அல்வா


அசோகா – 1 

[“அறுசுவை அரசு” நடராஜய்யர் சகோதரர் ஞானாம்பிகா ஜெயராமய்யர்]

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 100 கிராம்
சர்க்கரை இல்லாத கோவா – 100 கிராம்
சர்க்கரை – 400 கிராம்
சம்பா கோதுமை மாவு – 100 கிராம்
நெய் – 100 கிராம்
ஏலக்காய் – 5
முந்திரிப் பருப்பு – 10
கிஸ்மிஸ் – 10 கிராம்

 

செய்முறை:

 • பயத்தம் பருப்பை கடாயில் பொன்வறுவல் வறுத்து தண்ணீரில் ஊறவைக்கவும்.
 • சிறிதுநேரம் ஊறியபின் நன்றாகக் களைந்துவிட்டு, அதை கெட்டியாக வரும் அளவிற்கு தண்ணீர் வைத்து குக்கரில் வேகவைக்கவும்.
 • வேகவைத்த பருப்பில் சர்க்கரையைப் போட்டு, கடாயில் நன்றாக அல்வா மாதிரி கிளறவேண்டும்.
 • அல்வா நல்ல பதம் வந்ததும் இறக்கி, கோவாவைச் சேர்த்துக் கலந்துவைக்கவும்..
 • மற்றொரு கடாயில் நெய்யை வைத்து நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் போட்டு கொஞ்சம் சிவந்தவுடன் சம்பா கோதுமை மாவு சேர்த்து நன்கு வாசனை வரும் அளவிற்கு வறுத்து, அதனுடன் பருப்பு கோவாக் கலவை, ஆரஞ்சு கலர் சேர்த்துக் கிளறவும்.

இருபது வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூர், கும்பகோணம் போகும்போதெல்லாம் என் தந்தை வாங்கிவருவார். இப்பொழுது எல்லா இடங்களிலும் பிரபலம். முக்கியமாக திருமணம் மாதிரி விசேஷங்களில் மெனுவில் முக்கிய இடம் பெற்றுவிட்டது. 

 

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1 கப்
பால் – 2 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 1 கப்
கேசரி பவுடர் (விரும்பினால்)
ஏலக்காய்
பச்சைக் கற்பூரம்
முந்திரி, பாதாம் வகைகள்

செய்முறை:

 • பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
 • பால் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேகவிடவும்.
 • குக்கர் திறக்கவந்ததும் சூட்டுடனே வெளியே எடுத்து,  நன்கு மசித்துக்கொள்ளவும்.
 • அடுப்பில் வாணலியில் சர்க்கரை, மசித்த பயத்தம்பருப்பு கலந்து கிளறத் தொடங்கவும்.
 • முதலில் சர்க்கரையால் நெகிழ்ந்து, பின் கலவை இறுக ஆரம்பிக்கும்.
 • சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்து விடாமல் கிளறவும்.
 • நன்கு சேர்ந்து ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.
 • இறக்குவதற்கு சற்றுமுன் கலர் (நான் சேர்க்கவில்லை.), ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், உடைத்த அல்லது நொறுக்கிய கொட்டைப் பருப்புகள் சேர்க்கவேண்டும்.

* பல தளங்களில் கோதுமை மாவு ஒரு பங்கு சேர்ப்பதாக இருக்கிறது. இது எனக்குச் செய்தி. ஒருவேளை இப்பொழுது திருமணம் மாதிரி பெரிய விசேஷங்களிலும் செய்வதால் அளவிற்காக கோதுமை மாவு சேர்க்கிறார்களா என்று தெரியவில்லை. எதற்கும் சேர்க்காமல் ஒருமுறை செய்துபார்த்து அதன் ஒரிஜினல் சுவையை அனுபவித்துவிட்டு விரும்பினால் மாவு சேர்த்தும் செய்யலாம் என்பது என் அக்கறை கலந்த ஆலோசனை.

* எனக்கு இந்த முறையே வசதியாக இருப்பதாலும் பிடித்திருப்பதாலும் ஒவ்வொரு தீபாவளிக்கு முன்தினமும் (லக்ஷ்மி பூஜைக்கு பயத்தம்பருப்பு சேர்த்து செய்யநினைத்து) இருக்கிற பூஜை, கொண்டாட்ட நெருக்கடியில் விரைவாகச் செய்யமுடிவதாலும் இப்படியே செய்துவருகிறேன்.

* அறுசுவை நடராஜன் குறிப்பு ‘சம்பா‘ கோதுமை மாவு சேர்த்தது; பாலுக்கு பதில் கோவா. அடுத்து வருகிறது.

தேவையான பொருள்கள்:

பாதாம் பருப்பு – 1 கப்
முந்திரிப் பருப்பு – 10
சர்க்கரை – 1 கப்
நெய் – 1/2 கப்
ஏலக்காய் – 3
ஜாதிக்காய்ப் பொடி
குங்குமப் பூ
கேசரி கலர்
வெள்ளரி விதை – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

 • பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து தோலுரித்துக் கொள்ளவும்.
 • முந்திரிப்பருப்பை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
 • இரண்டு பருப்புகளையும் சிறிது தண்ணீர் சேர்த்து மிகமிக அதிக மென்மையான விழுதாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
 • அடுப்பில் வாணலியில் சர்க்கரையுடன் அரைகப் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சவும்.
 • சர்க்கரை கரைந்ததும், அரைத்த விழுதையும் சேர்த்து, கைவிடாமல் கிளற ஆரம்பிக்கவும். [சர்க்கரை கரைந்ததும், தேவைப்பட்டால் 2 டீஸ்பூன் பால் சேர்த்து, மேலே வரும் அழுக்கை நீக்கிவிடவும்.]
 • சேர்ந்தாற்போல் வரும்போது 1 டேபிள்ஸ்பூன் பாலில் குங்குமப்பூ, கேசரி கலர், ஏலப்பொடி, ஜாதிக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம் கரைத்து, கலவையில் சேர்க்கவும்.
 • கலவை இறுக ஆரம்பித்ததும் சிறிது சிறிதாக நெய் சேர்த்துக் கிளறவும்.
 • நெய் வெளிவந்து ஒட்டாமல் கலவை வரும்போது, அடுப்பிலிருந்து இறக்கி, வெள்ளரி விதை கலக்கவும். 
 • 

* பொதுவாக பாதாம் அல்வா திகட்டும் இனிப்பாக இல்லாமல் இருக்கவேண்டும். விரும்புபவர்கள் இன்னும் 1/4 கப் சர்க்கரை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அது பாதாமை உணரமுடியாமல் செய்துவிடும். 

* இந்த அல்வாவுக்கு முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரிப்பது பிள்ளையாரைக் கிள்ளி பிள்ளையாருகே நைவேத்தியம் செய்வதுபோல். அதனால் வெள்ளரி விதை மட்டும் போதும்.

* கிராண்ட் ஸ்வீட்ஸ் பாதாம் அல்வா— பாதாம் பருப்பு 200 கிராம், சர்க்கரை 400 கிராம், நெய் 200 கிராம், முந்திரிப் பருப்பு தேவையில்லை ; ரவைப் பதத்திற்கு அரைக்கவேண்டும்.

* ஆயிரம்தான் பாதாம் பருப்பிலேயே அல்வா செய்தாலும் சுவையில் கோதுமை அல்வாவை அடித்துக்கொள்ள ஆளில்லை. அல்வாக்களில் ராணி கோதுமை அல்வா. எனக்கு பாதாம் பருப்பு, அப்படியே சாப்பிடுவதே சுவையாக இருக்கிறது.

தேவையான பொருள்கள்:

கேரட் –  1/2 கிலோ (துருவல் – 4 கப்)
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 3 முதல் 4 கப்
நெய் – 1/2 கப்
கோவா – 100 கிராம் (விரும்பினால்)
ஏலப்பொடி
குங்குமப்பூ
வெள்ளரி விதை
முந்திரிப் பருப்பு

Delhi carrotCarrot thuruval

செய்முறை:

 • அல்வா செய்ய, சிவப்பாக இருக்கும் டில்லி கேரட் மிகவும் ஏற்றது. கேரட்டை நன்கு கழுவி, சிறிய அளவுத் துருவியில் துருவிக் கொள்ளவும்.
 • அடுப்பில் வாணலியில் (நான்-ஸ்டிக் விரைவாகவும் சுலபமாகவும் வரும்) ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் கேரட்டை லேசாக வதக்கி, பால் சேர்த்து நிதானமான சூட்டில் கொதிக்கவிடவும். அடிக்கடி கிளறிவிட்டுக் கொண்டே இருக்கவும்.
 • பால் சேர்ந்துவரும்போது, சர்க்கரை சேர்த்துக் கிளற ஆரம்பிக்கவும். மேலும் இளகி, மீண்டும் இறுக ஆரம்பிக்கும்.
 • விரும்பினால் இந்தப் பதத்தில் கோவா சேர்த்துக் கொள்ளவும்.
 • இறுதியில் சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்து ஒட்டாமல் வரும்போது ஏலப்பொடி, குங்குமப்பூ கலந்து இறக்கவும்.
 • வெள்ளரி விதை, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு இரண்டில் ஒன்றோ இரண்டுமோ சேர்க்கலாம்.

Carrot halwa

* முழுவதும் பால் உபயோகிக்காமல் கன்டென்ஸ்ட் மில்க் உபயோகிக்கலாம். அரை கப் பால் விட்டு முதலில் கேரட்டை நன்கு பச்சைவாசனை போக வேகவைத்துக் கொண்டு கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்துக் கிளற ஆரம்பிக்கலாம். அதில் சர்க்கரை சேர்த்திருந்தால் நாம் பாதி சர்க்கரை அல்லது அதைவிடக் குறைவாகச் சேர்த்தால் போதும்.

* சிலர் குக்கரில் பாலுடன் கேரட்டை வேகவைக்கிறார்கள். சுலபம். ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை. துருவிய கேரட் வாணலியிலேயே சீக்கிரம் வெந்துவிடும்.

* கேரட்டைத் துருவது ஒரு பொறுமையைச் சோதிக்கும் வேலை. சிலர் அதற்காக மிக்ஸியில் அரைத்துச் செய்கிறார்கள். எனக்கு அதன் இறுதிவடிவம் பிடிக்கவில்லை. அதற்குப் பதில் நல்ல இசையைக் கேட்டுக்கொண்டு கொஞ்சம் மெனக்கெட்டு துருவி விடலாம்.

* ஆரஞ்சு கலர் கேரட்டிலும் செய்யலாம். சுவை சுமார் தான். சர்க்கரை சிறிது அதிகம் சேர்க்கவேண்டும். விரும்பினால் கலர் சேர்த்துக் கொள்ளலாம்.

* திருமணம் மாதிரி பெரிய விசேஷங்களில் பரிசாரகர்கள் இரண்டு டேபிள்ஸ்பூன் கடலைமாவையும் நெய்யில் வறுத்து, சேர்த்துக் கிளறுகிறார்கள். இது கேரட்டை பெரிய அளவில் துருவினாலும், அல்வா சேர்ந்தாற்போல் வருவதற்கும், அளவு அதிகம் காண்பதற்கும் உதவும்.

* ஒரு விசேஷத்தில் முந்திரியுடன் கிஸ்மிஸ் பொரித்துச் சேர்த்திருந்தார்கள். அல்வா என்று சொல்லிவிட்டு அதில் கிஸ்மிஸ் சேர்த்து அதை கேசரி லெவலுக்கு இறக்குவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பெண்களுக்கு மல்லிகைப் பூவோடு ஏன் அல்வாவைப் பிடிக்கும் என்று முடிவெடுத்தார்கள், தெரியவில்லை. இது தமிழ் கலாசாரத்தில் (அதாங்க தமிழ் சினிமாவில்!) மட்டும் தானா அல்லது இந்தியாவுக்கே பொதுவானதா என்றும் தெரியவில்லை. ஆனால் தமிழில் பட்டை, நாமம் என்பதற்கெல்லாம் அர்த்தமே மாறிப்போனது போல் அல்வாவுக்கும் அர்த்தம் மாறிப்போனது தமிழில் மட்டும் தான், அது நிச்சயம். எப்படி இருந்தாலும் கோதுமை அல்வா இனிப்புகளில் ராணி என்றால் மிகை இல்லை. 
 

தேவையான பொருள்கள்:

சம்பா கோதுமை – 250 கிராம்
சர்க்கரை – 1 கிலோ
நெய் – 350 கிராம்
ஏலப்பொடி
முந்திரி
கேசரிப் பவுடர்
பால் – 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு (விரும்பினால்)

kothumai paal halwa 1

செய்முறை:

 • சம்பா கோதுமையை குறைந்தது 12 மணிநேரம் ஊறவைத்து, கிரைண்டரில் அரைத்து பால் எடுத்து அதை அப்படியே இரண்டு மணி நேரம் வைக்கவும்.
 • அடுப்பில் அடிகனமான வாணலியில் சர்க்கரையை, கம்பிப் பதமாகப் பாகு வைக்கவும்.
 • பாகில் ஒரு டீஸ்பூன் பால் விட்டு அழுக்கை நீக்கவும்.
 • இப்போது கோதுமைப் பாலின் தெளிவை இறுத்துவிட்டு, கெட்டிப் பாலை மட்டும் பாகில் விடவும்.
 • அடுப்பை நிதானமான சூட்டில் வைத்து, கேசரிப் பவுடர் சேர்த்து கைவிடாமல் கிளற ஆரம்பிக்கவும்.
 • இப்போது சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்தால் அல்வா அடிப்பிடிக்காமல் வேகமாகப் பந்து மாதிரி கிளம்பி சீக்கிரம் கெட்டியான பதத்திற்கு வரும். (சாறு சேர்க்காமலும் செய்யலாம்.)
 • கலவை கொதித்து கெட்டியாக வர ஆரம்பிக்கும்போது கொதிக்கும் சுடுநீரை ஒரு கப் சேர்க்கவும்.
 • இப்படியே ஒவ்வொரு முறை கெட்டியாகி வரும்போதும் ஒவ்வொரு கப் கொதிக்கும் வெந்நீராக மொத்தம் ஆறு கப் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
 • இடையே சிறிது சிறிதாக நெய்யையும் சேர்த்துக் கொள்ளவும்.
 • ஆறாவது கப் வெந்நீரும், மிச்சமிருக்கும் நெய்யையும் சேர்த்த பின் வருவதே சரியான பதம். கிளறிக்கொண்டே இருந்தால் வாணலியில் ஒட்டாமல் நெய்யைக் கக்கிக் கொண்டு வரும்போது ஏலப்பொடி சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தவும்.
 • மேலே சீவிய முந்திரி அல்லது முழு முந்திரிப் பருப்பால் அலங்கரிக்கவும்.

kothumai paal halwa 2

* பொதுவாக அல்வாக்களுக்கு முந்திரியை விட வெள்ளரி விதைகளை வறுத்துச் சேர்ப்பதே சரியாகவும் சுவையாகவும் இருக்கும்.

* ஒருவேளை தவறுதலாக கலவை இறுகி, பாறை மாதிரி ஆகிவிட்டால், ஒரு தேங்காயை அரைத்துப் பாலெடுத்து, அதை அல்வாவில் ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும். அல்வா நெகிழ்ந்து சரியான பதத்திற்கு வந்துவிடும். சுவை மாறுபட்டாலும் பொருள் பாழாகாது.

* சம்பா கோதுமை ரவையிலும் இந்த அல்வாவைச் செய்யலாம்.

* சம்பா கோதுமை கிடைக்காதவர்கள் அவசரத்திற்கு ரெடி மிக்ஸ் வாங்கியும் செய்யலாம். ரெடி மிக்ஸில் செய்தால் மொழுக்கென்று இருக்கும், நன்றாக இருக்காது என்பது தவறான அபிப்ராயம். அந்த பாக்கெட்டில் சொல்லியிருப்பது போல் சும்மா 15 நிமிடங்கள் மட்டும் கிளறி இறக்காமல் பொறுமையாகச் செய்தால் ஓரளவு சுவையாக வரும்.

 • எந்தக் கம்பெனியாக இருந்தாலும், பாக்கெட்டில் சொல்லியிருப்பது போல் பொருள்களைச் சேர்த்து அடுப்பில் வாணலியில் வைக்கவும்.
 • மேலே சொல்லியிருப்பது போல் ஒருமுறை கெட்டியானதும் இறக்கி விடாமல் கொதிக்கும் சுடுநீரை ஒரு கப் சேர்க்கவும்.
 • இப்படியே ஒவ்வொரு முறை கெட்டியாகி வரும்போதும் ஒவ்வொரு கப் கொதிக்கும் வெந்நீராக மொத்தம் ஆறு கப் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
 • இடையே சிறிது சிறிதாக நெய்யையும் சேர்த்து முடிக்கவும். 
 • இறுதியில் கெட்டியாகி, வாணலியில் ஒட்டாமல் நெய்யைக் கக்கிக் கொண்டு வரும்போது ஏலப்பொடி சேர்த்துக் கிளறி, உடனே இறக்கி விடாமல் மேலும் சில நிமிடங்கள் இழுத்துக் கிளறி, பின் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும்.

உன்பேரைச் சொன்னாலே
உள்நாக்கில் தித்திக்குமே
நீ எங்கே நீ எங்கே

உன்னோடு சென்றாலே
வழியெல்லாம் பூப்பூக்குமே
நீ எங்கே நீ எங்கே

ஒன்றா இரண்டா ஒரு கோடி நியாபகம்
உயிர் தின்னப் பார்க்குதே நண்பா
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் நண்பா…

வார்த்தைகள் இல்லாமல் வெறும் இசையை மட்டும் கேட்டால் இது சோகப் பாடல் என்று சத்தியம் செய்தாலும் நம்பமுடியாத நம்பிக்கையூட்டும் கார்த்திக் ராஜாவின் இசை. எத்தனையாவது தடவையாகவோ இன்று மீண்டும் சன் டிவி உபயத்தில் “டும் டும் டும்”. மயங்கவைக்கும் இசை, பாடல்கள், மண் வாசனையுடன் அந்த வட்டாரத் தமிழ், வழுக்காத திரைக்கதை, அனைவரது இயல்பான நடிப்பு, எல்லாவற்றையும் விட அசத்தும் ஜோ! (சவீதா, அனு உதவியுடன் தான்).. பார்த்து முடித்ததுமே இன்றைக்கு அல்வா என்று முடிவு செய்துவிட்டேன். சம்பா கோதுமைதான் ஒரு கடையிலும் கிடைக்கவில்லை. மாதுங்கா போனால் தான் கிடைக்குமாம். 😦

திருநெல்வேலி, தாமிரவருணிக்கும், அல்வாவுக்கும், நெல்லையப்பர் கோவிலுக்கும் பேர் போனது. முதலில் அல்வாவைப் பார்த்து விடலாம். நெல் மட்டுமே விளையும் ஒரு தேசத்தில் கோதுமையால் செய்யப்படும் வஸ்துவான அல்வா பிரபலப்படுத்தப் பட்டுள்ளது. ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள் பழக்கியிருக்கிறார்கள். அவர்கள் முதலில் செய்து கடை போட்டு விற்க, இப்பொழுது ஊர் முழுக்க பிரதானமாக இருப்பது லாலாக் கடைகள் எனப்படும் அல்வாக் கடைகள்தான். ஆனால் திருநெல்வேலியில் விற்கப்படும் எல்லா அல்வாக் கடைகளிலும் ஒரிஜினல் அல்வா விற்கப்படுவதில்லை. இரண்டே இரண்டு கடைகள்தான் தரமான ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா விற்கிறார்கள். மற்றதெல்லாம் வழக்கம் போல டூப்ளிகேட்டுகள். மைதா மாவு, கோதுமை மாவில் அலுங்காமல் அல்வா செய்து விடுகிறார்கள். வீட்டிற்கு வாங்கிப் போய் வாய்க்குள் போட்டால் வாயை அப்புறம் திறக்கவே முடியாது. அப்படியே ஒட்டிக் கொள்ளும், ஆகவே சரியான கடையாகப் பார்த்து அல்வா வாங்க வேண்டும் இல்லையென்றால் நிஜமாகவே அல்வா கொடுத்து விடுகிறார்கள். அப்படிப் பிரபலமான இரண்டு அல்வாக் கடைகளில் ஒன்று, ‘இருட்டுக் கடை’ எனப்படும் பாடல் பெற்ற (சாமி படத்தில் திருட்டுக் கடை அல்வாதான் என்று பாடலில் இடம் பெற்ற) அல்வாக் கடை. இந்தக் கடை நெல்லையப்பர் கோவிலுக்கு முன்பாக மிகச் சிறியதாக உள்ளது. கடைக்கு பெயர் கிடையாது. லைட்டு கிடையாது, சாயங்காலம் கொஞ்ச நேரம் மட்டும் திறந்து வைத்து விற்பார்களாம். அதற்குள் ஏகக் கூட்டம் வந்து முண்டியடித்து வாங்கிக் கொண்டு போய் விடும்;  அப்புறம் மறுநாள்தான். நாங்கள் அந்தச் சமயத்தில் போகாததால் எங்களுக்கு அந்தக் கடையில் வாங்கும் பாக்யம் கிடைக்கவில்லை. இருட்டுக் கடையையும் , கடையில் அல்வாவை விற்பனைக்காக இறக்கி வைக்கப் பட்டிருக்கும் அல்வாவையும் புகைப் படங்களில் காணலாம் (இதுதான் நான் உங்களுக்கு கொடுக்கும் அல்வா).

— ச.திருமலை

தேவையான பொருள்கள்:

சம்பா கோதுமை – 200 கிராம்
சர்க்கரை – 750 கிராம்
நெய் – 400 கிராம்

சம்பா கோதுமை கிடைத்தபின் செய்து படம் இங்கே சேர்க்கப்படும். அதுவரை ச.திருமலையின் ஆல்பத்திலிருந்து எடுத்த இருட்டுக் கடை திருட்டு (அவரிடம் அனுமதி வாங்காமல் எடுத்ததால்) அல்வாவை வைத்து அட்ஜஸ் செய்து கொள்ளவும்.

thirunelveli iruttuk kadai halwa (ready for sales)

செய்முறை:

 • சம்பா கோதுமையை முதல் நாளே தண்ணீரில் ஊறவைத்து கிரைண்டரில் நன்றாக அரைக்க வேண்டும்.
 • நைசாக அரைக்க அரைக்க கோதுமை பாலாக வர ஆரம்பிக்கும். அதை ஒரு துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.
 • அடுப்பில் அடிகனமான கொஞ்சம் பெரிய வாணலியாக வைத்து, அதில் பாலை ஊற்றிக் காய வைக்கவும்.
 • பால் லேசாகச் சூடானதும், சர்க்கரைச் சேர்த்துக் கிளற ஆரம்பிக்க வேண்டும். கிளறுவதை இனி நிறுத்தவே கூடாது.
 • கலவை கொதித்து, இறுகி, கெட்டியான பதத்திற்கு வரும்போது, சுத்தமான நெய்யைச் சேர்த்துக் கிளற வேண்டும்.
 • விடாமல் கிளறிக்கொண்டே இருந்தால், அல்வா நல்ல குங்குமச் சிவப்பில் வரும்.
 • இறுகலான பக்குவத்தில் பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும், இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தி, ஆறவைத்து உபயோகிக்கலாம்.

* கல் உரல் அல்லது கிரைண்டரில் தான் அரைக்கலாம். மிக்ஸியில் அரைக்கக் கூடாது

* முந்திரி மாதிரி பருப்புகள், கலர் எதுவும் சேர்க்கக் கூடாது.