விடுமுறைக்கு ஸ்ரீரங்கம்போய் வந்ததை பாதி எழுதி வைத்திருந்தேன். அதற்குள் பொட்டி இயக்கத்தை நிறுத்த… அதை இனி தொடருவது அநியாயத்துக்கு மலரும் நினைவுகள் ஆகிவிடும். ஸ்ரீரங்கம் எங்கே போகிறது? அடுத்தவருடம் எழுதவேண்டியதுதான். ஆனால் அதன் கடைசிப் பகுதி மட்டும்..

எக்கச்சக்கமான ஊர்சுற்றல், சினிமா, ஹோட்டல் பேச்சு, சிரிப்பு, டென்ஷனே இல்லை, சமையல் என்ன என்று யோசிக்க வேண்டாம் என்று அத்தனை சொஸ்தங்களையும் தாண்டி, கிளம்புவதற்கு ஒரு வாரம் முன்னரே எனக்கு வழக்கம்போல் ‘எங்காத்துக்குப் போகணும்’ மூடு வந்துவிட்டது. வழக்கம்போல் அம்மா அப்பா ஒருமாதிரியான அமைதிக்குத் திரும்பிவிட்டார்கள். வழக்கம்போலவே “நாநாவை நினைப்பியோ ஊருக்குப் போயி?” மாதிரி சில்லியான கேள்விகளை அப்பா பேத்தியிடம் கேட்க ஆரம்பித்தார். தினம் ஃபோன் பண்றீங்க, பின்ன எப்படி மறக்கமுடியும் என்று அபத்தத்தை எல்லாம் சுட்டிக்காட்டாமல் வழக்கம்போலவே சும்மா இருந்தேன். “அம்மா பாவம், அவளைப் படுத்தாதே.” மாதிரி வசனங்களை அம்மா பேத்தியிடம் எடுத்துவிடுவது, என்னவோ தான்தான் என்னை ரட்சிக்கப் பிறந்தமாதிரி, “அவகிட்டயும் என்னப் படுத்தாதன்னு சொல்லு நாநி” என்று தங்கமினி ஏறிக்கொள்வது, இத்தனை கூத்துகளையும் தாண்டி, செல்லவிடுபட்ட இடங்கள், வேலைகள் ஒருமாதிரி அவசரத்தில் நடந்துகொண்டேயிருக்க கிளம்புகிற நாள் வந்துவிட்டது. மதியம் 12 மணிக்கு வண்டி. காலையில் ஒருமணி நேரம் அனுபவித்து ஊஞ்சலில் அமர்ந்து ஆடவேண்டும் என்று நினைத்து உட்கார்ந்து ஐந்து நிமிடம் ஆகவில்லை. திரு. கிருஷ்ணன் வந்தார். மேலே சொல்வதற்குமுன் கிருஷ்ணன் பற்றி…

வி.கிருஷ்ணன் ஸ்ரீரங்கம். (தொலைப்பேசி எண்: 9842464451) குஷ்பு இட்லி (இதை முதலில் கோவை அன்னபூர்ணா சாப்பிட்டு, அதற்கு அடிமை ஆனேன்.) தயாரிப்பதில் நிபுணர். ஸ்ரீரங்கத்தில் பல்லவன் எக்ஸ்பிரஸ் போன்ற வண்டிகளுக்கு முதல் வகுப்புகளுக்கு(மட்டும்) இந்த இட்லியை சப்ளை செய்கிறவர். தனியாக வீட்டு விசேஷங்களுக்கு, அன்றாட குறைந்த தேவைகளுக்குக் கூட செய்து கொடுப்பார். எங்கள் வீட்டில் பெரிய விசேஷம் என்றால்கூட மற்ற சிற்றுண்டிகளை பரிசாரகர்கள் மண்டபத்தில் தயாரித்தாலும் இட்லியை மட்டும் இவரிடமிருந்து வரவழைத்துவிடுவோம். தயாரிப்பைப் பற்றிய குறிப்பை யாரிடமும் பகிர்ந்துகொள்வதில்லை. ஆனால் என் அம்மாவிற்குத் தெரிந்திருக்கும், பகிர்ந்துகொள்ள மாட்டார் என்பதும் தெரியும்.

இன்று வழிக்கு எடுத்துச் செல்ல எனக்குக் கொடுத்துப் போகவந்தார். அவரைப் பார்த்ததும் தான் மூளை ‘பிராமிஸ்” என்ற வார்த்தையை ஃப்ளாஷ் அடிக்க… ஐயய்யோ எப்படி மறந்துபோனேன்?

“அம்மாஆஆ…” என்று கத்திகொண்டே உள்ளே ஓடினேன். என்னடீ என்று கேட்ட அம்மாவுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. பர்ஸை எடுத்துக்கொண்டேன். இரு, வரேன் என்று காலில் செருப்பை மாட்டுக்கொண்டு ஓடினேன்.

“என்னாச்சு, நானும் வரேன் என்று கிளம்பின அப்பாவைத் தவிர்த்தேன். (‘எப்படி இதை மறந்துபோனேன்? அம்மா நடுவுல எத்தனைநாள் வாழைக்காய் பண்ணினாள்?’)

“உலகத்திலேயே எனக்கு ஒத்த நடைவேகம் உள்ளவர் அப்பா மட்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு என்றாலும் இன்று அவரும் தேவை இல்லை என்று தோன்றியது. (இப்பவே மணி ஏழரை. இனிமெ வாங்கிவந்து எடுக்கமுடியுமா?’)

ஓட்டமா நடையா என்று சொல்லமுடியாத வேகத்தில் வடக்குவாசல் காய்கறி மார்க்கெட்டுக்கு ஓடினேன். (எத்தனை மணிவரைக்கும் ஆடு வரும்னு நினைவில்லையே’)

முன்பு உத்தரவீதி(முதல் சுற்று)யிலேயே மார்க்கெட் இருக்கும், இப்பொழுது சித்திரை வீதிக்கு மாற்றியதில் இன்னும் கொஞ்சம் அதிகம் நடக்கவேண்டும். நடந்தேன். குதிரைக்கு திரைகட்டியது மாதிரி கண்களால் வாழைக்காயை மட்டும் தேடி ஒரு பாட்டியிடம் இருக்க, விரைந்தேன்.

“ஒரு அரை டஜன் காய் கொடுக்க”

“டஜன் எந்தக் காலம்? எடைதான்” பாட்டி விறைப்பான பதில்.

ப்ச், இதெல்லாம் யாருக்குத் தெரியும்? ஒரு 6 காயை நிறுக்கச் சொன்னேன். விலை மனதிலேயே பதியவில்லை. 50 ரூபாயைக் கொடுத்தேன். சில்லறை இல்லை என்று என்னைக் கேட்டு, அடுத்த கடைக்காரரைக் கேட்டு… பிறகு ஏதோ மீதி சில்லறையும், குறைவதற்கு இன்னும் இரண்டு காயும் தலையில் கட்டி…

பை கொண்டுவரவில்லை. மும்பைப் பழக்கம். தன்னிடமும் பை கிடையாது என்று சொல்லிவிட கையில் எட்டு காயையும் அள்ளிக்கொண்டு.. காம்பின் கறைபட ஆரம்பித்தது. சில்லறையையும் காயையும் இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு அபத்தமாயும் கொஞ்சம் அபத்திரமாயும்…கேடுகெட்ட துப்பட்டா வேறு சரியாக உட்காரமல் படுத்த… மீண்டும் ஓட்டம். வழியெல்லாம்..

“என்ன சௌக்கியமா? எப்ப வந்த?”

“ம். இன்னிக்கு ஊருக்கு”

“வாழைக்காய் எல்லாம் அங்க கிடைக்காதில்ல? செம்பூர்ல எல்லாமே கிடைக்கும்னு என் தங்கை மாட்டுப்பொண் சொல்வாளே”…

வகையறா கேள்விகள், மனிதர்களுக்கெல்லாம் மையமாய் சிரித்துவைத்து… …

வீட்டுக்கு வந்ததும் அப்பா, ‘அங்க அவ்ளோ ரிக்ஷா நிக்குதே, ஏறி வரமாட்டியா? எதுக்கு ஓடிவர?’ என்று கேட்ட பின்தான் அட ஆமாம் என்று உறைத்தது. உள்ளே எடுத்துக்கொண்டு ஓடினேன். பெண் கூடத்தில் வழக்கம்போல் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

“வாசல்ல ஆட்டுக்குட்டி வருதா பாருடா செல்லம். வந்தா சீக்கிரம் நிறுத்திவை,” கத்திவிட்டு உள்ளே ஓடி… சமையலறையில் கத்தியைத் தேடி (ஆமாம், அம்மாவீட்டில் அரிவாள்மணை. எனக்கு நறுக்கவராது. கத்தியைத் தேடுவேன்.)…

“ஐயய்யோ எதுக்குடா இத்தனை வாழைக்காயை வாங்கிண்டு வந்திருக்க?” அம்மா.

சரசரவென தோல்சீவ ஆரம்பித்தேன். சீவிமுடிப்பதற்குள் ஒருவேளை ஆடுவந்து பெண் கூப்பிட்டுவிடுவாளோ என்ற அவசரத்தில் தோலோடு சேர்த்து காயும் நிறைய வந்தது.

“நீ வந்தாதான் வாழைக்காயே வாங்குவோம். அப்பாவுக்கு ஆகாது. ஊருக்குக் கிளம்பும்போது எதுக்கு இத்தனையை வாங்கிண்டு வந்திருக்க? தளிகை எல்லாம் ஆயிடுத்தே.”

“தூர எறி. நான் அதுக்கு ஒன்னும் செய்ய முடியாது.” உல்டாவாக காயைக் கீழே தள்ளிவிட்டு தோலை எல்லாம் பதவிசாக கூடையில் அள்ளிக்கொண்டு போவதை அம்மா ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“இப்ப இத்தனை காயையும் நான் என்ன செய்றது? எதுக்கு குடுகுடுன்னு காரியம் பண்ற?” அம்மா என்னிடமிருந்து பதிலில்லாததால் பொறுமையிழந்து கத்தினாள்.

‘வாசப்பக்கம் போறவ டிவி சத்தத்தை நிறுத்திட்டுப் போகக் கூடாது?’ டிவி, அம்மா இரண்டு சத்தமும் ஒரே நேரத்தில் தாங்கமுடியாமல் மனதுக்குள் தங்கமினியைத் திட்டிக்கொண்டே தோல் கலக்ஷனைத் தூக்கிகொண்டே வாசலுக்கு ஓடிவரும்வழியில்…. இடையில் கூடத்தில் எதுவுமே பாதிக்காமல் பெண்– இருக்கும் இடத்தைவிட்டு இம்மியும் நகராமல் இன்னமும் அதே சாய்ந்தவாக்கில் டிவியைத்தான் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

“நான் உன்னை என்ன சொன்னேன்?”

“நான் ஏற்கனவே ஆட்டுக்குட்டி பாத்திருக்கேன். I want to see only pigs.. Why no pigs in Srirangam ammaa?”

ஓங்கி முதுகில் நாலு போடலாம் என்ற ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, “நான் ஆடு பாக்கணும். போய் வருதான்னு பாரு.”

“நாநா என்னை கோயிலுக்கு கூட்டிண்டுபோகப் போறா. நான் முடியாது.” சொன்னபோதுதான் கவனித்தேன். கோவிலுக்குப் போகிற காஸ்ட்யூமில் இருந்தாள்.

“ஒன்னும் வேண்டாம். ஊருக்குக் கிளம்பற அவசரத்துல. போனதெல்லாம் போதும்.”

“நான்தான் வரச் சொன்னேன். டிரஸ் மாத்திவிட்டேன்,” அப்பா.

“வேண்டாம்பா. எனக்கு அவசர வேலை இருக்கு” சொல்லும்போதே டென்ஷன் ஏறியது.

“நீ ஆடு பாக்க நான் ஏன் கோயிலுக்குப் போகக் கூடாது. நான் இப்பவே அப்பாவுக்கு ஃபோன்பண்ணி சொல்றேன்”, சார்ஜில் இருந்த செல்ஃபோனை நோக்கி ஓடினாள். இவ அப்பாவிற்கெல்லாம் நான் பயப்படுவேன் என்று நம்பும் இவள் குழந்தைமைக்கே கட்டிப்பிடித்துக்கொள்ள வேண்டும்போல் இருந்தது. நமக்கு வேலை முடியவேண்டும் இப்போது.

“ப்ளீஸ்டா, அம்மா ஃபோட்டோ எடுக்கணும். கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்.” இறங்கிவந்தே ஆகவேண்டும்.

“ஓ ஆடு தோல் திங்கற ஃபோட்டோவா? போன தடவை எவ்ளோ திட்டின? நான் எடுக்க முடியாது.” பாழாப்போன தமிழ்ப் படம் பார்த்து பார்த்து எவ்வளவு நாளானாலும் நினைவு வைத்து பழிவாங்கும் குணம்.

“நீ எடுக்கவேணாம். நான் போய் காமிரா எடுத்துவரேன். நீ அதுக்குள்ள ஆடு வந்தா கூப்பிடு, போதும்.” அவசரமாக கேமிரா எடுக்க ஓடினேன்.

“எனக்கு அதோட பேர் தெரியாதே.”

“(Grrr…சனியனே), நாய்க்குதான் பேர் இருக்கும். ஆட்டுக்கெல்லாம் பேர் இருக்காது. போம்மா… வளவளன்னு பேசாத. ஆடெல்லாம் போயிடப் போறது.”

அப்படி எல்லாம் எதற்கும் பதட்டப்படாமல், அலட்டிக்கொள்ளாமல் இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்புளிக்க படுநிதானமாக நடந்துபோனாள். அவளையும் முந்திக்கொண்டு வாசலுக்குப்போய் ஆவலாய் இரண்டு பக்கமும்பார்த்தால் ஒத்தை ஆட்டைக் காணோம். காலங்காலையில் வரும். ஆனால் மணி எல்லாம் பார்த்து மனதில் குறித்துக்கொண்டதில்லை.

“குழந்தை(ஹி ஹி நான்தான்) இன்னிக்கு ஊருக்குக் கிளம்பறா. நானாவது கோயிலுக்குப் போயிட்டு வரேன்” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு அப்பா தனியாகக் கிளம்பிவிட்டார். ஒருஆள் வீட்டில் குறைந்தால் அவர் கிளப்பும் கேள்வியும் டென்ஷனும் குறையும் என்று நினைத்ததற்கு அப்புறம் வருந்தினேன்.

அடுத்த அரைமணிநேரம் காத்திருந்தும் வீதியின் கோடிவரை பார்வையில் ஆடு எதுவும் வருகிற மாதிரி தெரியவில்லை. கலக்கமாக இருந்தது. இந்தமுறை இல்லை என்றே முடிவுக்கு வந்துவிட்டேன். இதுதான் சாக்கு என்று தங்கமினி மண்ணில் காலால் எத்தி எத்தி விளையாட ஆரம்பித்தது வேறு எரிச்சல். கண்டிக்கக் கூட தெம்பில்லாமல் சொந்த சிந்தனை தடுத்தது.

“இந்த வாழைக்காய் சரியா வந்திருக்கா பார்,” சிறுதட்டில் மொறுமொறுவென்று சிவக்க வதக்கிய காயை அம்மா நீட்டியபோது பொங்கிப் போனேன்.

“என்னம்மா ஆட்டுக்குட்டியே காணோம். காலைலயே எல்லாம் போயிருக்குமா?”

“ஆடெல்லாம் இப்ப எப்படி வரும்? நன்னா காலங்கார்த்தால ஆட்டுக்காக வந்து உட்கார்ந்திருக்க வேலையைப் போட்டுட்டு..” என்று திருப்பிக் கேட்டதில் மொத்த ஃப்யூசும் போய்விட்டது. எப்ப வரும் என்று பதில் சொல்லாமல் பேத்தியை கவனிக்கப் போய்விட்டாள்.

“இனிமே வராதா பின்ன?” எல்லா எரிச்சலும் அம்மாமேல் வந்தது. அம்மா வேறு ஏதாவது ‘நல்ல’ ஊரில் இருந்திருக்கலாம்.

“ஆடா…?” என்று என்னிடம் இழுத்துவிட்டு வேறுபக்கம் திரும்பி, “____! மல்லிகை மகள், சிநேகிதி படிச்சுட்டா கொஞ்சம் கொண்டுவந்து குடேன்.” வேறு யாருக்கோ குரல்கொடுத்து பேசப் போய்விட்டாள். என்னைக் கொலைகாரியாக்காமல் அடங்கமாட்டார்களோ என்று தோன்றியது. “இவ இன்னிக்கு ஊருக்குப் போயிடுவா. இனிமேதான் என் ரெகுலர் க்ளாஸ், புக் படிக்கறதெல்லாம் ஆரம்பிக்கணும்” என்று எனக்கு செண்ட் ஆஃப் கொண்டாடிக் கொண்டிருந்தாள்.

“நீ எங்காத்துக்கு வராமலே போற. கிளம்பும்போதாவது எட்டிப்பார்த்துட்டு போ!”

“ஆடு எப்ப மாமி வரும் ரோட்டுல?”

“அதுக்கு இன்னும் நாழி இருக்கே.” மாமி வீட்டுக்குப் போகாமலே பால்வார்த்தார்.

“இப்பல்லாம் லேட்டாவா வரும். வந்திட்டுப் போயிருக்குமோ?” முன்பெல்லாம் நான் ஸ்கூல் போவதற்குமுன் வரும்.

“இப்பல்லாம் முனிசிபாலிடில வந்து தெரு சுத்தம் செய்யவிட்டுதான் ஆடுகளை அவுத்து விடறாங்க. இல்லைன்னா குட்டியெல்லாம் தெரியாம கண்ட பிளாஸ்டிக் குப்பையெல்லாம் சாப்பிட்டுடறதாம்.” மாமி இப்போது காபியே வார்த்தார்.

மாமி சொன்ன தகவல் நம்பமுடியாமலும், அப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசுவாசத்தையும் தந்தது.

“ஏண்டீ மெனக்கெட்டு ஆட்டுக்காகவா உட்கார்ந்திருக்க. நீ போய் உள்ள உன் பேக்கிங் ஏதாவது பாக்கி இருந்தா பாரு போ.”

“நீ சும்மா இரு. நான் நாலு சாமானை விட்டுட்டு போனாலும் பரவாயில்லை. அடுத்த தடவை எடுத்துப்பேன். இப்ப கிளம்பறதுக்குள்ள நான் ஃபோட்டோ எடுத்தே ஆகணும்.”

“அட ஃபோட்டோவை அடுத்த தடவை எடுத்துகோயேன். ஆடு எங்க போறது?”

“இல்லை, இந்தத் தடவையே எடுத்தாகணும்.”

“அவ்ளோதானே. வடக்குவாசல் வரைக்கும் போனயே. அங்கயே டர்னிங்ல நிறைய கட்டிவெச்சிருப்பானே. இப்பக்கூட போனா எடுக்கலாம். ஆட்டோவைக் கூப்பிடவா?”

“வேண்டாம். வீட்டு வாசல்லதான் எடுக்கணும்.”

“அதுக்கு எதுக்கு வாழைக்காய் வாங்கப் போற. சௌசௌ தோல் நம்பாத்துலயே இருந்ததே. அதைக் காமிச்சாலும் ஆடு வருமே.”

“ஆனா எனக்கு வாழைக்காய்த் தோல் சாப்பிடற ஆடுதான் வேணும்.”

“என்னடீ கூத்து இது?”

“ஆமாம் கூத்துதான். சொன்னா உனக்குப் புரியாது.”

“அப்ப புரியறமாதிரி உருதுல சொல்லேன்” என்று அண்ணன் இருந்தால் கலாய்த்திருப்பான். அம்மா முணுமுணுத்துக்கொண்டே போய்விட்டாள். எனக்கு என்னவோ இவர்கள் சொல்கிற மாதிரி ஒன்பது மனிக்கு மேல் எல்லாம் ஆடு வருமா என்றே சந்தேகமாக இருந்….

தூரத்தில் கருப்பாக… இன்னும் கொஞ்சம் கிட்டே வரவும்… ஆமாம் ஆடேதான். 🙂

ஆடு இன்னும் கொஞ்சம் வேகமாக நடக்கப் பழகலாம். ரொம்ப பின்னிப் பின்னி என்னவோ புதுப்பெண் மாதிரி நடந்துவந்து என் பொறுமையைச் சோதித்தது. கொஞ்சம் தோலை சிமெண்ட் தளத்தில் போட்டுவிட்டு காமிராவைத் திறந்தேன். அதிர்ச்சி. முந்தாநாள் இரவுதான் திருவனந்தபுரம் கன்யாகுமரி சுற்றிவிட்டு வந்ததில் சார்ஜ் முழுக்க தீர்ந்து அணைந்து அணைந்து எரிந்தது. எக்கச்சக்கமாய் ஏற்கனவே படம் எடுத்துவிட்டதில் படம் எடுக்கவும் கொஞ்சம் தான் இடம் இருந்தது. இனிமேல் எதுவும் சரிசெய்ய நேரமில்லை. ஆடு கிட்டே வந்துவிட்டது.

டக்கென அணைத்துவிட்டேன். இருக்கும் சக்தியை சும்மா திறந்துவைத்து வீணாக்க முடியாது. அப்பொழுதைக்கு திறந்துகொள்ளலாம்.

ஆனால் அவ்வளவு நேரமாக வீட்டு ஓரமாக வந்த ஆடு, இரண்டு வீடு முன்னால் வரும்போது திடீரென எதிரே கோயில் மதில்சுவர் பக்கம் போய்விட்டது. திண்டாடட்டும் என்று இருந்த பெண்ணே கொஞ்சம் இரக்கப்பட்டு “ஆடு.. ஆடு…” என்று கூப்பிட ஆரம்பித்தாள்.

“ஏய் சும்மா இரு. அப்படிக் கூப்டா வராது” என்று சொல்லிவிட்டு ப்பா ப்பா என்று நான் கூப்பிட்டும் கண்டுகொள்ளாமல் போய்விட்டது. பதறிப்போனேன். பெண்ணைப் பின்னாலேயே போய் கூட்டிவரச் சொன்னேன். அவள் ஆடு ஆடு என்று கூப்பிட்டதைப் பார்த்த யாரோ ரோட்டில் போகிறவர் சிரித்துவிட்டது அவள் ஈகோவை உரசிவிட்டது. எனக்குத் தெரியாது என்று மறுத்துவிட்டாள்.

அப்பா இருந்திருந்தால் எப்படியாவது இதை எனக்குச் செய்திருப்பார் என்று நினைக்கும்போதே மீண்டும் ஒரு ஃப்ளாஷ். “ஸ்ரீரங்கம் வந்து பெருசா ஐயப்பன் சீரியல் எல்லாம் பாக்கற. ஐயப்பன் பாரு, அவங்க அம்மாவுக்கு புலி எல்லாம் கொண்டுவராரு. எனக்கு ஆடுகொண்டுவர கூட யாருமில்லை. I am blessed only that much!” செண்டியால் அடித்தேன். (டோண்டூ மன்னிப்பாராக! புரைதீர்ந்த நன்மைக்காக செண்டியால் அடிக்கலாம் என்றுதான்) வைத்த குறி தப்பாமல் வேலை செய்தது.

“சரி எப்படிக் கூப்பிடணும்?”

“கொஞ்சம் வாழைத்தோல் கைல எடுத்துக்கோ. ப்ப்பா ப்பான்னு கூப்பிடு. பின்னாலயே வரும். இங்க கூட்டிவந்துடு. நான் பாத்துக்கறேன்”

வலப்பக்கம் திரும்பிப் போனவளை ஐந்து நிமிடம் ஆகியும் காணவில்லை. அதற்குள் இடப்பக்கமே இன்னும் கொஞ்சம் ஆடுகள் வருவதில் நான் கவனமாக, “ம்மா ம்மா” என்று ஆடும் இல்லாமல் மனிதனும் இல்லாமல் ஒரு பிளிறல் பெண்போன திசையில் கேட்டது. பார்த்தால், தங்கமினி அலறிக்கொண்டு… ஒரு ஆட்டுக்கூட்டமே அவள் கையில் தோலைப் பார்த்து துரத்திக் கொண்டுவர, பயந்து, சமாளிக்கத் தெரியாமல் ஓடிவந்துகொண்டிருந்தாள்.

“தூக்கிப் போடு!” என்று நான் கத்தியதில் தூக்கிவாரிப் போட்டு வீதியே திரும்பிப்பார்த்தது. நான் சொன்னதைப் புரிந்துகொண்டு கையிலிருந்த தோலை துக்கிப் போட்டதில் அந்த ஆடுகள் அங்கேயே சாப்பிட்டுவிட்டு, மிச்ச தோலுக்கு நான் அழைத்தும் அப்படியே திரும்பிவிட்டன. பெண் அழுதுகொண்டே திரும்பிவந்தாள். சமாதானப்படுத்த கூட நேரமில்லாமல் இந்தப் பக்கத்தில் வந்துகொண்டிருக்கும் ஆடுகளைக் கவனிக்க ஆரம்பித்தேன்.

ஒரு ஸ்கூல் பையன் நின்று வேடிக்கை பார்த்தவன், “இப்படி ரெண்டு பேரும் சவுண்ட் விட்டா ஆடு வராது. பிடிச்சு சூப் வெச்சுடுவீங்கன்னு பயந்துக்கும். மறைஞ்சுக்கங்க” என்று ஓசியில் ஐடியா கொடுத்தான். கிண்டல் செய்கிறானோ என்று சட்டென கடுப்பானாலும் அவன் சொல்வதும் நியாயமாகப் பட்டதில் திண்ணைச் சுவருக்குப் பின்னால் மறைந்துகொண்டேன். வீட்டோரமாக வந்துகொண்டிருந்த ரெண்டு ஆடு தோலைப் பார்த்து நடையைத் துரிதப்படுத்தி வாய்க்கும் தோலுக்கும் இடையே சில செண்டிமீட்டரே இடைவெளி இருக்க… நான் மெல்ல எழுந்து கேமிராவைத் திறக்க… யார் இருந்திருந்தால் வேலை சுலபமாக முடிந்திருக்கும் என்று கொஞ்சநேரம் முன்னால் நினத்தேனோ அந்த அப்பா கோயிலை முடித்துக்கொண்டு, “கூத்தெல்லாம் முடிஞ்சதா?” கேட்டுக்கொண்டே திடீரென வேகவேகமாகப் பிரவேசிக்க… ஆடுகள் அதைவிட வேகமாகக் கலைந்துபோயின.

“என்னப்பா..” என்று சலித்துக்கொண்டவள் தொடரமுடியாமல் பின்னால் இன்னும் ஓர் ஆடு வருவதால் ‘உஷ்!’ என்று அடக்கிவிட்டு…

ஆனால் அந்த ஆடு தோலருகில் வந்தும் எந்தச் சலனமும் இல்லாமல் நகர்ந்துபோனது.

“அப்பா ஆடா இருக்கும். அதுக்கும் வாழைக்காய் ஆகலை” என்று சம்மன் இல்லாமல் அம்மா ஆஜராக, அதற்குப் பின்னால் வந்த ஆடுகளும் கலைந்துபோயின.

இந்த ஃபோட்டோ செஷன் முடியட்டும் எல்லாரையும் ஒருபாடு வாயாரத் திட்ட வேண்டும் என்று கறுவிக்கொண்டு வேறுவழியில்லாமல் அமைதியாக இருந்தேன்.

கருப்பில் பளபளவென்று உயர்ந்த வெல்வெட்டில் செய்தமாதிரி சின்ன– ரொம்பச் சின்னதாய் ஒரு குட்டி வந்தது. தோல் அதை பாதிக்கவே இல்லை. என் முகத்தை மட்டும் பார்த்துவிட்டு நின்றது. ப்பா என்று சன்னமாக செல்லமாகக் கூப்பிட்டதில் கொஞ்சம் பின்வாங்கியது. ஃபோட்டோவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம், ஓடிப்போய் அள்ளிக்கொள்ளலாம் போல் இருந்தது. நான் ஒரு படி இறங்க ஆரம்பித்ததுமே நகர்ந்து ஓடிவிட்டது. “குழந்தை மாதிரி வேத்துமுகமா இருக்குமோ?” அப்பாவும் தன்பங்குக்கு கிண்டினார்.

இனி பொறுப்பதில்லை. “என்னைப் பாத்து ஒரு குழந்தையும் வேத்துமுகம் காட்டாது. உங்களை எல்லாம் பார்த்துதான் எல்லா ஆடும் பயப்படுது. எல்லாரும் உள்ள போங்க!” ஆனால் சிரித்துக்கொண்டே வேடிக்கைதான் பார்த்தார்கள்.

வாசலில் வீட்டோரமாய் கொஞ்சம் கூட்டம் கூடிவிட்டது. என்னால் இனிமேல் படமே எடுக்கமுடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். அவமானமாக இருந்தது. நம் சொந்த ஊர், சொந்த வீதி, இந்த வீதியிலேயே என் சிறுவயது முழு வாழ்க்கையையும் திறந்த புத்தகமாய் தெருவிலேயே பாதிக்குமேல் வாழ்ந்திருக்கிறேன். இந்த வீதியின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கிறேன். இப்போது அந்நியர்கள் அதிகம் வருவதில் நம்மை நாமே இடத்துக்கு அந்நியமாக உணருகிறோம் என்று இத்தனை டென்ஷனிலும் தவிர்க்கவே முடியாமல் தத்துவார்த்தம் குறுக்குசால் ஒட்டியது.

“இந்த சிமெண்ட் கார்னர்லதான் காய்கறித் தோல் எல்லாம் போடுவேன். தானே வந்து தினம் சாப்பிடும். என்னவோ நடலம் அடிக்கறா கார்த்தாலேருந்து…..” அம்மா.

அம்மாவும் அப்பாவும் மாற்றி மாற்றி மணி பத்து, பத்தேகால், பத்தரை என்று பரிட்சை ஹாலில் நேரம் சொல்லும் சூபர்வைசர் மாதிரி அவ்வப்போது கிளம்ப நேரமாகிவிட்டதை மணிசொல்லி டென்ஷனையும் எரிச்சலையும் ஏற்றினார்கள்.

நம்பிக்கை எல்லாம் தளர்ந்தபோது தான் அந்த அதிசயம் நடந்தது.

ஒரு மூன்று ஆடுகள் சேர்ந்தவாக்கில் வந்தன. முதலில் ஒரு குட்டி ஆடு துணிந்து வந்து தோலைச் சாப்பிட ஆரம்பித்தது. முழுக்க சாப்பிட்டு முடித்தது. எழுந்தால் ஓடிவிடுமோ என்று பயத்தில் கை சில்லிட்டுப் போய் உட்கார்ந்திருந்தேன். பெண் அருகே போய் இன்னும் கொஞ்சல் தோலை வீசினாள். சட்டென படம் பிடிக்க ஆரம்பித்தேன்.

vaazhaikkai_thOl_curry_aadu_1

“கிளம்பிட்டாங்கடா. இதெல்லாம் யுஎஸ்-ஆ இருக்கும். ஒரு கேமிரா வாங்கிகிட்டு ஊருக்குள்ள வரவேண்டியது. வந்து ஆடு, கோழி, குளக்கரைன்னு படம் பிடிக்கக் கிளம்பிடுவாங்க”

ஒரே சைக்கிளில் வந்த இரண்டு காலேஜ் பையன்கள் இறங்கி ஒரு மாதிரி ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து நின்றுகொண்டு கிண்டலடித்தார்கள். எனக்கு வேலை முடிந்துபோன மகிழ்ச்சி மற்றும் அவர்கள் நின்ற தினுசில் இருந்த நட்பின் நெருக்கம்தந்த மகிழ்ச்சி.. என்னவோ கோபமே வரவில்லை. இப்படி நக்கலடித்துப் பேசுவதில் அவர்களுக்கும் கொஞ்சம் மகிழ்ச்சி கிடைக்குமானால் அதுவும் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியே.

vaazhaikkai_thOl_curry_aadu_2vaazhaikkai_thOl_curry_aadu_3

இன்னும் இன்னும் என்று தோலை எடுத்துப் போட இன்னொரு ஆடு வந்து சேர்ந்துகொண்டது. பின்னால் மதில் சுவரோரமாக இருந்த தன் துணையையும் அழைத்து சேர்த்துக் கொண்டது. சட் சட் என க்ளிக்கிவிட்டு, நண்பர்கள் பக்கம் திரும்பி எடுக்க நினைத்தபோது ஸ்பேஸ் இல்லை என்று கேமிரா சொல்லிவிட்டது. அது தெரியாமல் கேமிராவைப் பார்த்து தயங்கியோ பயந்தோ நகர்ந்துவிட்டார்கள். 🙂

பி.கு:

1. இந்தப் பதிவிற்காக இந்தப் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பதுபோல் செய்துமுடித்துவிட்டேன். Oops! இந்தப் பதிவு டிஸ்கவரி, நேஷனல் ஜியாகரபி வகையறா ஒளிஓவிய பச்சான்களுக்கு சமர்ப்பணம்!

2. இன்னும் பின்னூட்டங்களுக்கே பதில் சொல்ல நேரமில்லாதபோது அதற்குமுன் அவசரஅவசரமாக இந்தப் பதிவை தட்டவேண்டிய காரணம், நாளை காலை ஸ்ரீரங்கம் கிளம்புகிறேன். அப்புறம் படங்கள் போட்டால் படங்களை இந்தப் பயணத்தில் எடுத்துப் போட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் நினைக்கலாம் என்ற முன்ஜாக்கிரதை. இவை சென்ற பயணத்தில் எடுக்கப்பட்டவையே.

3. இந்தப் பதிவை பாதி தட்டிக்கொண்டிருக்கும்போதே சட்டென ஒரு விஷயம் அதிர்ச்சியையும் சோர்வையும் தந்தது. நான் பொட்டியில் இருந்த டாக்குமெண்ட்களை அழித்தபோது படங்களும் அழிந்திருக்கும். இப்போது என்ன செய்வது என்று யோசித்தேன். லேசாக நினைவுவந்து திறந்துபார்த்தால் நல்லவேளையாக ஸ்ரீரங்கம் விசிட் பதிவிற்காக சில படங்களை ஏற்கனவே flickrல் ஏற்றியிருந்தேன். ம.நெ.காதன் மீண்டும் காப்பாற்றிவிட்டார்,

4. போதுமடா சாமி, இனி எதற்குமே எங்குமே சத்தியம் செய்ய மாட்டேன், இது சத்தியம்!!