கோயில் பிரசாதம்


kooththanoor saraswathy amman

வெள்ளைக் கொத்துக்கடலை

தேவையான பொருள்கள்:

வெள்ளை கொத்துக் கடலை – 1 கிலோ (கருப்பு)
பச்சை மிளகாய் – 8 (அல்லது காய்ந்த மிளகாய்)
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – சிறுதுண்டு (விரும்பினால்)
தேங்காய் – 1 
 

தாளிக்க: எண்ணெய், கடுகு, 1 காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

vellai koththukkadalai sundal

செய்முறை:

 • கொத்துக்கடலையை 15 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். முடிந்தால் இடையில் ஒருமுறை நீரை மாற்றவும்.
 • குக்கரில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நான்கைந்து விசில் வரும்வரை நன்கு வேகவைக்கவும்.
 • கடலைப் பருப்பு, கசகசாவை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
 • ஊறவைத்த கடலைப்பருப்பு, கசகசா, இஞ்சி, தேங்காய், சிறிது மல்லித் தழை, பச்சை மிளகாயுடன் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
 • கொத்துக் கடலையுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்துப் பிசிறிவைக்கவும்.
 • அடுப்பில் வாணலியில் கொஞ்சம் அதிகமாகவே எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
 • பிசிறிவைத்துள்ள கடலைக் கலவையைக் கொட்டி, நன்கு மேலும் 10 நிமிடங்களுக்குக் கிளறி இறக்கவும்.

* இந்தச் சுண்டலையே தண்ணீர் அதிகம் சேர்த்து தளர்வாக பூரி பிரசாதத்திற்கு இங்கே கோயில்களில் தருகிறார்கள். கடலைப் பருப்பு சேர்ப்பதால் கிரேவி சேர்ந்தாற்போலும், மற்ற மசாலாக்கள் அதிகம் சேர்க்காவிட்டாலும் கசகசா சேர்ப்பதால் அதிக மணம், சுவையாகவும் இருக்கிறது. சுண்டல் மிஞ்சினால் நாமும் அப்படிச் செய்யலாம்.

-0-

கருப்புக் கொத்துக்கடலை

தேவையான பொருள்கள்:

கொத்துக் கடலை – 1 கிலோ (கருப்பு)
காய்ந்த மிளகாய் – 7, 8
கடலைப் பருப்பு – 1/4 கப்
எள் – 1 டீஸ்பூன்
மல்லிவிதை – 1/4 கப்
தேங்காய் – 1

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

karuppu koththukkadalai sundal

செய்முறை:

 • கொத்துக்கடலையை 12லிருந்து 15 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். சின்னக் கொத்துக்கடலையாக இருந்தால் 12 மணி நேரத்தில் நிச்சயம் ஊறியிருக்கும். முடிந்தால் இடையில் ஒருமுறை நீரை மாற்றவும்.
 • குக்கரில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நான்கைந்து விசில் வரும்வரை நன்கு வேகவைக்கவும்.
 • கடலைப் பருப்பு, எள்ளை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
 • ஊறவைத்த கடலைப்பருப்பு, எள், மல்லிவிதை, தேங்காய், காய்ந்த மிளகாயுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
 • கொத்துக் கடலையுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்துப் பிசிறிவைக்கவும்.
 • அடுப்பில் வாணலியில் கொஞ்சம் அதிகமாகவே எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
 • பிசிறிவைத்துள்ள கடலைக் கலவையைக் கொட்டி, நன்கு மேலும் 10 நிமிடங்களுக்குக் கிளறி இறக்கவும்.

* சுண்டல் மிஞ்சினால் கூட்டு, குழம்பில்(இந்த வகைக்  கொத்துக்  கடலை  புளிநீரில் சுவை சேர்க்கும்.) சேர்க்கலாம். அதிகம் மிஞ்சினால், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து ஆனால் உலர் கறியாக, சப்பாத்தி வகைகளுக்கு பக்க உணவாக உபயோகிக்கலாம்..

-0-

* கொத்துக்கடலை பட்டாணிக்கு குக்கரில் வேகவைக்கும் வரை உப்பு சேர்த்துவிடக் கூடாது. தோல் தனியாக கழண்டுவிடும்.

* சிலர் சீக்கிரம் வேக, கொத்துக்கடலையுடன் சமையல் சோடா சேர்ப்பார்கள். உண்மையில் நன்றாக ஊறவைத்தாலே, நன்றாக வெந்துவிடும். சமையல் சோடா சேர்க்கவே தேவை இல்லை. நான் சேர்ப்பதில்லை. ஆனால் அப்படிச் சேர்ப்பவர்கள், ஊறவைக்கும்போதே சோடா உப்பைச் சேர்த்து, நீரை வடித்துவிட்டு வேக வைக்கலாம். இதனால் சீக்கிரம் வேகும்; சத்தும் வீணாகாது.

*  நவராத்திரி பிரசாதமாக இல்லாமல் சாட் உணவாகச் செய்யும் நாள்களில் இவற்றில் கொஞ்சம் மிளகாயைக் குறைத்துக் கொண்டு சன்னா மசாலா சேர்க்கலாம். 

* மேலே உள்ள இரு முறைகளிலும் பட்டாணிச் சுண்டலும் செய்யலாம்.

நவராத்திரி: ஆடலுடன் பாடலைக் கேட்டு… – சின்னக் கண்ணன்.

சுண்டல் புராணம் – என்.சுவாமிநாதன்

தேவையான பொருள்கள்:

மொச்சைப் பயறு – 1 கிலோ
தேங்காய் – 1 மூடி
உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைக்க:
மல்லி விதை – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 15
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க: எண்ணெய், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை.

mochchai payaru sundal

செய்முறை:

 • மொச்சைப் பயறை சுமார் எட்டிலிருந்து பன்னிரண்டு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
 • மீண்டும் கழுவி, குக்கரில் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிட்டு, நீரை வடிக்கவும்.
 • அடுப்பில் வாணலியில் சிறிதளவு எண்ணெயில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், மல்லி விதையை வறுத்து நைசாகப் பொடிக்கவும்.
 • வாணலியில் எண்ணையில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, துருவிய தேங்காயைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
 • வேகவைத்த பயறு, தேவையான அளவு உப்பு, அரைத்த பொடி சேர்த்து மேலும் 5 நிமிடங்களுக்கு கிளறி இறக்கி உபயோகிக்கவும்.

பெண்களே! கீழே இருக்கும் ஆணிய (அழுகைக்) கட்டுரைத் தொடரை அவசியம் படியுங்கள். நவராத்திரியைக் கொண்டாடுங்கள்!!

 நவராத்திரி சிறப்பு நகைச்சுவைக் கட்டுரை: அவ(¡)ளோட ராவுகள்
பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்.

vinaayagar chathurthi_2006

தேவையான பொருள்கள்:

சொப்பு செய்ய:
பச்சரிசி – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
உப்பு – 1 சிட்டிகை
நல்லெண்ணெய்
 
பூரணம் செய்ய:
தேங்காய்த் துருவல் – 1 கப்
வெல்லம் – 1 கப்
ஏலப்பொடி

செய்முறை:

சொப்பு:

inippu kozhukkattai_1 (vinaayagar chathurthi)

 • முதலில் பச்சரிசியை நன்கு கழுவி, 2 1/2 கப் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
 • அதே தண்ணீரையே விட்டு அரிசியை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். நனைத்து வைத்த தண்ணீர் மீதமிருந்தால் அதையும் மாவுக் கரைசலிலேயே நீர்க்கக் கலந்து கொள்ளவும். (சொல்ல வருவது, மொத்தம் 1 கப் அரிசிக்கு 2 1/2 கப் தண்ணீர் சேர்ந்திருக்கவேண்டும்)
 • வாணலியில் மாவுக் கரைசலை விட்டு, இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய், சிட்டிகை உப்பு சேர்த்து நிதானமான தீயில் அடிப்பிடிக்காமல் கிளறவும்.
 • மாவு சேர்ந்து இறுகிவரும் வரை விடாமல் கிளறி (இப்போது பாதி வெந்து நிறம் மாறி இருக்கும்.) இறக்கி, ஒரு துணியில் சுற்றியோ அல்லது பாத்திரத்தில் மூடியோ ஆற வைக்கவும். மாவை திறந்துவைத்து காயவிடக் கூடாது.

பூரணம்:

inippu kozhukkattai_2 (vinaayagar chathurthi)

 • வெல்லத்தை கால் கப் தண்ணீருடன் அடுப்பில் வைத்து, நல்ல கம்பிப் பாகாக வைத்துக் கொள்ளவும்.
 • தேங்காய், ஏலப்பொடி சேர்த்து நன்கு சேர்ந்தாற்போல் வரும்வரை கிளறி இறக்கவும்.

கொழுக்கட்டை:

inippu kozhukkattai_3 (vinaayagar chathurthi)

 • ஆறிய அரிசி மாவை நன்றாகப் பிசைந்து, பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
 • நல்லெண்ணெய் தொட்டுக் கொண்டு கையில் மாவை வட்டமாகத் தட்டி, நடுவில் குழித்து, தேங்காய் பூரணத்தை ஒரு டீஸ்பூன் உள்ளே வைத்து நாலுபக்கமும் சேர்த்து மூடவும். மேலே கிரீடம் போல் இழுத்துவிடவும். அதிக அரிசிமாவு உச்சியில் இருந்தால் அதை எடுத்து விடலாம்.
 • எல்லாப் பக்கமும் ஒரே மாதிரி நன்றாக மூடியிருக்கவேண்டியது முக்கியம்.
 • செய்துவைத்த கொழுக்கட்டைகளை எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் வைத்து, குக்கரில் (இட்லி மாதிரி வெயிட் போடாமல்) பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.

inippu kozhukkattai_4 (vinaayagar chathurthi)

* அரிசிமாவை நான்ஸ்டிக்கில் வைத்துக் கிளறினால் சுலபமாக இருக்கும். மாவு நன்றாக சேர்ந்து வந்தபின்பும் மேலும் 2, 3 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருந்தால்(இது சாதா வாணலியில் அடிப்பிடிக்கும்; கருகும்.) மாவு நன்றாக, பந்து மாதிரி வந்துவிடும். இந்த முறையில் மாவுக்கு கொஞ்சம் இழுவைத் தன்மையும் வந்துவிடும். அதனால் கொழுக்கட்டை செய்யும் போது பிளக்காது. பிளந்தாலும் அந்த இடத்தில் இன்னும் சிறிது மாவு வைத்தாலும் சுலபமாகச் சேர்ந்து கொள்ளும்.

* சிலர் ஊறவைத்து உலர்த்திய அரிசியை மிஷினிலோ மிக்ஸியிலோ வறட்டு மாவாக அரைத்துவைத்துக் கொண்டு, 2 பங்கு தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் மாவைக் கொட்டிக் கிளறுவார்கள். ஆனால் அதில் இருக்கும் கட்டிதட்டிவிடக் கூடிய சாத்தியங்கள் மேற்சொன்ன முறையில் அறவே இல்லை.

* மிஷின் இல்லாமல், மிக்ஸியிலும் சரியாக அரைக்க முடியாதவர்கள், சல்லடையை ம்யூசியத்தில் தேடுபவர்கள், அதைவிட முக்கியமாக மேல்மாவு சரியாக கொழுக்கட்டை செய்ய வரவேண்டுமே என்று கவலைப்படுபவர்களுக்கெல்லாம் மேலே சொன்னதே ஆகச் சுலபமான முறை. தைரியமாகச் செய்து பார்க்கவும்.

* சிலர் பூரணத்திற்கு வெல்லம் குறைவாகச் சேர்ப்பார்கள். ஆனால் வெளியே இருக்கும் மேல்மாவு சப்பையாக இருப்பதால் பூரணம் நிறைந்த இனிப்புடன் இருப்பதே சாப்பிடும்போது சரியாக இருக்கும்.

* மேலே சொன்ன அளவில் சுமார் 50 கொழுக்கட்டைகள் வந்தன.

* பூரணத்தில் ஏலப்பொடி தவிர நம் விருப்பம் போல் முந்திரி, அரைத்த கடலைப்பருப்பு, கிஸ்மிஸ் என்றெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம். சனிதசைக்காக விநாயகருக்கு கொழுக்கட்டை செய்பவர்கள், இரண்டு டீஸ்பூன் எள் வறுத்தும் சேர்ப்பார்கள்.

* தேங்காய்ப் பூரணத்திற்குப் பதில் வறுத்த அரைத்த எள் ஒரு கப், வெல்லம் அரையிலிருந்து முக்கால் கப் சேர்த்து எள் கொழுக்கட்டையும் செய்யலாம்.

* தயாரித்த பூரணம் தீர்ந்து, சொப்பு மாவு மிஞ்சினால் அதில் மணிக் கொழுக்கட்டை செய்யலாம். பூரணம் மிஞ்சினால், சின்ன உருண்டைகளாக்கி, கரைத்த உளுத்த மாவில் தோய்த்து சுகியன் மாதிரி எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.

* அரிசி மாவினால் தான் கொழுக்கட்டைக்கு சொப்பு செய்யவேண்டும் என்பதில்லை. மைதா மாவையும் தண்ணீரில் கரைத்து வேகவைத்துச் செய்யலாம். இன்னும் நன்றாக வரும்.

உப்புக் கொழுக்கட்டை

தேவையான பொருள்கள்:

முழு உளுந்து – 2 கப்
சீரகம் –  2 டீஸ்பூன்
மிளகு – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்.

செய்முறை:

 • மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
 • உளுந்தைக் நீரில் கழுவி, 15 அல்லது 20 நிமிடங்கள் மட்டும் ஊறவைக்கவும்.
 • தண்ணீர் சேர்க்காமல், சாதாரணமாக வடைக்கு அரைப்பதை விடவே அதிக நைசாக அரைத்துக் கொள்ளவும்.
 • அதில் உடைத்த மிளகு, சீரகம், உப்பு சேர்த்துப் பிசையவும்..
 • வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, எண்ணை தடவிய இலை அல்லது ப்ளாஸ்டிக் பேப்பரில் தட்டையாகத் தட்டி, நடுவில் துளை இட்டு, காய்ந்துகொண்டிருக்கும் எண்ணெயில் நன்கு பொரித்தெடுக்கவும்.

* அரைத்து அதிக நேரம் வைத்திருந்தால் நிறம் மாறிவிடும். உடனே செய்துவிட வேண்டும்.

* சாப்பிட தட்டை மாதிரி கடினமாக இருக்கும். பலநாள்களுக்குக் கெடாது.

* துளை வழியாக நூலில் மாலையாகக் கட்டி அனுமாருக்குச் சாற்றலாம்.
 

தேவையான பொருள்கள்:

உளுத்தம் பருப்பு – 1 கப்
இஞ்சி – சிறு துண்டு
மிளகு – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை

செய்முறை:

 • உளுத்தம் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, மிளகு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
 • வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் சின்ன வடைகளாகத் தட்டி, நடுவில் துளையிட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
மிளகு – 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்

செய்முறை:

 • அரிசியை மிக்ஸியில் அரைத்து மாவாக்கி, வறுத்துக் கொள்ளவும்.
 • மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
 • கடலைப் பருப்பை ஊறவைத்து மிக்ஸியில் ரிவர்ஸில் லேசாக உடைத்துக் கொள்ளவும்.
 • அரிசி மாவில் உப்புடன் நல்ல சூடான வெந்நீரை சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகப் பிசையவும்.
 • ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, சீரகம், கடலைப் பருப்பு, விரும்பினால் சிறிது கேசரிப் பவுடர் சேர்த்துப் பிசையவும்.
 • எண்ணை தடவிய வாழையிலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் மெல்லிய வட்டங்களாகத் தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

தேவையான பொருள்கள்:

தோல் உளுத்தம் பருப்பு – 1 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
அரிசி – 2 டீஸ்பூன்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்

செய்முறை:

 • கருப்புத் தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பை அரை மணிக்கு மேல் நீரில் ஊறவைக்காமல் நீரை வடித்துவிடவும்.
 • அரிசி, மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து கிரைண்டரில் மட்டுமே கெட்டியாக, கையால் தள்ளிவிட்டுக் கொண்டே தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
 • ஒரு எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் பேப்பரில் மெல்லிய வடைகளாகத் தட்டிக் கொள்ளவும்.
 • வாணலியில் எண்ணை வைத்து, காய்ந்ததும், வடை நடுவில் துளை போட்டு பேப்பரிலிருந்து எடுத்து எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும்.

* இது சில நாள்களுக்குக் கூட கெடாது. அநேகமான கோயில்களில் இப்படியே செய்வார்கள்.

* உளுத்தம் பருப்பு மட்டுமே எடுத்து மேலே சொன்ன மாதிரி மெல்லிய வடைகளாகத் தட்டினால், மேலும் அதிக நாள்களுக்கு வரும்.

பத்மாவிற்காக….

காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலின் பிரசித்தி பெற்ற பிரசாதம்.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 3 கப்
உளுத்தம் பருப்பு – 2 கப்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
சுக்கு – 1 டீஸ்பூன்
தயிர் – 1 கப்
நெய் – 1/2 கப்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 • அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் இவற்றை நீரில் இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஊறவைத்து, கிரைண்டரில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
 • மிளகு, சீரகம், சுக்கு இவற்றை பொடியாக்காமல் ஒன்றிரண்டாகப் பொடித்துச் சேர்க்கவும்.
 • தேவையான உப்பு, பெருங்காயம், நெய், தயிர் இவைகளையும் மாவில் சேர்த்து நன்கு கலக்கி குறைந்தது 12 மணிநேரம் வைத்திருக்கவும்.
 • குக்கரில் தட்டையான குக்கர் உள்பாத்திர அடுக்குகளில் அல்லது விதவிதமான கிண்ணம், டம்ளர் போன்ற பாத்திரங்களில் நெய் தடவி மாவை அரை அளவு மட்டும் விட்டுக் கொள்ளவும்.
 • குக்கருக்கு வெயிட் போடாமல் இட்லி வேகவைப்பது போல் ஆனால் 45 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும். (ஒரு கத்தியை அடிவரை விட்டு வெந்திருக்கிறதா என்று பார்த்துவிட்டு எடுக்கலாம்.)

* மிளகு, சீரகம், சுக்கை அதிகம் பொடித்துவிட்டால் மருந்து வாசனை வரலாம். கரகரப்பாகப் பொடிப்பதே சரி.

* விரும்பினால் முந்திரிப்பருப்பு, தேங்காயை சிறுசிறு துண்டுகளாக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

* நாம் செய்யும்போது நெய்க்குப் பதில் நல்லெண்ணையும் சேர்த்துக் கொள்ளலாம்.

* பூக்கள் சேகரிக்க அந்தக் காலத்தில் உபயோகிக்கும் குடலைகளில் தான் இதைக் கோயிலில் செய்வார்கள். அதனால் குடலை இட்லி என்றும் பெயர். குடலையில் சன்னமான இடுக்கு வழியாக மாவு வெளிவராமல் இருக்க உள்ளே சின்னச் சின்ன வாழையிலைகளைத் போட்டு, நெய் தடவி, அதில் மாவை அரை அளவு விட வேண்டும். கூன் மாதிரியான மண் பாண்டத்தில் பாதி வரை நீர் வைத்து அதில் குடலையை (குடலை தண்ணீரை இடிக்காத உயரத்தில் இருக்க வேண்டும்.) உள்ளே விட்டு கூனின் மேல்மட்ட வாயில் பொருத்த வேண்டும். பானையை மூடிவைத்து, அடுப்பில், குறைவான சூட்டில் வேகவைக்க வேண்டும். சுமார் இரண்டு மணி நேரம் ஆகலாம்.

(பிரசாதம் வெளியே ஸ்டால்களில் கிடைப்பதில்லை என்றே நினைக்கிறேன். காலை வேளைகளில் மட்டும் சொல்லிவைத்திருந்தால் கிடைக்கலாம். அடுத்த முறை செல்லும்போது, கிடைத்தால் படம் போடுகிறேன்.) எங்கள் வீட்டில் குக்கர் காலத்திற்குமுன் இந்தக் குடலையில் செய்திருக்கிறார்கள். மேல்பாகம் வாழை இலையின் அச்செல்லாம் விழுந்து, பார்க்கவே வித்யாசமாக ஆனால் சுவையாக இருக்கும். மெனக்கெடல் கொஞ்சம் அதிகம் என்று தோன்றும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

அப்படியே அல்லது இட்லி மிளகாய்ப் பொடி.

காஞ்சிபுரத்திற்கு அருகே ‘கூரம்‘ என்ற ஊரில் மிகப் பெரிய செல்வந்தராக இருந்தவர் ஸ்ரீவத்சாங்கர். (இவர் தான் பிற்காலத்தில் கூரத்தாழ்வார் என்ற பெயரில் இராமானுஜரின் பிரதம சிஷ்யரானவர்.) காலை சூரிய உதயம் முதல் மாலை வரை ஒரு பெரிய வெள்ளி அண்டாவில் வெள்ளி நாணயங்களை வைத்துக் கொண்டு தானம் செய்து வருபவர்.

ஒருநாள் அவர் தானம் முடித்து வீட்டின் கதவை சாத்தும் ஒலி காஞ்சிபுரத்திலிருக்கும் வரதராஜர் சன்னதி வரை கேட்க, பெருந்தேவித் தாயார், வரதராஜரிடம், “நம் சன்னதி இன்று அதற்குள் நடை சாத்திவிட்டார்களா?” என்று வினவுகிறார். வரதராஜரும் புரியாமல் குழம்ப, அப்போது கோயிலில் சால் கைங்கர்யம் செய்துவரும் திருக்கச்சி நம்பி, அவர்களிடம்,, ‘இது நமது கோயில் கதவின் சத்தம் அல்ல. கூரத்தில் ஸ்ரீவத்சாங்கர் தானம் கொடுத்து முடித்து, திருமாளிகை கதவடைக்கும் ஒலி” என்று சொல்கிறார்.

இந்தச் செய்தி அறிந்த ஸ்ரீவத்சாங்கர், காஞ்சி வரதரின் கோயில் கதவின் சத்தத்தையே மிஞ்சுவதாக தன் மாளிகைக் கதவின் வலிமையும் சத்தமும் இருந்ததற்காக மனம் கலங்குகிறார். தன் அத்தனை சொத்தையும் காஞ்சிக் கோயிலுக்கு எழுதிவைத்து விட்டு வீசிய கையோடு மனைவியை அழைத்துக் கொண்டு திருவரங்கத்திற்கு இராமானுஜருக்குக் கைங்கர்யம் செய்யக் கிளம்புகிறார்.

இருவரும் திருவரங்கம் வரும் வழியில் அடர்ந்த கானகம் வழியாக வருகிறார்கள். அப்போது அவர் மனைவி ஆண்டாளம்மா, “வழியில் ஏதும் பயமா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்கிறார். ஸ்ரீவத்சாங்கர், ‘மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம்? மடியில் ஏதாவது வைத்திருக்கிறாயா?’ என்று திருப்பிக் கேட்கிறார். ‘எதுவும் இல்லை. நீங்கள் அமுது செய்ய மட்டும் ஒரு தங்க வட்டில் கொண்டுவந்திருக்கிறேன்!’ என்று சொல்ல அதை வாங்கித் தூர எறிகிறார். இருவரும் தொடர்ந்து திருவரங்கத்தை அடைந்து ஒரு வீட்டில் தங்குகிறார்கள். (அதுவே தற்பொழுது கீழச் சித்திரை வீதியில் தேருக்கு எதிராக முதலியாண்டான் திருமாளிகை அருகே இருக்கும் கூரத்தாழ்வார் திருமாளிகை).

இரண்டு மூன்று நாள்கள் பட்டினியிலேயே கழிக்கிறார்கள். மூன்றாம் நாள் இரவு கோயிலிலிருந்து அரங்கன் இரவு அரவணை அமுதுசெய்வதற்கான மணிச்சத்தம் கேட்கிறது. ஆண்டாளம்மா, அரங்கனிடம் ‘நீ இந்நேரம் அரவணை அமுது செய்துகொண்டிருப்பாய். என் கணவர் பட்டினியாக இருக்கிறாரே!’ என்று மனதிற்குள் விசனப்படுகிறார். சிறிது நேரத்தில் அரங்கன் அனுப்பியதாகச் சொல்லி பரிசாரகர் ஒருவர் கோயில் பிரசாதமான அரவணையை எடுத்துவந்து ஆழ்வாரிடம் தருகிறார். ‘நீ ஏதும் மனதில் நினைத்தாயா?’ என்று அவர் மனைவியைக் கண்களாலேயே கேட்க, பயத்தில் ‘ஆம்’ என்ற பதில் மனைவியிடமிருந்து கிடைக்கிறது.

அரவணையில் மனைவியிடம் இரண்டு கவளம் கொடுத்துவிட்டு, பிரசாதம் என்பதற்காக தான் ஒரு கவளம் மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை பரிசாரகரிடமே திரும்பக் கொடுத்தனுப்புகிறார். அந்தப் பிரசாதத்தின் பயனாகப் பிறந்த குழந்தைகள் தான் வேதவியாசர் மற்றும் பராசர பட்டர்.

-0-

வேதவியாச பட்டர் மற்றும் பராசர பட்டர் சந்ததியினர் தான் இன்றும் திருவரங்கத்தில் (பட்டரய்யங்கார் என்று சொல்வார்கள். எங்களுக்கெல்லாம் அவர் ‘பத்ரி அப்பா’ தான் :)][கைசிக ஏகாதசி அன்று இரவு அரங்கனுக்கு ‘போர்வை சார்த்தும் வைபவம்’ முடிந்தபின் கைசிக புராணம் படிப்பார்கள். இவரை மறுநாள் ‘பிரும்ம ரதம்’ என்று சொல்லப்படும் பல்லக்கில் சர்வ மரியாதையுடன் உத்தர வீதி வலமாக இவர்கள் வீட்டிற்கு அழைத்துவருவார்கள். [பல்லக்கில் இவர் எப்படி கண்ணை மூடிக்கொண்டு சிரிக்காமல் இருக்கிறார் என்பது என் குழந்தைக் கால ஆச்சரியம். இப்போதும் தான். நானாக இருந்தால் கண்ணை லேசாகத் திறந்து இடுக்கு வழியாக என்னை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்று பார்ப்பேன் என்று சொல்லி வீட்டில் திட்டு வாங்குவேன். :))]

வேதவியாச பட்டர் சந்ததியினர் தான் இன்றும் திருவரங்கத்தில் தினமும் காலையில் விசுவரூபம் முடிந்து ‘பஞ்சாங்கம்‘ படிக்கிறார்கள்.

-0-

மார்கழித் திருநாளில் பெருமாள் முன் எல்லா ஆழ்வார்களும் ஏளியிருக்க,

‘சக்கரத்தாழ்வர் ஏன் வரலை பாட்டி? அவர் ஆழ்வார் இல்லையா?’

“இல்லை. பாசுரம் பாடினவா மட்டும் தான்..’

“அப்ப கூரத்தாழ்வார் மட்டும் என்ன பாடியிருக்கார்?”

“நாலாயிரத்துல ஒன்னும் இல்லை”

“பின்ன ஏன் இங்க சேர்க்கணும்?”

“அப்புறம் சொல்றேன்”

“இப்பவே சொல்லு பாட்டி!”

“அதெல்லாம் சம்ஸ்கிருதத்துல வேணது பாடியிருக்கார்!” சொல்லிட்டா மட்டும்… என்ற அலட்சியம் அந்தப் பதிலில் இருக்கும்.

“ஆனா ஆண்டாள் பாடியிருக்காளே, அவங்க ஏன் வரலை”

“அதெல்லாம் சொன்னா உனக்குப் புரியாது” (பொம்மனாட்டிகளை பொதுவுல உக்கார வைக்க மாட்டாங்கன்னு சொன்னா அப்ப நீ, நானெல்லாம் பொம்மனாட்டி இல்லையான்னு கேட்பேன்னு தெரியுமே.. :)]

“புரியும் சொல்லு!”

“அதிகப் பிரசங்கி. உன்னை வீட்டுலயே விட்டுட்டு வந்திருக்கணும். நேரம் காலம் இல்லாம படுத்தறது. இனிமே எங்கயும் நீ கிடையாது. வீட்டுலயே விட்டுட்டு வரேன்!”

“சரி வேண்டாம், ஆனா இப்ப பதில் சொல்லு!”

கூட்டத்தில் கால்களைத் தரையில் அழுந்த ஊன்றிக் கொண்டு நகர மறுத்த என்னை போலிஸ்காரர் தூக்கிக் கொண்டு போய் ஆரியபடாள் வாசலுக்கு அந்தப் பக்கம் போட்டார்.

குழந்தை என்னாயிற்று என்று கிஞ்சித்தும் கவலைப்படாமல் பாட்டி சாவகாசமாக அரையர் சேவை முடித்து, கருடன் சன்னதி வாசலில் மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்த என்னை பொறுக்கிக் கொண்டு வீட்டுக்குப் போனார்.

[இப்போதெல்லாம் சாதாரண நாள்களிலேயே கோயில் ஏன் இவ்வளவு ஆரவாரமாக இருக்கிறது? அந்த நாளும் வந்திடாதா?? :(((( ]

கூரத்தாழ்வார் சம்ஸ்கிருதத்தில் ‘பஞ்ச ஸ்தவம்’ முதல் பல ஸ்லோகங்கள் இயற்றியவர்; இராமானுஜரின் பிரதம சீடர். அவருக்காக சோழமன்னரிடம் கண்களையே இழந்தவர் போன்ற விபரங்கள் பின்னாளில் அறிந்துகொண்டது.

-0-

அரவணை – அரவு + அணை – பாம்பணை

ஸ்ரீரங்கம் கோயிலில் மட்டுமே அரங்கனுக்கும் அவனது அணையான ஆதிசேஷனுக்கும் அமுதுசெய்யப் படும் பிரத்யேக உணவு.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
வெல்லம் – 1 1/2 கப்
நெய் – 1 1/4 கப்
ஏலப்பொடி
பச்சைக் கற்பூரம்.

aravanai

செய்முறை:

 • முதலில் அரிசியை நன்கு உதிர வேகவைத்துக் கொள்ளவும்.
 • வெல்லத்தை தண்ணீரில் கரையாத, மிகவும் கெட்டியான(உருட்டும்) பாகாகக் காய்ச்சிக் கொள்ளவும்.
 • சாதத்தைப் பாகில் சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.
 • கிளறிக் கொண்டிருக்கும்போதே நெய்யை சிறிது சிறிதாகச் சேர்த்து முடித்துவிட வேண்டும். (கோயிலில் அரவணை மண்பாண்டத்தில் செய்வதால் நெய்யை கிறுகிறுவென்று இழுக்குமாம்.)
 • நன்கு கிளறி ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்து இறக்கவும்.

* இரவு ஒன்பது மணிக்கு இந்த அரவணையோடு, நாட்டுச் சர்க்கரை, குங்குமப்பூ கலந்து சுண்டக் காய்ச்சிய பாலும் அமுதுசெய்தபின் கோயில் நடை சாத்தப்படும்.

* அரங்கன் கோயில் பிரசாதத்தில் சர்க்கரை, முந்திரிப் பருப்பு, மிளகாய் வற்றல், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு போன்றவை சேர்க்கப் படுவதில்லை. நெய் தவிர வேறு எண்ணை வகைகள் எதுவும் அரங்கனுக்கு எதற்குமே சேர்ப்பதில்லை. பிரசாதங்கள் என்றில்லை, அவருக்குக் காட்டுகிற தீபம், உலா வரும் போது காட்டுகிற தீவட்டி(தீவர்த்தி) வரை டின் டின்னாக நெய் மட்டுமே உபயோகிக்கப் படும்.

* படத்தில் இருக்கும் அரவணை என் விருப்பத்தின் பொருட்டு சென்ற வாரம் எங்கள் வீட்டு விசேஷத்திற்காக மண்டபத்தில் பரிசாரகர் ஒருவர் தயாரிப்பது. சுவையாக இருந்தாலும் அந்த ‘அரங்கன் டச்’ மிஸ்ஸிங் என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். அரங்கன் பிரசாதங்களுக்கு மட்டும் இருக்கும் அந்த வாசனை மற்றும் ருசிக்கான காரணத்தை யாராவது ரூம்போட்டுத் தான் யோசிக்க வேண்டும். யாராவது எங்காவது ஸ்டாலில் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, அந்த மாதிரி இல்லையே என்றால் அவர்களுக்கு இரக்கப்பட்டுச் சொல்ல ஒன்றுதான் இருக்கிறது – “போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!!” 🙂

* காலையில் பொங்கல், ரொட்டி, வெண்ணண. மதியம் ‘பெரிய வஸ்திரம்’ என்ற பெயரில் சாதம், பருப்பு, கறியமுது அல்லது நெகிழ்கறியமுது, குழம்பு, சாற்றமுது, திருக்கண்ணலமுது. மாலை ஷீரான்னம்(உப்பு, வெல்லம் இரண்டுமே கலந்தது), கருப்பு உளுந்தில் செய்த திருமால் வடை, தேன்குழல், புட்டு, அதிரஸம். இரவு அரவணையோடு பால்.

வெள்ளிக்கிழமை மட்டுமே மிளகு சேர்த்த புளியோதரை, தோசை செய்வார்கள். அதற்கு ‘புளுகாப்புப் புளியோதரை’, ‘புளுகாப்பு தோசை’ என்று பெயர்.

ஏகாதசி, அமாவாசை ரேவதி நட்சத்திரம் ஆகிய நாள்களில் புறப்பாடு, திருமஞ்சனம் மற்றும் மேற்சொன்னவையோடு தோசையும் அரிசி வடையும் ஸ்பெஷல்.

ஆனால் இவை இல்லாமல் ஸ்டால்களில் எல்லா நாளும் அநேகமாக விதவிதமாக எல்லா உணவுப் பண்டங்களும் கிடைக்கும். எனவே ஸ்டாலில் வாங்குபவை எல்லாம் அரங்கன் பிரசாதம் அல்ல என்று மட்டும் அறியவும். இது தகவலுக்கு மட்டுமே. (பக்கத்தில் இருக்கும் ஸ்ரீபண்டாரத்தில் அவ்வப்போது சில பிரசாதங்கள் கிடைக்கும். அவற்றை நம்பி வாங்கலாம்.)

srirangam koil paal

 

* அரங்கன் “வெள்ளி பூணார்; வெண்கலம் ஆளார்”. அதாவது தங்கம் தவிர வெள்ளியாலான நகைகளை எல்லாம் அணிய மாட்டார். பித்தளை, வெண்கலம் போன்ற பாத்திரங்கள் தளிகைக்கு உபயோகிக்க மாட்டார்கள். ‘ஸ்வர்ண பாத்திரம்’ என்று சொல்லப்படும் மண்பானைகளையே (அன்றாடம் புதிய புதிய பானைகள்) தளிகைக்கு உபயோகிப்பார்கள். மண் பானையில் செய்வதால் அக்கார அடிசில் முதல் பல பிரசாதங்கள் லேசாக அடிப்பிடித்த வாசனை வரும். முக்கியமாக இந்தக் காய்ச்சிய பால். மேலே படத்தில் இருக்கும் அரங்கன் பால் பிரத்யேகமாக அன்றைய பட்டர், மணியக்காரர் போன்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். எனக்கு பட்டர் வீட்டிலிருந்து வந்தது.

ஸ்ரீரங்கத்திற்கு அடுத்ததாக மனதில் மிக அதிகமாகப் பதிந்த கோயில் மதுரை கள்ளழகர் கோயில். காரணம், அங்கே இருக்கும் பதினெட்டாம் படியான் மற்றும் கள்ளழகர் (சுந்தரராஜப் பெருமாள்) எங்கள் குலதெய்வம். சின்ன வயதில் காளி பட ஷூட்டிங்கிற்காக வந்திருந்த ரஜினியை மிக அருகில், கூட்டமே இல்லாமல்- மொத்தமே பக்கத்தில் 5,6 பேர் மட்டும் தான் இருந்தார்கள்- பார்த்தது அந்த வயதிற்கான த்ரில். எப்பொழுதும் குரங்குகள் த்ரில். பிரகாரத்தை வலம் வரும்போது, இடதுபக்க ஓரமாக இருக்கும் ஷேத்ர பாலர் சன்னதி முன்பு வரும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் (அம்மா வழிப்) பாட்டி தன் மாமனாரை நினைவு கூறுவார். “அப்பல்லாம் தோசைப் பொடி முடிஞ்சு நடை சாத்தினதும் கங்காணித் தாத்தா(கண்காணிப்பு?) கோயிலைப் பூட்டி சாவியை உள்ள நீட்டுவார். ஷேத்ர பாலர் கை நீட்டி வாங்கி வெச்சுப்பார்” என்று சொல்வார். நம்பியும் நம்ப முடியாமலும் ஆனால் ஒவ்வொரு முறையும் சளைக்காமல் கேட்டுக் கொள்வோம். இப்போது தொடர்ந்து நானும் அடுத்த தலைமுறைக்கு அங்கே அதைச் சொல்லி வருகிறேன், மற்றவர்கள் எல்லாம், “ஆமா, பெரிய நாட்டாமை வாரிசு! பரம்பரைக் கதையை எடுத்து விடறா!!” என்று கிண்டல் செய்வதைப் பொருட்படுத்தாமல். அடிக்கடி பெரிய வேன் வைத்துக் கொண்டு கூட்டமாகப் போவது, குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பது, வெள்ளரி மாங்காய் பத்தைகள் என்று ஏகப்பட்ட சில்லுண்டி ஐட்டங்களை உள்ளே தள்ளிக்கொண்டே மேலே முருகனை தரிசிக்க நடந்தே மலையேறுவது என்று எப்பொழுதுமே அழகர் கோயில் பற்றி இனிமையான நினைவுகள் மட்டுமே…..

kallazagar

“அழகர் மணம் கொடார், அரங்கர் இடம் கொடார்” என்று எங்கள் ஊரில் ஒரு சொலவடை உண்டு. எவ்வளவுக்கெவ்வளவு அரங்கனின் பிரசாதங்கள் தொலை தூரத்திலேயே வாசனையால் இழுக்குமோ அதற்கு நேர் மாறாக அழகருக்குச் சாற்றிய பூவும், நைவேத்தியம் செய்த பிரசாதமும் ஏனோ மணத்தை இழந்துவிடும். 😦 ஆனால் பிரசாதங்கள் மிகுந்த சுவையாக இருக்கும். அன்றும் இன்றும் என்றும் ஒரு எதிர்ப்பார்ப்போடு போவது பிரசாதத்திற்காக மட்டுமே. 🙂 

தேவையான பொருள்கள்:

பச்சரிசி –  3 கப்
கருப்பு உளுத்தம்பருப்பு – 2 கப் (தோலுடன்)
மிளகு – 2 டீஸ்பூன்  
சுக்குப் பொடி –  1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை –  சிறிதளவு
நெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

 • அரிசியை ஊறவைத்து நீரை வடித்து வறட்டு மாவாக, மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். (கோயிலில் இதை உரலில் போட்டு இடிப்பதற்காக ஆட்களை நியமித்திருப்பார்கள்.)
 • உளுந்தை இரண்டு மூன்று முறை களைந்து கொள்ளவும். பாதி அளவு தோலை மட்டும் நீக்கிவிட்டு, மீதியை அதிலேயே சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
 • தேவையான உப்பு, அரிசி மாவோடு கலந்து 6 மணி நேரம் அப்படியே வைக்கவும். (கோயிலில் காலையில் அரைத்து இரவில் செய்வார்கள்.) இந்தக் கலவை, தோசை மாவு மாதிரி இல்லாமல் வடை மாவு பதத்தில் கெட்டியாக இருக்க வேண்டும்.
 • மறுநாள் மாவில் சுக்குப் பொடி, ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
 • அடுப்பில் தோசைக்கல் சூடானதும், மாவை சற்று கனமான தோசைகளாக (இரண்டு அங்குல உயரம்) வார்த்து, சுற்றிலும் நெய் விட்டு அடுப்பை சிம்’மில் வைக்கவும்.
 • நன்கு சிவந்து மொறுமொறுப்பாக ஆனதும், மறுபக்கம் திருப்பிப் போட்டு, மீண்டும் நெய் விட்டு, சிவக்க மொறுமொறுப்பாக எடுக்கவும்.

* அடுப்பு சிம்மில் மட்டுமே இருக்க வேண்டியது முக்கியம். 

* வீட்டில், கொஞ்சம் மென்மையான தோசை வேண்டும் என்று நினனப்பவர்கள், பாதிக்குப் பாதி புழுங்கல் அரிசி சேர்த்துக் கொள்ளலாம். வாசனைக்குப் பெருங்காயமும். இவை இரண்டும் கோயிலில் தவிர்ப்பவை. 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

கோயிலில் இரவில் ஒரே ஒரு தோசை மட்டுமே செய்வார்கள். அதுவே மிகப் பெரிதாக, சுமார் 1 1/2 அடி விட்டமும் 2 அங்குல உயரமும் இருக்கும். அதைத் துண்டு துண்டாக ஆக்கி, தட்டப் பயிறு சுண்டலுடன் கலந்து விநிநோகம் செய்வார்கள். இதற்கு தோசைப் பொடி என்று பெயர். இரவு 9 மணிக்கு நடை சாத்துவதற்கு முன் செய்யப் படுவது. தற்கால சூழல் காரணமாக இரவு 7 மணிக்கே இதைச் செய்து முடித்து நடைசாத்துவதாகச் சொல்கிறார்கள்.

ram.JPG

ஸ்ரீரங்கத்தில் சித்திரை மாதம் வரும் புனர்பூசம்/நவமி திதிக்குத் தான் ஸ்ரீராம நவமி கொண்டாடுவோம். இருந்தாலும் ஊரோடு ஒத்து வாழும் பொருட்டும், மெனக்கெட்டு மஹாராஷ்டிரா அரசு பள்ளி அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்திருப்பதாலும், இன்று.

சக்ரவர்த்தி திருமகனின் பிறந்தநாளை முன்னிட்டு…

sriramanavami.JPG

பானகம் 

தேவையான பொருள்கள்:

வெல்லம் – 250 கிராம்
தண்ணீர் – 4 கப்
ஏலப்பொடி – 2 சிட்டிகை
சுக்கு – 1 சிட்டிகை
எலுமிச்சம் பழம் – 1

paanagam.JPG

செய்முறை:

 • வெல்லத்தை நீரில் நன்கு கரைத்து, தேவைப்பட்டால் வடிகட்டிக் கொள்ளவும்.
 • ஏலப்பொடி, சுக்குப் பொடி சேர்த்துக் கலக்கவும்.
 • இறுதியில் எலுமிச்சம் பழச் சாறையும் சேர்க்கவும்.
 • இரண்டு மூன்று ஐஸ் க்யூப் சேர்த்துக்கொண்டால் கலக்கலாக இருக்கும் என்றாலும் என்ன சொல்வார் என்று தெரியவில்லையே…..

“Ram! would you mind…? ”

“ஆமாண்டீ, பெரிய பெரிய அட்டூழியம் செய்யுற போது எல்லாம் என் நினைப்பே வர்றதில்லை. ரொம்ப பயந்த மாதிரி, ரெண்டு ஐஸ் க்யூபுக்குத் தான் பர்மிஷன்! திருந்தவே மாட்டியா?”

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நீர்மோர் | வடைபருப்பு

பானக நரசிம்ம ஸ்வாமி ஆலயம்:

mangalagiri.jpg 

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் இருக்கிறது மங்களகிரி.. இங்கு மலைமீது இருக்கும் பானக நரசிம்மர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவக் கோயில் மற்றும் ஸ்ரீரங்கம், திருப்பதி, பத்ரிநாத், நைமிசாரண்யத்திற்கு ஈடான புனிதமானது என்று கூறப்படுகிறது. கீழேயிருந்து மலைக்கு 20 ரூ. ஆட்டோவில் போய் வரலாம்.

சுயம்புவான நரசிம்மரின் திருமார்பு வரை மட்டுமே தரிசனம் கிடைக்கும். மீதிப் பாகம் பூமியினடியில் இருப்பதாக ஐதீகம். வாயைத் திறந்தபடி இருக்கும் நரசிம்மரின் வாயில் கோயிலிலேயே விலைக்குக் கிடைக்கும் (கல்கண்டு அல்லது வெல்லப்)பானகத்தை வாங்கிக் கொடுக்கலாம். எத்தனை பானகம் கொண்டு சென்றாலும் எடுத்துச் செல்வதில் பாதியை மட்டுமே ஏற்றுக் கொள்வதாகவும், ‘கடக்’ என்ற விழுங்கும் சப்தத்தைக் கேட்கமுடிவதாகவும், பாதிக்கு மேல் மீதி ஏற்றுக்கொள்ளப் படாமல் வழிந்துவிடுவதாகவும் சொல்கிறார்கள். மீதியை பக்தர்கள் பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம். இஞ்சி, மிளகு போன்றவையும் இந்தப் பானகத்தில் சேர்க்கப் படுகின்றன. ஒரு எறும்பைக் கூட அருகே பார்க்க முடியாது என்ற கூடுதல் செய்தியைச் சொல்கிறார்கள்.

கோயில் குறித்து மேல் விபரங்கள்….

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1/2 கிலோ
சின்ன கொத்துக்கடலை – 50 கிராம்
தேங்காய் – சிறிது

வறுத்துப் பொடிக்க
எண்ணை – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2 கப்
கடுகு – 1 டேபிள்ஸ்பூன்
முழு கருப்பு உளுந்து – 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
கோதுமை – 1 டேபிள்ஸ்பூன்
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி விரை – 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – 1 டீஸ்பூன்

புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்

தாளிக்க
எண்ணை, கடுகு, நிலக்கடலைப் பருப்பு, கறிவேப்பிலை.

செய்முறை:

 • வறுத்துப் பொடிக்கச் சொல்லியுள்ள அனைத்துச் சாமான்களையும் எண்ணையில் சிவக்க வறுத்து, நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். மிளகாய் கமறாமல் இருக்க சிட்டிகை உப்பு சேர்த்து வறுக்கவும்.
 • புளியை, கெட்டியாகக் கரைத்து அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை காய்ச்சிக் கொள்ளவும்.
 • சாதத்தை உதிர் உதிராக வடித்து, ஒரு அகலமான பாத்திரத்தில் பரத்தி, 2 டீஸ்பூன் நல்லெண்ணை விடவும். சாதம் மேலும் ஒட்டாமல் இருக்கும்.
 • வாணலியில் எண்ணை விட்டு நன்கு காய்ந்ததும், அதில் கொத்துக்கடலையைப் போடவும். படபடவென பொரியும்.
 • பொடிப்பொடியாகக் கீறிய தேங்காய்த் துண்டுகளையும் அதனுடன் போட்டு, சிவக்க வறுத்து, சாதத்தில் கொட்டவும்.
 • கொஞ்சம் எண்ணையில் கடுகு, நிலக்கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதையும் சாதத்தோடு சேர்க்கவும்.
 • இப்போது புளிக்காய்ச்சலையும் சாதத்தில் சேர்த்து, தேவையான அரைத்த பொடி, நல்லெண்ணை விட்டு நன்றாகக் கிளறி பரிமாறவும்.

* மிகுந்த மணத்தோடு வித்தியாசமான சுவையில் நன்றாக இருக்கும். சாப்பிடும்போது, சின்ன கொத்துக்கடலையும் தேங்காய்த் துண்டுகளும் சுவாரசியமான இடையூறு.

* இது மேல்கோட்டையில் செய்வதாக இருந்தாலும் கன்னட மக்கள் வழக்கமாக எல்லாவற்றிலும் சேர்க்கும் வெல்லத்தை(கொடுமைங்க!) இதில் சேர்க்காமல் இருப்பதே இதன் கூடுதல் சிறப்பு.  🙂

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பொரித்த அப்பளம், வடாம், சிப்ஸ் வகை, தயிர்ப் பச்சடி வகைகள்.

 “தாயார் சன்னதியில் தரிசனம் முடித்துக்கொண்டு திரும்புகையில் மடைப்பள்ளிப் பிரசாதக் கடையில் சுறுசுறுப்பாக விற்பனை நடந்து கொண்டிருந்தது. சர்க்கரைப் பொங்கல் கேட்டேன். தீர்ந்துவிட்டது என்றார்கள். புளியோதரை இருந்தது. வாங்கிக் கொண்டேன். ஒரு சிறிய தொன்னைப் புளியோதரை ஆறரை ரூபாய். ஆனால் அமிர்தம் தான். திருவல்லிக்கேணி கோவிலில் சர்க்கரைப் பொங்கல் தான் ரொம்ப விசேஷம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அதைத் தூக்கியடிப்பதாக இருக்கிறது புளியோதரை. இதுவரை ருசிக்காதவர்கள் வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்கள்.”

 — ரா.கி.ரங்கராஜன் (நாலு மூலை)

ஒருமுறை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு ஆசை அடங்காமல் மீண்டும் கோயில் உள்வரை போய் வாங்கிச் சாப்பிட்டேன். பிரசாதம் எல்லாம் கொஞ்சமாகத் தான் சாப்பிடவேண்டும் என்று பக்கத்திலிருந்தவர்கள் செய்த நக்கலை எல்லாம் அலட்சியம் செய்து எண்சாண் உடம்புக்கு நாவே பிரதானம் என்று செயல்பட்டேன். விலை கொஞ்சம் அதிகம் என்று தோன்றியதும் உண்மை. மேலே உள்ள வரிகளைப் படித்தபோது நான் தனியாள் இல்லை என்று ஒரு பெருமை.

கீழே இருக்கும் சமையல் குறிப்பைச் சொல்லி இருப்பவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருக்கும் திரு. சம்பத் என்பவர். அவருக்கு நன்றி!

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 5 கப்
நல்லெண்ணை – 50 கிராம்
மிளகு – 200 கிராம்

புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 100 கிராம்
நல்லெண்ணை – 100 கிராம்
கடலைப் பருப்பு – 100 கிராம்
உளுத்தம் பருப்பு – 100 கிராம்
வெந்தயம் – 10 கிராம்
சீரகம் – 5 கிராம்
கடுகு – 10 கிராம்
பெருங்காயம் – சிறிது
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள் – 10 கிராம்

செய்முறை:

 • புளிக்காய்ச்சலை முதல்நாளே செய்துவைக்க வேண்டும்.
 • புளியை கெட்டியாகக் கரைத்துவைத்துக் கொள்ளவும்.
 • நல்லெண்ணைய வாணலியில் வைத்து, அடுப்பை மெதுவாக எரிய விடவேண்டும்.
 • எண்ணை காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற வரிசையில் போட்டு நன்றாகச் சிவக்க வறுக்கவும்.
 • பின்னர் அதில் முந்திரிப் பருப்பையும் வறுத்துக் கொண்டு, கெட்டியாக கரைத்துவைத்துள்ள புளியைச் சேர்க்கவும்.
 • 2 நிமிடம் கொதித்தவுடன், உப்பு, மஞ்சள்பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
 • புளிநீர் பாதியாக வற்றும்வரைக் கொதிக்கவிட்டு, இறக்கி எடுத்துவைக்கவும். [மறுநாள் புளிக்காய்ச்சலைத் திறந்ததுமே கும்’மென்று மணமாக இருக்கவேண்டும். சரியாகக் காய்ச்சவில்லை என்றால் புளியின் பச்சை வாசனை வரும்.]
 • மறுநாள் பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான தட்டில் அல்லது பாத்திரத்தில் பரத்தி இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து ஆறவிட வேண்டும்.
 • சாதம் ஆறியதும், கொஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும்.
 • பின்னர் தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை, 50 கிராம் நல்லெண்ணையோடு கலந்து, அதையும் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும்.

இது ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி, பகல் பத்து, இராப் பத்து இருபது நாள்களில் மட்டும் கோவிலில் கிடைக்கும் சிறப்புப் பட்சணம்..

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1/2 கிலோ
நெய் – 1/2 கிலோ
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

 • அரிசியை முதல்நாளே ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடித்துக் கொள்ளவும்.
 • பிறகு அதை மிக்ஸியில் அரைத்து மாவாக்கி சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 • சலித்த மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஈரப் பதத்துடன் கையால் நன்கு அழுத்தி அடைத்து வைத்துவிட வேண்டும்.
 • சலித்ததில் கடைசியாக மிச்சம் இருக்கும் மெல்லிய ரவை போன்ற கப்பியை உப்புப் போட்டு தண்ணீர் விட்டு கஞ்சியாகக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இவைகளை முதல்நாளே செய்துவைத்துக் கொண்டால் தான் மாவு புளிப்பாக இருக்கும்.
 • அடுத்த நாள், முதல்நாள் தயார் செய்துவைத்துள்ள கஞ்சியை அடைத்து வைத்துள்ள மாவில் கொட்டி கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
 • தேவைப்பட்டால் சிறிது உப்பும், தண்ணீரும் சேர்த்துக் கொள்ளவும்.
 • பிசைந்த மாவை ஒரு வெள்ளைத் துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் தட்டை மாதிரித் தட்ட வேண்டும். தட்டையை விட சற்று தடிமனாகத் தட்ட வேண்டும்.
 • வாணலியில் நெய்யைச் சூடாக்கி, அப்பங்களைப் பொன்னிறமாக, நன்றாக ஓசை அடங்கும் வரை மிதமான சூட்டில் பொரித்து எடுத்து, நெய்யை வடித்தபின் உபயோகிக்கவும்.

[இதைவிடக் கடினமான ‘உருப்படி’ என்ற ஒரு ஐட்டம் இருக்கிறது. அது ஏகாதசித் திருநாள் சாற்றுமுறை கடைசி இரண்டு நாள்கள் மட்டுமே கிடைக்கும்.] 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சில பண்டங்களுக்கு தொட்டுக் கொள்ள வேறு சில பண்டங்கள் தேவை இருக்கலாம். சில பண்டங்களுக்கு அதைச் சாப்பிடுவதற்கான சூழ்நிலை மிக முக்கியம். டிசம்பர் ஜனவரி அரையாண்டுத் தேர்வு நிர்ப்பந்தங்கள்… வீடு முழுவதும் கால் வைக்க இடமில்லாமல் அறிந்ததும் அறியாததுமாக திருநாள் சேவிக்க வந்து தங்கியிருக்கும் தாத்தா பாட்டிகள்…(பலரை யாரென்று என் பாட்டிக்கே தெரியாத அளவு சத்திரமாக வீடு இருக்கும்.) வீதியிலேயே ஒரே ஒருவர் மட்டும் கார் வைத்திருக்கும் காலத்தில் ‘சர்.. சர்..’ என்று தெருவில் கடந்துபோகும் கார்கள் (ரோட்டுக்குப் போயிடாதமா, காரும் வண்டியுமா வருது; ஆத்தோரமாவே விளையாடு என்று அரைமணிக்கொரு அட்வைஸ் சத்தம் வீட்டுக்குள்ளிருந்து)… சாவகாசமாய் நடந்துபோகும் போலீஸ்காரர்கள் (ஒரே பயம்தான் போங்க!).. புதிது புதிதாய் கூட்டம் கூட்டமாய அலங்காரமாய் நடமாடும் மனிதர்கள்…

இத்தனை அமர்க்களத்தில், நாம் சாப்பிடுவது முக்கியமல்ல. நாம் சாப்பிடுகிறோம் என்பது மற்றவர்களுக்குத் தெரியவேண்டும் என்பது மிக முக்கியம்.:) வாசலுக்கு எடுத்து வந்ததுமே, “எனக்குடீ..” என்று ஒரு சிறு வட்டம் சூழ வேண்டும். தட்டையை மாதிரி கையால் உடைக்க முடியாது. கடினமாக இருக்கும். நமது கவுன் சிந்தடிக் என்ற சாக்கில் எதிரில் இருப்பவனில் எவனாவது இளிச்சவாயன் சட்டை நுனியில் வைத்து இன்னொரு இளிச்சவாயன் காக்காய் கடி(இதற்கு ஏன் இந்தப் பெயர்?) கடிக்கவேண்டும். இது கொஞ்சம் சிரமம். யார் வீட்டிலிருந்தாவது யாராவது பெருசு பார்த்துவிட்டால் “எச்சலா பண்றீங்க!!” என்று எட்டு ஊருக்குக் கேட்பதுபோல் திட்டு விழும். அப்படியே அவனை சட்டையோடு தரதரவென்று இழுத்துக்கொண்டு வந்து நம்வீட்டு வாசல் கல்படி உயரத்துக்கு அவனை உட்காரவைத்து (கிட்டத்தட்ட ஸ்கூட்டர் ஓட்டுகிற மாதிரி போஸில்), செல்வர் அப்பம் மூடிய சட்டைக்கு மேல் கருங்கல்லால் அடித்தால் உள்ளே சிலபல துண்டுகளும் கொஞ்சம் பொடியாயும் சிதறி இருக்கும். யாருக்கு எந்த அளவு பெரிய துண்டு என்பது அவர்கள் நமக்கு அன்றைய தேதியில் எவ்வளவு தூரம் நண்பர்கள் என்பதைப் பொருத்தது. இது வானிலை அறிக்கை மாதிரி- அன்றாடம் மாறக் கூடியதுதான். சட்டைக்காரனுக்கு ஒரு துண்டோடு பொடியும் இலவசம். நமக்குக் கிடைப்பது சிறு துண்டு தான் என்றாலும் அதன் சுவையே ஓஹோ!

முதலில் வாயில் போட்டதும் எதுவும் பெரிதாக உறைக்காது. சிறிது சிறிதாக உப்புச் சுவையும் நெய்யும் மட்டும் பிரிந்து பிரிந்து உமிழ்நீரில் கலக்க ஆரம்பிக்கும். (உமிழ்நீர் சுரப்பதால் சுவையாக இருக்கிறதா? சுவையாக இருப்பதால் நீர் சுரக்கிறதா?) பரமானந்தமாக இருக்கும். ஏதோ ஒரு ஏமாந்த நொடியில் அப்பம் சிதைந்து, வாயில் கரைந்து, கடித்து முழுங்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவோம். இவ்வளவு சுவையாக இருந்தும் எப்பொழுதுமே முழு செல்வர் அப்பத்திற்கு ஆசைப்பட்டதேயில்லை. ‘எல்லாத்தையும் தெருவுக்குத் தூக்கிண்டு போகணும்’ என்ற மனநிலையே இருந்தது.  இந்தச் சூழ்நிலை இப்போது கிடைக்காது என்பதாலோ என்னவோ இதன்மேல் இப்போதெல்லாம் மொத்தமாகவே ஆர்வம் போய்விட்டது.

பொங்கல் பண்டிகையன்று செய்வது…

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
நெய் – 1/4 கப்
மிளகு –  2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
இஞ்சி –  ஒரு துண்டு
முந்திரிப் பருப்பு – 10
உப்பு –  தேவையான அளவு

ஹோட்டல் சுவைக்கு:

பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை –  சிறிது
மஞ்சள் தூள் –  1 சிட்டிகை

venpongal

செய்முறை:

 • பயத்தம் பருப்பைக் கழுவி லேசாக வறுத்துக் கொள்ளவும்.
 • கழுவிய அரிசியோடு சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும்.
 • வாணலியில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, சீரகம், முந்திரிப் பருப்பு தாளித்து அடுப்பை அணைத்து, பொங்கலை அதில் கொட்டி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி சூடாகப் பரிமாறவும்.

*  சாதாரண நாள்களில் பாதி நெய்யும், பாதி ரிஃபைண்ட் எண்ணையும் கலந்து செய்யலாம். உண்மையில் எண்ணணயில் தாளித்து, கடைசியில் நெய்யை சூடாக இருக்கும் பொங்கலில் கலந்து செய்வதே சுவை அதிகமாக இருக்கிறது.

venpongal.JPG

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தேங்காய்ச் சட்னி, தக்காளிக் கொத்சு, கத்திரிக்காய் புளிக் கொத்சு, சின்ன வெங்காயச் சாம்பார், கதம்பச் சாம்பார், தாளகக் குழம்பு தவிர ஓரளவு அனைத்து குழம்பு, சாம்பார்களும்…

அடுத்த பக்கம் »