கள் நின்னுகிட்டிருந்தாங்க. கடை சரியாப் பத்து மணிக்குத் தான் திறப்பாங்களாம். இன்னும் 5 நிமிஷம் இருந்தது. என்ன மக்களோ! நான் பிசினஸ் செஞ்சா காலைல எழுந்ததும் எதுக்கும் கடையைத் திறந்துட்டுதான் பல்லையே தேய்ப்பேன். இத்தனை நேரத்தில் மார்க்கெட்ல பாதி வாங்கி முடிச்சிருக்கலாம். ரங்கமணி உச்’ கொட்ட ஆரம்பிச்சாச்சு. கொஞ்சம் தள்ளி ஒரு கும்பல் தமிழ்ல பேசறது விட்டு விட்டுக் கேட்டுது. திடீர்னு ஒரு வண்டி வந்து நிஜமாகவே ஃப்ரெஷ்ஷா காய்கறிகள் இறங்க ஆரம்பிச்சதும் பக்கத்து முகத்துல பல்பு. மீ ரிலாக்ஸ்.

கடை திறந்ததும் சொல்லி வைச்சது மாதிரி எல்லோருமே காய்கறிகள் பக்கம் தான் போனாங்க. காய்கறிகள் உண்மையிலேயே நன்னா இருந்தது. எனக்குத் தான் மார்க்கெட் மாதிரி சும்மா நிக்க முடியாம பிளாஸ்டிக் பைகளைக் கிழிச்சுக் கிழிச்சுக் (ஏதோ என்னாலான ஹெல்ப்பீஸ்) கொடுக்க வேண்டியதாகிப் போச்சு. பரவாயில்லை.

வந்திருந்தவங்கள்ல பெரும்பாலானவங்க தமிழர்களா மட்டுமே இருந்ததோட காரணம் எனக்குப் புரியலை. அலுவலக நாளா இருந்ததால பலர் ஹவுஸ்வைஃப், ரிட்டயர்ட் இந்த வகையறாவில் தான் இருந்திருப்பாங்க. இரண்டு மாமிகளும் ஒரு மாமாவுமா வந்த ஒரு குடும்பம் அநியாயத்துக்கு குறுக்கும் நெடுக்குமாக ஓடி, கத்திக் கலக்கிண்டிருந்தாங்க.

“இந்த நாமக் கத்திரிக்காய் அரைக் கிலோ வாங்கலாமோடீ?” பொறுக்கி எடுத்துண்டு எதிர்ப்பக்கம் நின்ன மனைவியைக் கேட்டார். பெண்கள் ரெண்டுபேரும் பீன்ஸ் பொறுக்கிண்டிருந்தாங்க.

“ஐயோ சமத்தே, உங்களை யார் அந்த வேலையெல்லாம் சொன்னது? (பக்கத்திலிருந்த பெண்ணிடம்) வீட்லயே விட்டுட்டு வரலாம்னு சொன்னேனே கேட்டியா? (திரும்ப மாமாகிட்ட) நாமம் போட்ட கத்திரிக்காய் காரலா இருக்கும். நீளக் கத்திரிக்காய் தான் வாங்கணும், நீங்க சித்த சும்மா இருங்கோளேன், நான் பாத்துக்கறேன்”, மாமி கத்திச் சொன்னதுக்கு அந்தப்பக்கம் தமிழ் தெரிஞ்ச அத்தனை பேரும் திரும்பிப் பார்த்தாங்க. அதாவது அத்தனை பேருக்குத் தமிழ் தெரிஞ்சிருக்குன்னு எனக்குத் தெரிஞ்சுது. தவிர்க்கவே முடியாம நானும் ரங்கமணியும் ஒருத்தரையொருத்தர் பார்த்து சிரிச்சுண்டோம். பொதுஇடத்துல புருஷனை ஒரு போடு போடறதெல்லாம் எவ்ளோ சுகமான விஷயம். நாகரிகம்ங்கற பேர்ல நாம இழந்ததுதான் எவ்வளவு? 🙂 இப்பல்லாம் ஸ்ரீரங்கத்துலயே இந்த சீன் எல்லாம் ரொம்பக் குறைஞ்சுடுச்சு. மாமாவைப் பாத்து அலுத்துண்டே மாமிகள் தாலிச்சரட்டுல தாயர் மஞ்சள் காப்பைத் தேய்ச்சுக்கறதெல்லாம்…. சரி விடுங்க. அவர் கொஞ்சம் தயங்கி திரும்ப தான் எடுத்ததை எல்லாம் மொத்தக் காய்கறியில சேர்த்தார்.

திடீர்னு கோவிந்த், “ஏன் இவ்ளோ கொஞ்சமா தக்காளி வாங்கியிருக்க, போதுமா?ன்னு ஆச்சரியமா (வாங்கத் தெரிந்த ஒரே காய்ங்கறதால வஞ்சனை இல்லாம குறைஞ்சது 2 கிலோவாவது வாங்குவேன்.) கேட்டதுக்கு அதைவிட ஆச்சரியப்பட்டேன். நான் எதுவுமே இதுவரைக்கும் கறிவேப்பிலை தவிர எங்க கார்ட்ல எடுத்துப் போடலை. அப்போலேருந்து சும்மா வேடிக்கைதான் பாத்துகிட்டிருந்தேன். அப்பத்தான் ரெண்டுபேரும் கவனிச்சோம், நடுவுல இருக்கற எங்க கார்ட்ல அந்த மாமி வேகவேகமா காய்களைக் குவிச்சுகிட்டிருக்கறதை. “இது எங்களொடதுங்க” ன்னு ரங்கமணி அரைக்காலே முக்கால் டெசிபள்ல மாமிகிட்ட சொன்னது எனக்கே பாவமா இருந்தது. அதைக் கூட பாத்துக்காம என்ன செஞ்சுகிட்டிருக்க அப்டீங்கற மாதிரி திரும்பி என்னைப் பாத்ததை நான் பாக்கலை. 🙂

“நான் இங்க இருக்கேன்டீ!” மாமா எங்கோ தள்ளி அவங்களோட கார்ட்டைப் பிடிச்சுண்டு, நெஞ்சை நிமிர்த்திண்டு (அல்லது அப்படி நினைச்சுண்டு ) சொன்னதும், மாமி (தன் தவறை மறைக்க) அவரை முறைச்சதும், என்னால சிரிப்பை அடக்கவே முடியலை. என்னோட தலையாயப் பிரச்சினை பொது இடத்தில் இப்படி அடக்க முடியாம சிரிப்பு வர்றதுதான். தலையை வேற எங்கயாவது பருப்புகள் ஷெல்ஃபுல புதைச்சுக்கலாம், பாவம் அவங்க தப்பா நினைக்கப் போறாங்கன்னு நினைச்சு அங்கேருந்து ஓடிப் போய், அப்றம் தனியாச் சிரிச்சா வேற யாராவது வேற மாதிரி நினைக்கப் போறாங்களேன்னு திரும்ப ரங்கமணியோட வந்து ஒட்டி நின்னுகிட்டேன்.

மாமி தானே தன் பக்கம் கார்ட்டை வெச்சுகிட்டாங்க. மாமா சிரமப்பட்டு ஒரு 5 கிலோ எண்ணெய் டின்னைக் கொண்டுவந்து தங்களோடதுல வெச்சுட்டு தள்ளிப் போய் நின்னார். ஐயோ, எதுக்கு எண்ணெய் எல்லாம் எடுக்கறேள், அதுவும் இவ்ளோ பெருசு, சித்த சும்மாத் தான் இருங்கோளேன்” ன்னு மாமி திரும்ப கத்த, கனஜோரா, “அது உனக்கு வண்டி அடையாளத்துக்கு வெச்சிருகேன். எல்லாம் வாங்கி முடிச்சதும் அதை இங்கயே வெச்சுட்டு பாக்கிக்கு மட்டும் பில் போடலாம்” மாமா சொல்ல, “புத்திசாலி!!” ங்கற மாதிரி மாமி ஒரு பார்வை. இல்லையா பின்ன? 🙂

Reliance Fresh 2

இப்படி வேடிக்கை பார்த்ததுல நம்ப ஆளு பூசணிக்காய், பீட்ரூட் எல்லாம் அடுக்கறதை கவனிக்கலை. திடீர்னு பாத்து, இதெல்லாம் இருக்கு, வேண்டாம்னு சொன்னதுல செம காண்டு.

“இருக்கா? பின்ன காய்கறியே இல்லைன்னு சொன்னியே?”

“ப்ரிட்ஜ்ல காய்கறியே இல்லைன்னா சொன்னேன்? காய்கறியே சுத்தமா இல்லைன்னு தான் சொன்னென். சமைக்கும்போது அலம்பிட்டு சமைக்கணும்.” இவ்ளோ கேவலமான ஜோக்கை எல்லாம் சொல்லி பொது இடத்துலதான் சின்ன முறைப்போட தப்ப முடியும். “காய்கறின்னு சொல்லாம சும்மா கடையைப் பாக்க கூப்டா வருவீங்களா? அதான்.”

அப்படியும் கணிசமா தேத்தி எடை போடற இடத்துல எக்கச்சக்க நேரம். அதுக்கு இருந்ததே 2 பேர். அதுலயும் ஒருத்தங்க ரொம்பப் புதுசு போல.(கடை திறந்தே 10 நாள் தான் ஆகுது. அதுலயும் பழசு புதுசு.) “தீதீ!” ன்னு இன்னோரு பெண்ணை எல்லாத்துக்கும் கூப்டு சந்தேகம் கேட்டுக் கேட்டு எடை போட்டதுல ரங்கமணி கடுப்பாகி, சந்தேக நிவர்த்திப் பெண்ணோட க்யூலயே கொஞ்சம் பெருசா இருந்தாலும் பரவாயில்லைன்னு திரும்ப நின்னாரு. குழந்தை ஸ்கூல்லேருந்து வந்துடப் போகுதேன்னு முகத்துல கவலையான கவலை. அவங்க ஆனாலும் அநியாயத்துக்கு, வாங்கின எலுமிச்சை, பூண்டு, இஞ்சிக்கெல்லாம் தனித்தனியா பைபோட்டு, பில் ஒட்டி.. “எப்படி திரும்ப பிளாஸ்டிக் பை டாமினேட் செய்ய ஆரம்பிச்சிடுச்சு பாம்பேல, சை!”

அப்படியே மற்ற செக்ஷனையும் பாக்கலாம்னு ஒரு சின்ன ரவுண்ட். வழக்கமா இந்த மாதிரி டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள்ல இருக்கற அதே எவர்சில்வர் பாத்திரங்கள், crockery, பிளாஸ்டிக்.. குழந்தை ஸ்கூல்லேருந்து வந்துடும்னு பிண்ணனி இசை ஒலிச்சு(விரட்டிக்)கிட்டே இருந்தது. வேகமா பாத்துட்டு பில்போடற இடத்துக்கு வந்தா 4, 5 மெஷின் இருந்தாலும் ரெண்டு மிஷின் தான் வேலைல இருந்தது. எல்லாரும் பரபரத்துகிட்டே இருந்தாங்க கடைக்காரங்களை. எல்லா மெஷின்லயும் பில் போட்டா என்னன்னு எல்லாரும் கேக்கற கேள்விக்கு என்ன காரணமோ அவங்ககிட்ட பதில் இல்லை. பாவம்.

புதுசா யாராவது தொழில் தொடங்கினா அவங்களை உற்சாகப் படுத்தணும்னு உடனே அங்க ஆஜராகிற நம்ப ரங்கமணிகூட அன்னிக்கு பொருந்தாம படுத்தினதுதான் ஆச்சரியம். ஹோட்டல்ல சரியா பரிமாறலைன்னாலே, ‘பாவம், புது ஹோட்டல், புது ஸ்டாஃப், வேலை கிடைச்ச சந்தோஷத்துல இருக்காங்க. கொஞ்ச நாள்ல செர்வ் பண்ண பழகிடுவாங்க, நாமதான் என்கரேஜ் செய்யணும், விட்டுப் பிடிக்கணும்னு எனக்கே கீதோபதேசம் செய்ற ஆள், ரிலையன்ஸ்ங்கரதாலயோ (அப்படி இருந்தாலும் அந்தப் பணியாளர்கள் புதுசுதானே பாவம்) அல்லது பொண்ணு நினைப்புலயோ அன்னிக்கு நெருப்பு மேல டான்ஸ். உலகத்துல எங்கயும் காய் வாங்கினா இவ்ளோ நேரம் ஆகாது, நீ இரு நான் போறேன்னு ஒரே பொலம்பல். தொணப்பு தாங்காம ரங்கமணியை வெளில நிக்கச் சொல்லி, பணத்தை வாங்கிண்டு, நானே பில்போட்டு வாங்கிவரதா சொல்லிட்டேன்.

பக்கத்து லைன்ல ஒரு பொண்ணு ரங்கமணியையே மிஞ்சற அளவுல என் குழந்தை ஸ்கூல் பஸ் வந்துடும்னு குதிச்சுகிட்டிருந்தாங்க. வாங்கின சாமான்களைப் பாத்தா நறுக்கி பேக் செஞ்சிருந்த பாகற்காய், முருங்கைக்காய் வகையறா. அட அம்மணிகளா? என்னதான் அவசர யுகம்னாலும் பாகற்காய் முருங்கை எல்லாம் நறுக்க முடியாத அளவு அல்லது நறுக்க நேரம் எடுக்கற அளவு கஷ்டமான காய்களா? என்னிக்கி நறுக்கி என்னிக்கி பேக் செஞ்சதோ.

அதுக்குள்ள என் க்யூல இருந்த மாமாவுக்கு 300 ரூபாய்க்கு இறுநூத்து சொச்சம் போக பாக்கி சில்லறை கொடுக்க அவங்ககிட்ட இல்லை. கொஞ்சம் சில்லறை வெச்சுகிட்டு கல்லா திறக்க மாட்டாங்களா? எனக்கு ஆச்சரியமா இருந்தது. அவரோட ரூபாய் நோட்டை வெச்சுகிட்டு அந்தப் ஆள்(பையன்?) பேய் முழி முழுச்சிகிட்டிருந்தாரு. இவங்க எல்லாம் எப்ப செட்டில் பண்ணி என் முறை வருமோன்னு யோசிக்கும்போதே என் கைல இருந்த 500 ரூபாய் பல்லிளிச்சுது. கட்டினவன் கூட வர தைரியத்துல கைப்பை(கிரெடிட் கார்ட்) எடுத்துவராம இருந்திட்டேன். உங்க கார்டுல வாங்கிடலாம்னு சைகை செஞ்சு ரங்கமணியை திரும்ப உள்ள கூப்பிட்டேன்.

உள்ள வந்து, உச்சு கொட்டி, எப்படித்தான் குழந்தையைப் பத்தி கவலைப்படாம இருக்கியோங்கற புலம்பல் என் காதுக்குள்ள விழறதுக்குள்ள பக்கத்து க்யூலேருந்து வீல்’னு ஒரு சத்தம். தொடர்ந்து அந்தப் பொண்ணு மராத்தில மானாவாரியாகத் திட்டிண்டிருந்தாங்க. அந்த மெஷினும் எந்தக் காரணத்தாலோ பாதியிலேயே இயக்கத்தை நிறுத்தியிருக்கு. அந்த ஆள் அதோட சைடுல எல்லாம் தட்டிக்கிட்டிருந்தாரு. ஸ்கூட்டரைப் போல பிளேனையும் லேசா சாய்ச்சு ஸ்டார்ட் செய்யலாம்னு சொல்ற ஜோக் தான் ஞாபகத்துக்கு வந்தது. என் குழந்தை வந்திருக்கும்னு அழற நிலைக்கு அந்தப் பெண் போயிட்டாங்க.

“பரவாயில்லை, இன்னும் தாய்மை சாகலை நாட்டுல” ரங்கமணியோட முணுமுணுத்த கமெண்ட்டுல என் ஈகோ இடறிவிழுந்தது. எனக்கு என் பொண்ணு ஸ்கூல்லேருந்து வர நேரம் தெரியும். இன்னும் அரை மணி நேரம் இருக்கு. ஒரே ஒருநாள் வீட்டுல இருக்கறவங்க எல்லாம் இவ்ளோ அலப்பறது கொஞ்சம் அதிகம்.

“அவங்க குழந்தை எல்கேஜியா இருக்கும். உங்க பொண்ணு சீனியர் பசங்களையே அடிச்சு, கீழ தள்ளிட்டு, ஊர்வம்பை விலைக்கு வாங்கிகிட்டு வரா. ஒருநாள் வரும்போது கதவு பூட்டியிருந்தா எப்படி பிஹேவ் பண்ணனும்னு இந்த சிச்சுவேஷனும் தான் கத்துக்கட்டுமே, இப்ப என்ன போச்சு? இந்த ப்ரொகிராம் நான் போட்டதால தானே இவ்ளோ ஆர்பாட்டம். இதே நீங்க கூப்பிட்ட இடத்துல இப்படி லேட்டாகியிருந்தா பேசியிருப்பீங்களா? உங்களுக்கும் மத்தவங்க மாதிரி நறுக்கின காயும், நாளுநாள் பழசுல குழம்பும் ஊத்தினாத்தான் சரியாவீங்க. ஐயோ பாவம்னு வாழைப்பூ வாங்கி, மடல் மடலா எடுத்து, கை கறையானாலும் பரவாயில்லைன்னு ஒவ்வொண்ணுக்கா கள்ளன் ஆய்ஞ்சு, மணிக் கணக்கா திருத்தி, பருப்பு ஊறவெச்சு அரைச்சு, வேகவெச்சு, உதுத்து, வாழைப்பூ பருப்புசிலி செஞ்சு போடணும்னு நினைக்கறேனில்ல, எனக்கு இதெல்லாம் தேவைதான்…. .”

என்னாலயே என் ஃப்ளோவை நிறுத்தவும் முடியலை; தங்குதடையில்லாத என் தமிழ்ல ஆச்சரியப்படாம இருக்கவும் முடியலை. நிறுத்தினபோது (“ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி:”) எனக்கு முன்னால இருந்தவங்க பில். இன்னொரு லைனும் எங்களுக்குப் பின்னாலயே திட்டிண்டே  வந்து நின்னாங்க. 

எனக்கு முன்னால பில் போட்டவங்க 3 ஃப்ளேவர்ல ஃபாமிலி பேக் ஐஸ்கிரீம் வாங்கியிருந்தாங்க. பாத்தா, ஒவ்வொண்ணுக்கா மிஷின்ல காமிச்சு விலை மட்டும் கேட்டு (170, 180, 175) எது இருக்கறதுக்குள்ள விலை குறைவா இருக்கோ அதை பில் போடச் சொல்லி, மீதி ரெண்டையும் வைக்க உள்ள போனபோது எனக்கே வாழ்க்கை வெறுத்தது. வீட்டுக்குப் போய்ச்சேருவோமான்னு இருந்தது. பின்னால நின்னவங்க எல்லாம் அவங்களை சத்தம் போட்டாங்க. அட ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிடறவங்க பிடிச்ச ஃப்ளேவர வாங்காம அஞ்சு பத்துக்கு கணக்குப் பாக்கற மனவியல் எனக்குப் புரியலை. (இதை எழுதும்போது Mint ங்கற business newspaperல பெரிய பெரிய பிஸ்தாக்கள் எல்லாம் எப்படி எல்லா இடத்துலயும் பேரம்பேசி மட்டுமே வாங்கறாங்கன்னு 4 நாள் முன்னால வந்த கட்டுரை (When MRP equals minimum retail price) நியாபகம் வருது. டயானாவுக்கு Dodi Fayed பாரிஸ்ல வாங்கின so called engagement மோதிரம் ( “Tell me yes” ring) பேரம் பேசி வாங்கினாருன்னா, அப்புறம் இதெல்லாம் என்ன தப்பு?  And you and I end up paying full price ன்னு கட்டுரையாளர் புலம்பியிருந்தாரு.

ஒருவழியா அவங்க பணம் கொடுத்து, இவங்க மிச்சம் எப்படியோ திரட்டிக் கொடுத்து, ஹை ஜாலி, எங்க முறை. காய்கறிக்கு கார்டு  யூஸ் பண்றதெல்லாம் ரொம்ப ஓவர்னு சொன்னதை காதுல வாங்காம வேகமா சாமான்களை எடுத்துவெச்சேன். பருப்பு, வேற சில சாமான்களும் வாங்கியிருந்தேன். பில் வந்ததும், கார்டை மிஷின்ல தேய்ச்சு,(கடவுளே, அந்த மிஷினும் வேலை செய்யணும்) பில்லுல கையெழுத்து வாங்க… பேனா… இல்லை.

உங்ககிட்ட பேனா இருக்கான்னு எங்களையே திருப்பிக் கேட்டாங்க. அப்புறம் அவங்களுக்குள்ளயே ஒருத்தரையொருத்தர் கேட்டு இல்லைன்னு சொல்லிண்டாங்க. ரங்கமணி என்னைப் பாத்த போது நான் அந்தப் பக்கம் ஒரு குழந்தையை மும்மரமா கொஞ்சிண்டிருந்தேன். குழந்தைகளைப் பாத்தா கொஞ்சாம இருக்க முடியுமா சொல்லுங்க? 🙂

எப்படியோ கடைக்குள்ள சாமான் எடுத்துகிட்டிருந்த ஒருத்தர் கிட்ட இருந்த பேனாவை வாங்கிக்கிட்டு வந்து கடைப் பணியாளர் கொடுக்க (அவர் பயந்து பின்னாலயே வந்து கையெழுத்துப் போட்டதும் கையோட வாங்கிப் போயிட்டாரு.) ஒருவழியா கிளம்பும்போது அவங்க கைகொடுத்து, மெம்பர்ஷிப் கார்டுக்கு ஒரு ஃபாரமும், ஒரு அரைக்கிலோ சர்க்கரை இலவசமாயும் கொடுத்தாங்க.  வாங்கிக்கிட்டு வீடுவந்து சேர்ந்த போது ஸ்கூல் பஸ் வந்து நின்னுது. சுபம்.

Reliance Fresh 3

* காய்கறிகள் காலைல பத்துமணிக்கே போனா ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கு. D’Mart ல எப்பவுமே ஏசில சுருங்கின காய்கள்தான். அதனால காய்கறி மார்க்கெட்ல தான் வாங்குவோம். ஆனா மார்க்கெட்ல கிடைக்காத பல காய்கள் (வாழைப்பூ வெறும் ரூ.5.44 க்கு.), ஒரே காய்ல பல வெரைட்டி (கத்திரிக்காய், தக்காளி, அவரை…) எல்லாம் கிடைக்குது. (வாழைத்தண்டுக்கும் ஏற்பாடு பண்ணுங்கப்பா. ரொம்ப மிஸ் பண்றேன்.) முக்கியமா எடை நிச்சயமா மார்க்கெட்ல வாங்கறதை விட நிறைய வித்யாசம்.
 

* பழங்கள் மார்க்கெட்டைவிடவே குறைவோன்னு எனக்கு ஒரு எண்ணம். பைனாப்பிள்(எனக்குப் பிடிச்ச பழங்கள்ல இரண்டாது இடம்) வாரா வாரம் நான் பொறுக்கிக் கொடுத்தா தோல்சீவி, பேக்பண்ணி ரூ.25க்கு ஒரு கிழவர் கொடுப்பாரு. அதைவிடவே கொஞ்சம் பெரிய பழம் 16 ரூபாய்க்கு. கத்தியால பேராவூரணித் தேங்காயே உடைக்கறவ நான். நானே தோல்சீவ ஆரம்பிச்சா வாரம் 9 ரூபாய் மிச்சம்.
 

* துவரம் பருப்பு இதுவரைக்கும் நான் வாங்கின எல்லா இடங்களையும் விட ரொம்ப சிறப்பா இருந்தது. உளுந்து ஏகப் போடுவான். பொதுவா எல்லா மளிகைச் சாமான்களுமே D’mart க்கு சமமா அல்லது அதைவிட சிறப்பாவே இருந்தது. சாம்பார், ரசப் பொடி செய்ய எல்லாம் ஸ்பெஷலா  சாமான் வாங்கிண்டு வந்தேன். விலையை இனிமேதான் பொருத்திப் பாக்கணும். ஆனா தரமான சுவையான சாமான்களுக்காக எனக்கு மாச பட்ஜட்ல சில நூறுகள் அதிகமான பரவாயில்லை.
 

* இலவசமா கொடுத்த சர்க்கரை நல்லா இல்லை. அண்ணாச்சி கடை சர்க்கரையும். ஆனா காசு கொடுத்து வாங்கினது, D’Mart சர்க்கரை மாதிரி கல்கண்டா இருந்தது.
 

* ட்ரை ஃப்ரூட்ஸ் வகைல பிற கடைகள்ல கிடைக்காத சில டூட்டி ஃப்ரூட்டி, தர்பூஸ், கர்பூஸ் விதை எல்லாம் கூட கிடைச்சது. அல்வா செய்ய வெள்ளரி விதை கிடைக்கலை. (ஸ்ரீரங்கத்துல செட்டியார்கள் வீட்டுல, பெண்கள் சும்மா இருக்கும்போதெல்லாம் இந்த விதையை உரிச்சுகிட்டிருப்பாங்க. ஆனா எங்க கிடைக்கும்னு தெரியலை.)

0

# முக்கியமா அரிசியும் டீயும் இவங்க தயாரிப்பு இன்னும் வாங்கி உபயோகிக்கலை. அரிசியை ரங்கமணியும் (என்னதான் குழம்பு ரசம், காய் எல்லாம் நல்லா சமைச்சாலும் அடிப்படைல சாதம் நல்லா இருந்தாதான் சமையல் ருசிக்கும்னு பெரிய நம்பிக்கை), டீ பரவாயில்லைன்னாவது எங்கவீட்டுல வேலை செய்ற அம்மணியும் சொன்னாங்கன்னா தான் இன்னும் நம்பிக்கை கூடும். இது ரெண்டும் நடக்கறது கொஞ்சம் கஷ்டம்.
 

# காய்கறிகளைப் பொறுக்கி, அதுக்கு எடை போட அதிக நேரம் எடுக்கறது, பில் போடற மிஷின் மக்கர், பாக்கி சில்லறை இல்லாதது, பேனா இல்லாதது (இந்த முறை நான் போனபோதும் பேனா இல்லை, நான் கொண்டு போயிருந்தேன்.) எல்லாம் என்னை மாதிரி நாலுபேர் திரும்பத் திரும்பச் சொன்னா சரி செஞ்சுடுவாங்க. இந்த ஞாயிற்றுக் கிழமை (கொஞ்சமே) கொஞ்சம் வேகம் அதிகம் தான்.
 

# மெயின் கடைத்தெருவுலயோ அல்லது குடியிருப்புகள் பக்கத்துலயோ இல்லாம ஸ்கூல், லேடீஸ் ஹாஸ்டல் கிட்ட இருக்கறது கொஞ்சம் அபத்தமா இருக்கு. அதுக்குப் பக்கத்துல எந்த ஷாப்பிங்கும் செய்ய முடியாம திரும்ப வேண்டியிருக்கு.
 

# நாங்க முந்தி இருந்த வீட்டுக்கு அடுத்த காம்பவுண்டே D’mart. 3 மாடிக் கட்டிடமா மிகப் பிரம்மாண்டமா வந்து, கிடைக்காத பொருளே இல்லைன்னு நிலைமை. அங்க எந்தப் பொருளும் கண்ணை மூடிகிட்டு இருக்கற இடம் தெரிஞ்சு எடுக்கற அளவுக்கு பழகிட்டேன். ஆனா ரிலையன்ஸ் என்னவோ ரொம்பச் சின்ன இடமா இருக்கு. இனி, மேல மாடி கட்டினாத்தான் அதிகமா வைக்க முடியுங்கற நிலைமைல இப்பவே பல வீட்டுபயோகப் பொருள்கள், நான் தொடர்ந்து வாங்கற Lizol (citrrs fragrance), fabric conditioner எல்லாம் இல்லவே இல்லை. அதனால இது முழுமையா ஷாப்பிங் செய்ய ஏத்த இடம் இல்லை. இப்போதைக்கு பெரிய அளவுல வளர முடியும்னும் தோணலை. Nerul மக்கள் D’Mart தான் அந்த வகைல தேர்ந்தெடுப்பாங்க.

# இன்னமும் பச்சரிசி, இட்லி அரிசிலேருந்து, வெத்தலை, வாழையிலை, கனுவுக்கு மஞ்சள் கொத்து, இதோ வரப்போற கார்த்திகைக்கு பொரி வரைக்கும் நம்பளோட வழமையான பல தேவைகளுக்கும்,

சொக்காயிக்கு படம் காட்ட மினுக்கு வத்தலா, வரவழைச்சுடுவோம், அதென்ன திருநெல்வேலில அப்பக் கொடி,  அதளக்காய் வத்தலா, தாமரைத்தண்டான்னு கேட்டுப் பாக்கறேன்னு பத்து ரூபாய் சாமானுக்கெல்லாம் மெனக்கெடத் தயாரா இருக்கவும்,

பஞ்சாப் கோதுமையைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தா (தேவைப்பட்டா சோயாவும் நாமே சொல்ற அளவு சேர்த்து) மிஷின்ல அரைச்சுக் கொண்டுவந்து கொடுக்கவும், (ஒருதடவை மிஷின்ல அரைச்சு உபயோகிச்சவங்க, கம்பெனி கோதுமை மாவு எப்பவும் வாங்க மாட்டாங்க.)

“சாம்பார்ப்பொடிக்கு விரளி மஞ்சள் வாங்க மறந்திட்டீங்களா, ஏன் வெயில்ல அலையறீங்கக்கா, தலைவலி வரும், தம்பிகிட்ட இப்பவே கொடுத்தனுப்பறேன்”

“இல்லை, எதிர்ல ஐயப்பன் கோவில் வாசல்ல பூவும் வாங்கணும், நானே வரேன்”

“அட, என்ன பூ, எவ்வளவுக்குன்னு சொல்லுங்க, கையோட வாங்கிவாரச் சொல்லுதேன், வேற என்ன வேணுங்க்கா”

போன்ற பேங்க் ஆஃப் இந்தியா [சேவையைக் கடந்த நேசமிகு உறவுகள் :)] மாதிரி விஷயங்களுக்காகவும் இன்னும் அண்ணாச்சிகளையும் சார்ந்தே இருக்க வேண்டியிருக்கு.

பிற்சேர்க்கை:

வாழைத் தண்டும் கிடைக்குது. 🙂 அதுவும் வெறும் ரூ.5.38 க்கு.

கருப்பு உளுத்தம் பருப்பு(தோல் பருப்பு) ஊறவெச்சு 24 மணி நேரம் ஆகியும் தோல் பிரியலை; நனைச்ச தண்ணில கருப்புச் சாயம்.

RV- channa dalRSelect - channa dal

பேக் செஞ்ச எல்லா மளிகைச் சாமான்களுமே Reliance Value, Reliance Select -ன்னு இரண்டு தரத்துல இருக்கு. முன்னது RV பாக்கெட்ல தமிழும் சேர்த்து 8 மொழிகள்ல அச்சிடப்பட்டு கொஞ்சம் விலை தரம் இரண்டுலயுமே குறைவாவும், பின்னது RSelect 4 மொழிகள்ல மட்டும்(தமிழ் இல்லை) அச்சிடப்பட்டு மிகக் குறைந்த விலை வித்யாசத்துல ஆனா மிகச் சிறந்த தரத்தோட இருக்கு. காரணம் தெரியலை. (உதாரணம் கடலைப் பருப்பு RV – கிலோ ரூ.58, RSelect – கிலோ ரூ. 60. தரத்துல பெரிய வித்யாசம்.)

-0-

Nerul Times: இந்த ஞாயித்துக்கிழமை, வீட்டுக்கிட்ட இருக்கற ATM போய் அப்படியே எதிர்ல இருந்த பிரபல நெருள் சனீஸ்வரன் கோயிலுக்குப் போனா அங்க நோட்டீஸ் போர்டுல சனிக்கிழமை உபயதாரர் பேர் அழிக்காம இருந்தது. இந்தக் கோயில் ரொம்பப் பிரபலம். சனிக்கிழமை பூஜை எல்லாம் பெரிய அளவுலயும், அதிகக் கூட்டமாவும் இருக்கும். போர்டுல இருந்த உபயதாரர் சச்சின் டெண்டுல்கர்!

இதை நான் தான் எழுதினேனான்னு எனக்கே இப்ப படிச்சா சந்தேகமா இருக்கு. ஆனா, ஆமாம்னு மரத்தடி சொல்லுது. 😦

இலக்கியப் பயணத்துல இதெல்லாமும் சகஜம் தான் போலிருக்கு! 🙂

-0-

எல்லா வாசனையும் வேற ஏதாவது நினைவையும் கூட்டிவரும் அல்லது எல்லா நினைவுகளுக்கும் ஏதாவது வாசனையும் உண்டுன்னு நான் நிச்சயம் நம்பறேன். இன்னிக்கு நவராத்திரி வெள்ளிக்கிழமைல எங்க வீடு முழுக்க அடிக்கற உக்காரை வாசனைல கிளம்பின நினைவுகள்….

எனக்கு 6, 7 வயசு இருக்குமான்னு சரியாத் தெரியலை. நவராத்திரி வெள்ளிக்கிழமைன்னா எங்க பாட்டி காலைலேருந்து உக்காரையும் சீயாளமும் செஞ்சுட்டு மத்யானம் ஒரு ஒருமணிவாக்குல வந்து கூடத்துல உக்காருவா. எனக்கு நல்லா வயிறு ரொம்ப சாதம் ஊட்டிவிட்டுட்டு, (செமத்தியா சாப்பிடுவேன், வஞ்சனையே இல்லாம.) அன்னிக்கு அலங்காரம் ஆரம்பிக்கும்.

எப்பவுமே நவராத்திரி வெள்ளிக்கிழமைக்கு ஆண்டாள் வேஷம்தான்.

அம்மா ஓரளவு ஏற்கனவே சௌரி, குஞ்சலம், ராக்குடி, ஜடைபில்லை (இதை எடுக்கும் போதேல்லாம் பாட்டி, ‘அவ்வளவும் அந்தக் காலத்து கெம்புக்கல்லு, கடைல போட்டுடாத மதிப்பு தெரியாம’ன்னு சொல்வா. அம்மாவும் ஒவ்வொரு தடவையும் சலிக்காம சரின்னு சொல்வா) இன்னும் நிறைய அலங்கார சாமானெல்லாம் எடுத்து கொண்டு வந்து ரெடியா வைப்பா. அதெல்லாம் வெச்சிருக்கற டப்பா என்னவோ சொல்லத் தெரியலை, பிரத்யேகமா நல்ல வாசனையா இருக்கும்.

ஆண்டாளுக்கு இடக்கொண்டையா வலக்கொண்டையான்னு வருஷா வருஷம் இந்தக் கேள்வியைக் காத்துல விடாம, பாட்டி, அலங்காரம் ஆரம்பிச்சதே இல்லை. அப்புறம் மீனாட்சிக்குத்தான் வலக்கொண்டை, ஆண்டாளுக்கு இடக்கொண்டைதான்னு முடிவுசெஞ்சு, முதல்ல ஒரு சின்ன- பிறந்த குழந்தை வளையல்ல கருப்பு ரிப்பனால சுத்தி ஏற்கனவே தயாரா செஞ்சுவெச்சிருக்கற- வளையத்தை இடப்பக்கம் வகிடுக்குப் பக்கத்துல வெச்சு, சைட் கொண்டைலேருந்து தலை அலங்காரம் ஆரம்பிப்பா. அம்மா உதவிக்கு எல்லாம் எடுத்துக் கொடுப்பா.

ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலயே தூங்க ஆரம்பிப்பேன். தூங்கித் தூங்கி சரியும் போதெல்லாம் அண்ணன் பிடிச்சுக்குவான். தம்பி பக்கத்துலயே உக்கார்ந்து எல்லாத்தையும் வேடிக்கை பாத்துகிட்டு இருப்பான். எதுக்குன்னு தெரியலை, அப்பப்ப அடக்கமுடியாம ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து சிரிச்சுக்குவோம். எதையாவது எடுக்க எடுக்க கை நீட்டுவான். அம்மா தொடக்கூடாதுன்னு திரும்பத் திரும்ப கையை எடுத்து விடுவா.

பின்பக்கமும் பின்னி, குஞ்சலம் வெச்சு, கருப்புக் கயிறால கட்டி முடிச்சிருக்கும்போது நான் நல்லாவே தூங்கியிருப்பேன். முகத்தைத் துடைச்சி, மை, பவுடர், நெத்தில ஆண்டாள் வெச்சுக்கற மாதிரி ஒத்தை ஸ்ரீசூர்ணம் எல்லாம் அம்மாதான் செய்வா. அப்புறம் இன்னும் கொஞ்சம் தலை அலங்காரம்- நெத்திசுட்டி, முன்பக்க தலைசாமான் எல்லாம் திரும்ப பாட்டி..

அப்புறம் அம்மாவோட பூச்சூட்டலுக்கு, பாட்டி வாங்கின தாமரைப்பூ கலர்ல அடர்பச்சை பார்டர் நிறைய ஜரிகை போட்ட பட்டுப் புடவையை அம்மா எடுத்துண்டு வருவா. அதை அம்மா கட்டிண்டு ரொம்ப நான் பார்த்ததேயில்லை. அந்தப் புடவைல ஒரு வாசனை வரும்பாருங்க, யாரோட அம்மா புடவையும் அப்படி வராதுன்னு நிச்சயம் நம்பறேன். சும்மா ஜம்முனு இருக்கும்.

அப்படியே வழவழன்னு ஆனா ரொம்ப கனமா இருக்கும். அந்தக் காலப் பட்டுப்புடவை எல்லாமே ரொம்ப உறுதியா இருக்கும். பாட்டி பத்து வருஷம் முன்னாடியே 26 ரூபாய்க்கு வாங்கினதுன்னு ரொம்பப் பெருமையா சொல்வா. அதை அப்படியே அகலத்தைப் பாதியா மடிச்சு எனக்குக் கட்டிவிட ஆரம்பிப்பா. ரொம்ப கஷ்டமான வேலை.

எல்லாம் முடிய மூணு மணி ஆயிடும். அன்னிக்கி எனக்கு என்ன பிடிக்கும்னா அம்மா என்னை ரிக்ஷா வெச்சு ரெண்டு மூணு சொந்தக்காரங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவா. கீழச்சித்திரை வீதி, அம்மாமண்டபம் ரோடுன்னு சவாரில தூக்கம் போயிடும். இல்லைன்னா ஜுரம் வந்தாதான் ரிக்ஷா சவாரியெல்லாம் கிடைக்கும்.

அன்னிக்கி ஒருநாள்தான் அம்மா ரொம்ப முக்கியமான சொந்தக்காரங்க வீட்டுக்கு மட்டும் கொலுவுக்குப் போவா. மீதிநாள் எல்லாம் வீட்டுலயே இருந்து வரவங்களைக் கவனிக்கவே நேரம் சரியா இருக்கும். அன்னிக்கும் சீக்கிரமா போயிட்டு நாலு நாலரைக்குள்ள முடிச்சுண்டு திரும்பிடுவோம். அஞ்சு மணிலேருந்து எங்க வீட்டுக்கே எல்லாரும் வர ஆரம்பிச்சுடுவாங்க.

திரும்ப வீட்டுக்கு வந்ததும் எனக்கு சீயாளம் சாப்பிடக் கொடுப்பா. ஸ்வீட் பிடிக்காது, அதனால. சாப்பிட்டுட்டு, என்னோட கொலுவேட்டை ஆரம்பிக்கும். எங்கவீதி மட்டும்தான் அப்ப எனக்குப் போகத் தெரியும். எங்க வீதி இருக்கே, அது ஸ்ரீரங்கத்து மத்த வீதிகள் மாதிரி அடைசலா ரெண்டு பக்கமெல்லாம் வீடு இருக்காது. கோவில்மதிலை ஒட்டின முதல்சுற்று உத்தரவீதி முழுக்க, ஒருபக்கம்தான் வீடு.

அதுலயும், ‘இந்தப்பக்கம் 10 வீடு, அந்தப்பக்கம் 10 வீட்டுக்கு மட்டும் தான் போயிட்டு வரணும், சீக்கிரம் வந்துடணும் சரியா?’னு எப்பவும் சொல்லித்தான் அனுப்புவா. (ஆக்சுவலா இந்தப்பக்கம் ‘பெரியாத்து நாராயணன்’ வீடு, அந்தப் பக்கம் ‘SKR பட்டர்’ ஆத்துவரைக்கும்னு தான் சொல்வா. நாந்தான் உங்களுக்குப் புரியாதேன்னு பத்துவீடுன்னு கணக்கு சொன்னேன்.) ரொம்ப சமத்தா ‘சரி’ன்னு சொல்லிக் கிளம்புவேன். உண்மையிலேயே முகம் அப்பாவி மாதிரி எனக்குப் பால்வடியும். பார்க்கறவங்க எல்லாம், ‘ஐயோ பாவம்! எவ்ளோ சமத்தா இருக்கு’ன்னு தான் நினைப்பாங்க.

வாசல்வரைக்கும் வந்து அம்மா வழியனுப்பி திரும்ப உள்ள போறவரைக்கும் காத்துண்டிருப்பேன். அம்மா போனாளோ இல்லையோ, வாசல்ல விளையாடிண்டிருக்கற பசங்களை வரயான்னு கூப்பிட்டுப்பேன். ‘நச்சா’ அப்புறம் இன்னும்கொஞசம் பசங்களோட கிளம்புவேன். எல்லாரும் ஆர்வமா வருவாங்க. ஆனா என்ன பிரச்சனைன்னா, பெண்குழந்தைன்னு என்னை உள்ளவரச்சொல்லி ஒக்காரவெச்சு மரியாதை செய்யறவங்க, அவங்களை மட்டும் ரேழிலயே- சிலபேர்வீட்டுல வாசல்லயேகூட- நிறுத்திடுவாங்க. அவங்க அதெல்லாம் கண்டுக்கமாட்டாங்க. எனக்கும் ஒண்ணும் வித்தியாசமாத் தெரியாது அப்பல்லாம். ஆனா இப்ப நினைச்சா அதெல்லாம் வருத்தமா இருக்கு.

ஃப்ரெண்ட்ஸ் இருக்கற தைரியத்துல அம்மா சொன்ன எல்லையை எல்லாம் தாண்டிடுவேன். அப்பல்லாம் தெருவுல செருப்புப் போடாமத்தான் கொலுவுக்குப் போனதா நினைக்கிறேன். அந்த அளவுக்கு வீதியும் அப்பல்லாம் ரொம்ப குப்பை, ட்ரா·பிக் எல்லாம் இல்லாம நல்லா இருந்திருக்கணும். எங்கவீதில இன்னொன்னு என்னன்னா, எல்லாமே வீடுகள் கிடையாது. நடுநடுவுல சில கோமுட்டிச் செட்டியார்கள் பெரிய பெரிய வீடுகள் கட்டி, கோவில்ல உற்சவம்னா மட்டும் வந்து தங்கி, பெருமாள் சேவிச்சுட்டுப் போவாங்க மத்த நாள்லகூட சும்மா யாராவது விருந்தா வந்து தங்கிட்டுப் போவாங்க. நான் அங்கயெல்லாம் கூடப் போய் எல்லார்கிட்டயும் என் வீட்டுக்கு அடையாளம் சொல்லி அவசியம் எங்கம்மா வரச்சொன்னாங்கன்னு சொல்லிட்டு வந்துடுவேன். அவங்களும் நிஜம்னு எல்லாரும் வந்து என் வீட்டு ஜாதகத்தையே சொல்லி எங்க பாட்டியை முழிக்கவெச்சிருக்காங்க.

இதுல முக்கியமா __________ வீட்டுக்குப் போனது மட்டும் ஏனோ மறக்கவே இல்லை. நான் அவங்க வீட்டுக்குப் போனபோது ஒரு பாட்டியும், ஒரு மாமியும் (மாட்டுப்பொண்ணும்) மட்டும் இருந்தாங்க.

அந்த மாமி, போனவருஷம் இதே ஆண்டாள் வேஷம் போட்டுண்டு போனபோது, ‘ஆண்டாளைத் தெரியுமா உனக்கு?’ன்னு கேட்டதுக்கு, ‘தெரியும், என்னை மாதிரியேதான் ஆண்டாள் இருப்பா’ன்னு நான் பெரியமனுஷி மாதிரி சொன்னதை ஞாபகமா சொல்லிச் சிரிச்சுண்டே ஆசையா அந்தப் பாட்டிகிட்டக் கூட்டிண்டுபோய் காமிச்சா. பாட்டி லைட்டப் போடச்சொல்லிப் பார்த்துட்டு, ‘ஏண்டி இவ்ளோ அலங்காரமும் உங்க பாட்டி பண்ணினாளா, இந்த வயசுக்கும் உடம்பு அடடான்னு வரது அவளுக்கு.. என்னைப் பாரு எதுக்கும் துப்பில்லாம போயாச்சு… துப்பு இருந்துட்டாலும் இந்த வீட்டுல…. ‘ அப்புறம் ஏதேதோ சொல்லிண்டே போனா.

“என்ன அச்சானியமா இடக்கொண்டை போட்டிருக்கா, கூறுகெட்டுப் போயிட்டாளா உங்கபாட்டி?”ன்னும் கேட்டா. அந்த மாமி எவ்வளவோ சொல்லியும் நம்பாம போகவும், அந்த மாமி உள்ளேயிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஸ்நானப் பவுடர் (இது தீபாவளிக்கு தலைக்கு உபயோகிப்போம்) பாக்கெட் எடுத்து அதுல ஆண்டாளுக்கு இடக்கொண்டைன்னு காமிச்சு அவங்களை ஏதோ கண்டிக்க, பாட்டி அப்பவும் நிறுத்தாம, எங்க பாட்டி, தன் மாட்டுப்பெண் எல்லாம் மானாவாரியா சத்தமா பேசிகிட்டே இருந்தாங்க. ரெண்டு பேரும் எனக்கே தெரியாத, சொன்னாலும் புரியாத என்வீட்டு மேட்டர் எல்லாம் பேசி சண்டைபோட ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க வீட்டுல விளையாட பாப்பா வேற எதுவும் இல்லை. கொலுவும் வைக்கலை. நான் போணும், போணும்னு பூனைக்குட்டி குரல்ல சொன்னதை காதுலயே வாங்கலை. ரேழில நிக்கற பசங்க கால்மாத்தி கால்மாத்தி நிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் திரும்பித் திரும்பி அவங்களையே பாக்கறேன்.

ஒருவழியா அந்த மாமி நினைவுவந்து ‘திருப்பாவை சொல்வியா ஆண்டாள்?’னு கேட்டா. நான் ‘நீளாதுங்கஸ்..’னு தனியன்லேருந்து ஆரம்பிச்சேன். மார்கழித்திங்கள்- லேருந்துதான் ஆண்டாள் பாடினதுன்னு அப்ப எனக்குத் தெரியாது. சொல்லச்சொன்னா சுவிட்ச் போட்ட மாதிரி தனியன்லேருந்து தான் அதுவும் கொஞ்சம்தான் சொல்லத் தெரியும்.

[வருஷா வருஷம் இந்த மாதிரி கேள்விகள் மாறிண்டே போகும். அடுத்த வருஷம் ‘உங்க பாட்டிக்கு நீ செல்லமா, உங்கண்ணனா?’, அதுக்கும் அடுத்த வருஷம் ‘உங்கப்பா- அம்மா சொல்றதக் கேப்பாளா, பாட்டி சொல்றதையா?’ இப்படி…

எந்த வருஷம் ‘உங்கம்மா உனக்கு (வைரத்)தோடு கட்டிட்டாளா?’ன்னு கேக்கறாங்களோ அந்த வருஷத்தோட நவராத்திரிக்கு அழைக்கப் போறத நிறுத்திடணும். அழைக்கப் போற வயசத் தாண்டிட்டோம்னு அர்த்தம். :P]

‘எந்த ஊர்லடீ ஆண்டாள் நீளாதுங்கஸ் பாடியிருக்கா?’ன்னு திரும்ப அந்தப் பாட்டி என்னைச் சீண்ட, அந்த மாமி, ‘நீ கிளம்பு’ன்னு எனக்கு வெத்தலைபாக்கு, குங்குமம் கொடுத்து அனுப்பினா. அப்ப ஏன்னே தெரியலை, அந்த மாமி முகமெல்லாம் அழுது அழுது சிவந்திருந்தது.

அப்படியே தொடர்ந்து அந்தப்பக்கம் சக்கிலியன் கோட்டை வாசல் வரைக்கும் போவோம். அதாவது வீதில சரிபாதில ஒரு இடைவெளிவிட்டு கோட்டைவாசல் வரும். சாயங்காலத்துக்கு மேல அந்தப் பக்கம் போனா கோட்டைவாசல் காவல் தெய்வம் லேடீஸப்(!) பிடிச்சுக்கும்னு நாராயணன் சொல்லியிருக்கான். (இந்த நாராயணனப் பத்தி வேற எப்பவாவது சொல்றேன். இவன் இல்லைன்னா என் குழந்தைக்கால நாள்களுக்கு வண்ணமே இல்லை.) அதனால ‘கதர்க்கடை நாராயணன்’ குண்டு அஷோக் வீட்டோட திரும்பிடுவோம்.

அங்கங்க உட்கார்ந்து எழுந்து புடவை அவுந்துபோறது, நெத்திச்சுட்டி நகரரதெல்லாம் அந்தந்த வீட்டு மாமிதான் சரிசெஞ்சு விடுவா. எல்லாரும் ஏனோ எங்க பாட்டின்னா கொஞ்சம் மரியாதையோ பயமோ வெச்சிருப்பா. எல்லா வீட்டுலயும் பாட்டி பத்தித்தான் பேசுவா. என்னை யாரும் ரொம்ப கண்டுக்க மாட்டா.

சொல்ல மறந்துட்டேனே.. சிலபேர் வீட்டுல என்கூட வர boys-க்கு வெறும் பொரிதான் கொடுப்பா. அதனால அவங்க அவங்க வீட்டு வாசல்லயே உக்கார்ந்து எனக்குக் கொடுத்த புட்டு, சுண்டல் எல்லாம் பிரிச்சு அவங்களுக்குக் கொடுப்பேன். எப்படியும் எங்க வீட்டுல அதை யாரும் கண்டுக்கமாட்டா. எங்களுக்கு சின்னக்கையா இருக்கறதால பிடிக்கமுடியாம அப்படியே என் புடவைத் தலைப்புல கொட்டிப் பிரிச்சுப்போம்.

அப்புறம் எங்கவீட்டுக்கு வலப்பக்கம் இருக்கற வீடுகளுக்குப் போக, திரும்ப, எங்கவீட்டைத் தாண்டித்தான் போகணும். தாண்டும்போது நைசா பாத்தா எங்கவீட்டுக் கூடம் ஜேஜேன்னு கூட்டமா இருக்கும். எல்லாம் நான் அழைச்சுட்டு வந்த மக்கள். ரொம்பப் பெருமையா இருக்கும்.

அப்படியே கண்டுக்காம அந்தப் பக்கம் போக ஆரம்பிப்போம். அந்தப் பக்கம் கோவிலுக்கு முன்னாடி தேர்முட்டி வீடுவரைக்கும் போவோம். ‘ரன்’ படத்துல ‘தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ..’ பாட்டுல ஒரு தேரடி வருதே அதுதான் எங்கவீட்டுக்கிட்ட இருக்கற தேரடி. அதுல தெரியற முதல்வீடு (இப்ப) சுந்தர்பட்டர் வீடு வரைக்கும் போய்த் திரும்பிடுவோம்.

அன்னிக்கி திரும்பும்போது பாக்கறோம், கொஞ்சநேரம் முன்னாடி அழுத மாமி அந்தப் பாட்டியைக் கையைப் பிடிச்சு கோவிலுக்கு கூட்டிப் போறா. ரெண்டுபேரும் சிரிச்சு பேசிகிட்டே வேற போறாங்க. என்னால நம்பவே முடியலை.

“என்னடா இது, அந்த மாமி லூசா, என்னை யாராவது அழவிட்டா நான் அவாளோட ஒரு மாசமாவது டூ விடுவேன்”ன்னு சொன்னேன். ஒருத்தன், “நான் பத்து மாசம் டூ விடுவேன்”ன்னான். ‘கொட்டு’ மட்டும், “நான் ஒரு வருஷம்”னான். 10 மாசத்தைவிட ஒருவருஷம் பெருசான்னு அப்ப சரியாத் தெரியலை. ஏதோ ஒண்ணு. ஆக எங்க யாருக்குமே அவங்க ரெண்டு பேரும் சிரிச்சுப்பேசறது பிடிக்கலை. அதிர்ச்சிதான்.

ஆனா ‘கொட்டு’ கொஞ்சம் சூட்டிகை. நிறைய ஊர் ஊரா மாத்தலாகி படிச்சு வந்தவன். எங்க க்ரூப்லயே அவன் மட்டும் கொஞ்சம் பெரியவங்க தமிழ்ல பேசறதெல்லாமும் புரிஞ்சுப்பான். அவந்தான் அவங்க என் பாட்டியைப் பத்தி அவங்க வீட்டுக்கு நாங்க போயிருந்தபோது என்ன பேசிண்டாங்கன்னு இப்ப சொன்னான். எனக்கு அதிர்ச்சியா இருந்தது. கைல வெத்தலைப்பாக்கு சுண்டல் எல்லாம் போட்டு கனமா ஒரு பை. புடவை முன்கொசுவம் வேற லூசாகி அதைவேற தூக்கிகிட்டே தடுக்கி தடுக்கி நடக்கறேன், நடக்கவே முடியாம. அவன் சொன்னது வேற சரியாப் புரியலையா, என்னவோ கொஞ்சம் வாடிப்போயிட்டேன்.

அப்ப பார்த்தா தூரத்துல எங்கப்பா ஓடிவராரு என்னப் பார்த்துட்டு. ஆஃபீஸுலேருந்து வந்தவரு, வாசல்லயே நான் வரேனான்னு பாத்துகிட்டிருந்திருக்காரு. தூரக்க எங்க கோஷ்டியைப் பாத்ததும் ஓடிவந்து, என் கைல இருக்கற பையெல்லாம் வாங்கிக்காம அப்படியே மொத்தமா என்னைத் தூக்கிக்கறார். கூட வந்தவங்களை அப்படியே விடலாமான்னெல்லாம் அப்ப ஒண்ணும் மரியாதை எல்லாம் தெரியாது. “ஹை, அப்பா!”ன்னு நானும் ஓடிட்டேன்.

“ஆருடா அது, பெரிய மனுஷங்களா இருக்காங்க.. அப்பாக்கே ஆருன்னு தெர்லயே..” குரலை மழலையா மாத்தி, கொஞ்சிண்டே அப்பா என் மூஞ்சியோட மூஞ்சி வெச்சுத் தேக்கறாரு. வெள்ளிக்கிழமை எப்பவும் ஷேவ் பண்ணமாட்டார் அப்பா. ‘ஐயோ மீசை.. மீசை..’ன்னு (கன்னப்பரப்பும் மீசைதான் அப்ப) சிரிச்சுகிட்டே இருக்கேன். ‘குத்துது’ன்னு மேல சொல்லமுடியாம ஒரே கிச்சுக்கிச்சா இருக்கு. தடுக்க முடியாம ஒருகைல பை, இன்னொன்னுல குங்குமச்சொப்பு. நெளிய நெளிய தூக்கிகிட்டுப் போய் எங்கவீட்டு நடுக்கூடத்துல இறக்கிவிட்டார். பாட்டிதான் ஓடிவந்து கட்டிப் பிடிச்சுண்டா. அம்மா லேட்டானதுக்கு திட்டவேயில்லை. கொலுக்கு வந்தவங்க கூத்துல என்ன மறந்துட்டாளோ என்னவோ.

பாட்டி உக்காரவெச்சு திரும்ப எல்லாத்தையும் மெதுவா அவிழ்த்து, தலைசாமான் எல்லாம் பத்திரமா எடுத்துவெச்சுண்டே அப்பாவை சீண்டறா. ‘எப்படிடா இருக்கா என் பேத்தி? சேத்து வெச்சுக்கோ கல்யாணத்துக்கு இப்போலேருந்தே..’.

அப்பா சிரிச்சுண்டே, ‘வாட், நான் எதுக்கு சேக்கணும், என் பொண்ணை எவனாவது பணம் கொடுத்து, கல்யாணம் செஞ்சுண்டு போவான்’னு சொல்லி முடிக்கறதுக்குள்ள அம்மா ஒரு சின்ன சண்டை போட தயாரா வந்தா. ‘ஆமா, நீங்க அப்படித்தான் என்னை செஞ்சுண்டேளா, எவனாவது பகல் கொள்ளைக்காரன் வந்து உங்களை மொத்தமா சுரண்டனும்.(நாக்குல சனி!) நான் கண்குளிரப் பாக்கணும்.”

மேல கூட அம்மா பேசியிருப்பா நிறைய. ஆனா அதுக்குள்ள அந்தப் பட்டுப்புடவையோட நிலைமையைப் பாத்து பதறிட்டா. எல்லா இடத்துலயும் சந்தனம், குங்குமம், எண்ணைக் கறை, பார்டர் எல்லாம் ரோட்டுல புரண்டு மண். அலறிட்டா. “சின்னக் குழந்தைக்கு யாராவது இந்தப் புடவை எல்லாம் கட்டலாமா, சொன்னா கேக்கமாட்டேங்றேளே”ன்னு பாட்டியை நொந்துண்டா. “உனக்கு இப்படி எத்தனை புடவை வேணும்?” பாட்டி அமைதியா திரும்பக் கேக்கறா. இப்படி பேசிண்டிருக்கும்போதே பாட்டி என்னை அலங்காரத்துலேருந்து மொத்தமா ரிலீஸ் செஞ்சு, தலையை அலுங்காம திரும்பப் பின்னிட்டா.

‘இனிமே இது எங்க சாப்பாடு சாப்பிடப் போறது, ஒரு டம்ளர் பால் கொண்டா’- அம்மாவுக்கு சொல்லிட்டு, ‘நீ போய் அவளோட கவுனைக் கொண்டாடா’- அண்ணனுக்கும் சொல்லிட்டு தான்போய் திருஷ்டி சுத்திப்போட உப்புமிளகாய் எடுக்க உள்ள போனா.

மூணுபேரும் பொருளோட திரும்ப வரதுக்குள்ளயே எந்த கண்ணனோட காதல் தொந்தரவும் இல்லாததால அன்றைய ஆண்டாள் அப்பா மடிலயே நிம்மதியா தூங்கிடுச்சு.

லாலி!

-0-

இவ்ளோ சந்தோஷமான வீட்டுல, மறுநாள் பாட்டி எனக்கு பல்விளக்கி விடும்போது, “ஏன் பாட்டி உனக்கு குழந்தையே இல்லையாமே, அப்பாவ நீ ஓசியடிச்சியாமே?,” ‘கொட்டு’ சொன்னதோட அர்த்தம் சரியாப் புரியாம நான் கேட்டுவைக்க, அதுவரைக்கும் ஒரு தைரியமான, திமிர்பிடிச்ச, சமுதாயம் பார்த்து மரியாதை தர ஒரு ஆளாவே நான் பாத்துவந்த என் பாட்டி கதறி அழுததும், எங்கவீடே அன்னிக்கி சோகமானதும் இப்ப நினைச்சாலும் கலக்கமா இருக்கு.

அதுக்கு அப்புறமும் பாட்டி என்கிட்ட சாதாரணமா, ரொம்ப ரொம்பப் பாசமா, பிரியமா, உயிராத்தான் இருந்தான்னாலும் எனக்கு என்னவோ சின்ன இடைவெளி விழுந்துடுச்சோன்னு தோணிகிட்டே இருந்தது. நவராத்திரி வெள்ளிக்கிழமைன்னாலே இந்த உறுத்தல் இன்னும் அதிகமாயிடுது.

பேசிமுடிச்ச வார்த்தைகளை திரும்ப எடுக்கமுடியும்னா எவ்ளோ நல்லா இருக்கும்!
 

நவராத்திரி: நடமாடும் கொலு – எம்.கே.குமார்

தாயார் சன்னதியில் பட்டர் தவிர காலையில் ஆண்களை அங்கே பார்க்கவே முடியாது. அதுவும் அந்தப் பத்து நாள்கள் பெண்கள் காலையில் பிரதட்சணம் செய்ய அவசியம் அங்கே வந்துவிடுவார்கள். அந்த நாள்களில் மட்டும் 12 பிரதட்சணம் செய்வது நல்ல விஷயம்தான். நானும்கூட செய்திருக்கிறேன்.

ஆனால் பிரதட்சணங்களை கைவிரலில் எண்ணாமல், நிறையபேர், கோயிலில் கொடுத்த மஞ்சள்காப்பில் கோயில் சுவற்றில் தனக்கென்று ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்கே ஒவ்வொரு பிரதட்சணத்துக்கும் ஒரு மஞ்சள் புள்ளி அடையாளம் வைப்பது, கட்டியிருக்கும் புதுப்புடவையிலிருந்து ஒரு நூல் இழையை உருவி, வில்வமரத்தில் சுற்றுவது எல்லாம் அநியாயம்.

சின்ன வயதில் நாரயணன் (என்னைவிட 5 வயது பெரியவன்) தாயார் கோயில் கொலு பற்றிச் சொல்லியிருக்கிறான், “ஐய, உங்காத்து கொலுவெல்லாம் ஒரு கொலுவா? சும்மா உங்காத்து உயரத்துக்கு தானே வெக்கறீங்க, தாயார் கோயில்ல வெப்பாங்க பாரு கொலு, ஐயோ! கோயில் எவ்வளவு உயரமோ, அவ்ளோ உயரம் வெப்பாங்க! எவ்வளவு படின்னு எண்ணிப் பாக்கவே முடியாது! நான் ஒவ்வொரு தடவையும் எண்ணப்பாப்பேன்; நடுவுல விட்டுப் போயிடும் (என்று கையை உதறுவான்). அப்புறம் யானை சூப்பரா நொண்டி அடிக்கும்.. ‘ரெங்கா’ன்னு மூணுதடவை கத்தும்..”

இந்த நாராயணன் கதைகளை நான் என்றிலிருந்து கேட்க ஆரம்பித்தேன் என்று சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் என் குழந்தை நாள்களை சுவாரசியமாக்கியவன். எப்பொழுதும் ஒரு 4 பேரையாவது நிறுத்திவைத்து தான் படித்த காமிக்ஸ்களை இன்னும் மசாலா சேர்த்து கையை ஆட்டி ஆட்டிக் கதை சொல்லுவான். இரும்புக்கை மாயாவியும் விக்கிரமாதித்தன் வேதாளமும், டோக்கியோவில் தமிழ்வாணனும் எப்படி என்று அவன் வர்ணனைப்படி தான் எனக்குத் தெரியும். நிச்சயம் ஒரிஜினலைவிடப் பிரமாதமாகத்தான் சொல்லியிருப்பான் என்று நம்புகிறேன்.

எங்கு அவன் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தாலும் போட்டது போட்டபடி ஓடுவேன். முக்கால்வாசி யார்வீட்டுக் காரிலோ, சுவற்றிலோ சாய்ந்துகொண்டு எங்களை எதிரில் நிற்கவைத்துத்தான் சொல்வான். அவனுக்காகத்தான் கூட்டம் கூடியிருக்கிறது என்பதை அவன் தெளிவுப்படுத்துவதுபோல் தலைமையாகத்தான் நிற்பான்.

வீட்டிற்குத் தெரியாமல், பத்மா டாக்டர் வீட்டு வாசலில் சரித்து வைத்திருக்கும் மாட்டு வண்டியில் சறுக்குமரம் விளையாட, பையன்கள் படையுடன் போய்க்கொண்டிருக்கிறேன். குண்டு அஷோக் வீட்டு வாசலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நாராயணன், ‘ஐயோ சாயங்காலம் ஆச்சு. இனிமே சக்கிலியன் கோட்டை வாசல் தாண்டிப் போகாத! போனா, அங்க இருக்கு பாரு ரெண்டு சிலை, அது உன்னைப் பிடிச்சுக்கும். அதுக்கு லேடீஸ்னாலே பிடிக்காது.”

நான் என்னளவுக்கு புத்திசாலித்தனத்தோடு, “எல்லாக் கோட்டை வாசல்லயும்தான் பொம்மை இருக்கு. எல்லாருமா பிடிச்சுக்கறாங்க. அங்கெல்லாம் நான் போயிருக்கேனே..”

“அங்கல்லாம் கோயில் நுழைவாசல் இருக்கும். பெருமாள் காப்பாத்துவார். மேலவாசல்ல மட்டும் நுழைய வாசல் இல்லையோன்னோடி. அதான் உன்னை யாரும் காப்பாத்த முடியாது. அப்புறம் நான் சொல்லலைன்னு சொல்லாத. அவ்ளோதான்.” முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு நான் மட்டும் திரும்பிவிடுவேன்.

சொல்லும் கதையை எல்லோரும் நம்புவதுபோல் கொஞ்சம் கூட எங்குமே லாஜிக் உதைக்காமல் எதிர்கேள்வியால் மடக்கவே முடியாமல் சொல்வான்.

அப்படிப்பட்ட நாராயணன் சொன்னதை வைத்து தாயார்கோயில் கொலு பற்றிய என் கற்பனைகள் எவ்வளவு விரிந்தது என்று சொல்லத் தெரியவில்லை. மிகப் பெரிய (நாராயணனாலேயே) எண்ணமுடியாத அளவு படிகளை உடைய கொலுவையும், யானை நொண்டி அடிப்பதையும், ரெங்கா என்று கத்துவதையும், அதன்குரல் அப்போது எவ்வளவு பெரிதாகக் கேட்கும் என்பதையும் என்னால் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை. ஏனென்றால் ஆடு மாடு பறவைகளின் குரல்களைக் கேட்டிருப்பது போல் யானையின் குரலை நான் வேறு எப்போதும் கேட்டதேயில்லை.

வேட்டுச்சத்தம் கேட்டதும் ஊரே, கோயில் கொலுவிற்கு ஓடும். என்வீட்டில் கூட்டிப் போனதே இல்லை. எப்பொழுதும் வீட்டு கொலுவிற்கு வருபவர்களைக் கவனிக்கவே அம்மா, பாட்டிக்கு நேரம் சரியாக இருக்கும். வேறு யாரும் அக்கம் பக்கத்தவர்கள் அந்தக் கூட்டத்தில் ரிஸ்க் எடுத்து சிறு பெண்ணான என்னைக் கூட்டிப் போகத் தயாரில்லை.

தாங்கமுடியாத ஒரு நாளில் அழுதுபுரண்டதில் மறுநாள் ஆபீஸிலிருந்து அப்பா சீக்கிரம் வந்து என்னைக் கூட்டிப் போவதாகக் கூறினார். அந்த 24 மணிநேரத்தை எப்படிக் கழித்தேன் என்று சொல்லத் தெரியவில்லை. அவ்வளவு பெரிய கொலுவில் எல்லா பொம்மைகளும் பெரிதாக இருக்குமா, சிறிதாக இருக்குமா, என்னென்ன பொம்மைகள் இருக்கும்.. பலமுறை யானை ‘சப்பை’ வைக்காமல் நொண்டி அடித்து, ‘ரெங்கா’ என்று கத்திவிட்டுப் போனது கற்பனையில்.

மறுநாள் போனபோது நான் எதிர்பார்த்ததைவிட அதிகக் கூட்டம். (இப்போதெல்லாம் அதைவிட அதிகம். ஆனால் அப்போதைக்கு அதுவே எனக்கு அதிகம்.) கூட்டம் அருகே போனதும் அப்பா என்னைத் தூக்கி வைத்துக் கொண்டார். கொஞ்சம் (கொஞ்சமென்ன கொஞ்சம், அதிகமாகவே அப்போது) குண்டுக் குழந்தை. அப்பா ‘தம்’ கட்டிக் கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறேன். பார்த்தால் ஒரு மண்டபத்தில் தாயார் மட்டும் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தார். எனக்கு எதுவும் சுவாரசியமாக இல்லை. ‘கொலு பார்க்கப் போகலாம்பா!’ என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தேன். அப்பா கவனிக்கவே இல்லை. ஒரு சிணுங்கலாக அடம்பிடிக்கவும், “இன்னும் என்ன கொலும்மா, இதுதான் கொலு!” என்றார்.

“இல்லப்பா நிறைய மா(வா)னத்லேருந்து படிவெச்சு கோயில்ல பொம்மைக் கொலு வெச்சிருப்பாளே.. அது பாக்கப் போகலாம்.”

அப்பாவிற்குப் புரியவில்லை.

“அப்படியெல்லாம் எங்கயும் வெக்கலை. இதுதான் கொலு. பாரு, யானை இப்ப நொண்டி அடிக்கும்; ரெங்கான்னு கத்தப் போறது.”

“சரி, அதெல்லாம் முடிஞ்சதும் கொலு பாக்கப் போகலாம்பா.” அப்பா அப்புறமும் கவனிக்கவேயில்லை. நாதஸ்வரமும் கொட்டுச்சத்தமும் என் மென்மையான காதுகளுக்கு அதிகமாக இருந்தது. கூட்டம் வேறு ஒரே பேச்சுச் சத்தம். எல்லாவற்றையும் கொஞ்சம் நேரம் நிறுத்தினால் போதும் என்றாகிவிட்டது.

திடீரென்று யானை ஒரு எக்கி எக்கியது. அப்பா தூக்கி வைத்திருந்தும் எனக்கு ஓரளவுதான் தெரிந்தது. ஆனால் பின்னாளில் ஜெமினி சர்க்கஸ் யானை செய்ததில் ஆயிரத்தில் ஒருபங்கு கூட இல்லை. நான் பாண்டி விளையாடும்போது அடிக்கும் அளவுக்கு நொண்டியை எதிர்பார்த்த எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பிறகு ஓங்கி ஒரு சத்தம் கொடுத்தது. அதை எப்படி எழுத்தில் எழுதுவது என்று தெரியவில்லை. எனக்கு வயிறுவரை அதிர்ந்தது. அப்படித் தொடர்ந்து மூன்றுமுறை செய்தது. உடனே எல்லோரும் ‘ஓ’ என்று சந்தோஷத்தில் கத்தினார்கள்.

அப்பாவும் சிரித்துக்கொண்டே, தன் பெண்ணின் ஆசையை நிறைவேற்றி வைத்த திருப்தியோடு, “எப்படி யானை ரெங்கான்னு கத்தித்து?!” என்றார். தூக்கிவாரிப் போட்டது எனக்கு. அப்படி எங்கே கத்தியது? புரியாத வகையில் ஏதோ சத்தம் தான் படுபயங்கரமாக எழுப்பியது. இதை எப்படி ரெங்கா என்று கத்துவதாகச் சொல்கிறார்கள்? கூட்டம் கலையத் தொடங்குகிறது.

அவ்வளவுதானா??!!

என்னை யானை ஏமாற்றிவிட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. ஏன் பெரியவர்கள் எல்லாம் இவ்வளவு மண்டுவாக இருக்கிறார்கள்?

என்னைத் தூக்கிக்கொண்டே எதிரிலிருந்த கம்ப மண்டபம் வரை வந்த அப்பா, இறக்கிவிடப் பார்க்கிறார்.

“கொலு பாக்கப் போகலாம்பா..”

“இதுதாம்மா கோயில் கொலு. நம்பாத்துலதான் நிறைய வெச்சிருக்கோமே. இன்னும்கூட நிறைய பொம்மை வாங்கித்தரேன்…”

“இல்லப்பா, கோயில்ல கொலு இருக்குன்னு நாராயணன் சொன்னான்; உங்களுக்குத்தான் தெரியலை..”

இப்போது அப்பாவிற்குப் புரிந்திருக்கும் விஷயம். நாராயணன் என்ற பெயர் என்வீட்டுப் பெரியவர்களுக்கு ஒரு அலர்ஜி. ஏதோ தட்டிவிட்டிருக்கிறான் என்று தெரிந்துகொண்டு, “சரி, நாளைக்கு அவனையும் கூட்டிண்டு போகலாம்..”

நான் நகர மறுக்கிறேன். மீண்டும் வாசல்வரை தூக்கிக்கொண்டு வருகிறார்.

“அப்படி எதுவும் இல்லைடி செல்லம். இருந்தா அப்பா காமிக்க மாட்டேனா?” கோயில் வாசலில் மீண்டும் கீழே இறக்கிவிடப் பார்க்கிறார்.

உடம்பை விறைப்பாக்கிக் கொண்டு இறக்கிவிடமுடியாமல் வைத்துக்கொள்கிறேன். ஒருவார்த்தை கூட என்னால் பேசமுடியவில்லை. தொண்டையை எதுவோ பேச முடியாமல் அடைத்துவிட்டது. என்னால் இந்த ஏமாற்றத்தைத் தாங்கவே முடியவில்லை. இறங்கி நடக்கவே தெம்பில்லை போல் இருந்தது.

அப்பாவும் ஒன்றும் செய்யமுடியாமல் தூக்கிக்கொண்டே வீடுவரைக்கும் வருகிறார். அவருக்கு மூச்சுவாங்குகிறது. நன்றாகவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

அப்பா என்று இல்லை, எல்லோரையுமே பழிவாங்கவேண்டும் போல் இருக்கிறது. எப்படி என்றுதான் தெரியவில்லை.

வீட்டுக்குப் போனதும் பாட்டியிடம் என்னை விட்டுவிட்டு அப்பா சாப்பிடப் போய்விட்டார். ஒன்றும் பேசாமல் பாட்டிமேல் சாய்ந்துகொண்டேன். ஏமாற்றத்தில் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது.

“உன்பேத்திய இன்னிக்கி தூக்கிண்டு வீதிபிரதட்சணம் வரேன்னு வேண்டுதல் போல இருக்கு எனக்கு.” பெண்ணை சந்தோஷப்படுத்தப் போகிறோம் என்று நினைத்து ஏமாந்ததில் அப்பா பொரிந்து தள்ளுகிறார்.

பாட்டிமேல சாய்ந்திருக்கும்போது அம்மா, நான் கோயிலுக்கென்று போட்டுக்கொண்டு போன புதுகவுனை மாற்ற வந்தாள். குப்புறப் படுத்துக்கொண்டு அவிழ்க்கவே முடியாமல் கையால் இறுகப் பிடித்துக்கொண்டேன். யார் என்ன சொன்னாலும் கேட்கக்கூடாது, எதிர்க்க வேண்டும் என்று ஒரு பிடிவாதம்; வெறுப்பு.

சாப்பிட்டுக் கொண்டே நடந்த எல்லாவற்றையும் பாட்டியிடம் சொல்கிறார் அப்பா. ‘அந்த நாரயணனோட சேர விடாதீங்க இனிமே’ என்ற முடிவுரையோடு தன் சிற்றுரையை முடிக்கிறார்.

வெளியே யாராவது போய்விட்டு வந்தால் என்தம்பி அவர்கள்மேல் ஓடிவந்து சாய்ந்துகொள்வான். அவ்வளவு நேரமாக என்னை விளையாடத் தேடியிருப்பான் போல் இருக்கிறது; அவ்வளவாக அப்போது அவனுக்கு வார்த்தைகளும் சேர்த்து பேசவராது. பாட்டி மடியில் நான் படுத்திருந்ததால் அவன் வந்து ஆசையாக என் கால்மேல் தலைவைத்துப் படுத்துக்கொண்டான். ஒரு எத்து எத்திவிட்டேன். இப்போது நினைத்தாலும் மனம் பதறுகிறது. அவன் தலை ‘டங்’கென்ற சத்தத்தோடு கீழே விழுந்தது. இதற்குமட்டும் அம்மா கடுப்பாகி என்னை அடிக்க வந்தாள். பாட்டி, ‘அது தன் நிலைல இல்லை, விட்டுடு’ என்று சொல்லித் தடுத்துவிட்டாள்.

உடனே அப்பா பாதியில் எழுந்துவந்து, தம்பியைத் தூக்கித் தன் மடியில் வைத்துக்கொண்டு தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்தார். அது இன்னும் தாங்கமுடியாததாக இருந்தது. அதற்குப் பதில் அப்பா என்னைத் திட்டியிருக்கலாம் என்று தோன்றியது.

‘கோயில்ல கொலுன்னா, தாயார் அலங்காரமா உட்கார்ந்திருக்கா இல்லை, பட்டமகிஷியா அதுதாண்டி. தனியா பொம்மை எல்லாம் வெப்பாளா?.. அவ்ளோ பெரிய உடம்பை வெச்சுண்டு யானைக்கு நொண்டி அதுக்குமேல அடிக்க முடியுமா.. அதுக்கு ரெங்கான்னு உன்னை மாதிரி சொல்ல பேச்சுதான் வருமா?.. ஆனா அப்படி அது சொல்றதுன்னுதான் நினைச்சுக்கணும்… நாரயணன் ரொம்ப துஷ்டை. சேராத அவன்கூட..”

பாட்டி விட்டு விட்டு சொல்லிக்கொண்டே தலையைத் தடவித் தூங்கவைக்கப் பார்க்கிறாள். இதெல்லாம் எதுவுமே நான் நினைத்ததுபோல் நடக்கமுடியாது என்பதும், நாராயணன் துஷ்டை என்பதும் என்னால் தாங்கவே முடியவில்லை. அவ்வளவு நேரம் அடக்கிக்கொண்டிருந்த என் கண்ணிலிருந்து கண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது.

எனக்கு நினைவு தெரிந்து வந்த முதல் ஏமாற்றம், கோபம். எப்பொழுதும்போல் காரியம் சாதித்துக்கொள்வதற்காக வருவித்துக் கொண்ட அழுகையாக இல்லாமல் என் யத்தனமில்லாமல் வந்த முதல் அழுகை.

குழந்தைகளின் கற்பனைகள் நொறுங்குவதும், குழந்தைமை தொலைவதும் இன்னொரு மரித்து எழும் வலி.

[இன்னமும் நவராத்திரி சமயத்தில் ஸ்ரீரங்கத்தில், ‘தாயார் கோயிலில் கொலு!’ என்றும், ‘யானை நொண்டி அடிக்கிறது!’ என்றும் “ரெங்கா என்று மூன்று முறை கத்துகிறது!’ என்றும்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.]

நன்றி: மரத்தடி.காம்

நவராத்திரி: நினைவலைகள் –  சுந்தர்.

தமிழ்நாட்டில் பெண்பார்க்கச் செல்பவர்களுக்குக் கொடுக்கப் படும் முக்கிய உணவு. : ) எப்பொழுதிலிருந்து அந்த இடத்தை இது பிடித்தது, ஏன் அவர்களுக்கு பஜ்ஜியை தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை மக்கள் வந்ததும் வேகமாகத் தயாரிக்க முடிவதும், ஒரே வகையில் வெரைட்டி காண்பிக்க முடிவதும் காரணமாக இருக்கலாம். தமிழ்நாட்டின் நடைபாதைத் தள்ளுவண்டிகளில் அன்றாடம் அதிகம் விற்பனை ஆவதும் இதுவாகத் தான் இருக்கும்.

தேவையான பொருள்கள்:

கடலைப் பருப்பு – 1 கப்
பச்சரிசி – 1/3 கப்
துவரம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
காய்ந்த மிளகாய் – 4 அல்லது 5
பெருங்காயம்
எண்ணெய்
உப்பு – தேவையான அளவு.

கத்திரிக்காய், வாழைக்காய், வெங்காயம், உருளைக் கிழங்கு, சௌசௌ போன்ற காய்கறிகள்….

bajji 1

செய்முறை:

  • கடலைப் பருப்பு, துவரம் பருப்பு அரிசியைச் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • ஊறியதும் பெருங்காயம், காய்ந்த மிளகாய், சேர்த்து மிக மென்மையாக இட்லிமாவு பதத்திற்கு அரைக்கவும். கிரைண்டரில் அரைத்தால் நலம். மிக்ஸியும் பரவாயில்லை.
  • அரைத்து எடுப்பதற்கு முன் உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • காய்கறிகளை தயாராக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காய், உருளைக் கிழங்கு, வெங்காயம், சௌசௌ போன்ற உருளையான காய்களை மெல்லிய வட்டமாக நறுக்கவும். வாழைக்காயை இரண்டாக வெட்டி, அகலமான இரண்டு பக்கங்களில் மட்டும் தோல்சீவி, நீளவாக்கில இரண்டு பக்கமும் தோலோடு மெலிதாக நறுக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து நன்கு சூடாக்கவும். பஜ்ஜிக்கு எண்ணெய் குறைவாகக் காய்ந்திருந்தால் சரியாக வேகாமல் எண்ணெயைக் குடித்து சவசவவென்றிருக்கும். அதிகம் காய்ந்திருந்தால் மேலாகக் கருகி, உள்ளே காய் வேகாமல் இருந்துவிடும். சரியான பதத்தில் எண்ணெய் சுட்டதும் அடுப்பை நிதானமான சூட்டில் வைக்கவும்.
  • நறுக்கித் தயாராக வைத்திருக்கும் காய்கறிகளை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து, எண்ணெயில் போடவும்.
  • இரண்டு பக்கமும் பொன்னிறமாகப் பொரிந்து பஜ்ஜி உப்பிவந்ததும் எண்ணெயை வடித்து வெளியே எடுக்கவும். 

bajji 2 

*  வெங்காயம், சௌசௌ போன்ற காய்கள் கொஞ்சம் இனிப்பாக இருப்பது பிடிக்கவில்லையென்றால் குடமிளகாயை வட்டமாக நறுக்கி, அதையும் அவைகளோடு சேர்த்து தோய்த்துப் போடலாம்.

* தோய்ந்திருக்கும் மாவு அடர்த்தியாக இல்லாமல், மெலிதாக மூடியிருந்தால் பாதி வேகும்போதே வெளியே எடுத்துவிடவும். அடுத்த தவணை பஜ்ஜியை எண்ணெயில் போட்டு எடுத்துவிட்டு, இவை ஆறியதும் மீண்டும் மாவில் தோய்த்து எண்ணெயில் நன்றாகப் பொரித்து எடுக்கவும். முக்கியமாக அப்பளம் போன்றவைகளுக்கு இந்தப் பிரச்சினை வரலாம்.

* வீட்டிலேயே பருப்புகளை ஊறவைத்து அரைப்பது மிகச் சிறந்த முறை. ஊறவைத்து செய்ய நேரமில்லை என்றால் கடலைப் பருப்பு, துவரம் பருப்பை வாணலியில் வறுத்து 5 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து, மிக்சியில் நைசாக அரைத்து, அரிசி மாவு கலந்து செய்யலாம்.

* பின்வருகிற அளவுகளில் மொத்தமாக மிஷினிலும் அரைத்துவைத்துக் கொள்ளலாம். அவ்வப்போது தேவையான அளவு மாவை உப்பு பெருங்காயம் சேர்த்துக் கரைத்துச் செய்யலாம்.

1. கடலைப் பருப்பு – 3 கப், பச்சரிசி – 1/2 கப், காய்ந்த மிளகாய் – 12

2. பச்சரிசி 1 1/2 கப், துவரம் பருப்பு – 1 கப், கடலைப் பருப்பு – 1 கப், உளுத்தம் பருப்பு – 1/2 கப், காய்ந்த மிளகாய் – 12

* சட்டென பஜ்ஜி தயாரிக்க கடலை மாவு ஒரு கப், அரிசி மாவு ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கரைத்தும் செய்யலாம். அதிகம் பேர் அப்படித் தான் செய்கிறார்கள்.

* பஜ்ஜி கரகரப்பாக இருக்க சமையல் சோடா சேர்ப்பதை விட இரண்டு டீஸ்பூன் டால்டா அல்லது 1 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃளோர் சேர்த்துக் கொள்ளலாம்.

* கரகரப்பாக இல்லாமல் மெத்தென்று இருக்க மைதா மாவு 2 டேபிள்ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம். இது ஆறிய பின்னும் சுவையாக இருக்கும்.

* இட்லி அல்லது தோசை மாவு இருந்தாலும் ஒரு கரண்டி கலந்து கொள்ளலாம்.

* பஜ்ஜி கடையில் செய்வதைப் போல் நிறமாக இருக்க விரும்புபவர்கள் கலர் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது காஷ்மீர் மிளகாய்த் தூள் சேர்த்து உபயோகித்தாலும் அடர் சிவப்பாக இருக்கும். என்னுடையது அதுவே.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தேங்காய்ச் சட்னி…

நல்ல மழை…

சுடச் சுட செய்து தட்டில் எடுத்து வந்து கையில் கொடுக்க அம்மா அல்லது மாமியார் [ஒருவேளை அவர்களைக் கேட்டால் மருமகள் என்று சொல்லலாம். :)]…

“போரடிக்குதுன்னு நீ சொன்னியேன்னு தான் வேலையை எல்லாம் போட்டுட்டு சீக்கிரமே வந்தேன்” என்று (பொய்) சொல்லிக் கொண்டு எதிர்பாராத நாளில் மாலையிலேயே கிரிக்கெட் மேட்ச் பார்க்க வரும் கணவன்…

பேசுவதற்கு சூடான விஷயங்கள்..

“C6 block கட்டிடமே என்னமோ இடிஞ்சு விழுந்துடுச்சுன்றாங்க. காலனியே அங்க இருக்கு, நீ பஜ்ஜி போட்டுகிட்டிருக்க?”

“எதுக்கு இவ்ளோ அதிர்ச்சி? ரெண்டு வருஷமா அதைத் தானே நான் அலறிகிட்டிருக்கேன். கன்ஸ்ட்ரக்ஷன் படு கேவலம். எல்லாரும் சாப்பிட்டுட்டாங்கன்னு நான் சொல்லும்போதெல்லாம் ஆளாளுக்கு வானமாமலை ஜீயரைச் சுத்தி நிக்கிற அடிப்பொடிகள் மாதிரி உஸ் உஸ்னு என் வாயை அடைச்சாங்க. இன்னிக்கு என்னவோ நடக்க முடியாதது நடந்த மாதிரி…. எனக்கு அதிர்ச்சியெல்லாம் இல்லை. நல்லவேளை, யாருக்கும் ஒன்னும் ஆகலை, வீட்டுக்குள்ள இருந்திருக்காங்க. இதுக்கு மேல இதுக்கெல்லாம் என்னால ரியாக்ஷனும் காமிக்க முடியாது! நான் அங்க ஒன்னும் சொல்லாம வந்ததுக்கே எனக்கு நன்றி சொல்லுங்க. தேவை இல்லைன்னு தான் உங்களுக்கும் ஃபோன்ல சொல்லலை.”

“நீ போய்ப் பாக்கலையா?”

“பின்ன பார்க்காம? ஃபர்ஸ்ட் ஃப்ளோர் வாசல் கதவுலேருந்து மாடிப்படி வரைக்கும் முழுக் காரிடரும் மொத்தமா விழுந்திருக்கு. லட்சக்கணக்குல காலனில திருட்டுப் போனப்ப ஒரு FIR ஃபைல் பண்ண என்ன பிகு செஞ்சாங்க போலீஸ் ஸ்டேஷன்ல, இப்ப ஊருக்கு முன்னாடி வந்து நிக்கறாங்க. நான் போறதுக்குள்ளயே Fire Brigades, Police, Media… எல்லாரும் வந்தாச்சு. ஒரு மாசத்துக்குள்ள காலி செய்யணுமாம். இல்லைன்னா சீல் வெப்போம்னு ஆர்டர்..”

“உனக்கு பயமா இல்லையா இந்த பில்டிங்ல இருக்க? கூலா பஜ்ஜி சாப்பிடற, அலட்டிக்காம கம்ப்யூட்டர்ல வேற வந்து உக்கார்ற?”

“இல்லையே சூடாத் தான் பஜ்ஜி சாப்பிடறேன். உங்களுக்கு பயமா இருந்தா ப்ளாட்ஃபார்ம்ல போய்ப் படுங்க. நானெல்லாம் தமிழச்சி. உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்…” ஐயோ!! மேற்குப் பதிப்பகம் கிட்டேயிருந்து பின்னூட்டம் வந்திருக்கா?? தலை சுத்துதே..!!!

மிளகாய் பஜ்ஜி இன்னபிற….

பஜ்ஜி குறித்த சுவாரசியமான கட்டுரைத் தொடர்…

அடுத்த பக்கம் »