இது பெரிய சமையல் குறிப்பா என்று யாரும் வரவேண்டாம். ஆனால் எனக்கு இதில் சொல்ல கொஞ்சம் இருக்கிறது.
மிளகாய், தனியா, சீரகம், மிளகுப் பொடிகள் பாக்கெட்டுகளில் வாங்குவதே இப்போது எல்லோருக்கும் வழக்கமாகி விட்டது. ஆனால் உண்மையில் அவைகளின் shelf life அவ்வளவு நாள்கள் வருகிறதா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. நிச்சயமாய் எனக்கு ஹாங்காங், மும்பை போன்ற ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில் இவை எடுத்து வைத்த 15 நாளில் கெட்டுப் போகின்றன.

பாட்டி காலங்களில் இவைகளை வெயிலில் காயவைத்து அரைப்பார்கள். இப்போது யாருக்கும் மொட்டை மாடியும் சொந்தம் இல்லை. வெளியில் வைத்து எடுத்து உபயோகிப்பது போல் சுற்றுச் சூழலும் அவ்வளவு சுத்தமாக இல்லை. இதுவே சாம்பார், ரசப் பொடி, கறி மசாலாப் பொடிகளுக்கும் பொருந்தும். அதனால் பொருள்களை நன்கு வாணலியிலேயே வறுத்துக் கொள்ளலாம். ஒவ்வொன்றிலும் 50 கிராம் எடுத்துக் கொண்டு, நன்கு வறுத்து, ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொண்டால் பல நாள்களுக்குக் கெடுவதில்லை. (வறுத்திருப்பதால் மிக்ஸியும் அதிக சிரமம் இல்லாமல் அரைக்கும்.) மற்றும் இதன் வீர்யமும்(காரம், குணம். கொஞ்சம் உபயோகித்தாலே போதும்.) மணமும் மற்றதை விட ஏன் அதிகமாக இருக்கிறது என்பதும் ஆராயப் பட வேண்டிய விஷயம். ஒருமுறை சொந்தமாக அரைத்து சமைத்துப் பழகியவர்கள் மீண்டும் கடைகளில் வாங்க மாட்டார்கள்.

ஹாங்காங்கில் சார்ஸ் வந்த போது அதிசயமாக ஒரு இந்தியருக்குக் கூட அது தாக்கவில்லை என்று ஒரு கட்டுரை படித்தேன்.(நாங்கள் தான் வீட்டை விட்டே வெளியே வரவில்லையே.) காரணம் அவர்கள் உணவில் சேர்க்கும் அதிகமான மஞ்சள் தூள் என்று ஆராய்ந்து எழுதியிருந்தது அந்தக் கட்டுரையில். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனாலும் அதை உபயோகிப்பதே எனக்கு நம்பிக்கையைத் தருவதாக இருக்கிறது. விரளி மஞ்சளை வாங்கி உடைத்து அரைத்துக் கொள்வதில் கடையில் கிடைப்பதை விட நிறம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும், கலப்படமில்லாத நிஜ நிறம் என்பதில் ஒரு திருப்தி.
உண்மையில் இதற்கெல்லாம் அதிக நேரம் எடுக்கிறதா என்றால் இல்லை. எது தீர்ந்திருக்கிறதோ அதை வாணலியில் சாம்பார் அல்லது கறிக்காக அடுப்பில் வைக்கும்போது அதற்கு முன்னால் ஒரு 2 நிமிடம் இதை வறுத்துக் கொள்கிறேன். ஆறியதும் 2 நிமிடத்தில் அரைத்துக் கொள்கிறேன்.

8 மிளகு உணவில் இருந்தால் எதிரி வீட்டில் கூட கை நனைக்கலாம் என்று சொல்வார்கள். சீரகமும் தனியாவும் கூட உடலுக்கு மிக முக்கியமான உணவுப் பொருள்கள். இவ்வளவு முக்கியப் பொருள்களை, அன்றாடம் உபயோகிக்கும் பொருள்களை முடிந்தவரை வீட்டிலேயே அவ்வப்போது அரைத்துக் கொள்ளவும்.
ஒருவேளை இதுகூட முடியாதவர்கள் 😦 பொடிகளை வாங்கி வாணலியில் வறுத்து எடுத்துவைத்துக் கொள்ளவும். கெடாமல் இருக்கும். மணமும் அதிகமாக இருக்கும்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...