தேவையான பொருள்கள்:
ஜவ்வரிசி – 1கப்
தண்ணீர் – 3 கப்
பச்சை மிளகாய் – 6
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 2 சிட்டிகை
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம் பழம் – 1
செய்முறை:
- இரவில் ஒரு கப் ஜவ்வரிசிக்கு இரண்டு கப் தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
- பச்சைமிளகாய், பெருங்காயம், உப்பு மூன்றையும் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- குக்கரில் உள்பாத்திரத்தில் மேலும் ஒரு பங்கு தண்ணீர் வைத்து அரைத்த விழுதைச் சேர்த்து சூடாக்கவும்.
- தண்ணீர் காய்ந்ததும் ஊறவைத்த ஜவ்வரிசியை(அதன் தண்ணீருடன்) சேர்த்துக் கலந்து, குக்கரை மூடி, வெயிட் போட்டு மிதமான சூட்டில் மேலும் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களுக்கு வைத்திருந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
- மறுநாள் காலையில் கசகசாவை வெறும் வாணலியில் லேசாக வறுத்துச் சேர்க்கவும்.
- எலுமிச்சைச் சாறு கலந்து சுவையைச் சரிபார்க்கவும். இந்தப் பக்குவத்தில் சிறிது மாவை சாப்பிட்டுப் பார்த்து, தேவையான திருத்தங்களைச் செய்துகொள்ளலாம்.
- பிளாஸ்டிக் பேப்பரில் ஒரு சிறிய ஸ்பூனால் எடுத்து வரிசையாக விடவும். (வட்டமாக இருக்கத் தேவையில்லை. குழந்தைகள்கூட செய்யலாம்.)
- வெயிலில் நன்கு காயவைத்து, தேவைப்படும்போது எண்ணெயில் பொரிக்கலாம்.
- சாதாரண ஜவ்வரிசி வடாத்திற்கு சிறிது தயிர் சேர்த்துச் செய்தால் வெள்ளை வெளேரென்று இருக்கும்.
-0-
இந்த ஜவ்வரிசி வடாத்தை பலவிதமான உபரிமசாலாக்களுடன் செய்யலாம் என்றாலும் முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கே சொல்லியிருக்கிறேன்.
வெங்காய ஜவ்வரிசி வடாம்:
மேற்சொன்ன முறையிலேயே பச்சை மிளகாய் அரைக்கும்போது ஒரு பெரிய வெங்காயத்தையும், அதற்கு ஈடாக அதிகம் ஒரு பச்சை மிளகாயும் அரைத்துச் சேர்க்கவேண்டும்.
தக்காளி ஜவ்வரிசி வடாம்:
ஒரு கப்புக்கு இரண்டு பெரிய தக்காளி என்ற விகிதத்தில் பச்சை மிளகாயுடன் அரைத்துக் கலக்கலாம். அல்லது தக்காளியை தனியாக அரைத்து சாறை வடிகட்டி சேர்த்துக் கொள்ளலாம். சாறு சேர்ப்பதால் தண்ணீரைக் குறைத்து உபயோகிக்கவும். இந்த வகைக்கு, எலுமிச்சை சில துளிகள் சேர்த்தால் போதும்.
பூண்டு ஜவ்வரிசி வடாம்:
10 லிருந்து 15 பூண்டுப் பற்களை பச்சைமிளகாயுடன் சேர்த்து அரைக்கவேண்டும்.
பிரண்டை ஜவ்வரிசி வடாம்:
பிஞ்சு பிரண்டையாக எடுத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி பச்சைமிளகாயுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
வேப்பம்பூ ஜவ்வரிசி வடாம்:
வேப்பம் பூக்களை மரத்திலிருந்து நேரடியாகப் பறித்து அரைக்காமல் அப்படியே கூழோடு கலந்துகொள்ளலாம்.
புதினா கொத்தமல்லி ஜவ்வரிசி வடாம்:
கொத்தமல்லி முக்கால் பங்கும் புதினா கால் பங்கும் இருக்குமாறு கால் கப் எடுத்து பச்சை மிளகாயோடு அரைத்துச் சேர்க்க வேண்டும்.
- மிக்ஸியில் இவைகளை விழுதாக அரைக்கமுடியவில்லை என்றால், அவற்றோடு 2 டீஸ்பூன் கூழையே சேர்த்து ஒரு ஓட்டு ஓடவிட்டால் விழுது நைசாக அரைந்துவிடும்.
திங்கள், மார்ச் 30, 2009 at 9:48 பிப
நேயர் விருப்பத்தை உடனடியா நிறைவேற்றி வைத்தமைக்கு நன்றி (அம்மாவோட டைரில வடாம் வரிசைல இதுதான் இருந்தது, நீ ஏன் நடுவுல ரொம்ப சந்தோஷப் பட்டுக்கறன்னு நீங்க நினைச்சாலும் :)))) )
செவ்வாய், மார்ச் 31, 2009 at 7:09 முப
வடாம் – வடகம் எது சரி எனத் தெரியும்வரை நீங்கள் ஏன் வடாம்/வடகம் குறித்த இடுகைகளை நிறுத்தி வைக்கக் கூடாது?
செவ்வாய், மார்ச் 31, 2009 at 4:02 பிப
நியாயமா சொன்னீங்க ஹ.பி. எல்லாம் இந்த அம்பி தொல்லைதான். மேடம். அடுப்பு ஊதினது போதும். கொஞ்சம் வெளிய வாங்க.(ஆனா இந்த பதிவு எல்லாம் நாங்க தங்கமணி கிட்ட காட்டி நல்ல பேரு வாங்கிப்போம். அதுக்கு உதவும். ம்ம்.ம்.)
புதன், ஏப்ரல் 1, 2009 at 11:10 முப
லக்ஷ்மி: அட, நீங்களும் அம்மா டைரி ஆளா? அப்பப்ப ஏதாவது அதுலேருந்து எடுத்துவிடுங்களேன். நாங்க எல்லாம் வந்து பெண்ணியவாதி லாஜிக் லக்ஷ்மி கல்யாணம் ஆனதும் சாம்பார்வெக்க சமையல்குறிப்பு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்கன்னு வாருவொமில்ல? 🙂
புதன், ஏப்ரல் 1, 2009 at 11:15 முப
haranprasanna, Vijay:
வந்துட்டாங்கய்யா! வந்துட்டாய்ங்க!!
எங்க வீட்டு கிச்சனையே முழுக்க இடிச்சுத் தள்ளிட்டாங்க. அதுக்கே கலங்காம டிவி சமையல் நிகழ்ச்சிமாதிரி டேபிள் போட்டு ஹால்ல சமைச்சுகிட்டிருக்கேன். (ஒரு மார்க்கமா நல்லாத்தான் இருக்கு.)
தமிழுக்காகவெல்லாம் தாளிக்கறதை நிறுத்திடுவேனாக்கும்? போய் புள்ளைகுட்டிங்களைப் படிக்கவைங்க! 🙂
[ஆக யாருக்கும் வடகமா, வடாமான்னு சரியாத் தெரியலை. ஓக்கே]
புதன், ஏப்ரல் 1, 2009 at 12:46 பிப
அப்பப்பா!! என்ன ஒரு வெயில்!!! வடாம் ரெடி.
அப்படியே எந்த எண்ணையில் பொறித்தால் வடாம் மிகவும் சுவை என்பதையும் சொல்லவும். 🙂
புதன், ஏப்ரல் 1, 2009 at 2:46 பிப
இல்லப்பா, அம்மா இருந்த வரைக்கும் நானெல்லாம் சமையல் செஞ்சு பாக்கற ஆர்வமே இல்லாம திரிஞ்சதால அப்படியெல்லாம் ஒரு கொடுப்பினையும் இல்லாமலே போயிடுத்து. என் சமையல் எல்லாமே சாப்பிட்ட சுவைய டார்கெட்டா வச்சு, யூகத்தின் பேர்ல செய்து நானாவே கத்துகிட்டதுதான். மேலதிகமா உங்க ப்லாக், சமையல் குறிப்பு நிகழ்சிகள்னு பாத்து என் அறிவை அப்டேட் செஞ்சுக்கறேன். நான் குறிப்பிட்டது உங்க அம்மாவோட டைரிய – அதை பாத்துதானே எழுதறதா நீங்க சொல்லிகிட்டிருக்கீங்க. :)))
அப்புறம், எனக்கு சமையல் குறிப்பு எழுதறதுன்றது மட்டம்னெல்லாம் என்னிக்குமே எண்ணம் இருந்ததில்லைப்பா. ஆனா பொண்ணுன்னா சமைக்கணும்னு மட்டுமே நினைக்கற புத்திதான் மட்டம்னு நினைக்கறேன். சோ, சமையல் குறிப்பெல்லாம் எழுதாம இருக்கறதுதான் பெண்ணியம் பேசறதுக்கான அடையாளம்னெல்லாம் நினைப்பில்லை. எழுதாததுக்கான காரணம் நானெல்லாம் எழுதி, யாரு சமைச்சுப் பாத்து ரிஸ்க் எடுக்கப் போறாங்கன்ற அலட்சியமும், பொதுவாவே எழுத எனக்கு இருக்கற சோம்பலும்தான் காரணம். ஆனா அது இப்படி அடுத்தவங்க வாருவதற்காவது பிரயோசனப்படுமென்றால், பதிவுக்கு மேட்டர் தேறாத, எழுதியே ஆகணும்னு கை அரிக்கற ஒரு பொன்னாளில் எழுதிட்டா போச்சு…
புதன், ஏப்ரல் 1, 2009 at 9:59 பிப
நீங்கள் செய்து, படம் பிடித்துக் காட்டியிருப்பதன் பெயர் வடாம். வடகம் என்பது வேறு. வெங்காயம், வெள்ளைப்பூண்டு, கடுகு, வெந்தயம் கலந்த கலவை அது. (காரக்)குழம்பு தாளிப்பதற்கு உபயோகப்படுத்துவார்களாம். (என்று சொன்னார்கள். யார் என்பது உங்களுக்குத்தான் தெரியுமே)
வியாழன், ஏப்ரல் 2, 2009 at 7:52 முப
பொதுவா தேங்காயெண்ணெயில பொரிச்சா சுவையா இருக்கும். 🙂 ஆனா ஏதாவது ரீஃபைண்ட் எண்ணெய் சாதாரண சமையலுக்கு உபயோகிப்பதே இதுக்கும் உபயோகிச்சா அவ்ளோ ஆபத்தில்லை.
லக்ஷ்மி:
//குறிப்பெல்லாம் எழுதாம இருக்கறதுதான் பெண்ணியம் பேசறதுக்கான அடையாளம்னெல்லாம் நினைப்பில்லை.//
நீங்க நினைக்கலை. நினைக்கற ஆளுமைகளுக்காக சொன்னேன். நீங்க வேணா பிரண்டை அல்லது சேனையை பொடிப் பொடியா அரிஞ்சு பாருங்க. 🙂
பாகீ, நன்றி- சொன்னவங்களுக்கு. கொஞ்சம் எனக்கும் அப்படி ஒரு எண்ணம் ஓடித்து. நேரமெடுத்து 😦 எல்லாத்தையும் மாத்திட்டேன். வடகத்துலயும் நிறைய விதம் இருக்கு.
வியாழன், ஏப்ரல் 8, 2010 at 4:27 பிப
the receipe is very useful & can easily be folwd: by the way will u b kind enough to write the secretsof making good nellika pickle thanks