புளி சேர்க்காமல் தயாரிக்கும் ரசம். புளி ஆகாத ஏதாவது நாட்டு மருந்து சாப்பிடும் நாளில் அல்லது அதிகப் புளி சேர்த்து வேறு குழம்பு, கூட்டு வகைகள் செய்யும்போது ரசத்தை இந்த முறையில் தயாரித்துக் கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்:
தக்காளி – 4
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
பருப்புத் தண்ணீர் – 2 கப்
வறுத்து அரைக்க:
எண்ணெய் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன் (விரும்பினால்)
தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்
தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.
செய்முறை:
- எண்ணெயில் காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகை சிவக்க வறுத்து, தேங்காய்த் துருவல், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒன்றரை கப் தண்ணீரில் இரண்டு தக்காளிப் பழங்களை நன்கு மசித்துக் கொள்ளவும்.
- மீதமிருக்கும் தக்காளிகளை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூளையும் தக்காளிக் கரைசலுடன் சேர்த்து அடுப்பில் வேகவைக்கவும்.
- தக்காளி வெந்ததும், பருப்பு வேகவைத்த தண்ணீர், அரைத்த விழுது சேர்த்து பொங்கி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- சிறிது எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.
விழுது சேர்த்ததும் ரசத்தை அதிகம் கொதிக்கவைக்கக் கூடாது. பொங்கிவந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். இப்படிச் செய்தால் மண்டி தங்காமல் பரிமாறும்போது அடிவரை கலந்தே பரிமாறலாம். இதனால் அரைத்துவிட்ட பொருள் வீணாகாமல், சுவையும் குறையாமல் இருக்கும்.
வியாழன், ஏப்ரல் 2, 2009 at 6:38 பிப
Thanks Jayashree. சந்தோஷி மாதா பூஜையன்று புளிசேர்க்காமல் சாப்பிட இதை செய்துகொள்வேன்.
வியாழன், ஏப்ரல் 2, 2009 at 6:45 பிப
தூள்!!!
ம்ம்ம். ஜெய்ஸ்ரீ நீங்க உணவு விடுதி ஆரம்பிக்கும் போது என்னை டேஸ்டராச் சேர்த்துக் கொள்வீர்கள:)0
வியாழன், ஏப்ரல் 2, 2009 at 11:06 பிப
Vasanthi Kumar: நீங்கள் நாளை(வெள்ளிக்கிழமை)க்குள் இந்த மறுமொழியைப் படித்துவிடவேண்டுமே என்ற பதற்றத்தோடு தட்டுகிறேன்.
சந்தோஷி மாதா பூஜை விரதத்திற்கு இதை செய்து சாப்பிட முடியாது. எனக்குத் தெரிந்து விரதமிருப்பவர்கள் புளி என்று இல்லாமல் புளிப்புச் சுவை எதுவுமே சாப்பிட/அடுத்தவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள். அதில் தயிர், எலுமிச்சை, மாங்காயிலிருந்து இதிலிருக்கும் தக்காளி உள்பட எல்லாம் அடக்கம். வாழைப்பழத்தில் பச்சைப் பழம் தவிர்த்து வேறு வகை பழங்கள்கூட சாப்பிடமாட்டார்கள்.
[ஆவாஹனம் செய்யும்போது சொம்பில் மாவிலை மட்டும் வைக்கலாமா என்று விருகம்பாக்கம் கோயில் பட்டரைக் கேட்டபோது அவர் நான் சீண்டுகிறேன் என்று நினைத்துவிட்டார். :(]
உங்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்கலாம். உங்கள் மறுமொழி, பதிவை முழுமையாகப் படிக்காமல் தட்டியிருக்கலாம் என்றே நம்புகிறேன்.
இதை அடுத்து நான் எழுதியிருக்கும் பருப்புப் பொடிகளை நீங்கள் முயற்சிக்கலாம். 🙂 வாழ்த்துகள்.
வியாழன், ஏப்ரல் 2, 2009 at 11:10 பிப
ரேவதிநரசிம்ஹன், பெரியவங்க எல்லாம் இப்படி பீதியைக் கிளப்பினா நான் எப்படி திறக்கறது? நானே எதிர்த்த உணவு விடுதிலதான் சாப்பிடுவேன். 🙂
வெள்ளி, ஏப்ரல் 3, 2009 at 12:17 முப
HI
THANKS LOT FOR YOUR WONDERFUL RECEPIES AND ESPECIALLY THOSE TAMIL LITERARY COMMENTS.I REALLY ENJOY A LOT
WITH REGARDS
VASANTHI
வெள்ளி, ஏப்ரல் 3, 2009 at 10:27 முப
Vasanthi, நீங்க வேற வசந்தியா அதேவா? Anyway, நன்றி. 🙂
புதன், நவம்பர் 17, 2010 at 5:18 பிப
rasam try pandrane delhi kuliruku nalla rasam thanks pa
வெள்ளி, மார்ச் 23, 2012 at 12:27 பிப
supera irundhadu . very tasty.