“ஏய் இங்க வா, உன்னை என்ன கேட்டாங்க?”
“சமையல் குறிப்பு நகைச்சுவையா எழுதச் சொல்லி கேட்டாங்க”
“எழவு நகைச்சுவைக்கும் சமையல்குறிப்புக்கும் என்ன சம்பந்தம்?”
“சமையல்குறிப்புன்னாலே எல்லாருக்கும் நகைச்சுவையாத்தானே இருக்கு. அதனால இருக்கும். :(“
“அடப்பாவமே! நகைச்சுவைக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?”
“சிறுபத்திரிகைக்கும் சமையல்குறிப்புக்கும் என்ன சம்பந்தம்னே முதல்ல எனக்குத் தெரியலை..”
“சரி விடு. எழுதினியா, எத்தனை எழுதின?”
“ரெண்டு”
“ஒண்ணு இங்க இருக்கு. இன்னொன்னு எங்க?”
“அந்த இன்னொன்னு தாங்க இது! :(“
“இதுல என்ன இவ்ளோ கோரமை?”
“தேவை இல்லைதான். ஏதோ ஜெமோ முதல் இதழ்ல எழுதலைன்னு ஃபீலிங்ஸ் வேண்டாம், அவர் எழுத்தையாவது கொண்டுவந்துடலாம்னு இப்படி எழுதிட்டேன். 😦 இனிமே இப்படி நடக்காது.”
—–
அடைப்புக்குறிகளுக்குள் இருக்கும் எழுத்தாளர் ஜெயமோகனின் வரிகளுக்கு நன்றி.
[“வென்றவர்களின் வரலாறு அளவுக்கே தோற்றவர்களின் வரலாறும் முக்கியம் என நமக்கு கற்பித்தது பின்நவீனத்துவமே.”]
ரவை உப்புமா என்ற ஒரு சிற்றுண்டி அளவுக்கு மலிந்துபோன, மக்களால் புறக்கணிக்கப்படும், ஏளனமாகப் பார்க்கப்படும் உணவு வேறு இல்லை. மற்ற எல்லாச் சிற்றுண்டிகளுமே சிலருக்குப் பிடித்தும் சிலருக்குப் பிடிக்காமலும் என்று ஓரளவாவது அங்கீகாரம் பெற்றவையாக இருக்க, குடும்பத் தலைவிகளின் கைவசமாகும் ரவை உப்புமாவிற்கு மட்டும் மோட்சமே இல்லை. ஆனால் பின்நவீனத்துவம் அதை அப்படியே விட்டுவிடுவதில்லை.
[“தமிழில் பின்நவீனத்துவ சிந்தனைகளில் பெரும்பகுதி தேவையற்ற சிக்கலுடன் முன்வைக்கப்பட்டதென்பது உண்மையே. ஆனால் அவை அடிப்படையில் சிலவற்றை நாம் பார்க்கும்படிச் செய்தன. விளிம்புநிலை மக்கள், புறக்கணிக்கப்பட்ட வாழ்வின் பக்கங்கள் பொதுவில் ஏற்கப்படாத உணர்வுகள். அச்சிந்தனைகளின் விளைவே இப்போது திருநங்கைகளுக்கு கிடைத்திருக்கும் சட்டக்கவனம்.”]
வலிந்து குடும்பத்தில் திணிக்கப்படும்போது, அன்றுமட்டும் டிபன் டப்பாவை வீட்டிலேயே மறந்து(!) வைத்துவிட்டுப் போகும் கணவன், பள்ளி விடுமுறை எடுக்கமட்டுமே வரும் திடீர் வயிற்றுவலி, அன்றும் வந்து சாப்பிட எதுவுமே வேண்டாம்; ஆனால் ஸ்கூலுக்குப் போகிறேன் என்ற முரணான நிலைக்குத் தள்ளப்படும் குழந்தைகள், ஒருநாளும் இல்லாத திருநாளாக அடுத்தவீட்டு அம்மணியே புளிசோறு கொடுத்துட்டாக என்று மறுக்கும் முனியம்மா போன்ற நாசூக்கான அல்லது மௌனமான நிராகரிப்புகள், இன்னிக்கும் அந்த ரவைக்களியைக் கிண்டி வெச்சுட்டாளா என்ற மாமியாரின் பொருமலில் கிளம்பும் உட்குடும்பப் பூசலுக்கான முதல் தீப்பொறி, இவை எல்லாவற்றிற்கும் பின்னும் ரவை உப்புமாவிற்கும் ஒரு கவனிப்பு தேவைப்படத் தான் செய்கிறது.
[“விடுதலை, சமத்துவம், உலகநலன் என்றெல்லாம் கூறிய முந்தைய சிந்தனை மையங்கள் உருவாக்கிய அதிகாரக் குவிப்பு மற்றும் வன்முறையை வைத்து நோக்கும்போது பின் நவீனத்துவம் மேலும் ஜனநாயகமானது என்பதை சாதாரணமாக உணரலாம்.”]
பாரம்பரிய உணவு, பத்தே நிமிடங்களில் செய்யச் சுலபமானது, அதிக முன்னேற்பாடுகள், ஊறவைத்தல், அரைத்தல், கரைத்தல்கள் இல்லாதது என்ற ஆண்டாண்டு காலமாக சமையலறை அதிகார வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கும் பிரசார பீரங்கிகளை குடியரசு தினத்துக்கு மட்டும் எண்ணெய் போட்டு துடைத்து ஊர்வலத்தில் காண்பிக்க உபயோகப்படுத்துவது குடும்பச் சூழலுக்கு எவ்வளவு ஜனநாயகமானது என்பதையும் நாம் மறுதலிக்க இயலாது. அந்த வகையில் ரவை உப்புமாவிற்கான கவனத்தை குடும்பத்தினர் பார்வைக்குக் கொண்டுவர வேண்டியதன் விளைவாகக் கிளம்பியது இந்தக் கலகம்.
[“ஐரோப்பாவில் பெரும் கோட்பாடுகளின் சரிவு பின்நவீனத்துவத்தை உருவாக்கியது என்றால் இந்தியாவில் ஜனநாயகத்திலும், அதற்கு எதிரான புரட்சிகர வன்முறையிலும் ஒரே சமயம் உருவான அவநம்பிக்கை அதை உருவாக்குகிறது.”]
குடும்பத்தாரின் விருப்பங்களை அலட்சியப்படுத்தும் அதிகார மனப்போக்கும், அதனைத் தொடரும் உப்புமாவைக் குப்பையில் கொட்டவேண்டிய வன்முறைக்கும் எதிரான சூழ்நிலையில் இந்தக் கலகம் மிக மிக அவசியமாகிறது.
[“கருத்துக்கள் என்பவை மொழியால் உருவாக்கப்படுபவை என்ற நம்பிக்கை பின்நவீனத்துவத்திற்கு உண்டு. அவை நிரந்தரமான கட்டுமானங்கள் அல்ல என அது நம்புகிறது. ஆகவே அது கருத்துக்களையும் மொழியையும் சதுரங்க விளையாட்டாக மாற்றிக்காட்டுகிறது நமக்கு.”]
தேவையான பொருள்கள்:
ரவை உப்புமா – 1 கப்
துவரம் பருப்பு – 1/4 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
கொத்தமல்லித் தழை – சிறிது
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை:
-
ஒரு பின்நவீனத்துவவாதி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பை ரவை உப்புமா செய்ய நினைக்கும்போதே தண்ணீரில் ஊறவைத்துவிடுவாள்.
-
குறைந்தது இரண்டு மணிநேரம் ஊறிய பருப்புகளோடு காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
-
‘ஙே’ என்று விழித்துக்கொண்டிருக்கும் ரவை உப்புமா, தேங்காய்த் துருவலுடன் தேவையான தண்ணீரும் சேர்த்து, அடைமாவு பதத்திற்குக் கலந்துகொள்ளவும்.
-
நறுக்கிய கொத்தமல்லித் தழையையும் பிசிறிக் கொள்ளவும்.
-
அடுப்பில் தோசைக்கல்லைக் காயவைத்து, ஒரு கரண்டி மாவை நடுவில் வைத்து அடைமாதிரி சற்று கனமான வட்டங்களாக வார்க்கவும்.
-
சுற்றிலும் எண்ணெய் விட்டு, நடுவிலும் துளையிட்டு எண்ணெய் விட்டு, சிவக்க வேகவைக்கவும்.
-
மறுபக்கமும் திருப்பிவிட்டு, எண்ணைவிட்டு மொறுமொறுப்பாக எடுத்து, சூடாகப் பரிமாறவும்.

* உள்ளே தாளித்த கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாயைப் பார்த்து, குடும்பம் குழம்பும். பரவாயில்லை; பின்நவீனத்துவ அரசியலில் குழப்பம் சகஜம்.
* தக்காளிச் சட்னி, வெங்காயச் சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.
[“ஆனால் பின்நவீனத்துவம் எங்கும் ஒரேவகையானது அல்ல. அந்த ‘டிரெண்ட்’ ஒன்றுதான். வெளிப்பாடு ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வகை. அதற்கு அந்தப் பகுதியின் கலாச்சாரம் வாழ்க்கைமுறை என எத்தனையோ காரணங்கள். அதன் தனித்தன்மை அந்த ஆசிரியனின் ஆளுமை, அவன் வாழும் சூழலின் இயல்பு, மண்ணின் அடையாளம் ஆகியவை கலந்து மாற்று இல்லாத தனித்தன்மையுடன் இருக்கும்.”]
ஆனால் இந்த அடைபோன்ற வடிவம் மட்டுமே உப்புமாவுக்கான இறுதி நிலை என்று கொள்ளத் தேவை இல்லை. அவரவர் வசதி, திறமை, காலக் கெடுபிடிக்கேற்றவாறு இதை பொங்கல், போண்டா, குணுக்கு, தோசை, வடை, இட்லி, இடியாப்பம், இன்னும் இவை எதுவுமே இல்லாத இன்னொன்றாகக் கூடச் செய்துகொள்ளலாம்.
[“பின் நவீனத்துவம் இன்றைய வாழ்க்கை நோக்கில் இயல்பாகவே உள்ளது. ரீமிக்ஸ் பாடல்கள் ஓர் உதாரணம். நாம் நிகழ்ந்தவற்றை ஏன் நிகழ்ந்தது எப்படி நிகழ்ந்தது என்று நோக்குகிறோம். மீண்டும் நிகழ்த்திப் பார்க்கிறோம். மாற்றியமைக்கிறோம். கிண்டல்செய்கிறோம். விரிவாக்கிப்பார்க்கிறோம்.”]
ஆக அது அதன் அடிப்படை மட்டும் சாராது, கையாள்பவரின் ஆளுமையையும் தன்வயமாக எடுத்துக்கொள்கிறது. இந்த எடுத்தாள்கைப் படைப்பு, ‘எங்கேயும் எப்போதும்..‘ பாடலைப் போல வெற்றியடையுமா அல்லது ‘பொன்மகள் வந்தாள்…’ போலப் புலம்பவைக்குமா என்பதை காலத்தின் தீர்ப்புக்கு விட்டுவிட வேண்டும். ஆனால் அதுவரை அதுகுறித்த ஓர் ஓயாத விவாதம் சமையல் உலகில் நிகழ்ந்தவண்ணம் இருத்தல் அவசியம்.
[“பின்நவீனத்துவம் பற்றிய மிக முட்டாள்த்தனமான பேச்சே இது ஒரிஜினல் பின்நவீனத்துவம் இல்லை, அதுதான் என ஐரோப்பாவையோ அமெரிக்காவையோ காட்டுவது. அப்படிசொல்லக்கூடாது என்றுதான் பின்நவீனத்துவம் வாதிடுகிறது.”]
இங்கே இந்த ரவை உப்புமா ரீமிக்ஸ் மட்டுமே ஒரு பின்நவீனத்துவம் என்பதாகாது. இலக்கிய எழுத்துகளில் தாழ்த்தப்பட்டதாகவும் விளிம்புநிலையிலும் இருக்கும் சமையல் குறிப்புகளும் கூட முதன்முதலாக சிறுபத்திரிகையில் கவனத்தைப் பெற்றவகையில், இந்தக் கட்டுரையேகூட ஒரு கலகக் கட்டுடைப்பாகவும், அதை நோக்கிய முக்கிய முன்னகர்வாகவும் கவனிக்கத் தக்கது.
—
“அம்பலத்தின் என் கதை வெளியாகியும், அதை எனக்குத் தனிமடலில் தெரியப்படுத்தவில்லை, இனிமேல் அம்பலத்துக்கு என் படைப்புகளை அனுப்பவே மாட்டேன்,” என்று குதியாய்க் குதித்த கவிஞர்/ எழுத்தாளர்/ பத்திரிகையாசிரியர் ஹரன் பிரசன்னா, தான் ஆசிரியராக இருக்கும் பத்திரிகையில், அவர்களாகவே கேட்டு, படைப்பை அனுப்பியும் அந்தப் படைப்புகள் நிராகரிக்கப்பட்டதை– காரணம் தேவையில்லை; தகவலாக மட்டும்– சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புவார் என எதிர்பார்ப்பது அப்படி ஒன்றும் தவறு இல்லை என்று நினைக்கிறேன். சுயவிலாசமிட்ட, அஞ்சல்தலை ஒட்டிய உறை உள்ளே வைத்து அனுப்ப சாத்தியமில்லாத மின்னஞ்சல் வகை படைப்புகளுக்கு அது அவசியமும் கூட. இட்லிவடை சொல்லி நான் தெரிந்துகொள்ளவேண்டிய (துர்)பாக்கியத்திற்கு நன்றி.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...