பரித்ரானாய ஸாதூனாம்… – Part 1.
விடுமுறைக்கு ஊருக்குப் போய் வந்ததிலிருந்தே கணினி கொஞ்சம் மக்கர். வைரஸ் இருப்பதாகப் புலம்பிக் கொண்டே இருந்தது. தேடித் தேடி அழித்து, புறக்கணித்து எல்லாம் செய்தும் ஒருநாள் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. முதல் ஐந்துநிமிடம் வழக்கம்போல் படபடப்பாய் இருந்தாலும் ரங்கமணிக்குத் தெரிவிக்கவில்லை. கைவசம் மீட்பர் தொலைப்பேசி எண் இருப்பதால் இந்தமுறை அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. உடனே வரச்சொல்லி அழிச்சாட்டியம் செய்தும் மாலையில்தான் வரமுடியும் என்றார். தொலைப்பேசியை வைத்த நிமிடமே, திடீரென்று கொஞ்சம் யோசனை. இவ்வளவு அவசரமாக இதை மீண்டும் இயக்கி என்ன சாதிக்கப் போகிறோம் என்று ஒரு கேள்வி. ஒரு நாலுநாள் ப்ரேக் எடுக்கலாம். பழையவைகளை மீட்பது, ஃபார்மட் செய்வது போன்ற 4, 5 மணிநேர வேலையை விடுமுறை நாளில் வைத்துக்கொண்டால் மீட்பரோடு ரங்கமணியைக் கோத்துவிட்டு விட்டு, அந்த அறுவையிலிருந்து தப்பலாம். உடனே மீண்டும் பேசி ஞாயிறன்று வரச்சொன்னேன்.
ஆனால் ஒவ்வொரு ஞாயிறாக, எனக்கு பேங்க் க்ளோசிங், எனக்கு க்ளாஸ், எனக்கு எக்ஸாம், பார்ட்டி, கல்யாணம், காதுகுத்து… என்றே ரங்கமணியும் டபாய்த்ததில் தட்டிப் போய்க்கொண்டே இருந்தது. தொலையட்டும் நாமே வாரநாளில் வரச்சொல்லி சரிசெய்யலாம் என்ற எண்ணம் எனக்கும் துளிக்கூட வரவே வராததுதான் இந்த முறை நான் கண்ட பரிணாம வளர்ச்சி. ஒரே வாரத்தில், கணினி இல்லாதது வீட்டில் வேலையே இல்லாததுபோல் சுகமாக இருப்பதைக் கண்டுகொண்டேன். இந்த அழகில் நாளில் 6 மணிநேரம் 8 மணிநேரம் மின்வெட்டும் இருந்ததால்(நாங்கள் இதற்கெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மாதிரி அலட்டிக்கொள்வதில்லை. சூரியன் கிழக்கே உதிக்கும் அளவுக்கு இயல்பாக எடுத்துக்கொள்வோமாக்கும். எங்கள் ஊருக்கு ஆற்காட்டார் யார் என்றே தெரியாது.) தூங்கித் தூங்கியே– வெங்கட் மொழியில் சொல்வதானால்– காலை எழுந்தவுடன் தூக்கம், பின்பு கனிவுகொடுக்கும் நல்லதூக்கம் மாலை முழுவதும் தூக்கம் என்று வழக்கப்படுத்திக்கொண்டும் இரவு படுத்ததும் தூக்கம் வந்தது. ‘நாங்களெல்லாம் படுத்ததுமே தூங்கற ஜாதி, வெள்ளை மனசு’ என்று ஜம்பம் அடிக்கும் ரங்ஸ்கூட ‘அடப்பாவி, படுக்கும்போதெல்லாம் தூங்கறயே’ என்று பொறமைப்படும் அளவுக்கு தூங்கிவழிந்தேன். எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் இரண்டு பக்கங்கள் தாண்டமுடியாமல் தூக்கம் வந்தது. என் தூக்கத்திற்காக தொடர்ந்து பாடுபடும் எழுத்தாளர்களுக்கும் பதிப்பகத்தார்களுக்கும் என் நன்றி.
உன் புக் எல்லாம் அப்படித்தான் இருக்கும். என்னோட கலக்ஷனைப் படி என்று தன்னுடையதை நீட்டிய ரங்கமணியின் சிபாரிசுக்கு காரணம் அன்னாருக்கு என்மேல் இருக்கும் அதீத அக்கறை என்றோ என்னையும் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தும் முயற்சி என்றோ தன் ரசனை குறித்த அதீத நம்பிக்கை என்றோ இன்னும் வேறு நல்லவிதமாகவோ நினைத்தால் அது தவறு. தான் புதிதுபுதிதாக வாங்கி சத்தமில்லாமல் உள்ளே திணித்து விடும் புத்தகங்களை நானாகப் பார்த்து ஒரு நாள் நிற்கவைத்துக் கேள்விகேட்பதைவிட முதலிலேயே ஒப்புதல் வாக்குமூலம் மாதிரி கணக்குக் காண்பித்துவிடும் வழிகளில் இதுவும் ஒன்று. Men of Mathematics, The Black Swan, Leadership the challenge,… சும்மா சொல்லக் கூடாது முதல் பக்கத்திலேயே தூக்கம்வந்தது. இந்த வகையில் என் புத்தகங்கள் கொஞ்சம் பின்தங்கி இருப்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். “ஆரம்பத்துலேருந்து அம்புலிமாமா மாதிரி படிக்காத. டக்குனு ஒரு பக்கம் அல்லது சேப்டர் திறந்து படி. அப்பத்தான் சுவாரசியமா இருக்கும்”, “ஒழுங்கா நிமிர்ந்து உட்கார்ந்து படி. படுத்துண்டு படிச்சா எந்த புக்கும் தூக்கம் வரத்தான் செய்யும்” என்று எக்கச்சக்க சமாளிப்புகள், அட்வைஸ்கள்… அதுக்கு வேறாளப் பாரு என்று தொடர்ந்து தூங்கினேன்.
படித்த புனைவுவகைகளில் கொஞ்சம் பாதித்தது அ.முத்துலிங்கத்தின் ‘மகாராஜவின் ரயில் வண்டி’ சிறுகதைத் தொகுப்பு. ‘… நாம் அறிந்த உலகங்களுக்கு நம்மை நாம் அறியாத பாதைகளில் இட்டுச்செல்பவை…. வெவ்வேறு தேசங்கள், கலாசாரங்கள், மனிதர்கள் ஆனால் தமிழ் வாசகனுக்கு அன்னியப்படாமலும் தீவிரம் சிதைக்கப்படாமலும் படைத்திருக்கிறார்’ என்று பின்னட்டையில் ஹைலைட் செய்து கொடுக்கப்பட்டுள்ள அம்பையின் விமர்சனம் நூத்துக்கு நூறு சரி. உண்மையில் புனைவு என்ற எண்ணமே வருவதில்லை. அறிந்த விஷயத்தை நேர்மையாகச் சொல்லும் வண்ணம் இருந்தன. வேண்டுமென்றே ஒரு நாளைக்கு ஒரு கதைதான் என்று திட்டமிட்டு நிறுத்தி அசைபோட்டுப் படித்தேன். கதைகளைவிடவும் அதிகமாக அந்த நடை என்னை யோசிக்கவைத்தது. எந்த இடத்திலும் எழுத்தாளனும் உணர்வுகளோடு துருத்திக் கொண்டிருக்காமல் ஒரு ஏற்ற இறக்கமில்லாத பரப்பில் ஸ்கேல் வைத்து நேராக, கூரான பென்சிலால் கோடுபோட்ட மாதிரி ஒரு நடை. ஆனால் அதுவே நம்மை அத்தனை உணர்ச்சிகளுக்கும் அழுத்தங்களுக்கும் சுலபமாகக் கொண்டுசென்று விடுகிறது. இது எப்படி சாத்தியம் என்று இன்னும் எனக்குப் புரியவில்லை.
உதாரணமாக, ‘…என் ஒருவனுக்கு மட்டுமே அந்தக் கறுப்புப் பூனைக்குட்டியின் பெயர் அரிஸ்டோட்டல் என்பது தெரியும்..’ மாதிரி வாக்கியங்கள் சடசடவென படிக்கும்போதே பல திறப்புகளை நமக்குள் நிகழ்த்திவிடுகின்றன.
அதற்காக எளிமையான நடையே எனக்கு உவப்பானது என்று அர்த்தமில்லை. எல்லாரும் அலறுவது போலில்லாமல் பெயரிலியின் சிடுக்குத் தமிழுக்கு நான் பரம ரசிகையாக்கும். 🙂 (ஆனால் என்ன, அவர் எவ்வளவு கடுமையான கோபத்தில் எழுதினாலும் அல்லது தீவிர விஷயங்களை எழுதினாலும், படிக்கும்போது நமக்கு அதையும்மீறி அந்த மொழியழகில் வெடிச்சிரிப்பு முதல் புன்முறுவல்வரை ஏதாவது வந்துவிடுவதால் நீர்த்துவிடுகிறது.)
எப்படியும் அடுத்த சுஜாதா நாந்தானாக்கும் என்று முனைந்தோ அல்லது தன்னை அறியாமலேயோ எழுதும் பல இணைய எழுத்துகளுக்கு நடுவில் நிச்சயம் ஆசுவாசமாக இருந்த நடை.
இன்னும் கொஞ்சம் நேரம் விழித்திருந்தபோது செய்தது கொஞ்சம் ஹிந்தி மொழியறிவை வளர்த்துக்கொண்டது. அடிப்படையிலோ, பேசுவதிலோ பெரிய பிரச்சினை இல்லை என்றாலும் தொடர்ந்து கொஞ்சம் vocabuloryயை ஏற்ற நினைத்தேன். முதலில் ஆங்கிலத்தில் CNN-IBN மாதிரி சேனல்களில் செய்தியைக் கேட்டுவிடுவது. பின்பு அதையே ஹிந்தி சேனலில் பார்ப்பது. இந்தமுறையில் செய்தியை அறிய அதிகமெனக்கெடல் இல்லாமலே மொழியை மட்டும் கவனித்து உள்வாங்க முடிந்தது. இப்போது அந்நியமொழி என்ற உறுத்தல் இல்லாமல் ஹிந்தியை மூளை ஓரளவு சுலபமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. இந்த வழியை பெண்ணுக்கு உரைநடை தமிழுக்கு செய்துபார்த்தேன். அவளுக்கு பேச்சுத் தமிழ் எப்போதும் பிரச்சினை இல்லை. ஆனால் உரைநடைக்கு தினகரன், தினத்தந்தி என்று வாங்கிப் பார்த்து என்னாலேயே சகிக்க முடியவில்லை. (இந்தப் பத்திரிகைகள் எப்படி நம்பர் ஒன் நாளிதழ் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை மும்பை எடிஷன்தான் சகிக்கவில்லையோ?) மாற்றாக முதலில் அவள் ஏற்கனவே படித்துவிட்டு தூக்கிப்போட்ட சின்ன வயது ஆங்கிலக் கதைப் புத்தகங்களிலிருந்து குட்டிக் குட்டிக் கதைகளை எளிமையாக மொழிபெயர்த்து வைத்தேன். அறிந்த கதை என்பதால் அவளால் சுலபமாக மொழிக்குள் நுழைய முடிந்தது. வாரம் ஒரு பக்கமாவது தமிழ் படிப்பதையும் தொடரவைக்க ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இருக்கிற நேரப் போதாமைக்குள் தமிழைத் திணிப்பதே தெரியாமல் திணிக்கவேண்டியிருக்கிறது. கொஞ்சம் கடினமாக இருந்தாலும் தூக்கிப் போட்டுவிட்டுப் போகிற சாத்தியம் அதிகம்.
இப்படியாக இந்தப்பக்கத்தை மறந்தததில் மீட்பர் அழைப்புக்குக் காத்திருந்து காத்திருந்து ஒருநாள் நொந்துபோய் வேறு யாரையும் வைத்து வேலையை முடித்துவிட்டோமா என்று விசாரித்தார். இன்னொருமுறை தன் தொலைப்பேசி எண்கள் மாறியிருப்பதைச் சொல்லத்தான் ஃபோனினேன் என்று தகவல் சொன்னார். எதற்கும் அசையாமல் இருந்தேன். இடையிடையே சில நண்பர்கள் கடிதம் எழுதிவிட்டு அதை செல்ஃபோனிலும் சொல்லித்தொலைக்க வேண்டிய நிலைமைக்காக கடுப்படித்தார்கள். யாரோ அவசரமாக எனக்கு ட்விட்டர் கணக்குத் திறந்து ‘vettithendam’ என்ற கடவுச்சொல்லில் block செய்திருப்பதாகவும் தொடர்ந்து செல்பேசியில் அதை உபயோகிக்கச் சொன்னார். செல்ஃபோனும் தேவையா என்று இப்போது யோசிக்க ஆரம்பித்தேன்.
இடையில் ஒருமுறை சிஃபியின் உள்ளூர் டிஸ்ட்ரிப்யூட்டர்கள் சிஃபிக்கு பதில் 24online என்றுசொல்லி தாங்களாகவே சிஃபியை நிறுத்தி தங்களுடையதை நிறுவ வந்தார்கள். என்பொட்டி காலி என்றதும் விடாமல் ரங்க்ஸின் லேப்டாப்பில் மாற்றிவிட்டுப் போனார்கள். யதேச்சையாக ஒருநாள் ரங்க்ஸ் திறந்த சமயமாக அது வராமல் போனதில் கடுப்பாக, மறுநாளே மீண்டும் சிஃபிக்கு மாற்றச் சொன்னேன். ஏன் 24online தங்களுடையது இல்லை என்று வாடிக்கையாளர்களுக்குச் சொல்லவில்லை என்று சிஃபிக்காரர்களுடன் சண்டைபோட்டேன். அங்கிருந்த ஒருவர் அப்படியெல்லாம் கஸ்டமரை நாங்க இழுக்கமுடியாது என்று எதிக்ஸ்(வசனம்) பேசியது என் எரிச்சலை அதிகப்படுத்தியது. தான் வேலைசெய்யும் நிறுவனம் அதைவிட முக்கியம் என்பது எப்போது இவர்களுக்குத் தெரியும்? கஸ்டமர் சர்வீஸ் குறித்து ஒரு பொழிப்புரை கொடுத்து வைத்தேன். ஒருவழியாக சிஃபி ஒன்றரைமாதம் கழித்து இப்போதுதான் தூக்கத்திலிருந்து முழித்துக்கொண்டு 24online எங்களுடையை சேவை இல்லை என்று தினமும் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தியில் தகவல் அனுப்பிக்கொண்டிருக்கிறது.)
எப்படியோ இணையம் இல்லாமலே பொழுது சுகமாகப் போனது அல்லது இணையம் குறித்த நினைவே அதிகம் வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். நாட்டுநடப்புகள் ஒவ்வொன்றிற்கும் யார் யார் என்ன எழுதியிருப்பார்கள் என்று ஏற்கனவே ஊகம் இருப்பதால் பெரிய ஆர்வம் வரவில்லை. முடிந்தால் இனி உட்கார்ந்து ஊகங்களைச் சரிபார்க்கலாம். 🙂 மாதாமாதம் சிஃபியிலிருந்து சந்தாப் பணம் வாங்கிக் கொள்ள வரும்போது மட்டும் இணைப்பு இனியும் தேவையா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. பாலராஜன்கீதா ஒரு இரவு தொலைப்பேசி, விகடனில் இந்த வலைபதிவு குறித்த அறிமுகம் வந்திருப்பதாகச் சொன்னார். (இன்று இந்த வரியைத் தட்டிமுடிக்கும்போது சரியாக தொலைப்பேசியில் அழைத்து புத்தாண்டு வாழ்த்துகள் சொன்னார். நூறு ஆயுசு என்று இதைத்தான் சொல்வார்கள்!) நான் உஷாவுடனும் தேசிகனுடனும் பேச பல விஷயங்கள் இருந்தாலும் அதில் இணையம் இல்லை. அப்பொழுதுதான் வந்தாரய்ய்யா வேதம் ஓதுபவர்.
“ஒருத்தன் வணக்கம் சொன்னா, ‘ஹாய்ங்கறது, யா’ங்கறது, ஹோல்டிங்கறது… என்ன நாகரிகம் இது? நான் தொலைப்பேசியை வைக்கறேன் ..” மாதிரி சிணுங்கல்கள் வந்தால் சாத்தான்(குளம்) ஊருக்கு வந்திருப்பதாக அர்த்தம். நான் ஆச்சரியப்பட்டு பாராட்டும் குணம் இவருடையது. எனக்கெல்லாம் ஊருக்குப் போனால் சொந்த வேலையையே முடிக்கவில்லை போன்ற குறை இருக்கும். ஆனால் வரும்போதெல்லாம் மரத்தடி கூட்டம், வலைப்பதிவர் கூட்டம் என்றெல்லாம் நடத்துவதோடு தனிப்பட்ட முறையில் எனக்கும் தொலைப்பேசி விசாரிக்கத் தவறியதே இல்லை. நிச்சயம் பாரட்டவேண்டிய குணம். பண்புடன் குழும ஆண்டுவிழாவுக்கான என் சேவையை (எழுத அழைத்து அவர் அனுப்பிய கடிதத்தை நான் படிக்காததால், எதுவுமே நான் அங்கு எழுதவில்லை.) மனதாரப் பாரட்டினார். அடுத்த அரைமணிநேரத்தில் மொத்த இணைய விஷயங்களையும் தொகுத்துக் கொடுத்தார். அப்பாவியாக, விடுபட்டவைகளுக்கே மலர்வனத்தை அறிமுகம் செய்துவைத்த தன் கேணத்தனத்தையும், ஆளாளுக்கு இவரிடமே விஷயம் தெரியுமா, என்று இருவரும் இணைந்த கதையைச் சொல்ல, தான் அப்படியா என்று ஆச்சரியப்பட வேண்டியிருந்த கொடுமையையும் சொன்ன கையோடு என்னிடமும், “விஷயம் தெரியுமா, எனிஇந்தியன் கிழக்கில் சேர்ந்தாச்சு!” என்றார். “அப்படியா??!!!” என்று நானும் என்னால் ஆனமட்டும் காட்டிய அதிர்ச்சியில் குறைந்தது ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரித்திருக்கலாம். எனிஇந்தியன் நமக்கு சுவாதீனமான இடமாச்சே. இனிமே அந்த இலக்கியவாதியை சந்திக்கவே முடியாதா என்று இரண்டு பேரும் (உள்ளூர சாக்கு கிடைத்ததற்கு சந்தோஷப்பட்டாலும்) வெளியே ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் இண்டியா.
இப்படியாக வாரமொரு ஞாயிறும் பொழுதொரு காரணமுமாய் கணினி திருத்தமுடியாமலே தள்ளிப் போக, சுகமாகத் தூங்கிப் பெருத்த நேரம்போக மீதி நேரத்தை எல்லாம் எதிர்வீட்டின் புதுவரவான 4 மாதக் குழந்தையைக் கொஞ்சுவதில் குடும்பத்தினர் எல்லோருமே பத்து வயது குறைந்துவிட்டோம்…. ஆனால் அப்படியே நிம்மதியாய் இருந்துவிட முடியவில்லை. நான் வரவா வேணாமா என்று நொந்துபோன மீட்பர், விற்பதாக இருந்தால் அந்த LCD மானிட்டர் எனக்கு என்று முன்பதிவு செய்துவைத்தார். :(( கத்தரிக்காய் வாங்கப் போய் மழைக்கு ஒதுங்கிய ஒருநாளில் ரங்கமணி cromaவிற்குள் நுழைந்துவிட நானும் குஷியாய் வேடிக்கைபார்க்க நுழைந்தேன். பிறகுதான் தீவிரம் புரிந்தது. “நீ சரிபண்ணுவன்னு எனக்கு நம்பிக்கை இல்லை. அதுக்கெல்லாம் 5 வருஷம்தான் லைஃப். போரடிக்குது. இன்னிக்கே புதுசு” என்று பிடிவாதம் பிடித்ததில் மூச்சே நின்றுவிட்டது. அப்பாவும் பெண்ணும் பாதிசோப் பெட்டியில் பாக்கி இருக்கும்போதே புதுசோப் கேட்டு பாத்ரூமிலிருந்து குரல் கொடுக்கும் டைப். எனக்கு அந்த இடத்திலேயே என் கணினிப் பொட்டியின் மேல் தாங்கமுடியாத பிரியம் வந்துவிட்டது. முடியவே முடியாது என்று பிடிவாதம் பிடித்தேன். இந்தக் கம்பெனி, அந்த ப்ராசசர், இந்த ஆபரேடிங் சிஸ்டம், அந்த டைப் மானிட்டர் காம்பினேஷன்ல இருக்கா?” என்றெல்லாம் புடைவைக் கடையில் கலர், பார்டர், தலைப்பு விஷயத்தில் கடைக்காரரைக் குழப்பி வாங்காமல் வரும் ட்ரிக்கையே இங்கும் செயல்படுத்தி 5, 6 தடவை போயும் வாங்கவிடாமல் தடுத்தேன். ஆனால் ஒவ்வொருதடவையும் வேறு ஏதாவது ஒரு எலக்ட்ரானிக் பொருளை எந்தத் திட்டமும் இல்லாமல் வாங்கிக் குவித்த பணத்துக்கு இன்னும் இரண்டு கணினியே வாங்கியிருக்கலாம். பெண்ணும் தன் பங்குக்கு குறைந்தது 2 சிடியாவது வாங்கி பில்போடும் நேரத்துக்கு வந்து நீட்டிக் கொண்டிருந்தாள். கணினி பக்கம் போனாலே தனுஷை மனோபாலா பார்ப்பதுமாதிரி அந்த ரெப் பார்க்க ஆரம்பித்தார். ஆனால் கிறிஸ்துமஸ், நியூஇயருக்குள் எனக்குப் பிடித்த ஒரு புதுக் கணினியை என்னை எடுத்துப் போகவைப்பேன் என்று சபதமெடுத்தார்.
ரங்கமணி உணர்ச்சிவசப்பட்டு எங்கள் ஆஸ்தான ஃபர்னிச்சர் கடைக்குப் போனார். புதிதாக வரப்போகும் கணினிக்கு மேசையும் புதிதாகச் செய்யவேண்டும் என்பதில் அடுத்த தீவிரம். வாங்கறதே வாங்கறோம், ப்ரிண்டர், ஸ்கேனர் எல்லாம் அட்வான்ஸ்டா வந்திருக்கு. அதையும் சேர்த்து வாங்கிட்டு அதுக்கெல்லாம் தகுந்தமாதிரி நாமே டிசைன்செஞ்சு ஆர்டர் கொடுத்து செய்யலாமே என்று ஏற்றிவிட்டேன். ரெண்டுபேரும் குஷியோ குஷி. எப்படியோ நம்பறாங்களே, பாவம்!
திடீரென ஒருநாள் ஒரு சுமுகமான சூழலில் குட்டிப்பாப்பாவோடு குடும்பமே விளையாடிக்கொண்டு டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது நெட்மக்கள் வந்தார்கள். “மொத்த லைனும் போயிடுச்சு. நான் உங்கவீட்டில செக் செஞ்சுக்கலாமா?” என்பதோடு நிறுத்தாமல், “என்னங்க இப்பல்லாம் ஃபோனே செய்றதில்லை?” என்று சொந்த பெரியப்பா பையன்போல் சுவாதீனமாகத் திட்டிக்கொண்டே நேராக பொட்டியிடம் வந்தார்கள். 6 மாதங்களுக்குமேல் உபயோகத்தில் இல்லை என்றதும் ஆச்சரியமானார்கள்.
“அப்பல்லாம் கொஞ்ச நேரம் நெட் போனா கூட அமைதியா இருக்கமாட்டாங்க” என்று ரங்கமணிக்கு எடுத்துக் கொடுத்தார்கள்.
“உடனேஉடனே CCக்கு கம்ப்ளைண்ட் செய்வாங்களோ?” என்றபடி நீ நல்லபேரே வாங்கமாட்டியா என்று பையனைப் பார்க்கும் அப்பா மாதிரி சுவாரசியமில்லாமல் பார்த்த ரங்கமணியை நான் பார்க்கவில்லை.
“நீங்க வேற சார். CCக்கு செஞ்சாதான் பரவாயில்லையே. முதல்ல டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் எங்களுக்குத் தான் செய்வாங்க. நாங்க அரைமணிநேரத்துல வரலைன்னா, எப்படித்தான் நம்பர் கண்டுபிடிப்பாங்களோ, எங்க ஆஃபிசர், அவங்க ஆஃபிசர், அவங்க வீடு, சின்னவீடு வரைக்கும் எல்லா லேண்ட்லைன், மொபைல் நம்பருக்கும் அடிச்சு, போட்டுக் கொடுத்துடுவாங்க. இப்ப இந்த லைன் ரெண்டு நாளா ரிப்பேர். சொல்றவங்களே இல்லை” என்றதில் அதிக ரோஷமாகி ‘இருங்கடே, திரும்ப வரேன்’ என்று கறுவிக் கொண்டேன்.
“சரி பரவாயில்லை, கணினியை விக்கறதா இருந்தா நாங்க யாராவது மானிட்டரும் கீபோர்டும் எடுத்துக்கறோம், மறக்காம சொல்லுங்க,” என்று முடித்துக்கொண்டு போனார்கள். நான் கணினியின்மேல் காதலாகிக் கசிந்துருகிப் போனேன். உடனடியாக மீட்பருக்குப் பேசி பக்ரீத் லீவுக்கு வரச் சொன்னேன். ஐடிகாரங்களுக்கு அதுக்கெல்லாம் லீவ் இல்லையே என்று ஒருபாட்டம் அழுதார். ஒழி, இந்த ஞாயிற்றுக்கிழமை கட்டாயம் வரவேண்டும் என்று சொல்லி வழிமேல் விழி வைத்தும் வந்தாரில்லை. ஃபோன் தான் வந்தது. என் குழந்தைகளுக்கு இன்னிக்கு தடுப்பூசி போடணும். ட்வின்ஸ் வேற. தனியா என் மனைவி இரண்டையும் ஹாண்டில் பண்ண முடியாது. நானும் போயிட்டு ஈவினிங் வரேன் என்றார். காரணமே கவிதை மாதிரி இருந்ததில் கூலாகி, குழந்தைகளுக்கு ஜுரம் வரும், பாத்துக்குங்க, இன்னிக்கு வரவே வேணாம், முடிஞ்சபோது வேலை நாள்லயே வாங்க” என்று சொல்லி நெகிழ்ந்துவைத்தேன்.
ஒருவழியாக மீட்பர் வந்த அன்றுதான் இந்தப் பதிவின் தலைப்புக்கு வருகிறோம். இந்தத் தடவை பிரச்சினை இல்லை. எல்லா டாகுமெண்டும் அப்படியே அரைமணிநேரத்துல எடுத்துடலாம். அப்றம் ஃபார்மட் என்று உட்கார்ந்தார். எதையும் மீட்கவேண்டாம். அத்தனையும் அழிந்தால் பரவாயில்லை. நேராக ஃபார்மட் செய்யலாம் என்று சொன்னதை மீட்பரின் காதுகளால் நம்பவே முடியவில்லை. சென்றமுறை நடந்த கூத்துகளை ரீவைண்ட் செய்துகொண்டிருக்கிறார் என்பது முகத்திலேயே தெரிந்தது. “அப்படியெல்லாம் விடவே முடியாது. நான் எல்லாத்தையும் எடுத்துவெச்சுடறேன். நீங்க தேவைன்னா இறக்கிக்குங்க. இல்லைன்னா அழிச்சுக்கலாம்,” என்று பிடிவாதம் பிடித்தார். ஒரு வெயிட்டீஸ் விட்டு ரங்கமணிக்கு தொலைப்பேசி அவருடையது ஏதாவது இருக்கிறதா என்றுகேட்டேன். “எனக்கென்ன கண்ட இடத்துலயும் வெக்க கிறுக்கா பிடிச்சிருக்கு?” என்று கொழுப்பாக பதில்வந்தது. எதிர்பார்த்ததுதான் என்பதால் மனதைக் கல்லாக்கிக் கொண்டு சிறிதுகூட தயங்காமல் அஹம் ப்ரம்மாஸ்மி என்றாகி நானே என் பகுதியிலிருக்கும் அத்தனை கோப்புகளையும் ஒரு க்ளிக்கில் அழித்தேன். மீட்பர் என்னங்க இப்படி பண்ணிட்டீங்க என்று புலம்பிக்கொண்டே தன் ஃபார்மட்டிங் வேலையைத் தொடர்ந்தார்.
மறுநாள் ஒருவழியாய் இணையஇணைப்பும் கொடுக்கவைத்து திறந்தால் வரவே இல்லை. “உங்களுக்கு விஷயமே தெரியாதா? மும்பை மொத்தமுமே நேத்திலேருந்து நெட் இல்லையே. இன்னிக்குள்ள சரியாயிடும்.”
மறுநாள் திறந்தால் மானிட்டர், கீபோர்ட், எலிக்குட்டி எல்லாம் அநியாயத்துக்கு மௌனவிரதம். எதையுமே கணினி access செய்யவில்லை. எல்லா இணைப்பும் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துப் பார்த்து கண் வலித்தது. ரங்கமணிக்குப் பேசினால், “பின்ன கடைசில நீ என்வழிக்கு வராம முடியுமா? தலையைச் சுத்தி எறிஞ்சுட்டு புதுசா வாங்காம…” வேண்டுமென்றே ஏதோ கோளாறு செய்துவிட்டார்களோ என்று எரிச்சலாக இருந்தது.
துண்டித்துவிட்டு மீட்பருக்கு.. “ஓ, அது ஒன்னுமில்லை. திறந்து RAM ஒருதடவை துடைச்சுப் போடுங்க. சரியாயிடும்”
“விளையாடறீங்களா, எனக்கு எப்படி திறந்து செய்யத் தெரியும்?”
“இதுக்காக நான் மும்பைலேருந்து வரமுடியுமா? சிம்பிள்தான். போன வருஷம் நான் வந்தபோது திறந்ததை நீங்க பாத்தீங்களே?”
‘நான் கூடத்தான் போன வருஷம் நீ வந்தபோது தோசை வார்த்துப் போட்டேன். இப்ப உனக்கு செய்யத் தெரியுமா’ என்று கடுப்படிக்க நினைத்ததை நடத்தமுடியாமல் பின்னால் அந்தப்பக்கம் குட்டிப் பாப்பாக்களின் சத்தம் கேட்டது. ‘உனக்கு அடுத்த டெலிவரில triplets பிறந்து படுத்தட்டும் என்று சபித்து(!)விட்டு வைத்தேன்.
பாரீஸில் இருக்கும்போது வேறுவழியே இல்லாத நிலைமையில் நம்ம ஊர் சுமித் மிக்ஸியை நானே திறந்து உள்ளே பிரிந்து இருந்த இரண்டு ஒயரை கோத்துவிட்டதில் ஓட ஆரம்பித்த மிக்ஸி, இன்னும் தொடர்ந்து 7 வருஷமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பொட்டியையும் திறந்து பார்ப்போம், என்ன ஆகிவிடப்போகிறது என்று கவிழ்த்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தேன்.
எங்கேயாவது திறக்க ஸ்க்ரூ இருக்கிறதா ஸ்க்ரூடிரைவரோடு தேடினால் கிடைக்கவே இல்லை. உருவினாலே திறக்கிறது என்று கண்டுபிடிக்கவே பத்து நிமிடம் போயிற்று. திறந்தால் உள்ளே ஒன்றுமே புரியாமல் இருந்தது. இதில் RAM யாரென்று தெரியவில்லை. நமக்குத் தெரிந்த ஒரே RAM அயோத்யாக்காரர்தான். எப்படியும் ரங்கமணி, மீட்பரை இதுவிஷயத்தில் கேட்பதில்லை என்று வைராக்யமாக இருந்தேன்.
தேசிகனுக்குப் பேசினேன். “ம்ம்ம் அதை எப்படிச் சொல்றது? ஒன்னு செய்ங்க. தூக்கிகிட்டிருக்கற எல்லாத்தையுமே ஒரு சின்ன அழுத்து அழுத்துங்க. ஓட ஆரம்பிக்கலாம்”
சின்னதாய் இல்லாமல் பெரிதாய் அழுத்தியும் எதுவும் நடக்கவில்லை. விரல்தான் வலித்தது. அப்படியே வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். தோல்வியோடு மூடவும் மனமில்லை.
அப்போதுதான் தம்பியிடமிருந்து ஃபோன். இந்தக் கழுதையை எப்படி மறந்துபோகிறேன்? பெரிய பிஸ்தா இல்லையென்றாலும் வீட்டில் வாங்கும் எந்தப் பொருளையும் ஒருதடவை பிரித்துமேய்ந்து திரும்ப மூடும் வழக்கமுள்ளவன்.
“உனக்குச் சொன்னவங்க உனக்கு ஏத்தமாதிரி சரியா சொல்லித் தரலை. நான் சொல்றேன். எல்லாத்தையும் பிடுங்கிப் பாரு. எது பிடுங்க வருதோ அதான் RAM.”
வந்தது. :)) ”
ஃபூ ஃபூன்னு ஊது!”
ஊதினேன். 🙂
“அவ்ளோதான். எடுத்த சாமானை எடுத்த எடத்துலயே வைக்கற உன் பாலிஸியை அடாப்ட் பண்ணு. ஆல் த பெஸ்ட்”
“தாங்க்ஸ்”
“அதை எனக்குச் சொல்லாத. எந்தக் காரியமும் செய்றதுக்கு முன்னலாயும் பர்த்தாவை மனசுல தியானிச்சுக்க. இதெல்லாம் அம்மா உனக்கு சொல்லித் தரலையா? அந்தக் காலத்துல பெண்கள் சட்டி செய்றதுலேருந்து அடுப்பெரிக்கற வரைக்கும் அப்படித்தான் சாதிச்சிருக்காங்க. நீ சதா அந்தாளைத் திட்டிண்டே இருந்தா…”
லைனைத் துண்டித்து மெஷின் ஆன் செய்ததில் எல்லாவற்றிற்குமே உயிர்வந்திருந்தது. ஒழுங்காய் மூடிவைத்து நிமிர்த்தினேன்.
சாதித்த திருப்தியில் ஒரு காபிக்குப்பின் நெட் திறக்கப் பார்த்தால், இரக்கமேயில்லாமல் account expired என்றது. கேட்டால் 24online போய் திரும்ப வந்திருக்கீங்க. அதான் auto renewal விட்டுப் போச்சு” பதிலும், “நீங்க அதெல்லாம் முதல்லயே பாக்கறதில்லையா?” கேள்வியும் பூமராங்காய் திரும்பிவந்தது. என் நெட்டில்லா சோகக் கதையைச் சொல்லிப் புரியவைத்து சரிசெய்து..
மறுநாள்.. மறுநாள் என்று நேற்று ஒருவழியாக வந்துவிட்டேன். எல்லாம் அழிந்து, துடைத்து துப்புரவாக இருக்கும் பெட்டியைப் பார்த்தாலே உற்சாகமாக இருக்கிறது. இனியும் தொடர்ந்து சுத்தபத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இகலப்பை மட்டும் போனால் போகிறதென்று இறக்கிக் கொண்டேன். முதலில் நம்ப பக்கம் போய்ப் பார்க்கலாம் என்றால் சுட்டி தட்டுவதே தடுமாற்றமாக இருந்தது. நாமெப்படி சமையல் பதிவுகள் போட்டு, பின்னூட்டத்துக்கு பதில் போட்டுக் கொண்டிருந்தோம் என்று மலைப்பாக இருந்தது. பக்கம் திறக்கும் வரை ஆர்வமில்லாமல், ஒரு கடினமான மனநிலையில் இருந்தாலும் திறந்ததும் முகப்பில் சப்பாத்தி, கூட்டு என்று இருக்காமல் சுஜாதாவின் படம்பார்த்ததும் நொறுங்கிவிட்டேன். (மனம் சில அடிப்படை விஷயங்களில் மாறுவதே இல்லை போலிருக்கிறது.) கடைசியாக இந்தப்பதிவுதான் எழுதினேன் என்ற அளவுக்குக்கூட என் பதிவுகுறித்த நினைவில்லை. பதிவுப்பக்கத்தில் சட்டெனெ கொட்ட ஆரம்பித்த பனிப் பொழிவு… போன வருடம் சீசனுக்கு வேர்ட்பிரஸ் செட்டிங்ஸில் வைத்திருந்தது இந்த வருடமும் தொடர்கிறது போலிருக்கிறது. என் மனமும் இளக இவ்வளவே போதுமாயிருந்தது. அப்புறம் என்ன செய்வது என்று மறந்து… நினைவுவந்து, பின்னூட்டங்களுக்காக கட்டுப்பாட்டகம் போனால் தலைசுற்றல். வேர்ட்பிரஸ் மொத்தமாகக் குதறிப் போட்டிருக்கிறார்கள். நிதானமாகப் படித்துத் தேறுவோம் என்று மூடிவிட்டு மெயில் பக்கம் திறந்தால் அதைவிட மோசம்.
நாங்க எல்லாம் ரொம்ப ஆர்கனைஸ்டாக்கும் என்று வலைப்பதிவுக்கு ஒரு ஐடி, க்ரூப் கடிதங்களுக்கு ஒரு ஐடி, பெர்சனலுக்கு ஒரு ஐடி என்று ஏகத்துக்கு பந்தா விட்டதில் இப்போது ஒவ்வொரு ஐடியும் கடவுச்சொல் போட்டுத் திறப்பதற்குள் டென்ஷனாகி விட்டது. சத்தியமாக கடைசியாய் என்ன வைத்திருந்தேன் என்று நினைவே இல்லை. இணையத் தெய்வம் தென்திருப்பேறை மகரநெடுங்குழைக்காதனை வேண்டிக்கொண்டே முயற்சி செய்ததில் சில உடனே திறக்க, சிலது முகத்தில் குத்துவிட்டது. ஒருவழியாய் எல்லாவற்றையும் மீட்டாகிவிட்டது. பின்னூட்டங்களை அனுமதிப்பதற்கே அதிகநேரம் சொதப்பிக் கொண்டிருந்தேன்.
கடந்த மாதங்களில் என் தினசரி வேலைகள், பழக்கங்கள், உணவுப் பழக்கம், உடற்பயிற்சிகள், மூச்சுப் பயிற்சி, தியானம் என்று அனைத்துமே மாறிவிட்டன. இனியும் சமையல்குறிப்பு எப்போது எழுத ஆரம்பிப்பேன் என்று தெரியவில்லை. அதற்குமுன் இந்தப் பதிவை ஏற்றித்தான் வேர்ட்பிரஸுடன் மீண்டும் ‘பழகிப்பார்க்க’ வேண்டும். பின்னூட்டங்களுக்கும் தனிமடல்களுக்கும் நேரம் எடுத்து பதில் எழுதுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
-0-
பரித்ரானாய ஸாதூனாம் என்று இந்தமுறை பதிவிற்குப் பெயர் வைத்ததற்கு இன்னொரு நியாயமும் கிடைத்தது. இந்த இடைவேளையில் நான் செய்த ஒரே கணினி வேலை, கீதைக்கு பாரதியார் தமிழில் மொழிபெயர்த்த உரையில் கொஞ்சம் தட்டி ரங்க்ஸ் உதவியுடன் தமிழ் இந்து தளத்திற்கு அனுப்பியது.
“எல்லாரும் நல்லாப் பாத்துக்குங்க, நானும் ரௌடிதான்! நானும் பெரிய ரௌடிதான்!!…” என்று ஜீப்பில் ஏறிக்கொள்ள ஆசைப்பட்டாலும் நமக்கும் வடிவேலு மாதிரியே இந்த விஷயத்தில் ‘பில்டிங் ஸ்ட்ராங்தான் பேஸ்மெண்ட்தான் வீக்’ என்பதால் சும்மா அவ்வப்போது இந்தத் தளத்தை படித்துமட்டும் வந்தேன். இந்த முறை நான் பெற்ற தெங்கம்பழமாய் என்னிடம் இருந்த கிழக்கு பிரசுரித்த புத்தகத்தை வைத்து 15 நாளில் தட்டமுடியும் என்று நினைத்து, ஆனால் கீபோர்டில் வைத்த கையை எடுக்க முடியாமல் மூன்றே நாளில் முடித்தேன். கீதை காரணமா, அதற்குப் பொருள் எழுதியவர் காரணமா, நிலைகுலைந்த என் மனநிலை காரணமா தெரியவில்லை. கிழக்கு விட்ட பிழைகள், என் தட்டுப்பிழைகள் எல்லாம் சேர்த்து, ‘எத்தனை குறைகள் எத்தனை பிழைகள், எத்தனை அடியேன் எத்தனை செயினும்’ திரு. ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட குழுமம் அமர்ந்து அத்தனையையும் திருத்தி மிக நேர்த்தியாக இந்தத் தளத்தில் வலையேற்றியிருக்கிறார்கள்.
தட்டியதில் என் பங்கைவிட இந்த கீதை உரை இந்த நாள்களில் என் வாழ்வில் என் உள்ளத்தில், செய்த பங்கு மிகமிக அதிகம். ஜெயமோகனின் ஓவர்டோசில் கொஞ்சம் பயந்து ஓடியிருக்கிறேன். இனி திரும்ப அவைகளையும் படிக்கவேண்டும். வாய்ப்புக் கொடுத்த இந்து.காம் தளத்தாருக்கு என் நன்றி.
பி.கு:
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் (சொல்வதெல்லாம் பிற்போக்காமே?)
இந்தப் பதிவு எழுத ஆரம்பித்தபோது, 6, 7 மாதமாக வரமுடியவில்லை. இனிமேலும் என்னால் தொடர்ந்து எழுதமுடியுமா என்று தயக்கமாக இருக்கிறது என்று மட்டுமே தான் சொல்ல நினைத்தேன். வழக்கம்போலவே உண்மைத் தமிழ(ன்)ச்சி பதிவாக நீண்டுவிட்டதன்மூலம் சொல்லிக் கொள்வதென்னவென்றால்… நான் இன்னும் மாறலை/திருந்தலை. 🙂
வெள்ளி, ஜனவரி 2, 2009 at 2:08 முப
//நான் இன்னும் மாறலை/திருந்தலை//
ஆஹா…. அப்படிப்போடு அருவாளை;-)))))
வெல்கம் பேக்(கு)
ஜமாய் ராணி ஜமாய்.
ஆளையே காணொமேன்னு தவிச்சு அப்புரம் பழகிப்போச்சு.
நெல்லிக்காய் தொக்கு மூணுதடவைப் பண்ணி முடிஞ்சது.
புத்தாண்டுகளுக்கான வாழ்த்து(க்)கள்.
வெள்ளி, ஜனவரி 2, 2009 at 9:18 முப
Wish You a Happy New Year.
Happy to read your writings after a long time.
வெள்ளி, ஜனவரி 2, 2009 at 10:07 முப
நல்வரவு.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
விட்டுப்போன பல பெண்டிங் ஐட்டங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் எங்களைப்போன்றவர்களை ஏமாற்றாமல் அந்த ட்யூட்டியைச் செய்துவிட்டு பிறகு சமையல் அறையை மூடலாம். இப்போது வேண்டாமே! :-))
நன்றி
ஜயராமன்
வெள்ளி, ஜனவரி 2, 2009 at 10:19 முப
Jsri,
Glad to read your Posting in New year day.Keep on posting as Iam one of your (New )fan.
Affectionately,
S.Kannan.
வெள்ளி, ஜனவரி 2, 2009 at 10:28 முப
நீங்க எப்ப உண்மைத்தமிழன் ஆனீங்க. கடைசீவரைக்கும் படிக்க ரொம்ப நேரம் ஆகும் போல இருக்கு..அப்புறமா வரேன்.
வெள்ளி, ஜனவரி 2, 2009 at 11:08 முப
புதுவருடம் இப்படி ஆரம்பிக்கும் என்று ஒரு ஜோசியன்கூட சொல்லலியே…! இதைப் படிச்சு முடிக்கவே நாலு நாளு ஆகுமே….!
வெள்ளி, ஜனவரி 2, 2009 at 1:30 பிப
ஹலோ,
வந்தாச்சா?? வெல்கம்….
எங்கே சுஜாதாவொட பதிவொட கடைசியா இருக்கட்டும்னு நெனச்சிட்டிங்களோன்னு பயந்துட்டேன். நல்ல வேளை ஜெயஸ்ரீ திருந்தல….அப்பாடா…
அப்பறம் தனிமடல்ல என்னொட நம்பர் எல்லாம் கொடுத்து பேசுவீங்கன்னு காத்துகிட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருந்த்தேன்..ப்ச் சரி அப்பறம் மெயிலாவது வரும்னு பாத்தா NO Response. சரி நாம்ப கஷ்ட்ப்பட்டு தமிழ்ல டைப் பண்ண ஆரம்பிச்சதே வேஸ்ட்னு நெனச்சென்…பரவாயில்ல காப்பாத்திட்டிங்க.
ஸ்ரீலதா
வெள்ளி, ஜனவரி 2, 2009 at 2:34 பிப
உங்களை யாரு மாறச் சொன்னது? திருந்தச் சொன்னது?
வெள்ளி, ஜனவரி 2, 2009 at 4:01 பிப
போட்ட முதல் பின்னூட்டம் போயே போச்சு.
புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஜெஸ்ரீ.
எப்படித்தான் சும்மா இருந்தீங்களோ.(எழுதாம)
மின்சாரக்கன்னவு பாட்டு கேக்கும்போதெல்லாம் நினைச்சுப்பேன். இந்தப் பெண் எங்கே போனாஎ என்று. மும்பை நிகழ்ச்சி போதும் நினைத்துக்கொண்டேன்.
இனி இப்படி திடீர் வேலை நிறுத்தமெல்லாம் செய்யாதீங்க:) நல்வரவு!!
வெள்ளி, ஜனவரி 2, 2009 at 4:46 பிப
நான் உஷாவுடனும் தேசிகனுடனும் பேச பல விஷயங்கள் இருந்தாலும் அதில் இணையம் இல்லை. //
ஜெ, இது அபாண்டம் 🙂 நீங்க ஏன் எழுதலை? தேசிகன் ஏன் இன்னும் சுஜாதா ஆட்டோபயாக்ரபி
ஆரம்பிக்கவில்லைன்னு கேட்டேன்
வெள்ளி, ஜனவரி 2, 2009 at 7:35 பிப
நானும் கொஞ்சம் பிற்போக்குத்தனமா வாழ்த்திக்கறேன் – wish you a happy new year… தமிழ் புத்தாண்டுக்கு இங்கிலீபிசுல வாழ்த்தினா எல்லாரும் பொங்கு பொங்குனு பொங்கறாங்க. அதுனால ஒரு சேப்டிக்கு அததுக்கு அதது மொழியே உபயோகிக்கலாம்னுதான்…
வெள்ளி, ஜனவரி 2, 2009 at 7:53 பிப
Welcome back. Very happy to see you back
வெள்ளி, ஜனவரி 2, 2009 at 9:01 பிப
ஹையா!ஜெயஸ்ரீ திரும்ப வந்தாச்சு!வாங்க வாங்க ,கலக்க ஆரம்பிங்க. (ஆரம்பிச்சுட்டீங்க!)
வெள்ளி, ஜனவரி 2, 2009 at 9:54 பிப
Wish You A Happy Newyear.Nice to see U again.
சனி, ஜனவரி 3, 2009 at 12:25 முப
அப்பாடா ரெம்ப நாளைக்கு அப்புறம் ஜெயஸ்ரீயோட பதிவு படிக்கலாம்னு…. ஏஏஏயம்மா எம்மாம் பெருசு! விட்ட gapக்கெல்லாம் சேர்த்துவைச்சு! அடுத்த லீவுல படிக்கிறேன், இப்போதைக்கு, வெல்கம் பேக்கு, ஹேப்பி ந்யூ இயரு.
சனி, ஜனவரி 3, 2009 at 1:56 முப
[…] அப்படியே 250ஐத் தாண்டுமென்றால் அடுத்தவரைக் குறித்த ருசிகரத் தகவலோ, லாவகமான மொழிப்பிரவாகமோ, ஏதோவென்று உள்ளேயிருந்து கிச்சுகிச்சு மூட்ட வேண்டும். (உ.: ஜெயஸ்ரீ: பரித்ரானாய ஸாதூனாம்… – Part 2) […]
சனி, ஜனவரி 3, 2009 at 8:13 முப
என் பெண் சிறுவயதில், ‘பரித்ரானாய’ என்று கேட்டாலே, ‘ஏய், நாயே சொல்லாத…’ என்று சண்டைக்கு வருவாள். அவளைத்தான் திட்டுகிறேன் என்று எடுத்துக்கொள்வாள். இன்றும்கூட, யாராவது ‘பரித்ரானாய’ என்று சொன்னால், மனம் தன்னிச்சையாக, ‘ஏய், நாயே சொல்லத…’ என்கிறது.
Welcome back.
சனி, ஜனவரி 3, 2009 at 3:07 பிப
Wonderful writing!
சனி, ஜனவரி 3, 2009 at 3:18 பிப
welcome back.
சனி, ஜனவரி 3, 2009 at 3:57 பிப
Jsri,
“பரித்ரானாய ஸாதூனாம்” என்ற முழக்கத்தோடு திரும்ப வந்தமைக்கு வாழ்த்து,
என்ன தீயவரை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் உத்தேசமா ? 😉
ஒரு பிரேக் அப்றம் வந்தாலும், சுவாரசியமாத் தான் எழுதறீங்க 🙂
Goes to prove, FORM is temporary but CLASS is permanent !!
எ.அ.பாலா
ஞாயிறு, ஜனவரி 4, 2009 at 7:22 முப
மீண்டும் JG !
ரங்கன் கோயில் க்ஷீரணம் செய்முறை கேட்டு இருந்தேன் [ஜூலை 2008 under venPongal].
இதோடு மற்றவை உம் கொஞ்சம் சாதித்தால் உதவியாக இருக்கும்.
மற்றவை:
புளுகாப்புப் புளியோதரை’,
‘புளுகாப்பு தோசை’
உருப்படி (ஏகாதசி item என்று சொன்னீர்கள்)
கிருஷ்ணா
ஞாயிறு, ஜனவரி 4, 2009 at 8:19 முப
கலக்கறீங்களே! வெங்கட்ரமணன் என்ற ஒரு நண்பர் நீங்கள் சுஜாதாவை பற்றி எழுதி இருந்ததை ஒரு முறை காட்டினார். அதுக்கப்புறம் ஆளே காணோமேன்னு நினச்சேன். பின்னிட்டீங்க!
ஞாயிறு, ஜனவரி 4, 2009 at 11:23 முப
Welcome, welcome, glae to see your postings!!!
ஞாயிறு, ஜனவரி 4, 2009 at 9:10 பிப
அடிக்கடி வாங்கோ……
திங்கள், ஜனவரி 5, 2009 at 10:18 முப
ஜெயஸ்ரீ,
நீங்க திரும்ப வந்தது ரொம்ப ரொம்ப சந்தோசம்.
🙂
மறுபடியும் காண போய்டாதீங்க.
செவ்வாய், ஜனவரி 6, 2009 at 9:18 பிப
dear jm,
first & foremost thanks for ur return should go to ur brother(read Dwarabalakar–ur fav author JMs post),lest u threw away the link-it connects us all.
first time observed Dwarabalakas even for Chandrapushkarni and ofcourse ever alive at other Gopurams.
if u have any take on this or some ref. i will be thankful.
awaiting ur’s/desi’s post on the great Sujatha to keep him amidst us alive for ever…
thanks for ur return
indha-thadave endha pazhiyelum mattamal thapithu-vittena?
sundaram
செவ்வாய், ஜனவரி 6, 2009 at 9:22 பிப
யப்பா, எத்தனை நாளைக்கப்புறம் எழுதறீங்க? என் தனிமெயிலுக்கும் பதிலில்லை, சுஜாதா பதிவு தான் லாஸ்டான்னு நினைச்சிட்டிருந்தேன்….:-( சேத்து வச்சு, கூடையா உப்புச்சீடையும் முறுக்குமா பலகாரம் “பொரிச்சிரு”க்கு:-)
‘பரித்ரானாய சாதுனாம்’னு அடுத்த ‘கிருஷ்ண ஜயந்தி’ வரைக்கும் காத்திருக்காம மேலும் பதிவுகள் எழுத மிஸ்டர். காதன் (short name!) மனம் வைப்பாராக.
Happy New Year to you & family.
வியாழன், ஜனவரி 8, 2009 at 2:56 பிப
I had accidentally discovered your blog and enjoyed reading every moment of it. Your language laced with a great sense of humour is refreshing. In fact when I get bored during my work, I immediately go to your blog to perk up. I am so glad you are back towriting. Please do not give up. Looking forward to your cookery tips.
aparna
சனி, ஜனவரி 10, 2009 at 5:16 முப
// தேசிகன் ஏன் இன்னும் சுஜாதா ஆட்டோபயாக்ரபி
ஆரம்பிக்கவில்லை //
யக்கோவ்… “தேசிகன்” ஆரம்பித்தால் அது எப்படி ”சுஜாதாவின்” ”ஆட்டோ”பயாக்ரபியாகும்? ஒரே கன்பூசன்…
வியாழன், ஜனவரி 15, 2009 at 4:36 பிப
Welcome back, I stumbled on your blog few months back and managed to read most of your posts. You have a great flair for writing, was wondering why you stopped. Great that you are back with a bang.
வெள்ளி, ஜனவரி 23, 2009 at 10:37 பிப
ஜெயஸ்ரீ,
மற்றவர்கள் மாதிரி இல்லாமல், இருந்த முக்கிய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு நிதானமாக வந்து முழுமையாகப் படித்துவிட்டேன். 🙂 நீங்கள் நம்புவதற்காக கொஞ்சம் கருத்து…
///திடீரென்று கொஞ்சம் யோசனை. இவ்வளவு அவசரமாக இதை மீண்டும் இயக்கி என்ன சாதிக்கப் போகிறோம்..///
நீங்களெல்லாம் யோசிக்க ஆரம்பித்தால் விளைவு விபரீதமாகும் என்று தெரிவதால்… 🙂
///கணினி இல்லாதது வீட்டில் வேலையே இல்லாததுபோல் சுகமாக இருப்பதைக் கண்டுகொண்டேன்.///
எப்பொழுது கணினியும் வேலை என்ற உணர்வுவந்துவிட்டதோ சிறிது விலகியிருந்தது சரியே. பொழுதுபோக்கு மாதிரி மிகப் பிடித்தமான விஷயமாக இருந்தால் மட்டுமே வேலை சிறப்பாகக் கைகூடும்.
///’…என் ஒருவனுக்கு மட்டுமே அந்தக் கறுப்புப் பூனைக்குட்டியின் பெயர் அரிஸ்டோட்டல் என்பது தெரியும்..’
மாதிரி வாக்கியங்கள் சடசடவென படிக்கும்போதே பல திறப்புகளை நமக்குள் நிகழ்த்திவிடுகின்றன.///
உங்களை மாதிரி வக்கணையாக விமர்சனம் சொல்லத் தெரியாவிட்டாலும், அந்தக் கதையில் எதிர்பாராத நேரத்தில் இந்த வரி கொஞ்சமாய் எனக்கும் கிச்சுகிச்சு செய்தது உண்மைதான். தொடர்ந்து புத்தகங்களுக்கு விமர்சனம் எழுதலாமே.
///எதிர்வீட்டின் புதுவரவான 4 மாதக் குழந்தையைக் கொஞ்சுவதில் குடும்பத்தினர் எல்லோருமே பத்து வயது குறைந்துவிட்டோம்…. ///
வாழ்க்கையை புத்திசாலித்தனமாக வாழத் தெரிந்திருக்கிறது. வாழ்த்துகள். இங்கு எங்களுக்கு இந்த வாய்ப்பில்லை. 😦
///இருக்கிற நேரப் போதாமைக்குள் தமிழைத் திணிப்பதே தெரியாமல் திணிக்கவேண்டியிருக்கிறது.///
என் சஜஷன், அவர்களைப் படிக்கச் சொல்வதைவிட ஆரம்பத்தில் உட்காரவைத்து நாமே சில பக்கங்களை படித்துக் காண்பிப்பது அயர்வைக் குறைக்கும். மொழி புரிந்துவிட்டால் விடாப்பிடியாக படிக்க ஆர்வம் வரும். படக்கதைகள் இன்னும் சிறப்பு.
///‘நான் கூடத்தான் போன வருஷம் நீ வந்தபோது தோசை வார்த்துப் போட்டேன். இப்ப உனக்கு செய்யத் தெரியுமா’ என்று கடுப்படிக்க நினைத்ததை..////
ஹா ஹா ஹா நெஜமாவே முடியலை. அலுவலகத்தில் பலரிடம் பகிர்ந்துகொண்டுவிட்டேன்.
///”உனக்குச் சொன்னவங்க உனக்கு ஏத்தமாதிரி சரியா சொல்லித் தரலை. நான் சொல்றேன். எல்லாத்தையும் பிடுங்கிப் பாரு. எது பிடுங்க வருதோ அதான் RAM.”///
வந்தனம். :)))) உலகத்தில் எல்லாமே அக்காவுக்கும் தம்பிக்கும் சுலபம்தான்.
///நான் இன்னும் மாறலை/திருந்தலை.///
முடிவு சுபம். (உங்கள் கவிதைகள் மாதிரி இல்லாமல்) நன்றி திரும்ப வந்ததற்கு.
வெள்ளி, ஜனவரி 23, 2009 at 10:40 பிப
சில கேள்விகள்:
1.
//இந்த அழகில் நாளில் 6 மணிநேரம் 8 மணிநேரம் மின்வெட்டும் இருந்ததால்//
மின்வெட்டு இருந்தால் எப்படி தூங்க முடியும்?
2.
//// எல்லாரும் அலறுவது போலில்லாமல் பெயரிலியின் சிடுக்குத் தமிழுக்கு நான்////
இவருடைய பக்கத்தில் சென்று படித்துப் பார்த்தேன். ஒன்றுமே புரியவில்லையே. 😦 இலங்கைத் தமிழ் எனக்கு அறிமுகம் உண்டு. ஆனால் அதனினும் கடினமாக இருப்பதாக ஒரு பிரமை. 😦
3.
///எப்படியும் அடுத்த சுஜாதா நாந்தானாக்கும் என்று முனைந்தோ அல்லது தன்னை அறியாமலேயோ எழுதும் பல இணைய எழுத்துகளுக்கு…///
😉 சரி போகட்டுமே. அதில் உங்களுக்கு என்ன பிரச்னை? நல்லவிஷயம் தானே. பொறாமையா என்று கேட்கமாட்டேன். 🙂
4.
///”அப்படியா??!!!” என்று நானும் என்னால் ஆனமட்டும் காட்டிய அதிர்ச்சியில் குறைந்தது ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரித்திருக்கலாம்.///
முடியலை.. மின்சாரத்தைத் தொட்டால் தான் அதிர்ச்சி வரும். அதிர்ச்சியில் எப்படி மின்சாரம்? மொத்தமாகவே இந்தப் பத்தி எனக்குப் புரியவில்லை என்பது வேறு விஷயம்.
5.
////ஆனால் ஒவ்வொருதடவையும் வேறு ஏதாவது ஒரு எலக்ட்ரானிக் பொருளை எந்தத் திட்டமும் இல்லாமல் வாங்கிக் குவித்த///
உலகமே பொருளாதாரச் சரிவில் இருக்கும்போது வங்கி மட்டும் எப்படி இப்படி? (சும்மா விளையாட்டுக்கு :))
6.
///”இதுக்காக நான் மும்பைலேருந்து வரமுடியுமா?///
இதற்கு என்ன அர்த்தம்? நீங்கள் மும்பையில் இருப்பதாக நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
7.
///இகலப்பை மட்டும் போனால் போகிறதென்று இறக்கிக் கொண்டேன்.///
nhm?
8.
///இணையத் தெய்வம் என் அப்பன் தென்திருப்பேறை மகரநெடுங்குழைக்காதனை வேண்டிக்கொண்டே முயற்சி செய்ததில்///
இணையத்துகே தெய்வமா? யார் இவர்? கணினிக்கும் மௌஸ் இருப்பதால் என் அப்பனாக பிள்ளையாரப்பனைத் தான் வணங்கிவருகிறேன். அறிமுகப்படுத்தினால் நானும் என் பிரச்னைகளையும் தீர்த்துக்கொள்வேனே.
மேலே உள்ள எட்டு கேள்விக்கும் விடை தெரிந்தும் சொல்லாவிட்டால் என் தலை வெடித்துடும்(போல் இருக்கிறது.)
அடுத்தப் பதிவை அடுத்த முயற்சியில் படித்துவிட்டு வருகிறேன். அதற்குள் அடுத்த இராமாயணத்திற்கு ஏற்பாடு செய்யவும்.
சனி, பிப்ரவரி 28, 2009 at 9:12 பிப
ந்நல்வரவு ச்செயச்சிரி. இப்பத்தான் இந்தப் ப்பதிவைப் ப்பாக்க முடிஞ்சது. ம்மீண்டும் ந்நல்வ்வரஉ.
(என்னது? புரியலையா? தொலைப்பேசி அப்படின்னு ஒரு முன்னூத்தி முப்பத்தேழு முறை படிச்சா எனக்கும் ரிஷ்கா தொத்திக் கொள்ளாமல் என்ன பண்ணும்? ஹரிமொழி backup இங்கேயாவது கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தேன். அதுவும் packup ஆய்ட்ச்சா? போவட்டும் போ கோயிந்தோ.)
திங்கள், மார்ச் 16, 2009 at 10:43 பிப
வெல்கம் பேக் சொன்னவங்களுக்கு எல்லாம் நன்றி. 🙂
துளசி: உங்களுக்கு எத்தனை வெல்கம் பேக் வரப்போகுதுன்னு நினைச்சுப் பாக்கறேன்.
Prakash: Same to you. 🙂
ஜயராமன்: சரி. ஆனா அப்படி ஒன்னு நடக்கவே நடக்காது போலிருக்கே.
S.Kannan, thanks.
திங்கள், மார்ச் 16, 2009 at 10:48 பிப
msathiya: உண்மைத் தமிழன் தோன்றா முன் மரத்தடியிலேயே தோன்றிய மூத்த உண்மைத் தமிழச்சி நான். உண்மையா அவர்தான் என்னை மாதிரி பெரிய பதிவுகளா எழுதிகிட்டிருக்காரு. வரலாறு நமக்கு ரொம்ப முக்கியம். ஆனா அதைச் சொல்ற உரிமை உங்களுக்கு உண்டு. உங்க பதிவுகள் எல்லாம் சின்னச் சின்னதா க்யூட்.
haranprasanna: கிகிகி..
srilatha, என்னோட தனிமடல்களை என்னால பிரிக்கவே முடியலை. அவசியம் ஃபோன் பண்றேன். sorry.
செவ்வாய், மார்ச் 17, 2009 at 12:54 பிப
பினாத்தல் சுரேஷ்: நீங்க என் வலைப்பதிவுகளே படிக்கறதில்லையா? 🙂 ஆளாளுக்கு அலர்றாங்களே.
ரேவதி, மின்சாரக் கனவுல ‘தங்கத் தாமரை மகளே’ பாட்டு கேட்கும்போதுதானே நினைச்சுகிட்டீங்க? 🙂 நன்றி.
உஷா: நீங்க பேசும்போது யதேச்சையா செல்பேசில தேசிகன் கூப்பிட்டாரு. அதனால அவரைப் பத்தியும் விசாரிச்சீங்க. அதெல்லாம் இணையத்தைப் பத்தி பேசறது ஆகாது. இணையத்துல நடக்கற 4 சண்டை, 5 ஆப்பு, 2 கிசுகிசு, ஆண்பதிவர்களை கலாய்க்கறது…. எல்லாம் ஒரு அரைமணிநேரம் ஆசிப் மாதிரி பேசினாதான் ஒத்துக்க முடியும்.
chandra: thanks. me too.
செவ்வாய், மார்ச் 17, 2009 at 2:47 பிப
லக்ஷ்மி: //தமிழ் புத்தாண்டுக்கு இங்கிலீபிசுல வாழ்த்தினா எல்லாரும் பொங்கு பொங்குனு பொங்கறாங்க.//
தமிழ்ப் புத்தாண்டையும் பொங்கல் அன்னிக்குக் கொண்டாடறவங்களா இருக்கும். 🙂 Happy New Year :))
சென்னை பித்தன், Geetha, பிரேமலதா, Snap Judgement, Vijayashankar, Prakash, எ.அ.பாலா, RV, sri, Priya, கெக்கேபிக்குணி, aparna achar, Krishnan-
நன்றி. Happy New Year- வரப்போற தமிழ்ப் புத்தாண்டுக்கு வெச்சுண்டாலும் சரி. 🙂
விருதைமணியன்: சொந்தவீட்டுலயே ‘கூச்சப்படாம சாப்பிடுங்கோ’ன்னு சொல்றமாதிரி இருக்கு. :)) நன்றி.
முகமூடி: உங்க கண்ணுலன்னு படுதே அதெல்லாம். 😉
செவ்வாய், மார்ச் 17, 2009 at 3:01 பிப
Badri: மத்தவங்க மனசு தன்னிச்சையா சொல்றது தடாலடியா சொல்றதை எல்லாம் கேக்க ஆரம்பிச்சா அவ்ளோதான். என் மனசும் புத்தியும் என்ன சொல்றதோ அதைத்தான் செய்வேன். Again ‘பரித்ரானாய ஸாதூனாம்..’ 🙂
Krishna: என்னென்ன போட்டிருக்கேன்னே நான் கொஞ்சம் மறந்துட்டேன். திரும்பப் பார்த்து, இல்லாததை கேட்டாவது சொல்றேன்.
sundaram: நான் சாதாரணமா குறிப்பிட்டதுல நீங்க hurt ஆயிட்டீங்களேன்னுதான் வருத்தப்பட்டேன். திரும்ப வந்ததே மகிழ்ச்சி.
செவ்வாய், மார்ச் 17, 2009 at 3:37 பிப
Vijayram:
1. மின்வெட்டு இருந்தாலும் இன்வெர்ட்டரால ஃபேன் ஓடும். கணினி இயக்கலாம்; டிவி இயக்கலாம். ஆனா விநியோகிக்கறவங்ககிட்ட மின்சாரம் இல்லாததால இணைய இணைப்பும், கேபிள் டிவியும் இயங்காது. அப்றம் சுகமா தூங்கறதைத் தவிர வேற வேலை? 4 நாளா கோடைக்கால மின்வெட்டு திரும்ப ஆரம்பிச்சாச்சே! ஜாலி!!
2. அப்படி எல்லாம் மனசைத் தளரவிடக் கூடாது. நான் இதெல்லாம் தமிழானெல்லாம் ஆரம்பத்துல போய் கேட்டிருக்கேன். அதுக்கு முன்னாடி நீங்க ஏதாவது திரட்டி மூலமா நிறைய வலைப்பதிவுகள், அதோட அரசியல் எல்லாமும் படிக்கணும். அப்பத்தான் புரியும். அனுபவிச்சு படிக்கலாம். 🙂
3. ஐயய்யோ யாரோட எழுத்தைப் பார்த்துமே எனக்குப் பொறாமை எல்லாம் வந்ததே இல்லை. நாமும் சக எழுத்தாளரா பொறாமைப்பட? ஆனா ஒருத்தரை இமிடேட் பண்ணி எழுதினா எனக்கு படிக்க uneasyஆ இருக்கு. மிமிக்ரி எத்தனை நேரம் ஒருத்தர்பேசக் கேட்க முடியும்? எழுத்துலயும் எந்தப் பிரயத்னமுமேயில்லாம அவங்கவங்களுக்குன்னு ஒரு ஸ்டைல் (இது கைரேகை, குரல் மாதிரி தனித்தன்மையானது) இருக்கும். அதைவிட்டு மத்தவங்க மாதிரி எழுதினா அது யாராயிருந்தாலும் பிசிறும். தன்னுடையதுதான் (சுஜாதாவைவிட) ஸ்பெஷல்னு முதல்ல ஒரு தன்னம்பிக்கையோட எழுதணும். இல்லைன்னா இன்னும் ‘காமராஜர் ஆட்சி அமைப்போம்’னு சொல்லிகிட்டிருக்கற மாதிரிதான். (அப்ப உங்க ஆட்சி இத்தனை வருஷமா மட்டமான்னு கேட்போமில்ல?)
4. அதுக்குக் காரணம் அது எங்க குடும்பப் பிரயோகம்ங்கறதுதான். இப்பல்லாம் இருக்கற மின்வெட்டுப் பிரச்சினைக்கு நாட்டுல எது வீணாப் போனாலும் இதுல மட்டும் மின்சாரம் தயாரிக்கக் கண்டுபிடிச்சா எவ்ளோ சௌகரியம்னு நக்கல் அடிக்கக் ஆரம்பிச்சுட்டோம். அப்படி அதிகமா நாட்டுல வீணாப் போறதுல வெட்டி செண்ட்டிமெண்ட்ஸ், ஃபீலிங்க்ஸ் ஆஃப் இந்தியா, அடமா காட்ற அதிர்ச்சி எல்லாம் அடங்கும். நீங்களே சொல்லுங்க, இதுல எல்லாம் மின்சாரம் தயாரிக்க முடிஞ்சா நம்பநாட்டுல பஞ்சம் வருமா? ஆசிப் பத்தி உங்களுக்குப் புரியாததுக்குக் காரணம், திரும்ப இரண்டாவது கேள்விக்கான பதில்தான். ஏதாவது திரட்டி மூலமா நிறைய பதிவுகள் படிச்சீங்கன்னா புரியும்.
5. பெர்சனலா ரங்கமணி குதிரைவால்ல பணம் கட்றதில்லை. ரொம்ப கெட்டி. ஸ்பெஷலைஸ் பண்ணி படிக்கறதே அதைப்பத்திதான். அஃபீசியலாவும் சுலபமா இப்பல்லாம் ஒரு மேனேஜரா சீக்கிரமா டார்கெட் முடிச்சுட்டு கையைக் கட்டிகிட்டு உட்கார முடியுது. வாழ்க ரெசிஷன். IIMல படிச்சவங்க எல்லாம் கிளார்க்கா கூட வங்கிகள்ல சேரத் தயாரா இருக்காங்களாம். எல்லாத்தையும்விட முக்கியமா, வாங்கிக் குவிக்கறதெல்லாம் தேவையும், வைக்க இடமும் இருக்கான்னு பலமுறை யோசிச்சுதான் வாங்குவோம்.
6. அட, இந்த மும்பைவாலாக்கள் அலட்டற அலட்டல்ல இது ஒன்னு. நாங்க எல்லாம் நவிமும்பை (ஊருக்கு வெளில) ஏரியா அவங்களுக்கு. அதனால எங்கவீட்டுக்கு வர முனியம்மாலேருந்து ப்ளம்பர்கூட அப்படித்தான், ‘நான் மும்பைலேருந்து வரேன்ல’ன்னு தான் எங்ககிட்ட சொல்லிப்பாங்க. உங்க கணக்குக்கு நான் மும்பைலதான் இருக்கேன். 🙂
7. நானே பொட்டிக்கு வைரல் ஃபீவர் வந்ததுலேருந்து பயந்துபோய் அதை பொத்திப் பொத்தி வெச்சுகிட்டிருக்கேன். தெரியாத ______யைவிட தெரிஞ்ச ______ நல்லதுன்னு சொல்வாங்க இல்ல. அப்படித்தான். இகலப்பை பழகிடுச்சு. இன்னொரு ஃபீவர் வந்தா இந்தப் பொட்டியை நான் இழக்கவேண்டியிருக்கும்.
8. திரும்ப இரண்டாம் கேள்விக்கான பதிலையே படிச்சு நிறைய வலைப்பதிவுகள் படிங்க.
போதும் நிறுத்திப்போம்… முடியலை… அழுதுடுவேன்…. நீ சொன்னது போன மாசத்துது, இது இந்த மாசத்துக்குன்னு அடுத்த சரத்தை எடுத்துவிட்டு என் விரலை ஒடிக்காதீங்க. நீங்க என் பதிவுகளைப் படிக்கறதை நான் நம்பறேன். இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடாம டிமிக்கி குடுத்து ஓட நினைச்சதே உங்க கேள்விக்கணைகள் தந்த அயர்ச்சிலதான். இவ்ளோ தட்டுத் திறனையும் வெச்சு நீங்க தனியா ஒரு பதிவு ஆரம்பிங்களேன். (என்னை விட்டுடுங்கன்னு அர்த்தமாகுதா?) 🙂
செவ்வாய், மார்ச் 17, 2009 at 3:48 பிப
ஹரியண்ணா:
ஹரிமொழி போன பரித்ரானாய ஸாதூனாம்-லயே போயிடுச்சே. நீங்க நாகேஷ் கதை எல்லாம் சொன்னீங்களே, மறந்துட்டீங்க.
///தொலைப்பேசி அப்படின்னு ஒரு முன்னூத்தி முப்பத்தேழு முறை படிச்சா எனக்கும் ரிஷ்கா தொத்திக் கொள்ளாமல் என்ன பண்ணும்?///
:))))
இதுக்கு நீங்க தொலைப்பேச வேண்டிய இடம்….
http://thoughtsintamil.blogspot.com/2006/01/blog-post_113708749195745115.html
‘முதல்ல ______ த்திருந்தச் சொல்லு, நானும் த்திருந்தறேன்’ வகைதான் நம்ப ப்பிடிவாதம். 🙂
புதன், மார்ச் 18, 2009 at 6:45 முப
தொலைபேசிக்கு ப் வருமா? ஷாக்கிங்!
புதன், மார்ச் 18, 2009 at 7:58 முப
haranprasanna: முள்ளை முள்ளால் எடுக்கும் என் முயற்சில குறுக்க வந்து அடிபடாதீங்க. 🙂
புதன், மார்ச் 18, 2009 at 8:56 முப
Jayashree, thanks for all your replies to my irritating questions. 🙂 I too realised them irritating but only after I posted that comment. 🙂
Please go for new posts.
புதன், மார்ச் 18, 2009 at 10:53 முப
ஜெயஸ்ரீ,
///‘முதல்ல ______ த்திருந்தச் சொல்லு, நானும் த்திருந்தறேன்’ வகைதான் நம்ப ப்பிடிவாதம்.///
பொதுவாக ஒருவர் நமது நண்பராகவோ, மற்றவர்களுக்கு அவர் யாரென்று இனம் காண முடியுமென்றால் நேரடியாக பெயரையே சொல்லலாம். அல்லது நண்பராக இருந்தால் ‘அவனை’ என்றும் சொல்லலாம். சுட்டி கொடுத்துவிட்டு ‘________’ என்று குறிப்பது அவ்வளவு சரியில்லை. எனக்குத் தெரிந்த கருத்து மட்டும்தான்.
இதை என் தனிப்பட்ட கடிதமாக நினைத்து உள்ளே விடாமலும் நீங்கள் வைக்கலாம். தூங்கச் செல்லும்முன் சொல்ல நினைப்பதை சொல்லிவிட்டேன் அவ்வளவுதான்.
(தொலைபேசிக்கு இடையில் ப் வராது என்றே நினைக்கிறேன்.)
புதன், மார்ச் 18, 2009 at 2:34 பிப
Vijayram:
//I too realised them irritating//
தெரிஞ்சா சரி. தவறை உணர்ந்து வருந்தினால் எல்லாம் வல்லவனிடத்தில் நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள். 🙂
புதன், மார்ச் 18, 2009 at 2:41 பிப
//தொலைபேசிக்கு இடையில் ப் வராது என்றே நினைக்கிறேன்.//
அது என்னவோ. ஆனா நிறைய கிராஸ்டாக் வருது தொலைபேசிக்கு இடைல. 😦
///‘முதல்ல ______ த்திருந்தச் சொல்லு, நானும் த்திருந்தறேன்’ வகைதான் நம்ப ப்பிடிவாதம்.///
“செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனாரைத் திருந்தச் சொல்லுங்க. நானும் திருந்தறேன்”னு சொல்லவந்தேன். நீங்க யாரை நினைச்சீங்க? :)அவர் என் நண்பர் இல்லை வேற. அதனால ‘அவனை’ன்னு சொல்லமுடியலை.
அன்பே சிவம் மாதவன் கமலைச் சொல்றமாதிரி நானும் உங்களைச் சொல்றதைத் தவிர்க்கவே முடியலை- “எல்லாத்துக்கும் ஒரு கருத்து, ஒரு அட்வைஸ்…”. சொல்ல விட்டுப் போச்சு, கேள்விகள், டிஸ்கிக்கள் வேற. போய் நேரத்தோட நிம்மதியா தூங்குங்க ஐயா. 🙂