சமகால இலக்கியம் :)


“எவஞ்சொன்னது, கமல் மரபைக் கட்டுடைப்பவர்ன்னு?” என்று நான் கேட்கமுடியவில்லை.

வழக்கம்போல் “நான் மரபைப் கட்டுடைப்பவனாக்கும்” என்று மீசைமுறுக்கியிருக்கிறார்.  😦

தீபாவளியன்று விஜய் டிவி “காஃபி வித் அனு”வில் கமல் எழுதி வாசித்தது…

கம்பரே வெண்பா கடினம் என்றுதான் விருத்தம் கையாண்டதான முன்னுரையுடன் “கல்லும் சொல்லாதோ கதை” என்ற ஈற்றடி எடுத்துக் கொடுத்தவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள்.

 

மகதலினா கல்பட்டும் தேறினளாம் அவளக்காள்
அகலிகையும் கால்பட்டு மீண்டனளாம் – இகமிதிலே
அல்லலுறும் நவயுகத்து நாயகியர் அகமகிழக்
கல்லும்சொல் லாதோ கதை.

[*முதல் வார்த்தை இன்னதென்று விளங்கவில்லை. என்  சிற்றறிவை  வைத்துக்கொண்டு அனுமானிக்கவும் முடியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும். (இரா.முருகன் அருளால் கிடைத்துவிட்டது.. நன்றி.) தனிச்சொல் ‘இகமிதிலே’ பேராசிரியரால் பாராட்டப்பட்டது.]

 

ஆத்தமா னார்(அ)யலார் பள்ளிப் பறித்தெடுத்து
மூத்தவர்யா மெனக்கூறி அமர்ந்திருக்கும் சூத்திரத்தைச்
சொல்லின்றிக் கூறிவிடும் பழங்கோயில் கேட்டுப்பார்
கல்லும்சொல் லாதோ கதை.

[“ஆத்தமானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்..” என்ற திருவாசக அடியிலிருந்து தான் எடுத்தாண்டதாக கமல் கூறினார்.]

 

ம்ம்ம்.. நல்ல முயற்சி. வெண்பா அதிகம் தெரியாமல் ஆனால் ஓசைநயத்திலேயே சரியாக எழுதுபவர் என்று கமலை பேராசிரியர்  அறிமுகப்படுத்தினார். அப்படிப்பட்ட கமல் கொஞ்சம் மோனையிலும் கவனம் செலுத்தியிருக்கலாமோ… (இப்ப ரொம்ப முக்கியம்!)

 

எத்தனை இடங்களில் பிரிக்கமுடியுமோ பிரித்துவிட்டேன்; அத்தனையும் மீறி இத்தனை இடங்களில் தளைதட்டிய ஒன்றை வெண்பா என்று பேராசிரியர் பாராட்டித் தள்ளினார். இவர்கள்தான் கமலின் வளர்ச்சிக்குப் பிரச்சினை.

 

* சமீபமாக புகழ்ச்சிகளில் நெகிழ்கிற கமலைப் பார்க்கக் கவலையாக இருக்கிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் பாராட்டப்படும் சிறுவர்கள்போல் நடந்துகொள்கிறார்.

* தொ.பரமசிவன் என்கிற தொ.ப எழுதிய ‘மனிதர்களின் தெய்வங்கள்’ குறித்து சிலாகித்தார். வாங்கிப் படிக்கவேண்டும்.

* கடவுளை மொத்தமாக மறுக்கும் நாத்திகர்- வெங்கடாஜலபதியிலிருந்து வெக்காளி, இசக்கிவரை- என்று நான் நினைத்துக்கொண்டிருக்க, ‘அவனோட’ சாமியை ‘அவனை’க் கும்பிட அனுமதிக்கவேண்டும் என்றார். பெருந்தெய்வங்களையும் (தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்னு சொல்வாங்க.. ஆனா அவரைப் பார்க்க திருப்பதிக்குதான் வரச்சொல்வாங்க) பெருவழிபாடுகளையும் (தொப்பையில் காலணாவை வைத்து வீட்டுக் கிணற்றிலேயே தூக்கிப்போட்டுவந்த பிள்ளையாருக்கு பிரமாண்டப் பெருவிழா எடுக்கக் கிளம்பியிருப்பது) மட்டுமே புறக்கணித்தார். டிபிகல் இணைய நாத்திகவாதம். ஏமாற்றம்.

* மதம் அவரவர் படுக்கையறைச் சமாசாரம் மாதிரி; அவரவரோடு அந்தரங்கமாக முடிந்துவிட வேண்டியது என்று சொன்னவர், தான் மட்டும் எப்பொழுதும் பொதுவில் அவருக்குகந்த உடையை படுக்கையறையிலேயே  நிறுத்திக்கொள்ளாமல் (கருப்பு; அதுவும் இந்தமுறை படுகேவலமான டிசைனில் இருந்தது.) ஏன் வரவேண்டும்; இவரும் நாத்திகத்தை மனதுக்குள் அந்தரங்கமாக வைத்துக்கொண்டு, வெளியே பொதுவில் வண்ணமயமான ஆடைகளில் வரலாமே என்ற என் ஆதங்கத்திலிருந்து இன்னும் கேட்க/சொல்ல நினைக்கும் பல விஷயங்களைச் சொல்லாமல் விடுவதற்கு என் கமலபிமானம் மட்டுமே காரணம் என்று யாரும் (சரியாகக்) கணக்குப் போடவேண்டாம். தயவுசெய்து என் வழமையான சோம்பேறித்தனம் மட்டுமே காரணம் எனக் கொள்ளவும்.

எச்சரிக்கை: இந்தப் பதிவிற்கு, “உங்காளை முதல்ல அடுத்தவனுக்குப் புரியற மாதிரி பேசச்சொல்லு”, “I am not surprised. கமலுக்கு உளறிக்கிட்டே இருக்கணும்” மாதிரி மறுமொழிகள் [என்மீதான  :))] தனிநபர் தாக்குதலாகக் கருதப்பட்டு கடுமையாக மட்டுறுத்தப்படும். ஏற்கனவே வீட்டில் கேட்டுக்கேட்டு கோபத்தில் கொலைவெறியில் இருக்கிறேன். எரிச்சலில் எக்குத்தப்பாக எங்காவது யந்திரன் படத்திற்கு ஏடாகூட விமர்சனம் எழுதிவிடும் அபாயம் இருப்பதால்…

மரத்தடி ஆண்டுவிழாப் போட்டி – 2004 க்கு எழுதி மூன்றாம் பரிசு வென்ற வெண்பா (மரபுக் கவிதை)
சுஜாதா சொன்னதற்காக (மட்டும்) ஈற்றடி சற்றே மாற்றியமைக்கப்பட்டது.

-0-

அள்ளி யணைத்தவளு(ம்) அன்னையுமோர் பெண்ணாக
உள்ளில் உயிர்த்த உறவுமட்டும் பெண்ணாகில்
கள்ளிப்பா(ல்) ஊட்டியே காரியம் தீர்ப்பவரைத்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

விந்தைபல கற்றறிந்து விண்ணேர் பருவத்தில்
கந்தக வாசமுடன் கார்துடைத்து சேய்வளர்த்து
கள்ளம் பயின்றுக் கருகிடும் பிஞ்சுகளைத்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

செல்வம் இருக்குமிடம் சேருதிங்கே கல்வியுமே
அல்லாத மானிடர்க்கோ ஆறாக் கொடுமையிது
பள்ளியிலே வாணியைப் பண்டமென விற்பவரைத்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

கல்வியு(ம்) ஆர்வமும் காரியத்தில் நேர்த்தியுடன்
வெல்திறமை கொண்டோரை வீணர்கள் செல்வாக்கால்
மெள்ளவவர் கீழ்தள்ளி மேல்வந்து நிற்பாரேல்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

காதலிலே கட்டுண்டு காதைபல பேசிப்பின்
வாழ்தலென்ற பேச்சுவரில் வக்கணையாய்க் காரணங்கள்
பிள்ளைக் கடனிங்கே பெற்றோர்சொல் கேளலென்பர்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

திருமகளாய் வீட்டில் திகழ்ந்திருக்கும் பெண்ணின்
கருமங்கள் சொல்வ(ர்),அவள் கற்பின் நெறிகளும்;பின்
கள்ளத் தொடுப்பினில் காரிகைகள் தான்கொள்வர்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

வாங்கிடு(ம்) ஊதியத்தை வங்கியிலே சேர்த்தபின்னும்
வீங்கிடு(ம்) உள்பையும் வெட்கமின்றி கர்ப்பம்பார்
கொள்ளத் தயங்கார் குடிகளிடம் லஞ்ச(ம்);அவர்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

கொள்ளை யடிப்பர்தான் கொண்ட தொழிலிலே
உள்ளத்தி(ல்) ஆர்வம் உழைப்புடன் நேர்மையின்றி
கள்ளத் தனம்செய்வர் காரியத்தில் சோம்பிடுவர்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

அதிகாரம் பெற்று(ம்)இல்லை ஆணையிடும் வீரம்
மதியில்லா மந்திரிகள் மாண்புமிகு பாதத்தில்
வெள்ளப் புயல்மரமாய் வேரோடு சாய்வாரைத்
தள்ளுஞ் சமூகம்நீ சாதி.

எண்ணக் கனவுக(ள்) இங்கே யடுக்கினேன்
வண்ண மிதற்கெலாம் வார்ப்பா(ய்) அறிவேன்;நான்
சொல்லிய வண்ணஞ் செயப்போகும் நீயேவிவ்
வெல்லுஞ் சமூகத்தின் சாவி.

 

 

 

 

 

 

 

 

ன்னில்
எல்லா வாத்தியங்களையும்
இசைக்கப் பார்க்கிறாய்

பிறந்த குழந்தையாய் நீவீறிட்டபோது
கறந்தபாலின் தூய்மையையும்
மிஞ்சிய தாய்மையுடன் என்
மார்சுரந்த பாலருந்த மறுத்தாய்.
வீணையில் வயலினிசை
வேண்டும் என்றே இன்னும் அழுகை

ஓடிப்பிடித்த கதைகளும்
உன் ஒளிந்து விளையாடிய நினைவுகளும் கேட்டு
உச்சிமுகர்ந்தளித்த முத்தம் உணர்ந்தறியாய்.
வீணையில் குட்டிக்கண்ணனின்
குழலினிமை இல்லையென்றொரு குதிப்பு

மீசைவைத்த ஆசைக்கதைகளும்
மீண்டுவந்த காதல்பாதைகளும்
தோழியைப்போல் கேட்டபோதென்
தோளில்சாய்ந்த சுகமறியாய்
வீணையில் நாதஸ்வரத்தின்
நாதமில்லையென்றொரு நகைப்பு

காதல்கிறக்கத்தில் நீயும்
மோனத்திருந்த நேரத்தில்
உள்ளமும் உடலும்
அதன் நீட்சியாய்
உடையும் கூட சற்றேநெகிழ்ந்ததை
உன்னோடு நானும்கூட
உணராதுறைந்து நிற்கையில்
தவறிய தாளத்திற்கு வீணையொரு
மேளமில்லாததே காரணமென்று
காலால் எட்டியோர் உதைப்பு

எப்பொழுதாவது வீணையை
வீணைக்காய் நெருங்கியிருக்கிறாயா?

நாண்மீட்டத் தெரியாதவனின் கைகளில்
நாராசமாய் ஒலிப்பதைவிட
நஷ்டமில்லை வீணைக்கு
நலங்கெட்டுப்
புழுதிப்புனலில் புதைந்திருப்பது

தேடல் எனக்கான நிஜமாய்
அடக்க மாட்டா ஆர்வத்துடனும்
கடக்க மாட்டாக் காதலுடனும்
வரும்பொழுதினில்
தரையமர்ந்து
மடியேந்தி
நெஞ்சின் நெருக்கத்தில் அழுத்தி
இருகைகளால் இசைக்க வேண்டியதில்லை என்னை
நுனிவிரல் தீண்டினாலும் போதும்
நூறு நூறு ஸ்வரப் பிரிகைகளுள்
மூழ்கடிப்பேன் உன்னை
முழுதாய் சுவர்க்கம் சேர்ப்பேன்

அதுவரை
கிடந்துவிட்டுப் போகட்டும் வீணை
கலைமகளின் கைகளிலும்
கவனிப்பாரற்ற மூலையிலும்
மட்டும்.

மரத்தடி குளிர்காலப் போட்டி – 2004 ற்காக எழுதியது.

பி.ச. குப்புசாமி அவர்களின் பொய் பொய் பொய் கவிதை இதை எழுத முக்கியத்  தூண்டுதல் என்பதைச் சொல்லியே ஆகவேண்டும். (பி.ச.குப்புசாமி அவர்களின் மகன்தான் பி.கே.சிவகுமார் என்பதையும் சொல்லவேண்டுமா?)

 

ன்னமும்
முகம் பார்க்கையிலெல்லாம்
கண்ணாடி–
உன் காதல்ரசம் பிரதிபலிக்கும்
என் அழகிற்கான அங்கீகாரம் என்ற
அனிச்சையான என் தலையசைத்தலும்

என் விருப்பத் தேர்வின்
வரிசையிலெல்லாம்
என்றோ எவரெவரிடமோ
கேட்டறிந்துகொண்ட
உன் விருப்பங்களையும்

என் எண்ணங்களுக்காய்
எழுப்பப்படும் கேள்விகளிலெல்லாம்
என்னவாகவிருக்குமென்ற
உன் எண்ணங்களையும்

எட்டிப்பார்க்கும் தொட்டிலிலெல்லாம்
நம் ஆன்மத்துடிப்பிற்கான
அன்பின் முகவரியையும்

இப்படி
இருந்துகொண்டேயிருக்கின்றன
எதிர்ப்படுமெல்லாமிலும்
உனக்கான யோசித்தல்களும்
எல்லாம் வல்லவனிடம்
உன் நல்வாழ்விற்கான
என் யாசித்தல்களும்.

எட்டிய வெற்றியிலெல்லாம்
எதையும் பெரிதாய்ப் பெற்றுவிடவில்லையென்றும்
எழுந்திருக்க முடியா சோகங்களிலெல்லாம்
எதையும் பெரிதாய் இழந்துவிடவில்லையென்றும்
ஏற்ற இறக்கமில்லாச் சமவெளியிலேயே
நடத்திச் செல்கிறது
உன் இழப்பு…

வண்ண விளக்குகளால்
வாழ்க்கை ஒளிரஆரம்பித்தும்
என்றோ ஏற்றிய அகல்விளக்கின்
எண்ணெய் தீர்ந்திருக்குமோவெனெ
பதறியோடி வருகையில்

முன் வந்து, திரிதூண்டி, அங்கே
தீபம் காக்கக் கையணைத்திருக்கும்
உன் தீவிரவாதத்தில்
என் மொழியழிந்து போகிறது.

அரையிருட்டில் படபடக்கும்
ஐந்தாம் வேதத்தின் ஆகமப் பக்கங்களைப்
பார்த்ததிலேயே படித்ததாய்
பரவசப்பட்டுத் திரும்புகிறோம்
அவரவர் ஆசாரங்களுக்குள்.

காதலித்துக் கைப்பிடித்த
கதைகளைச் சொல்லி
காதலென்னும் கதகதப்பை
கடந்தகாலத்திற்குள் கழற்றி எறியாமல்

நீயை விடவும்
உன் நினைவு போர்த்தும்
உச்சிமுதல் உள்ளங்கால் வரை
விரிந்து விரவும் மோகஉடையும்

உன் முத்தஎச்சில் தொட்டழியா
என் வெட்கப் பூச்சும்

சூடாததால் வாடாத
கைமலர்க் கண்ணியும்

தொடாததால் கெடாத
மனக்கன்னிமையும்

இருப்பை நம்பியும்
இறுதிவரை தேடிக்கொண்டே இருக்கும்
ஆத்திகனின் தேடலும்

இல்லையென்று சொல்லிக்கொண்டே
இருப்பிற்கானதாயிருக்கும்
நாத்திகனின் நடுக்கமும்

பெண்மையும் அதன் மென்மையும்
அது தாங்குமிந்த உண்மையும்

உள்ளவரையிலும் உள்ளில்
இரகசியமாய் உறங்கியிருக்குமென்றால்
இறக்கும் இறுதி நொடியிலும்
புதிதாய் விழித்திருக்குமென்றால்

கூறாமல் போனேனென்று
கோபிக்கும் உனக்கும்,
அதனால் (கை)கூடாமற்போன நம் காதலுக்கும்
கோடி நமஸ்காரம்!

[மரத்தடி ஆண்டுவிழாப் போட்டி – 2004 ற்கு எழுதி முதல் பரிசு வென்ற கதை]

 

 ‘அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும், என்
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன்.
(– கம்பராமாயணம்.)

 

ரு நிறைந்த மனநிலையில் அந்தக் கவிதைத் தொகுப்பைப் பிரிக்க ஆரம்பித்தேன். கவிதைகளின்மேல் ஆர்வம் போய்விட்டாலும், பரிசாக வந்த புத்தகம் என்பதும், அப்பா வருகிறேன் என்று ஃபோன் செய்திருப்பதால் மதியம் தூக்கம் வராமல் இருப்பதும் புத்தகத்தைப் புரட்டக் காரணங்கள். நடுவாக ஏதோ ஒரு பக்கத்துக் கவிதையில் படிக்க ஆரம்பித்து, அங்கேயே கண் நின்றது. மேலே படிக்க ஓடாமல் ‘சீதா’ என்ற பெயரைப் பார்த்ததும் என் வாழ்வில் வந்த அசோக மரத்தின் நினவுகளை வரிசையாக என்று இல்லாமல் முன்னும் பின்னுமாய்ப் புரட்டிப் போட ஆரம்பித்தது.

====

“மஞ்சு, லாயர்ன்னு அப்ப நீ சொல்லிக்கவே முடியாதா? நீ என்ன வேலை செஞ்சிருக்கன்னு உனக்கே புரியுதா? உனக்கென்ன பைத்தியமா?” ஆதங்கத்துடன் கடைசியாகக் கேட்ட உஷாவும், “ஆனா முடிவு ஐம்பது சதம் ஏனோ எனக்குப் பிடிச்சிருக்குப்பா” சொன்ன ராஜரத்னமும் என்னிடம் புன்னகையை பதிலாக வாங்கிப் போய்விட்டார்கள். கேள்வி மட்டும் இன்னும் சுற்றிச் சுற்றி வந்துகொண்டே இருக்கிறது. அப்பாவிடம் இன்று ஒருநாள் வகுப்பில் இருந்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டு, வகுப்புக்குப் போகாமல் கல்லூரியின் அந்த நீள காரிடரின் கைப்பிடிச்சுவரில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். என்னவோ கொஞ்சம் சந்தோஷமும் துக்கமுமாய் கலவையான உணர்ச்சியாக இருந்தது. ஸ்ரீதரன் (எனக்கு மட்டும் ஸ்ரீதர்) படிப்பு முடியும் வரையில் இருவரும் அங்குதான், கிடைக்கும் நேரமெல்லாம் அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். பக்கத்தில் லைப்ரரிக்கு நுழையும் அனைவருக்கும் அது ஒரு பழகிய காட்சிதான். எப்பொழுதிலிருந்து ஸ்ரீதர் வாழ்க்கையில் நுழைந்தான் என்று எத்தனையோ ஆயிரமாவது தடவையாக மீண்டும் யோசிக்க ஆரம்பித்தேன். அலுத்ததே இல்லை. கை அனிச்சையாய், கீழே விழுந்திருந்த அசோகமரக் குச்சியைத் தரையில் கீறிக் கொண்டிருந்தது.

-o-

ந்துருவிடம் அட்ரஸ் வாங்கிக்கொண்டு திருவானைக்காவலில் அந்த வீட்டின் மணியடித்தோம். உள்ளிருந்து குக்கர் சத்தமும், தொடர்ந்து அரிசியும் பருப்பும் வேகும் கலவையான வாசமும் அதையும் தொடர்ந்து துண்டில் கையைத் துடைத்துக் கொண்டே ஸ்ரீதரனும் வந்தார்கள். காலையில் புதுநபர்கள் யாராக இருக்கும் என்ற ஆச்சரியத்தை மாட்டிக்கொண்டு வந்தவன், சராசரி உயரமாய், பிராமணச் சிவப்பாய் (ஆண்கள் சிவப்பாக இருந்தால் எனக்குப் பிடிக்காது), பூசிய கன்னமாய் ஆரோக்யமாக இருந்தான். அம்மா கொடுப்பதை எல்லாம் படுத்தாமல் சாப்பிட்டுவிடுவான் போலும். அவன் புறங்கையில் ஒட்டியிருந்த கீரைத் துணுக்கு, சமையலில் உதவியாய் இருந்தான் என்பதைச் சொல்லியது. அக்ரமத்துக்குச் சமத்தாய் இருக்கிறானே என்று எரிச்சலாக நான் அந்தத் துணுக்கையே வெறிக்க, ‘அதனால் என்ன’ என்பதுபோல் எந்த அலட்டலும் இல்லாமல் அதைச் சுண்டினான். ‘நீ என்னைபற்றி எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்’ என்பதுபோல் இருந்த அலட்சியம் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் மனதுக்குள் எதுவோ நழுவுவது போல் உணர்ந்தேன்.

‘யார்டா ஸ்ரீதர்’, எங்கோ உள்ளிருந்து மென்மையாக வந்த பெண்ணின்(அவன் அம்மா?) குரலுக்கு அதைவிட மென்மையாக ‘தெரியலை’ என்றான். எப்படி அவர்களுக்குள் பேசுவது காதில்விழுகிறது என்று தெரியவில்லை. எங்கள் வீட்டில் ரகசியமே எல்லோரும் சத்தமாகத்தான் பேசுவோம். ‘யார் வேணும்?’ என்றான் அப்பாவிடம். கேள்வியில், ‘சீக்கிரம் சொல்லுங்கள், குளித்து சந்தி செய்து சாப்பிட்டுவிட்டு காலேஜுக்குக் கிளம்பவேண்டும்’ என்பதுபோல் ஒரு கடமை அவசரம் இருந்தது.

“ஐ’யம் ரெங்கராஜன். பிஏ டு கலெக்டர். இவ என் டாட்டர். +2 முடிச்சுட்டா. லா தான் பண்ணனும்னு ஆசைப்படறா, சீட் கிடைச்சுடுத்து..” அப்பா பேச ஆரம்பித்தார். லா என்ற ஒற்றை வார்த்தைக்கு மட்டும் ஒரு பார்வையை என்மேல் வீசிவிட்டு முகத்தை மீண்டும் அப்பாவின்மேல் பொருத்தினான். எனக்கு அதற்குமேல் எதுவுமே சுவாரசியமாகக் காதில் விழவில்லை. இந்தச் சந்திப்பே தேவையில்லாத ஒன்று. உள்ளூரிலேயே இருக்கும் ஒரு சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்க, அதன் ஒரு சீனியர் மாணவனிடம் சென்று விசாரிக்க என்ன இருக்க முடியும் என்று தெரியவில்லை. அபத்தமாக உணர்ந்தேன். முதலிலேயே மறுத்தும் அப்பா கேட்கவில்லை. நான் சாதுவோ பயந்தவளோ இல்லை. எந்தப் பிரச்சனையையும் என்ன என்பதுபோல் நிமிர்ந்து பார்க்கக் கூடியவள். இரண்டு அண்ணன்களுக்குப் பின் ஒரே பெண். கொஞ்சம் மென்மையான மனதுடன் ஆனால் எக்கச்சக்க தைரியசாலி.

சின்னவயதில் ஓர் ஆதரவற்ற பாட்டியை தெருவிலிருந்து வீட்டிற்குக் கூட்டிவந்து அப்பாவிடம் சொல்லி அரசாங்கத்துக்கு மனுப்போட்டு அநாதைப் பென்ஷன் வாங்கிக் கொடுக்க வைத்தேன். ஒரு பைத்தியக்காரியை விடலைகள் கிண்டல்செய்ய, பொறுக்கமுடியாமல் வீட்டிற்கு வந்து அண்ணன்களைக் கூட்டிப்போய் சண்டை போடவைத்தேன். இப்படிப் பல நிகழ்வுகள் அப்பாவிற்கு என்னை எப்படி உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்திருந்தது. சட்டப்படிப்பும் அதில் ஒன்று. என் இயல்பான தைரியமும் எண்ணிப்பார்க்க முடியாத சுதந்திரமும்.. அதுவே கூட அப்பாவிற்குக் கொஞ்சம் பயமாக இருந்ததோ என்னவோ. மற்றபடி ஸ்ரீதர் மாதிரி இன்னும் 4 பேரை நானே பார்த்துக் கொள்ள முடியும் என்பதை அவர் அறிவார்.

[மதியம் மெயின்காட்கேட்டில் இருக்கும் சட்டக் கல்லூரியின் ஒரு மலையாள ஆசிரியையும் பார்த்துவிட வேண்டும் என்று சொல்லியிருந்தார். எனக்கோ இதெல்லாம் கேவலமாக இருந்தது. சொல்லிப் பயனில்லை.]

பேசிமுடித்து அப்பா கிளம்புகிறோம் என்று சொன்னபோது அப்பாடா என்று இருந்தது. நான் எதற்காக வந்தேன் என்றே தெரியாமல் எழுந்தேன். ஸ்ரீதரன் மாதிரி பழங்களை என்னால் தாங்கமுடிவதில்லை. காட்டாற்றின் வேகம் நான். என் நண்பர்களிடம் முக்கியமாக சந்துருவிடம் சொல்லி ஒருமுறை இவனைக் கலாய்க்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். “அம்மா குளிக்கறா. அங்க ஷெல்ஃப்ல குங்குமம் இருக்கு. எடுத்துக்குங்க”, நான் எழுந்ததைப் பார்த்து மிகச் சாதாரணமாகச் சொன்னவனைப் பார்த்துத் தூக்கிவாரிப் போட்டது. குங்குமமா? நவராத்திரிக்குத்தான் நானே யாருக்காவது அதுவும் அம்மா சொன்னால் மட்டும் கொடுத்திருக்கிறேன். இதெல்லாம் மிகவும் அதிகமாகவே பட்டது எனக்கு. இவன் மாதிரி சமர்த்துகள் எல்லாம் என் அம்மா கண்ணில் படாமல் இருந்தால் காலத்துக்கும் நல்லது. பாவம் வயிறெரிந்தே செத்துவிடுவாள். என் அண்ணன்களோ நண்பர்களோ எந்தக் காலத்திலும் இந்த அலைவரிசையில் வரமாட்டோம். அப்பாவை முறைத்துவிட்டு, ‘வளர்த்திருக்கா பாரு ஆத்தாக்காரி!’ என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே விதியே என்று ஷெல்ஃபை நெருங்கி குங்குமச்சொப்பைச் சிரமப்பட்டுத் திறந்தேன். ‘மை ஃபாதர் இஸ் நோ மோர்’ என்று பேச்சுக்கு இடையில் அவன் அப்பாவிடம் சொன்னது ஏனோ லேசாய் நினைவுக்கு வந்தது.

கிளம்பும் போது மீண்டும் ஒரு பார்வை கொடுத்து மீண்டோம். “ஃபர்ஸ்ட் இயர், ந்யூ அட்மிஷனுக்கெல்லாம் என்னிக்கி ரி-ஓப்பன்” என்று அவன் (எதையாவது கேட்டுத் தொலைப்போம் என்ற தொனியில்) என்னிடம் கேட்ட ஒரே கேள்விக்கும் பதில் சொல்லாமல் தவிர்த்தேன். இவனுக்குத் தேதி தெரியாமலா இருக்கும்? ‘எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை’ என்று மனதிற்குள் அழுத்தமாகச் சொல்லிக் கொண்டேன். அவனுக்கும் அப்படியே என்று தெரிந்தது. முதல்வருடப் படிப்பிற்குக் கல்லூரி திறப்பதை எப்படி ‘ரீ-ஓப்பன்’ என்று சொல்லமுடியும் என்று அவன் வார்த்தைகளை ஃப்ரேம் போட்டு அர்த்தம் பார்க்க ஆரம்பித்தேன். டூவீலரை ஸ்டார்ட் செய்து அப்பா ஏறிக்கொண்டதும் அவனுக்கு ஒருமுறை கையசைத்தார். இடது கண்ணோரம், அவன் வாசலிலேயே நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. நிமிர்ந்து பார்க்கவேண்டும் என்ற என் ஆவலைக் கஷ்டப்பட்டு அடக்க வேண்டியிருந்தது. வண்டியை நோக்கி நடந்து வந்தபோது என் கொலுசின் சப்தம் கொஞ்சம் தயங்கித் தயங்கி மென்மையாக சிணுங்கியபடியே ஒலித்ததாக எனக்குத் தோன்றியது. வந்தபோது இருந்த ஜல்ஜல் திமிர் நிச்சயம் அதில் காணாமல் போயிருந்தது.

-o-

Festember, இன்டர்காலேஜ் காம்படீஷன், கர்நாடக சங்கீதத்தில் முதல் பரிசு, மெல்லிசையில் இரண்டாம் பரிசு. கல்லூரியே பாராட்டி முடித்திருந்தது. இது ஆரம்பத்தில் எல்லா கல்வி நிறுவனமும் எனக்குச் செய்வதுதான். பின், தொடர்ந்து நான் வாங்கி வரும் கோப்பைகளையும் பரிசுகளையும் இதிலென்ன அதிசயம் என்று சகஜமாக எடுத்துக்கொள்வார்கள். வீடே அப்படித்தான் ஆகிவிட்டது. நான்குவயதில் மாறுவேடப் போட்டியில் ஜெயித்ததற்கு ஊருக்கெல்லாம் லெட்டர்போட்டாள் அம்மா என்று அண்ணன்கள் சொல்வார்கள். அப்புறம் மேலே மேலே பரிசுகள் வரும்போது வீடு கண்டுகொள்வதில்லை அதிகம். ‘பெருமாள் சன்னதில வெச்சு எடுடி’ என்று பாட்டி இருந்தவரை சொல்லிக்கொண்டிருந்தாள். அதன்பின் வாங்கும் மெடலை, வீட்டுக்கு வந்ததும் புத்தகப் பையிலிருந்து டிஃபன் பாக்ஸ் எடுப்பதுபோல் இயல்பாக வெளியே எடுத்து வைக்க முடிகிறது. பெரிய கொக்கி ஆணியில் ஏன் எதற்கு என்று புரியாத பதக்கச் சரங்கள். ‘மஞ்சுளா ரெங்கராஜன்’ என்ற பெயரை பரிசுகளை அறிவிக்கும்போதெல்லாம் மைக்’குகள் உள்வாங்கி வெளிவிட்டுக் கொண்டிருந்தன.

முதல்வர் அறைக்கு வெளியே எல்லோரும் சுற்றிநின்றிருக்கும்போது அந்தப் பக்கம் போன ஸ்ரீதரன் “கங்கிராட்ஸ்!” என்றான். சொல்லவே வந்தானா, வந்தபோது சொல்கிறானா என்பதையும் சொல்லிவிட்டால் தேவலாம். “தேங்ஸ், எப்படி இருக்கீங்க?”, கேட்டு வைத்தேன். உள்ளே மீண்டும் என்னவோ நழுவிக் கொண்டிருந்தது. உடன் நின்றவர்களைப் பார்த்துவிட்டு, “எனக்கு க்ளாஸ் இருக்கு. அப்பறம் பார்க்கலாம்”, இரக்கமேயில்லாமல் சொல்லிவிட்டுப் போனான். அவன் போன முதல் ஐந்து நிமிடங்களுக்கு, சரியாக மற்றவர்களோடு கலக்க முடியாத தடுமாற்றமாக இருந்தது. சே!

கல்லூரி வாஷ்ரூம் கண்ணாடியில்- ‘அப்பறம் பார்க்கலாம்’ என்று அவனைப்போல் சொல்லிப் பார்த்தேன். ‘எப்போடா?’ என்று அவனைத் திருப்பிக் கேட்டேன். ‘உனக்குக் கிறுக்குதான் பிடிச்சிருக்கு’ என்று எனக்கே சொல்லிக்கொண்டேன். கொஞ்சம் அழகாகத்தான் இருக்கிறேன் என்று தோன்றியது. வகுப்பிற்கு வந்து, முதல்வருக்குக் காண்பிக்க எடுத்து வந்த பரிசுகளை ஆசையாகக் கட்டிக் கொண்டேன். இதற்குமேல் ஏகத்துக்கு வாங்கியாயிற்று. இதெல்லாம் ஜுஜுபி. ஆனாலும் ரொம்ப ஸ்பெஷலாகத் தோன்றியது.

நினைத்த அளவுக்குப் படுத்தாமல் அந்த ‘அப்பறம்’ அன்றைக்கே லைப்ரரி வாசலில் வந்தது. வெளியே வந்தவனும், அந்தவழியாகப் போன நானும் ஒரு தயக்கப் பார்வை பார்த்துக் கொண்டோம்.

“வந்ததுமே காலேஜக் கலக்கறீங்க”, மௌனம் பேசியது.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. கர்நாடிக் என்னிக்கும் எனக்குப் பிரச்சனையில்லை. என் குரலே ஜட்ஜஸ்க்கு பிடிச்சுடும். சினிமாப் பாட்டுதான்- என் குரலுக்கு சித்ரா பாட்டை எடுத்தது தப்பு. கேட்டுப் பழகினவங்களுக்கு என் குரல் மாற்றா இருந்திருக்கும். ம்யூசிக் மாடுலேஷன் எல்லாம் வேற சொதப்பி, செகண்ட் ப்ரைஸ் ஆயிடுத்து. நான் கொஞ்சம் யோசிச்சி வேற யாரோட ஸோலோவாவது பாடியிருக்கலாம். ப்ச்!”

அவன் கவனித்த மாதிரியோ கவலைப்பட்ட மாதிரியோ தெரியவில்லை. எனக்கு இதெல்லாம் ஒன்றும் புரிவதில்லை; தேவையுமில்லை என்பதுபோல் இருந்தான். கொஞ்சம் அதிகமாகப் பேசிவிட்டேனோ என்று அவமானமாக இருந்தது. ஒரு வார்த்தைக்கு ஒன்பது வார்த்தை ஏன் ஒளறினேன் என்று தெரியவில்லை. நான் வாயைத்திறக்கும் முன் என்னைப் பாராட்டும் கூட்டத்தைத்தான் நான் பார்த்திருக்கிறேன். இவன் எனக்குப் புதுசு; அல்லது அவனுக்கு நான். அப்படியென்றால் நான் கலக்குகிறேன் என்று சொன்னது கிண்டலா?

அதற்குள் கல்லூரி முடிந்து நிறையபேர் லைப்ரரிக்குள் வருவதும் போவதுமாக இருக்க, ‘குறுக்கே நிற்கவேண்டாம்; அங்கே உட்காரலாம்’ என்பதுபோல் அந்தக் காரிடரின் கைப்பிடிச்சுவரைக் காண்பித்தான். என் வாழ்க்கையையே திருப்பிப் போடப் போகிற அந்தச் சுவரை நோக்கி நடந்தேன்.

நடக்கும்போது, நாய்க்குட்டிபோல் அவன் சொன்னபேச்சு கேட்கிறேனோ என்று தோன்றியது. ‘வேலை இருக்கிறது; போகவேண்டும்’ என்று சொல்லிக் கிளம்பியிருக்கலாம். [என் திமிரே, எங்கே போய்த் தொலைத்தாய்? இந்தப் பருப்புசாதத்திடமிருந்து என்னைக் காப்பாற்று!]

“அப்புறம் படிப்பு எப்படி இருக்கு?..” நேராக படிப்பைப் பற்றி ஆரம்பித்த பேச்சு வேறு எங்குமே தடம் புரளவில்லை. பேசினான்; பேசினான்; பேசிக்கொண்டே போனான். இவ்வளவு பேசுவானா என்றே எனக்கு மலைப்பாக இருந்தது. அடித்துவைத்த சித்திரம்போல் அசையாமல் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். முதல்பார்வையில் அவனை எடைபோட்ட என் தவறை நானே மன்னிக்க முடியாது. மருத்துவத்தில் சேர்ந்த மாணவர்கள் கொஞ்சநாள்களுக்கு முதலில் எங்கு போனாலும் ஸ்டெத்தைத் தூக்கிக்கொண்டு அலைவதுபோல, சட்டக்கல்லூரிகள் எடுத்துப் போக எதுவுமில்லையென்றாலும் சாதாரண வார்த்தைகளுக்கெல்லாம்கூட ‘ஆன் வாட் லோகஸ்டான்டி..’ என்று பேச்சில் சட்டப் பிரயோகங்களை உபயோகிக்க ஆரம்பிக்கும். அப்படி எல்லா இயல்புகளையும் உடைத்துக்கொண்டு சுற்றி இருக்கும் சாதரணங்களுக்கு நடுவில் எளிமையான தோற்றம் வைத்துக்கொண்டு மிக மிக அசாதரணமானவாகத் தெரிந்தான். உள்ளுக்குள் எல்லாவற்றிலும் தீர்மானமாக இருக்கும் இவனைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேனோவென்று தோன்றியது.

சட்டம் அறிதலில் இருக்கும் தணியா ஆசையைச் சொன்னேன். கோழைகளைப் பார்த்தால் எரிச்சல் வருவதைச் சொன்னேன். கொடுமைகளுக்குக் கைகட்ட முடியாத ஆற்றாமையைச் சொன்னேன். கம்யூனிஸ்ட் தலைவர் பாப்பா உமாநாத் பெண் நிர்மலா உமாநாத்- சிதம்பரம் பத்மினி வழக்கில் ஆஜரானவர் இங்குதான் படித்தார் என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் சொல்லிக்கொண்டே போனேன். முதன்முறையாக எதிராளிக்குச் சமமாக என்னால் பேசமுடியவில்லை என்பதை உணர்ந்தேன். ஆனால் அப்படி அவனுக்குமுன் அறிவு குறைவாய் இருப்பதே சுகமாய் இருந்தது. இருக்கும் கொஞ்ச அறிவையும் அழித்து எல்லாவற்றையும் புதிதாக அவனிடம் கற்கவேண்டும் என்ற ஆசை வந்தது.

முக்கால்மணி நேரமாகப் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம். சிலர் விநோதமாகப் பார்த்துவிட்டுப் போனார்கள். பேச்சை மெதுவாக பெர்சனலுக்குத் திருப்ப எண்ணி, “அப்பா இல்லையா? அம்மா என்ன செய்றாங்க?” என்றேன். கொஞ்சம் ஆங்கிலம் குறைந்து பிராமணத் தமிழில் சகஜமானோம்.

“அன்னிக்கே உங்கப்பாகிட்ட சொன்னேனே எல்லாம்.”

திடுக்கிட்டேன். “சாரி, நான் அன்னிக்கி கவனிக்கலை”.

“ஆமா, எங்க பேச்சை கவனிக்காம சுவத்துல மாட்டியிருந்த என் குட்டிப்பாப்பா ஃபோட்டோவே பார்த்துண்டிருந்தீங்க”, (முதல் முறையாக) சிரித்துக்கொண்டே சொன்னான். அடித்து ஆடுவது என்பது இதுதானா? அவமானத்தில் தலைகுப்புற விழுந்தேன். எனக்கே அன்று என்ன செய்திருக்கிறேன் என்று தெரியவில்லை. ‘அப்படியா!’ என்று கேட்டால் நம்புவானா? ‘உனக்கு எப்படி அது தெரியும்? என்னையே பாத்துண்டிருந்தியா?’, திருப்பிக் கேட்டு, கேவலப்படுத்தவேண்டும் போல் மனசு தவித்தது.

தான் 2 வயதுக் குழந்தை, அக்காவிற்கு நான்கு வயது இருக்கும்போது சிமெண்ட் ஃபாக்டரியில் வேலைபார்த்த அப்பா இறந்தது, பள்ளியிறுதி மட்டுமே படித்திருந்த அம்மாவிற்கு கம்பெனி, கடைநிலை ஊழியர் வேலை கொடுத்தது, ஆனாலும் அம்மா தளராமல் மேலே டைப்ரைட்டிங் எல்லாம் படித்து க்ளார்க் ஆகி குவார்ட்டர்ஸில் தங்கி தங்களை வளர்த்தது, அத்தை பையன் புண்ணியத்துக்கு அக்காவைக் கல்யாணம் செய்துகொண்டு காம்ரூன் போனது, அம்மா சுகரில் உடல்நிலை மோசமாகி வாலண்டரி ரிடையர்மெண்டில் வந்த பணத்தில் சமாளித்து படித்துக் கொண்டிருப்பது, அப்பா, அம்மா மேல் இருந்த நன்மதிப்பில் கம்பெனி இவன் படிப்பு முடிந்ததும் வேலை தருவதாகச் சொல்லியிருப்பது, அதிக பணச்செலவு இல்லாதததும், லேபர் வெல்ஃபேர் ஆஃபீஸர் ஆக வேண்டும் என்ற கனவிற்காகவும் சட்டம் படிப்பது, ஒரு புத்தகம் வாங்காமல் லைப்ரரியையும், ஆசிரியர்களும் உதவுவது வரை.. எல்லாம் என் அப்பாவிற்கு சொன்னதுபோல் இல்லாமல் உணர்வுபூர்வமாக, விஸ்தாரமாகச் சொல்லி முடித்தான். அம்மா பாசம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அத்தோடு நிறுத்தியிருக்கலாம்.

“இந்தப் பாட்டு, கூத்து ப்ரைஸ் வாங்கறதெல்லாம் ஸ்கூல்லைஃப் ஃபாண்டஸியா இருக்கணும். காலேஜ்ல, அதுவும் சட்டம் மாதிரி படிப்புக்கெல்லாம் நிறைய டெடிகேஷன் வேணும். நீங்க சொல்ற லட்சியங்கள் எல்லாம் உண்மையாவே உங்களுக்கு இருந்தா மத்த எல்லாத்தையும் நிறுத்தி, அந்த நேரத்துலயும் சப்ஜெக்ட் நாலெட்ஜ் இம்ப்ரூவ் பண்ணப்பாருங்க.”

“இல்லை, நான் நல்லா படிப்பேன்!” எல்கேஜி பெண்ணைப் போல் கூவினேன். அவனைப் போல சன்னமாகப் பேசப் பழகவேண்டும் என்று நாக்கைக் கடித்தேன். என் படிப்பையும் ஆர்வத்தையும் குறைத்து மதிப்பிட்டுவிட்டானே என்ற எரிச்சல் எட்டிப் பார்த்தது. Extra curricular activities வைத்திருக்கிறவர்கள் மதிப்பெண் வாங்கமாட்டார்கள் என்ற மூடநம்பிக்கை ஒழியாதா?

“படிப்புன்னா இனிமே ஸ்கூல் மாதிரி எவ்வளவு மார்க் வாங்கறீங்கன்னு இல்லை. எடுத்த சப்ஜெக்ட்ல எவ்வளவு நாலெட்ஜ் acquire பண்றீங்கங்கறதுதான். மத்த ஆக்டிவிடிஸ் குறைஞ்சா இதுல சாதிக்கலாம். காலைல கூட்டத்தோட உங்களைப் பார்த்ததுலேருந்து சொல்லணும்னு நினைச்சேன். இப்ப சொல்லிட்டேன்.” எழுந்தான். இதைச் சொல்லத்தான் என்னோடு இவ்வளவு நேரம் பேசினானா? [பின், போட்டிக்குப் பாடியதைப் பாடச்சொல்லிக் கேட்பான் என்றா எதிர்பார்க்க முடியும்?]

அட்வைஸ்! வேறு யாராவது சொல்லியிருந்தால் எப்படி எதிர்வினை செய்திருப்பேன் என்று தெரியவில்லை. ஆனால் அவன் சொன்னது தாங்கமுடியாததாக இருந்தது. எதிர்ப்பாக இன்னும் நிறைய எல்லாவற்றிலும் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்று வீரசபதம் செய்துகொண்டே வீட்டுக்கு போனேன். மாறாக அன்றைக்கே எல்லாவற்றிற்கும் மங்களம்பாடினேன். பாட்டு வாத்தியார், ஸ்கூல் தமிழ் டீச்சர், அம்மா என்று ஆளாளுக்கு காரணம் புரியாமல் அவ்வப்போது ஷிஃப்ட் போட்டுப் புலம்பிக்கொண்டே இருந்தார்கள்.

அதன்பின் நடந்தவை அதிரடி மாற்றங்கள். யாரோடும் ஐந்து நிமிடத்திற்குமேல் பேச ஒன்றுமில்லைபோல் தாங்கமுடியாத கொடுமையாக இருந்து, எல்லோரையும் தவிர்த்தேன். கொஞ்சம் விட்டு விட்டு சந்தித்துப் பேசிய நாங்கள் பின்னர் ஏதோ புரிந்தாற்போல தினமும் கைப்பிடிச்சுவரில் கூடினோம்.

புதுவருடத்திற்கு நானே சொந்தமாக ஒரு வாழ்த்து வரைந்தேன். எப்பொழுதும், வரையும் ஓவியத்தோடு கலந்த உணர்வில் வண்ணங்களைக் குழைப்பவள், முதல்முறையாக வரைபவனுக்கான எண்ணங்களில் குழைந்து வரைந்திருந்தேன். முடிவில், ‘வேறு வேலையில்லையா?’ என்று திட்டுவானோ என்று பயந்து மறைத்துவிட்டு கடையில் வாங்கிக் கொடுத்தேன். அப்படியும் விதி விரட்டிய ஒருநாளில் அவன் நல்ல மூடில் இருக்கும் போது மிகவும் தயங்கித் தயங்கி ஹாண்ட்பேகிலிருந்து ஒரு பேப்பரை எடுத்துக் காண்பித்தேன்.

தனிமை நீக்கித்
தனிமை திணித்தாய்

என்று எழுதியிருந்தது. “என்ன இது?” என்று ஆவலாகக் கேட்டான். “ஸ்கூல் படிக்கும் போது நிறைய கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டின்னு பரிசு வாங்கியிருக்கேன். தமிழ் டீச்சருக்கு நான் செல்லம். இப்பல்லாம் எழுதறதில்லை. புக்ஸ் படிக்கறதோட சரி. இது, உங்களைப் பத்தி செகண்ட் ஹவர்ல பாதி க்ளாஸ்ல நினைச்சுப் பார்த்தேன். ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா உடனே தோணினத எழுதணும்னு நினைச்சு எழுதினேன். இது முழுக்கவிதை இல்லை. சும்மா ரெண்டே லைன். நல்லா இருக்கா?” உருகப் போகிறான், உலக இலக்கியம் இதுதான் என்று சொல்வான் என்றெல்லாம் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது.

‘புரியலையே!’ என்று கட்டைவிரல் நகத்தால் நெற்றியைக் கீறிக்கொண்டான். காற்றுப் போன பலூனாகிப் போனேன். “I meant..” என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்து, அவன் கண்களைப் பார்க்க முடியாமல் கொஞ்சம் பயமும் வெட்கமுமாகி, தமிழுக்கு மாறி.. “நீங்க வந்ததிலேருந்தே I never felt alone..”

கொஞ்சம் பொறுமை இழந்திருந்தான். முகம் இறுகியிருந்தது. “ம்!” என்ற அவன் ஒற்றை எழுத்து உச்சரிப்பில் ஒட்டுமொத்த ஆண்மையையும் உணர்ந்து மிரண்டேன்.

மேலே சொல்லவராமல் உலக மொழிகள் எல்லாம் ஒத்துழைக்காமல் துரோகம் செய்வதாகப் பட்டது. என்ன எழவுக்கு இந்தப் பேச்சை ஆரம்பித்தேன் என்று என்னையே நொந்தேன். இனி பாதியில் இவனிடமிருந்து தப்ப முடியாது. கொஞ்சம் நிறுத்தி, தயங்கி, தலையைக் குனிந்துகொண்டே, “ஆனா என்கூட இருந்த மத்த எல்லாரையும் நீங்க வந்ததும் தவிர்த்து ரொம்பத் தனியாயிட்டேன். அதான் சொல்ல நினைச்சேன்.” ஒருவழியாக மெல்லிய குரலில் சொல்லி முடித்து வியர்த்தபோது நாக்கு மேலன்னத்தில் ஒட்டியிருந்தது. அவன் எதுவுமே சொல்லவில்லை. எனக்கு மொத்த இரத்தமும் சூடாகி நெற்றிக்குப் பாய்ந்திருந்தது. எங்களுக்கிடையில் இருந்த அந்த அரை நிமிட மௌனம் தாங்கமுடியாத கொடுமை. அவனுக்குப் பிடிக்கவில்லை என்று புரிந்தது. எந்த நிமிடமும் என் இயல்புக்கு மாறாக அழுதுவிடுவேனோ? அழும்போது வரும்கண்ணீரை எப்படித் துடைத்துக் கொள்வது என்று யாராவது சொல்லிக் கொடுக்கவேண்டும். எனக்கு அனுபவமில்லாதது. கொஞ்சம் கோபம் குறைந்து தணிந்த குரலில், “இதை எதுக்கு இப்படி புரியாம சுத்திவளைச்சு சொல்லணும்? இந்தக் கவிதை கண்றாவி எல்லாம் உங்களுக்கே கொஞ்சம் absurd-ஆ தெரியலை? இதை எழுத எவ்வளவு நேரம் யோசிச்சீங்க?..”

நான் வாங்கிய பரிசுகளும் பாரதியும் ஷெல்டனும் கைகொட்டிச் சிரித்தார்கள். எனக்குச் சம்மதமில்லாமலேயே என் நிலையிலிருந்து நான் இப்படியெல்லாம் இறங்கிக் கொண்டிருந்த காரணம் புரியவில்லை. கடகடவென்று கண்களிலிருந்து நீர்பெருகி கையில் டொக்கென்று விழுந்தது. பதறிப்போனான். “இப்ப எதுக்கு அழறீங்க? See மஞ்சு, எனக்கு இதெல்லாம் கொஞ்சம் புரியறதில்லை. அவ்ளோதான். மத்தபடி இது கவிதைதானோ என்னவோ; எனக்குத் தெரியலை. ஆனா என்கிட்ட ஏதாவது பேசணும்னா நேராவே சொன்னாதான் எனக்குப் புரியும்.” சும்மா மேலுக்கு என்னைச் சமாதானம் செய்கிறான் என்று அடுத்த இரண்டு நிமிட மௌனத்திற்குப்பின் அவன் பேசியதில் புரிந்தது.

“இந்தக் கவிதை, கதை, பட்டிமன்றம், வழக்காடுமன்றம், இலக்கியம், லேகியம் இதெல்லாம் எனக்குக் கொஞ்சம் அலர்ஜி. புரியறதுமில்லை. சட்டத்துக்கு ஆங்கில அறிவு எவ்வளவு வேணும்னு உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை. ட்ராஃப்டிங்லயே உங்க திறமை தெரியணும். அப்படி உங்க இங்லீஷ் டெவலப் செஞ்சுண்டீங்கன்னா ஐ’ வில் பீ ஹாப்பி.”

நல்லவேளையாக ‘..against nature, you transformed a butterfly into larva..’ என்றெல்லாம் நான் ஆங்கிலத்தில் அவனைப்பற்றி ஒளறியிருந்த முழுநீள (அ)கவிதைகளைக் காண்பிக்கவில்லை என்று நிம்மதியானேன். அப்புறம் இந்தச் சந்திப்பை மட்டும் எப்போது நினைத்தாலும் சிரிக்காமல் இருந்ததுமில்லை. ஆனாலும் நான் எப்படி இருந்தால் அவனுக்கு சந்தோஷம் என்று சொல்லி எடுத்துக்கொண்ட உரிமையில் பூரித்தேன். ‘உன்னை சந்தோஷப்படுத்துவதைவிட வேறு என்ன வேலை’ என்று சொல்லிக்கொண்டேன். உண்மையிலேயே இதெல்லாம் அபத்தம்தான் என்று தோன்றியது. நல்ல பேச்சை ஒளறியே கெடுத்தேன் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, நான் கொடுத்த பேப்பர் தன் சட்டைப்பையில் பத்திரமாக இருக்கிறதா என்று ஒருமுறை தொட்டுப்பார்த்துக் கொண்டு கிளம்பினான்.

இப்படியாக என் மற்றபிற இயக்கங்கள் எல்லாம் நின்றுபோய் வாழ்க்கையே சட்டமும் சட்டம் சார்ந்த திணையுமாய் ஆக அந்த 2 வருடங்கள் ஓடிப்போய் ஸ்ரீதர் படித்துமுடித்து சிமெண்ட் ஃபாக்டரியில் அப்போதைக்குக் காலியாக இருந்த பெர்சனல் ஆஃபீஸராய்ச் சேர்ந்து மீண்டும் குவார்ட்டர்ஸ் மாறி இருந்தான். ஒரு நாள் புதிதாக வாங்கிய கைனடிக்கில் என்னைத்தான் முதல் ரவுண்ட் அழைத்துப்போக வேண்டும் என்று(அதைச் சொல்லமாட்டான்; அழுத்தம்) மூன்றாவது வருடம் காலேஜுக்கு வந்தான். மேலே labour welfare ஸ்பெஷலைஸ் செய்வதைச் சொன்னான். கொஞ்சம் பிரிந்து சந்தித்ததில் அதிக நெருக்கமாக உணர்ந்தோம். சட்டம், படிப்பு என்று இல்லாமல் எல்லா விஷயமும் அவசர அவசரமாக, தடையே இல்லாமல் பகிர்ந்துகொண்டோம். எப்பொழுதும்போல் படிப்பைப் பற்றியே பேசாமல் கொஞ்சம் வேறு தேடலோடும் என்னோடு பேசுகிறான் என்று தோன்றியது. வேலைபார்ப்பதில் புருஷ லட்சணம் கூடி இருந்தான். நான் இன்னும் இன்னும் என்னை இழந்துகொண்டிருந்தேன்.

அதன்பின் வாரம் ஒரு ஃபோன், மாதம் ஒருமுறை விசிட் என்று கருணை காண்பித்தான். சந்திப்பைவிட அதற்காகக் காத்திருப்பது சுகமாக இருந்தது. “எப்படி இப்படி கண்ட்ரோலா இருக்கீங்க? இண்டெலக்சுவல் லவ்வா?” என்று உஷா என்னிடம் கேட்டதற்கு, ராஜரத்னம், “காதல்ல படிக்காத பட்டிக்காட்டான், இண்டெலக்சுவல் காதல்னெல்லாம் கிடையாது. எல்லாமே மூட்டைலேருந்து மொத்தமா கொட்டின கத்திரிக்கா காதல்தான். என்ன, நம்பள மாதிரி இல்லாம ஒருத்தருக்கொருத்தர் சாதிச்சுக்காட்டணும் ஓடறாங்க போல இருக்கு” என்று உஷாவிடம் தத்துவம் உதிர்த்துவிட்டு என்னிடம் நக்கலாக, “மஞ்சுளா, அடுத்ததடவை சொல்லிவை பையன்கிட்ட, ரொம்ப நடிக்கவேணாம், தரை இறங்கச் சொன்னேன்னு”. கொஞ்சம் ரசங்குறைந்த பேச்சாக இருந்தாலும் அதன்பின்னே இருந்த உண்மை என்னை நடுக்கியது. ஏன் இப்படி இருக்கிறோம் எல்லோரையும்போல் இல்லாமல். உடனே பார்க்கவேண்டும் போல் இருந்தது. அவனுக்கும் அப்படி இருக்குமா? அதைச் சொல்லமுடியாமல் எது தடுக்கிறது?

-o-

மூன்றாம் வருடம் முடிந்து நான்காம் வருடம் ஆரம்பித்த ஒரு மாதத்தில்தான் அப்படி, தனியாக அப்பாவை அனுப்பிவிட்டு அரையடிச்சுவரில் அசோகமரக் குச்சியால் கீறிக்கொண்டிருந்தேன். எதிர்பாராத நிமிடத்தில் ஸ்ரீதர் வந்துகொண்டிருந்தான். அதுவரை எல்லோருக்கும் புன்னகையைப் பதிலாக்க முடிந்த என்னால் அவனைப் பார்த்ததும் எப்படி இருக்கவேண்டும் என்று தெரியவில்லை. இப்போது முடிவு வந்துவிட்டது எங்கள் எல்லா மௌனத்துக்கும். முழுப் பெண்ணாய் உணர்ந்தேன் அவன்முன். வேகமாக என்னருகில் வண்டியை நிறுத்தியவன், “நீயும் என் உயிரை வாங்கறதுன்னு முடிவுபண்ணிட்டியா?,” திட்டியபடியே பக்கத்தில் வந்து அமர்ந்தான். அதிகம் களைப்பாக இருந்தான். அவனை அறியாமலே முதல்முறையாக என்னை ஒருமையில் அழைக்கிறான். எனக்குள் ஏகத்துக்குக் நொறுங்கி சிதைந்து கலைந்து பின் சேர்ந்தேன். அத்தனை துக்கமும் விலகியதுபோல் இருந்தது அவன் எடுத்துக்கொண்ட உரிமை. பதில் சொல்லாமல் ‘எப்படி இருக்காங்க அம்மா?’ என்றேன். இப்போது அவனிடம் எனக்கு தைரியம் வந்திருந்தது.

ஏழெட்டு நாள்கள் முன்பு வழுக்கிவிழுந்த அவன் அம்மா தலையில் அடிபட்டு, சுகரும் அதிகரிக்க பின், டாக்டரால் பதில்சொல்லமுடியாத பக்கவாதத்திற்குப் போயிருந்தாள். ஸ்ரீதர் வாழ்க்கையே ஒருமுறை நின்று மீண்டும் புரியாமல் இன்னும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் ஆவதை எனக்குச் சொல்ல வீட்டுக்கு ஃபோன் செய்தால் அப்பா எடுத்து என் அழிச்சாட்டியத்தையும் நான் இங்கு இருப்பதையும் சொல்லி கோபத்தில் ஃபோனை வைத்திருக்கிறார். அடித்துப் பிடித்து ஓடிவந்திருக்கிறான். “உங்கம்மாவைப் பாத்துக்க உதவிக்கு அந்த சொந்தக்காரப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு உங்கக்கா ஃபோன்ல கேட்டாங்கன்னு சொன்னீங்களே, செஞ்சுப்பீங்களா?”

கோப உச்சிக்குப் போனான். “அறிவு இருக்கா உனக்கு? கல்யாண வயசா எனக்கு? என்னை ஒரு வார்த்தை கேக்காம படிப்ப டிஸ்கன்டின்யூ செய்வியா? உன்னை மாதிரி உணர்ச்சிவசப்படற கூட்டம் வாழ்க்கைக்கு லாயக்கில்லை.”

இத்தனை நாள் எனக்கு அவனிடம் இருந்த பயமெல்லாம் காணாமல் போயிருந்தது. தலைக்குமேல் வெள்ளம் போல் தைரியமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னிடம் கோபித்துக் காரியம் ஆகாது என்று புரிந்து குரலை இறக்கி, தானும் இறங்கி வந்தான். “எவ்ளோ ஆசை வெச்சிருந்த படிப்புல. எவ்ளோ கஷ்டப்பட்டிருப்ப. நானே உன்னைப் பத்தி எவ்ளோ கனவு கண்டேன்! ஏன் இப்படி செஞ்ச என்னக் கூட ஒரு வார்த்தை கேக்காம?”

“உனது கண்களில் எனது கனவினைக் காணப்போகிறேன்..” மெல்ல அடிக்குரலில் உள்ளுக்குள் மகிழ்ச்சியும் வெளியே திமிருமாகப் பாட ஆரம்பித்தேன். ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்.. எல்லாம் சொல்லவே ஓர்நாள் போதுமா..’ வேறொரு சமயமாக இருந்தால் சினிமா பாட்டிற்கே சாத்தியிருப்பான். எனக்கே இப்படிப் பாடுவது செயற்கையாக இருந்திருக்கும். இன்று ஒன்றும் சொல்லாமல் அவன் இதற்குமுன் பார்த்திராத என் தைரியத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு அடங்கிக் கொண்டிருந்தான். “உங்கப்பா முகத்துலயே நான் முழிக்க முடியாம செஞ்சிருக்க மஞ்சு. என்ன செய்யப் போறேன்னு தெரியலை.” தன்மையாகப் பேசினான். அவன் என்னை ஒருமையில் பேசப்பேச நான் செத்துக் கொண்டிருந்தேன். அப்பா ஆசையையெல்லாம் நிறைவேற்றி ஆனால் இவன் கிடைக்கவில்லையென்றால் அப்புறம் என் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. வேறு யாருடனாவது நான் என்னை நினைத்துக்கூடப் பார்க்க முடியுமா? ஏன் புரியாத மாதிரி நடிக்கிறான்?

“எனக்கு அதெல்லாம் வேணாம்; நீங்கதான் வேணும்.” கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தான். இதுவரை காதலிக்கிறேன் என்றெல்லாம் நாங்கள் சொல்லிக்கொள்ளத் தேவை இருந்தது கிடையாது. திருமணம் தீர்மானிக்கப்பட்ட ஒன்றுபோன்ற புரிதல் இருவருக்கும் இருந்தது. சரியான பருவத்தில் திருமணம் என்றால் எங்களுக்குள் ஜாதியில் இருந்த உட்பிரிவு வேறுபாட்டிற்கே என் வீடும் ஊரும் ஓர் ஆட்டம் போட்டிருக்கும். இப்போது என்னுடையது இடி விழுந்த வீடாக இருந்தது. செய்தி கிடைத்து நான் மருத்துவமனைக்கு அவன் அம்மாவைப் பார்க்க என் அப்பாவோடு போயிருந்தபோது 4 நாள் தாடியோடு இருந்தான்; எல்லாம் சொன்னான். அவனை அச்சில் எடுத்தாற்போன்ற அவன் அம்மாவைப் பார்த்ததும் நெகிழ்ந்து போனேன். எது நடந்தாலும் தைரியத்தையும் ஸ்ரீதரையும் இழந்துவிடக் கூடாது; உலகம் எப்படியோ நாசமாகப் போகட்டும், நாமென்ன புரட்டிவிடப் போகிறோம் என்று மட்டும்தான் தோன்றியது.

“சரி, அம்மாவ ரெண்டுநாள்ல டிஸ்சார்ஜ் செஞ்சுடுவாங்க. அப்பறம் யார் பாத்துக்குவாங்க.. அம்மா நிலைமை, லீவு, பணப்பிரச்சனைன்னு எல்லாம் என்னை அழுத்துது. எங்க அத்தைதான் இப்ப இருக்காங்க. அக்காவுக்கு ஃப்ளைட் கிடைக்கலை. இன்னும் ரெண்டுநாள்ல வருவா. அப்புறம் இதைப் பத்தி பேசலாம். புரிஞ்சுக்க. இப்ப என்னால ஒண்ணும் யோசிக்கக் கூட முடியல மஞ்சு. பிரின்சிபால பார்த்து ஒரு வார்த்தை சொல்லிட்டுக் கிளம்பலாம்”, முதல்முறையாக தன் இடக்கையால் என் கைப்பிடித்து (வாட்ச் கூட கட்டாமல் வந்திருந்தான்.) நடந்தான். எனக்கென்னவோ அதில் நிம்மதியை உணர்கிறான் என்றுதான் தோன்றியது. பேசாமல் நடந்தோம். எனக்கு இதயமே நின்றிருந்தது. மாடிப்படித் திருப்பத்தில், “நல்லாப் பாடற.. எனக்குத்தான் இதுக்கெல்லாம் தகுதி இருக்கான்னு தெரியலை” கிசுகிசுப்பாய்ச் சொன்னான்.

மகிழ்ச்சி மீறுதே.. வானைத் தாண்டுதே.. சாகத் தோன்றுதே..

-o-

ரிசப்ஷனில் ஆளே அடையாளம் தெரியாமல் மேக்அப் போட்டுக்கொண்டு, உன்னிகிருஷ்ணனுக்கு ஒரிஜினில் நகுமோவுக்குச் சீட்டுக் கொடுத்து பாடச் சொல்லி, புதுப்புருஷன் பக்கத்தில் மாலையும் கழுத்துமாய் நின்றுகொண்டே உன்னியை சைட் அடிக்க வேண்டும் என்ற கல்யாணக் கனவுகள் எல்லாம் தகர்ந்து அடுத்த இருபதாம் நாளில் அவர்கள் குலதெய்வம் சங்கரன் கோவிலில் 15 பேர் சாட்சியாக திருமணம் என்று ஒன்று நடந்தது. இந்த இருபது நாளைக்குள் இந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி வரலாற்றையே மிஞ்சக் கூடிய தாலி செண்டிமென்டில் என்னையே நம்பமுடியாமல் நான் தவித்துக் கொண்டிருந்தேன்.

அப்புறம் ஒரு வருடம் ஓட்டமாய் ஓடியது. அப்பா ஒருமுறை அதிர்ச்சியில் படுத்து எழுந்தார். என்னைப் போல் அம்மா தைரியம் என்பதால் (அல்லது அம்மாவைப் போல் நான்?) சமாளித்தாள். அண்ணன்கள் சிறு அதிர்வில் அடங்கினார்கள். எல்லோரையும் ஸ்ரீதரின் நல்ல குணம் கட்டிப் போட்டது. உறவுகளுக்கு பதில் சொல்லவே அதிகம் பயந்தார்கள் என்று தோன்றியது. இரண்டு மாதம் முன்பு மாமியார் இறந்தார். இறந்ததற்கு வந்த நாத்தனர் தன் மாமியார் (ஸ்ரீதரின் அத்தை) எங்களுடன் இருப்பார் என்று சொன்னாள். பணம் காசுக்குக் குறைவில்லை. ஆனால் பிள்ளை வெளிநாட்டில் இருப்பதால் தனியாய் இருக்க பயந்து எங்களுடன் இருக்கிறேன் என்று வந்தார்; மிகவும் உதவியாக இருந்து வருகிறார். வரிசையாக, புதிதுபுதிதான கடமைகளும் பழக்கமில்லாத வேலைகளும் அழுத்தினாலும் உணரமுடியாத மாதிரி எல்லாவற்றையும் ஸ்ரீதரின் காதல் மூழ்கடித்தது.

மேல்படிப்பு முடித்து லேபர் வெல்ஃபேர் ஆஃபீஸரானபின் முழுமூச்சாக வேலையில் இறங்கினான். வேலை தாண்டியும் எப்பொழுதும் தொழிலாளர்களின் மேல் இருந்த அக்கறை மற்ற எல்லாவற்றையும் முந்த, அரசியல் கட்சிகளாகப் பிரிந்து இருந்த தொழிலாளிகளும் கட்சிகளும் கூட இவனிடம் ஒரேமாதிரி தான் பழகினார்கள். ஊரிலிருந்த கட்சித் தலைமைகள் நேர்மைக்கு முன் வாயடைத்தன.

சரஸ்வதிபூஜையன்று அலுவலகத்துக்கு, பூஜைக்குக் கூட்டிப்போன இடத்தில் எல்லோரையும் பாடச் சொன்னார்கள். மேலதிகாரியின் பெங்காலி பெண்டாட்டி பொருந்தா மேக்கப்புடனும், சில கிக்கிபிக்கி சிரிப்புக்கு நடுவிலும் எதையோ பாட, சில தொழிலாளிகளின் மனைவிகளும் வெட்கத்தோடு பாடுவார்கள் என்ற சூழ்நிலை இருந்தது. பக்கத்தில் மிஸஸ் ரெட்டியுடன் பேசிக்கொண்டே, இந்தக் கூட்டத்திற்கு எந்த மாதிரிப் பாடல் எடுபடும் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, ஸ்ரீதர் அருகில்வந்து ‘பாடவேண்டாம்’ என்று எனக்கு மட்டும் கேட்கிறார்போல் சொன்னான். ‘முன்னால பாடின சர்க்கார் வைஃபுக்கு embarassing-ஆ இருக்கும்; இனி பாடப்போறவங்களும் தயங்கலாம். ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட்” சொல்லிவிட்டு தூரத்தில் நண்பர்களுடன் பாண்ட்பாக்கெட்டில் கைவிட்டுக் கொண்டு சிரித்துப் பேசிக் கொண்டிருப்பவனைப் பெருமையுடன் பார்த்தேன். எப்படியெல்லாம் மற்றவர்களுக்காகச் சிந்திக்கிறான்.

நேற்று தன் பிறந்தநாள் என்று தெரிந்தும் ஓர் இறந்த தொழிலாளியை காடுவரை சென்று எரியூட்டியபின் லேட்டாக வந்தான். வந்தும் சாப்பிடாமல் அமர்ந்திருந்தான். எனக்குக் கவலையாக இருந்தது. எதையாவது சொல்லி முதலில் பேசவைக்க வேண்டும். “கலாப்ரியாவோட கவிதை ஒண்ணு.. ‘உயிர்த்தெழுதல்’னு..” ஆரம்பித்த அடுத்த நொடி “வெளில போ!” ஆத்திரம் அத்தனையும் அடுக்கடுக்காய் அழுந்த மடித்த கனத்தோடு அவனிடமிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன. அதிர்ந்தேன். அவமானமாக இருந்தது. பர்வதம் அத்தை சாப்பிட்டுப் படுத்துவிட்டிருந்தாள். பெட்ரூமுக்குப் போய், ‘அம்மா ஊரில் இல்லை நான் மட்டுமாவது வந்து மாப்பிள்ளையைப் பார்க்கிறேன்’ என்று சொல்லியிருந்த அப்பாவை வரவேண்டாம் என்று ஃபோன் செய்தேன். பேசாமல் படுத்துக் கொண்டேன். அழத் தெரிந்தவர்கள் பாக்கியவான்கள். எனக்குத் தெரியவில்லை.

அரைமணிநேரம் கழித்து அறைக்குள் வந்தவன், மன்னிப்புக் கேட்பதற்கோ, தன்னிலை விளக்கமாகவோ பேச ஆரம்பித்தான். “அந்தக் குடும்பத்தைப் பாத்ததும் எனக்கு எங்கம்மாவும் இப்படித்தானே நின்னிருப்பான்னு தோணிடுத்து. என்னால தாங்கவே முடியலை மஞ்சு. ஏற்கனவே சிமெண்டு ஃபேக்டரி தூசு; அதுல குடிப்பான் போல இருக்கு, குடல் நுரையீரல் எல்லாம் போய்.. காப்பாத்த முடியலை. சின்னச் சின்னதா மூணு குழந்தைங்க. என்னால மத்தவங்க மாதிரி வேலை வேற, குடும்பம் வேறன்னு பிரிக்க முடியலை. நாட்டுக்கு ராஜா பத்துலேருந்து அஞ்சு மணி வரைக்கும் மட்டுமா ராஜா? ராணுவக்காரன் மாதிரி எப்பவும் அலர்ட்டாதான் என்னால இருக்கமுடியும். அதே எண்ணத்தோட வளர்ந்துட்டேன். இந்த மாதிரி கவிதை எழுதி இரங்கற்பா படிக்கறதவிட நீ புருஷன் போன அந்தப் பொண்ணப்பார்த்து பேசி ஏதாவது வேலை சம்பந்தமா என்ன தெரியும்னு கேட்டு உதவினா நல்லாயிருக்கும். ஆணா நான் செய்யறதவிட நீ அதிகம் செய்யமுடியும் இந்தமாதிரி குடும்பங்களுக்கு.”

அவ்வளவுதான். பாய்ந்து கட்டிப்பிடித்து இழுத்துக் கொண்டேன். எவ்வளவு பெரியவன் இவன்; எப்படிப்பட்டவனைப் பிடித்திருக்கிறேன். காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து.. காலையிலிருந்து துளிர்விட்ட எண்ணம் மேலெழுந்தது. காலையில் ஸ்ரீதர் க்ளாஸ்மேட் ப்ரதீப் வாழ்த்துச் சொல்ல வந்திருந்தான். குடும்பமே வயசுக்கு வந்ததும் வக்கீலாகிவிடும் பரம்பரை. வாய் ஒயாத பேச்சுக்கிடையில் “மஞ்சுளா, இப்படியே உக்கார்ந்திருந்தா நீ குண்டடிச்சுடுவ. சோஷியல் சர்வீசா ஃப்ரீ லா கன்சல்டன்சி செஞ்சு தரோம் எங்க ஃபேமிலி. பெண்கள் பிரிவுக்கு டெம்பரரியா பொறுப்பு எடுத்துக்க முடியுமா? சில பேப்பர் உனக்கு excemption கிடைக்கும். போஸ்டல்ல லா கிராஜுவேஷன் முடிச்சா முழுக்க நீயே பார்த்துக்கலாம். உன் ஆர்வமும் பேப்பர் முடிக்காட்டாலும் உன் திறமையும் டெடிகேஷனும் தெரிஞ்சே இதை எங்கப்பாகிட்ட சொல்லிட்டு உனக்குத் தரேன்.” பழைய ஆசைகள் கிளப்பப்பட்டதுபோல் உணர்ந்தேன். நாளையிலிருந்து புதிதாக பழையதையெல்லாம் ஆரம்பிக்கலாம். அத்தை உதவிக்கு இருக்கிறாள். ஸ்ரீதரிடம் சொல்ல நேரம் அமைந்தது என்று சந்தோஷப்பட்டேன்.

“ப்ச், நான் உன் ஆசையெல்லாம் தெரிஞ்சுதான் ஆரம்பத்துலேருந்து உன்னைவிட்டு விலகியே இருக்கணும்னு நினைச்சேன். ஆனா ஒரு மோசமான சூழ்நிலைல நீ முடிவெடுத்து நாம் சேர்ந்துட்டோம். ஏற்கனவே ஒரு வருஷம் என்ன வாழ்ந்தோம்னே தெரியாம ஓடிப் போயிடுச்சு. எல்லாத்தையும் ஓரமா வை. எவ்வளவு வேணுமோ வீட்டிலேருந்தே படி. இங்கயே என்னல்லாம் செய்யமுடியுமோ செய். முதல்ல ஒரு குழந்தை பெத்துக்கலாம். இரண்டு வருஷத்துல இன்னொன்னு தத்து எடுத்துக்கலாம். எங்கயும் வேலைக்குன்னு வெளில கமிட் பண்ணிக்காத. நீ வீட்டுல இருக்கேன்னா என்னால முழு நானா என் வேலைகளைச் செய்யமுடியும். எனக்கும் என் குழந்தைகளுக்கும் எப்பவும் நீ வேணும். சின்னவயசுல எங்கம்மா வேலைக்குப் போய் நாங்க இழந்ததுதான் அதிகம். நம்ப குழந்தைகளுக்கு அது தேவையில்லை. என்ன சொல்ற..” நெருக்கினான்.

குழந்தை என்ற வார்த்தையில் சொக்கிப்போனேன். முதல்சந்திப்பில் ஸ்ரீதர் வீட்டில் அவன் ஃபோட்டோவையே பார்த்துக்கொண்டிருந்தேன் என்று சொன்னது ஞாபகம் வந்தது. அவனையே வாங்கிச் சுமந்து, ‘இந்தா!’ என்று அவனுக்கே கொடுக்கப் போகிறேன். அப்புறம் தெரியும் நான் யாரென்று. யுக யுகமாய் அவ்வளவு உயிரினங்களும் செய்துகொண்டு வரும் சாதாரண விஷயம்தான் பெற்றுப் போடுவது என்றெல்லாம் தோணவேயில்லை. நான் மட்டும் ஏதோ பெரிய சாதனை செய்யப் போகிறேன் போல் தோன்றியது. “பாப்பா யார் மாதிரி இருக்குமோ?.. நாளைக்கு நீ சும்மா லீவு போடணும் எனக்காக, சரியா?.. ப்ரதீப் திரும்ப கேட்டா, ‘போடா, நான் பாப்பா பண்ணப்போறேன், வரலை’ன்னு சொல்லிடுவேன்.. உன் பர்த் டே நாளைக்கு செலிப்ரேட் பண்ணிக்கலாம்.. போனாப் போறது, நாளைக்கு ஒருநாள் உன்னைப் பாப்பாவா வெச்சுக்கறேன்.. டெலிவரி வரைக்கும் உன்கூடவே இந்த வீட்டுலதான் இருப்பேன்” முத்தங்களுக்கு நடுவில் பிதற்ற ஆரம்பித்தேன். இவ்வளவு நாள்களாக ஒவ்வொன்றாய் உள்ளே நழுவிக்கொண்டிருந்தது போக, குழந்தை எண்ணம் ஒட்டுமொத்தமாக என்னை உருவிப்போட்டது. மாமியாரின் இறப்பிற்குப்பின் சிறிது நீண்ட இடைவேளைக்குப்பின் முதல்முறையாய் மீண்டும் ஒருவரிடம் ஒருவரை இழந்துகொண்டிருந்தோம்.

மறுநாள் லீவுபோட்டு, முதல்வாரமே வாங்கிவைத்திருந்த கவிதைத் தொகுப்பைக் கொடுத்தான். “யார் எழுதியிருக்காங்கன்னெல்லாம் தெரியாது. சாலிடா நிறைய கவிதை இருந்தது இந்த புக்ல. வாங்கிட்டேன். உனக்குப் பிடிக்குமான்னு தெரியாது.” தயங்கிக் கொண்டே கொடுத்தான். ரசனை ஒத்துப் போகாமல் கணவன் மனைவி வாழமுடியாது என்று எந்த முட்டாள் சொன்னது? என் ரசனையை ஒத்த எந்த இலக்கியவாதியையும்விட, புரியாவிட்டாலும் என் ரசனையை மதிக்கும் இவன் உயர்ந்தவன் என்றே தோன்றியது. அப்பாவிற்கு ஃபோன் செய்து, நேற்று பார்க்கமுடியாததற்கு சாரி சொல்லி இன்று மதியம் வரச்சொன்னான். அத்தை வற்புறுத்தியதால் கோவில், அப்புறம் ஷாப்பிங் என்று சுற்றிவிட்டு வந்து சாப்பிட்டு நிம்மதியாக மதியம் தூங்குகிறான். நான் தான் தூக்கம் வராமல் பக்கத்து நாற்காலியில் புத்தகத்தை எடுத்துப் பிரித்துவைத்துக் கொண்டு படிக்காமல் பழைய நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருக்கிறேன். நான் பார்த்துக்கொண்டிருப்பது உள்ளுணர்வில் உணர்ந்தோ என்னவோ விழிப்பு வந்து திரும்பிப்படுக்கிறான். சமீபத்தில் அம்மாவுக்குக் ‘காரியங்கள்’ செய்ததில் கொஞ்சம் இளைத்திருக்கிறான். கண்கள் சிவந்து ஒரு திருப்தியான தூக்கத்திற்குப் பின்னான தெளிவில் இருந்தவனின் கண்களைப் பார்த்து மயங்கித் தடுமாறித்தான் போனேன்.

“கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டஅப்
பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே”

திருப்பாணாழ்வார் வந்து, ‘கொஞ்சிக்கோ!‘ என்று அடியெடுத்துக் கொடுத்துப் போனார். என் மனதைப் படித்தவன்போல் சிரித்துக் கொண்டே இடதுகையால் தனக்குப் பக்கத்தில் படுக்கையில் தட்டி ‘வந்து படு’ என்று சைகை செய்தான். பொய்க்கோபமாக டேபிள் மேலிருந்த பென்சிலைத் தூக்கி அவன்மேல் எறிந்தேன். வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டது.

ஜன்னல் வழியாக, படுத்துக்கொண்டே தலையைத் தூக்கிப் பார்த்த ஸ்ரீதர், அப்பா வருவது தெரிய, ‘மாமாவப் பாத்தே நாளாச்சு’, மரியாதையும் பாசமுமாக ஒரு தற்காலிகப் படபடப்போடு எழுந்து லுங்கியைச் சரிசெய்துகொண்டே வாசலுக்கு நடக்கையில்…

அதற்கும் முன்பாகப் பர்வதம் அத்தை ‘வாங்கோ, இருக்கா ரெண்டுபேரும்’ என்று தேவைக்கதிகமாக சிரித்துகொண்டே கதவைத் திறந்துவிட நெருங்குகையில்…

மிச்சப்பணத்தை வாங்கிக்கொண்டு ஆட்டோவை அனுப்பிவிட்டு, கைநிறைய பரிசுப் பைகளோடு வாசலிலிலிருந்தே அப்பாவின் பார்வை மட்டும் அனைவரையும் தாண்டிக்கொண்டு தன் பெண்ணைக் காண, துடிப்போடு வீட்டின் உள்துழாவும் போது…

உற்சாகமாகவும் சந்தோஷமுமாகவும் எழுந்த நான் புத்தகத்தில் படித்துக்கொண்டிருந்த பக்கத்தில் அடையாளம் வைக்கும்முன், கவிதையின்மேல் ஒருமுறை அவசரப் பார்வையை ஓட்டினேன்..

===
“சீதா கல்யாண வைபோகமே
ராமா கல்யாண வைபோகமே

சிவதனுசு நகர்த்திப்
பந்தெடுத்த சீதையை–
பின் எப்பொழுதுமே
பார்க்க முடிந்ததில்லை
ஜனகனால்.”
===

முற்றும்.

 

ஆன்மிகவாதிகள் கூட நாத்திகவாதிகளாகும் பொழுது இதுதான். உலகில் எப்போது கொடுமை நடந்தாலும் அவதரிப்பதாகச் சொன்ன கடவுள்களை எங்கே காணோம்?

ஐயகோ!
தமிழன்னையின்
முள்கிரீடத்தில்
இன்னுமொரு
நெருஞ்சிப்
பூவா?

[– கவிப் பகைவன் ஆசிப் மீரான், நிழல்கள் புத்தக வெளியீட்டில்….]

அன்புள்ள ஹரன் பிரசன்னா,

புத்தகங்கள் எப்போதும் மகிழ்ச்சியளிப்பவைதான் என்றாலும் நாம் அறிந்தவர் எழுதிய புத்தகங்கள் இன்னும் பிரத்யேகமான மகிழ்ச்சியைக் கொண்டுவருபவை. அப்படி எழுதியிருப்பவர் எனக்குத் தெரிந்து பத்திருபது பேர் இணையம் முழுவதும் இருக்கலாம் என்றாலும் அதனினும் பிரத்யேகமானது இந்த நூல் வெளியீடு என்பதைச் சொல்லத் தேவை இல்லை. 

அந்த விதத்தில் உங்கள் கவிதைத் தொகுப்பைக் கையில் எடுத்த நொடியே காணாமல்போனேன் என்று சொல்லவிரும்பாவிடினும்  புல்லரித்தேன் என்பதில் பொய்யில்லை. பக்கங்களைப் புரட்டும்போதுதான் அந்த அனுபவத்திற்கு நான் தயாராக இருந்திருக்கவில்லை என்ற உண்மை புரிந்தது. கடைசியிலிருந்து ஆரம்ப நாள்களை நோக்கி நகர்ந்த– புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பத் திருப்ப– கவிதைகளை வாசிக்க வாசிக்க- மெதுவாகப் புரிந்துகொண்டேன், நான் திருப்பிக் கொண்டிருப்பது பக்கங்களையோ கவிதைகளையோ  மட்டுமல்ல– என் கடந்த வருடங்களின் ஈடிணையில்லா இணைய நாள்களையும் சேர்த்தேதான் என்பதை.

எப்படிப்பட்ட அனுபவம் என்பதை வார்த்தைகளில் வடிக்க இயலவில்லை. இனி, இந்த உணர்விலிருந்து வெளிவந்து வெறும் வாசகனாக முடிவெடுத்து, திரும்பவும் பலமுறை கவிதைகளினூடாக நடைபயில ஆரம்பித்தாலும், நாலுகால் பாய்ச்சலில் நினைவுகள் பின்னோக்கி ஓடுவதைத் தடுக்கவே முடியவில்லை.

எல்லாக் கவிதைகளின் ஜனனத்திலும் இணையேற்றத்திலும்கூட உடனிருந்தவள் என்ற தகுதியே, என்னை இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு விமர்சனமோ(!) திறனாய்வோ(?!)  எழுதும் தகுதியை இழக்கச் செய்கிறது. அப்படி எழுதுவது, எழுதிய கவிஞனே விளக்க உரை எழுதக்கூடிய அபத்தத்திற்கு இணையானதாகும் என்பதையும் அறிந்தே இருக்கிறேன் என்பதும் அதை இங்கே பதிவுசெய்வதுகூட இப்பொழுதைக்கு தேவை இல்லாத ஒன்று என்பதை நீங்கள் சொல்ல நினைப்பதை அறிந்தும் சொல்லிவைக்கிறேன்.

என்றாலும், இந்த நெகிழ்ச்சியான நேரத்தில் உங்களை வாழ்த்திச் சொல்லவும் வேண்டிக் கேட்கவும் ஒன்று உண்டு என்றால் அது–  அந்தத் தகுதியின்மை எனக்கு எப்பொழுதும் கிடைக்கக் கூடியதாக இருக்கவேண்டும்; இனி வரும் உங்கள் சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், கவிதை, புதினங்கள் எல்லாவற்றினூடாக நீங்கள் இனியும் நிகழ்த்தப் போகும் இலக்கியப் பயணம் அனைத்திலும்கூட நட்பின் நாதமாக நானும் உடன் வந்தவளாகவே இருக்கவேண்டும் என்பதுதான்.

நலம் ஒன்றே நாடும் நட்புடனும் வாழ்த்துகளுடனும்,
ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.

இப்படி எல்லாம் நான் எழுதுவேன்னு நினைச்சு வந்தவங்க என்னை மன்னிச்சுடுங்க. நீங்க அட்ரஸ் மாறி வந்துட்டீங்க. நிழல்கள் புத்தகத்தை இங்க வாங்கிகிட்டு அப்படியே எஸ்’ ஆயிடுங்க.  நம்ப ரெண்டுபேருக்குமே அதுதான் நல்லது.

0

சே சே ஜெயஸ்ரீ அந்த மாதிரி ஆள் இல்லைன்னு என்னை சரியாப் புரிஞ்சுண்டு, மேல இருந்த எதையும் படிச்சு நேரத்தை வீணாக்காம, நேர ஸ்கிரீன் ஸ்க்ரோல் செஞ்சு பதிவோட இந்த இடத்துக்கே வந்தவங்க… வாங்க. என்னைப் புரிஞ்சுகிட்ட உங்களை நான் ஏமாத்தப் போறதில்லை.

நான் சொல்ல வந்தது இதுதான்:

அந்தக் கவிதைத் தொகுப்பு முழுமையானதில்ல. அது புத்தகத்தோட தலைப்புக்கு ஏத்தமாதிரி கவிஞரோட சில நிழல் பிம்பங்களைத்தான் காண்பிச்சிருக்கு. தானும் ஒரு பின் நவீனத்துவ பெருச்சாளிக் கவிஞர்னு பேர் எடுக்க, கூட்டப்பட்ட அல்லது குறைக்கப்பட்ட நீள அகலத்தோடான பிம்பங்கள் அவை. எல்லாத்துலயும் ஒரு பின் நவீனத்துவ கருமை படர்ந்து பாதாள பைரவியா நமக்கெல்லாம் புரியாம இருக்கலாம்.

கவிதைகள் குழப்பலாம்; ஆனா தன் பிம்பத்துல குழப்பம் எதுவும் வரக்கூடாதுன்னு கவிஞர் முன்ஜாக்கிரதையா தன் பழைய கவிதைகளை அப்படியே மறைச்சு ட்ரங்க்பெட்டிக்குள்ள போட்டு  பரண்மேல ஏத்திட்டாரு. நாமளும் அதை அப்படியே விட்டுடமுடியுமா?

 அதனால நிழல்களை நம்பாம நிஜங்களைத் தேடறவங்க– பின் நவீனத்துவத்துவக்கு முன்னான- அரிதாரங்கள் இல்லாத– ஒரு (காதல்) கவிஞர் உதயமான உண்மை முகத்தை, அதோட வர்ணங்கள், சமன்பாடுகளோட பார்க்க நினைக்கறவங்களுக்கு இங்க கொஞ்சம் கவிதை(!!)களுக்குள்ளிருந்து சாம்பிள் வரிகள் மட்டும்…..  (இதெல்லாம் மரத்தடி.காம்ல காணாமப் போச்சு! வேறு எங்கும் கிளைகள் இல்லை என்பதால தமிழுக்கு நான் செய்ற தொண்டா இதை எல்லாம் தோண்டி எடுத்து…..) 

 

மெத்தைக்குக் கீழே
கத்தை கத்தையாய்
காற்றே சுவாசிக்காத
கவிதைகள் நிறைந்த
காகிதங்கள் கிறுக்கல்களாய்.
……
…..

அட அது நான் ஓட்றது இல்லைங்க. அவரோட ‘காதல் சுகமானது?’ (கேள்விக்குறி ரொம்ப முக்கியம்!) கவிதைலயே தன்னைப்பத்தி அம்மணிக்கு வாக்குமூலம் கொடுத்திருக்காரு.
 
 

வெற்றுக் காகிதத்தின்
வரட்டு வார்த்தைகள்
முத்த பதிலினால்
முளைவிடுமாதலால்
மரப்பாச்சி பொம்மையையும்
மனிதனாக்கும்
அக்காதல் வித்தையை
காற்றில் அனுப்பு
காத்திருக்கிறேன் நான்.
…..

— “காதலுமது”

தோடாஆஆ…
 

 

கடலை போடறது கேட்டிருப்பீங்க. கவிஞர் கடலை தட்றாக.

காதல் கடலை
தானாய் வெடித்தால்
சுகப்பிரசவம்
அல்லாதுபோனால்
அதை உடைக்கத்
தடி எதற்கு?
தட்டல் போதும்

— “சடுகுடு”

 

பிரிவில் உணர்கிறேனடி
பாசத்தின் பரிணாம வளர்ச்சி
காதலாகிப்போனதை

அடீ புடீன்னெல்லாம் கூப்பிட்டு ஒளறலைன்னா அது காதல்கவிதையே இல்லை போல. கொடுமை! (நிஜமாவே இப்படி எல்லாம் எழுதினா எந்தப் பெண்ணாவது திரும்பியாவது பார்க்குமா, இல்லை தலைதெறிக்க ஓடுமான்னே சந்தேகமா இருக்கு!)

பூவரசம் பெண்ணே
காற்றில் என் காதல் அனுப்புகிறேன்
மேகத்தின் வழி உன் மோகம் அனுப்பு

என்னா டீலிங்கு! என்னா டீலிங்கு!!

பிரிவின் வெம்மையில் கவிதை சொல்கிறேன்
கட்டி அணைத்து என் கவிதை நிறுத்து

வந்துட்டாங்கய்யா பால்வெளிக் கவிஞர் வைரமுத்துவுக்கே போட்டியா…

— “காதல்”

 

காதல் விதை விதைக்கப்பட்டிருந்தால்
தவிர்த்திருந்திருக்கலாம்
காதல் மரமே நடப்பட்டபோது
நெஞ்சம் கொஞ்சம்
மிரண்டுதான் போனது!
அ·றிணைகளுக்கு
உயர்திணைகளின்
அவஸ்தை புரியாதோ?

— “குற்றச்சாட்டுகள்”

நெஜமாவெ முடியலடே…

 

இருபதில் இதழ் சுவைத்தபோது
இதயத்துள் மோகம் இருந்தது
முப்பதில் முயங்கியபோது…
நாற்பதின் நகக்கீறல்களில்…
ஐம்பதில் ஆசைகொண்டபோது…
அறுபதில்…

அப்பல்லாம் என்னாச்சுன்னு தெரியணுமா? அதுக்கு “அந்தி” கவிதை படிக்கணும். ஃஃஃஃ

 

காமம் தொலைத்தலினும்
எளிதும்
இனிதும்
உயிர்தொலைத்தல்

— “காமம்”

டீலா நோ டீலா…
 

 

எந்தவித முகாந்தரமுமில்லாமல்
காரணங்களைத் தேடிச் சொல்லி
விலகிய நாளிலும்
உள்ளங்கையில் உடல்வாசம் இருந்தது

— ‘மீண்டுமொரு கனத்த இரவு”

இப்பல்லாம் எக்கச்சக்க விலை கொடுத்து வாங்கற பெர்ஃப்யூமே அரைமணி நேரத்துக்கு மேல தாண்ட மாட்டேங்குது!

 

 

கடுகினுள்ளே
மோகத்தின் முத்தம் முடிந்து
காமத்தின் யுத்தம் கழிந்து
ஞான வெடிப்பு
கருத்து விளைச்சல்

— “ஞானம்”

பழம் நீயப்பா!….

 

 

செய்வினைக்கே தகர்ந்தேனெனில்
செய்யப்பாட்டு வினையில்..?

— “முத்தம்” 

கடைசியா சொல்ல விரும்பிக்கறேன். நம்ப பால்வெளிக் கவிஞர் வைரமுத்து, ஜீன்ஸ் படத்துக்கு பாட்டு எழுதவிட்டுத்தான் தமிழ்கூறும் நல்லுலகுக்கே “இரட்டைக்கிளவி” இலக்கணக் குறிப்பு புரிஞ்சதாம். அதுமாதிரி செய்வினை, செய்யப்பாட்டு வினை எல்லாம் தெரிஞ்சுக்க விரும்பினா, (மரத்தடி மக்கள் எல்லாம் ஏற்கனவே படிச்சு பாஸாயிட்டங்க!) “முத்தம்” கவிதையைப் படிச்சே ஆகணும்.

 

இன்னும், பாத்ரூம் கண்ணாடில வெந்நீர்பட்டு ஆவிபடிஞ்சா என்ன செய்யணும்? லேருந்து,

“புணரும் நாயை பொழுதுபோகாத சிறுவன் இன்னிக்கு மட்டும் ஏன் கல்லால அடிக்கலை?” …

“மூக்கு நுனில ஈ எப்ப எங்க என்னிக்கி வந்து உக்கார்ந்துச்சு; அப்றம் என்னாச்சு” … வரைக்கும் பல விஷயங்களுக்கு பதில்தெரிய நீங்க செய்யவேண்டியதெல்லாம் இதுதான்!

 • A. காதல் வந்ததும் இவிங்க இப்படி எல்லாம் கவிதை எழுதக் கிளம்பிடறாய்ங்களா
 • B. கவிதை எழுதக் கிளம்பினதும் இப்படி காதல் காஜல்னு ஒளற ஆரம்பிக்கறாங்களா

 

உங்க சரியான பதிலை [trunkbox (ஸ்பேஸ்) A(அல்லது B) (ஸ்பேஸ்)உங்கள் பெயர்] எழுதி haranprasanna at gmail dot com க்கு அனுப்புங்க அல்லது sms பண்ணுங்க.சரியான விடை எழுதறவங்கள்ல 10 பேருக்கு குலுக்கல் முறைல இவரோட “ட்ரங்க்பெட்டி கவிதைகள்” மின்னூலை அனுப்பிவைப்பாங்க.

குலுக்கல்ல தேர்ந்தெடுக்கப்படாத 99990 பேர் கவலைப்படாதீங்க. Vasan Eye Care மாதிரி, “நாங்க இருக்கோம்.” (மெயில், Buzz, facebook, orkut, twitter எல்லா வண்டிலயும் ஏத்தி அனுப்பிடமாட்டமா?)

இப்படிக்கு,
கவித்தொலைவி
மார்க்கெடிங் டேமேஜர் ஆஃப் மார்க்கெடிங் மேனேஜர்.

Jeyamohan

[வீடு மறுசீரமைப்புப் பணிகள் துரிதமாக நடப்பதால் கணினியில், இணையத்தில் இயங்கமுடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். இந்தப் பதிவு பின்னர் மீளேற்றப்படலாம். :)]

Sujatha 3

 

‘சின்னி இறந்திருந்தாள்’ன்னு உங்களோட ஏதோ ஒரு தொடர்கதையோட கடைசி வரிபடிச்சு அழுதது மட்டும் தான் நினைவிருக்கு. அந்தக் கதை நினைவில்லை. வீட்டுல திட்டு, அதோட கதை புஸ்தகமெல்லாம் கட். பொதுவாவே கதை புஸ்தகம் படிச்சா படிப்பு கெட்டுப் போயிடுங்கற ‘ஆசாரமான’ குடும்பம். இதுக்கப்பறம் அக்கம்பக்கம் வாங்கிப் படிக்கக் கூட தடை. அப்படியும் விடலை. ரெண்டுவீடு தள்ளி ஒருத்தங்க வீட்டுக்கு சாயங்காலமா குழந்தையைக் கொஞ்சற மாதிரி போய் விகடன், குமுதம், கல்கின்னு உங்களோட எழுத்தை மட்டும் டக்னு திறந்து படிச்சுட்டு (இதுக்கு லஞ்சமா குழந்தையை தூளில ஆட்டிகிட்டே படிக்கணும். ஆனா அது எப்பவும் பிடிச்ச வேலைதானே. அதனால டபிள் பெனிஃபிட் ஸ்கீம்ல சந்தோஷமா செய்வேன். வெளிலேருந்து எங்கம்மா குரல்கொடுத்தா, ‘அவ தூளி ஆட்டிகிட்டிருக்கா, குழந்தை தூங்கற நேரமில்லைன்னு சொன்னா கேட்டாதானே’ன்னு பாப்பாவோட அம்மா பதில் சொல்லிடுவாங்க. அதெல்லாம் படிக்கற பத்து நிமிஷம் மட்டும் தான். படிச்சு முடிச்சதும் குழந்தையோட அம்மா அலற அலற பாதி தூக்கக் கலக்கத்துல இருக்கற குழந்தையை அப்படியே அள்ளிகிட்டு, ஓடீடுவேன் எங்கவீட்டுக்கு.

படிக்கறது ஒரு சுகம்னா அதைவிட பதின்மவயசுல(இப்பவும் தான்) அதகளமான கூட்டத்துல அதைப் பேசிகிட்டே இருக்கறது அதைவிட சுகம். அப்படித்தான் எனக்கு RSV வாத்தியாரோட ட்யூஷன் பிடிக்க ஆரம்பிச்சது. எங்க வீடு மாதிரி புத்தகங்களுக்குத் தடை எல்லாம் என் ஃப்ரெண்ட்ஸ் வீடுகள்ல இல்லை. அவங்கல்லாம் காலைலயே படிச்சுட்டு வந்து ட்யூஷன் நேரத்துலயே பேசி முடிச்சுடுவோம். சாயங்காலம் நான் திருட்டுப் புத்தகம் படிக்கறது சும்மா ஒரு எக்ஸ்ட்ரா வாசிப்பனுவத்துக்குத் தான். க்ளாஸ்ல உங்களைப் பத்தி பேசுகிட்டிருக்கும்போது RSV, “ரெங்கராஜன் என்னோட ஸ்கூல்மேட். கிரிக்கெட் போட்டியெல்லாம் அடையவளஞ்சான் வீதிக்கு வந்து விளையாடுவான். எங்காத்து கீழ்ரூம் ஓரத்துல சாத்திவெச்சிருக்கற பேட்(bat) ரெங்கராஜன் விளையாடினதுதான்”னு சொன்னதும் நம்பமுடியாம(அவர் வயசென்ன, உங்க வயசென்ன?) ஆனா சந்தோஷமாயிட்டேன். ஒருநாள் அடக்கமுடியாம அவங்கவீட்டு வாசப்பக்க கீழ இருட்டுஉள்ல ஜன்னலை ஒட்டி சாத்தி வெச்சிருந்த பேட்டை வெளித் திண்ணைலேருந்து ஜன்னல் வழியா கையை உள்ள விட்டு தொட்டுப் பார்க்க நினைச்சு உள்ள கையை விட, அதுக்குள்ள RSV இறங்கிவர, அவசரத்துல கையை வெடுக்குனு எடுக்க.. போகும்போது கை எப்படி சுளுவா போச்சுன்னு தெரியலை. வெளில எடுக்கும்போது கை மட்டும்தான் வந்துது. வளையல் எல்லாம் உள்ளயே உடைஞ்சு கொட்டிடுச்சு. கொஞ்சூண்டு இரத்தம் வேற. 😦

அப்படியே விட்டிருக்கலாம். வீதி பிஸ்தாக்கள்கிட்ட இதைச் சொல்லி பீத்திக்கணும்னு நினைச்சு விலாவாரியா சொல்லிட்டேன். ஆளாளுக்கு என்னை அழவெச்சுட்டாங்க. அவங்களுக்கெல்லாம் அவர் (பாய்ஸ் ஹைஸ்) ஸ்கூல் மேத்ஸ் வாத்தியாராச்சே.

“RSVஆ? அவர் பீலா விடுவாருன்னு தெரியும். அதுக்காக இப்படியா?”

“எந்த சுப்புணி பேட்டையோ தொட்டுட்டு… பாவம்டா.”

“அவர் சொன்னா இந்த கேப்ஸ் (கேப்ஸ்- KPVT யோட ஷார்ட் ஃபார்ம். இது எங்க வீதி குழூஉக்குறி) ஏன் நம்பணும்?”

“இல்லை, அவர் இதுக்கெல்லாம் பொய் சொல்ல மாட்டாரு. ரொம்ப நல்லவரு”ன்னு நான் திரும்பத் திரும்பச் சொன்னதை யாரும் நம்பத் தயாரில்லை. அல்லது நம்பினாலும் என்னை ஓட்டியே தீரணும்னு முடிவா இருந்திருக்காங்களோ என்னவோ.

“இவகிட்ட நமக்கென்னடா பேச்சு. அந்த பேட்டை வாங்கி மேக்கை(make) பாத்தா தெரிஞ்சுட்டுப் போகுது. என்ன மரம், எந்தக் கடை, எந்த வருஷம் எல்லாம் சொல்லிடமாட்டோம்?”

பயந்துட்டேன். இவங்க வாத்தியார்கிட்ட கேட்டுடுவாங்கன்னில்லை. அது நீங்க தொட்டு விளையாடின பேட்டா இல்லாம இருந்துடக் கூடாதேன்னு. வீட்டு வாசல்ல அழுதுகிட்டிருந்ததைப்; பாத்து பாட்டி வந்து விசாரிச்சா. “அது என்ன நடந்துச்சுன்னா… உங்க பேத்தி…” ன்னு ஒருத்தன் விஸ்தாரமா சொல்ல ஆரம்பிக்க, என் அழுகைக்கு பயந்து இன்னொருத்தன் “வேண்டான்டா” ன்னு அவன் வாயைப் பொத்த, ‌அவன் அந்தக் கையையும் வலுக்கட்டாயமா தள்ளி, “உங்க பேத்தி டேஷ் டேஷ் டேஷ்..” ன்னு கத்திட்டுப் போனான்.

அம்மா வந்து அலட்சியமா என்னன்னு விசாரிச்சா. “வளையல் உடைஞ்சிடுச்சாம், திட்டுவீங்களோ?”ன்னு எவனோ எடுத்துக் கொடுத்தான். “ஆமா, போன மாசம் காதுல இருந்த தங்கத் தோடை தொலைச்சா. போன வாரம் வெள்ளிக் கொலுசைத் தொலைச்சா. அதுக்கே பாட்டியும் பேத்தியும் வெளிய சொல்லாம கமுக்கமா இருந்திட்டாங்க. கண்ணாடி வளையலுக்கா அழப்போறா இவ. அதெல்லாம் பசப்பு”ன்னு நல்லவேளை கண்டுக்கலை.

ஆனாலும் அப்றம் வந்த நாள்கள்ல இந்தப் பசங்கபோய் வாத்தியாரைக் கேட்டு அது நீங்க விளையாடினதில்லைன்னு ஆயிடுமோன்னு ஒரே பக்பக்தான்.  எங்கண்ணன் தான் தைரியம் சொன்னான், இவனுங்க எல்லாம் போய் கேக்கமாட்டாங்க. அவர் ரொம்ப ஸ்டிரிக்ட். அவரைப் பாத்தாலே டிராயரை நனைச்சுடுவாங்கன்னு. அதே கொஞ்சம் நிம்மதி. ஸ்கூல்ல அவர் பையன்கள் கிட்ட அப்படி ஸ்டிரிக்டா இருப்பாரோ என்னவோ எங்களை எல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டார். ‘அவருக்கு கல்யாணம் ஆகலை இல்ல‌. அதனால பெண்களை எப்படி டீல் பண்றதுன்னு அவருக்குத் தெரியாது. ஏதாவது சொன்னா எங்கயாவது அழுதுகிழுது வெச்சிடுவீங்களோன்னு பயப்படுவாரு’ன்னு ஒருத்தன் ஆரூடம் சொல்லியிருந்தான். இருக்கலாம். ஆனா அதை நான் தான் முழுமையா (மிஸ்)யூஸ் பண்ணின்டேன். 🙂

ஆனா RSV அன்னிக்கி ஒருநாள் ஆர்வமா உங்களைப் பத்தி சொன்னதோட சரி. அப்றமெல்லாம் உங்களைப் பத்தி நாங்க பேசறதை வகுப்புல அனுமதிக்கவே இல்லை. அப்றம் கொஞ்சம் பொறுக்காம நீதான் எல்லாரையும் கெடுக்கறன்னு என்னை குறிப்பிட்டு சொல்லிகிட்டே இருந்தாரு. நமக்கு அதெல்லாம் ஒன்னும் உரைக்காதுன்னு வைங்க.

ஒருநாள் ____ குனிஞ்சு மெதுவா என் காதுல கிசுகிசுப்பா, இப்பல்லாம் உங்க பொழுதுபோக்கு வாக்மேன்ல பாட்டு கேட்கறதுதான்னு சொன்னா. “ஐயய்யோ காது சீக்கிரம் செவிடாயிடுமே!”ன்னு கொஞ்சம்- கொஞ்சம்னா பக்கத்துல எல்லாருக்கும் காது செவிடாகிற மாதிரி– சத்தமா என்னை மறந்து கத்திட்டேன். RSV சடக்னு சாக்பீஸை தூக்கி எறிஞ்சுட்டு கீழ விடுவிடுன்னு கோபிச்சுகிட்டுப் போயிட்டாரு. இதென்ன ஸ்கூலா, நாம போய் மன்னிப்பெல்லாம் கேட்டு திரும்பக் கூட்டி வர. நான் நல்லதாப் போச்சுன்னு தொடர்ந்து உங்க பேட்டியோட முழு விபரமும் கேட்டு தெரிஞ்சுகிட்டேன். (இப்ப இத்தனை வருஷம் கழிச்சு உங்களுக்கு உடம்புசரியில்லாம இருந்தபோது தேசிகன் உங்களைப் பார்த்துட்டு உடனே போன்செஞ்சு, “சார் ரொம்ப bore அடிக்குதுன்னு சொல்றாரு. வாக்மென்ல பாட்டு கேட்கறதுதான் ஒரே பொழுதுபோக்கு. அதுவும் என்னவோ சரியில்லயாம். காட்லெஸ் ஹெட்போன் கேக்கறாரு. சென்னைலயே கடைல தேடணும்”னு சொன்னபோது நெகிழ்ந்துட்டேன். நான் பயந்தமாதிரி உங்க காதுக்கு ஒன்னும் ஆகியிருக்கலை.)

எந்த ரியாக்ஷனும் எங்ககிட்ட இல்லாததாலே, RSV தானே மேல வந்து தூக்கி எறிஞ்ச சாக்பீசை கண்ல ஒத்திகிட்டாரு (பாவம்! ஆனா என்மேல என்ன தப்பு?). “நீ நாளைலேருந்து _______யோட டயத்துக்கு ட்யூஷன் வா. அவ தமிழ் மீடியம். ரெண்டு பேருக்கும் சேர்ந்து சொல்லிக் கொடுக்கறது எனக்கு கஷ்டம். ஆனாலும் அவ்ளோ கஷ்டமில்லைன்னு சொல்லிட்டாரு. ஒருவேளை இனிமே அப்படி எல்லாம் செய்யமாட்டேன், இங்கயே இருக்கேன்னு சொல்வேன்னு நினைச்சிருப்பாரோ என்னவோ. நான் நடக்றது நடக்கட்டும். நாம கெட்டதோட சந்திரபுஷ்கரணியையும் சேர்த்துக் கெடுத்துடலாம்னு தயாராயிட்டேன். அதெல்லாம் சரியா வராது. ரொம்ப அறுக்கும். வேற ஏதாவது யோசிக்கலாம்னு மத்த ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க.

மறுநாள் அந்தப் பொண்ணை பேர் என்னன்னு (சும்மா. அதெல்லாம் தெரியாமலா இருக்கோம்.) கேட்டேன். வாத்யாரே பதில் சொன்னாரு. “அவ அதிகம் பேச மாட்டா”ன்னு உபரி வாக்கியம் வேற. கடுப்பாயிட்டேன். “சரி, பேசவேண்டாம் ஒரு பாட்டு பாடேன்”ன்னு சொன்னேன். “எனக்கு கர்நாடிக் தான் தெரியும். உங்களுக்கு(?!) அதெல்லாம் புரியாது”ன்னு அந்தப் பொண்ணு சொன்னதை நான் மன்னிச்சுட்டேன். ஆனா மூணே நாள்ல அந்தப் பொண்ணு என் நண்பன் ஒருத்தனை யாருக்கும் தெரியாம கல்யாணம் செஞ்சுகிட்டு ட்யூஷனையே நிறுத்தினதைத்தான் அவரால மன்னிக்கவே முடியலை பாவம்!  :)))))

அப்றம் என்ன, நான் என் ஜோதில கலந்து, வழக்கம்போல கலக்க ஆரம்பிச்சுட்டேன். RSV திட்டாட்டாலும் அப்பப்ப பாராளுமன்ற ஸ்பீக்கர் மாதிரி அமைதி காக்க வேண்டிகிட்டே இருப்பாரு. நாங்களும் உறுப்பினர் மாதிரி வெளிநடப்பெல்லாம் செய்யாம ரணகளப் படுத்திகிட்டிருந்தோம். எல்லா வாத்யார்களையும் போலவே, “போன செட் கொஞ்சம் பேசுவாங்களே தவிர ரொம்ப ஸ்மார்ட். படிப்புன்னு வந்தா அசத்திடுவாங்க”ன்னு அடுத்து வந்த செட்கிட்ட புகழ்ந்துகிட்டிருந்தாராம். காரணம், அவர் நிஜமாவே அருமையா மேத்ஸ் சொல்லித் தருவாருங்கறதுதான். RSV வீட்டு மாடிரூம் சுவர்களும், கீழ அடையவளஞ்சான் மதில் சுவர், ஹெட்போஸ்ட் ஆபிஸ் பக்கம் எல்லாம் இன்னும் கூட உங்க கதைகளையோ உங்களைப் பத்தியோ என் குரலை எதிரொலிக்கலாம். இத்தனை வருஷம் கழிச்சும் அங்க போகும்போது ரொம்ப சின்ன பொண்ணா ரொம்ப உற்சாகமா ஆயிடறேன்.

=====

எப்படி இருந்தாலும் நான் குழந்தையா இருந்தபோது ‘நாராயணன்’ங்கற பேர் எப்படி எங்கவீட்டுல எல்லாருக்கும் அலர்ஜியோ அப்படி பதின்ம வயசுக்கு மேல ‘சுஜாதா’ங்கற பேர் அலர்ஜியாயிடுச்சு. 🙂 ஸ்கூல், காலேஜ் கட் அடிச்சுட்டு சினிமா எல்லாம் ஓக்கே, கதைபுக் படிக்கக் கூடாதுங்கறது என்ன லாஜிக்னு எனக்கு இன்னும் புரியலை. அதை விட நாமதான் ஸ்கூல் போயிடறோம். அப்பக் கூட கடமையா அம்மா ஏன் அக்கம்பக்கம் கூட புக்ஸ் வாங்கிப் படிக்கறதில்லைங்கறது என் ஆச்சரியமாவும், நாம வீட்டுலயே புக்ஸ் வாங்கலை. ஆனா இவ எங்க எப்படி படிக்கறாங்கறது அம்மாவோட ஆச்சரியமாவும் தொடர்ந்து இருந்துகிட்டே இருந்தது. முடிஞ்சவரைக்கும் அடக்கியே வாசிப்பேன். ஆனாலும் அதை இத்தனை வருஷம்கழிச்சு கிளறிட்டேன். 😦

2005 ஜூன்ல ஸ்ரீரங்கத்துலேருந்து இரண்டு நாள்ல மும்பை கிளம்பணும். எல்லாம் தயார். கண்ணுல லேசர் சிகிச்சை; அதனால இடைல ரெண்டுநாள் மட்டும் கொஞ்சம் ஓய்வு. மதியம் 3 மணிக்கு கரண்ட் போயிடுச்சு. கரண்ட் போனா ஊர் ஏன் இப்படி ஒரு அமைதியாகுது தெரியலை. அப்பா அடுத்த ரூம்ல ஏதோ பீரோவை குடைஞ்சுகிட்டிருந்தாரு. அம்மா கூடத்துல தரைல உட்கார்ந்து அரிவாள்மணைல பீன்ஸ் நிதானமா காம்பு, நார் நீக்கி திருத்தறா. எதுவும் செய்யத் தோணாம அம்மா மடில போய் படுத்துக்கறேன்.

“போய் தலைகாணியை வெச்சுப் படு. திருத்தற இடத்துல..”

“போம்மா”

“கண்ல என் கை பட்டுடப் போறதுடா. தள்ளிப் படேன்.”

“போம்மா”

உலகத்துலயே எந்த ஈகோவும் பார்க்காத அனுமதி தேவை இல்லாத ஒரே இடம் எந்தக் காலத்துலயும் அப்பா அம்மா மடிதான்.

“கண் ஆபரேஷன் ஆனதால இன்னிக்கு வெளில போக முடியலையாக்கும். இல்லைன்னா அப்பாவும் பொண்ணும் வெயில் வீணாப் போறதேன்னு திரிலோக சஞ்சாரம் கிளம்பியிருப்பீங்க”

“ஆபரேஷன்னு சொல்லி கேவலப்படுத்தாத. சின்ன சிகிச்சை. நான் என்ன பாட்டிமாதிரி கண்ல பச்சைத் திரை கட்டிகிட்டா உட்கார்ந்திருக்கேன்?”

“வேண பணத்தை கொட்டி அழுதிருக்கு. அப்றம் என்ன சின்ன சிகிச்சை?”

“போம்மா”

“போம்மா போம்மான்னுண்டிரு. கண் ஒன்னுதான் அழகா இருந்தது. அதையும் கெடுத்துண்டாச்சு. உன் வயசுல எல்லாம் நான் எப்படி இருந்தேன்!”

“என்னோட எல்லா வயசுலயும் நீ இதையேதான் சொல்லிகிட்டிருக்க. சும்மா விடாத. நீங்களெல்லாம் சின்ன வயசுலயே எப்படி இருந்தீங்கன்னு சார் சொல்லிட்டாரு”

“சாரா? யாரு அது?”

இதுதான் எனக்குப் பிரச்சினை. உங்களை சுஜாதான்னு பெண்பேர்ல கூப்பிடப் பொருந்தலை. ரெங்கராஜன்கற பேர் ரொம்ப அந்நியமா இருக்கு. சார்னு சொன்னா அது நீங்க மட்டும்தான். மற்ற ஆண்கள் யாரையும் நான் அப்படி கூப்பிடறதில்லை. நான் பேர் சொல்லி அவங்களைக் கூப்பிடறதை செரிக்கமுடியாத ஆண்களைக் கூட அவங்க பேரோட சார், அல்லது எக்ஸ்க்யூஸ்மீ இப்படியே ஒப்பேத்திகிட்டிருக்கேன். என்னைத் தெரிஞ்சவங்களுக்கு நான் சார்னு சொன்னா அது நீங்கதான்னு புரியும். அப்படிப் புரிஞ்சுக்காதவங்களைப் பாத்தா கோபமா வருது. அம்மாவோட இன்னொசன்ஸ்(அல்லது இக்னரன்ஸ்) எப்பவும் போல மன்னிச்சுட வேண்டியதுதான்.

“எங்கவீதி (கீழச்சித்திரை வீதி) பொண்ணுங்க எல்லாம் அவ்ளோ சிலாக்கியமா இருக்காது. ப்ரோட்டீன் சத்து குறைஞ்ச பொண்ணுங்க”ன்னு எழுதியிருக்காரு.

“ஏய், அவர் யாரைச் சொன்னாரோ, அந்தாள் காலத்துல நம்பாளு வயசுக்கே வரலை”– அடுத்த ரூம்லேருந்து அப்பா.

அப்பா எங்க பேச்சை கேட்டுகிட்டிருக்காரு. அதைவிட அதிர்ச்சி. நீங்க என் அம்மா அப்பாவை விட வயசுல பெரியவரு. இது எனக்குத் தெரிஞ்சதுதான்னாலும் என் மனசுல பதிஞ்சதே இல்லை. இதை எப்படிச் சொல்றதுன்னு தெரியலை. அதெப்படி வயசு தெரியும் ஆனா தெரியாதுன்னு சொல்ற. உளறாதன்னு எல்லாரும் சொல்றாங்க. எனக்குத் தெரியலை. நிறைய சந்தர்ப்பங்கள்ல உங்க வயசை யாராவது சுட்டும்போது அல்லது நிகழ்வுகள் குறிக்கும்போது எனக்கு இன்னும் அதிர்ச்சியாவேதான் இருக்கு. ஃபோன்ல நீங்க என்கிட்ட பேசும்போது உங்க‌குர‌ல் அதைவிட‌ மோச‌மா குழ‌ந்தையோட‌ உற்சாக‌த்தோட‌ இருந்த‌து.

[அம்பலம் சாட்ல ஒருதடவை ஹரியண்ணாவுக்கு ‘நாட்கள்’ குறிச்சு நீங்க சொல்லிகிட்டிருந்தபோது அப்படித்தான்– நாங்க எல்லாம் மரியாதைகொடுக்கற ஹரியண்ணாவே ஏன் உங்ககிட்ட இப்படி ஏதோ பெரியவர்கிட்ட பேசறமாதிரி மரியாதையா பேசறாருன்னு அதிர்ச்சியா இருந்தது. 🙂 இதுமாதிரி பல சந்தர்ப்பங்கள். எனக்கெல்லாம் உங்களோட தடால் தடால்னு சண்டைபோட்டு எதிர்த்துப் பேசி கலாய்ச்சே பழகிடுச்சு.]

அம்மாவுக்கு இன்னும் யாருன்னு தெரியலை. ஆனா கோபமாயிட்டா. தான் சின்ன வயசுல ரொம்ப ரொம்ப அழகா இருந்ததா இன்னும் ஊர்ல சொல்ற காலத்துல இந்த கமெண்ட்.. “யார் சொன்னது?”

“எழுத்தாளர் சுஜாதா! :)”

“திமிருதான்!”

“என்ன திமிரு? :)) எப்பவுமே சட்டை மேல் பட்டனுக்கு ஊக்குதான் போடுவீங்களாமே வீதில. போடுவீங்களா இல்லையா? :))”

அம்மா அதுக்கு உடனே ஒன்னும் சொல்லலை. அம்மாவுக்கு கவிஞர் வாலி பத்தி கொஞ்சம் குறையுண்டு. கோமளத்து மாமியாத்து வாச திண்டுல உட்கார்ந்துண்டு, வெத்தலையும் புகையுலையும் போட்டு, துப்பிண்டு… சே ஒரு பொண்ணும் அந்தப் பக்கம் போகவர முடியாது. ஆனா பாவம், உன்னை விட்டா ஆளே இல்லைன்னு தட்டிவிட்டே சின்ன வயசுல ‘ரேடியோ மாமா’ நிகழ்ச்சி நாடகத்துலேருந்து ஹைஸ்கூல் நாடகம் வரைக்கும் ஸ்கிரிப்ட் எல்லாம் எழுதி வாங்கி நான் பேர் வாங்கிட்டேன்’னு கொஞ்சம் நன்றியுணர்வோட சொல்வா. ஆனா சுஜாதாங்கர பேர்ல எந்தக் கருத்தும் இல்லாம இருந்திருக்கா போல. நானாத்தான் நாறிட்டேன். 🙂

திடீர்னு அஞ்சு நிமிஷ அமைதிக்கப்புறம் அம்மா, “அந்தாள் தன் மூஞ்சியை கண்ணாடில பாத்ததே இல்லையா? நட்டுவெச்ச நட்ராஜ் பென்சிலுக்கு கையும் காலும் ஒட்டவெச்ச மாதிரி இருந்துண்டு எங்களை கிண்டலாக்கும்!” [எனக்குத் தெரிஞ்சு உங்களுக்கு வந்த விமர்சனங்கள்லயே இந்தக் கோணத்து விமர்சனம்– அதுவும் தெருப் பொண்ணுகிட்டேயிருந்து இதாத்தான் இருக்கணும். சே சே பாவம் சார் நீங்க. ஏதோ என்னாலானது. :))) ]

அம்மா ரொம்ப பாதிக்கப் பட்டுட்டாங்க போலன்னு தோணிச்சு. :)) எத்தனை வயசானாலும் ஆண்களோட இந்த மாதிரி கமெண்ட் பெண்களுக்கு தாங்கறதில்லைன்னு நினைச்சுகிட்டேன்.

“அதெல்லாம் சும்மா சொல்லாத. சார் சின்ன வயசுல சூப்பரா இருப்பாரு. இப்பத்தான் டயட்ல மெலிஞ்சிருக்காரு.”

“ஆமா, நீதான் பாத்த.”

“சரி நான் பாக்கலை. நீதான் சிறப்புத் தமிழ் எடுத்துப் படிச்சவள்னு பீத்திக்கற. நீயும் புத்தகங்களுக்கு எழுதியிருக்கலாமில்ல, கீ.சி.வீதி பாய்ஸ் எல்லாம் ப்லா ப்லா அவ்ளோ சுவாரசியம் இல்லைன்னு..”

“நீ எழுதுவ அப்படி எல்லாம்”:

“நான் எழுதமாட்டேன். ஆனா சார்கிட்ட அடுத்த சாட்ல எங்கம்மா மட்டும் அதுல விதிவிலக்கு. அழகோ அழகா இருந்தாங்கன்னு சொல்லிடறேன். போதுமா?”

“அப்படியே நீ உங்கப்பா ஜாடைன்னும் சொல்லிடு”

“அதெல்லாம் பிரச்சினை இல்லை. சாட் தானே. என் மூஞ்சி தெரியாது. :)”

“வெட்டி!”

“போம்மா”

அப்புறம் பேச்சே இல்லை. ஒரு கால்மணி நேரம் கழிச்சு மெல்ல திரும்பி அம்மாவைப் பாத்தேன். கைதான் காயை திருத்திண்டிருந்தது. முகமெல்லாம் வரிவரியா நினைவுகள் ஓடற மாதிரியே ஆழ்ந்த சிந்தனை. முழுமையா கீழச்சித்திரை வீதி நாள்களுக்குப் போயிட்டாங்க. அசைக்காம விழியை மட்டும் நகர்த்தி காயைப் பாத்தேன். 4, 5 பீன்ஸ்தான் பாக்கி இருந்தது. காய் தீர்ந்ததும் திரும்ப நிஜவாழ்க்கைக்கு வந்துடுவாங்களேன்னு கவலையா இருந்தது.

=====

jaysனு என் கையெழுத்தை வெச்சு என்னைக் கூப்பிடற ப்ரெண்ட்ஸ்லேருந்து விலகி, நீங்க சுருக்கி வெச்ச jsri ங்கற பேர்தான் என் அடையாளமும் ஐடி முகவரிகளுமா மாறி 5 வருஷமாச்சு. மரத்தடி, பதிவுகள், தமிழ் இணையம்னு வாழ்க்கையே உங்க மூலமா மாறினாலும், என்னவோ இணையத்துல எல்லாருக்கும் என்னைத் தெரிஞ்சப்பறம், அம்பலம் சாட் எல்லாம் பொதுவுல வர ஆரம்பிச்சதும், பொதுவுல சாட் செய்றதுல என் அந்தரங்கம் பாதிக்கப்படறமாதிரி இருந்தது. இனிமே சாட்டுக்கு வரமாட்டேன், வருவேன் பேச மாட்டேன், இல்லைன்னா சொந்தப் பேர்ல வரமாட்டென்னு மாத்தி மாத்தி பாடாப் படுத்தி லெட்டர் போட்டாலும், “I understand”, “I guessed that much”, “I know” மாதிரி ஒருவரி பதில். ஆமா, நாம இல்லைன்னு தான் குறையுதான்னு சும்மா பாத்துகிட்டு நான் பேசாம இருந்தாலும் என் புனைப்பெயரைக் கூப்பிட்டு இழுத்துவெச்சு ரெண்டு மூணு கேள்வி, விசாரிப்பு… (‘கண்டுகொண்டேன்”னு சொல்ற மாதிரி)…  உஷா சந்திச்ச போது நான்னு நினைச்சு நீங்க பேச ஆரம்பிச்சதா சொன்னதும் மனசுக்குள்ள படபடத்த பட்டாம்பூச்சியை, தீவிர ரசிகைகள் நேர்ல சந்திக்கமாட்டாங்கன்னு சொல்லிச் சொல்லியே அடக்கிட்டேன்.

உங்க மேல நிறைய அன்பும் மரியாதையும் வெச்சிருந்தும் ஏன் எப்பவும் சண்டை போடற மாதிரியே இருந்தேன்னு தெரியலை. எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைச்சா சமத்தா இருப்பேன்னு தோணுது.

“சார், நானும் மரபுக் கவிதை எழுதக் கத்துக்கப் போறேன்”

“நீ மரபு மீறாம சரியா எழுதலாம். ஆனா அது கவிதையாங்கறதுக்கு நான் கியாரண்டி இல்லை. :)”

இதுக்கே வீம்பா கத்துக்கணும்னு தோணித்து.

“என்னவோ சொன்னீங்களே, என் வெண்பாவுக்கு மரத்தடில பரிசு கிடைச்சிருக்கு”

“என்ன பரிசு?”

“நமக்குத்தான் எப்பவும் இரண்டாம் பரிசே பிடிக்காதே”

“முதல் பரிசா. வாழ்த்துகள்”

“இல்லை. :(( அதை “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” ரேஞ்சுல கடைசில யாரோ ஒரு புலவர் வந்து எழுதி வாங்கிட்டு போயிட்டாரு”

“??”

“மூணாவது பரிசு”

“ஹா ஹா”

“பரவாயில்லை”

“btw jsri, regarding your venbas they were quite competent but not brilliant.”

“பரவாயில்லை”

“perhaps the last line was restrictive”

“பரவாயில்லை”

“I am looking for Venbas with innovative mix of modern words and topics”

“தேவையில்லை. எனக்கு மரபு சொல்லிக் கொடுத்த கனடா பசுபதிங்கறவரே நல்லாருக்கு. எனக்கு நம்பிக்கையா இருக்குன்னு சொல்லிட்டார். அது போதும்.”

” 🙂 ”

(என் ஈகோவை இட‌றிவிட்ட‌ ஸ்மைலி)

“உங்களைக் கூடத்தான் எல்லாரும் மரபுக்கு விரோதின்னு சொல்றாங்க”

“யார் சொல்கிறார்கள்?”

“எல்லாப் பெரியவங்களும்தான்”

“யார் பெரியவர்கள்?”

“(ஙே.. நீங்கதான் எல்லாரையும் விட பெரியவரா?) ஐ மீன் இணையத்துல என்னை விடப் பெரியவங்க… மரபுல எல்லாம் எழுதி முடிச்சாச்சுன்னெல்லாம் ஸ்டேட்மெண்ட் விட்டீங்களாமே”

“அவர்களை பசித்த புலி தின்னட்டும். நான் பதினான்கு வயதிலிருந்தே ‘மரபுநேசன்’ என்கிற பெயரில் மரபுக் கவிதைகள் எழுதிவருகிறேன்.” (அதெல்லாம் பேசும்போது நல்லா பேசுங்க. ஸ்டேட்மெண்ட் விடும்போது கோட்டை விட்டுடுங்க.)

அநேக நேரங்கள்ல பதில் சொல்றதும், உங்க தனிப்பட்ட செய்கையும் வேறயாவே இருக்கு. என்னாலயே இன்னும் முழுமையா புரிஞ்சுக்க முடியலை. நாய் மட்டும் ஏன் நன்றியுள்ளதா இருக்குன்னு கேட்டா, “அதைத் தனியாக் கூப்பிட்டுக் கேட்டா எல்லாம் ஒரு சர்வைவலுக்குத்தான்னு சொல்லும்”னு அலட்சியமா/நகைச்சுவையா பதில் சொல்றீங்க. 2003ல சுதந்திர தினத்தன்னிக்கு என்ன செஞ்சுகிட்டிருந்தீங்கன்னு(ரொம்ப முக்கியம்) மறுநாள் உங்க ரசிகர் ஒருத்தர் கேக்கறாரு, “நேத்தி என் வளர்ப்பு நாய்க்கு இறுதிநாள். முழுநாளும் அதுகூடவே ரெண்டுபேரும் இருந்தோம். வேற எதுவும் ஓடலை. ரொம்ப துக்கமா இருக்கு”ன்னு ஃபீலிங்ஸ் விடறீங்க.

ப‌த்ரி ப‌திவுக‌ளை ப‌டிக்க‌ச் சொல்லி எனக்கு அறிமுகம் செஞ்சீங்க. அதெல்லாம் ஒன்னும் புரியவே இல்லை. தமிழே இல்லை, உவ்வேக். எனக்கு ஒன்னுமே புரிலயலை. இன்னும் எத்தனை பேர் இப்படி கிளம்பியிருக்காய்ங்களோ”ன்னு நான் சொன்னதை மறுத்து, “அசடு, அது உலக இணையத் தமிழ் மாநாடு பதிவுகள். ரெகுலர் படி”ன்னு நிறைய சிபாரிசு செஞ்சீங்க. என்னை உருப்படியா ஒரு 15, 20 பதிவுகளை சுட்டி எடுத்து அனுப்பச் சொன்னீங்க. ஆனா பொதுவுல பதிவுகளைப் பத்தி வேற கமெண்ட் வெச்சீங்க. அதுலயும் அப்ப எனக்கு பெரிய மாற்றுக்கருத்து இல்லைன்னு வைங்க.

விஷ்ணுபுரம் 14 பக்கம் தாண்டலைன்னு சொல்லிகிட்டிருந்தீங்க. அப்ப 15 பக்கம் தாண்டினா நான் உங்களைவிடப் பெரியாளான்னு கேட்டதுக்கு ‘நிச்சயமா’ன்னு சொன்னீங்க. ஆனா படிச்சுட்டு, ஜெயமோகன்கிட்ட தனிப்பட்ட முறைல அந்த நாவலுக்கான உங்க மறுப்பை சத்தமில்லாம ஆனா அழுத்தமா சொல்லியிருக்கீங்க. கிரேட். இவ்ளோ பிரபந்தங்கள் மேல ஈடுபாட்டோட இருக்கறவரு எப்படி கனிமொழி, கமலஹாசன்னு நட்பா இருக்காருன்னு எல்லாரும் கேக்கறாங்க. (கனிமொழி, ‘திருப்பாவையை எரிச்சுடுவாங்களா?’ன்னு காஃபி வித் அனு’ல கேக்கறாங்க) அதுக்கும் இதுக்கும் குழம்பத் தேவை இல்லைன்னாலும் உங்க மறுப்பை தேவையான இடங்கள்ல, மத்தவங்ககிட்டயும் சொல்லாம இருந்திருக்க மாட்டீங்கன்னு இப்ப நம்பறேன். வேணா, எல்லாருக்கும் ஜெயமோகன் மாதிரி அதை பொதுவுல ஒத்துக்கற நேர்மை இல்லாம இருக்கலாம். இன்னும் வாழ்நாள் முழுக்க தெரிஞ்சுக்க உங்க ஆளுமைல பாக்கி இருக்குன்னு தான் தோணுது. நல்லவேளையா அதையெல்லாம் பகிர்ந்துக்கவும் எப்பவும் எனக்கு ஆள் இருக்கு.

=====

கல்யாணத்துக்கப்புறம் படிக்க புக்ஸ் இருந்தது; கட்டுபாடு இல்லை; ஆனாலும் ஏதோ குறை. அது என்னன்னா அதைப் பேசி பகிர்ந்துக்க ஆள் இல்லாதது. பக்கத்துவீட்டுல ஜேஎஸ்ராகவன் இருந்தாரு. உங்களைப் பாத்தேன், பேசினேன்னெல்லாம் சொல்வாரே தவிர ஒன்னும் சுவாரசியம் இல்லை. பெரிய பீத்தல்னு விட்டுடுவேன். வாழ்க்கையே மாறிப்போச்சுன்னு நினைச்சுகிட்டிருக்கும்போது தான் அந்தப் புதையல் கிடைச்சது. மதியம் இரண்டு மணிக்கு போஸ்ட் பாத்துட்டு குட்டிப் பாப்பாவைக் கொஞ்சிண்டே இரண்டாவது மாடி ஏறும்போது அந்தப் பொண்ணு விடுவிடுன்னு இறங்கிண்டிருந்தா. வேலைக்குப் போற அவசரம், ஹேண்ட்பேக், கைல கர்ச்சீப், அதோட அந்தப் புக்– ‘பதவிக்காக’. மனசுக்கு முன்னால மூளை சட்டுனு முழுச்சுண்டுடுத்து. பதவிக்காக ஹீரோ என்னோட நிஜ ஹீரோவாச்சே.

“இந்தப் புடைவை ரொம்ப நல்லா இருக்கு. அதைவிட நீங்க கட்டிகிட்டிருக்கறது”

சடேர்னு நின்னா. “அப்படியா, எனக்கு இது அவ்ளவா பிடிக்காது.” (அப்பாடீ, எனக்கும்தான் பிடிக்கலை. ஒரே டேஸ்ட்.)

அது என்ன புக்? ஓ பதவிக்காகவா. யார் எழுதினது? நான் இன்னும் (பதினஞ்சாவது தடவை) படிக்கலை. படிக்கலாமா?

“ம். லைப்ரரி புக்தான். சுஜாதாவோடது (அதுசரி, எனக்கேவா?)” உடனே கைல கொடுத்தா. ‘பரவாயில்லை, உனக்கும் டேஸ்ட் இருக்கு’ மாதிரி ஒரு பார்வை. இறங்கிப் போயிட்டா.

அடுத்த தடவைலயே, “அதென்ன அப்படி கேவலமான டிசைன்ல ஒரு புடைவை. வெள்ளைப் புடைவைல பெரிய பெரிய கிளி. இதெல்லாம் எப்படி வாங்கணும்னு தோணும்?” அப்படீன்னு நான் பொட்டுனு கேட்க, இரண்டு பேரும் இணைஞ்சு சிரிச்ச சிரிப்புல பிசிறே இல்லை.

கல்யாணம் ஆனாலே எந்தப் பொண்ணும் வீட்டுக்காரர் வேலை, பிரமோஷன், குழந்தைவளர்ப்பு, ஸ்கூல், , சாக்ஸ் எப்படி வாஷ் பண்றது, அசைன்மெண்ட், யூனிஃபார்ம், பெடிக்யூர்னு மட்டும் பேசி, கேள்விகேட்டு, திரும்பத் திரும்ப என்னை வீட்டுக்குள்ளயே இருக்கற உணர்வைத் தர பெண்களுக்குள்ள எனக்கான ஃப்ரெண்ட். எப்ப என்ன கேப்பான்னே தெரியாது. ஆனா அதெல்லாம் மேல சொன்னவைகள்ல வராது. இதே கருத்தையே என்னைப் பத்தி அவளும் சொன்னது தான் அதைவிட ஆச்சரியம்.

சென்னைல எதிர்த்த ஃப்ளாட்தான். ஆனாலும் மெனக்கெட்டு ஆபிஸ்போய் அங்கேருந்து ஃபோன் பண்ணித்தான் பேசுவா.

95ஆ, 96ஆ சரியா நினைவில்லை. பாஜக அரசு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துமேல பாராளுமன்றத்துல பேசுகிட்டிருக்கறது அப்ப லைவா டிவில. பாராளுமன்றம் எல்லாம் இப்படி பார்க்கமுடியும்னு நினைச்சுக்கூட பார்க்காத நாள்கள்ல அது எனக்கு ரொம்ப அதிசயம். ஆட்சி கவிழப் போறது. அத்வானி ஒளஒளாங்காட்டிக்குப் பேசிகிட்டிருக்காரு. ஆனாலும் பரவசமா பாத்துகிட்டிருக்கேன். திடீர்னு ஃபோன்.

“டீவி பாக்கறியா?”

“பின்ன?”

“அத்வானிக்கு பின்னால ரெண்டாவது லைன்ல யாரு? புதுசா இருக்கு”

“ஏதோ மகாஜன். ஸ்கூல் வாத்தியார். பிரம்பு வெச்சிருப்பாரு.”

“ஓ. எப்படி இந்தக் கோஷ்டிகளைத் தெரிஞ்சுவெச்சிருக்க?”

“புதுசு இல்லை. கொஞ்சநாள் முன்னால டெபோனர்ல அண்ணன் பேட்டி வந்திருந்தது”

“டெபோனருக்கும் பாஜக மகாஜன் அண்ணனுக்கும் என்ன சம்பந்தம்?” (மற்ற பெண்களா இருந்திருந்தா, நான் அதைப் படிக்கறேன்னு கூட சொல்லிக்க முடியாது.)

“மரத்தைப் பத்தி எல்லாம் சொல்லி முடிச்சுட்டு, ‘அப்படியாப்பட்ட மரத்துல மாட்டைக் கட்டலாம்’னு சொல்ல முடியாதா? அப்படித்தான். சினிமா எல்லாம் குடும்பத்தோட நடுக் கூடத்துல உட்கார்ந்து நெளியாம பாக்கற மாதிரி இருக்கணும்னு திருவாய் மல‌ர்ந்திருக்காரு.”

“எங்க? டெபோனர்லயா?”

“யா யா”

“அதுசரி!”

:)))))))))

நாங்க வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த முறையைப் பொருத்த வரைக்கும் எந்தப் புள்ளிலயுமே சேரமுடியாது. இவ்வளவு முரண்களோடயும் ஆனா எப்பவும் யாரைப் பத்தியும் எதைப் பத்தியும் பேசக்கூடிய ஒரு ஃப்ரெண்டு கிடைச்சது, எங்க ரெண்டுபேரையும் தனித்தனியா பிரிச்சுகூட வேற யாரும் யோசிக்கமுடியாத அளவுக்கு எங்களுக்கு நடுவுல இருந்த/ இருக்கற/ இருக்கப் போகிற ஒரே கயிறு நீங்கமட்டும்தான்.
“நேத்தி நான் எடுத்து வந்த புக் படிச்சுகிட்டிருக்கியா?”

“ம். 58ம் பக்கம்?”

“என்ன சொல்லியிருக்கான்?[கான் – உங்களைத்தான். பின்ன? :)].

….
….

“என்ன நடை இல்லை? எவ்ளோ அறுவையான மேட்டர் எல்லாம்கூட இவ்ளோ அழகா சொல்ல வருது. சரியான பொறுக்கி.” 🙂 (பொறுக்கி – பொர்க்கி மாதிரி ஒலிக்கணும். சார்-க்கு எப்படி அதோட அர்த்தம் போச்சோ அதுமாதிரி பொறுக்கிக்கு அர்த்தமும் அழகுமே மாறிப் போச்சு.) “இந்தாளு வரலைன்னா நாம ________, ______ களையெல்லாம் படிச்சுகிட்டிருக்கணும். எவ்ளோ கொடுமையா இருந்திருக்கும்?”

:)))))))

அநேகமா எங்க பேச்சு எங்க ஆரம்பிச்சாலும் உங்ககிட்ட வந்து முடிஞ்சுடும் அல்லது அதோட நின்னுடும். அதைவிட பேச ஒன்னும் உலகத்துல ஸ்பெஷலா விஷயமே இல்லாத மாதிரி.

உங்க உடல்நிலை மோசமானதும் இப்ப இணையத்துல இருக்கற யாரையும் விட என் ட்யூஷன் ப்ரெண்ட்ஸோ அல்லது இவளோ பக்கத்துல இருந்தா எப்படி இருக்கும்னுதான் நினைச்சுகிட்டிருந்தேன். காலைலேருந்தே அழுதுகிட்டிருந்தாலும் இரவு செய்திகேட்டதும், ‘இந்த தேசிகனுக்கு ஏதாவது உளறிகிட்டே இருக்கணும். அப்படி எல்லாம் எதுவும் நடக்கவே முடியாது. ஏதாவது மிராகிள் நடக்கும்’னு நம்பினேன். முதல் SMS இந்த ப்ரெண்ட்கிட்டேயிருந்து– “i could hear you weeping dear. enough of it please. on duty. ‘ll talk to you after 12 midnight”

ஆனா நினைச்ச மாதிரி அது ஆறுதலா இல்லை. ஐயய்யோ இது உலகத்துகே இப்ப தெரிஞ்சுபோச்சு. இனிமே எதுவும் மாத்த முடியாது. எல்லாரும் அஞ்சலின்னு பதிவு போடுவாங்களேன்னு பதறிட்டேன். யாரோடயும் பேசப் பிடிக்கலை. முக்கியமா இணையத்துல. பெருசா எதுலயோ தோத்துப் போன மாதிரி. ரூம்ல போய் கதவை சாத்திகிட்டேன். இணைய‌மும் ந‌ண்ப‌ர்க‌ளும் ரொம்ப அந்நியமா தெரிஞ்சாங்க. ஆனா ஆச்சரியமா எங்கப்பா, அம்மா தொலைப்பேசி சொன்ன ஆறுதலும், கோவிந்த் தனக்கு ஃபீவர்னு சொல்லி லீவ் எடுத்து கவனிச்சுகிட்டதும் நான் கொஞ்சம்கூட எதிர்பாராத‌ ஆனா தேவையான ஆறுதலா இருந்தது.

“நம்ப முடியுதா பாரு. அந்தாளுக்கு எனக்குத் தெரிஞ்சு 35 வயசு ஆச்சு. அப்றம் வருஷா வருஷம் அதே தானே வயசாச்சு. எப்படி திடீர்னு 73 ஆகும்?”

எங்க ரெண்டுபேரையும் எல்லாரும் ‘two hearts that beat as one’ன்னு சொல்வாங்க. அதை அன்னிக்கிதான் அவ்ளோ நிச்சயமா உணர்ந்தேன். எனக்கும் தெரியலைன்னு கதறமட்டும் தான் முடிஞ்சது. நீங்களாவது சொல்லியிருக்கலாமில்ல. அழுது அழுது கண் வீங்கி, டாக்டர்கிட்ட காண்பிச்சு, ஜுரம் வந்து அடுத்த இரண்டுநாள் நினைவில்லாம போனது ரொம்ப நல்லாதாப் போச்சு. நடப்பு எதுவும் என் கவனத்துக்கு வரலை.
 

தாயோடு
அறுசுவை போகும்;
தந்தையோடு
கல்வி போகும்
குழந்தையோடு
பெற்ற செல்வப் பெருமை போகும்;
செல்வாக்கு
உற்றாரோடு போகும்;
உடன்பிறந்தாரோடு
தோள் வலிமை போகும்;
……
……
எல்லாம் இருக்க,
போடா (பொர்க்கி)
உன்னோடு இளமை போச்!

எனக்கு உங்களைமாதிரி வாக்மேன்ல பாட்டுக் கேட்கறேன்னு காதுக்குள்ள பாட்டை நேரடியா ஊத்தறதெல்லாம் பிடிக்காது. இசை என்னைச் சுத்தியிருக்கற காத்துல கலந்து, குழைஞ்சு அதுவா என் காதுகளையும் தொட்டுப் போகணும். நிறைய பாட்டு உங்களுக்குப் பிடிச்சவைகளை அப்பப்ப நீங்க சொல்லியிருந்தாலும், இப்ப கொஞ்சம் மட்டும்….

* நித்யஸ்ரீ மகாதேவனோட வீச்சான சாரீரம் இந்தப் பாட்டுக்கு அழகைச் சேர்த்திருக்கலாம். ஆனா அந்தச் சாரீரமும் கர்நாடக இசையுமே இறுதில திரும்பச் திரும்பச் சொல்லும் பல்லவியோட சங்கதியில அவ்ளோ மென்மையா கேட்கவேண்டிய கேள்வியோட பாவத்தை நீர்த்துப்போகச் செஞ்சுடுதோன்னு எனக்கு ஒரு எண்ணம்.

* டிஜிடலில் செதுக்கிய குரல்னு உண்மையிலேயே சொல்லலாம். காதல்ல்ல்ல்…. னு பாடும்போது போத்தலிலிருந்து ஒயினை கோப்பைகள்ல நிரப்பற ஒலி மாதிரி….. உங்களாலதான் இப்படி எல்லாம் யோசிக்கமுடியும்.

* சாத்திரம் மீறிய கீர்த்தனம்… 🙂

* உங்களுக்குப் பிடிச்சதுங்கற காரணத்தைவிட இந்தப் பாட்டுக்கு இன்னொரு பெருமை— நீங்க கடைசி வரை காதலிச்சு கைவிடாம வெச்சிருந்த மிஸ் தமிழ்த்தாய்க்கு இந்தப் பாட்டால அங்கீகாரமும் பெருமையும் கிடைச்சது. இந்தப் படத்தோட இந்திப் பதிப்புக்கு பாடல் எழுத ஆரம்பிச்ச கவிஞர், தமிழ்ல பல்லவியோட முதல் வரி அர்த்தம் மட்டும் கேட்டே, “தமிழ் மொழியில் இவ்வளவு ஆளுமையும் சாத்தியமும் இருக்கா?”ன்னு ஆச்சரியப்பட்டு பாராட்டினாராம். ஆனா இப்ப எனக்குக் கேக்கும்போதெல்லாம் மனம் அதிருது.

இன்னிக்கி பிறந்தநாள்னு உங்களுக்குப் பிடிச்ச இந்தப் பாட்டெல்லாம் காத்துல ஓடவிட்டுகிட்டு நான் ஸ்ரீரங்கத்துலதான் இருப்பேன். எனக்குத் தெரியும் நீங்க இனிமே எப்பவுமே ஸ்ரீரங்கத்துல தான் இருப்பீங்க. உங்களுக்கும் இதெல்லாம் கேக்குமா?

பி.கு: 🙂

1. ‘சுஜாதா என்றதும் உங்களுக்கு நினைவில் வருவது?’ன்னு தமிழோவியத்துக்காக bsubra ஒரு கடிதத்துல கேட்டிருந்தாரு. ஏதாவது ஒன்னு ரெண்டா இருந்தா சொல்லலாம். இருந்தாலும் அந்த ஒத்தை வார்த்தை இந்தப் பதிவுல இருக்குன்னே நினைக்கிறேன்.

2. சாருநிவேதிதா, உங்களை மாதிரி எழுத்தாளரைப் பத்தி எழுதும்போது உங்க எழுத்துலேருந்து எதையெல்லாம் எடுத்துகிட்டோம், கத்துகிட்டோம்னு தான் எழுதணும்னு சொல்றாரு. அப்டியாங் சார்? நீங்களும் எவ்வளவோ முயற்சி செஞ்சு கதைக்கு knot, டிரிக் எல்லாம் சொல்லி என்னை எழுது எழுதுன்னு சொன்னீங்க. நான் எழுதினேனா? நான் என்ன எழுத்தாளரா? இல்லை எல்லாரும் வாத்தியார்னு கூப்பிடற மாதிரி உங்க மாணவியா? ஒரு ரசிகையா எனக்குத் தோன்றதைத்தானே சொல்லமுடியும். நீங்க இருந்து உங்ககிட்ட சாருவைப் போட்டுக் கொடுத்தா, “அதெல்லாம் தேவை இல்லை. நீ பாட்டுக்கு நினைக்கறதை எழுது அவரை அப்றம் அடிச்சுடலாம்!”னு சொல்வீங்க இல்ல, இப்பவும் அப்படி சொல்லுங்க. 🙂

3. என்னவோ எல்லாரும் நினைச்சதை எல்லாம் வார்த்தைல கொண்டுவர முடிஞ்சா எவ்ளோ நல்லா இருக்கும்னு சொல்றாங்க. நான் நினைவுகள் எல்லாம் வார்த்தைகள்ல வந்துடக் கூடாதேன்னு ரொம்ப வடிகட்டி வடிகட்டி எழுதியிருக்கேன். அதே தலைப்பு.

“ஏய் இங்க வா, உன்னை என்ன கேட்டாங்க?”

“சமையல் குறிப்பு நகைச்சுவையா எழுதச் சொல்லி கேட்டாங்க”

“எழவு நகைச்சுவைக்கும் சமையல்குறிப்புக்கும் என்ன சம்பந்தம்?”

“சமையல்குறிப்புன்னாலே எல்லாருக்கும் நகைச்சுவையாத்தானே இருக்கு. அதனால இருக்கும். :(“

“அடப்பாவமே! நகைச்சுவைக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?”

“சிறுபத்திரிகைக்கும் சமையல்குறிப்புக்கும் என்ன சம்பந்தம்னே முதல்ல எனக்குத் தெரியலை..”

“சரி விடு. எழுதினியா, எத்தனை எழுதின?”

“ரெண்டு”

“ஒண்ணு இங்க இருக்கு. இன்னொன்னு எங்க?”

“அந்த இன்னொன்னு தாங்க இது! :(“

“இதுல என்ன இவ்ளோ கோரமை?”

“தேவை இல்லைதான். ஏதோ ஜெமோ முதல் இதழ்ல எழுதலைன்னு ஃபீலிங்ஸ் வேண்டாம், அவர் எழுத்தையாவது கொண்டுவந்துடலாம்னு இப்படி எழுதிட்டேன். 😦 இனிமே இப்படி நடக்காது.”

—–

அடைப்புக்குறிகளுக்குள் இருக்கும் எழுத்தாளர் ஜெயமோகனின் வரிகளுக்கு நன்றி.

[“வென்றவர்களின் வரலாறு அளவுக்கே தோற்றவர்களின் வரலாறும் முக்கியம் என நமக்கு கற்பித்தது பின்நவீனத்துவமே.”]

ரவை உப்புமா என்ற ஒரு சிற்றுண்டி அளவுக்கு மலிந்துபோன, மக்களால் புறக்கணிக்கப்படும், ஏளனமாகப் பார்க்கப்படும் உணவு வேறு இல்லை. மற்ற எல்லாச் சிற்றுண்டிகளுமே சிலருக்குப் பிடித்தும் சிலருக்குப் பிடிக்காமலும் என்று ஓரளவாவது அங்கீகாரம் பெற்றவையாக இருக்க, குடும்பத் தலைவிகளின் கைவசமாகும் ரவை உப்புமாவிற்கு மட்டும் மோட்சமே இல்லை. ஆனால் பின்நவீனத்துவம் அதை அப்படியே விட்டுவிடுவதில்லை.
 

[“தமிழில் பின்நவீனத்துவ சிந்தனைகளில் பெரும்பகுதி தேவையற்ற சிக்கலுடன் முன்வைக்கப்பட்டதென்பது உண்மையே. ஆனால் அவை அடிப்படையில் சிலவற்றை நாம் பார்க்கும்படிச் செய்தன. விளிம்புநிலை மக்கள், புறக்கணிக்கப்பட்ட வாழ்வின் பக்கங்கள் பொதுவில் ஏற்கப்படாத உணர்வுகள். அச்சிந்தனைகளின் விளைவே இப்போது திருநங்கைகளுக்கு கிடைத்திருக்கும் சட்டக்கவனம்.”]

வலிந்து குடும்பத்தில் திணிக்கப்படும்போது, அன்றுமட்டும் டிபன் டப்பாவை வீட்டிலேயே மறந்து(!) வைத்துவிட்டுப் போகும் கணவன், பள்ளி விடுமுறை எடுக்கமட்டுமே வரும் திடீர் வயிற்றுவலி, அன்றும் வந்து சாப்பிட எதுவுமே வேண்டாம்; ஆனால் ஸ்கூலுக்குப் போகிறேன் என்ற முரணான நிலைக்குத் தள்ளப்படும் குழந்தைகள், ஒருநாளும் இல்லாத திருநாளாக அடுத்தவீட்டு அம்மணியே புளிசோறு கொடுத்துட்டாக என்று மறுக்கும் முனியம்மா போன்ற நாசூக்கான அல்லது மௌனமான நிராகரிப்புகள், இன்னிக்கும் அந்த ரவைக்களியைக் கிண்டி வெச்சுட்டாளா என்ற மாமியாரின் பொருமலில் கிளம்பும் உட்குடும்பப் பூசலுக்கான முதல் தீப்பொறி, இவை எல்லாவற்றிற்கும் பின்னும் ரவை உப்புமாவிற்கும் ஒரு கவனிப்பு தேவைப்படத் தான் செய்கிறது.
 

[“விடுதலை, சமத்துவம், உலகநலன் என்றெல்லாம் கூறிய முந்தைய சிந்தனை மையங்கள் உருவாக்கிய அதிகாரக் குவிப்பு மற்றும் வன்முறையை வைத்து நோக்கும்போது பின் நவீனத்துவம் மேலும் ஜனநாயகமானது என்பதை சாதாரணமாக உணரலாம்.”]

பாரம்பரிய உணவு, பத்தே நிமிடங்களில் செய்யச் சுலபமானது, அதிக முன்னேற்பாடுகள், ஊறவைத்தல், அரைத்தல், கரைத்தல்கள் இல்லாதது என்ற ஆண்டாண்டு காலமாக சமையலறை அதிகார வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கும் பிரசார பீரங்கிகளை குடியரசு தினத்துக்கு மட்டும் எண்ணெய் போட்டு துடைத்து ஊர்வலத்தில் காண்பிக்க உபயோகப்படுத்துவது குடும்பச் சூழலுக்கு எவ்வளவு ஜனநாயகமானது என்பதையும் நாம் மறுதலிக்க இயலாது. அந்த வகையில் ரவை உப்புமாவிற்கான கவனத்தை குடும்பத்தினர் பார்வைக்குக் கொண்டுவர வேண்டியதன் விளைவாகக் கிளம்பியது இந்தக் கலகம்.
 

[“ஐரோப்பாவில் பெரும் கோட்பாடுகளின் சரிவு பின்நவீனத்துவத்தை உருவாக்கியது என்றால் இந்தியாவில் ஜனநாயகத்திலும், அதற்கு எதிரான புரட்சிகர வன்முறையிலும் ஒரே சமயம் உருவான அவநம்பிக்கை அதை உருவாக்குகிறது.”]

குடும்பத்தாரின் விருப்பங்களை அலட்சியப்படுத்தும் அதிகார மனப்போக்கும், அதனைத் தொடரும் உப்புமாவைக் குப்பையில் கொட்டவேண்டிய வன்முறைக்கும் எதிரான சூழ்நிலையில் இந்தக் கலகம் மிக மிக அவசியமாகிறது.
 

[“கருத்துக்கள் என்பவை மொழியால் உருவாக்கப்படுபவை என்ற நம்பிக்கை பின்நவீனத்துவத்திற்கு உண்டு. அவை நிரந்தரமான கட்டுமானங்கள் அல்ல என அது நம்புகிறது. ஆகவே அது கருத்துக்களையும் மொழியையும் சதுரங்க விளையாட்டாக மாற்றிக்காட்டுகிறது நமக்கு.”]

தேவையான பொருள்கள்:

ரவை உப்புமா – 1 கப்
துவரம் பருப்பு – 1/4 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
கொத்தமல்லித் தழை – சிறிது
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்

adai - ravai uppumaa remix (batter)

செய்முறை:

 • ஒரு பின்நவீனத்துவவாதி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பை ரவை உப்புமா செய்ய நினைக்கும்போதே தண்ணீரில் ஊறவைத்துவிடுவாள்.
 • குறைந்தது இரண்டு மணிநேரம் ஊறிய பருப்புகளோடு காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
 • ‘ஙே’ என்று விழித்துக்கொண்டிருக்கும் ரவை உப்புமா, தேங்காய்த் துருவலுடன் தேவையான தண்ணீரும் சேர்த்து, அடைமாவு பதத்திற்குக் கலந்துகொள்ளவும்.
 • நறுக்கிய கொத்தமல்லித் தழையையும் பிசிறிக் கொள்ளவும்.
 • அடுப்பில் தோசைக்கல்லைக் காயவைத்து, ஒரு கரண்டி மாவை நடுவில் வைத்து அடைமாதிரி சற்று கனமான வட்டங்களாக வார்க்கவும்.
 • சுற்றிலும் எண்ணெய் விட்டு, நடுவிலும் துளையிட்டு எண்ணெய் விட்டு, சிவக்க வேகவைக்கவும்.
 • மறுபக்கமும் திருப்பிவிட்டு, எண்ணைவிட்டு மொறுமொறுப்பாக எடுத்து, சூடாகப் பரிமாறவும்.

adai - ravai uppumaa remix

* உள்ளே தாளித்த கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாயைப் பார்த்து, குடும்பம் குழம்பும். பரவாயில்லை; பின்நவீனத்துவ அரசியலில் குழப்பம் சகஜம்.

* தக்காளிச் சட்னி, வெங்காயச் சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.
 

[“ஆனால் பின்நவீனத்துவம் எங்கும் ஒரேவகையானது அல்ல. அந்த ‘டிரெண்ட்’ ஒன்றுதான். வெளிப்பாடு ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வகை. அதற்கு அந்தப் பகுதியின் கலாச்சாரம் வாழ்க்கைமுறை என எத்தனையோ காரணங்கள். அதன் தனித்தன்மை அந்த ஆசிரியனின் ஆளுமை, அவன் வாழும் சூழலின் இயல்பு, மண்ணின் அடையாளம் ஆகியவை கலந்து மாற்று இல்லாத தனித்தன்மையுடன் இருக்கும்.”]

ஆனால் இந்த அடைபோன்ற வடிவம் மட்டுமே உப்புமாவுக்கான இறுதி நிலை என்று கொள்ளத் தேவை இல்லை. அவரவர் வசதி, திறமை, காலக் கெடுபிடிக்கேற்றவாறு இதை பொங்கல், போண்டா, குணுக்கு, தோசை, வடை, இட்லி, இடியாப்பம், இன்னும் இவை எதுவுமே இல்லாத இன்னொன்றாகக் கூடச் செய்துகொள்ளலாம்.
 

[“பின் நவீனத்துவம் இன்றைய வாழ்க்கை நோக்கில் இயல்பாகவே உள்ளது. ரீமிக்ஸ் பாடல்கள் ஓர் உதாரணம். நாம் நிகழ்ந்தவற்றை ஏன் நிகழ்ந்தது எப்படி நிகழ்ந்தது என்று நோக்குகிறோம். மீண்டும் நிகழ்த்திப் பார்க்கிறோம். மாற்றியமைக்கிறோம். கிண்டல்செய்கிறோம். விரிவாக்கிப்பார்க்கிறோம்.”]

ஆக அது அதன் அடிப்படை மட்டும் சாராது, கையாள்பவரின் ஆளுமையையும் தன்வயமாக எடுத்துக்கொள்கிறது. இந்த எடுத்தாள்கைப் படைப்பு, ‘எங்கேயும் எப்போதும்..‘ பாடலைப் போல வெற்றியடையுமா அல்லது ‘பொன்மகள் வந்தாள்…’ போலப் புலம்பவைக்குமா என்பதை காலத்தின் தீர்ப்புக்கு விட்டுவிட வேண்டும். ஆனால் அதுவரை அதுகுறித்த ஓர் ஓயாத விவாதம் சமையல் உலகில் நிகழ்ந்தவண்ணம் இருத்தல் அவசியம்.
 

[“பின்நவீனத்துவம் பற்றிய மிக முட்டாள்த்தனமான பேச்சே இது ஒரிஜினல் பின்நவீனத்துவம் இல்லை, அதுதான் என ஐரோப்பாவையோ அமெரிக்காவையோ காட்டுவது. அப்படிசொல்லக்கூடாது என்றுதான் பின்நவீனத்துவம் வாதிடுகிறது.”]

இங்கே இந்த ரவை உப்புமா ரீமிக்ஸ் மட்டுமே ஒரு பின்நவீனத்துவம் என்பதாகாது. இலக்கிய எழுத்துகளில் தாழ்த்தப்பட்டதாகவும் விளிம்புநிலையிலும் இருக்கும் சமையல் குறிப்புகளும் கூட முதன்முதலாக சிறுபத்திரிகையில் கவனத்தைப் பெற்றவகையில், இந்தக் கட்டுரையேகூட ஒரு கலகக் கட்டுடைப்பாகவும், அதை நோக்கிய முக்கிய முன்னகர்வாகவும் கவனிக்கத் தக்கது.

அம்பலத்தின் என் கதை வெளியாகியும், அதை எனக்குத் தனிமடலில் தெரியப்படுத்தவில்லை, இனிமேல் அம்பலத்துக்கு என் படைப்புகளை அனுப்பவே மாட்டேன்,” என்று குதியாய்க் குதித்த கவிஞர்/ எழுத்தாளர்/ பத்திரிகையாசிரியர் ஹரன் பிரசன்னா, தான் ஆசிரியராக இருக்கும் பத்திரிகையில், அவர்களாகவே கேட்டு, படைப்பை அனுப்பியும் அந்தப் படைப்புகள் நிராகரிக்கப்பட்டதை– காரணம் தேவையில்லை; தகவலாக மட்டும்– சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புவார் என எதிர்பார்ப்பது அப்படி ஒன்றும் தவறு இல்லை என்று நினைக்கிறேன். சுயவிலாசமிட்ட, அஞ்சல்தலை ஒட்டிய உறை உள்ளே வைத்து அனுப்ப சாத்தியமில்லாத மின்னஞ்சல் வகை படைப்புகளுக்கு அது அவசியமும் கூட. இட்லிவடை சொல்லி நான் தெரிந்துகொள்ளவேண்டிய (துர்)பாக்கியத்திற்கு நன்றி.

ஆனால் விளம்பரத்தில் கொடுத்திருந்தபடி ஜெயமோகனார் எழுதியது எதுவும் இல்லை. அதனால் ஜெயஸ்ரீ கோவிந்தராஜனும் எழுதவில்லை(சமையல் மாமி அக்கா ). இவர்களை ஈடுகட்டுவதற்காக இன்னும் அதிகமான பேரை எழுதவைத்திருக்கிறார்கள். அப்படியும் முதல் இதழ் ஜெ’ஜெ’ன்னு இல்லை

— இட்லிவடை.

இணையத்தில் பொதுவாக எந்த நேர்மையையும் ஓரளவிற்குமேல் எதிர்பார்ப்பதில்லை என்றாலும், ஊர்ல சொல்றது சொலவடை, உண்மையைச் சொல்றது இட்லிவடை என்றெல்லாம் ‘பன்ச்லைன்’ வைப்பவர்கள் சம்பந்தப்பட்டவர்களையும் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு எழுதினால் வைத்த லைனுக்கு நீதியாக இருக்கும். மீண்டும் மீண்டும் இதைச்  சொல்ல வேண்டியிருப்பது கூட  எரிச்சலாக இருக்கிறது. 

—-

‘எனிஇந்தியன்’ பதிப்பகத்தின் ‘வார்த்தை’ மாத இதழுக்கு அனுப்பி, பிரசுரிக்கப்படாத உணவுக் குறிப்பு.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1/2 கப்
புழுங்கல் அரிசி – 1/2 கப்
பாசிப் பருப்பு – 1/4 கப்
பச்சைப் பயறு – 1/4 கப் (தோலுடன்)
கடலைப் பருப்பு – 1/2 கப்
கோதுமை – 1/4 கப்
வெல்லம் – 2 1/2 கப்
தேங்காய்த் துண்டுகள் – 1/4 கப்
சுக்குப் பொடி – 1/2 டீஸ்பூன்
ஏலப் பொடி – 1 டீஸ்பூன்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்

poruL viLangaa uruNdai

செய்முறை:

 • பச்சரிசி, புழுங்கல் அரிசி, பாசிப் பருப்பு, பச்சைப் பயறு, கடலைப் பருப்பு, கோதுமை இவற்றை தனித் தனியாக வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
 • எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அல்லது மிஷினில் நைசான மாவாக அரைத்துக் கொள்ளவும்.
 • தேங்காயை மிகச் சிறுசிறு துண்டுகளாக்கி சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.
 • வெல்லத்தை ஒரு கப் தண்ணீர் சேர்த்து கம்பிப் பாகாகக் காய்ச்சிக் கொள்ளவும்.
 • இறக்கும் முன் சுக்குப் பொடி, ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கொள்ளவும்.
 • பாகில் மாவைக் கொட்டி, கட்டிகளில்லாமல் கலந்துகொள்ளவும். 
 • கையில் நெய்யைத் துடைத்துக் கொண்டு, சூட்டோடு வேகமாக உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
 • 4, 5 உருண்டைகளாக இடையிடையே ஒரு சுளகில் அல்லது முறத்தில் இட்டுச் சுழற்றினால் ஒன்றோடு ஒன்று இடித்து, நன்றாக உள்ளே இறுகிக் கொள்ளும்.
 • பாதி செய்துகொண்டிருக்கும்போதே கலவை இறுகி எடுக்கவரவில்லை என்றால், மீண்டும் அடுப்பில் சிம்’மில் (மட்டும்) வைத்தால் பாகு இளகி எடுக்க வரும். தொடர்ந்து மிச்ச உருண்டைகளையும் பிடிக்கலாம்.
 • ஆறியதும் ஒரு காற்றுப் புகாத டப்பாவில் எடுத்துவைத்து உபயோகிக்கவும். பதினைந்து நாள்களுக்குக் கெடாது. சாப்பிட்டால் நீண்டநேரம் பசிக்காது.

* உடல்வலிமைக்கு, விரதங்களுக்கு, பிரயாணங்களுக்கு ஏற்றது.

—-

பின்நவீனத்துவ கவிதைக்கும் பொருள்விளங்கா உருண்டைக்குமான ஒரு ‘அடுப்படி‘ வாசகியின் புரிதல்கள்….

பொவிஉ – முப்பாட்டிக்கும் மூத்த தமிழ்ப்பாட்டிகள் செய்துவந்த உருண்டை.
பிநக – இன்னமும் எழுத்தாளர்களே இன்னதென்று விளங்க முடியாத சண்டை.

பொவி – எங்குமே அதிகம் காணக் கிடைப்பதில்லை.
பிநக – சிறுபத்திரிகைகளில் மட்டும் விலைபோகும்.

பொவிஉ – உடல்நலத்திற்கு ஏற்றது.
பிநக – மனநலத்தைக் கெடுப்பது.

பொவிஉ – செய்தவன் தவிர ருசிப்பவனுக்கு உள்ளிருக்கும் பொருளைச் சொல்ல முடியாது.
பிநக – எழுதியவன் தவிர படிப்பவனுக்கு உள்ளிருக்கும் பொருளைச் சொல்ல முடியாது.

பொவிஉ – கடிப்பதில் தேங்காய் ஒன்று மட்டுமே புரியும்.
பிநக – படிப்பது தமிழ் என்று மட்டுமே புரியும்.

பொவிஉ – வழமையாக உபயோகிக்கும் தானியங்களில் வகைக்குக் கொஞ்சமாக அள்ளிப் போட்டுக்கொள்ள வேண்டியது.
பிநக – வழமையிலேயே இல்லாத வார்த்தைகளாக வகைவகையாக அகராதியிலிருந்து அள்ளிப் போட்டுக்கொள்ள வேண்டியது.

பொவிஉ – தானியங்கள் சிவக்க வறுக்கப்பட்டிருக்க வேண்டும்.
பிநக – எண்ணம், பொருள், ஏவல் எல்லாமே சிவப்புச் சாயம்தான். (காதல் கவிதைகள் பரீட்சார்த்த தோல்வி என்று கேள்வி.)

பொவிஉ – அரிசி, பருப்பு, கோதுமை அடிப்படையில்  முக்கியம்.
பிநக – அல்குல், யோனி, முலை, குறி அதிமுக்கியம்.

பொவிஉ – பாகு முற்றும்முன் துரிதமாக உருண்டைகளைப் பிடித்து முடித்துவிட வேண்டும்.
பிநக – மனநிலை முற்றியபின் மிகத் துரிதமாக எழுத ஆரம்பித்து முடித்தும் விட வேண்டும்.

பொவிஉ – தாமதமாக்கினால் பாகு மாவுடன் பிடித்துக்கொண்டு உருண்டை பிடிக்கவராது.
பிநக – தாமதமாக்கினால் எழுத்தாளனே தன் அபத்தத்தைப் புரிந்துகொண்டு எழுதவராது.

பொவிஉ – கடப்பாரையால் உடைத்தல் அவசியம்.
பிநக – கட்டுடைத்தல் அதன் குணாதிசயம்.

பொவிஉ – உருட்ட முடிந்தால் மட்டுமே அது பொருள்விளங்கா உருண்டை
பிநக – படிக்க முடியாவிட்டால் அது பொருள்விளங்கா மரமண்டை. (இந்த வாசகி மாதிரி!)

நன்றி: எழுத்தாளர் நாஞ்சில்நாடன் சொன்னதாக எழுத்தாளர் ஜெயமோகன்.

”அரைக்கீரை ரொம்ப நல்லதுண்ணு சொல்லுகா ஜெயமோகன். அரைக்கீரையை நல்லா ஆய்ஞ்சு மண்ணுகிண்ணு போக சுத்தம் பண்ணி வாணலிய அடுப்பில ஏத்தி ஒரு கரண்டி தேங்காயெண்ணைய விட்டு அதில போட்டு கொஞ்சம் உப்பு தெளிச்சு நல்லா சுண்டவச்சு அப்டியே ஒரு பாத்திரத்தில கொட்டிட்டு இன்னொரு வாணலிய அடுப்பில வச்சு கொஞ்சம் எண்ணைய விட்டு கடுகு கறிவேப்பில உள்ளி போட்டு தாளிச்சு எடுத்தா சோத்துக்கு தொட்டுகிட நல்லா இருக்கும். மோருக்கு முன்னால ரசத்துக்கு பொருத்தம்….சோத்திலக்கூட போட்டுப் பிசைஞ்சி திங்கலாம்…”

அரைக்கீரை குறித்து இங்கே சொல்லியிருக்கிறேன். எனக்குத் தெரிந்து அரைக்கீரை மதுரை அளவு அதிகமாகவும் விலை மலிவாகவும் ஸ்ரீரங்கத்தில் கூட பார்த்ததில்லை. நினைவுதெரிந்து சின்ன வயதில் விடுமுறைக்கு மதுரைக்குப் போகும்போது, ஜெய்ஹிந்துபுரம் முதல் மெயின் தெருவில் 10 பைசாவுக்கு ஒரு பெரிய பை நிறைய அடைத்துக் கொடுப்பார்கள்.

முளைக்கீரை மாதிரி இதில் வேர் இருந்து படுத்தாது என்றாலும் கொஞ்சம் கட்டை எல்லாம் நீக்க வேண்டியிருக்கும். அநேகமாக பெருமளவு தண்டுப்பகுதியை நான் சேர்த்துக் கொண்டுவிடுவேன். வெறும் இலைப்பகுதியைவிட தண்டும் சேர்ந்தால்தான் கறி/கூட்டு சுவையாக இருக்கும். அதற்கும் தடிமனான தண்டுப்பகுதியையும் தனியாக எடுத்து குழப்பில் போட்டுவிடுவேன். நான் தூக்கி எறியும் பகுதி மிகமிகக் குறைவாகத் தான் இருக்கும்.

இது ஒரு பத்திய உணவு என்று தெரிகிறது. நாஞ்சில் நாடன் ஐயா, இன்னமொரு நூற்றாண்டிரும்!

தேவையான பொருள்கள்:

அரைக்கீரை
பூண்டு
உப்பு

தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை

செய்முறை:

 • அரைக்கீரையை பெரிய தண்டுப்பகுதிகளை நீக்கி, தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • அடுப்பில் வாணலியில் எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, உரித்த பூண்டு தாளிக்கவும்.
 • நறுக்கிய அரைக்கீரையைச் சேர்த்து நீர் விடாமல், பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
 • சுண்டியதும் இறக்கி உபயோகிக்கலாம்.

* ஒரு காய்ந்த மிளகாய், சின்னவெங்காயம் 4 உரித்துச் சேர்த்து வதக்கினாலும் சுவையாக இருக்கும். உடலுக்கு நல்லது.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் சாதம், ரசம் சாதம்.
 

வாழைத்தண்டை பாட்டியோ அம்மாவோ நறுக்குவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். அலுக்காது. வட்ட வட்டமாக நறுக்கி, ஒவ்வொருமுறையும் அரிவாள்மணையில் இழுத்துக்கொண்டு வரும் நாரை ஆள்காட்டிவிரலில் சுற்றிக் கொண்டே, அடுத்த வட்டம், அடுத்த நார்ச் சுற்று…. என்று ஓரளவு வந்ததும், கையில் இருக்கும் நாரை நீக்கிவிட்டு தொடர்ந்து…. வட்டங்களை ஐந்தாறாக அடுக்கிக்கொண்டு, சரக் சரக்கென்று குறுக்காக பொடிப்பொடியாக நறுக்கி, மோர் கலந்த நீர் உள்ள குண்டானில் போட்டுக்கொண்டே… வாழைத்தண்டு நாரை விளக்குக்கு திரி போட்டுப் பார்த்திருக்கிறேன்.

அரிவாள்மணையே தேவை இல்லாமல் கத்தியையே நம்பியிருக்கும் எனக்கும் ஒருநாள் அதன் தேவை வருகிறது என்றால் அது வாழைத்தண்டு நறுக்கத்தான். இல்லாததால் கஷ்டப்பட்டு கத்தியிலேயே நறுக்கினேன். ஒன்றும் சுகமில்லை.

தேவையான பொருள்கள்:

வாழைத்தண்டு
பயத்தம் பருப்பு – 1/4 கப்
உப்பு
மஞ்சள் தூள்
கொத்தமல்லித் தழை

தாளிக்க: எண்ணெய், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

vaazhaiththandu curry

செய்முறை:

 • பயத்தம் பருப்பை தண்ணீரில் அரைமணிநேரம் ஊறவைக்கவும்.
 • வாழைத்தண்டை, வெளிப்பக்கம் இன்னும் பட்டை இருந்தால் நீக்கிவிட்டு, வட்டவட்டமாக நறுக்கி, இடையில் வரும் நாரை எல்லாம் நீக்கி, பின் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • நறுக்கிய காயை சிறிதளவு மோர் கலந்த நீரில் நனைத்துவைக்கவும். (கருக்காமல் இருக்க இது உதவும்.)
 • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
 • மோர்நீரிலிருக்கும் நறுக்கிய வாழைத்தண்டைச் சேர்க்கவும்.
 • ஊறவைத்த பயத்தம்பருப்பை நீரை வடித்துச் சேர்க்கவும்.
 • உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது நீர் தெளித்து மூடிவைத்து, அவ்வப்போது திறந்து கிளறிவிடவும்.
 • வாழைத்தண்டு வெந்து, நீர் ஒட்ட சுண்டியதும் இறக்கி, கொத்தமல்லித் தழை தூவி உபயோகிக்கலாம்.

* இவ்வளவு எளிமையாக சமைத்தும் ஒரு காய் இவ்வளவு சுவையாக இருக்கமுடியுமா என்று ஆச்சரியப்படுத்துவதில் வாழைத்தண்டை அடித்துக்கொள்ள வேறு காயில்லை.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

என்னைக் கேட்டால் ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சும்மா சாப்பிடலாம் என்றுதான் சொல்வேன். 🙂

நெய்சாதத்தில் பிடித்துச் சாப்பிடலாம்.

ரசத்திற்கு சுமாராகச் சேரும்.

ஆனால் மோர் சாதத்துடன் (தயிர்சாதம் இல்லை) சேர்க்கும்போது பிறந்த பயனை அடையும்.

-0-

“வாழைத்தண்டுக்கும் மோட்சம் இல்லை. அதை நல்லெண்ணை போட்டு வதக்க வேண்டும். வெள்ளரிப்பிஞ்சை நெய்யில் வதக்கி சாப்பிடுவாரா என கேட்க நினைத்து அடக்கிக் கொண்டேன். அதைக் கேட்கப்போய் புதிய ‘ரெசிப்பி’ஆகிவிடும் அபாயம் உண்டு.”

எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்.

பின்னால் சேர்த்த முன்குறிப்புசாட்

_______________________________________________________________________________

me: ஹாய் கவிஞர், There?
haranprasanna is online.

haranprasanna: (வந்துட்டாங்கப்பா. இன்விசிபிள் மோட் இல்லாத ஜிசாட் ஒழிக!) வணக்கம் ஜெயஸ்ரீ.

me: என்ன செஞ்சுகிட்டிருக்கீங்க? 🙂

haranprasanna: வண்டி துடைத்துக்கொண்டிருக்கிறேன், பார்த்தால் தெரியவில்லையா? கணினி முன்னால் அமர்ந்து ஒரு கவிஞன் என்னசெய்துகொண்டிருப்பான்? இதெல்லாம் ஒரு கேள்வியா? இன்னும் சமுதாயத்தில் எழுப்பவேண்டிய  கேள்விகளும்,  தீர்க்கவேண்டிய  பிரச்சினைகளும்  எவ்வளவோ இருக்க, இப்படிப்பட்ட கேடுகெட்ட கேள்விகளால் தான் தமிழன் இன்னும் முன்னேறாமல் இருக்கிறான். (இன்னும் சாப்பாட்டுக் கூடைக்காரரு வராம அவனவன் பசில தள்ளாடறான்.)

me: கோபமா இருக்கீங்க போலருக்கு? சாப்பிடப் போகலையா? நான் அப்றம் வரேன்.

haranprasanna: நான் என்றைக்கு சாப்பிட்டிருக்கிறேன்? கவிதைகளை சுவாசித்து கவிதைகளையே உண்டு செரிப்பவன் நான். சாப்பிடச் செல்பவர்கள் சாதாரணர்கள். நான் கவிஞன்.

me: (ஏலே, நீ மட்டும் அடுத்தவன் செரிக்கவே முடியாத கவிதையா எழுதித் தள்றியே இதையெல்லாம் கேக்க ஆளில்லையா?) அப்ப எந்நேரமும் கணினி முன்னால உக்காந்து சாப்பிட்டுகிட்டே இருக்கீங்கன்னு சொல்லுங்க. :))

haranprasanna: சமைக்கவே கருக்கலில் கண்விழித்து, சாப்பாட்டுக் குறிப்புகளுக்காக வலைப்பதிந்து, சாப்பிட்டுத் தூங்கும் உங்களுக்கு இவை புரியப் போவதில்லை. (சாப்பிடாம எனக்கு கண் இருட்டுது.)

me: எவ்வளவு பசிச்சாலும் உங்க கவிதை வேண்டாம்னு பிகேஎஸ் சொல்லியிருக்காரே, ஏன்? 🙂

haranprasanna: ஒரு வாசகராக அவர் பரந்துபட்டவராக இருக்கலாம். ஆனால் ரசிகராக அவர் இன்னும் வளரவில்லை என்பதைத்தான் அது காட்டுகிறது. இலக்கியவாதியின் கடமை சிறந்த இலக்கியங்களைப் படைப்பதோடேயே நின்றுபோகிறது. ரசிகன்தான் நாளும் வளர்பவனாக இருக்கவேண்டும். உண்மையான பசியும் உண்மையான தேடலும் வரும்போது அவருக்கு அது சாத்தியமாகலாம். காத்திருக்க வேண்டியதுதான்.

me: ஏன் இப்படி உரைநடைத் தமிழ்ல பேசறீங்க? சகஜமா என்னை மாதிரி பேசினா எனக்கும் பேச இயல்பா இருக்குமில்ல?

haranprasanna: (மவளே, உங்கிட்டேயிருந்து வெட்டிக்க இந்தத் தமிழைத்தானே நம்பியிருக்கேன். உன் உளுத்துப் போன ஸ்ரீரங்கம் தமிழ்ல என் பரணித் தமிழ் தாமிரபரணியைப் போல மாசுபடாம இருக்கவே தமிழன்னைக்கு தினம் நான் அர்ச்சனை செய்றேன்.) என் இயல்பான நடையே அப்படி இருக்க, என்னால் சாதாரணர்களைப் போல் மாற்றிப் பேச இயலாதே. அவரவர் அவரவர் இயல்பிலேயே பேசுவோம். இன்றைக்கு உங்கள் பதிவில் புதிதாக குறிப்பு எதுவும் எழுதவில்லை போலிருக்கிறதே.

me: ஆமாம். 😦 என் பதிவெல்லாம் கூட பார்ப்பீங்களா என்ன? 😉

haranprasanna: தவறாகச் சுட்டியதில் உங்கள் பக்கம் திறந்துவிட்டது. ஒரே நொடியில் மூடிவிட்டேன். நான் அங்கெல்லாம் வந்ததுமில்லை, வரப்போவதுமில்லை.

me: (ம்க்கும். இந்த பந்தால குறைச்சலில்லை.) ரொம்ப போரடிக்குது. இன்னிக்கி உங்களுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுங்க. அதையே குறிப்பா போட்டுடலாம்.

haranprasanna: எனக்கு மார்த்தாண்டன், சேரன், கல்யாண்ஜி,…

me: ஐயோ நான் சமையல்ல கேக்கறேன். நீங்க சாப்பிடறதுல கேக்கலை.

haranprasanna: எனில் கவிதை சமையுங்கள் ஜெயஸ்ரீ.

me: அதெல்லாம் கடுமையான ஜுரம் வந்தாத்தான் என்னால முடியும். விளையாடாதீங்க.

haranprasanna: எத்தனை நாள் தான் இந்தப் பாழும்பெண்கள் சமையலறையைக் கட்டிக் கொண்டு அழப்போகிறார்களோ. (இவ வேற வீட்டுல இன்னிக்கு சமைச்சாளா இல்லையான்னே தெரியலையே. கார்த்தால கோபத்தை அப்படியே எக்ஸ்டெண்ட் பண்ணி பழிவாங்கிட்டாளோ?! இன்னிக்கு மதியச் சாப்பாடு வருமா வராதா?)

me: சமையல் செஞ்சா தப்பா? வீட்டுவேலையை யாராவது ஒருத்தர் செஞ்சுதானே ஆகணும்.

haranprasanna: தாராளமாகச் செய்யலாம். ஆனால் எனக்கு அவர்களிடமோ அவர்கள் பதிவுகளிலோ சொல்ல ஒன்றுமில்லை. அவ்வளவுதான். அப்புறம் நானே சொல்ல நினனத்தேன், உங்கள் பதிவில் குறிப்புகளின் பெயர்களையும் வலதுபக்கம் வரிசையாகக் கொடுக்கலாமே. தேர்ந்தெடுக்க எனக்கு வசதியாக இருக்கும்.

me: என்னென்ன கேடகரில குறிப்புகள் இருக்குன்னு, சைட்ல இருக்கே.

haranprasanna: நான் இன்னும் ஆழமான தேடலைச் சொன்னேன். புளிசேரியின் குறிப்பு எழுதிவிட்டீர்களா என்று பார்த்தேன். இல்லையே.

me: ஓ அதுவா. கறி/கூட்டு இடத்துல க்ளிக்கினா அதுல இருந்தா வரும்.

haranprasanna: இத்தனை தொழில்நுட்பத்தையும்கூட பெண்கள் கேடுகெட்ட சமையல்குறிப்புக்கு உபயோகித்துக் கொள்வதை என்னவென்று சொல்வது? உங்கள் பக்கத்தில் “தேடு” வசதியும் இருந்தால் இன்னும் சுலபமாக இருக்குமே.

me: இருக்கே. Search பெட்டில வேணுங்கற பெயரைத் தட்டி க்ளிக்கினா, இருந்தா வந்துடும். இல்லைன்னா இன்னும் எழுதலைன்னு அர்த்தம். 🙂

haranprasanna: எத்தனை யுகங்கள் ஆனாலும் நீங்களெல்லாம் எழுதித் தீர்க்கப் போவதில்லை.

me: குறிப்பு எழுதினா கேவலமா? எனக்குத் தெரிஞ்சதைத் தானே நான் செய்யமுடியும்.

haranprasanna: தெரிந்ததற்காக அதையே செய்வதும், அதிலிருந்து மீள நினைக்காமல் இருப்பதும் பேதைமை இல்லாமல் வேறு என்ன? உப்பேரிக்கும் புளிசேரிக்கும் கூட குறிப்புகள் எழுதுங்கள். (கேவலமாப் போனாலும் பரவாயில்லைன்னு காலைல கிளம்பும்போதே இனிமே வீட்டுல சண்டையைத் தீர்த்துட்டு தான் கிளம்பணும்.)

me: நீங்க இப்பத்தான் சமையல் குறிப்பு எழுதறேன்னு திட்டறீங்க. நீங்களே இன்னும் சில குறிப்புகளை எழுதச் சொல்றீங்க. என்ன சொல்லவரீங்கன்னே சரியாப் புரியலை.

haranprasanna: என் பேச்சே கவிதை மாதிரி இருப்பதாகச் சொல்கிறீர்களா? :)) 

me: (இது வேறயா? நெனப்புதான பொழப்பக் கெடுக்குது.) உங்களுக்கு நகைச்சுவை நன்னாவே வரது.  

haranprasanna: ஒரு இலக்கியவாதியாக நீங்கள் இலக்கியங்களைப் படைக்கவேண்டும் என்று கூறுகிறேன். ஒரு நண்பனாக நீங்கள் எழுதும் (துப்புக்கெட்ட) பதிவாவது முழுமையாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். அவ்வளவுதான்.

me: சமையல்குறிப்பு எழுதறவளை இலக்கியம் படைன்னா எப்படி முடியும்?

haranprasanna: அக்கார அடிசிலுக்குக் கூட குறிப்பு எழுதிய கவிதை ஒன்று இருக்கிறது. காலையில்தான் படித்தேன். யுகயுகமாய் பெண்களுக்கான பாட்டை அந்தப் பெண் கவிஞர் சொல்கிறார்.

me: அப்டியா? எனக்கும் அனுப்புங்களேன். உங்கள் ஆதர்ச கவிஞர்கள் பேர்ல ஒன்னுகூட பெண்பெயரே இல்லையே. உங்களுக்கு பெண்கவிஞர்களைப் பிடிக்காதோன்னு நினைச்சுட்டேன்.

haranprasanna: பெண்கள் விடுதலை என்ற பெயரில் உடல்மொழி தவிர பிற விஷயங்களைத் தொடுவதில்லை என்ற சலிப்பு எனக்கு இருப்பது உண்மைதான். (ஒரு ஜெயமோகன பில்டப்புக்கு இது உதவும்.) ஆனால் சேமித்து வைத்திருக்கும் கவிதையின் கருப்பொருள் என்னை பிறவெதுவும் யோசிக்கவொட்டாமல் செய்கிறது. (அதைப் படிச்சதிலிருந்து இன்னும் பசியைக் கிளப்பிவிட்டுடுச்சு. இன்னும் சாப்பாட்டைக் காணோமே. பேசாம வீட்டுக்கு ஃபோன் பண்ணி ஒரு சரண்டர் சிக்னல் கொடுத்துடலாமா?)

me: சரி அனுப்புங்க. எனக்கும் புரியுதான்னு பாக்கறேன்.

haranprasanna: சமையல் குறிப்புதானே; அதனால் புரியும். ஆனால் அது சொல்லவரும் விஷயம் உங்களுக்குப் புரிய வாய்ப்பில்லை. இருந்தாலும் தேடி அனுப்புகிறேன். கொஞ்சம் பொறுங்கள். (வயிறு பொறுக்குதில்லையே. அம்மா காலைல பாகற்காய் நறுக்கிண்டிருந்தாளே, பிட்லையா இருக்குமோ?)
Sent at 13:55 PM on Tuesday

=================

தேவையான பொருள்கள்:

தக்காளிக் காய் – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 5, 6
தேங்காய் – 1 மூடி
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு
கொத்தமல்லித் தழை

======================

me: ஐயய்ய, இது என் பதிவிலிருந்து எடுத்த தக்காளிக்காய் கூட்டு இல்லையோ.  ஒண்ணுக்குக் கீழ ஒண்ணா இருக்கவும் கவிதைன்னு நினைச்சுட்டேளா? :))))

haranprasanna: (அடச்சே. பசில இந்தத் தப்பை வேற செஞ்சுட்டேனா! இவ இதைச் சொல்லியே பலநாளுக்கு ஓட்டிக் கொல்வாளே!) சகிக்கவில்லை உங்கள் ஜோக். ஏதோ தவறாகிவிட்டது. சரியாகத் தருகிறேன். காத்திருங்கள். (அந்தக் கூடைக்காரர் இப்படி காக்கவெச்சுட்டாரே. மட்டம் போட்டு கழுத்தறுத்துட்டாரா? வீட்லேருந்து அதை போன் செஞ்சாவது சொல்லலாமில்ல.)
Sent at 14:01 PM on Tuesday

==================
அக்கார அடிசில் கவிதை

ஒருகப் அரிசியுடன்
கால்கப் பயத்தம்பருப்பையும் களைந்து
நீரைவடித்து
நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

இரண்டு லிட்டர்
கூழான கெட்டிப் பாலில்
குழைவாக வேகவைக்கவும்.

இரண்டும் இன்னும் அரைகப்புமாய் வெல்லத்தை
வாணலியில் நீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டி
வேகவைத்த அரிசிக்கலவையும்
இரண்டு லிட்டர் பாலும்
இரண்டு லிட்டர் நெய்யும்
ஏலக்காய்ப் பொடியும்
இரு சிட்டிகை பச்சைக் கற்பூரமும்
சேர்த்துக் கலந்து கொதிக்கவிடுங்கள்

இப்போது நீங்கள்
அக்கார அடிசில் தயாரிப்பதில்
நிபுணராகி இருக்கிறீர்கள்

வாணலியில் கொதிக்கும் பண்டத்தில்
நெய்யும் பாலும் மேலெடுக்கும் வாசத்தில்
மாமியாரின் சர்க்கரை வியாதி
மாமனாரின் இரத்த அழுத்தம்
கணவன் அவ்வப்போது சொல்லும் நெஞ்சுவலி
மகனுக்கு இந்த வயதிலேயே வைக்கும் தொப்பை
மளிகைக்காரனின் நாலுமாதக் கடன்பாக்கியென
பிரச்சினைகளில் நீங்கள் உங்களைத் தொலைக்காதிருந்தால்
வருத்தப்பட்டுக் கொள்ளுங்கள்
நீங்கள் தேர்ந்த சமையல்காரர்.
========================
Sent at 14:05 PM on Tuesday

haranprasanna: என்ன பேச்சையே காணம்?

me: படிச்சுகிட்டிருக்கேன்..

haranprasanna: எப்படி கவிதை? பெண்கள் இன்றைக்கு எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள் பார்த்தீர்களா?

me: ம்

haranprasanna: எத்தனை கவிதை படித்தால் தான் நீங்களெல்லாம் திருந்தப் போகிறீர்கள்?

me: எதுக்கு என்னைத் திட்டறீங்க? நான் யோசிச்சுகிட்டிருக்கேன்.

haranprasanna: தேர்ந்த சமையல்காரர் என்றால் பெருமைதானே படவேண்டும், நாம் வெட்டியாய் படுசுமாராய் சமைப்பதற்கே பெருமையாய் பதிவெல்லாம் வைத்திருக்கிறோமே, ஏன் கவிதையில் வருத்தப்படச் சொல்லியிருக்கிறார்கள் என்றெல்லாம் யோசிக்கிறீர்களா? 

me: இல்லை…. 

haranprasanna: வீட்டில் இருக்கிறவர்களுக்கெல்லாம் உடல்நிலை சரியில்லை, கடன்பாக்கிக்காக வெல்லாம் வருத்தப்படச் சொல்லியிருப்பார்களோ என்று யோசிக்கிறீர்களா?

me: இல்லை…

haranprasanna: உங்களைப் போன்ற பேதைகளுக்கு அப்படியெல்லாம்தான் யோசனை போகும். உண்மையில் கவிதையின் முடிச்சு அங்குதான் இருக்கிறது.

me: ஹை, ப்ரசன்னா, I got it! இந்தக் கவிதை உங்களுக்கு அடையாளம் தெரியலையா?

haranprasanna: தான் வாழும் வாழ்க்கையில் ஒரு பெருமையான அங்கீகாரம் இருக்கும் சூழ்நிலையில் ஒரு பெண்ணிற்கு மேலே இருக்கும் குடும்பம் சார்ந்த பிரச்சினைகள் எல்லாம் கவனத்தில் வந்திருக்கவேண்டும்…

me: இது யார் எழுதினதுன்னு சொல்லுங்க பார்க்கலாம்…

haranprasanna: சாமானை அள்ளிக்கொட்டி சமையல்காரராக மட்டும் இருக்கிறார் என்பது அந்தக் குடும்பத்தில் அவளது பிடிப்பு விட்டுப்போன மனநிலைக்கான குறியீடு. வாழ்ந்து உணர்ந்து, அதை வார்த்தைகளிலும் சொல்லத் தெரிவதால்தான் அது வன்மையான கவிதையாக வந்திருக்கிறது.

me: ஐயய்ய, சும்மா கீழ குனிஞ்சு தட்டிகிட்டு நீங்க சொல்றதையே சொல்லிகிட்டிருக்காம, கொஞ்சம் நான் தட்டறதையும் படிங்க..

haranprasanna: சுஜாதா சொல்வது சரி. கவிதைக்கு கோபமும் சோகமும் தேவை.

me: (அடடா அடங்கமாட்டாங்க போல இருக்கே…)

haranprasanna: உங்களைப் போல் திமிராகவும் வெட்டியாகவும் நேரத்தைத் தேய்ப்பவர்களுக்கு கவிதையும் வேறெந்த இலக்கியமும் கூட கைவராது.

me: ப்ரசன்னாஆஆஅ…. இது நிஜமாவே நேரத்தை தேய்க்கறவங்க எழுதின கவிதைதான். 🙂

haranprasanna: அப்படியா? எப்படித் தெரியும்? யார் எழுதியது? (வரவர என்னைவிட இவளெல்லாம் இலக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களை விரல்நுனில வெச்சிருக்காளே… இவளை நம்பக் கூடாது… உதாரை ஏத்த வேண்டியதுதான்.) மேலும் ஜெயஸ்ரீ, நீங்கள் என்னை பெயர் சொல்லி அழைப்பதைவிட கவிஞர் என்று அழைப்பதையே விரும்புகிறேன்.

me: நாசமாப் போச்சு. தான் எழுதின கவிதையும் அதன் வடிவமும் மறந்து போனவங்களெல்லாம் கவிஞரா? (யோவ், பீடத்துலேருந்து இறங்கவே மாட்டியாலே நீ?)

haranprasanna: புரியவில்லை!!

me: இந்த கெத்துல எல்லாம் குறைச்சலில்லை. மேட்டர்ல கோட்டை விட்டுட்டீங்க. இந்த அக்கார அடிசில் கவிதை நான் எழுதினது. உங்க கவிதையை ஃபார்மட்டா வெச்சு.

haranprasanna: என் கவிதையின் வடிவமா? எப்போது எழுதினேன்? (இவ்ளோ மோசமா எழுதித் தொலைச்சிருக்கேனா?)

me: உங்க CuSO4 கவிதை.

haranprasanna: தலைப்பே சகிக்கவில்லையே. என்னுடையதாக இருக்க முடியாது. (இவகிட்ட என் பழைய ட்ரங்க்பெட்டில போட்ட கவிதை எல்லாம் இருக்கு. எதையெதை எப்ப எடுத்து வெளில விடுவாளோ!)

me: நீங்க பூர்வாசிரமத்துல துப்பாய்ல கெமிஸ்டா வேலைபாத்து குப்பை கொட்டின காலத்துல எழுதினது. இருங்க நானும் எடுத்துத் தரேன்.
Sent at 14:16 PM on Tuesday

======================
CuSO4 கவிதை

தாதுகள் நீக்கப்பட்ட
மீத்தூய் நீரால் நன்கு கழுவி
நன்கு உலர்த்தப்பட்ட
ஒரு கண்ணாடிக் குடுவையை எடுத்துக்கொள்ளுங்கள்

10 கிராம் தாமிரசல்பேட்டை
துல்லியமாக நிறையிட்டு
குடுவைக்குள் இடுங்கள்.

1000 மில்லி லிட்டர் மீத்தூய்நீரைச் சேர்த்து
தூய கண்ணாடிக்குச்சியால் கலக்குங்கள்

இப்போது நீங்கள்
1% தாமிரசல்பேட் கரைசல் தயாரிப்பதில்
நிபுணனாகி இருக்கிறீர்கள்

ஊடுருவிச் செல்லும் ஒளியில்
நீல நிறத்தடம் மனதைக் கொள்ளை கொள்ளும் நேரத்தில்
குடுவைக்குள் செயற்கை கடல்
துள்ளும் மீன்கள், உயிருடன் சிப்பி
நீல மேற்பரப்பில் சூரிய எதிரொளி, அதில்
தரையிறங்கும் இறக்கை விரித்த கரும்பறவையென
பிணை நினைவுகளில் உங்களைத் தொலைக்காதிருந்தால்
பெருமை பட்டுக்கொள்ளுங்கள்…
நீங்கள் வேதியியல் உலகக்காரர்
========================
Sent at 14:19 PM on Tuesday

என்ன அந்தப் பக்கமும் பேச்சையே காணோம்? 🙂

haranprasanna: (கீழ சைக்கிள் மணிச்சத்தம் கேக்குதே. நம்பாள் தானோ? அதானே பாத்தேன். எவ்ளோ சண்டைன்னாலும் வீட்டுல நமக்கு சாப்பாடெல்லாம் குறை வெச்சதில்லையே. நல்லவேளை கிறுக்குத்தனமா அவசரப்பட்டு ·போன்பண்ணி மன்னிப்பெல்லாம் கேட்காம இருந்தேன். இனி இந்தக் கழுத்தறுப்பைக் கழட்டிவிட வேண்டியதுதான் பாக்கி.) உங்களுக்கு வீட்டில் வேலையே இருக்காதா? இங்கே உட்கார்ந்து என்னுடன் செலவழித்துக் கொண்டிருக்கிறீர்களே, பாவம்.

me: நான் சமைச்சு முடிச்சிட்டேன். வேலைகளை முடிச்சுட்டு வெட்டி நேரத்தைத் தான் உங்களோட செலவழிக்கறது.

haranprasanna: என்ன சமையல்? சொல்ல மறந்துவிட்டேன். உங்கள் தக்காளிக்காய் கூட்டை எங்கள் வீட்டில் தக்காளிப் பழத்தில் செய்வார்கள். உண்மையாகவே சுவையாக இருக்கும். அந்தப் பதிவில் ramakannan என்பவர் கேட்டிருக்கும் சந்தேகம் சரியே.

me: ஆ, என் வலைப்பதிவை ஒரே ஒரு நொடி மட்டும் திறந்துபார்த்து¢ட்டு நீங்க அள்ளிவிடற விஷயங்கள், கேட்கற சந்தேகங்கள் எல்லாம் என்னை ஆச்சரியப்படுத்றது. (மணிக்கணக்கா பதிவை பிரிச்சு மேய்ஞ்சுட்டு பீலாவா விடற?)

haranprasanna: இலக்கியவாதியும் கவிஞனுமானவன் தன்னைச் சுற்றி நடப்பவைகளை சில நொடித் துளிகளில் துல்லியமாக அவதானித்து, கிரகித்து, தேவையான நேரத்தில் சரியான கோணத்தில் எடுத்துவைக்கத் தெரிந்தவனாக இருக்கவேண்டும். (ஆஹா, இன்னிக்கு நாம நினைச்சமாதிரியே பாகற்காய் பிட்லைதான்.)

me: ஆனா தக்காளிப்பழத்துல கூட்டு செஞ்சா அது தக்காளி கொத்சு, இல்லை டால் ஃப்ரை மாதிரி தானே? 

haranprasanna: எது சொன்னாலும் எதிர்த்து எல்லாம் தெரிந்த மாதிரி பேசுவதை நிறுத்துங்கள் ஜெயஸ்ரீ. உங்களுக்கு இலக்கியத்தில் ஒன்றரையணா பரிச்சயம் இருப்பது போல் எனக்கு சமையலிலும் அனுபவம் உண்டு. துபாயில் நான் கவிதை உண்டு வாழ்ந்த காலத்தும் என் அறைத் தோழனாக இருந்த ஒரு அஞ்ஞானிக்கு மட்டும் சமைத்துப் போட்டிருக்கிறேன். நீங்கள் தக்காளிக்காய் சேர்த்து செய்த அதே உணவுக்குறிப்பை தக்காளிப் பழம் உபயோகித்துச் செய்துபாருங்கள். பயத்தம்பருப்பு இலையிலையாக முக்கால் பதம் மட்டும் வெந்து குழையாமல் இருக்கவேண்டும் என்பதை மட்டும் நினைவுவைத்துக் கொள்ளுங்கள்.

me: உங்கண்ணி கூட நல்லா சமைப்பாங்கன்னு சொல்வீங்களே. இதெல்லாம் அவங்ககிட்ட கத்துகிட்டீங்களா?

haranprasanna: அதெல்லாம் முன்காலத்தில். என் கல்யாணத்திற்குப் பிறகு அண்ணி சுமாராகத் தான் சமைக்கிறார்.

me: ப்ரசன்னா, நிஜமாவே நான் எழுதியிருக்கற கவிதை நல்லாவா இருக்கு? சும்மா தோணித்து. கிறுக்கினேன்.

haranprasanna: (இவ எழுதினதுன்னு தெரியாம புகழ்ந்து தொலைச்சுட்டேன். சே, பசி எல்லாத்தையும் மறக்கடிச்சிடுச்சு!) கவிதை வெகுசுமார் தான். கவிதையே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு அத்தைப்பாட்டித்தனம் தான் எழுத்தில் இருக்கிறது. அதன் (என் கவிதையின்) வடிவத்தால் மட்டுமே வன்மை பெறுகிறது.

me: (அதானே பாத்தேன். இந்தத் திமிர் இல்லைன்னா எப்படி?) துபாயிலும் கவிதை உண்டே வாழ்ந்தேன்னு நீங்க சொன்னதும் நியாபகம் வருது. காலைல ஒரு அருமையான கவிதை படிச்சேன். படிச்சபோதே உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கணும்னு நினைச்……..

haranprasanna: (சாப்பாட்டுக் கூடையே ட்ராஃபிக் ஜாம்ல மாட்டி இப்பத்தான் ஒருவழியா வந்திருக்கு. தின்ன முடியுதா பார் நிம்மதியா.) பிறகு பேசலாம் ஜெயஸ்ரீ. ஒரு கஸ்டமர் வந்திருக்கிறார். எனக்கு கடமை கவிதையைவிட முக்கியம் என்பதும் நீங்கள் அறிந்ததே. அவசியம் தக்காளிப்பழக் கூட்டு செய்துபார்த்துச் சொல்லுங்கள். வணக்கம்.
Sent at 14:36 PM on Tuesday

haranprasanna is offline. You can still send this person messages and they will receive them the next time they are online.
_____________________________________________________________

செய்துபார்த்து தனியில் சொல்வதற்குப் பதில், நன்றாக இருப்பதாக வீட்டினர் சொன்னதில் உணர்ச்சிவசப்பட்டும், பழக்க தோஷத்திலும் பதிவில் போட்டுவிட்டேன். இதனால் கவிஞர் இமேஜிற்கு ஏதாவது பங்கம் வந்துவிடுமா? 😦 இப்போது என்ன செய்வது, எடுக்கவா, இருக்கவா?

நன்றி: கவிஞர் ஹரன்பிரசன்னா.

தேவையான பொருள்கள்:

தக்காளி – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 5, 6
தேங்காய் – 1 மூடி
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு
கொத்தமல்லித் தழை

தாளிக்க – எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

thakkaali koottu

செய்முறை:

 • பயத்தம் பருப்பை முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
 • தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
 • அடுப்பில் வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
 • தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது நீர்விட்டு மூடி வேகவைக்கவும்.
 • முக்கால் பதம் வெந்ததும் அரைத்த விழுது, வேகவைத்த பயத்தம் பருப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
 • கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

* நீரைக் குறைத்து கால் கப் பால் அல்லது தேங்காய்ப் பால் சேர்ப்பதால் காரல் இருந்தால் மறைந்து சுவையும் மணமும் அதிகரிக்கும். நான் சேர்த்திருக்கிறேன்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் சாதம், சப்பாத்தி வகைகள்…

அன்னிக்கு ரங்கமணி ஆபீசுக்கு ‘சும்மா’ லீவ். இந்த மாதிரி சந்தர்ப்பம் எல்லாம் எனக்கு அத்திப் பூத்த மாதிரி எப்பவோ கிடைக்கற வாய்ப்பு. விடலாமா? நேத்தி, நாம நாளைக்கு D’Mart shopping போகலாமான்னு கேட்ட அம்மணிகிட்டயே, “நோ நோ நாளைக்கு கோவிந்த் லீவ். (தரோவ வேலை வாங்கிக்கணும்) நான் வரலைனு சொல்லி வெச்சிருந்தேன்.

“SBOA ஸ்கூல்கிட்ட Reliance Fresh திறந்து பத்து நாளாச்சு. இப்ப போய் பாத்துட்டு வந்துரலாம். சண்டேன்னா கூட்டமாயிருக்கும்.”

“சான்ஸே இல்லை. இன்னிக்கு முழுக்க நான் ரிலாக்ஸ்டா இருக்கப் போறேன். டிவி பாக்கணும். நிறைய படிக்கணும். என் பொண்ணு வந்ததும் அவளோட விளையாடணும். உனக்கு குக்கர் கேஸ்கட் போடறது, தெச்ச ஜாக்கெட் வாங்கிட்டு வர்றது, பிஞ்ச செருப்பு தெச்சு வாங்கறதுக்கெல்லாம் என் லீவை வேஸ்ட் பண்ண முடியாது.”

ஆண்களால பெண்கள் மனசைப் படிக்க முடியாதுன்னு யார் சொன்னது? 🙂

“தேவை இல்லை. தாரளமா செய்ங்க. எனக்கென்ன? ஆனா ஃப்ரிட்ஜ்ல காய் சுத்தமா இல்லை. நாளைக்கு ஆபீசுலேருந்து வரும்போது நீங்களே ராத்திரி ஒம்போது மணிக்கு மேல ஒரு வாரத்துக்கான காய் வாங்கிட்டு வாங்க.”

Reliance Fresh 1

வெச்ச குறி தப்பலை. காய்கறிங்கற வார்த்தை எப்படி ஆளை அசைக்கும்னு தான் இவ்ளோ வருஷமா பாத்துகிட்டிருக்கேனே. இந்தியாவின் கடைக்கோடிக்கே ஊர் சுத்தப் போனாலும் புஸ்தகங்களுக்கு அடுத்தபடியா அல்லது அதுக்குச் சரியா ஃப்ரெஷ் காய்கறிகளைப் பார்த்தா பரபரக்கும் ஜீவன்; எப்படியெல்லாம் பார்த்து பார்த்து வாங்கணும்னு பழக்கியிருக்கும் மாமியார்(வாழ்க!); ஆன காரணங்களால இத்தனை வருஷமாகியும் எனக்கு இன்னும் காய் வாங்கத் தெரியாமலே போச்சு. (தக்காளி மட்டும் வாங்குவேன். இதைச் சொன்னால் எங்கம்மாவே என்னடீ இப்படி இருக்கன்னு அதிர்ச்சியாறா.) நம்ப அவங்களோட கூடவே போய், சும்மா பையை வெச்சுகிட்டு பராக்கு பாக்க வேண்டியதுதான். அவங்களே வாங்கி வாங்கிப் போடுவாங்க. “கொஞ்சம் நீயும் வாங்கக் கத்துக்கலாமில்ல?”ன்னு சொல்றது காதுல கேட்காத தூரத்துல வாகா நிக்க வேண்டியது.

அதைவிட முக்கியமா பெரிய பெரிய வேலை எல்லாம் சலிக்காம செய்ற எனக்கு, சில சின்னச் சின்ன வீட்டு வேலைகள் செய்யப் பிடிக்காது. அதுல முக்கியமானது வாங்கிவந்த காயைப் பிரிச்சு ஃப்ரிட்ஜ்ல வைக்கறது, ராத்திரி பழம் நறுக்கரது… தலைவர் இருக்கும்போதே வாங்கிட்டா அவரே அதை கையோட பொறுப்பா செஞ்சுடுவாரு. அதனால சண்டேனா ரெண்டுல முக்கியமான ஒன்னு காய்கறி வாங்கறதுதான். இதுல இன்னொரு வசதி. தினம் தினம் கத்திரிக்காயா, முள்ளங்கியா மாதிரி குற்றச்சாட்டே எங்க வீட்டுல எழுந்ததில்லை. ஏன்னா, வாங்கறது நான் இல்லையே. 😉 ப்ரிட்ஜ்ல இருந்தா சட்டில வரும். அவ்ளோதான் பதில்.

“காய்தானே. அதுக்கு ரிலயன்ஸ் எல்லாம் வேண்டாம். காயெல்லாம் ஏசில சுருங்கி இருக்கும். நம்ப மார்க்கெட்லயே ஃப்ரெஷ்ஷா வாங்கலாம்.” ப்ரோக்ராம்ல ட்விஸ்ட். 😦 மார்க்கெட்ல அததுக்குன்னு தனித்தனி கடைகள் வைச்சிருக்கோம். கீரை, பயறுகள், இங்லீஷ் காய்கறிகள், கிராமத்திலேருந்து வர நாட்டுக் காய்கறிகள், பழங்கள் இப்படி. ஒருவாரம் போகலைன்னாலும் வாடிக்கை மறந்ததும் ஏனோன்னு விசாரிப்பாங்க.

“இல்லை, சும்மா எட்டிப்பார்த்துட்டு மார்க்கெட்டுக்கே போயிடலாம்.”

ஒருவழியாக அடம்பிடிச்சு கிளம்பிப் (அடுத்த திருப்பம் தான்.) போனா, வாசல்ல கும்பல் கும்பலா மக்கள் நின்னுகிட்டிருந்தாங்க. கடை சரியாப் பத்து மணிக்குத் தான் திறப்பாங்களாம். இன்னும் 5 நிமிஷம் இருந்தது. என்ன மக்களோ! நான் பிசினஸ் செஞ்சா காலைல எழுந்ததும் எதுக்கும் கடையைத் திறந்துட்டுதான் பல்லையே தேய்ப்பேன். இத்தனை நேரத்தில் மார்க்கெட்ல பாதி வாங்கி முடிச்சிருக்கலாம். ரங்கமணி உச்’ கொட்ட ஆரம்பிச்சாச்சு. கொஞ்சம் தள்ளி ஒரு கும்பல் தமிழ்ல பேசறது விட்டு விட்டுக் கேட்டுது. திடீர்னு ஒரு வண்டி வந்து நிஜமாகவே ஃப்ரெஷ்ஷா காய்கறிகள் இறங்க ஆரம்பிச்சதும் பக்கத்து முகத்துல பல்பு. மீ ரிலாக்ஸ்.

கடை திறந்ததும் சொல்லி வைச்சது மாதிரி எல்லோருமே காய்கறிகள் பக்கம் தான் போனாங்க. காய்கறிகள் உண்மையிலேயே நன்னா இருந்தது. எனக்குத் தான் மார்க்கெட் மாதிரி சும்மா நிக்க முடியாம பிளாஸ்டிக் பைகளைக் கிழிச்சுக் கிழிச்சுக் (ஏதோ என்னாலான ஹெல்ப்பீஸ்) கொடுக்க வேண்டியதாகிப் போச்சு. பரவாயில்லை.

வந்திருந்தவங்கள்ல பெரும்பாலானவங்க தமிழர்களா மட்டுமே இருந்ததோட காரணம் எனக்குப் புரியலை. அலுவலக நாளா இருந்ததால பலர் ஹவுஸ்வைஃப், ரிட்டயர்ட் இந்த வகையறாவில் தான் இருந்திருப்பாங்க. இரண்டு மாமிகளும் ஒரு மாமாவுமா வந்த ஒரு குடும்பம் அநியாயத்துக்கு குறுக்கும் நெடுக்குமாக ஓடி, கத்திக் கலக்கிண்டிருந்தாங்க.

“இந்த நாமக் கத்திரிக்காய் அரைக் கிலோ வாங்கலாமோடீ?” பொறுக்கி எடுத்துண்டு எதிர்ப்பக்கம் நின்ன மனைவியைக் கேட்டார். பெண்கள் ரெண்டுபேரும் பீன்ஸ் பொறுக்கிண்டிருந்தாங்க.

“ஐயோ சமத்தே, உங்களை யார் அந்த வேலையெல்லாம் சொன்னது? (பக்கத்திலிருந்த பெண்ணிடம்) வீட்லயே விட்டுட்டு வரலாம்னு சொன்னேனே கேட்டியா? (திரும்ப மாமாகிட்ட) நாமம் போட்ட கத்திரிக்காய் காரலா இருக்கும். நீளக் கத்திரிக்காய் தான் வாங்கணும், நீங்க சித்த சும்மா இருங்கோளேன், நான் பாத்துக்கறேன்”, மாமி கத்திச் சொன்னதுக்கு அந்தப்பக்கம் தமிழ் தெரிஞ்ச அத்தனை பேரும் திரும்பிப் பார்த்தாங்க. அதாவது அத்தனை பேருக்குத் தமிழ் தெரிஞ்சிருக்குன்னு எனக்குத் தெரிஞ்சுது. தவிர்க்கவே முடியாம நானும் ரங்கமணியும் ஒருத்தரையொருத்தர் பார்த்து சிரிச்சுண்டோம். பொதுஇடத்துல புருஷனை ஒரு போடு போடறதெல்லாம் எவ்ளோ சுகமான விஷயம். நாகரிகம்ங்கற பேர்ல நாம இழந்ததுதான் எவ்வளவு? 🙂 இப்பல்லாம் ஸ்ரீரங்கத்துலயே இந்த சீன் எல்லாம் ரொம்பக் குறைஞ்சுடுச்சு. மாமாவைப் பாத்து அலுத்துண்டே மாமிகள் தாலிச்சரட்டுல தாயர் மஞ்சள் காப்பைத் தேய்ச்சுக்கறதெல்லாம்…. சரி விடுங்க. அவர் கொஞ்சம் தயங்கி திரும்ப தான் எடுத்ததை எல்லாம் மொத்தக் காய்கறியில சேர்த்தார்.

திடீர்னு கோவிந்த், “ஏன் இவ்ளோ கொஞ்சமா தக்காளி வாங்கியிருக்க, போதுமா?ன்னு ஆச்சரியமா (வாங்கத் தெரிந்த ஒரே காய்ங்கறதால வஞ்சனை இல்லாம குறைஞ்சது 2 கிலோவாவது வாங்குவேன்.) கேட்டதுக்கு அதைவிட ஆச்சரியப்பட்டேன். நான் எதுவுமே இதுவரைக்கும் கறிவேப்பிலை தவிர எங்க கார்ட்ல எடுத்துப் போடலை. அப்போலேருந்து சும்மா வேடிக்கைதான் பாத்துகிட்டிருந்தேன். அப்பத்தான் ரெண்டுபேரும் கவனிச்சோம், நடுவுல இருக்கற எங்க கார்ட்ல அந்த மாமி வேகவேகமா காய்களைக் குவிச்சுகிட்டிருக்கறதை. “இது எங்களொடதுங்க” ன்னு ரங்கமணி அரைக்காலே முக்கால் டெசிபள்ல மாமிகிட்ட சொன்னது எனக்கே பாவமா இருந்தது. அதைக் கூட பாத்துக்காம என்ன செஞ்சுகிட்டிருக்க அப்டீங்கற மாதிரி திரும்பி என்னைப் பாத்ததை நான் பாக்கலை. 🙂

“நான் இங்க இருக்கேன்டீ!” மாமா எங்கோ தள்ளி அவங்களோட கார்ட்டைப் பிடிச்சுண்டு, நெஞ்சை நிமிர்த்திண்டு (அல்லது அப்படி நினைச்சுண்டு ) சொன்னதும், மாமி (தன் தவறை மறைக்க) அவரை முறைச்சதும், என்னால சிரிப்பை அடக்கவே முடியலை. என்னோட தலையாயப் பிரச்சினை பொது இடத்தில் இப்படி அடக்க முடியாம சிரிப்பு வர்றதுதான். தலையை வேற எங்கயாவது பருப்புகள் ஷெல்ஃபுல புதைச்சுக்கலாம், பாவம் அவங்க தப்பா நினைக்கப் போறாங்கன்னு நினைச்சு அங்கேருந்து ஓடிப் போய், அப்றம் தனியாச் சிரிச்சா வேற யாராவது வேற மாதிரி நினைக்கப் போறாங்களேன்னு திரும்ப ரங்கமணியோட வந்து ஒட்டி நின்னுகிட்டேன்.

மாமி தானே தன் பக்கம் கார்ட்டை வெச்சுகிட்டாங்க. மாமா சிரமப்பட்டு ஒரு 5 கிலோ எண்ணெய் டின்னைக் கொண்டுவந்து தங்களோடதுல வெச்சுட்டு தள்ளிப் போய் நின்னார். ஐயோ, எதுக்கு எண்ணெய் எல்லாம் எடுக்கறேள், அதுவும் இவ்ளோ பெருசு, சித்த சும்மாத் தான் இருங்கோளேன்” ன்னு மாமி திரும்ப கத்த, கனஜோரா, “அது உனக்கு வண்டி அடையாளத்துக்கு வெச்சிருகேன். எல்லாம் வாங்கி முடிச்சதும் அதை இங்கயே வெச்சுட்டு பாக்கிக்கு மட்டும் பில் போடலாம்” மாமா சொல்ல, “புத்திசாலி!!” ங்கற மாதிரி மாமி ஒரு பார்வை. இல்லையா பின்ன? 🙂

Reliance Fresh 2

இப்படி வேடிக்கை பார்த்ததுல நம்ப ஆளு பூசணிக்காய், பீட்ரூட் எல்லாம் அடுக்கறதை கவனிக்கலை. திடீர்னு பாத்து, இதெல்லாம் இருக்கு, வேண்டாம்னு சொன்னதுல செம காண்டு.

“இருக்கா? பின்ன காய்கறியே இல்லைன்னு சொன்னியே?”

“ப்ரிட்ஜ்ல காய்கறியே இல்லைன்னா சொன்னேன்? காய்கறியே சுத்தமா இல்லைன்னு தான் சொன்னென். சமைக்கும்போது அலம்பிட்டு சமைக்கணும்.” இவ்ளோ கேவலமான ஜோக்கை எல்லாம் சொல்லி பொது இடத்துலதான் சின்ன முறைப்போட தப்ப முடியும். “காய்கறின்னு சொல்லாம சும்மா கடையைப் பாக்க கூப்டா வருவீங்களா? அதான்.”

அப்படியும் கணிசமா தேத்தி எடை போடற இடத்துல எக்கச்சக்க நேரம். அதுக்கு இருந்ததே 2 பேர். அதுலயும் ஒருத்தங்க ரொம்பப் புதுசு போல.(கடை திறந்தே 10 நாள் தான் ஆகுது. அதுலயும் பழசு புதுசு.) “தீதீ!” ன்னு இன்னோரு பெண்ணை எல்லாத்துக்கும் கூப்டு சந்தேகம் கேட்டுக் கேட்டு எடை போட்டதுல ரங்கமணி கடுப்பாகி, சந்தேக நிவர்த்திப் பெண்ணோட க்யூலயே கொஞ்சம் பெருசா இருந்தாலும் பரவாயில்லைன்னு திரும்ப நின்னாரு. குழந்தை ஸ்கூல்லேருந்து வந்துடப் போகுதேன்னு முகத்துல கவலையான கவலை. அவங்க ஆனாலும் அநியாயத்துக்கு, வாங்கின எலுமிச்சை, பூண்டு, இஞ்சிக்கெல்லாம் தனித்தனியா பைபோட்டு, பில் ஒட்டி.. “எப்படி திரும்ப பிளாஸ்டிக் பை டாமினேட் செய்ய ஆரம்பிச்சிடுச்சு பாம்பேல, சை!”

அப்படியே மற்ற செக்ஷனையும் பாக்கலாம்னு ஒரு சின்ன ரவுண்ட். வழக்கமா இந்த மாதிரி டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள்ல இருக்கற அதே எவர்சில்வர் பாத்திரங்கள், crockery, பிளாஸ்டிக்.. குழந்தை ஸ்கூல்லேருந்து வந்துடும்னு பிண்ணனி இசை ஒலிச்சு(விரட்டிக்)கிட்டே இருந்தது. வேகமா பாத்துட்டு பில்போடற இடத்துக்கு வந்தா 4, 5 மெஷின் இருந்தாலும் ரெண்டு மிஷின் தான் வேலைல இருந்தது. எல்லாரும் பரபரத்துகிட்டே இருந்தாங்க கடைக்காரங்களை. எல்லா மெஷின்லயும் பில் போட்டா என்னன்னு எல்லாரும் கேக்கற கேள்விக்கு என்ன காரணமோ அவங்ககிட்ட பதில் இல்லை. பாவம்.

புதுசா யாராவது தொழில் தொடங்கினா அவங்களை உற்சாகப் படுத்தணும்னு உடனே அங்க ஆஜராகிற நம்ப ரங்கமணிகூட அன்னிக்கு பொருந்தாம படுத்தினதுதான் ஆச்சரியம். ஹோட்டல்ல சரியா பரிமாறலைன்னாலே, ‘பாவம், புது ஹோட்டல், புது ஸ்டாஃப், வேலை கிடைச்ச சந்தோஷத்துல இருக்காங்க. கொஞ்ச நாள்ல செர்வ் பண்ண பழகிடுவாங்க, நாமதான் என்கரேஜ் செய்யணும், விட்டுப் பிடிக்கணும்னு எனக்கே கீதோபதேசம் செய்ற ஆள், ரிலையன்ஸ்ங்கரதாலயோ (அப்படி இருந்தாலும் அந்தப் பணியாளர்கள் புதுசுதானே பாவம்) அல்லது பொண்ணு நினைப்புலயோ அன்னிக்கு நெருப்பு மேல டான்ஸ். உலகத்துல எங்கயும் காய் வாங்கினா இவ்ளோ நேரம் ஆகாது, நீ இரு நான் போறேன்னு ஒரே பொலம்பல். தொணப்பு தாங்காம ரங்கமணியை வெளில நிக்கச் சொல்லி, பணத்தை வாங்கிண்டு, நானே பில்போட்டு வாங்கிவரதா சொல்லிட்டேன்.

பக்கத்து லைன்ல ஒரு பொண்ணு ரங்கமணியையே மிஞ்சற அளவுல என் குழந்தை ஸ்கூல் பஸ் வந்துடும்னு குதிச்சுகிட்டிருந்தாங்க. வாங்கின சாமான்களைப் பாத்தா நறுக்கி பேக் செஞ்சிருந்த பாகற்காய், முருங்கைக்காய் வகையறா. அட அம்மணிகளா? என்னதான் அவசர யுகம்னாலும் பாகற்காய் முருங்கை எல்லாம் நறுக்க முடியாத அளவு அல்லது நறுக்க நேரம் எடுக்கற அளவு கஷ்டமான காய்களா? என்னிக்கி நறுக்கி என்னிக்கி பேக் செஞ்சதோ.

அதுக்குள்ள என் க்யூல இருந்த மாமாவுக்கு 300 ரூபாய்க்கு இறுநூத்து சொச்சம் போக பாக்கி சில்லறை கொடுக்க அவங்ககிட்ட இல்லை. கொஞ்சம் சில்லறை வெச்சுகிட்டு கல்லா திறக்க மாட்டாங்களா? எனக்கு ஆச்சரியமா இருந்தது. அவரோட ரூபாய் நோட்டை வெச்சுகிட்டு அந்தப் ஆள்(பையன்?) பேய் முழி முழுச்சிகிட்டிருந்தாரு. இவங்க எல்லாம் எப்ப செட்டில் பண்ணி என் முறை வருமோன்னு யோசிக்கும்போதே என் கைல இருந்த 500 ரூபாய் பல்லிளிச்சுது. கட்டினவன் கூட வர தைரியத்துல கைப்பை(கிரெடிட் கார்ட்) எடுத்துவராம இருந்திட்டேன். உங்க கார்டுல வாங்கிடலாம்னு சைகை செஞ்சு ரங்கமணியை திரும்ப உள்ள கூப்பிட்டேன்.

உள்ள வந்து, உச்சு கொட்டி, எப்படித்தான் குழந்தையைப் பத்தி கவலைப்படாம இருக்கியோங்கற புலம்பல் என் காதுக்குள்ள விழறதுக்குள்ள பக்கத்து க்யூலேருந்து வீல்’னு ஒரு சத்தம். தொடர்ந்து அந்தப் பொண்ணு மராத்தில மானாவாரியாகத் திட்டிண்டிருந்தாங்க. அந்த மெஷினும் எந்தக் காரணத்தாலோ பாதியிலேயே இயக்கத்தை நிறுத்தியிருக்கு. அந்த ஆள் அதோட சைடுல எல்லாம் தட்டிக்கிட்டிருந்தாரு. ஸ்கூட்டரைப் போல பிளேனையும் லேசா சாய்ச்சு ஸ்டார்ட் செய்யலாம்னு சொல்ற ஜோக் தான் ஞாபகத்துக்கு வந்தது. என் குழந்தை வந்திருக்கும்னு அழற நிலைக்கு அந்தப் பெண் போயிட்டாங்க.

“பரவாயில்லை, இன்னும் தாய்மை சாகலை நாட்டுல” ரங்கமணியோட முணுமுணுத்த கமெண்ட்டுல என் ஈகோ இடறிவிழுந்தது. எனக்கு என் பொண்ணு ஸ்கூல்லேருந்து வர நேரம் தெரியும். இன்னும் அரை மணி நேரம் இருக்கு. ஒரே ஒருநாள் வீட்டுல இருக்கறவங்க எல்லாம் இவ்ளோ அலப்பறது கொஞ்சம் அதிகம்.

“அவங்க குழந்தை எல்கேஜியா இருக்கும். உங்க பொண்ணு சீனியர் பசங்களையே அடிச்சு, கீழ தள்ளிட்டு, ஊர்வம்பை விலைக்கு வாங்கிகிட்டு வரா. ஒருநாள் வரும்போது கதவு பூட்டியிருந்தா எப்படி பிஹேவ் பண்ணனும்னு இந்த சிச்சுவேஷனும் தான் கத்துக்கட்டுமே, இப்ப என்ன போச்சு? இந்த ப்ரொகிராம் நான் போட்டதால தானே இவ்ளோ ஆர்பாட்டம். இதே நீங்க கூப்பிட்ட இடத்துல இப்படி லேட்டாகியிருந்தா பேசியிருப்பீங்களா? உங்களுக்கும் மத்தவங்க மாதிரி நறுக்கின காயும், நாளுநாள் பழசுல குழம்பும் ஊத்தினாத்தான் சரியாவீங்க. ஐயோ பாவம்னு வாழைப்பூ வாங்கி, மடல் மடலா எடுத்து, கை கறையானாலும் பரவாயில்லைன்னு ஒவ்வொண்ணுக்கா கள்ளன் ஆய்ஞ்சு, மணிக் கணக்கா திருத்தி, பருப்பு ஊறவெச்சு அரைச்சு, வேகவெச்சு, உதுத்து, வாழைப்பூ பருப்புசிலி செஞ்சு போடணும்னு நினைக்கறேனில்ல, எனக்கு இதெல்லாம் தேவைதான்…. .”

என்னாலயே என் ஃப்ளோவை நிறுத்தவும் முடியலை; தங்குதடையில்லாத என் தமிழ்ல ஆச்சரியப்படாம இருக்கவும் முடியலை. நிறுத்தினபோது (“ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி:”) எனக்கு முன்னால இருந்தவங்க பில். இன்னொரு லைனும் எங்களுக்குப் பின்னாலயே திட்டிண்டே  வந்து நின்னாங்க. 

எனக்கு முன்னால பில் போட்டவங்க 3 ஃப்ளேவர்ல ஃபாமிலி பேக் ஐஸ்கிரீம் வாங்கியிருந்தாங்க. பாத்தா, ஒவ்வொண்ணுக்கா மிஷின்ல காமிச்சு விலை மட்டும் கேட்டு (170, 180, 175) எது இருக்கறதுக்குள்ள விலை குறைவா இருக்கோ அதை பில் போடச் சொல்லி, மீதி ரெண்டையும் வைக்க உள்ள போனபோது எனக்கே வாழ்க்கை வெறுத்தது. வீட்டுக்குப் போய்ச்சேருவோமான்னு இருந்தது. பின்னால நின்னவங்க எல்லாம் அவங்களை சத்தம் போட்டாங்க. அட ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிடறவங்க பிடிச்ச ஃப்ளேவர வாங்காம அஞ்சு பத்துக்கு கணக்குப் பாக்கற மனவியல் எனக்குப் புரியலை. (இதை எழுதும்போது Mint ங்கற business newspaperல பெரிய பெரிய பிஸ்தாக்கள் எல்லாம் எப்படி எல்லா இடத்துலயும் பேரம்பேசி மட்டுமே வாங்கறாங்கன்னு 4 நாள் முன்னால வந்த கட்டுரை (When MRP equals minimum retail price) நியாபகம் வருது. டயானாவுக்கு Dodi Fayed பாரிஸ்ல வாங்கின so called engagement மோதிரம் ( “Tell me yes” ring) பேரம் பேசி வாங்கினாருன்னா, அப்புறம் இதெல்லாம் என்ன தப்பு?  And you and I end up paying full price ன்னு கட்டுரையாளர் புலம்பியிருந்தாரு.

ஒருவழியா அவங்க பணம் கொடுத்து, இவங்க மிச்சம் எப்படியோ திரட்டிக் கொடுத்து, ஹை ஜாலி, எங்க முறை. காய்கறிக்கு கார்டு  யூஸ் பண்றதெல்லாம் ரொம்ப ஓவர்னு சொன்னதை காதுல வாங்காம வேகமா சாமான்களை எடுத்துவெச்சேன். பருப்பு, வேற சில சாமான்களும் வாங்கியிருந்தேன். பில் வந்ததும், கார்டை மிஷின்ல தேய்ச்சு,(கடவுளே, அந்த மிஷினும் வேலை செய்யணும்) பில்லுல கையெழுத்து வாங்க… பேனா… இல்லை.

உங்ககிட்ட பேனா இருக்கான்னு எங்களையே திருப்பிக் கேட்டாங்க. அப்புறம் அவங்களுக்குள்ளயே ஒருத்தரையொருத்தர் கேட்டு இல்லைன்னு சொல்லிண்டாங்க. ரங்கமணி என்னைப் பாத்த போது நான் அந்தப் பக்கம் ஒரு குழந்தையை மும்மரமா கொஞ்சிண்டிருந்தேன். குழந்தைகளைப் பாத்தா கொஞ்சாம இருக்க முடியுமா சொல்லுங்க? 🙂

எப்படியோ கடைக்குள்ள சாமான் எடுத்துகிட்டிருந்த ஒருத்தர் கிட்ட இருந்த பேனாவை வாங்கிக்கிட்டு வந்து கடைப் பணியாளர் கொடுக்க (அவர் பயந்து பின்னாலயே வந்து கையெழுத்துப் போட்டதும் கையோட வாங்கிப் போயிட்டாரு.) ஒருவழியா கிளம்பும்போது அவங்க கைகொடுத்து, மெம்பர்ஷிப் கார்டுக்கு ஒரு ஃபாரமும், ஒரு அரைக்கிலோ சர்க்கரை இலவசமாயும் கொடுத்தாங்க.  வாங்கிக்கிட்டு வீடுவந்து சேர்ந்த போது ஸ்கூல் பஸ் வந்து நின்னுது. சுபம்.

Reliance Fresh 3

* காய்கறிகள் காலைல பத்துமணிக்கே போனா ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கு. D’Mart ல எப்பவுமே ஏசில சுருங்கின காய்கள்தான். அதனால காய்கறி மார்க்கெட்ல தான் வாங்குவோம். ஆனா மார்க்கெட்ல கிடைக்காத பல காய்கள் (வாழைப்பூ வெறும் ரூ.5.44 க்கு.), ஒரே காய்ல பல வெரைட்டி (கத்திரிக்காய், தக்காளி, அவரை…) எல்லாம் கிடைக்குது. (வாழைத்தண்டுக்கும் ஏற்பாடு பண்ணுங்கப்பா. ரொம்ப மிஸ் பண்றேன்.) முக்கியமா எடை நிச்சயமா மார்க்கெட்ல வாங்கறதை விட நிறைய வித்யாசம்.
 

* பழங்கள் மார்க்கெட்டைவிடவே குறைவோன்னு எனக்கு ஒரு எண்ணம். பைனாப்பிள்(எனக்குப் பிடிச்ச பழங்கள்ல இரண்டாது இடம்) வாரா வாரம் நான் பொறுக்கிக் கொடுத்தா தோல்சீவி, பேக்பண்ணி ரூ.25க்கு ஒரு கிழவர் கொடுப்பாரு. அதைவிடவே கொஞ்சம் பெரிய பழம் 16 ரூபாய்க்கு. கத்தியால பேராவூரணித் தேங்காயே உடைக்கறவ நான். நானே தோல்சீவ ஆரம்பிச்சா வாரம் 9 ரூபாய் மிச்சம்.
 

* துவரம் பருப்பு இதுவரைக்கும் நான் வாங்கின எல்லா இடங்களையும் விட ரொம்ப சிறப்பா இருந்தது. உளுந்து ஏகப் போடுவான். பொதுவா எல்லா மளிகைச் சாமான்களுமே D’mart க்கு சமமா அல்லது அதைவிட சிறப்பாவே இருந்தது. சாம்பார், ரசப் பொடி செய்ய எல்லாம் ஸ்பெஷலா  சாமான் வாங்கிண்டு வந்தேன். விலையை இனிமேதான் பொருத்திப் பாக்கணும். ஆனா தரமான சுவையான சாமான்களுக்காக எனக்கு மாச பட்ஜட்ல சில நூறுகள் அதிகமான பரவாயில்லை.
 

* இலவசமா கொடுத்த சர்க்கரை நல்லா இல்லை. அண்ணாச்சி கடை சர்க்கரையும். ஆனா காசு கொடுத்து வாங்கினது, D’Mart சர்க்கரை மாதிரி கல்கண்டா இருந்தது.
 

* ட்ரை ஃப்ரூட்ஸ் வகைல பிற கடைகள்ல கிடைக்காத சில டூட்டி ஃப்ரூட்டி, தர்பூஸ், கர்பூஸ் விதை எல்லாம் கூட கிடைச்சது. அல்வா செய்ய வெள்ளரி விதை கிடைக்கலை. (ஸ்ரீரங்கத்துல செட்டியார்கள் வீட்டுல, பெண்கள் சும்மா இருக்கும்போதெல்லாம் இந்த விதையை உரிச்சுகிட்டிருப்பாங்க. ஆனா எங்க கிடைக்கும்னு தெரியலை.)

0

# முக்கியமா அரிசியும் டீயும் இவங்க தயாரிப்பு இன்னும் வாங்கி உபயோகிக்கலை. அரிசியை ரங்கமணியும் (என்னதான் குழம்பு ரசம், காய் எல்லாம் நல்லா சமைச்சாலும் அடிப்படைல சாதம் நல்லா இருந்தாதான் சமையல் ருசிக்கும்னு பெரிய நம்பிக்கை), டீ பரவாயில்லைன்னாவது எங்கவீட்டுல வேலை செய்ற அம்மணியும் சொன்னாங்கன்னா தான் இன்னும் நம்பிக்கை கூடும். இது ரெண்டும் நடக்கறது கொஞ்சம் கஷ்டம்.
 

# காய்கறிகளைப் பொறுக்கி, அதுக்கு எடை போட அதிக நேரம் எடுக்கறது, பில் போடற மிஷின் மக்கர், பாக்கி சில்லறை இல்லாதது, பேனா இல்லாதது (இந்த முறை நான் போனபோதும் பேனா இல்லை, நான் கொண்டு போயிருந்தேன்.) எல்லாம் என்னை மாதிரி நாலுபேர் திரும்பத் திரும்பச் சொன்னா சரி செஞ்சுடுவாங்க. இந்த ஞாயிற்றுக் கிழமை (கொஞ்சமே) கொஞ்சம் வேகம் அதிகம் தான்.
 

# மெயின் கடைத்தெருவுலயோ அல்லது குடியிருப்புகள் பக்கத்துலயோ இல்லாம ஸ்கூல், லேடீஸ் ஹாஸ்டல் கிட்ட இருக்கறது கொஞ்சம் அபத்தமா இருக்கு. அதுக்குப் பக்கத்துல எந்த ஷாப்பிங்கும் செய்ய முடியாம திரும்ப வேண்டியிருக்கு.
 

# நாங்க முந்தி இருந்த வீட்டுக்கு அடுத்த காம்பவுண்டே D’mart. 3 மாடிக் கட்டிடமா மிகப் பிரம்மாண்டமா வந்து, கிடைக்காத பொருளே இல்லைன்னு நிலைமை. அங்க எந்தப் பொருளும் கண்ணை மூடிகிட்டு இருக்கற இடம் தெரிஞ்சு எடுக்கற அளவுக்கு பழகிட்டேன். ஆனா ரிலையன்ஸ் என்னவோ ரொம்பச் சின்ன இடமா இருக்கு. இனி, மேல மாடி கட்டினாத்தான் அதிகமா வைக்க முடியுங்கற நிலைமைல இப்பவே பல வீட்டுபயோகப் பொருள்கள், நான் தொடர்ந்து வாங்கற Lizol (citrrs fragrance), fabric conditioner எல்லாம் இல்லவே இல்லை. அதனால இது முழுமையா ஷாப்பிங் செய்ய ஏத்த இடம் இல்லை. இப்போதைக்கு பெரிய அளவுல வளர முடியும்னும் தோணலை. Nerul மக்கள் D’Mart தான் அந்த வகைல தேர்ந்தெடுப்பாங்க.

# இன்னமும் பச்சரிசி, இட்லி அரிசிலேருந்து, வெத்தலை, வாழையிலை, கனுவுக்கு மஞ்சள் கொத்து, இதோ வரப்போற கார்த்திகைக்கு பொரி வரைக்கும் நம்பளோட வழமையான பல தேவைகளுக்கும்,

சொக்காயிக்கு படம் காட்ட மினுக்கு வத்தலா, வரவழைச்சுடுவோம், அதென்ன திருநெல்வேலில அப்பக் கொடி,  அதளக்காய் வத்தலா, தாமரைத்தண்டான்னு கேட்டுப் பாக்கறேன்னு பத்து ரூபாய் சாமானுக்கெல்லாம் மெனக்கெடத் தயாரா இருக்கவும்,

பஞ்சாப் கோதுமையைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தா (தேவைப்பட்டா சோயாவும் நாமே சொல்ற அளவு சேர்த்து) மிஷின்ல அரைச்சுக் கொண்டுவந்து கொடுக்கவும், (ஒருதடவை மிஷின்ல அரைச்சு உபயோகிச்சவங்க, கம்பெனி கோதுமை மாவு எப்பவும் வாங்க மாட்டாங்க.)

“சாம்பார்ப்பொடிக்கு விரளி மஞ்சள் வாங்க மறந்திட்டீங்களா, ஏன் வெயில்ல அலையறீங்கக்கா, தலைவலி வரும், தம்பிகிட்ட இப்பவே கொடுத்தனுப்பறேன்”

“இல்லை, எதிர்ல ஐயப்பன் கோவில் வாசல்ல பூவும் வாங்கணும், நானே வரேன்”

“அட, என்ன பூ, எவ்வளவுக்குன்னு சொல்லுங்க, கையோட வாங்கிவாரச் சொல்லுதேன், வேற என்ன வேணுங்க்கா”

போன்ற பேங்க் ஆஃப் இந்தியா [சேவையைக் கடந்த நேசமிகு உறவுகள் :)] மாதிரி விஷயங்களுக்காகவும் இன்னும் அண்ணாச்சிகளையும் சார்ந்தே இருக்க வேண்டியிருக்கு.

பிற்சேர்க்கை:

வாழைத் தண்டும் கிடைக்குது. 🙂 அதுவும் வெறும் ரூ.5.38 க்கு.

கருப்பு உளுத்தம் பருப்பு(தோல் பருப்பு) ஊறவெச்சு 24 மணி நேரம் ஆகியும் தோல் பிரியலை; நனைச்ச தண்ணில கருப்புச் சாயம்.

RV- channa dalRSelect - channa dal

பேக் செஞ்ச எல்லா மளிகைச் சாமான்களுமே Reliance Value, Reliance Select -ன்னு இரண்டு தரத்துல இருக்கு. முன்னது RV பாக்கெட்ல தமிழும் சேர்த்து 8 மொழிகள்ல அச்சிடப்பட்டு கொஞ்சம் விலை தரம் இரண்டுலயுமே குறைவாவும், பின்னது RSelect 4 மொழிகள்ல மட்டும்(தமிழ் இல்லை) அச்சிடப்பட்டு மிகக் குறைந்த விலை வித்யாசத்துல ஆனா மிகச் சிறந்த தரத்தோட இருக்கு. காரணம் தெரியலை. (உதாரணம் கடலைப் பருப்பு RV – கிலோ ரூ.58, RSelect – கிலோ ரூ. 60. தரத்துல பெரிய வித்யாசம்.)

-0-

Nerul Times: இந்த ஞாயித்துக்கிழமை, வீட்டுக்கிட்ட இருக்கற ATM போய் அப்படியே எதிர்ல இருந்த பிரபல நெருள் சனீஸ்வரன் கோயிலுக்குப் போனா அங்க நோட்டீஸ் போர்டுல சனிக்கிழமை உபயதாரர் பேர் அழிக்காம இருந்தது. இந்தக் கோயில் ரொம்பப் பிரபலம். சனிக்கிழமை பூஜை எல்லாம் பெரிய அளவுலயும், அதிகக் கூட்டமாவும் இருக்கும். போர்டுல இருந்த உபயதாரர் சச்சின் டெண்டுல்கர்!

நம்பெருமாள்:

ஸ்ரீரங்கத்தில் அயலாரின் படையெடுப்புக்கு(அப்போது தில்லி சுல்தான்) பயந்து ஒளித்து எடுத்துப்போன அரங்கன் சிலையை 60 வருடங்கள் கழித்தே மீட்டு எடுத்து வந்தார்கள். அதுவரை வேறு ஒரு அரங்கனை பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடந்துவந்தன.

ஆனால் யாருமே காணமல் போன அரங்கனை அறிந்தவர்கள் உயிருடன் அப்போது இல்லாமல் போக, மீட்கப்பட்ட விக்கிரகத்தை சந்தேகத்தின் பேரில் கோவிலுக்குள் அனுமதிக்காமல் ஆரியபடாள் வாசலிலேயே (மூன்றாம் பிரகாரம்) வைத்துவிடுகிறார்கள். அப்பொழுதுதான் வில்வமரத்தினடியில் மறைத்துவைக்கப்பட்டு இருந்த தாயார் கனவில் வந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். [இதனால ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் இரண்டு மூலவர்கள்.]

இதைக் கேள்விப்பட்ட மக்களுக்கு ஒருவேளை மீட்கப்பட்டது ஒரிஜினல் அரங்கன்தானோ, அதனால் தான் காணாமல் போனதும் மறைந்த தாயார், திரும்ப பெருமாள் வந்ததும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுவிட்டாளோ என்று சந்தேகம் வந்து அதை அப்போதைய மன்னனிடம் தெரிவிக்கிறார்கள்.

நடந்த அனைத்தையும் கேட்ட மன்னன் அந்தக் காலத்தவர் யாரேனும் இருக்கிறார்களா என தேடச்சொல்ல, அரங்கனின் ஆடைகளை சலவைசெய்து கோவில் கைங்கர்யம் செய்துவந்த ஒரு 93 வயது வண்ணான், கண்பார்வை இழந்தவராக இருப்பது தெரிகிறது. அவரை அழைத்து விசாரித்ததில், அவர் கூறிய அங்க அடையாளங்கள் ஒத்துப் போகிறது. மேலும் அவர் தன்னால் அபிஷேக (திருமஞ்சன) தீர்த்தத்தை ருசித்து இனம் காணமுடியும் என்று சொல்ல, இரண்டு தெய்வங்களுக்குமான அபிஷேக தீர்த்தம் அவருக்கு அளிக்கப் படுகிறது. மீட்கப்பட்ட அரங்கனின் தீர்த்தத்தை அருந்திய சலவை செய்பவர், ‘ இவரே நம் பெருமாள்!’, இவரே நம் பெருமாள்’ என மகிழ்ச்சியில் கத்த, அவரே அசல் அரங்கன் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின் அதனாலேயே இன்று அவர் பெயரை ‘நம்பெருமாள்’ என்று சொல்கிறோம்.

=0=

நம்பெருமாளுக்கு “பன்னிரு நாச்சியார் பரவும் பெருமாள்..” என்று அரையர் பாடுவதைப் போல் நாயகியர் பன்னிருவர். எனக்குத் தெரிந்தவரை… 

  

renganayaki thaayaar

1. மஹாலஷ்மி:

கோயில் மூலவரின் திருமார்பில் இருக்கும் மஹாலஷ்மி. இவர் அரங்கனுக்கு கழுத்தில் சங்கிலியுடன் கூடிய ஒரு தங்க டாலர் மாதிரி தரிசிப்பவர்களுக்குத் தெரியலாம். ஆனால் உண்மையிலேயே உள்ளே அரங்கனின் திருமார்பில் இருக்கும் மஹாலஷ்மிக்குத் தான் அந்தக் கவசம். இவருக்கு வெள்ளிக் கிழமைகளில் மட்டும் பட்டரால் ஏகாந்த திருமஞ்சனம் செய்யப் படுகிறது. அப்போது கோயில் ஜீயர், பட்டருக்கு சாமரம் வீசுவது இன்றும் நடந்து வருகிறது.

2, 3 உபயநாச்சிமார்- ஸ்ரீதேவி, பூதேவி:

இவர்கள் உற்சவ மூர்த்திகள். தை மாதப் புறப்பாடுகளில் வீதி பெருமாளுடன் வீதி உலாவும் வருவார்கள். ஸ்ரீரங்கத்தில் மட்டுமே உபயநாச்சிமாரிலிருந்து ஆண்டாள் வரை பன்னிரெண்டு தாயாரும் அமர்ந்த திருக்கோலம்.

4. கருவூல நாச்சியார்:

பிரகாரத்தில் கோயில் கருவூலத்தை ஒட்டி இருக்கும் சன்னதி. கருவூலம், நகைகள் பண்ட பாத்திரங்கள்  மற்றும் கணக்கு வழக்குகளைக் காவல் காக்கும் நாயகி. திருக்கார்த்திகை அன்று எங்கள் பக்கத்துவீட்டு உத்தமநம்பி பெரிய சன்னதியிலிருந்து விளக்கு எடுத்துப் போய் இங்கும் ஏற்றுவதைப் பார்த்திருக்கிறேன்.

5. சேரகுலவல்லித் தாயார்:

அர்ச்சுன மண்டபத்தில் (பகல் பத்து உற்சவ மண்டபம்) துலுக்க நாச்சியாருக்கு வலப்பக்கம் இருக்கும் சன்னதி. இவர் குலசேகரத்தாழ்வாரின் பெண். ஸ்ரீராமநவமி அன்று இவருடன் பெருமாளுக்குத் திருமண உற்சவம் நடக்கும்.

6. துலுக்கநாச்சியார்: (ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன், என்றாலும் இங்கும்…)

ஆட்சி பல கைகளுக்கு மாறி முகலாயர்களுக்குப் போனபின், டில்லிப் பேரரசரின் மகள் சுரதாணியிடம் அரங்கன் சிலை இருக்கிறது. அரங்கன்மேல் காதலால் அவள் தன் அறையில் தன்னுடனேயே வைத்திருக்கிறாள்.

அதை மீட்க எண்ணி தலைமை பட்டருடன் ‘பின்சென்ற வல்லி’ என்ற நாட்டியப் பெண்ணும் அவளது இசை நாட்டிய குழுவுமாக ஒரு அறுபது பேர் டில்லி சென்று அரசரை இசையில் மகிழ்வித்து அரங்கனைத் திருப்பித் தரக் கேட்கிறார்கள். தன் மகளிடம் இருப்பவர்தான் அழகிய மணவாளன் என்பதை அறிந்த மன்னர் அனுமதி தருகிறார்.

ஆனால் இளவரசியிடமிருந்து பெறுவது சுலபமாயில்லை. அதனால் இசைக்குழு இளவரசியை, பாடல்கள் பாடி ஏமாற்றித் தூங்கவைத்து, அரங்கனை எடுத்துவந்து விடுகிறார்கள். இளவரசி கண்விழித்து, தன் அறையில் அரங்கனைக் காணாமல், தொலைந்ததறிந்து, பதறி நோய்வாய்ப் படுகிறாள். மன்னன் கவலையுற்று தன் படையுடன் அவளை ஸ்ரீரங்கம் அனுப்பி அரங்கனையும் எடுத்துவரப் பணிக்கிறார்.

தலைமை பட்டரோடு சிலர், தாயார் சிலைக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து வில்வ மரத்தினடியில் தாயாரைப் புதைத்துவிட்டு, அரங்கனோடு தலைமறைவாகி விடுகின்றனர். (பார்க்க, இந்தக் கட்டுரையின் முதல் பத்தி)

ஸ்ரீரங்கம் கோவிலிலும் அரங்கன் இல்லாமல், கோவில் மூடியிருப்பதைக் கண்டு அங்கேயே மயக்கமடைந்து இறந்தும் போகிறாள் இளவரசி. அவள் உடலிலிருந்து ஒரு ஒளி மட்டும் கோவிலுக்குள் செல்வதைச் சுற்றி இருந்தவர்கள் பார்க்கிறார்கள்.

முகமதியருக்கு உருவ வழிபாடு கிடையாதென்பதால் அரங்கன் சன்னதியிலேயே பிரகாரத்தில் கிளிமண்டபத்திற்கெதிராக அவளை ஒரு சித்திரமாக மட்டும் வரைந்து ஒரு சன்னதியில் வைத்து ‘துலுக்க நாச்சியார்’ என்ற பெயரில் வழிபடுகிறார்கள்(கிறோம்.) அதன்பிறகு அவளின் தந்தை ஏராளமான செல்வத்தைக் கோவிலுக்கு எழுதிவைத்தார்.

மதம் கடந்த அந்தக் காதலின் அங்கீகாரமாக இன்றும் அரங்கனுக்கு காலையில் லுங்கி போன்ற வஸ்திரம் அணிவித்து, அவர்கள் உணவாக ரொட்டி வெண்ணை நைவேத்தியம் செய்கிறார்கள். இந்த ரொட்டி நம்முடையது போல் இல்லாமல் லேசாக வெல்லம் கலந்து இனிப்பாக இருக்கும். மிக மிக மெல்லியதாக சுவையானதாக இருக்கும். தொட்டுக் கொள்ள வெண்ணை. திருமஞ்சன காலங்களில் வேட்டிக்குப் பதில் லுங்கி வஸ்திரம். (மற்ற கோயில்களுக்கு இல்லாத இன்னொரு சிறப்பு, அரங்கனுக்கு வெந்நீரில் மட்டுமே திருமஞ்சனம். இதன் சூட்டை மணியக்காரர் கையில் வாங்கி சரியான பதம் என்று ஆமோதித்தபின் தான் செய்ய வேண்டும். இடையில் 4, 5 தடவை கைலி மாற்றி கைலியைக் கட்டுவார்கள். சில குறிப்பிட்ட திருமஞ்சனங்களின் இறுதியில் அரையர் அந்த கைலி வஸ்திரங்களைப் பிழிவார். அந்தத் தீர்த்தத்தை எல்லோருக்கும் கொடுப்பார்கள். ஈரவாடைத் தீர்த்தம் என்று பெயர்.) வெற்றிலைக்கு எப்பொழுதுமே இஸ்லாமியர்கள் போல் வெற்றிலையின் மேல்ப்பக்கம் சுண்ணாம்பு தடவுவார்கள். மார்கழி மாத பகல்பத்து உற்சவம் பத்து நாள்களும் துலுக்க நாச்சியாரைத் தரிசிக்க(அல்லது அவர் இவரை தரிசிக்க?) அந்த சன்னதியின் முன்பான படிவழியாக ஏறித்தான் ‘அருச்சுனன் மண்டபம்’ செல்வார். அரையர், ‘ஏழைகளுக்கிரங்கும் பெருமாள்… ஆபரணங்களுக்கு அழகுசேர்க்கும் பெருமாள்… பன்னிரு நாச்சியார் பரவும் பெருமாள்…’ என்று இழுத்து இழுத்துப் பாட மெதுவாக ஆடி ஆடி அந்தப் படியில் ஏறும் அழகைக் காண கண்கோடி வேண்டும். அரங்கனது நடை ஒவ்வொரு இடத்துக்கும், நேரத்துக்கும் ஒவ்வொரு மாதிரி வித்தியாசமானது. ‘திருப்பதி வடை, காஞ்சி குடை, அரங்கர் நடை’ என்றே ஒரு சொலவடை உண்டு. எல்லாவற்றிலும் துலுக்கநாச்சியார் படியேற்றம் விசேஷமானது. ‘படியேற்ற ஸேவை’ என்றே இதற்குப் பெயர்.

7. செங்கமலவல்லித் தாயார் (தான்யலஷ்மி):

ஆர்யபடாள் வாயில் வழியாக வெளிவந்து, தாயார் சன்னதிக்குச் செல்லும் வழியில் இருக்கும் சன்னதி. இந்தத் தாயார் தான்யங்கள், கோயில் மாடு, யானை, கால்நடைகளுக்குக் காவல் நாயகி. கோயிலின் தான்யக் கிடங்கு இங்குதான் இருக்கிறது.

8. ஸ்ரீரங்க நாச்சியார்:

ஸ்ரீரங்கநாதரின் அதிகாரபூர்வ பட்டமகிஷி. கோயில் வாயில் தாண்டாதவர். பங்குனி உத்திரம் அன்று திருமண உற்சவமும் சேர்த்தி சேவையும். எதிரில் இருக்கும் கம்ப மண்டபத்தில் தான் கம்பராமாயணம் அரங்கேறியது.

9. ஆண்டாள்:

நம்பெருமாள் சம்மதம் சொல்ல பெரியாழ்வார் ஆண்டாளை அழைத்துக் கொண்டு வந்து தங்கியிருந்த இடம் தான் இன்றைய வெளி ஆண்டாள் சன்னதி. அதன் வாயிலே அப்போதெல்லாம் காவிரிக் கரையாக இருந்திருக்கிறது. பின்னர் திருட்டு பயம் காரணமாக உற்சவர் மட்டும் ரெங்கவிலாச மண்டபத்தில் இருக்கும் ராமர் சன்னதிக்கு மாற்றப்பட அது இப்போது உள்ஆண்டாள் சன்னதி என்றழைக்கப்படுகிறது.

10. உறையூர் கமலவல்லி:

அரங்கநாயகி தவிர்த்தும், உறையூரில் கமலவல்லி என்பவரையும் அரங்கன் மணக்கிறார். உறையூர் செங்கமலவல்லி அல்லது வாசவல்லித் தாயார் என்பவர் உறையூரை ஆண்ட சோழனின் மகள். குழந்தையில்லாத நந்த சோழனுக்கு ஒரு தாமரைத் தடாகத்தில் கிடைத்த குழந்தையை எடுத்து ‘கமலவல்லி’ என்று பெயரிட்டு வளர்த்துவந்தான். விளையாடும் போது குதிரையில் சென்ற அரங்கனைக் கண்டு கமலவல்லி காதல்கொள்கிறாள். அவளிடம் காணப்படும் வருந்தத்தக்க(?!) மாற்றங்களை அறிந்த மன்னன், விசாரித்து அறிந்து, பிறகு விமரிசையாகத் திருமணம் செய்து வைக்கிறான். ஆனால் பின்னர் அவள் அரங்கனின் சன்னதியில் கலந்து மறைந்துவிட, மனம் மாறிய மன்னன் தன் செல்வம் அனைத்தையும் கொண்டு அவ்விருவருக்கும் உறையூரில் ஒரு கோவிலைக் கட்டினான்.

ஆனால் அரங்கன் சிலை அங்கு கிடையாது. பங்குனி உத்திரத்திற்கு முன்னால் ஆறாம் திருநாள் ஸ்ரீரங்கத்திலிருந்து அரங்கன் உறையூர் சென்று அங்கு திருமணம் நடக்கும். அங்கு மோதிரத்தைக் கமலவல்லிக்குக் கொடுத்துவிட்டு வந்து, இங்கு தொலைந்துவிட்டதாக ரெங்கநாயகியிடம் பொய்சொல்லி, காவிரிக்கரையில் தீவட்டிகளைக் கொண்டு (அன்று ஒருநாள் மட்டும் தீவட்டிகள்(தீவர்த்திகள்) தலைகீழாக பூமியை நோக்கிக் காண்பித்தவாறு எடுத்துச் செல்லப்படும்.) தேடுவதுபோல் பாசாங்கு செய்வது வருடா வருடம் இன்னமும் நடக்கிறது.  🙂

உறையூரிலிருந்து திரும்பி வரும் வழியில் வெளிஆண்டாள் சன்னதியில் ஆண்டாளுடன் மாலை மாற்றும் வைபவம் மட்டும் நடைபெறும். திருமண உற்சவம் இவருக்குக் கிடையாது.

11. காவிரித் தாயார்:

சொல்லத் தேவையே இல்லை. ஆடிப் பெருக்கு(இது சில வருடங்களில் ஆடி 18ம் தேதியும் சில வருடங்களில் ஆடி 28ம் தேதியும் வரும்.) அன்று அம்மாமண்டபத்தில் எழுந்தருளுவது விசேஷம்.

12. பராங்குச நாயகி (நம்மாழ்வார்):

தன்னை பராங்குச நாயகியாக பாவித்து பெருமாளை நாயகனாகப் பாவித்து,

‘கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்
கண்ணநீர் கைகளால் இறைக்கும்..”
    [ரொம்பத்தான்!..:)]  

என்று தாய்ப் பாசுரமாக அரங்கனைப் பாடிய நம்மாழ்வார்; மார்கழி 7ம் திருநாள் பராங்குச நாயகியாக பெண்வேடத்தில் வரும் நம்மாழ்வாரை கைத்தல சேவையில் ஆட்கொள்ளும் ஆழ்வார் மோட்சம் காரணமாக இவரும் நாயகியாகிறார்.

உலகில் அனைத்து உயிருமே ஜீவாத்மா (நாயகி), இறைவன் மட்டுமே பரமாத்மா (நாயகன்) என்பதன் குறியீடு பராங்குச நாயகி. இதை நம்புபவர்கள் எந்த நிலையிலும் விதவைக் கோலம் பூணத் தேவை இல்லை(மாட்டார்கள்.) இதை நம்புபவர்கள் பெண்களில் வித்தியாசம் காண மாட்டார்கள். பெண்கள் முதலில் இப்படி பேதம் பார்க்காமல் இருக்க ஆரம்பிக்கவேண்டும், முக்கியமாக இது போன்ற பண்டிகை நாள்களில்.

அடுத்த பக்கம் »