ஆனால் விளம்பரத்தில் கொடுத்திருந்தபடி ஜெயமோகனார் எழுதியது எதுவும் இல்லை. அதனால் ஜெயஸ்ரீ கோவிந்தராஜனும் எழுதவில்லை(சமையல் மாமி அக்கா ). இவர்களை ஈடுகட்டுவதற்காக இன்னும் அதிகமான பேரை எழுதவைத்திருக்கிறார்கள். அப்படியும் முதல் இதழ் ஜெ’ஜெ’ன்னு இல்லை
— இட்லிவடை.
இணையத்தில் பொதுவாக எந்த நேர்மையையும் ஓரளவிற்குமேல் எதிர்பார்ப்பதில்லை என்றாலும், ஊர்ல சொல்றது சொலவடை, உண்மையைச் சொல்றது இட்லிவடை என்றெல்லாம் ‘பன்ச்லைன்’ வைப்பவர்கள் சம்பந்தப்பட்டவர்களையும் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு எழுதினால் வைத்த லைனுக்கு நீதியாக இருக்கும். மீண்டும் மீண்டும் இதைச் சொல்ல வேண்டியிருப்பது கூட எரிச்சலாக இருக்கிறது.
—-
‘எனிஇந்தியன்’ பதிப்பகத்தின் ‘வார்த்தை’ மாத இதழுக்கு அனுப்பி, பிரசுரிக்கப்படாத உணவுக் குறிப்பு.
தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1/2 கப்
புழுங்கல் அரிசி – 1/2 கப்
பாசிப் பருப்பு – 1/4 கப்
பச்சைப் பயறு – 1/4 கப் (தோலுடன்)
கடலைப் பருப்பு – 1/2 கப்
கோதுமை – 1/4 கப்
வெல்லம் – 2 1/2 கப்
தேங்காய்த் துண்டுகள் – 1/4 கப்
சுக்குப் பொடி – 1/2 டீஸ்பூன்
ஏலப் பொடி – 1 டீஸ்பூன்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
-
பச்சரிசி, புழுங்கல் அரிசி, பாசிப் பருப்பு, பச்சைப் பயறு, கடலைப் பருப்பு, கோதுமை இவற்றை தனித் தனியாக வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
-
எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அல்லது மிஷினில் நைசான மாவாக அரைத்துக் கொள்ளவும்.
-
தேங்காயை மிகச் சிறுசிறு துண்டுகளாக்கி சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.
-
வெல்லத்தை ஒரு கப் தண்ணீர் சேர்த்து கம்பிப் பாகாகக் காய்ச்சிக் கொள்ளவும்.
-
இறக்கும் முன் சுக்குப் பொடி, ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கொள்ளவும்.
-
பாகில் மாவைக் கொட்டி, கட்டிகளில்லாமல் கலந்துகொள்ளவும்.
-
கையில் நெய்யைத் துடைத்துக் கொண்டு, சூட்டோடு வேகமாக உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
-
4, 5 உருண்டைகளாக இடையிடையே ஒரு சுளகில் அல்லது முறத்தில் இட்டுச் சுழற்றினால் ஒன்றோடு ஒன்று இடித்து, நன்றாக உள்ளே இறுகிக் கொள்ளும்.
-
பாதி செய்துகொண்டிருக்கும்போதே கலவை இறுகி எடுக்கவரவில்லை என்றால், மீண்டும் அடுப்பில் சிம்’மில் (மட்டும்) வைத்தால் பாகு இளகி எடுக்க வரும். தொடர்ந்து மிச்ச உருண்டைகளையும் பிடிக்கலாம்.
-
ஆறியதும் ஒரு காற்றுப் புகாத டப்பாவில் எடுத்துவைத்து உபயோகிக்கவும். பதினைந்து நாள்களுக்குக் கெடாது. சாப்பிட்டால் நீண்டநேரம் பசிக்காது.
* உடல்வலிமைக்கு, விரதங்களுக்கு, பிரயாணங்களுக்கு ஏற்றது.
—-
பின்நவீனத்துவ கவிதைக்கும் பொருள்விளங்கா உருண்டைக்குமான ஒரு ‘அடுப்படி‘ வாசகியின் புரிதல்கள்….
பொவிஉ – முப்பாட்டிக்கும் மூத்த தமிழ்ப்பாட்டிகள் செய்துவந்த உருண்டை.
பிநக – இன்னமும் எழுத்தாளர்களே இன்னதென்று விளங்க முடியாத சண்டை.
பொவிஉ – எங்குமே அதிகம் காணக் கிடைப்பதில்லை.
பிநக – சிறுபத்திரிகைகளில் மட்டும் விலைபோகும்.
பொவிஉ – உடல்நலத்திற்கு ஏற்றது.
பிநக – மனநலத்தைக் கெடுப்பது.
பொவிஉ – செய்தவன் தவிர ருசிப்பவனுக்கு உள்ளிருக்கும் பொருளைச் சொல்ல முடியாது.
பிநக – எழுதியவன் தவிர படிப்பவனுக்கு உள்ளிருக்கும் பொருளைச் சொல்ல முடியாது.
பொவிஉ – கடிப்பதில் தேங்காய் ஒன்று மட்டுமே புரியும்.
பிநக – படிப்பது தமிழ் என்று மட்டுமே புரியும்.
பொவிஉ – வழமையாக உபயோகிக்கும் தானியங்களில் வகைக்குக் கொஞ்சமாக அள்ளிப் போட்டுக்கொள்ள வேண்டியது.
பிநக – வழமையிலேயே இல்லாத வார்த்தைகளாக வகைவகையாக அகராதியிலிருந்து அள்ளிப் போட்டுக்கொள்ள வேண்டியது.
பொவிஉ – தானியங்கள் சிவக்க வறுக்கப்பட்டிருக்க வேண்டும்.
பிநக – எண்ணம், பொருள், ஏவல் எல்லாமே சிவப்புச் சாயம்தான். (காதல் கவிதைகள் பரீட்சார்த்த தோல்வி என்று கேள்வி.)
பொவிஉ – அரிசி, பருப்பு, கோதுமை அடிப்படையில் முக்கியம்.
பிநக – அல்குல், யோனி, முலை, குறி அதிமுக்கியம்.
பொவிஉ – பாகு முற்றும்முன் துரிதமாக உருண்டைகளைப் பிடித்து முடித்துவிட வேண்டும்.
பிநக – மனநிலை முற்றியபின் மிகத் துரிதமாக எழுத ஆரம்பித்து முடித்தும் விட வேண்டும்.
பொவிஉ – தாமதமாக்கினால் பாகு மாவுடன் பிடித்துக்கொண்டு உருண்டை பிடிக்கவராது.
பிநக – தாமதமாக்கினால் எழுத்தாளனே தன் அபத்தத்தைப் புரிந்துகொண்டு எழுதவராது.
பொவிஉ – கடப்பாரையால் உடைத்தல் அவசியம்.
பிநக – கட்டுடைத்தல் அதன் குணாதிசயம்.
பொவிஉ – உருட்ட முடிந்தால் மட்டுமே அது பொருள்விளங்கா உருண்டை
பிநக – படிக்க முடியாவிட்டால் அது பொருள்விளங்கா மரமண்டை. (இந்த வாசகி மாதிரி!)
Like this:
Like ஏற்றப்படுகின்றது...