மல்லிகை மகள் மே 2008ல் பிரசுரமானது.
வெயில் காலங்களில் பயத்தம் பருப்பு, வெங்காயம், கீரைகளை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது. ரொட்டி, தால் வகையாக இவற்றைச் செய்து பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு – 3 கப்
கடலை மாவு – 1 கப்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
ஓமம் – 1 டீஸ்பூன்
எள் – 2 டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 2 (பெரியது)
கொத்தமல்லித் தழை – 1 கப் (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்
நெய் அல்லது வெண்ணெய்
செய்முறை:
- இஞ்சி பச்சை மிளகாயை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம் கொத்தமல்லித் தழையை மிகப் பொடியாக அரிந்து கொள்ளவும்.
- கோதுமை மாவு, கடலை மாவு, ஓமம், எள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய் அரைத்த விழுது, தயிர், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் எல்லாவற்றையும் நன்கு கலந்து கையால் அழுந்தப் பிசைந்து கொள்ளவும்.
- தேவைப் பட்டால் மட்டும் இன்னும் சிறிது நீர் சேர்த்து கெட்டியான மாவாக அடித்துப் பிசைந்து ஒரு மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.
- ஊறிய மாவை எடுத்து மீண்டும் அழுத்திப் பிசைந்து, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- உருண்டைகளை மைதா மாவு தோய்த்து, சிறிய சப்பாத்திகளாக இட்டு, நடுவில் சிறிது நெய் அல்லது எண்ணெய் தடவி நான்காக மடித்து, முக்கோண வடிவில் வைத்துக் கொள்ளவும்.
- மடித்து வைத்துள்ள சப்பாத்திகளை மேலும் மைதா மாவு தோய்த்து சப்பாத்திகளாக இட்டு அடுப்பில் தோசைக்கல்லில் போடவும்.
- அடிப்பாகம் சிறிது காய்ந்து மேலே சிறிய சிறிய கொப்புளங்கள் வர ஆரம்பிக்கும்போது திருப்பிப் போடவும்.
- மீண்டும் கொப்புளங்கள் வரும்போது ஃபுல்கா செய்வது மாதிரி ஒரு துணியால் அழுத்தி அழுத்தித் திருப்பிவிடலாம். விரும்புபவர்கள் இந்த நிலையில் மட்டும் சிறிது எண்ணெய் அல்லது நெய் விட்டு கரண்டியால் அழுத்திக் கொடுத்து சாதாரண சப்பாத்தி மாதிரியும் வேகவைக்கலாம்.
- இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும். எண்ணெய் சேர்க்காமல் ஃபுல்காவாகச் செய்திருந்தால், கல்லிலிருந்து எடுத்ததும் மேல்புறம் சிறிது நெய் அல்லது வெண்ணெய் தடவிப் பரிமாறலாம்.
* மடித்து இடாமல் ஒற்றையாகவும் இட்டு எடுக்கலாம்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
ஊறுகாய், தயிர்ப் பச்சடி, தால் வகைகள் இவற்றில் ஏதாவது ஒன்றோடு சாப்பிட சுவையாக இருக்கும். பிரயாணங்களுக்கு எடுத்துச் செல்ல ஏற்றது. சீக்கிரம் கெட்டுப் போகாது.
புதன், மார்ச் 18, 2009 at 9:20 பிப
இந்த மிஸ்ஸி ரொட்டியத்தான் முன்னாடியே சுட்டுப் போட்டீங்களே?? இது வேற மிஸ்ஸோ???
எங்க ஊட்டுக்காரமா கூட உங்கள விட அருமையா சமைச்சாங்கன்னு ஒரு பின்னூட்டம் போட்ட ஞாபகம்..
புதன், மார்ச் 18, 2009 at 9:32 பிப
பழைய பதிவுக்கெல்லாம் போய்ப் பார்க்க வேண்டாம் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்வதுடன் மற்றபடி நல்ல பதிவு என்று மட்டும் சொல்லி என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்..
புதன், மார்ச் 18, 2009 at 10:07 பிப
ஜெயக்குமார், :)))
போகாமலே என்ன நடந்ததுன்னு எனக்கு நினைவு இருக்கு. சரியா ஒருவருஷம் முன்னால போன மார்ச் 19 அந்தப் பதிவைப் போட்டேன்.
நீங்க உங்க மனைவி நல்லா செய்வாங்கன்னு சொல்லிக்கிட்டது ஆலூ போஹா என்கிற அவல் உப்புமா.
புதன், மார்ச் 18, 2009 at 10:16 பிப
//போகாமலே என்ன நடந்ததுன்னு எனக்கு நினைவு இருக்கு. சரியா ஒருவருஷம் முன்னால போன மார்ச் 19 அந்தப் பதிவைப் போட்டேன்.//
இதெல்லாம் மத்தவங்க போய்ப் பாக்குறதுக்கா???
🙂
வியாழன், மார்ச் 19, 2009 at 3:45 பிப
ஜெயஸ்ரீ
உங்கள் பதிவைப்பார்த்து ரவை தோசைக்கு கடலை மாவு சேர்த்தேன். மிக நல்லா வந்தது. இப்போ ரோட்டிக்கும் கடலை மாவு சேர்க்கப்போகிறேன். நல்லா இருக்கும்னு தோணறது.
கமலா
வியாழன், மார்ச் 19, 2009 at 10:35 பிப
ரங்கமணி செய்த மிஸ்ஸிரொட்டி நன்றாகத்தான் இருக்கிறது போல. அதிலும் நீங்கள் அதை அந்த பரிட்சை ஜூரத்திலும் அழகாக போட்டோ எடுத்து போட்டது இன்னும் டாப். :-))
வெள்ளி, மார்ச் 20, 2009 at 8:50 பிப
கல்யாணக்கமலா: பொதுவாவே சப்பாத்திக்கு கடலைமாவு சுவை சேர்க்கும். கோதுமையைக் குறைக்க இன்னொரு வழி. இங்க நிறையபேர் கோதுமை மிஷின்ல அரைக்கக்கொடுக்கும்போது கிலோவுக்கு 2 பிடி கடலைப் பருப்பும் சேர்த்துப்பாங்க. சப்பாத்திக்கு நிறம் கொடுக்கும்; உடலுக்கு நல்லது. கொஞ்சம் மொறுமொறுப்பா இருக்கும்.
சொல்மண்டி: இதெல்லாம் த்ரீமச். இது ஆதௌகீரத்தனாரம்பத்துல நானே செஞ்சது. பழைய கடிதங்களை ஸ்ரீலதாவுக்காக தேடும்போது மல்லிகை மகளுக்கு அனுப்பின இந்த மடல் கிடைச்சது.அதுலயே படமும் குறிப்புகளும் அட்டாச் ஆகி இருந்ததால டவுன்லோடி இங்க போட்டுட்டேன். ரங்கமணி வரவர சோம்பேறி; சுமார் சமையல். நேத்தி கொடுமையா கப்பக்கிழங்கு பொடிமாஸாம். ஒன்னும் சொல்ல விரும்பலை. 😦
திங்கள், மார்ச் 23, 2009 at 10:03 முப
டியர் ஜெய்.
ஞாபகம் வச்சிருக்கறதுக்கு வளர நன்னி….. ஒரு தடவை மிஸ்சி ரொட்டி பட்டாணி மாவு (மெனக்கெட்டு பட்டாணிய மிஷின்ல குடுத்து அரைச்சு மாவாக்கி சேத்தேன்) போட்டு செஞ்சும் சரியா வரல…ஆனா போன வாரம் பண்ண வாழைத்தண்டு மோர்க்கூட்டு நல்லா வந்தது….வத்தல் / வடுமாங்க்கா எதாவது சொல்லுங்களேன்…
LAST BUT NOT LEAST
மணிக்கொழுக்கட்டை & வெஜ் ரோல்ஸ் எப்போ செய்வீங்க???
அன்புடன்
ஸ்ரீலதா
திங்கள், மார்ச் 23, 2009 at 6:54 பிப
ஸ்ரீலதா, மிஸ்ஸி ரொட்டி இங்க அக்கம்பக்கம் சக்கை ஹிட். அரைக்க மிஷினுக்கெல்லாம் போகவேண்டாம். பட்டாணி நான் சொன்ன மாதிரி சேர்க்கறது சுலபம். உங்களுக்கு அதுல என்ன சரியா வரலைன்னு சொல்லுங்க. அது முக்கியம்.
வடுமாங்காய் சொல்லியிருக்கேன் ஏற்கனவே.
https://mykitchenpitch.wordpress.com/2007/03/26/maavadu/
வற்றல் எல்லாம் போட இங்க வசதி இல்லை. எங்க கட்டிடம் ரிப்பேர் வேலை நடக்குது. சிமெண்ட், தூசு, மணல்களுக்கு நடுவே கொஞ்சமா நாங்களும் இருக்கோம். படம் இல்லாம பதிவு மட்டும் வேணா போடறேன்.
செவ்வாய், மார்ச் 24, 2009 at 10:52 முப
டியர் ஜெய்
மிஸ்ஸி ரொட்டில எல்லாம் நீங்க சொன்ன அளவுதான் போட்டேன்…ஆனா காஞ்ச பட்டாணிய வாங்கி மெஷின்ல குடுத்துப் பவுடராக்கிப் போட்டேன்..ஆனா ரொட்டி பயங்கர dry-யா வந்தது.. எவ்வளவு எண்ணை போட்டு சுட்டாலும் வற வறன்னு தான் இருந்தது…மாவு என்னவோ தளர்த்தியாதான் இருந்தது..ஆனா ரொட்டி மட்டும் “ஙே” (ராஜேந்திர குமார் சார் கதையில வர மாதிரி) ன்னு முழிச்சிகிட்டு இருந்தது.. எப்படியோ sales பண்ணிட்டென்னு வச்சிக்குங்க…ஆனாலும் “தோல்விதான் வெற்றிக்கு முதல் படினு” அது சரியா வரவரைக்கும் விடறதில்லைனு ஒரு வைராக்கியம். இந்த தடவை (மிஸ்ஸி ரொட்டி – 2) செஞ்சு பார்த்திட வேண்டியதுதான்…”எப்படியும் நாங்கதான் “lab-ல எலி மாதிரி இருக்கோமேன்ற ரங்கமணியொட கமெண்ட் எல்லாம் காதுல விழுந்தாலும் வெற்றிகொடி நாட்டியே தீருவேன்
செவ்வாய், மார்ச் 24, 2009 at 11:07 முப
டியர் ஜெய்
படமெல்லாம் வேண்டாம்..பதிவு மட்டும் போடுங்க்க…அளவு மற்றும் செய்முறைக்காகதான்…
வியாழன், மார்ச் 26, 2009 at 3:56 பிப
srilatha:
1. மாவு பிசைஞ்சு ஒருமணி நேரமாவது ஊறவிடணும்.
2. சப்பாத்திக்கு எண்ணெய் அதிகம் விட விட கடக்’குனு தான் ஆகும். மாவு பிசையும்போது சிறிதளவு விடறதைத் தவிர எப்பவும் எண்ணெய் தேவை இல்லை. மென்மையா இருக்கணும்னா சுட்டு அடுக்கும்போது கூட நடுவுல கொஞ்ம் வெண்ணெய் அல்லது நெய் தடவறதுதான் சரி. எல்லாவிதமான சப்பாத்திக்கும் இதுதான் குறிப்பு. கொஞ்சம் கரகரன்னு இருக்கலாம்னு நினைச்சா மட்டும் எண்ணெய் விடுங்க. சில சப்பாத்திகள் கரகரப்பா இருந்தாதான் நல்லா இருக்கும்.
3. இந்த ரொட்டிகளெல்லாம் பொதுவாவே சப்பாத்திகள் மாதிரி சாஃப்டா இருக்காது. ஹோட்டல் தந்தூரியா இருந்தா கொஞ்சம் கடக்’குனே இருக்கட்டும்னு நாங்க ஆர்டர்பண்ணும்போது விரும்பிச் சொல்லுவோம்.