என் சின்ன வயதில் இந்த ஏப்ரல், மே மாதங்கள் வந்தாலே வீட்டுக்கென்று சில நடவடிக்கைகள், வாசனைகள், பிரச்சினைகள் என்று களைகட்டும்.
அன்றாடம் மாவடு, வேப்பம் பூ, கஸ்தூரி மஞ்சள், வற்றல் வடாம், வடகம், அப்பளம் இவற்றில் ஏதாவது ஒன்றாவது வீட்டில் பெரியவர்களுக்கு வேலை எடுக்கும். இதோடு வருஷசாமான் என்று அப்பொழுதெல்லாம்– புளி, துவரம் பருப்பு, கடுகு, மிளகு, சீரகம், மிளகாய் வற்றல் என்று மொத்தமாக ஒரு வருடத்திற்கான சாமான்களை வாங்கி, சுத்தம் செய்து வெயிலில் உலர்த்தி எடுத்துவைப்பார்கள். ஒரு துணியைக் கீழே விரித்து, பலகையை மடியில் சாய்த்துவைத்துக் கொண்டு கடுகை கொஞ்சம் கொஞ்சமாக சரியவிட்டு சுத்தம் செய்வதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். முழுஆண்டுத் தேர்வு, [இதைத்தான் பிரச்சினை என்று சொன்னேன். :)], மொட்டை மாடி அரசாட்சி, புளியங்கொட்டை கலக்ஷன், லீவுக்கு ஊருக்குப் போவது என்று ஒரே களேபரமான மாதங்கள் இவை இரண்டும்.
இப்பொழுதெல்லாம் வெளியே சாமான்களை காயவைக்கக் கூடிய அளவுக்கு சுற்றுப்புறம் தூய்மையாக இருக்கிறதா என்றே பயமாக இருக்கிறது. சாம்பார் பொடி, ரசப்பொடி சாமான்களைக் கூட நான் வெயிலில் வைப்பதில்லை. வாணலியில் லேசாக வறுத்து அரைத்துவிடுகிறேன்.
வடாத்திற்கு மாவு கிளறியதும் சுடச் சுட மாவை வாயில் போட்டால் லேசாக ஒட்டிக்கொண்டு விர்ரென்று காரம் காதில் ஏறும். மாவு ஆறினாலும் சுகம் தான். பிழிந்த பிறகு ஓஹோ. “வடாம் பிழிஞ்சதை சாப்பிடாத. மாவாவே எவ்வளவு வேணுமோ சாப்பிட்டுட்டு இடத்தைக் காலி பண்ணு; எங்களுக்குப் பிழியற வேலையாவது மிச்சமாகும்” என்று அம்மா திட்டி (பாட்டி அதெல்லாம் எதுவும் சொல்வதில்லை.) தட்டுநிறைய பச்சை மாவை நீட்டினாலும், அது ஓரளவுக்கு மேல இறங்குவதில்லை. பிழிந்தவடிவம் வேறு சுவை என்பதால் இதற்கெல்லாம் அடிபணிய அவசியமுமில்லை. எனக்கென்னவோ அதே மாவில் பிழிந்தாலும் ரிப்பனும், ஓமப்பொடியும், முள்ளு முறுக்கும் தனித்தனிச் சுவையாக இருப்பதாகத் தோன்றும்.
பெரியவர்கள் இரண்டுபேரும் பாலுக்கு பூனையை காவல் வைத்துவிட்டு காலி அண்டா குண்டா உழக்கு எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு கீழே போய்விடுவார்கள். அப்புறம்தான் நம் வேலையே(பரிட்சைக்குப் படிப்பதுதான்) ஆரம்பிக்கும். மலர்ந்தும் மலராத பாதி மலர்போல காய்ந்தும் காயாத கால் காய்ச்சல், அரைக் காய்ச்சல் வடாம், முக்கால் காய்ச்சல் வடாம்களை அந்த நாளில் இழந்துவிட்டால் இனி அடுத்த வருடம் உச்சிவெயிலில்தான் கிடைக்கும். சும்மா நச் நச் என்று லாகிரியாக இருக்கும். இதில் நம்வீட்டு வடாத்தைவிட அக்கம்பக்க மொட்டைமாடி வடாம்கள்தான் மேலும் சுவையாக இருப்பதோடு அந்த சீசன் முழுமைக்கும் குறையாமல் கிடைக்க அதுவே வழி. திருட்டு வடாம்தான் என்றாலும் அந்தந்த வீட்டு வாரிசோடு சேர்ந்து எடுக்கும்போது அதில் இருக்கும் திருட்டுக் கறை அழிந்து அது ஒரு உடன்படிக்கை என்ற அளவில் ஆகிவிடும். 🙂
இப்பொழுதெல்லாம் இந்த வடாம் மாவு, அப்பள மாவு, இலைவடாம் இவையெல்லாம் தயாரிக்க இல்லாவிட்டாலும் பச்சையாக சாப்பிடவாவது செய்தால் பரவாயில்லை என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை. காயவைக்கப் போவதில்லை என்றால் சீசனே தேவையில்லை. கொட்டும் மழையிலும் செய்துகொள்ளலாம்.
-0-
தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1 கிலோ
ஜவ்வரிசி – 200 கிராம்
பச்சை மிளகாய் – 100 கிராம்
எலுமிச்சம் பழம் – 3 (பெரியது)
உப்பு – தேவையான அளவு (சுமார் ஒரு கைப்பிடி)
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
- பச்சரிசி, ஜவ்வரிசி இரண்டையும் நன்கு சுத்தம் செய்து மிஷினில் நைசாக அரைத்து வாங்கவும்.
- அடி கனமான குண்டான் அல்லது பிரஷர் குக்கரில் 12 கப் தண்ணீர்விட்டு கொதிக்கவிட வேண்டும்.
- கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த மாவை மொத்தமாகக் கொட்டி, கைவிடாமல் கிளறவேண்டும்.
- சுமார் பத்து நிமிடங்களுக்குள் மாவு வெந்து நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து இறுக மூடிவைக்கவும்.
- காம்பில்லாத பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து நைசாக அரைத்து, சிறிதளவு தண்ணீரில் கரைத்து பெரிய சக்கை இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும்.
- மிளகாய்க் கரைசல், எலுமிச்சைச் சாறு இரண்டையும் கிளறிய மாவில் கொட்டி நன்கு கலக்கவேண்டும். [இந்த நிலையில் சுவையை சோதித்து தேவைப்பட்டால் திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.]
- சுத்தமான(?!) மொட்டைமாடித் தளத்தில் துணி அல்லது பிளாஸ்டிக் பேப்பரை விரித்து காற்றில் பறக்காமலிருக்க நான்கு பக்கமும் கற்களை வைக்கவும்.
- கை ஒட்டாமலிருக்க, ஒரு பாத்திரத்தில் மோர்கலந்த தண்ணீரைத் தொட்டுக்கொண்டு உழக்கில் மாவை அடைத்து, ஓமப்பொடி, ரிப்பன், முள்ளுமுறுக்கு என்று விரும்பிய வடிவத்தில் வடகம் இடலாம்.
- வெயிலில் 3, 4 நாள் காயவைத்து (ஒடித்தால் டக்கென்று ஒடியவேண்டும்.) காற்றுப் புகாத டப்பாவில் எடுத்துவைக்கவும்.
- தேவைப்படும்போது எண்ணெயை நன்கு சுடவைத்து, மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
- 2 டீஸ்பூன் கசகசாவையும் பொடித்துக் கலந்துகொண்டால் நல்ல மணமும் சுவையும் இருக்கும்.
- எல்லா மாவையும் உப்பும் காரமும் கலந்து செய்யாமல் குழந்தைகளுக்காக கொஞ்சம் மாவில் சர்க்கரை, பழ எசன்ஸ், கலர் சேர்த்துச் செய்யலாம்.
* பொதுவாக மாவை முதல்நாள் இரவின் கடைசிவேலையாக கிளறிவைத்துவிட்டு, மறுநாள் அதிகாலையில், பச்சைமிளகாய்க் கரைசல், எலுமிச்சைச் சாறைக் கலந்து வெயில் ஏறுவதற்கு முன்பே பிழிந்துவிடுவது சரியானது. இந்த முறையில் வடாம் சீக்கிரம் காய்ந்து பிரிக்கவரும். காலையிலே எழுந்துதான் கிளறினால் வேலையும் அதிகம். சூட்டில் பிழிவதும் சிரமம்; பிளாஸ்டிக் பேப்பரில் சூடோடு பிழிவது நல்லதுமில்லை.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
கலவை சாதங்கள், சாம்பார்/குழம்பு சாதம், ரசம் சாதம், புலவு, பிரியாணி வகைகள்… இப்படி எல்லாம் அடுக்கத் தேவையில்லை. சும்மாவே சாப்பிடலாம். 🙂
சனி, மார்ச் 28, 2009 at 1:33 பிப
வடகம், வடாம் – எது சரியான வார்த்தை அல்லது இரண்டும் வேறுவேறா என்று தெரிந்தவர்கள் சொன்னால் திருத்திக் கொள்கிறேன்.
சனி, மார்ச் 28, 2009 at 7:48 பிப
வடாமும் புளியோதரையும்…ஹ்ம்ம்… தேவாம்ருதம்.
ஞாயிறு, மார்ச் 29, 2009 at 1:02 முப
ஜெயஸ்ரீ,
ரொம்ப நாளா உங்களுக்கு பின்னூட்ட்டம் எழுதனும்னு நினைப்பேன் … இப்போ தான் எழுத முடிஞ்சுது. நான் படிக்கும் வலை தளங்களில் இதுவும் ஒன்று … அருமையான எழுத்து நடை … சில சமயங்களில் சுஜாதா ஞாபகம் வருது … உங்களோட சேவைக்கு நன்றி சொல்ல முடியாது … அவ்வளவு செஞ்சு சாபிட்டாச்சு … அதுவும் பார்த்தசாரதி புளியோதரையும் தயிர் சாதமும் …
– மணி
ஞாயிறு, மார்ச் 29, 2009 at 2:29 முப
அப்படியே என் பள்ளி நாட்களை ஞாபக படுத்திட்டிங்க. என் அண்ணா பச்சை வடாம் பொரிக்காமல் சாப்பிடுவான், என் அம்மா வயறு வலிக்கும் என திட்டினாலும் காக்காக்களுக்கு வேலை வைக்காமல் நாங்களே பாதி காலி செய்வோம். வடாம்தான் சரி என்று நினைக்கிறேன். தாளிக்கும் குழம்பு வடகம் வேறு, வடாம் வேறுதானே?. கருவடாம் என்றும் சொல்வார்கள். இத்தனை பொறுமையுடன் இவ்வளவும் செய்யும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்.
ஞாயிறு, மார்ச் 29, 2009 at 9:02 முப
ஜவ்வரிசி வடாம் குறிப்பு கொஞ்சம் சீக்கிரம் கொடுத்தால் வெயில் வீணாப் போகாம கொஞ்சம் ரெடி பண்ணி, சந்தோஷமா சாப்டுப்பேன். ஏன்னா நமக்கிருக்கற சக்திக்கு குழல்ல போட்டு புழியவெல்லாம் ஆகாது. அதான்… ஹிஹி…
புழியத்தான் மாட்டேனே தவிர ஊர்ல யார் வீட்டுல வடாம் பிழிஞ்சாலும் என் பங்கு மாவு சாப்பிட தனியா வந்துரும். என் வடாத்து மாவாசை ஊருக்கே தெரிஞ்ச ரகசியமாக்கும். :)))
ஞாயிறு, மார்ச் 29, 2009 at 2:15 பிப
பழைய்ய வடாம், கருடாம் ஞாபகங்கள் வருகின்றன. செய்முறை புதுசாய் இருக்கிறது. செய்துபார்க்க வேண்டும். சம்மர் லீவில் இந்த தடவை டிரை பண்ணிவிடுகிறேன். இங்கு ஏழாம் மாடியில் பால்கனியில் காயப்போடுவதெல்லாம் பிரச்சனையில்லை. இங்கு நெருல் பக்கத்தில் யாராவது கருடாம் செய்து கொடுக்கிறாரகளா என்று தெரியவில்லை. ஆனால், ஊரிலிருந்து வந்ததே ஏகத்துக்கு இருக்கிறது. எண்ணையை வைத்துப் பொறிப்பது என்றாலே நவீனவர்கள் ஓடிப்போகும்போது இதிலெல்லாம் மெனக்கட மனசு சலிச்சுத்தான் போகிறது. உங்கள் மலரும் நினைவுகளும், பின்னூட்டங்களும் சுவாரசியமாய் இருக்கிறது. தை பொறந்தால் பத்தாயத்தில் உலர்த்தி நெல் நிரப்பவேண்டும், மார்கழியில் மட்டும் நார்த்தலைப்பொடி அரைப்போம், மாசி, பங்குனியில் திருச்சியில் மட்டும் கிடைக்கும் அசத்தல் மாகாலி சுத்தம்பண்ணி பண்ணி கை வலிக்கும் காலம், சித்திரை வைகாசியில் இந்த வடாம், அப்பளம் உத்சவம். இப்படி காலெண்டர் முழுமையான காலங்கள். குழந்தைகளுக்குச்சொன்னால் ஏதோ கற்பனைமாதிரித்தான் நமக்கே தோணுகிறது. என் சகோதரி கல்யாணத்துக்கு பத்து நாட்கள் உட்கார்ந்து அப்பளம் இட்டோம், இட்டோம் இட்டோம் எல்லோரும் சேர்ந்து. ஆனால், இப்போது ரெடிமேட் யுகத்தில் பணத்துக்கு மதிப்பு குறைந்து டயத்துக்கு மதிப்பு கூடிய நிலையில் இதெல்லாம் ஒரு பொருந்தாத முயற்சியாய்த்தான் தோணுகிறது.
ஞாயிறு, மார்ச் 29, 2009 at 11:35 பிப
வடாம் தான் சரி.மற்றதெல்லாம் அன்னியமாகப்படுகிறது.
திங்கள், மார்ச் 30, 2009 at 4:41 பிப
வடாம்.வத்தல் ஜவ்வரிசி வத்தல். வடாம் கருவடாம். கருவ்டாம்.
சொல் வழக்கு ஜெஸ்ரீ:)
புதன், ஏப்ரல் 1, 2009 at 11:03 முப
அறிவிலி: நீங்க ஆசைப்பட்டதுக்காக படம் எடுத்துப் போட்டிருக்கேன். 🙂 https://mykitchenpitch.wordpress.com/2007/02/19/iyengar-puliyotharai/
ரயில் பயணமும் நல்ல துணையும் இருந்தா இன்னும் நல்லா இருக்கும். 🙂
புதன், ஏப்ரல் 1, 2009 at 11:04 முப
Mani:
உண்மையா என் சொந்த உபயோகத்துக்காகத் தான் இங்க சேமிக்கறேன். இன்னும் கொஞ்சம் பேருக்காவது உபயோகமா இருந்தா மகிழ்ச்சியே.
//சில சமயங்களில் சுஜாதா ஞாபகம் வருது..//
இதுக்கு பதில் நீங்க என்னை திட்டியிருக்கலாம். 🙂
புதன், ஏப்ரல் 1, 2009 at 11:05 முப
uma kumar:
ஒரேயடியா காய்ஞ்ச பச்சை வடாம் கொஞ்சம் சாப்பிட்டதுமே எனக்கெல்லாம் வாய் மேலன்னமெல்லாம் புண்ணாகி வலிக்கும். மாவு, அரைக்காய்ச்சல் எல்லாம்தான் எனக்குச் சரி.
லக்ஷ்மி:
எனக்கென்னவோ இந்த ஜவ்வரிசி வடாம் போரடிக்கறதைவிட குழல்ல பிழியறது சுலபமாவும் சுவாரசியமாவும் இருக்கும்.
புதன், ஏப்ரல் 1, 2009 at 11:07 முப
சொல்மண்டி:
//ரெடிமேட் யுகத்தில் பணத்துக்கு மதிப்பு குறைந்து டயத்துக்கு மதிப்பு கூடிய நிலையில் இதெல்லாம் ஒரு பொருந்தாத முயற்சியாய்த்தான்
தோணுகிறது.//
இது தனிநபர் எண்ணங்களைப் பொருத்ததுன்னு தோணுது. வடாம் வத்தல் பெருசா நேரம் எடுக்கற வேலையோ, செய்ய பெரிய எக்ஸ்பர்ட்டா
இருக்க அவசியமோ இல்லாதது. தயாரிப்புல தப்பெல்லாம் ஆகாது. புதுசாகூட யாரும் செய்யலாம். நம்ப வழமையான தினசரிகளுக்கு நடுவுல இந்தமாதிரி வேலைகள் கொஞ்சம் உற்சாகமாவும் இருக்கு. உலர்த்த நல்ல இடம் இருந்தா வடாம் எனக்குப் பிடிச்ச விஷயம். ஆனா அதுதான் இல்லை. 😦
viruthaimanai: ‘வடகம்’னு லெக்சிகன் அகராதி சொல்லுது. வடாம்ங்கறதுக்கு அர்த்தமும் வடகம்னே சொல்லியிருக்கு.
புதன், ஏப்ரல் 1, 2009 at 11:08 முப
ரேவதிநரசிம்ஹன்:
நானா வெச்சிருக்கறது….:)
அந்தந்த பொருளை அப்படியே முழுமையா மசாலா சேர்த்து காயவைக்கறது வற்றல்/வத்தல். பாகற்காய், கொத்தவரங்காய், சுண்டைக்காய் வற்றல்
மாவாக்கி பிழிஞ்சு பொரிப்பது எல்லாம் வடகம்/வடாம்
உருண்டைகளாக்கி சாம்பார் கூட்டு வகையறால உபயோகிக்கறது கருவடகம்/கருவடாம்.
இப்படியே கண்டின்யூ பண்ணிடவேண்டியதுதான். 🙂